Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home»கலை இலக்கியம்»கட்டுரைகள்»“தேசங்களற்ற ஓர் உலகத் தாய்…!” – ரோஹித்தின் நினைவுகள் குறித்து முத்துக்கிருஷ்ணன்!
    கட்டுரைகள்

    “தேசங்களற்ற ஓர் உலகத் தாய்…!” – ரோஹித்தின் நினைவுகள் குறித்து முத்துக்கிருஷ்ணன்!

    Sridhar KannanBy Sridhar KannanMarch 14, 2017No Comments7 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    நேற்று மர்மமான முறையில் இறந்த முத்துக்கிருஷ்ணன், ரோஹித் வெமுலாவைப் பற்றி சென்ற ஆண்டு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்.

    அது மதியம் 2 மணி. நான் எப்போதும் போல நூலகத்தில் இருந்தேன். அன்று நான் என் சகோதரர்கள் மிர் மற்றும் ஜானுடன் விரதத்தில் இருந்தேன். என் பேராசிரியர்கள் ரத்தினம் மற்றும் தத்தாகடா ஆகியோர் வெளிவாடாவில் தொடர் உண்ணாவிரதத்தில் இருந்தார்கள். நான் அந்த உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வது குறித்து யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தத் தொடர் உண்ணாவிரதத்தில் ராதிகா அம்மா (ரோஹித் வெமுலாவின் தாய்) கலந்துகொள்ளப் போவதாக அர்பிட்டா என்னிடம் கூறினார். ஏன் என்று காரணம் தெரியவில்லை. ஆனால், எனக்கு அன்று ராதிகா அம்மாவை சந்திக்க வேண்டுமென்ற பேராவல் உண்டானது.

    ராதிகா அம்மா கடந்த ஆறு மாதங்களாக அனைத்துவிதமான பிரச்னைகளையும் எதிர்கொண்டிருந்தார். ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள், அரசும் அதிகாரமும் தந்த பிரச்னை, என ரோஹித் வெமுலா இறந்ததிலிருந்து ஆளுங்கட்சி அனைத்து இடையூறுகளையும் ராதிகாம்மாவுக்குக் கொடுத்துக்கொண்டிருந்தது. ரோஹித்தின் மரணம் என் தூக்கத்தையும் சிதைத்துவிட்டிருந்தது. நான் சரியாக உறங்கி ஏறத்தாழ 153 நாட்கள் இருக்கும். சுதிப்தோ (ஊடகவியலாளர்) சொன்னது போல அந்த ‘விஷேசமான பையனின்’ நினைவுகள் என்னை நித்தமும் தொந்தரவு செய்தது. இதிலிருந்து மீள நான் என் நேரங்களை படிப்பில் செலவிட்டேன். குறிப்பாக ஆங்கிலம் கற்பதில்… ஹும்… மீதி நேரங்களை ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நடவடிக்கைகளில் கலந்துகொள்வதில் செலவிட்டேன்.

    ‘திறக்கப்படாத கதவுகள்’

    முத்துக்கிருஷ்ணன்ஜூலை 17. ஆறு மாதங்களுக்கு முன்பு இதே தேதியில்தான் ரோஹித் வெமுலா நட்சத்திரங்களிடம் சேர்ந்தான். அந்த தினத்தில் நான் என் சைக்கிளை எடுத்துக்கொண்டு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்குச் சென்றேன். அந்த இடம் பல்கலைக்கழகத்தின் இன்னொரு வாசல் அருகே இருந்தது. நான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்ததிலிருந்து, அந்த வாசலின் கதவுகள் திறந்து பார்த்ததேயில்லை. நான் என் சைக்கிளை பேருந்து நிறுத்தத்தில் நிறுத்திவிட்டு, உண்ணாவிரதம் நடக்கும் இடத்துக்கு நடந்து சென்றேன். அந்த இடத்தில் மேடான சிறிய நடைமேடை இருந்தது. அங்குதான் பேராசிரியர்களும், மாணவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் உண்ணாவிரதத்தில் இருந்தார்கள். பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பொறுப்புகளை ராஜினாமா செய்த பேராசிரியர் ராமுடுவும் அன்று உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டிருந்தார்.  நான் உண்ணாவிரதத்தில் இருந்தவர்களைப் பார்த்துப் புன்னகைத்தேன். பின், திறக்கப்படாத பல்கலைக்கழகத்தின் கதவுகளையும், அதனருகே மண்டியிருந்த களைச்செடிகளையும் பார்த்தேன். பின் உண்ணாவிரத மேடைக்குச் சென்றேன். நீல வண்ணத்தில் உண்ணாவிரதம் குறித்த சுவரொட்டிகள் உண்ணாவிரத மேடையெங்கும் ஒட்டப்பட்டிருந்தன. அதில், ‘தப்பாராவ் பொடிலுவை கைது செய்’, ‘இடைநீக்க உத்தரவை திரும்பப் பெறு’ ‘வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை உபயோகி’ போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன . அனைவரும் சணல் பாயில் அமர்ந்திருந்தோம். அங்கு ஒலிபெருக்கிக்கான மின்சார வசதிகள் இல்லை. அதனால் பேராசிரியர்  ஜோபிவுடைய  ‘வேகன் -ஆர்’ வாகனத்தின் பேட்டரியிலிருந்து மின்சாரம் எடுத்து ஒலிபெருக்கி இயக்கப்பட்டது. அந்த ஒயர்கள் சணல் பாய் ஊடாகச் சென்றன.

    அங்குதான் ராதிகாம்மா அமர்ந்திருந்தார். ஆனால், அவர் அருகே அமர்வதற்கு இடமில்லை. நான் ஐந்து நிமிடங்கள் காத்திருந்தேன்… அப்போது ராம்ஜி மற்றும் ராஜா அண்ணாவுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வெளியிலிருந்து வந்த தலைவர்களுடன்,  பேராசிரியர் ரத்தினமும் தத்தாகடாவும் ‘போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது’ குறித்து கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் நீல வண்ணத்தில் டி-சர்ட் அணிந்திருந்தார்கள். அதில் வெள்ளை நிறத்தில் அம்பேத்கர் படம் பொறிக்கப்பட்டிருந்தது. இதனை ராதிகாம்மா அவர்களுக்கு வழங்கியிருந்தார். பேராசிரியர் ரத்தினம் அங்கு நடக்கும் நிகழ்வுகளை ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் ராதிகாம்மாவுக்கு விளக்கிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் ராதிகாம்மா அருகே ஒரு இடம் காலியாவதைக் கண்டேன். உடனடியாக அந்த இடத்தில் அமர்ந்துகொண்டேன்.

    ‘ராதிகாம்மாவுடனான உரையாடல்’

    சில நிமிடங்கள் ராதிகாம்மாவை பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்கள் மட்டும் என் அம்மாவாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற நினைப்பு என் எண்ணத்தில் படர்ந்தது. ராதிகாம்மா கவனமாக ரத்தினம் பேசுவதைக் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் கறுப்பும் இளம் பச்சையும் வெள்ளையும் கலந்த வண்ணத்தில் புடவை அணிந்திருந்தார். அவர் முடிகள் நரைக்கத் தொடங்கியிருந்தன. கைகளில் சிவப்பு நிறத்தில் வளையல்கள் அணிந்திருந்தார்.  களைப்படைந்த அவரைப் பார்த்து, “அம்மா… இப்போது உங்கள் உடல் நலம் எப்படி இருக்கிறது…?  நீங்கள் குண்டூரிலிருந்து வருகிறீர்களா…?” என்றேன். அதற்கு அவர், “ஆமாம் தம்பி… நீங்கள் ரோஹித்தை சந்தித்திருக்கிறீர்களா…?” என்று வினவினார்.

    நான், “ஆமாம் அம்மா… சந்தித்திருக்கிறேன். ரோஹித் இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன்பு சந்தித்தேன்” என்று என் நினைவுகளில் மூழ்கினேன். அப்போது மணி இரவு 8. ரோஹித் வெளிவாடாவின் இடது பக்கத்தில் இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தார். இப்போது உண்ணாவிரத மேடை டென்ட்டின் கயிறுகள் அந்த சிமென்ட் பெஞ்சில்தான் கட்டப்பட்டு இருக்கிறது.  ஹூம்… அப்போது ரோஹித் தன் கைப்பேசியை தீவிரமாகப் பார்த்துக்கொண்டிருத்தார். நாங்கள் இருவரும் அண்ணா என்றுதான் அழைத்துக்கொள்வோம். ”அண்ணா… இரவு உணவை சாப்பிட்டுவிட்டீர்களா…?” என்று ரோஹித் கேட்டார்.  “இல்லை அண்ணா… இன்னும் கொஞ்சம் நேரமாகும்” என்றேன். அப்போது அவர் நீல மற்றும் சாம்பல் நிறம் கலந்த ஜெர்க்கின் அணிந்திருந்தார். வழக்கமான விசாரிப்புகளுக்குப் பின் எங்கள் உரையாடல் அப்போது நடந்துகொண்டிருந்த போராட்டங்கள் நோக்கி நகர்ந்தது. ”வெளிவாடாவில் முதற்கட்டப் போராட்டமும் பின் உண்ணாவிரதமும் இருக்கப் போகிறோம்” என்றார். அதற்கு நான், “நானும் அதில் கலந்துகொள்கிறேன் அண்ணா” என்றேன். அவர் நன்றி கூறி, இரவு வணக்கம் சொல்லிவிட்டுச் சென்றார்.

    ‘ரோஹித் மரணமும்… சில நினைவுகளும்’

    ராதிகா

    அடுத்த நாள் நான் ஷாப்காமில் அமர்ந்திருந்தேன். அப்போது சில ஆம்புலன்ஸ்கள் விரைவாக பல்கலைக்கழக விடுதிக்குள் சென்றன. நான் யாருக்கோ உடல்நிலை சரியில்லைபோல என்று நினைத்துக்கொண்டேன். ஆம்புலன்ஸைத் தொடர்ந்து இரண்டு போலீஸ் வாகனங்கள் ஹாஸ்டலுக்குள் சென்றன. சரி… ஹாஸ்டலில் மாணவர்களுக்குள் ஏதோ சண்டை என்று நினைத்துக்கொண்டேன். நான் இவ்வாறாக நினைத்துக்கொண்டிருக்கும்போதே ஒரு கூட்டம் விடுதியை நோக்கிச் சென்றது. அப்போது என்னுடன் இருந்த சில நண்பர்கள்…  “யாரோ தற்கொலைக்கு முயன்றிருப்பார்கள் போல” என்றவாறே… தங்களது பைக்கில் ஏறி அங்கு என்ன நடக்கிறது என்று பார்க்கச் சென்றார்கள். போனவர்கள் சோகத்துடன் திரும்பி வந்தார்கள். அவர்களின் இதயம் கனக்கும் செய்தி இருந்தது. ஆம்… ‘ரோஹித் வெமுலா தன்னைத்தானே மாய்த்துக் கொண்டான்’ என்ற செய்தியைப் பகிர்ந்தார்கள். நாங்கள் அனைவரும் விரைவாக என்.ஆர்.எஸ் விடுதியை நோக்கி ஓடினோம்… அங்குதான் ரோஹித் உடல் ஃப்ரீஸரில் வைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம்.

    நான் இந்த நினைவுகளை எல்லாம் கூறி ராதிகாம்மாவை சங்கடப்படுத்த விரும்பவில்லை. மீண்டும் ரோஹித் குறித்த நினைவுகளில் மூழ்கினேன். நான் ரோஹித்தை ஆறு முறை சந்தித்திருக்கிறேன். நான் முதன்முதலாக ரோஹித்தை தெற்கு வளாகத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்தின்போது சந்தித்தேன். அவர் அப்போது சாம்பல் நிறத்தில் சட்டை அணிந்திருந்தார். நானும், பிரசாந்தும் கறுப்பு நிறத்தில் சட்டை அணிந்திருந்தோம். ரோஹித் உற்சாகமாக கோஷம் போட்டுக்கொண்டிருந்தார். அப்போது நான், ஏன் அவரைப் போல கோஷம் போடாமல் இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டேன்.  “ஓ… நமக்கு மொழி தடையாக இருக்கிறது” என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதே நேரம், ரோஹித்தின் தலைமைப் பண்பைப் பார்த்து வியந்தேன்.

    இரண்டாவது முறை நான் ரோஹித்தை என்.ஆர்.எஸ் மெஸ் அருகே  சந்தித்தேன். நான் அப்போது டிக்கென்ஸ் அறைக்குச் சென்று கொண்டிருந்தேன். ரோஹித் எதிர்த் திசையில் வந்துகொண்டிருந்தார். அப்போது ரோஹித், “அண்ணா… விரைவில் நம் மாணவர் சங்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டப் போகிறோம். நீங்கள் நிச்சயம் கலந்துகொள்ள வேண்டும். சில பொறுப்புகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார்.  நான் 2013 தேர்தல் முடிவுகளை நினைவுகூர்ந்து, “அண்ணா…நம் ஆட்கள் கடுமையாகத்தான் வேலை செய்கிறார்கள். ஆனால், நாம் ஏன் வெல்வதில்லை…?” என்று வினவினேன்.  அதற்கு ரோஹித் உறுதியான குரலில், “அப்படியெல்லாம் இல்லை அண்ணா… இந்த முறை நாம் நிச்சயமாக வெல்வோம். நாம் தொடர்ந்து உழைப்போம்… போராட்டம்தான் நம் வாழ்க்கை. மக்கள் நம்மை கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள்” என்றார். அந்தச் சமயத்தில்தான் அம்பேத்கர் மாணவர் சங்கம் நுழைவுத் தேர்வு சம்பந்தமாக போராடிக்கொண்டிருந்தது… அதே காலக்கட்டத்தில்தான், காத்திருப்புப் பட்டியலில் இருந்த மாணவர்களுக்கு அட்மிஷன் வழங்கியது தொடர்பாக பல்கலைக்கழக துணை வேந்தருடன் ஒரு விவாதத்தையும் நடத்தியிருந்தது.

    மூன்றாவது முறை, நான் ரோஹித்தை மஸ்ஜித் பாண்டா அருகே சந்தித்தேன். அப்போது அவருடன் ராம்ஜி அண்ணாவும் இருந்தார். அப்போது ரோஹித் மீண்டும் என்னை மாணவர் சங்கப் பொதுக்குழுவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார். அவர், “சென்ற முறைதான் நீங்கள் கலந்துகொள்ளவில்லை. இந்த முறையாவது கலந்துகொள்ளுங்கள்” என்றார். அதற்கு நான், “நீங்கள் மூத்தவர்… நீங்கள் என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம்தான் அண்ணா” என்றேன். அதற்கு அவர், “இல்லை… இந்த முறை நம் அணுகுமுறையை மாற்றி இருக்கிறோம்… அதனால் எல்லோரும் கலந்துகொண்டு, ஜனநாயக முறையில் நம் பொதுக் குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் கண்டிப்பாக வருகிறீர்கள்” என்றார். அப்போது அம்பேத்கர் மாணவர் சங்கத்தின் தலைவராக ராம்ஜி வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பலமான பேச்சு அடிபட்டது. நான் ராம்ஜிதான் தலைவராக வர வேண்டும் என்று விரும்பினேன். அந்த சந்திப்பின்போது ராம்ஜிக்கு வாழ்த்து தெரிவித்தேன்.

    அதன்பின் வெகுநாட்களுக்கு நான் ரோஹித்தை சந்திக்கவில்லை. நான் படிப்பிலும் தேர்விலும் கவனம் செலுத்தத் தொடங்கினேன். எனக்கு ரோஹித்தும் பிற நண்பர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்துகூட எதுவும் தெரியாமலே இருந்தது. அந்தச் சமயத்தில் ஷேசு அண்ணாவை எஸ்.எஸ்.பி உணவு விடுதியில் சந்தித்தபோது, “ஏன் பல்கலைக்கழக கேண்டீனில் உணவருந்தாமல்… இங்கே சாப்பிடுகிறீர்கள்…? தாமதமாக எழுந்தீர்களா…?” என்று வினவினேன். அதற்கு ஷேசு அண்ணா, “ஹர்ரே… எங்களை இடைநீக்கம் செய்துவிட்டார்கள்… உனக்குத் தெரியாதா…என்ன…?” என்று வினவினார். அவர், தன்னுடன் சேர்த்து நான்கு மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறினார். அதில் ரோஹித்தும் ஒருவர்.

    ஒருவாரத்துக்குப் பின், ‘ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கைப்பற்று’ப் போராட்டத்துக்கு முந்தைய நாள்… நூலகம் செல்லும் வழியில் வெளிவாடா அருகே பிரசாந்த் என்னை அழைத்தார். அவருடன் சன்கண்ணாவும், விஜயும் அமர்ந்திருந்தார்கள். ரோஹித் வெளிவாடா உள்ளே அமர்ந்திருந்தார். அப்போது முன்னா என்னிடம் சில துண்டறிக்கைகளைக் கொடுத்தார். அதில் கொட்டை எழுத்துகளில், ‘சமூக நீதிக்கான கூட்டு நடவடிக்கைக் குழு’ என்று எழுதியிருந்தது. முன்னா அந்தத் துண்டறிக்கைகளை நூலகத்தில் உள்ளவர்களுக்குக் கொடுக்கச்சொல்லிக் கொடுத்தார். நான் இதில் விருப்பம் இல்லாமல் சில துண்டறிக்கைகளை மட்டும் எடுத்துக்கொண்டேன். இதைக் கவனித்த ரோஹித், “அண்ணா… நாம் முழு மனதுடன் போராட வேண்டும். இல்லையென்றால், இந்த முறையற்ற அநீதியான இடைநீக்கத்தை ரத்து செய்ய வைக்க முடியாது.” ரோஹித் பேசிய பின், நான் அதிகமான துண்டறிக்கைகளை எடுத்துக்கொண்டேன். நூலகத்தில் இருந்த அனைவருக்கும் விநியோகித்தேன். இது எங்கள் நான்காவது சந்திப்பு.

    ஒரு பதினைந்து நாட்களுக்குப் பின், இரவு 11.45 மணி இருக்கும்… நான் நூலகத்திலிருந்து திரும்பி வந்துகொண்டிருந்தபோது, வெளிவாடாவில் இரண்டு மாணவர்கள் தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். நான் அங்கு சென்று பார்த்தபோது, ஷேசு அண்ணாவும், ரோஹித்தும் கொசுவுடன் போராடிக்கொண்டே தூங்கிக்கொண்டிருந்தார்கள். ஷேசு அண்ணா போர்வையினால் போர்த்தி தூங்கிக் கொண்டிருக்க, ரோஹித் போர்த்தவில்லை. நான் அருகே சென்று பார்த்ததும், ரோஹித் தூக்கக் கலக்கத்தில் நான் யார் என்று பார்க்க முயன்றார். பின் இரவு வணக்கம் என்று முணுமுணுத்துக்கொண்டே தூங்கிப்போனார். இது ஐந்தாவது சந்திப்பு.

    ஆறாவது சந்திப்பு நான் முன்பே கூறியதுபோல வெளிவாடா சிமென்ட் பெஞ்சில் சந்தித்தது.  அதுதான் எங்கள் இறுதிச் சந்திப்பும்கூட. நான் தினம் தினம் அதை நினைத்துக்கொள்வேன். என்னால் ராதிகா அம்மாவின் நினைவுகளைப் புரிந்துகொள்ள முடிகிறது. என் அம்மா அடிக்கடி சொல்வார், “நம் சமூகத்துக்கு ஆண்கள்தான் வளம். அவர்கள் படிக்கிறார்கள், சம்பாதிக்கிறார்கள். தன்  குடும்பத்துக்கு மட்டுமல்லாமல், இந்த சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் உதவுகிறார்கள்.”
    அன்புக்குரிய தேச விரோதிகளே இந்த தேசம் அப்பாவி அம்மாவின் மகனைக் கொன்றுவிட்டது. அவர்கள் சொல்கிறார்கள், “பாரத மாதா தன் மகனை இழந்துவிட்டாள்” என்று. ஆனால், அவர்களே அந்த அம்மாவின் சாதியை, அடையாளத்தைக் கேள்வி கேட்டு மனமுடையச் செய்கிறார்கள். இந்த அநீதிக்குப் பின் எப்படி இந்த தேசியத்தை அவளால் ஆதரிக்க முடியும்…?

    “மண்ணின் மைந்தர்கள்”

    அன்புக்குரிய தேச விரோதிகளே… நான் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். ஒரு நாள் இந்த தேசத் தலைவர்கள்  ஒரு ‘செல்ஃபி’க்காகவும், வெளியாட்களின் கைத்தட்டலுக்காகவும் எல்லாவற்றையும் விற்கப் போகிறார்கள். நூற்றுக்கணக்கான தப்பாராவ்கள், ஆயிரம் ஆயிரம் ரோஹித் வெமுலாக்களைக் கொல்லப் போகிறார்கள். புனைவு கதாபாத்திரங்களைக் கிண்டல் செய்ததற்காக ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த அறிவுஜீவிகள் கைது செய்யப்படப் போகிறார்கள். அதே நேரம் நம் தேசத்தின் அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பத்தாவது வகுப்பைக்கூட தாண்டாதவர்கள் தலைமைப் பொறுப்பேற்கப் போகிறார்கள்.  இவர்கள்தான் எதிர்க் கருத்து உடையவர்களையும், அதிருப்தியாளர்களையும் தேச விரோதிகள் என்றும்… அரசுக்கு எதிரானவர்கள் என்றும் அவதூறு பரப்புகிறார்கள். பீஃப் சாப்பிட்டதற்காக, பகுத்தறிவுடன் சிந்தித்ததற்காக பல ரோஹித்துகளை அவர்கள் கொல்லப் போகிறார்கள். ஆனால், நாம்தான் இந்த மண்ணின் உண்மையான மைந்தர்கள்… நாம் அனைவரும் கொல்லப்பட்ட பிறகு, இங்கு தேசமென்று ஒன்று இருக்கப் போவதில்லை.

    எதற்காக ஒரு அப்பாவி அம்மாவை ஆதரிக்க இன்னும் காத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

    சாதிக்கு எதிராகக் குரல் கொடுப்பதன் மூலம்… சாதியை எதிர்ப்பதன் மூலம்… உலகம் முழுவதும் உள்ள மாணவர்களும் ராதிகா அம்மாவின் ரோஹித்தாக மாறலாம். வாருங்கள் உதவியற்ற இந்த பிரபஞ்சத்தின் தாய்க்கு  உதவ ஒன்றாக சண்டையிடுவோம்.

    (முத்துக்கிருணன் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

    – முத்துக்கிருஷ்ணன், ஜூன் 30, 2016

    Source : Vikatan

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleபௌத்தர் இயற்றிய தமிழ்நூல்கள்
    Next Article அம்பேத்கரும் தண்ணீர் தினமும்:முகுல் ஷர்மா
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    கல் விளக்குகள் – என். டி. ராஜ்குமார்

    February 12, 2026

    பாபா சாகேப் அம்பேத்கர் குறித்து அறிஞர் அண்ணாவின் மூன்று எழுத்தோவியங்கள்.

    February 3, 2026

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Leave A Reply Cancel Reply

    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.