பவுத்தத்திற்கும் பார்ப்பனியத்திற்கும் இடையில் நடைபெற்ற போராட்டமே இந்தியாவின் ஒட்டுமொத்த வரலாறு‘ என்றார் அம்பேத்கர். பார்ப்பனியத்திற்கு எதிரான போரில், 202 ஆண்டுகளுக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வெற்றி ஈட்டப்பட்ட நாள் சனவரி 1.
மிகுந்த வியப்புக்குரிய இந்நாள் குறித்த வரலாற்றுத் தகவல்களை பர்தீப் சிங் ஆட்ரி பதிவு செய்திருக்கிறார் : “1.1.1818 அன்று 500 பேர் மட்டுமே கொண்ட தீண்டத்தகாத போர்வீரர்கள் (மகர் ரெஜிமன்ட்) எண்ணிக்கையில் பலம் பொருந்திய 30 ஆயிரம் போர்வீரர்கள் அடங்கிய பேஷ்வா ராணுவத்தினரை முறியடித்தனர்.
மகாராட்டிர மாநிலத்தில் உள்ள பூனாவில் பார்ப்பன பேஷ்வா ஆட்சியாளர்கள் மிகக் கொடூரமான ஆட்சியை நடத்தி வந்தனர். இதை எதிர்த்து பிரிட்டிஷ் ராணுவத்தில் இருந்த மகர் ரெஜிமன்ட் வீரர்கள், ஒரே நாளில் பேஷ்வாக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இப்போருக்கு இணையான ஒன்றை வரலாற்றில் குறிப்பிட முடியாது. தீண்டத்தகாத போர்வீரர்களால் நடத்தப்பட்ட இப்போர், சுயமரியாதைக்கும் மனித மாண்புக்குமானது; மநுஸ்மிருதியின் மேலாதிக்கத்திற்கு எதிரானது! பார்ப்பன ஆட்சியின் கீழிருந்த மகாராட்டிராவில் சாதி அடிப்படையிலான சமூகப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் கடுமையாக இருந்தன.
இவர்களின் ஆட்சியில்தான் தீண்டத்தகாத மக்கள் தங்கள் இடுப்பில் துடைப்பத்தைக் கட்டிக் கொண்டு செல்ல வேண்டும். இம்மக்களுக்கு கல்வி முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. கல்வி கற்க முனையும் தீண்டத்தகாத மக்கள் கொல்லப்பட்டனர். பீம கோரெகான் போர்தான் இந்த அநீதிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இப்போர் கோரெகானில் உள்ள பீமா ஆற்றங்கரையின் ஓரத்தில் நடைபெற்றது. பேஷ்வா ராணுவத்தினர் 20 ஆயிரம் குதிரைப் படையினர் மற்றும் 8 ஆயிரம் காலாட் படையினருடன் தயாராக இருந்தனர். 12 மணி நேரத்தில் தீண்டத்தகாத போர் வீரர்கள் அவர்களை வெற்றி கொண்டனர். 1851 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு இப்போரில் மடிந்த 22 மகர் வீரர்களின் நினைவாக ஒரு தூணை எழுப்பியது. அம்பேத்கர் ஒவ்வொரு ஆண்டும் கோரெகானுக்குச் சென்று இந்நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்துவார். 1.1.1927 அன்று இவ்விடத்தில் மாபெரும் பொதுக்கூட்டத்தை அவர் கூட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.”