கலைக்கு ஏது சாதி? ஆனால் இந்தியாவில் அதுதான் நடக்கிறது. மானுட அனுபவம் எனில் எல்லாமே அனுபவம் தானே? உணர்வுகளின் தூல நிலையில் சாதியடையாளம் இருக்கிறதா? இருக்கிறது என்று வீம்பு பிடிக்கிறது இந்தியத் திரைப்படம். அந்த வீம்பை உடைத்திருக்கிறது ஃபான்ட்ரி திரைப்படம்.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]இங்கே மேல்நிலையிலிருந்து இடைநிலைச்சாதி வரையிலானவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி படங்களை எடுத்துவிடலாம்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தக் கூச்சமும் இன்றி காட்சிகளையும், உரையாடல்களையும் வைக்கலாம்; ஆனால் ஒரு தலித் படத்தை மட்டும் எடுத்துவிட முடியாது.[/quotes]
இங்கே மேல்நிலையிலிருந்து இடைநிலைச்சாதி வரையிலானவர்களின் அருமை பெருமைகளைச் சொல்லி படங்களை எடுத்துவிடலாம்; ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக எந்தக் கூச்சமும் இன்றி காட்சிகளையும், உரையாடல்களையும் வைக்கலாம்; ஆனால் ஒரு தலித் படத்தை மட்டும் எடுத்துவிட முடியாது. ஒருவேளை அப்படி ஒரு படம் எடுக்கப்படுமாயின், அது ஒப்புதல் வாக்குமூலமாகிவிடுமோ, சாதியதிகாரத்துக்கு எதிரான கலகத்துக்கு வித்திட்டுவிடுமோ என்று பயப்படுகிறார்கள் போலிருக்கிறது. இந்த விவசாயத்தில் திரைப்படத் துறையிலிருக்கும் முற்போக்காளரின் ஆழ்ந்த மௌனமும் விமரிசனத்துக்குரியதுதான். பகுத்தறிவையும், பெண் விடுதலையையும், மொழிச் சிறப்பையும் பேசிய பெரியார் மண்ணையும் முந்திக்கொண்டு சாதியொழிப்புக்கானதொரு படத்தை அம்பேத்கர் மண் கொடுத்திருக்கிறது.
ஃபாண்ட்ரி என்றால் மராத்தியக் கிளை மொழியான கைக்காடி மொழியில் பன்றி என்று பொருள். இந்தக் கைக்காடி மொழியை மகாராட்டிரத்திலுள்ள நாடோடி வாழ்க்கை முறையைக் கொண்ட தீண்டப்படாத ஒரு சாதியினர் பேசுகிறார்கள். பன்றி வளர்ப்பதும், கல்லுடைப்பதும், கிராமத்திலுள்ளோர் ஏவும் வேலைகளைச் செய்வதுமே இம்மக்களின் தொழில். மகாராட்டிரத்திலுள்ள அகமத் நகருக்கு அருகிலிருக்கும் அகோல்நர் கிராமத்தில் ஒரு கைக்காடியினர் குடும்பத்தில் நிகழும் சம்பவங்களே ஃபாண்ட்ரி திரைப்படத்தில் விரிகின்றன.
அகோல்நரில் இருக்கும் சத்ரபதி சிவாஜி வித்யாலயாவில் படிக்கிறவன் ஜாபியா. கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் இருக்கிறது அவன் வீடு. அவன் பெற்றோர் வளர்க்கும் பன்றிகள் ஊரெல்லாம் மேய்ந்தபடி இருக்கின்றன. ஜாபியாவின் குடும்பமே கடும் உழைப்பைச் செலுத்துகிற குடும்பம். அவனின் பெற்றோர் கட்டுமான வேலை உள்ளிட்ட எதையும் விடுவதில்லை. அவ்வப்போது காடு கழனிகளில் இருக்கும் துத்திக் குச்சிகளை உடைத்து வந்து கூடை முடைவார்கள். ஊரில் இருக்கும் ஆதிக்கச் சாதியினர் சொல்லும் அத்தனை ஏவல் வேலைகளையும் செய்வது ஜாபியாவின் அப்பாதான்.
ஜாபியாவின் அக்கா, வரதட்சணை காரணமாக வீட்டுக்குக் கைக்குழந்தை யோடு வந்துவிட்டிருக்கிறாள். இடையில் ஜாபியாவின் இளைய அக்காவுக்குத் திருமணம் ஏற்பாடாகிறது. ஐம்பதாயிரம் ரொக்கமும், நகையும் கேட்டு, பின் இருபதாயிரத்துக்கு ஒப்புக்கொள்கின்றனர் மணமகன் வீட்டார். ஜாபியாவின் அப்பாவுக்குச் சுமை அதிகமாகிவிடுகிறது. அவர் இரண்டாவது பெண்ணையாவது குறையில் லாமல் கரையேற்ற வேண்டுமெனக் கடுமையாக உழைக்கிறார்.
ஜாபியாவுக்கு இதிலெல் லாம் கவலையில்லை. அவனுக்கு அவன் வகுப்பிலேயே படிக்கும் ஷாலுவோடு ஒருதலைக் காதல். ஷாலு அக்கிராமத்திலிருக்கும் ஆதிக்கச் சாதி குடும்பத்தைச் சேர்ந்தவள். அதிலும் அவளின் அப்பா ஊர் பிரமுகர் வேறு. ஜா பியா நல்ல கருப்பு. அவன் தாத்தாவிடமிருந்து வந்த ஒரு தொன்மக் கதை அவனைக் கிளர்த்துகிறது. கருங்குருவியொன்றின் சாம்பலை ஷாலுவின் மீது வீசிவிட்டால் சிவந்த நிறமும், வசீகரிக்கும் அழகும் கொண்ட அப்பெண் தன்னைக் காதலிக்கத் தொடங்கிவிடுவாள் என நம்புகிறான். தன் நண்பனோடு ஷாலுவையும் கருங்குருவிகளையும் பின்தொடர்கிறான். ஷாலுவுக்குக் காதல் கடிதம் எழுதுகிறான். விடுமுறை நாட்களில் ஐஸ் வியாபாரம் செய்து ஜீன்ஸ் வாங்க முயற்சிக்கிறான். ஷாலுவைப் பின்தொடரும் அதே ஊரைச் சேர்ந்த ஆதிக்கச்சாதி பையனொருவனின் மிரட்டலுக்கும் ஆளாகிறான்.
ஒரு நாள் ஊரில் திருவிழா நடக்கிறது. சாமியின் பிரதிமையைத் தூக்கி வரும்போது ஜாபியாவின் வீட்டுப் பன்றி ஊர்வலத்துக்குள் புகுந்து தீட்டு ஏற்படுத்துகிறது. பன்றியை உடனே பிடித்துவிட வேண்டும் என்று ஜாபியாவின் அப்பா ஊர்ப் பிரமுகரால் அறிவுறுத்தப்படுகிறார்.
அடுத்த நாள் காலையில் ஜாபியாவின் குடும்பமே பன்றியைப் பிடிக்கப் போகிறது. அது ஊரார் ‘ஒதுங்கும்’ இடம். அருகிலேயே தான் படிக்கும் பள்ளி வேறு. மாணவர்களும் மேல்தட்டு இளைஞர்களும் வேடிக்கை பார்க்கின்றனர். அவன் நேசிக்கும் ஷாலுவும் கூட வேடிக்கை பார்த்துக் கைக்கொட்டிச் சிரிக்கிறாள். இவர்கள் பன்றியைத் துரத்தி அலையும் காட்சி இளைஞர்களால் படம்பிடிக்கப்பட்டு உடனுக்குடன் முகநூலில் பதிவேற்றப்படுகிறது. அவமானத்தால் கூனிக் குறுகிப் போகும் ஜாபியா, மோதலில் இறங்குகிறான்.
பன்றியைப் பிடிக்கும் காட்சியை அத்தனை இயல்பாக எப்படி எடுத்திருப்பார்கள் என வியக்க வைக்கிறது இந்த சினிமா. விடலைப் பருவக் காதலை அற்புதமாகக் கண்முன் கொணர்கிறான் ஜாபியாவாக நடித்திருக்கும் சோம்நாத் அவாகடே. இந்த ஆண்டின் சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது சோம்நாத்துக்கும் வழங்கப்பட்டது. ஜாபியாவாக நடித்திருக்கும் சோம்நாத் படம் எடுக்கப்பட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட வகுப்புச் சிறுவன்.
இந்த சினிமாவின் மூலம் இந்தியத் திரைத்துறையில் ஒரு உடைப்பை ஏற்படுத்தியிருக்கும் நாகராஜ் ஒரு தலித். அவர் மராத்தியில் புகழ்பெற்ற கவிஞரும், எழுத்தாளரும்கூட. அவர் ஃபாண்ட்ரியைப் பற்றிப் பேசும்பொழுது அப்படம் தன் சொந்த அனுபவங்களை அடிப்படையாக கொண்டது என்கிறார். ஒரு தலித் சிறுவனின் விடலைப் பருவக் காதலைச் சொல்வதென்றாலும் படத்திலே வலுவானதொரு அரசியல் பார்வையை வைத்திருக்கிறார் நாகராஜ் மஞ்சுளே. அது சாதியொழிப்புக்கான அரசியல்.
- அழகிய பெரியவன்