இந்த நாடகத்தின் முதல் காட்சி, காவல் நிலையத்துக்குள் தொடங்குகிறது. நிஜத்தில் என்றால், உள்பாகங்கள் முழுவதும் திருடப்பட்டு, துருவேறிய வெறுங்கூடுகளாக நிறைய வண்டி வாகனங்கள் நிற்கும் இடம் எதுவோ, அதைக் காவல் நிலையம் என்று எளிதாக அடையாளம் காட்டிவிடலாம். ஆனால், நாடக மேடையில் அப்படிக் காட்ட முடியாது. இருந்தாலும் நாடகத்துக்காக மேடையில் காவல் நிலையம் ஒன்றை உருவாக்கத்தான் வேண்டும். காய்ந்த ரத்தத்தின் நிறத்தில் செஞ்சாந்து பூசி, அதில் இடைக்கிடை வெள்ளைக்கோடுகள் வரையப்பட்ட ஒரு கித்தானை அல்லது தட்டியை வைத்தால், காவல் நிலையம் போன்ற தோற்றம் மேடைக்குக் கிடைத்துவிடும். மேடையின் முன்புறத்தில் அரைவட்ட வடிவிலான நுழைவாயில் வளைவு ஒன்று தேவை. அதில் `காவல் நிலையம்’என மறக்காமல் எழுத வேண்டும். ஒருவேளை கா‘வள்’ நிலையம் என எழுதப்படுமானால், அது எழுத்துப் பிழைதானே தவிர, அர்த்தப் பிழை அல்ல என்பதறிக. வேண்டாதவர்கள் மீது வழக்குப் போடுவதற்காக ஒடுங்கிய சொம்புகள், சில கஞ்சாச்செடிகள், கஞ்சாப் பொட்டலம் ஒன்றிரண்டு மேடையின் ஓரத்தில் சற்றே வெளித்தெரியும்படியாக வைக்கப்படுமானால், அச்சு அசலான காவல் நிலையம் என்றே பார்வையாளர்கள் நம்பிவிடுவார்கள். கூடவே, சித்ரவதை தாளாதவர்களின் ஓலமும் கேவலும் பின்னணியில் ஒலிக்குமாயின், மிகுந்த நம்பகத்தன்மை உருவாகிவிடும். பார்வை யாளர்களைப் பயத்தில் ஆழ்த்தி, மூத்திரம் பெய்யவைக்கும் அளவுக்குக் கொடூரமான குரலில், எழுதத்தகாத வசைச்சொற்கள், ‘என்கவுன்டர்ல போட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டேயிருப்பேன். ஒரு ம…ரைக்கூட பு…க முடியாது’ என்பதுபோன்று வீர தீர கர்ஜனைகள் ஒலிப்பதும் அவசியம். மேடையில் இம்மாதிரியான சொற்களைப் பயன்படுத்தலாமா என்கிற குழப்பம் தேவையற்றது. நாட்டின் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஓயாது உச்சரிக்கப்படுகிற இந்தச் சொற்களை மேடையில் பயன்படுத்து வதால், புதிதாக எந்த ஆபாசமும் வந்து விடப்போவது இல்லை. அப்படி ஏதேனும் மனத்தடை இருக்குமானால், `பீப்’ பாடல்போல `பீப்’ வசனமாக மாற்றிக்கொள்வது உசிதம்.காவல் நிலையம் சட்டம் ஒழுங்கு (லா அண்டு ஆர்டர்), குற்றம் (கிரைம்) என இரண்டாக வகிடெடுத்துப் பிரிக்கப்பட வேண்டும். சட்டம் – ஒழுங்கைப் பராமரிப்பது சட்டம் – ஒழுங்குப் பிரிவின் வேலை என்றால், குற்றங்களைப் பராமரிப்பது குற்றப் பிரிவின் வேலையா என்று குதர்க்கம் பேசுவதோ, குற்றத் தடுப்புப் பிரிவு என்று திருத்தம் சொல்வதோ, இந்த நாடகத்துக்குத் தேவையற்றது. இடுகுறிப் பெயரா, காரணப் பெயரா என்ற ஆராய்ச்சியில் இறங்காமல், பேர்வைத்தவர்கள் விவரம் இல்லாமலா வைத்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு, நாடகத்தைத் தொடங்குகிற வழியைப் பார்க்க வேண்டும்.
காவல் நிலையத்துக்கு, சுவரும் கூரையும் துப்பாக்கியும் தோட்டாவும் இல்லை என்றாலும், அங்கு ரைட்டர் என்று ஒரு கதாபாத்திரம் கட்டாயம் இருக்க வேண்டும். ரைட்டர் என்றதும் கதை, கவிதை எழுதுகிறவர் என்று நினைத்துக்கொள்ளக் கூடாது. இவர் கதை, கவிதை எழுதுகிறவர்கள் மீதும்கூட கேஸ் எழுதுகிற ரைட்டர். சில நேரங்களில் இவர் எழுதுகிற கேஸ் குறிப்புகள் நம் ஆட்கள் எழுதுகிற கதை, கவிதைகளைவிட புனைவுத்தன்மை மிகுந்திருப்பது உண்மைதான் என்றாலும், இவர் வேறு ரைட்டர் வகையைச் சேர்ந்தவர். இலக்கியத்துக்கான நோபல் பரிசுபெற்ற எழுத்தாளர் ஒருவர், ‘நான் ரைட்டர்’ என்று இவரிடம் சொல்லும் பட்சத்தில், `எந்த ஸ்டேஷனில்?’ என்று விசாரிக்கும் அளவுக்கு தான் இவருக்கு இலக்கியத்தோடு பரிச்சயம் இருக்கும். `ஏட்டையா…’ என்றும் `யோவ்… செவன் நாட் சிக்ஸ் / டூ ஒன் த்ரீ’ என்பது மாதிரியான எண்கள் கொண்டும் பண்டைய தமிழ் சினிமாவில் இருந்து இன்றுவரை தொன்றுதொட்டு விளிக்கப்படுபவரும் இவரே. (ஏன், கைதிக்கும் எண்; காவலருக்கும் எண் என்ற கேள்விக்கு விடை தேடி நாடகம் தொடங்குவதைத் தாமதப்படுத்திவிடக் கூடாது). சற்றே வழுக்கை விழுந்த தலை, பெரிதாகத் தள்ளியிருக்கும் தொப்பை, கடுகடுத்த முகம் என்று பொதுப்புத்தியில் ஏட்டய்யாவுக்கு எனப் பதிந்துள்ள சித்திரத் தோடு பொருந்தக்கூடிய ஒருவரை, இந்தப் பாத்திரத்துக்குத் தேர்வு செய்வது அவசியம். புகார் கொடுக்க வருகிறவர்களிடம் ஒரு குயர் பால் பேப்பரும், ஒரு டஜன் கார்பன் காகிதமும் வாங்கிவரச் சொல்லும் பழங்காலத்து ரைட்டர் அல்ல இவர். புகார் பதியக் கொஞ்சமாவது வெளிச்சம் தேவை என்பதால், ஒவ்வொருவரையும் ஏழு பண்டல் மெழுகுவத்தியும் நாலு பண்டல் தீப்பெட்டியும் வாங்கிவரச் செய்கிற தற்காலத்தைச் சார்ந்தவர். ஆகவே, இதை `நவீன நாடகம்’ என்றே அழைக்கலாம். செல்போனுக்கு டாப்-அப் செய்துவிடும் புதுவகை லஞ்ச முறையை அறிந்திருப்பவராக இவர் காட்டப்படுவாராயின், இது `அதிநவீன 3ஜி அல்லது 4ஜி வகை நாடகம்’ என்று அடையாளப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது.
இப்போது நாடகத்தைத் தொடங்க வேண்டும். நாடகத்தைத் தொடங்கிவிட்டால், இடையில் நிறுத்த முடியாது. ஆகவே, தொடங்குவதற்கு முன்பாக தேவையான அனைத்தும் ஆயத்தமாக இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்வது அவசியம். எல்லாம் தயாராக இருந்தும் பார்வையாளர்கள் யாரும் வரவில்லையே என்று கவலைப்படக் கூடாது. ஏனென்றால், பெரும்பாலான நாடகங்கள் பார்வையாளர்கள் இல்லாமல்
தான் நடக்கின்றன. பார்வையாளர்கள் வந்துவிடவே கூடாது என நடக்கிற நாடகங்களும் இல்லாமல் இல்லை. ஆனால், அவற்றைப் பற்றி பேசி நாம் அரசியலுக்குள் சிக்கிக்கொள்ளக் கூடாது. ஒருவேளை கடைசி வரையிலும் பார்வையாளர் ஒருவருமே வரவில்லை என்றால், அது நாடகக் குழுவினர் தம்முடைய நாடகத்தைத் தாமே பார்த்து பரீட்சித்துத் தெளிவதற்கு என்று நிகழ்த்தப்பட்டது எனப் புரிந்துகொள்வதுதான் நல்லது.
சரி, இப்போது நாடகத்தின் முதல் காட்சி. இடம்- காவல் நிலையம். நேரம் மாலை 7 மணி. வெளிச்சத்துக்காக மின்விளக்குகளுக்குப் பதிலாக, ஆங்காங்கே ஜன்னல் திட்டுகளில் மெழுகுவத்தி கொளுத்திவைக்கப்பட்டிருக்க வேண்டும். மேடைக்கு வெளிப்புறத்திலும் பார்வையாளர்கள் வந்துபோகும் பாதையிலும் அமரும் பகுதியிலும் உள்ள மின்விளக்குகள் அணைக்கப் பட்டு, அங்கு தீப்பந்தங்களால் ஒளியூட்டப்படுதல் அவசியம். இதன் மூலம் மிகை மின் மாநிலம் என்று அறிவிக்கப்பட்டாலும், 24 மணி நேரமும் மின்வெட்டு அமலில் இருக்கும் ஒரு மாநிலத்தின் குறிப்பிட்ட காலகட்டத்தில் இந்த நாடகம் நடக்கிறது என்பதை சூசகமாக உணர்த்த முடியும். ஆமாம், எல்லாவற்றையும் வெளிப்படையாகப் பேசிக் கொண்டிருக்காமல் சூசகமாகவும் பூடகமாகவும் பேசும் சாத்தியங்களைக் கொண்டதுதான் நாடகம். ஆனால், சூசகம், பூடகம் என்றால் என்னவென்று பார்வையாளர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களுக்கும் முன்பாக நாடகத்தை நடத்துகிறவர்கள் அறிந்திருப்பது அவசியம்.
காட்சி 1-ல் இடம்பெறக்கூடிய கதாபாத்திரங்கள்
போக்குவரத்தைச் சீர்குலைத்தல், முதலமைச்சரின் கட்அவுட்டுக்குக் காவல் இருத்தல், போராட்டக்காரர்களின் மண்டையை உடைத்து கை, கால்களை முறித்தல், பொய் கேஸ் போடுதல், வண்டி
களை மடக்கி மாமூல் வாங்குதல், நடைபாதையில் கடைவைத்திருப்பவர்களை மிரட்டிப் பணம் பிடுங்குவது, நகரத்தையே ஆக்கிரமித்திருப்பவர்களிடம் கூழைக்கும்பிடு போடுவது என்று அவசரமான பல்வேறு தேசநலப் பணிகளுக்காக, காவலர்கள் அன்றாடம் வெளியில் சென்றுவிடுவது வழக்கம். ஆகவே, காவல் நிலையம் என்பதை காவலர்கள் வதவதவென இருக்கும் இடம் எனத் தப்பாக நினைத்துக்கொள்ளக் கூடாது. எப்போதும் ஓரிருவர்தான் காவல்
நிலையத்தில் இருப்பார்கள் என்பதைக் கவனத்தில்கொண்டு, இந்தக் காட்சியில் கீழ்க்கண்டவாறு மிகக் குறைவான கதாபாத்திரங்களே இடம்பெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.
1. மேற்படி ரைட்டர் (இவரைப் பற்றி ஏற்கெனவே போதுமான அளவு விளக்கப்பட்டிருக்கிறது.).
2. அர்ஜுன், விஜயகாந்த், விக்ரம், விஜய், விஷால், சிம்பு, சூர்யா போன்ற நடிகர்களை காவல் அதிகாரிகளாகப் பார்த்து தானும் தறுதலையாகிப்போன இன்ஸ்பெக்டர் இரும்புள்ளன். உடம்பில் இருக்கும் மொத்த முடியில் ஒரு பாதியை மீசையாக வைத்திருப்பதும், நள்ளிரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பதும் உபவிதி. இப்படியாக, பெரிய மீசையும் கறுப்புக் கண்ணாடியும் வைத்திருப்பது ரௌடிகளுக்கும் வழக்கமாதலால், வேறுபடுத்திக் காட்டுவதற்காக இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து தோன்றுவதன் மூலம் இவர் போலீஸா, பொறுக்கியா என்பது மாதிரியாக எழும் தேவையற்றக் குழப்பங்களைத் தவிர்த்துவிட முடியும். போலீஸ்தான் பொறுக்கி அல்லது பொறுக்கிகள்தான் போலீஸ் என்கிற உண்மையைச் சொல்வதற்கு முயற்சித்து, நாடகத்தை நடத்துவதற்கு நாமே தடை ஏற்படுத்திக்கொள்ளக் கூடாது. பொது இடத்தில் அதுவும் ஓர் அரசாங்க அலுவலகத்தில் புகைபிடிப்பது தவறு எனச் சுட்டிக்காட்டும் தைரியம் ஒருவருக்கும் இல்லையாதலால், அவரது கையில் எப்போதும் ஆறாம் விரல் போல சிகரெட் புகைந்தபடி இருக்க வேண்டும். மேசையின் மீது ஓரமாக உட்கார்ந்து பூட்ஸ் காலை நாற்காலியில் வைத்தபடி இருப்பதுதான் அவருடைய பாணி.
3. மூன்றாவது கதாபாத்திரமும் முக்கியமானது – குற்றவாளி. குற்றவாளி என்றால் சட்டரீதியாகவோ, சமூகரீதியாகவோ குற்றம் ஏதும் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. போலீஸைப் பொறுத்தவரை பொதுமக்கள் எல்லோருமே எப்போதுமே குற்றவாளிகள்தான். எனவே, இந்தக் கதாபாத்திரத்தில் இந்த நாட்டு மக்கள் யாரை நடிக்கவைத்தாலும் பொருத்தமானதாகத்தான் இருக்கும். உணர்ச்சிவயப்பட்ட பார்வையாளர்கள் ஓரிருவர்கூட தாங்களாகவே முன்வந்து இந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்க ஆசைப்பட்டு நச்சரிப்பார்கள். அவ்வாறான இழுப்புக்கு நாம் இரையாகிவிடக் கூடாது. ஆமாம், பார்வையாளர்களை பார்வையாளர்களாகவே வைத்திருப்பதில் தான் நாடகத்தின் வெற்றி அடங்கியிருக்கிறது. இனியும் தாமதிக்க வேண்டியது இல்லை, நாடகம் தொடங்குகிறது.
தனது பார்வைக்காக வைக்கப்பட்டுள்ள மனு ஒன்றை இன்ஸ்பெக்டர் இரும்புள்ளன் படிக்கத் தொடங்குகிறார். படிக்கப் படிக்க அவரது முகவோட்டம் உக்கிரமாக மாறுகிறது. மீசையை முறுக்கியும் தடவியும் நீவிவிட்டுக்கொள்கிறார். திடீரென மேசையை ஓங்கிக் குத்துகிறார். மேசையில் இருந்து குதித்திறங்கி, சிகரெட்டைக் கீழே போட்டு பூட்ஸால் அரக்கி நசுக்குகிறார். பெரும் தாக்குதல் ஒன்றுக்கு அவர் தயாராவதன் அறிகுறிகள் இவை எல்லாம் என்பதுபோல் அவரது நடிப்பு இருக்க வேண்டும்.
இன்ஸ்: ஏய்யா ரைட்டரு, என்னய்யா இது? ஏழு கழுதை வயசாச்சு. எட்டுக்கழுத சர்வீஸ் ஆச்சு… ஒருத்தன் மனு குடுத்தா, என்ன ஏதுன்னு படிச்சுப் பார்க்கிறதில்லையா..?
ரைட்டர்: அய்யா, படிச்சுப் பாக்கிற நேரத்துல இன்னும் பத்து மனு வாங்கி வெச்சா வசூலுக்கு ஆகும்னுதான் மொத்தமா பிற்பாடு படிச்சுக்கலாம்னு வாங்கி வெச்சேங்கய்யா…
இன்ஸ்: ஆமா, மொத்தமா படிச்சு முழுப்பரீட்சை எழுதப்போறியாக்கும்… இந்தா இதைப் படிச்சுப்பாரு.
(ரைட்டர் மனசுக்குள் படிக்கத் தொடங்குகிறார்.)
இன்ஸ்: யோவ், கொஞ்சம் உட்டா நெஜ போலீஸாவே நெனச்சிக்குவியா? மனசுக் குள்ளயே படிச்சா, எதிர்ல ஒட்கார்ந்திருக்கிற ஆடியன்ஸுக்கு எப்படிய்யா கேட்கும்? நல்லா வாய்விட்டு சத்தமாப் படி. இல்லாட்டி, இந்த ஓப்பனிங் சீன்லயே எழுந்து போயிடுவாங்க.
(ரைட்டர் சத்தமாகப் படிக்கத் தொடங்குகிறார்.)
அனுப்புநர்
பொதுச்செயலாளர்
குற்றம்குறை கண்டு குமுறுவோர் கூட்டியக்கம் (குககுகூ)
……………………………………….
…………………………………………
………………………………………
(அதற்குள்ளாகவே பொறுமையிழந்து
விடுகிற இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு): யோவ், படிச்சுக் கிழிச்சது போதும். ஏய்யா, இந்தக் குககுகூ ஆளுங்க ஒரு மார்க்கமான
வனுங்கனு தெரியும்தானே? அவனுங்க ஒரு மனு குடுத்தானுங்கனா, அதுல வில்லங்கம் ஏதாச்சும் இருக்கும்னு தோணாதா? `எதுவாக இருந்தாலும் அய்யா வந்தப்புறம் குடுத்துக்குங்க’னு சொல்லி சமாளிச்சு அனுப்பி வெச்சிருக்கலாம்ல… இப்ப அவனுங்களுக்குப் பதில் சொல்லித்தானே ஆகணும்? போன் பண்ணி வரச்சொல்லுய்யா அந்தாளுங்களை.
ஏட்டய்யா: அய்யா, அவனுங்ககிட்ட போன் இல்லீங்க. இன்னும் செத்தநேரத்துல அவங்களே இங்க வர்றதா சொல்லிட்டுப் போயிருக்காங்க. வர்ற நேரம்தான்.
(இன்ஸ்பெக்டரும் ஏட்டய்யாவும் அவர்களுக்காகக் காத்திருக்கின்றனர்.)
காட்சி 1 முடிவுறுகிறது
காட்சி 2
`ஒரு மார்க்கமானவர்கள்’ என்று இன்ஸால் சொல்லப்பட்ட குககுகூ ஆட்களைப் பற்றிய அறிமுகம்தான், இந்த இரண்டாவது காட்சி. பொதுவாக இம்மாதிரியான அமைப்பினர், காவல் துறை உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகளுக்கு வாலாக இருப்பார்கள் என்கிற உண்மைக்கு மாறாக, இந்த குககுகூ ஆட்கள் சவாலாக இருப்பவர்கள். வெளிப்
பார்வைக்கு ஏட்டிக்குப் போட்டியாக எதையாவது செய்கிறவர்கள் என்று சித்தரிக்கப்பட்டிருந்தாலும், இவர்கள் உண்மையில் அப்படியானவர்கள் அல்ல. மனதுக்குச் சரியெனப்படுவதைத் தயக்கமில்லாமல் தைரியமாகச் செய்யக் கூடியவர்கள். இந்த அமைப்பு உருவான பின்னணி பற்றிய பின்வரும் குறிப்பை ஆழப் படிப்பது அவசியம்.
அந்நியராட்சி இருந்த வரையிலும் அதிகாரத்தின் தொங்குசதையாக மாறி, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் எந்தவொரு சூழ்நிலையிலும் பங்கெடுக்காத கட்சியொன்று, பல்வேறு மோசடியான பிரசாரங்களை முன்வைத்து, ஆட்சியைப் பிடித்திருக்கும் காலமது. எப்போதும் எதிலும் ‘தேசபக்தி தேசபக்தி’ என்று கூப்பாடு போட்டு, நாட்டுக்குத் துரோகம் செய்த தங்களின் கடந்த காலத்தை மறைக்கும் தந்திரத்தில் அந்தக் கட்சியினர் மும்முரமாயிருந்தனர். எனவே, ஆளும் கட்சியை விமர்சிப்பவர்களை தேசத்துரோகிகளாகச் சித்தரித்து, சிறையில் தள்ளி இரும்புள்ளன் மாதிரியான இன்ஸ்பெக்டர்களைக்கொண்டு சித்ரவதை செய்யும் கொடிய அடக்குமுறையை அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டிருந்தது. கனவில் தேசியக்கொடியை அவமதித்தது, போன ஜென்மத்தில் வேறு நாட்டில் பிறந்தது, தேசியகீதத்தின் மெட்டில் அபானவாயுவை வெளியேற்றியது போன்ற நம்பவே முடியாத குற்றச்சாட்டுகளை நம்பி, தண்டனை வழங்கும் நீதிமன்றங்களும் பெருகியிருந்தன. நாட்டில் நிலவும் இந்த அசாதாரண நிலையிலும், கலெக்டர் ஆபீஸ் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், மந்திரி வீட்டு முன் மறியல் என்று சம்பிரதாயமாகப் போராடுகிறவர்களை அரசாங்கமே அனுமதித்தது. நாட்டில் போராடுவதற்கான உரிமை இருப்பதான தோற்றத்தைக் காட்டுவதற்கு உதவும் இவர்களைக் கைதுசெய்து கொண்டுபோய், ஒரு மண்டபத்தில் பத்திரமாகத் தங்கவைத்து மத்தியானச் சோறும் போட்டு சாயங்காலம் அனுப்பி கைமாறு செய்தது அரசாங்கம். அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலுக்கு இசைவாகப் போராடும் இந்த அமைப்புகளுக்கு மாற்றாக உருவானதுதான் இந்த குககுகூ. அரசாங்க நடவடிக்கைகளை விமர்சிக்கும் தங்களது நிலைப்பாடுகளை, வீடுவீடாகப் போய் குடிமக்களைச் சந்தித்து ஏற்கும் வகையில் சொல்லும் வேலையில் இறங்கிவிடக் கூடியவர்கள். ஏற்காதவர்களிடம் தொடர்ந்து சொல்வதை வழக்கமாகக்கொண்டவர்கள். இதற்கு உதாரணமாக, இரண்டு விஷயங்களைச் சொல்வது பார்வையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
1. வருடா வருடம் பள்ளித்தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவ மாணவியர், ‘நான் டாக்டராகி ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்வேன்’ என்றோ, ‘ஐஏஎஸ் படித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்’ என்றோ ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பது வழக்கம். அவ்வாறு பேட்டி கொடுத்தவர்கள் அதற்கப்புறம் என்ன ஆனார்கள் என்று யாருக்கும் தெரியாவிட்டாலும், வருடா வருடம் இப்படி பேட்டி எடுப்பதும் கொடுப்பதும் நின்றபாடில்லை. இவர்களுக்குப் பாராட்டு விழாக்களும் பரிசளிப்புகளும் நடத்துகிறவர்களும் ஓய்வதில்லை. ஊடக வெளிச்சத்தில் உளறிக்கொட்டும் இந்த மாணவர்களில் ஒருவர்கூட, உண்மையில் அப்படி சேவை செய்வதற்கான வாய்ப்புகள் வரும்போது, அதை ஏற்பதில்லை. காசு, அதிகாரம், செல்வாக்கு என்று சுயநலமான வாழ்வைத் தேடிக்கொண்டு, மக்களுக்கும் நாட்டுக்கும் விரோதிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதை அம்பலப்படுத்தும் ஆவணப்படம் ஒன்றைத் தயாரித்தவர்கள்தான் இந்த ‘குககுகூ’ இயக்கத்தைத் தொடங்கியவர்கள். இத்துடன் நில்லாமல் இவர்கள் என்ன செய்வார்களென்றால், வருடா வருடம் மாநிலத்திலேயே கடைசி மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியரைத் தேடிப் பிடித்து, அவர்களது சொந்த ஊருக்கே போய் பெரிய விழா நடத்தி, `இந்த மோசடியான கல்விக்கு அடிபணியாமல் சுயத்தன்மையைப் பாதுகாத்துக்கொண்டவர்கள்’ என்று பாராட்டி பரிசுகளையும் விருதுகளையும் வழங்கிக் கௌரவிப்பார்கள். இந்த கௌரவத்துக்காகவே நன்றாக மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் பலரும்கூட தங்களைத் தாங்களே ஃபெயிலாக்கிக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் இருக்கிறது.
2. 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்கள் அனைவரும் கட்டாய ராணுவப் பயிற்சி பெறுவதோடு, குறிப்பிட்ட காலத்துக்கு கட்டாய ராணுவச் சேவையிலும் ஈடுபடுவதன் மூலம் தேசபக்தி வளரும் என்று அரசாங்கம் பேசிவந்த நேரமது. நாட்டை ராணுவமயமாக்கும் ஆளும்கட்சியின் வக்கிரம் அரசாங்கத்தின் முடிவாக மாறுவதில் குககுகூவினருக்கு உடன்பாடில்லை. ‘அண்டை அயலாரோடு நல்லிணக்கத்தைப் பேணி, ராணுவச் செலவினங்களைப் படிப்படியாகக் குறைத்து, சேமநலத் திட்டங்களுக்கான நிதியை அதிகப்படுத்துவதை நோக்கி நாடுகள் முன்னேற வேண்டும். படையணியினரைப் பீடித்திருக்கும் ராணுவ வாதத்தில் இருந்து அவர்களை விடுவித்து, மனிதத்தன்மைக்குத் திருப்ப வேண்டும் என்கிற கருத்து உலகளவில் பரவிவரும் இக்காலத்தில், குடிமக்களை ராணுவ மனநிலைக்குத் தள்ளுவதை ஆதரிக்க முடியாது. ஆக்கப்பூர்வமான வழிகளில் ஈடுபடுத்த வேண்டிய மனித ஆற்றலையும் அறிவையும் இப்படி பகையுணர்ச்சியின் பேரில் விரயமாக்கக் கூடாது. கண்ணியமானதொரு வாழ்க்கை உத்தரவாதப்படுத்தப்படும்பட்சத்தில், தங்கள் நாட்டுக்கு வெளியாரிடமிருந்து ஏதேனும் ஓர் ஆபத்து வருமானால், மக்கள் தாங்களே ஆயுதமாகக் கிளர்ந்தெழுந்து போராடி நாட்டைக் காப்பாற்றுவார்கள்’ என்பது குககுகூவினரின் நிலை. இதுகுறித்து நடந்த ஊடக விவாதங்களில் குககுகூவினர் பேசிய காணொளித்துண்டுகள் யூடியூபில் காணக் கிடைக்கின்றன.
‘நாட்டின் வளங்களைப் பெருக்குவதில் பங்கெடுப்பது, உற்பத்திகளை நீதியாகப் பகிர்ந்துகொள்வது, சகமனிதர் சுயமரியாதையோடு வாழ்வதற்கான உரிமையை ஒவ்வொருவரும் அங்கீகரிப்பது என்பதை நோக்கி வளர்த்தெடுக்கப்படும் மனநிலைதான் தேசபக்தியே தவிர, வெறும் முழக்கங்களோ, ஏதேனும் ஓர் அயல்நாட்டை எதிரியாகப் பாவித்து ஆயுதம் ஏந்திக்கிடப்பதோ அல்ல. சொந்த வேலைகளுக்கு அப்பால் நாட்டுக்காக அன்றாடம் குடிமக்கள் கட்டாயமாக ஏதாவது செய்வதுதான் தேசபக்தி என்று அரசாங்கம் கருதுமேயானால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாகக் குறிப்பிட்ட காலத்துக்கு துப்புரவுத் தொழிலாளிகளாகப் பணியாற்ற வேண்டும் என்கிற சட்டத்தை இயற்றட்டும். நாட்டை சுத்தமாகவும் நாட்டு மக்களை ஆரோக்கியமாகவும் பார்த்துக்கொள்வதை விடவும் மேலான தேசப்பணி எதுவும் இல்லை… இது துப்புரவுத் தொழிலைப் புனிதப்படுத்தும் நோக்கில் சொல்லப்படுவதல்ல, அத்தொழிலில் ஈடுபட்டவர்கள் மீதான இழிவான பார்வையை ஒழித்துக்கட்டும் வழிகளில் ஒன்று…’
– இவ்வாறெல்லாம் பேசக்கூடிய குககுகூ அமைப்பினரை, அவர்களது குணநலன்கள் துலங்கித் தெரியுமாறு கதாபாத்திரங்களாக உருவாக்கிக் காட்டுவதுதான் இரண்டாவது காட்சி. தகவலாகச் சொல்வதா, காட்சிரூபமாக விளக்குவதா என்பது இந்தக் குறிப்பை உள்வாங்குவதைப் பொறுத்திருக்கிறது.
(காட்சி 2 நிறைவுறுகிறது)
காட்சி 3
நேரம் சுமார் இரவு 8 மணி. ஊர் முழுக்க இருட்டு. மின்னாம்
பூச்சிபோல மெழுகுவத்திகளும் பந்தங்களும் மங்கலாக எரியும் வெளிச்சம்.
இடம்: மறுபடியும் காவல்
நிலையம். குககுகூ ஆட்களுக்காக ஏட்டையா என்கிற ரைட்டரும் இன்ஸ்பெக்டர் இரும்புள்ளனும் காத்திருந்த முதல் காட்சியின் தொடர்ச்சிதான் இந்த மூன்றாம் காட்சி. எனவே, இக்காட்சியில் கூடுதலாக இடம்பெறக்கூடியவர்கள் குககுகூவினர் மட்டுமே.
குககுகூ நிர்வாகிகள் சிலர் காவல் நிலையத்துக்குள் நுழைகின்றனர் (இவர்களில் சரிபாதியினர் பெண்களாக இருத்தல் அவசியம் – 33 சதவிகிதம் அல்ல). எடுத்த எடுப்பிலேயே முரட்டடியாக நடந்துகொள்வதன் மூலம் இவர்களது மனவுறுதியைக் குலைத்து, எதற்காக வந்தார்களோ, அந்த விஷயத்திலிருந்து பின்வாங்கச் செய்துவிட வேண்டும் என்கிற தனது வழக்கமான பாணியில், இன்ஸ் இரும்புள்ளன் எகிறத் தொடங்குகிறார் (அரசாங்கத்தை எதிர்த்துப் போராட்டம், பொடலங்கா என்று தொல்லை தரக்கூடியவர்கள் என்பதால், ஏற்பட்ட எரிச்சலும் வெறுப்பும் அவரது குரலில் அப்பட்டமாக வெளிப்படுதல் அவசியம்).
இன்ஸ்: ஏய்யா, என்னய்யா நெனச்சிருக்கீங்க உங்க மனசுல? உங்க இஷ்டத்துக்கு எது வேணும்னாலும் கேப்பீங்களா? (அப்போதைக்கு வாய்க்கு வருகிற வசவுகளில் ஏசுவதற்கான சுதந்திரம் இந்த இடத்தில் நடிகருக்கு இருக்கிறது.)
குககுகூ 1: ஏன் இப்படி வந்ததும் வராததுமா கூச்சல் போட்டு ரகளை பண்றீங்க… முதல்ல மேசை மேலிருந்து இறங்கி முறையா உங்க சீட்ல உட்காருங்க. எங்களுக்கும் உட்கார நாற்காலி போடச் சொல்லுங்க.
இன்ஸ்: ஓஹோ… ஒழுங்கைப் பத்தி எனக்கே பாடம் நடத்துறீங்களா? இங்க என்ன சம்பந்தம் கலக்கவா வந்திருக்கீங்க உங்களை உட்கார வெச்சுப் பேச? குடுத்திருக்கிற பெட்டிசனை திரும்ப வாங்கிக்கிட்டு ஓடிப்போயிருங்க…
குககுகூ 2: முதல்ல உட்கார ஏற்பாடு பண்ணுங்க, பிறகு பேசலாம்.
இன்ஸ்: அப்படியெல்லாம் வர்றவன் போறவனையெல்லாம் உட்கார வெச்சுப் பேசிக்கிட்டிருக்கணும்னு அவசியமில்லை. வந்த விஷயத்தைச் சொல்லிட்டுப் போய்ட்டே இருங்க…
குககுகூ 3: உங்க விருப்பு வெறுப்புக்கு இங்கு இடமில்லை. ஸ்டேஷனுக்குள் வர்ற பொதுமக்களை உட்கார வெச்சுப் பேசுவதுதான் அலுவல் சார்ந்த முறை. அதுக்கு ஏற்பாடு பண்ணிட்டு தகவல் சொல்லுங்க, அதுக்கப்புறம் எங்க மனுவைப் பத்தி பேசிக்கலாம்… (என்று கூறிக்கொண்டே வெளியேற எத்தனிக்க வேண்டும்.)
இன்ஸ்: (அரசு அதிகாரிகள், பொதுமக்களிடம் கண்ணியக்குறைவாக நடந்துகொள்வதை, ரகசியமாக வீடியோ எடுத்து வாட்ஸ்அப்பில் ஏற்றிவிடுகிற புதுவகை நெருக்கடி டக்கென நினைவுக்கு வர, பதற்றமடைகிற இன்ஸ் இரும்புள்ளன் வெளியேறிப்போகும் அவர்களை வலிந்து கெஞ்சிக் கூத்தாடி உள்ளே அழைத்து இருக்கை போட்டு உட்காரவைத்து பேசத் தொடங்குகிறார்) சொல்லுங்க, என்ன விஷயமா வந்திருக்கீங்க?
குககுகூ 1: பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டு ஏற்கெனவே மனு குடுத்திருக்கோம்.
இன்ஸ்: பார்த்தேன். ஆனா, நீங்க கேட்டிருக்கிற இடத்துல நடத்த அனுமதி தர முடியாது.
குககுகூ 2: ஏன்?
இன்ஸ்: இதுவரைக்கும் யாருமே அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்துறதுக்கு அனுமதி கேட்டதுமில்லை, நாங்க கொடுத்துமில்லை.
குககுகூ 4: இவ்வளவு காலமா இல்லைன்னா என்ன, இப்ப நாங்க கேக்குறோம். அனுமதி குடுங்க.
இன்ஸ்: இதென்னய்யா உங்களோட புது ரோதனை? போயும் போயும் சுடுகாட்டுல பொதுக்கூட்டம் நடத்துறோம்னு யாராவது அனுமதி கேப்பாங்களா?
குககுகூ 1: இந்தச் சமூகம் இப்ப இருக்குற நிலைமையால ஆதாயம் அடையறவங்க, அதை அப்படியே தக்கவெச்சுக்கிறதுக்கான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்புறதுக்கு குடும்பம், கோயில், மதம், கடவுள், கல்விக்கூடம், ஊடகங்கள், கலை, இலக்கியம், உங்களை மாதிரி போலீஸ் உள்ளிட்ட அரசு
இயந்திரம்னு பல ஏற்பாடுகள் இருக்கு. ஆனால், இந்தச் சமூக அமைப்பால் பாதிக்கப்படுறவங்க, பொதுக்கூட்டம், கருத்தரங்கம், ஆர்ப்பாட்டம், தர்ணா மாதிரியான ஏற்பாடுகள் மூலமாகத்தான் தங்கள் தரப்பு நியாயங்களை மக்கள் மத்தியில் முன்வைத்து பிரசாரம் செய்யவேண்டியிருக்கு.
(குறுக்கிடும்) இன்ஸ்: தாராளமா செய்யுங்க. அந்த மாதிரி பிரசாரம் நடத்துறதை அரசாங்கம் தடுக்கலியே…
குககுகூ 2: நேரடியா தடுப்பதில்லைதான். ஆனா, எங்க கருத்து யாருக்கும் போய்ச் சேர்ந்துடக் கூடாது என்பதில் நீங்க கடைப்பிடிக்கும் தந்திரங்கள் மலிவானவை. நாங்க எங்கே கூட்டம் நடத்த அனுமதி கேட்டாலும், பொதுமக்களுக்கு இடைஞ்சல், போக்குவரத்து இடையூறுனு ஏதாச்சும் காரணம் சொல்லி, அந்த இடத்தில் கூட்டம் நடத்த நீங்க அனுமதிப்பதில்லை. ஆளரவமே இல்லாத – ஊருக்கு ஒதுக்குப்புறமா – இல்லேன்னா சனங்க சட்டுனு வரத் தயங்குற சுடுகாடு மாதிரி ஒரு இடத்துல நடத்திக்கத்தான் அனுமதி தர்றீங்க. சுடுகாடு மாதிரி ஒரு இடத்துல கூட்டம் நடத்துறதுக்கு பதிலா, இனிமேல் சுடுகாட்டிலேயே கூட்டம் நடத்திக்கலாம்னு முடிவு பண்ணித்தான் மனு குடுத்திருக்கோம்.
இன்ஸ்: உங்க பொதுக்கூட்டம் சுடுகாடு மாதிரியான இடத்தில் நடக்கணுமா அல்லது சுடுகாட்டிலேயே நடக்கணுமா என்பதைத் தீர்மானிக்கிற என்னுடைய அதிகாரத்தில் நீங்கள் குறுக்கிடுவதை ஏற்க முடியாது. அப்படியே நீங்க கேட்டாலும், வரம்பு மீறி நீங்களாக கேட்டுவிட்டீர்கள் என்பதற்காக – அது அரசுக்கு அனுகூலமாகவே இருந்தாலும், சுடுகாட்டில் கூட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.
குககுகூ 2: அதாவது, நாங்கள் கேட்கிற இடம் எதுவானாலும் அதை மறுத்துவிட வேண்டும் என்கிற அதிகார மமதையிலும் பழக்கதோஷத்திலுமே இப்படிப் பேசுறீங்க?
இன்ஸ்: எப்படி வேண்டுமானாலும் நினைச்சுக்கலாம். சுடுகாட்டில் கூட்டம் நடத்த நான் அனுமதிக்க மாட்டேன்.
குககுகூ 4: நீங்கள் அனுமதித்தாலும் இல்லையென்றாலும் திட்டமிட்டபடி எங்கள் பொதுக்கூட்டம் சுடுகாட்டில் நடக்கும்.
இன்ஸ்: தடையை மீறி நடத்தினால், சட்டம் தன் கடமையைச் செய்யும்.
குககுகூ 3 : ஹா… அது எப்படியெல்லாம் கடமையைச் செய்யும், எப்படியெல்லாம் கொடுமையைச் செய்யும் என்பதெல்லாம் நாடறிந்த விஷயம்தானே? புதுக்கதை எதையாவது சொல்வதற்குப் பழகுங்கள்.
(தங்களது வாதங்களை உறுதியுடனும் நிதானமாகவும் முன்வைத்துவிட்டு வெளியேறுகின்றனர் குககுகூ அமைப்பினர். தனது அதிகார மிரட்டலுக்கு அடிபணிய மறுத்துவிட்டுச் செல்கிற இவர்களை எதுவுமே செய்ய முடியவில்லையே என்கிற இயலாமையில் குமைகிறார் இன்ஸ். இதையெல்லாம் தானும் ஒரு பார்வையாளர் போல மறைந்திருந்து ஏட்டையாவும் ரசித்துக்கொண்டிருக்கிறார்.)
காட்சி 3 முடிவுறுகிறது.
காட்சி 4
இடம்: சுடுகாடு. மாலை 6 மணிக்குத் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த பொதுக்கூட்டம், பங்கேற்பவர்களை எதிர்பார்த்து 7 மணியாகியும் தொடங்கப்படாமல் தாமதமாகிறது. ஒன்றிரண்டு பிணங்கள் எரிந்துகொண்டிருக்கும் வெளிச்சமும் வீச்சமும் அந்தப் பகுதி முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. ஆங்காங்கே உள்ள புதைகுழிகள் மற்றும் கல்லறைகள் மீது பார்வையாளர்கள் வந்தமர்வது மங்கலாகத் தெரிகிறது. குககுகூ பொதுக்கூட்டம் தொடங்குகிறது.
நாடகத்தில் இப்போது அதிரடித் திருப்பம் என்னவென்றால், ‘ஆமா, ஆரம்பிச்சதிலிருந்து ஆளாளுக்கு சனங்களைப் பற்றியே பேசிட்டிருக்கீங்களே, இங்கிருக்கிற பொணங்களைப் பற்றி ஒரு வார்த்தையாவது பேசணும்னு உங்களுக்கு ஏன் தோணல?’ என்றொரு குரல் கிளம்புகிறது. ‘செத்ததும் கொண்டாந்து எரிச்சிட்டோ, பொதைச்சிட்டோ போயிடுறீங்க. நாங்க எப்படி, ஏன், யாரால் செத்தோம்னு எப்பவாச்சும் யோசிச்சிருக்கீங்களா?’ ‘சரி சரி… வந்ததுதான் வந்தீங்க, நாட்டுநடப்பு என்னன்னு சொல்லிட்டுப் போங்க…’ ‘நாட்டு நடப்பைத் தெரிஞ்சிக்கிட்டு நாமென்ன செய்யப் போறோம்?’ என்று அடுத்தடுத்து பல குரல்கள் கிளம்பிய பிறகுதான், பார்வையாளர்களாக உட்கார்ந்திருக்கும் பலரும் பிணங்கள் என்று தெரியவருகிறது குககுகூவினருக்கு. வெறும் பார்வையாளர்களாக இருப்பவர்கள் பிணங்களுக்குச் சமம் என்று இதுகாறும் சொல்லி வந்ததற்கு மாறாக, பிணங்களே பார்வையாளர்களாகப் பங்கெடுத்திருக்கும் உலகின் முதல் பொதுக்கூட்டமாக அது மாறுகிறது.
சுதாரித்துக்கொண்ட கூட்டத் தலைவர், ‘சனங்களுக்குதான் ஆயிரத்தெட்டு பிரச்னை. உங்களுக்கென்ன, செத்ததும் எல்லா பிரச்னையிலிருந்தும் தப்பித்து நிம்மதியாகிடுறீங்களே…’
‘செத்தா நிம்மதிங்கிறது உசுரோட இருக்கறவங்க சொல்றது. ஆனா, எங்கள்ல எந்தப் பொணமாச்சும் செத்தப்புறம் நிம்மதியா இருக்குறோம்னு உங்கள்ல யார்கிட்டயாவது சொல்லியிருக்கிறோமா? நீங்களே எதையாச்சம் யூகிச்சுக்கிட்டு பேசித் திரியக் கூடாது.’
‘தெரியாமச் சொல்லிட்டேன். மன்னிச்சுக்குங்க. உங்க பிரச்னை என்னன்னு யாராவது தானா முன்வந்து பேச இஷ்டப்பட்டா, பேசுங்க.’
உலகிலேயே முதல்முறையாக பிணங்கள் பேசும் பொதுக்கூட்டம் ஒன்று நடக்கவிருக்கும் அதிசயத்தைக் காண, அக்கம்பக்கத்து ஊர்களிலும் நாடுகளிலுமிருந்து ஏராளமான பிணங்களும் சனங்களும் அந்த மயானத்தில் வந்து குவியத் தொடங்கினார்கள். மத, சாதி அடிப்படையில் தனித்தனி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் இந்தக் கூட்டத்திற்கு பிணங்கள் ஒற்றுமையாக வந்திருந்தன. ஆவிகளைத் தொடர்புகொண்டு பேசுவதாகச் சொல்லி பணம் பறிக்கும் ஏமாற்றுக் கூட்டமொன்றும் எங்கே தங்களது குட்டு அம்பலமாகிவிடுமோ என்கிற கிலியில் வந்து சேர்ந்திருந்தது.
பிணங்கள் தமக்குள் விவாதித்து அனுப்பியதன் பேரில் மேடையேறிய தலைமைப் பிணம் ஆற்றொழுக்காகப் பேசத் தொடங்குகிறது.
‘விபத்து, தற்கொலை, கொலை ஆகியவற்றால் அகாலத்தில் துர்மரணம் கண்டவர்கள்தான் நிராசையில் ஆவியாக அலைவார்கள் என்றொரு ஐதீகம் உங்களிடையே இருக்கிறது. கள்ளச்சந்தையும், பதுக்கலும், பேராசையும், தனிச்சொத்தும், ஏற்றத்தாழ்வும், பாரபட்சமும் ஒடுக்கு
முறையும் நிலவுகிற ஒரு சமூகத்தில் நேர்கிற எந்தவொரு சாவையும் அகாலத்தில் நிகழ்கிற துர்மரணம் என்றே இனங்காண வேண்டும். நிற்கும் பாதத்தின் நிலத்துண்டைக்கூட சொந்தமாகப் பெற்றிருக்காதவர்கள்; வாட்டும் கோடையிலும் வதைக்கும் குளிரிலும் வெட்டவெளியில் கிடக்குமாறு விடப்பட்டவர்கள்; உணவின்றி ராப்பட்டினியில் மயங்குவதை தூக்கமென்று நம்பிச் சரிகிறவர்கள்; சத்துக் குறைபாட்டாலும் சுகாதாரக்கேட்டாலும் வலுகுன்றி வயதுக்கேற்ற வளர்ச்சியின்றி சூம்பியவர்கள்; ஆக்கிரமிப்புகளுக்கும் போர்களுக்கும் அஞ்சி, அலைகளுக்குள் பாய்ந்து கடலடியில் ஓடுபவர்கள் என்று நூறுநூறு வழிகளில் சாகிறவர்களின் நிராசை இந்த உலகம் கொள்ளமுடியாத அளவுக்கு அதிகரித்து வருகிறது. இந்த உண்மைகளின் பாரத்தைத் தாங்கவியலாது சுமந்தலையும் எங்களது குமுறலைக் கேட்க உங்களுக்குச் சித்தமென்றால், வரிசையாக வந்து சொல்லிப்போவதில் எங்களுக்குத் தடையேதுமில்லை.’
`ஏன் செத்தீர்கள், எப்படிச் செத்தீர்கள், யாரால் செத்தீர்கள், உங்களது சாவுக்குக் காரணம் யார் / எது, நிறைவேறாத உங்கள் ஆசைகள் என்னென்ன… சொல்லுங்கள் சொல்லுங்கள்’ என்று நாலாப்பக்கமிருந்தும் குரல் எழ வேண்டும்.
காட்சி 4 நிறைவுறுகிறது
காட்சி- 5
தாங்கள் செத்த விதத்தைப் பிணங்களே மேடை ஏறிச் சொல்வதுதான் இந்தக் காட்சி. பில்லியனராவதற்கு முன்பே செத்துப்போன மில்லியனர்கள், ஏழாம் வீடு வாங்குவதற்குள் இறந்துவிட்டவர்கள், அரசுப் புறம்போக்கை அபகரிக்கும்போது இறந்தவர்கள் போன்றோரை மேடையேற்றி விடக் கூடாது. ஏனென்றால், இவர்களுக்கிருப்பது நிராசையல்ல, பேராசை. ஆகவே இந்தக் காட்சியில் பேசும் பிணங்களைத் தேர்வுசெய்வதில் கவனம் தேவை.
ரோஹித் வெமுலா, எஸ்.வி.எஸ் கல்லூரி மாணவிகள், டி.எஸ்.பி விஷ்ணுபிரியா, ஓமலூர் கோகுல்ராஜ், சுனந்தா புஷ்கர், ஜோதி சிங் என்கிற நிர்பயா, நாயக்கன்
கொட்டாய் இளவரசன், நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, கடாபி, சதாம் உசேன், ஹேமந்த கர்கரே, இர்ஷத் ஜகான், சங்கரராமன், பூலான்தேவி, சல்வடார் அஜென்டே, சேகுவேரா, நேதாஜி என்று நீள்கிற இந்தப் பட்டியலைப் பின்னோக்கி இழுத்தால், ஜோதியில் ஐக்கியமாகிவிட்டதாகச் சொல்லப்படுகிறவர்களான ராமலிங்க அடிகளார், நந்தன் வரைக்கும் பலர் வந்து உண்மைகளைப் பேசி, தங்களது சாவினை மூடியிருக்கும் மர்மத்திரையை விலக்க முடியும். இவ்வாறு தனிநபர்கள் மட்டுமல்லாமல் மும்பை, கோவை, தாமிரபரணி, பரமக்குடி, சேலம் சிறை, ஜாலியன் வாலாபாக், லஷ்மண்பூர் பாதே, பதானி தோலா, சுண்டூரு, முஸாபர்பூர் போன்ற இடங்களிலும், குஜராத், சட்டீஸ்கர், ஜார்கண்ட், காஷ்மீர் போன்ற இந்திய மாநிலங்களிலும் இலங்கை, பாலஸ்தீன், ஈராக், சிரியா போன்ற நாடுகளிலும் கூட்டாகக் கொல்லப்பட்டு வெறும் புள்ளிவிவரமாகச் சுருக்கப் பட்டவர்கள், ஃபேஷனுக்காகச் செத்தவர்கள் என்கிற பழிச்சொல்லுக்கு ஆளாகியிருக்கிற விவசாயிகள், பதக்கங்களையும் விருதுகளையும் பெறுவதற்காக சீருடைக் கொலையாளிகள் நடத்திய போலி என்கவுன்டர்களில் உயிரிழந்த அப்பாவிகள், தேசவிரோதச் செயலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டி ரகசியமாகத் தூக்கிலிடப் பட்டவர்கள் என்று பல்வேறு தரப்பு களிலிருந்தும் தெரிவுசெய்துப் பேச வைப்பதும் அவசியம். அதிகாலை நடைப்பயிற்சியின்போது கொல்லப்பட்ட முன்னாள் அமைச்சர்கள், நிலத்தரகர்கள், கனிமச் சுரங்கங்களில் நரபலி கொடுக்கப் பட்டவர்கள் யாரையேனும் பேசவைத்தால், அவர்கள் சொல்லும் தகவல்கள் இப்போதுள்ள மாஃபியா அரசியலைப் புரிந்துகொள்ள உதவும்.
அனுமதியின்றி நடைபெறும் கூட்டம் என்பதால், குககுகூ அமைப்பினரைக் கைது செய்து கூட்டத்தைத் தடுப்பற்காக, இன்ஸ்பெக்டர் இரும்புள்ளன் கூடுதல் படையோடு வந்து சுடுகாட்டைச் சுற்றி வளைக்கிறார். பிணங்கள் பேசப் போகின்றன என்று இங்கு வந்த பிறகு கிடைத்த தகவல் அவரை இன்னும் ஆத்திரம்கொள்ளச் செய்கிறது. பிணங்கள் பேசப்போகின்றன என்று அவர் கொடுத்த தகவலைக் கேட்டு அரசாங்கத்தின் மேலிடமே ஆட்டங்கண்டுபோகிறது. அதிகாரத்துக்கு வருவதற்காக முன்பு நடத்திய கலவரங்கள், அரசை நடத்துவதில் ஏற்பட்ட தோல்விகளை மறைக்கவும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவும் இப்போது ஆங்காங்கே தூண்டிவிட்டு நடத்துகிற மத மோதல்கள் ஆகியவற்றில் செத்தவர்கள், மேடையேறி தாங்கள் கொல்லப்பட்ட விதத்தை அம்பலப்படுத்தினால், அரசாங்கமே கவிழ்ந்துபோகுமே என்கிற கவலை ஆளும் கட்சியின் தலைவர்களைப் பீடிக்கிறது. இதற்கு உகந்த வசனங்களை எழுதிச் சேர்ப்பது அவசியம்.
இது நாடகத்தின் கடைசி நிமிடம். குடும்பம் ஒன்று, இரவு உணவைச் சாப்பிட்டுக்கொண்டே தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகும் தேசியப் பெருமித விழாவை பார்த்துக்
கொண்டிருக்கிறது. நாட்டின் அமைதியையும் தொழில் வளர்ச்சியையும் சீர்குலைப்பதற்கு முயற்சித்த தீவிரவாதப் பிணங்கள் அனைத்தையும், என்கவுன்டரில் சுட்டுத்தள்ளி நாட்டைப் பேரழிவிலிருந்து காப்பாற்றியவர் என்ற மர்னாப் லூஸ்சாமி போன்ற ஊடகவியலாளர்களால் கொண்டாடப்படுகிற இன்ஸ் இரும்புள்ளனுக்கு, அந்த விழாவில் தங்கப்பதக்கம் அணிவித்துக் கௌரவிக்கிறார் ஜனாதிபதி.
மின்தடையால் தொலைக்காட்சி அணைகிறது. நாடகமும் முடிகிறது. கன்னங்கரிய பெருந்திரை இறங்கி நாடெங்கும் இருளாகப் பரவி, நமது கண்களையும் கவ்வுகிறது.
ஓவியங்கள்: செந்தில்
நன்றி : விகடன் – தடம், ஜூன் 2016