அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் கட்டப்பட்டுவரும் பிரம்மாண்ட இந்து கோயிலுக்கு இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட தலித் பணியாளர்கள் மீது கொடும் சித்ரவதைகளை செய்வதாக கட்டுமானத்தை மேற்கொண்டு வரும் பேப்ஸ் அமைப்புக்கு எதிராக அந்நாட்டின் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் பல்லாயிரம் கோடி ரூபாய் செலவில் இந்து கோயில் கட்டுமான பொறுப்பை பொச்சன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாரயண் சன்ஸ்தா (பேப்ஸ்) என்னும் இந்து அமைப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் செய்துவருகிறது. இந்திய வம்சாவழியைச் சேர்ந்த சுமார் நான்கு லட்சம் பேர் வசிக்கும் நியூ ஜெர்சியில், அமெரிக்க நாட்டிலேயே மிகப் பெரிய இந்து கோயிலை கட்டும் நோக்கோடு அக்கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இங்குப் பணி புரிய இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை (பெரும்பான்மை தலித்துகள்) இந்த அமைப்பு பணி அமர்த்தி அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளது.
நியூஜெர்சியில் குறைந்த பட்ச ஊதியமாக மணிக்கு $12 டாலர் என அரசு நிர்ணயம் செய்துள்ளது. மேலும் அவர்கள் ஒரு வாரத்தில் 40 மணி நேரத்துக்கு மேல் பணி செய்தால் மேலும் அரை மணி ஊதியம் அதிகப்படியாக அளிக்க வேண்டும். ஆனால் இங்கு குறைந்த ஊதியமாக மாதத்துக்கு $450 அல்லது மணிக்கு $1.20 எனப் பணி புரிய அமைப்பு வலியுறுத்தி உள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு, அக்கோயில் கட்டுமான பணியில் ஈடுப்பட்டிருந்த தொழிலாளர் ஒருவர் மரணமைடைந்ததாகவும், இதன் பின்னர், இந்தியா திரும்பிய தொழிலாளர்களில் ஒருவரான முகேஷ் குமார், இவ்விவகாரத்தை வாஷிங்டனில் செயல்படும் தலித் உரிமைகளுக்கான சர்வதேச ஆணையத்தின் இயக்குநரும், வழக்கறிஞருமான ஸ்வாதி சாவந்திடம் கொண்டு சேர்த்ததன் அடிப்படையில், பேப்ஸ் அமைப்புக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ”இந்தியாவைச் சேர்ந்த 200 ஊழியர்கள் (பெரும்பான்மை தலித்துகள்) ஒப்பந்த அடிப்படையில் கோயில் கட்டும் பணிக்கு அழைத்துவரப்பட்டனர். இந்த தொழிலாளர்களிடமிருந்து பல்வேறு ஆவணங்களில் கையொப்பம் வாங்கி, அவர்கள் தேர்ந்த ஓவியர்கள் என அமெரிக்க தூதரக அதிகாரிகளிடம் பொய் சொல்லக் கூறி, அவர்கள் அமேரிக்காவுக்கு வழவழைக்கப்பட்டனர்” என்று தி நியூ யார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி கூறுகிறது.
”அவர்கள் நியூ ஜெர்சி வந்தவுடன், கோயில் நிர்வாகிகளால் அவர்களுடைய பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கோயிலுக்கு வரும் பக்தர்களுடனும் கோயிலில் உள்ள பிரதிநிகளுடனும் பேசக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பயிறு வகைகளையும் உருளைக்கிழங்களையும் மட்டும் உணவாக கொடுத்து, சிறிய விதிமுறை மீறீனால் கூட அவர்களுடைய சம்பளத்தில் கோயில் நிர்வாகம் பிடித்தம் செய்துள்ளனர்” என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய வழக்கறிஞர்கள், ”அவர்கள் காலை 6.30 முதல் இரவு 7.30 வரை, பெரிய கற்களை தூக்குதல், சாலைகள் போடுதல், சாக்கடையை சுத்தம் செய்தல், பெரும் இயந்திரங்களை இயக்குதல் உட்பட பல்வேறு கடினமான வேலைகளை செய்தாலும் அவர்களுக்கு மாதம் 33,000 ரூபாய் தான் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அதிலும் 3,672 ரூபாய் தான் அவர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சம்பள தொகை அவருடைய இந்திய கணக்கில் செலுத்தப்பட்டது” என்று தெரிவித்துள்ளதாக தி குவிண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பேப்ஸ் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி கான் படேல் உள்ளிட்ட பலரின் பெயர் மனுவில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய படேல், “ஊதியம் தொடர்பாக அவர்கள் வைத்துள்ள குற்றச்சாட்டை முற்றும் முழுதுமாக மறுக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பேப்ஸ் அமைப்பின் தலைவர்கள் ஆள் கடத்தலில் ஈடுபட்டதாகவும், ஊதிய சட்டத்திற்கு புறம்பாக ஊதியம் வழங்கியதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, நேற்றைய தினம், எஃப்பிஐ , உள்நாட்டு பாதுகாப்புத் துறை, தொழிலாளர் துறை ஆகியோர் கோயிலில் நடத்திய சோதனையில், 90 தொழிலாளர்கள் மீட்கப்பட்டதாக தி குவிண்டின் செய்தி கூறுகிறது.
இந்த வழக்கை தொடர்ந்துள்ள டேனியல் வெர்னர் எனும் வழக்கறிஞர், தன்னுடைய அனுபவத்தில், தொழிலாளர்களை குறைந்த ஊதியத்துக்கு கட்டாயப்படுத்தி வேலை வாங்கும் முதல் சம்பவம் இது தான் என்று கூறியுள்ளார். இதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் தாய்லாந்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய ஸ்வாதி சாவந்த், “அவர்கள் நல்ல வேலைவாய்ப்பு, அமெரிக்காவை காண வேண்டும் எனும் எண்ணத்தில் இங்கு வந்துள்ளனர். அவர்கள் மிருகங்களை விட மிக மோசமாக நடத்தப்படுவோம் என்றோ, பழுதடையாத இயந்திரத்தைப் போல வேலை வாங்கப்படுவோம் என்றோ சிறிதும் யோசித்திருக்க மாட்டார்கள்” என்று தி நியூயார்க் டைம்ஸிடம் தெரிவித்துள்ளார்.
***
1907 ஆம் ஆண்டு, ஷாஸ்திரிஜி மகராஜ் எனும் நபரால் தொடங்கப்பட்ட பொச்சன்வாசி அக்ஷார் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (பேப்ஸ்- Bochasanwasi Akshar Purushottam Swaminarayan Sanstha )எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும், பாரதிய ஜனதா கட்சியினுடனும் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக தி குவிண்ட் இணையதளம் தெரிவித்துள்ளது.
I am very proud of my association with the @BAPS family, known for its impeccable service world-wide. I thank HH Mahant Swami Maharaj Ji.
I also pay tributes to HH Pramukh Swami Maharaj Ji. https://t.co/m7fMGyQDdV
— Narendra Modi (@narendramodi) September 17, 2020
பேப்ஸ் அமைப்பின் ஆன்மிக தலைவர் பிரமுக் சுவாமி மகராஜ், மறைவின் போது பிரதமர் நரேந்திரமோடி அவருக்கு புகழஞ்சலி செலுத்தியதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. பேப்ஸ் அமைப்பு, அபுதாபியில் கட்டும் இந்து கோயிலுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது குறிப்பிடத்தக்கது.