[dropcap bgcolor=”#dd3333″ style=”dropcap2″]ச[/dropcap]ரிந்துருளாத ஒரு பெரும்பாறையின்
ஆசுவாசத்தைப்போல
நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்
இரைதேடி நீரருந்தி எச்சமிட்டு
வேண்டும்பொழுதினில் பறக்கும்
ஒரு பறவையாய் நீள்கிறது என் காலம்
சூரியனின் பிளவுபடாத கதிர்
என் குருதியில் பாய
எலும்புகளும் ஒளிர்கின்ற உன்னதம்
என்னுடையது
கையால்
நிலவை இழுத்து முத்தமிடும் தருணம்
யாருக்காவது கிட்டுமா
முறிந்து வீழும் அலைகளின் கடலை
வீட்டின் முற்றம் வரை
நீட்டிக்க இயலுமா
ஒருபோதும் இல்லையென்றாலும்
நான் அவற்றை வரைந்திருக்கிறேன்
கவிதையாய் எழுதியிருக்கிறேன்
இப்போதும் நள்ளிரவில்
வீதிகளில் திரிகிறேன்
பூக்களை மலரும்போதே பார்க்கிறேன்
அன்பும் ஒளியும் காற்றும்
மரத்தின் தண்டுகளிலிருந்து நீரும்
கிடைத்துக்கொண்டே இருக்கின்றன
நான் மகிழ்ச்சியாய் இருக்கின்றேன்
ஆங்காங்கே வன்புணர்ந்து
வீசப்படும் எனதுடலுக்குள்
அரைகுறையாய்ப் போடப்படும்
பச்சைத் தையல்கள்தாம் குத்துகின்றன
விரும்பியவண்ணம் சிறுநீர் கழிக்க.
– சுகிர்தராணி