கிழக்கு கடற்கரை சாலையில் சென்னைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே உள்ளது மரக்காணம். சாலையில் ஒரு பக்கம் உப்பளங்கள். மறு பக்கமோ கண்ணீர் கடலாக காட்சியளிக்கிறது இப்போது. மகாபலிபுரத்தில் நடந்த வன்னியர்களின் குடும்பவிழாவுக்கு வந்தவர்களால், மரக்காணம் கட்டையன் தெருவில் உள்ள குடும்பங்கள் இன்று குடியிருப்புகளையும், உடமைகளையும் இழந்து நிற்கின்றன. பல்வேறு ஊர்களிலிருந்து சித்திரை முழுநிலவு விழாவுக்கு வந்தவர்கள் வழிநெடுக ஆடிய தாண்டவத்தையும் செய்த அட்டகாசங்களையும் கிழக்கு கடற்கரை சாலை முழுவதும் காண முடிந்தது.
மகாபலிபுரம் அடையார் ஆனந்தபவன் ஹோட்டல் வாசலில் திருமாவளவன், ரெட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் ஆகியோரின் படங்களுக்கு கரிபூசப்பட்டிருக்கிறது. இதைத்தான் ஜெயலலிதா சட்டமன்றத்தில் ‘தேசிய தலைவர்களின் படங்கள் அவமதிக்கப்பட்டுள்ளன’’ என்று குறிப்பிட்டார். புரட்சி பாரதம், விடுதலை சிறுத்தைகள் போன்ற தலித் கட்சிகளின் கொடிக்கம்பங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு, கல்வெட்டுகள் சிதைக்கப்பட்டுள்ளன. மகாபலிபுரம் கடற்கரை கோயிலின்மீது ஏறி நின்றுகொண்டு அங்கும் கொடிநாட்டியவர்களின் மேல் தொல்பொருள்துறையின் வழக்கு பாய்ந்திருக்கிறது. பிரதான சாலையில் ஆங்காங்கே மரங்களின் உச்சிகளில் வன்னியர் சங்கக் கொடியும் பா.ம.க.வின் கொடியும் பறக்கின்றன. மரங்கள் பாவம். வழக்கு போட ஆளில்லை.
உச்சகட்டமாக குடியிருப்புகளின் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தர்மபுரி பாணியில் தலித் மக்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் வேலையைச் செய்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட மரக்காணம் மக்களுக்கு, இதே பா.ம.க.வால் பாதிக்கப்பட்ட தர்மபுரி மாவட்டம் நத்தம் காலனி மக்கள் இரண்டு வண்டிகளில் திரண்டுவந்து பத்தாயிரம் ரூபாய் தொகையை அளித்ததை மரக்காணம் பகுதி பக்கள் நெகிழ்வுடன் தெரிவித்தார்கள். அடிபட்டவர்களுக்குத்தானே அதன் வலி புரியும்!
ஏப்ரல் 30 அன்று ஊர் எல்லையில் வந்த வைகோவை காவல்துறை உள்ளே விடாமல் அவர் திரும்பச் சென்றார். பிரதான சாலையில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. நான் அங்கு சென்றபோது சாலையோரங்களில் கிடந்த மதுபாட்டில்களை காவல்துறையினர் அப்புறப்படுத்திக்கொண்டிருந
உப்பளத்தில் வேலைசெய்யும் அஞ்சலை – நாராயணசாமி தம்பதியினர் ‘’மெயின் ரோட்டில் இளநி குடிச்சிட்டு இருந்தாங்க. அங்கங்க வண்டிங்களை நிறுத்தி வைச்சிருந்தாங்க. திடீர்னு கொஞ்சம்பேர் வந்து இந்த புதருங்களுக்கு நடுவுல உட்கார்ந்து குடிச்சாங்க. அப்பவே ஏதாச்சும் நடக்கும்னு நாங்க பயந்தோம். நினைச்ச மாதிரியே நடந்துடுச்சு. எல்லாம் போச்சு. கண்ணெதுக்கே வீடு எரியுது. கால் பவுன் நகை, முப்பதாயிரம் பணம் சேர்த்து வச்சிருந்தோம். பித்தளை பாத்திரங்க, அண்டா தவளை… எல்லாம் போச்சு’’ என்கிறார்கள். இவர்கள் வீட்டுக்கு அருகிலேயே சிறிய அங்காளம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலைப் பார்த்துக்கொண்டு பக்கத்திலேயே ஒரு பெட்டிக்கடையும் நடத்தி வருகிறார் செல்லியம்மா. கடையில் உள்ள பொருட்கள், கோயிலில் உள்ள சிலைகள் என்று எதுவும் மிச்சமில்லை. ‘’எங்க ஊரு பொம்பளைப் புள்ளைங்களையெல்லாம் அசிங்கமா பேசுனாங்க..சாதிப்பேர் சொல்லித் திட்டி, அவங்க பேசுனதை சொல்லவே கூசுது’’ என்றார்.
தர்மபுரியில் நடந்ததுபோலவே இங்கும் பீரோ, அலமாரிகள் போன்றவற்றில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து, அதன்பின்னரே கொளுத்தி இருக்கிறார்கள். பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுத்தான் வீடுகள் கொளுத்தப்பட்டிருக்கின்றன. ஊர்மக்களின் தற்போதைய ஒரே கவலை கலைவாணன் குறித்துத்தான். ‘எரிக்கும்போது உதவிக்கு ஆளுங்களைக் கூப்பிட்டாருன்னு சொல்லி, ‘கூப்பிடுவியா கூப்பிடுவியான்னு கேட்டு அவர் நாக்கை இழுத்துவச்சு அறுத்துட்டாங்க. அவர் நாக்கில் மட்டும் 18 தையல் இருக்கு. தலையில் பட்ட அடியும் சேர்த்தா 48 தையல். சிறுமூளையில் பாதிப்புன்னூ டாக்டருங்க சொல்றாங்க’’ என்கிறார் ஆறுமுகம். இத்தனைக்கும் கலைவாணனின் வீட்டை எரிக்கவில்லை. அடுத்த வீடு எரிகிறதென்று கூக்குரலிட்டவரால் இனி ஒழுங்காக பேச முடியுமா என்று தெரியவில்லை. இந்த நிலையிலும் தட்டுத்தடுமாறி நடந்தவற்றை விவரிக்க முயன்றார். பேசவேண்டாம் என்றபோதும் சைகையில் நடந்தவற்றை கூறினார்.
வீட்டை பறிகொடுத்த இன்னொரு தம்பதி முருகன் – நதினா. இவர்களுக்கு 5 பெண்கள். ‘’கத்தி, மஞ்ச கலர் டீசர்ட் போட்டுட்டு வந்தாங்க. ஒரே ஆர்ப்பாட்டம். எல்லாரும் குடிச்சிருந்தாங்க’’ என்கிறார் நதினா. வேலு – மல்லிகா தம்பதியின் வீடும் கரியாகிவிட்டது. ‘’மரக்காணம் தான் சுத்துவட்டரத்துல உள்ள எஸ்.சி. கிராமங்களுக்கு தாய் கிராமம். 2002லயே மஞ்சள் நீராட்டு விழா ஒண்ணு நடந்துச்சு. அப்போ ஜெமினி படம் வந்த புதுசு. ‘ஓ போடு’ பாட்டைப் பாடி எங்க ஊர் பொண்ணுங்களை கிண்டல் பண்ணினதுல பிரச்சனையாகிடுச்சு. அதுலேர்ந்தே பிரச்சனை பண்ண சமயம் பார்த்த்துக்கிட்டு இருந்தாங்க’’ என்கிறார் தயாளன். அங்கம்மாளின் மகளுக்கு அடுத்த மாதம் திருமணம். அதற்காக வாங்கி வைத்த சீர் சாமான்கள் கருகின. ஒரு மாடும் பெட்ரோல் குண்டு வீச்சில் இறந்தது. நன்றாக காய்க்கும் பலா மரத்தில் பலாப்பழங்கள் கருகி தொங்குகின்றன. மரத்தையும் விட்டுவைக்கவில்லை பசுமைத் தாயகம் நடத்துபவர்கள். ஒவ்வொரு வீட்டுக்கும் அருகேயுள்ள மரங்களும் சேர்ந்தே கருகி இருக்கின்றன. தலித் குடியிருப்புகள் முடிந்து, வன்னியர் குடியிருப்புகள் தொடங்கும் இடம்வரை சரியாக பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ’’அதெப்படிங்க சரியா வந்தவங்களுக்கு எங்க வீடுங்க இத்தோட முடிஞ்சு அவங்க வீடுங்க தொடங்குதுன்னு தெரியும். அப்ப ஏற்கனவே திட்டம் போட்டிருக்காங்கதானே?’’ என்று கேட்கிறார் கிளியம்மாள்.
மரக்காணத்திலிருண்டு 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கூனிமேடு. இங்கே மசூதிக்குள் புகுந்து இஸ்லாமியர்களை தாக்கி இருக்கிறது கலவரக் கும்பல். கழிக்குப்பத்திலும் இரண்டு தலித்துகளின் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. தர்ப்பூசணி கடை அடித்து நொறுக்கப்பட்டது. ‘’மரக்காணத்துல பிரச்சனைங்கிறதால, வண்டிங்களையெல்லாம் வழில நிறுத்திட்டங்க. எங்க ஊர்கிட்ட நிறைய வன்னியருங்க வண்டி நின்னுச்சு. திருமாவளவன் படம் போட்ட பேனர் ரோட்டுகிட்ட இருந்துச்சு. ‘உங்களுக்கெல்லாம் பேனர் கேட்குதான்னு’ சாதிப் பேர் சொல்லித் திட்டி பேனரைக் கிழிச்சாங்க. கும்பலா ஓடிவந்து தண்ணித் தொட்டி பைப்பை உடைச்சாங்க. சமுதாய நலக்கூடத்து ஜன்னலையெல்லாம் அடிச்சு நொறுக்கினாங்க. இதெல்லாம் பார்க்கவே பயமா இருந்துச்சு. பொம்பளைங்களைப் பார்த்து அசிங்கமா பேசினாங்க. அசிங்கமா ஆபாசமா டான்ஸ் ஆடினாங்க’’ என்று திகிலுடன் காஞ்சனா சொன்னவற்றை அச்சில் ஏற்ற முடியாது. காஞ்சனா – பார்த்திபன் தம்பதியின் வீட்டுக்கு முன் அவர்கள் கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகள் உடைந்து கிடந்தன. அருகிலேயே உள்ள இன்னொரு வீடும் எரிக்கப்பட்டது. இல்லாத வீட்டின் வாசலில் அடுப்பு மூட்டி காவல்துறையினருக்கு தேநீர் தயாரித்தவாறே கூறுகிறார் காஞ்சனா. ‘பாவம். எங்கேர்ந்தோ வந்து எங்களுக்காக வெயில்ல காவலுக்கு இருக்காங்க. நம்மளால முடிஞ்சது ஒருவாய் டீதான்’’ என்றவர், திடீரென்று மௌனமாகி பின் கேட்கிறார். ‘’பறையரா பொறந்தது எங்க தப்பா?’’ இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும்?
அன்றாடம் இப்படியான கேள்விகளை தலித்துகள் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள
ராமதாஸ் சிறைக்குச் சென்றபின் அன்புமணி ராமதாஸ் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவருடைய இலக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சிதான் என்பதை தெளிவாகவே குறிப்பிட்டார் அன்புமணி. பத்திரிகையாளர்களிடமிருந்து
சராமரியாக கேள்விகள் வந்து விழுந்தன. வேறு வழியின்றி அப்போது காடுவெட்டி குரு மூத்த அரசியல்வாதிகளை மரியாதைக் குறைவாகப் பேசியதும், மகாபலிபுரம் கடற்கரை கோயிலின் மீது ஏறி பா.ம.க.கொடியை நாட்டியதும் தவறு என்று ஒப்புக்கொண்டார். ஆனால் தலித் மக்கள் குடிசைகளை தாங்களே எரித்துக்கொண்டார்கள் என்றார். தர்மபுரியிலும் ராமதாஸ் இதையே சொன்னார். மரக்காணத்தில் அன்புமணி இதையே கூறுகிறார். ஆனால் மக்கள் நம்பத் தயாராக இல்லை. பெட்ரோல் குண்டு வீசி, ஊரைக் கொளுத்தி, வன்முறையில் இறங்கும் கட்சி என்று பெயர் பெற்றாகிவிட்டது. மரம் வெட்டினால் பசுமைத்தாயகம் அமைப்பை உருவாக்கி பிராயச்சித்தமோ பாவமன்னிப்போ கேட்கலாம். மனிதர்களை வெட்டினால்?
– கவின் மலர்