பாண்டியனின் வீட்டைக் கண்டுபிடித்து அங்கு சென்று சேர்ந்தபோது நடுப் பகலைக் கடந்துவிட்டது. காட்டுமன்னார்குடிக்கு அருகில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ரெட்டியூர் என்ற அந்தக் கிராமம் (சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் இருக்கலாம்) பாண்டியன் அந்த ஊரைச் சேர்ந்தவர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டம் பெற்றவர். சமூக அக்கறையும் எல்லோருக்கும் உதவும் பண்பும் கொண்டவர். 1985ஆம் ஆண்டு “சுதந்திர தின”த்தன்று போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்டவர்.
போலீஸால் சுட்டுக் கொல்லப்பட்ட அவர் ஒரு பயங்கரவாதியோ, கொள்ளைக்காரரோ அல்ல. பறையடிக்கும் இழிதொழிலைச் செய்யமாட்டோம் எனத் தன்மானத்தோடு போராடிய ஆயிரக்கணக்கான தலித்துகளில் ஒருவர். அதற்காகத்தான் அவர் கொல்லப்பட்டார்.
15-02-2004 அன்று நான் பாண்டியனின் ஊருக்குச் சென்றேன். அவர் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தைப் போய்ப் பார்த்தேன். அவரது நினைவாக அங்கொரு கொடிக்கம்பம் உள்ளது. பாண்டியனின் மார்பளவு சிலை காட்டுமன்னார்குடி பேருந்து நிலைய முகப்பில் நிறுவப்பட்டுள்ளது. அவர் கொல்லப்பட்ட அதே தேதி. ஆனால் இது பிப்ரவரி மாதம் 18 ஆண்டுகள் கடந்துபோய்விட்டன. அவரது சிலையைப் புகைப்படம் எடுக்கும் முன்பு அதைக் கழுவி சுத்தம் செய்த தலித் இளைஞர், புகைப்படம் எடுப்பதற்காகச் சற்று நேரம் போக்குவரத்தையே நிறுத்திவிட்டார். சிறிது நேரத்தில் பல இளைஞர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். (அவர்கள் யாவரும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள்) பாண்டியன் சிலையை ஏன் புகைப்படம் எடுக்கிறார்கள் என்று அவர்களுக்கு வியப்பு.
எனக்கும்கூட ரெட்டியூருக்குப் போய், அந்தச் சம்பவத்தைப் பற்றிய தகவல்களைத் திரட்டி வர வேண்டும் என்ற எண்ணம் திடீரென்றுதான் தோன்றியது. அதற்குத் தூண்டுதலாக இருந்த இரண்டு விஷயங்களைக் கூற வேண்டும்.
[quotes quotes_style=”bquotes” quotes_pos=”right”]பறை அடித்தல் உள்ளிட்ட பண்பாட்டு இழிவுகள் தலித் மக்கள்மீது சுமத்தப்பட்டது பற்றியும், அவற்றை அவர்கள் எதிர்த்துப் போராடியது பற்றியும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் நடந்த போராட்டங்கள் பற்றிய செய்தி அந்த விதத்தில் முக்கியமானவையாகும்.[/quotes]
காலச்சுவடு வெளியிட்ட ராஜ்கௌதமனின் தலித்திய விமர்சனக் கட்டுரைகள் நூலுக்கான அட்டையை நண்பர் சந்தோஷ் வடிவமைத்து வைத்திருந்தார். மூக்கையாவின் சுடுமண் சிற்பமான பறையடிக்கும் மனிதனின் படத்தை வைத்து அந்த அட்டை வடிவமைக்கப்பட்டிருந்தது (அந்த அட்டை பின்னர் மாற்றப்பட்டது). டிசம்பர் ஆறாந்தேதி சென்னையில், தோழர் திருமாவளவனின் ஆங்கில நூலான TALISMAN வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தன் பறையோடு பறையனைத் தொடர்புபடுத்திப் பேசினார். அதை நான் அங்கேயே மறுத்துப் பேசினேன். (இரு உரைகளுக்கும் பார்க்க : தாய்மண், சனவரி 2004) இந்த இரண்டு சம்பவங்கள்தான் என்னைப் பாண்டியனின் வீட்டுக்குப் போகச் செய்தன.
பறை என்றால் “சொல்” என்றே பிங்கல நிகண்டு குறிப்பிட்டுள்ளது. பறைதல் என்பது சொல்லுதல் என்ற பொருளில் தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது (ஏதம்பறைத் தல்லசெய்து அழிதல் நீக்குதல், தேய்தல் என்ற அர்த்தங்களிலும் அது கையாளப்பட்டுள்ளது) (பார்க்க : Tamil Lexicon Vol.IV, Page 2563) பறை அடிப்பதை இழிதொழிலாக்கி அதை ஒரு சாதியின் பெயராகத் தாழ்த்தியது அண்மைக்காலச் செயல்பாடாகவே தோன்றுகிறது.
“பறையர்கள் என்றும் பெயர் பூர்வீக திராவிட சாதியோருக்கு வந்தவகை கல்வியற்ற அவிவேகிகளிற் சிலர் தங்கள் விரோதத்தினால் வைத்த பெயராகக் காண்கிறதேயன்றி தொழிலைப் பற்றி வந்ததாகக் காணவில்லை. அதாவது (பறை) என்னும் மொழிப்பகுதியாகி, தோல் கருவியடித்து விவாகக் குறிப்பு, மரணக் குறிப்பை பறைகிறதும் நாவினாற் “சொல்”லென்னும் ஏவலைப் பறைகிறதுமாகி சொல் திருந்து” இப்படி ஆகிப்போனதென அயோத்திதாசப் பண்டிதர் குறிப்பிடுகின்றார். (அயோத்திதாசர் சிந்தனைகள் பாகம் 1 பக்கம் 186). இப்போது இந்தப் பெயரால் அழைக்கப்படும் மக்கள் பூர்வத்தில் “அந்தண, அரசு, வணிக, வேளாளமென்ற நான்கு தொழில்களையும் சரிவரச் செய்துவந்தார்கள்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நந்தனைப் பற்றிய கட்டுக்கதையை முன்வைத்த பெரியபுராணம்கூட இவர்கள் பறையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்ததாகக் கூறவில்லை. அது மட்டுமின்றி, ஒரு சமூகம் தனது ஜீவாதாரத் தொழிலாகப் பறையடிப்பதைக் கொண்டிருந்திருக்க முடியாது என்பதும் வெளிப்படை. அப்படியானால் இந்த இழிவு இம்மக்கள்மீது பலவந்தமாகவே சுமத்தப்பட்டிருக்க வேண்டும் என நாம் யூகிக்கலாம். பாண்டியன் கொலையுண்ட வரலாறும் அதைத்தான் உறுதிப்படுத்துகிறது.
தலித் மக்கள்மீது பலவந்தமாகச் சில இழிதொழில்கள் சுமத்தப்பட்டுள்ளன. செத்த மாடுகளை அகற்றுதல், பிறப்பு, இறப்பு தொடர்பான பணிகளைச் செய்தல், பறையடித்தல் என்பன அவற்றுள் சில. இந்தப் பணிகளுக்காகக் கூலி எதுவும் தரப்படுவதில்லை. தலித்துகள் வைக்கப்பட்டுள்ள இழிநிலையை மறு உறுதிசெய்யும் பொருட்டே இவை அவர்கள்மீது திணிக்கப்பட்டுள்ளன. இவற்றைச் செய்ய மறுத்தால் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.
தலித் மக்கள் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இப்படியான இழிவுகளை மறுத்து எதிர்த்துப் போராடியுள்ளனர். அம்பேத்கரும் தமிழகத்து தலித் முன்னோடிகள் பலரும் ஊக்கத்துடன் பங்குவகித்த ஷெட்யூல்டு கேஸ்ட் ஃபெடரேஷனும் ( SCF ) 1940களில் இந்த நிலையை எதிர்த்துப் பலவிதமான போராட்டங்களை நடத்தியுள்ளனர். அதற்கு முன்னோடியாக இருந்த ஆதிதிராவிட மகாஜன சங்கத்தின் கிளை கடலூர் மாவட்டத்தில் இருந்தது. கண்ணுசாமி, சாமுவேல், மைக்கேல் வாத்தியார் INA கோவிந்தன், ஆயங்குடி குப்புசாமி முதலானவர்கள் 1944இல் இந்தச் சங்கத்தைக் கடலூரில் பதிவுசெய்து நடத்திவந்தனர். கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை இந்தச் சங்கம் முனைப்பாக நடத்திவந்தது.
தலித் மக்கள் மாட்டிறைச்சி உண்ண வேண்டும் என்ற பழக்கத்தைச் சாதி இந்துக்கள் பலவந்தமாகத் திணித்துவந்த காலம் அது. அதற்கு எதிராகவும் பறையடிப்பதற்கு எதிராகவும் இந்தச் சங்கம் போராட்டங்களை நடத்தியது. பல ஊர்களில் கைகலப்பும் கலவரமும் உண்டானது. அதன் இறுதியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக, சிதம்பரம், காட்டுமன்னார்குடி தாலுக்காக்களைச் சேர்ந்த சுமார் இருநூறு கிராமங்களில் பறை அடிப்பது தடை செய்யப்பட்டது. ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தலித் மக்களின் சுயமரியாதை உணர்வுக்குச் சான்றாக உள்ள இந்தக் கட்டுப்பாட்டை மீற அவ்வப்போது சாதி இந்துக்கள் முயற்சிப்பார்கள். அப்படி ஒரு முயற்சிதான் 1985இல் நடந்தது.
காட்டுமன்னார்குடிக்கு அருகிலுள்ள குருங்குடியைச் சேர்ந்த சாதி இந்துக்கள் தங்களது கோயில் திருவிழாவின்போது வெளியூரிலிருந்து ஆட்களைக் கொண்டுவந்து பறையடிக்கச் செய்ய முற்பட்டபோது அதை அறிந்த தலித்துகள் திரண்டு அங்கே சென்று அதைத் தடுக்க முயன்றதில் மோதல் ஏற்பட்டது. வழக்கம் போல போலீஸ் தனது “நடுநிலையை” நிரூபிக்க தலித்துகள்மீது தாக்குதல் நடத்தித் துப்பாக்கியால் சுட்டதில் பாண்டியன் பலியானார். (விவரம் : எல். இளையபெருமாள் நேர்காணல் 15-2-2004, காட்டுமன்னார்குடி)
துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து சுமார் பதினான்கு ஆண்டுகள் கழித்து 1999இல் மீண்டும் பறை அடிப்பது பற்றிய பிரச்சினை காட்டுமன்னார்குடியில் எழுந்தது. அங்குள்ள விநாயகா திரையரங்கில் 19-2-1999 அன்று “மறுமலர்ச்சி” என்ற படம் திரையிடப்பட்டது (அதன் ஹீரோவின் பெயர் ராசுப் படையாச்சி). அப்படத்தின் துவகத்தில் வரும் பாடல் காட்சியில் “எடுங்கடா உருமிமேளம், அடிங்கடா மேளதாளம்“ என்ற பாடல் வரிகள் இடம்பெற்றிருந்தன. எனவே அந்தப் படத்தைத் திரையிடக்கூடாது எனத் தலித் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கலவரம் மூண்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் 23-2-1999 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, அந்தப் பாடலை நீக்கிப் படத்தைக் காண்பிப்பதென முடிவு செய்யப்பட்டது. (இரண்டு நாள்கள் கூட அந்தப் படம் ஓடவில்லை).
இப்படிப் பறை அடிப்பது உள்ளிட்ட இழிதொழில்களை மறுத்து தலித்துகள் நீண்டகாலமாகவே போராடிவந்துள்ளனர். ஆனால் அந்தப் போராட்டங்களைப் பற்றிய பதிவுகள் பிற பகுதிகளுக்கு இப்போதும்கூட சரிவரத் தெரியவில்லை. தலித் பத்திரிகைகள் பல வெளியாகிக்கொண்டிருக்கும் இப்போது அந்த நிலை சற்றே மாறியுள்ளதெனினும் முழுவதுமாக மாறிவிட்டதெனச் சொல்ல முடியாது.
இன்று தமிழ்நாட்டில் வலுவான தலித் அரசியல் இயக்கங்கள் செயல்பட்டுவருகின்றன. அவை அரசியல் தளத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் அளவோடு ஓப்பிடும்போது, பண்பாட்டுத் தளத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் மிக மிகக் குறைவு. அந்தக் குறையைக் களைவதற்கு அவை முயற்சிக்கின்றன என்பது ஆறுதலான விஷயம்.
தலித் இலக்கியம் என்னும் தளத்தில் செயல்படுகிறவர்களில் பலர் தங்களைத் தலித் அரசியல் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டவர்களாகவும் எதிரானவர்களாகவும் காட்டிக்கொள்வதன் மூலம் “பொதுவானவர்களின்” அங்கீகாரத்தைப் பெற முயற்சிக்கின்றனர். பண்பாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி தலித் அரசியல் இயக்கங்கள் கொண்டுள்ள புரிதலைவிடவும் இவர்களது புரிதல் மிக மோசமாகவே இருக்கிறது.
தமிழ்ச் சூழலில் தலித் இலக்கியம், பண்பாடு பற்றி முனைப்போடு பேச ஆரம்பித்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. துவக்கத்தில் முன் வைக்கப்பட்ட வகைமாதிரிகளும் சூத்திரங்களும் தலித் இலக்கியம், பண்பாடு ஆகியவை பற்றிய கொச்சையான புரிதல்களுக்கு வழிவகுத்து “கலக ஸ்டீரியோடைப்” ஒன்று உருவாகக் காரணமாகிவிட்டன. அதிலிருந்து தலித் பார்வை முழுவதுமாக இன்னும் விடுபட முடியவில்லை.
தலித் மக்களின் போராட்ட வரலாற்றிலிருந்து தலித் அரசியல், பண்பாட்டுக்கான கூறுகள் திரட்டியெடுக்கப்படவில்லையென்பது இன்றளவும் ஒரு குறைபாடாகவே இருந்து வருகிறது. தலித் இலக்கியம், பண்பாடு தொடர்பான கருத்தாக்கங்கள் முன்வைக்கப்பட்ட காலத்தில் தமிழ் பௌத்தம் குறித்தும் அயோத்திதாசர் சிந்தனைகள் குறித்தும் எவரும் அறிந்திருக்கவில்லை. அதுபோலவே தமிழக தலித்துகளின் போராட்ட வரலாறும் இன்றைய தலைமுறையினரை எட்டியிருக்கவில்லை. இன்று நிலைமை மாறியுள்ளது. இப்போதாவது இதுவரையிலான அனுபவங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பறை அடித்தல் உள்ளிட்ட பண்பாட்டு இழிவுகள் தலித் மக்கள்மீது சுமத்தப்பட்டது பற்றியும், அவற்றை அவர்கள் எதிர்த்துப் போராடியது பற்றியும் இன்றைய தலைமுறையினர் புரிந்துகொள்ள வேண்டும். சிதம்பரம், காட்டுமன்னார்குடி பகுதிகளில் நடந்த போராட்டங்கள் பற்றிய செய்தி அந்த விதத்தில் முக்கியமானவையாகும்.
பாண்டியன் தனது உயிரைக் கொடுத்து எதிர்த்த ஒரு பண்பாட்டு இழிவு தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தடைசெய்யப்படவேண்டும். அதைச் சாதிக்கும் திறன் தலித் இயக்கங்களுக்கு இருக்கிறதென்பதே எனது நம்பிக்கை.
(இந்தக் கட்டுரை காலச்சுவடு மாத இதழில் நான் எழுதிவந்த ’பிறவழிப் பயணம்’ என்ற தொடரின் ஒரு பகுதியாக மார்ச் 2004 இல் பிரசுரிக்கப்பட்டது. உயிர்மை பதிப்பகம் வெளியிட்ட ’ பிறவழிப் பயணம்’ (2010)என்ற நூலில் இடம்பெற்றுள்ளது)
– ரவிக்குமார்