குறைந்த பட்சம் குறிப்பிட்ட செய்தியை எழுதியிருக்கும் செய்தியாளர் குள.சண்முகசுந்தரம் அவ்வேட்டில் இதுவரை சொந்த பெயரில் எழுதி வந்திருக்கும் கட்டுரைகளை வரிசைப்படுத்தி பார்த்தால் கூட இதை புரிந்து கொண்டு விடலாம். இப்போது நான் பார்ப்பன நிறுவனத்தை விடுத்து பார்ப்பன அல்லாத செய்தியாளர் மீது விஷயத்தை திசை திருப்புவதாக வியாக்கியானம் பிறக்கலாம். இதில் இரண்டு தரப்புக்குமே பங்கிருக்கிறது; அதில் ஒரு தரப்பை விடுத்து மற்றொரு தரப்பை மட்டுமே பேச வேண்டியதில்லை.வாஞ்சிக்கு தேவர் உதவியதைப் பற்றிய தி இந்து (தமிழ்) நாளேட்டில் வெளியான பொய் வரலாறு பற்றி நிறைய எழுதப்பட்டு வருகின்றன. தி இந்துவின் செய்தியாக்க முறை கடுமையாக விமர்சிக்கப்படுகின்றன. அதில் நான் முழுக்க உடன் படுகிறேன். ஆனால் இதில் தி இந்து ஏட்டை மட்டும் விமர்சிப்பது ஒரு பகுதி உண்மை என்றே சொல்ல வேண்டும்.செய்தி எழுதுபவர், எடிட்டர், சப் எடிட்டர் வரை இதில் பொறுப்பிருக்கிறது எனினும் அதைப் பற்றி யாரும் பேசியிருப்பதாகத் தெரியவில்லை.குறிப்பாக செய்தி எழுதியவர் பற்றி.அதையும் சேர்த்து பார்க்கும் போது தான் தமிழ் இதழியல் உலகில் நடந்திருக்கும் பிற புலப்படாத பக்கங்களும் தெரிய வரும்.
தி இந்து பிராமணர்களால் நடத்தப்படும் நிறுவனம். இந்நிலையில் இத்தகு செய்திகளுக்கு அது ஏன் சம்மதிக்க வேண்டும்? தெரியாமல் நடந்து விட்ட பிழை, செய்தியாளர்களின் அனுபவம், நம்பகத்தன்மை போன்றவை மட்டுமே இதற்கான காரணங்களில்லை. வேறு சில விசயங்களும் இதில் செயலாற்றுகின்றன என்பதையும் பார்க்க வேண்டும், பொதுவாக அச்சு ஊடகங்கள் பலவும் ‘பாரம்பரியம்’ காரணமாக பிராமண வகுப்பினர் வசமே இருந்து வருகின்றன. அது தொடர்பான விமர்சனங்கள் இங்குள்ளன.அதே வேளையில் அதில் மாற்றங்களும் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விமர்சனங்களில் இப்புதிய மாற்றங்கள் கணக்கெடுக்கப்படுவதில்லை என்பது தான் இப்பதிவை எழுதக் காரணம்.
கடந்த சில பத்தாண்டுகளாக நடந்து வந்திருக்கும் சமூக அரசியல் அதிகார மாற்றங்களின் காரணமாக பிராமணரல்லாத தொகுப்பில் அதிலும் பெரும்பான்மை எண்ணிக்கை சாதிகள் பலவும் மையத்திற்கு வந்துள்ளன. அதன்படி ஊடகங்களிலும் எண்ணிக்கைக்கு அதிகமாகவே சேர்ந்துள்ளனர். (இங்கு ‘சமூக நீதி ‘ பற்றிய பேச்சு பிராமணர்கள் அதிகமாய் இருந்தால் மட்டுமே எழும் ) இவ்வாறு வாசகர் மற்றும் பணியாற்றுவோர் சார்ந்து உருவாகியிருக்கும் பிராமணரல்லாதோர் பெரும்பான்மை என்ற எதார்த்தத்தை இப்பாராம்பரிய நிறுவனங்கள் புரிந்து கொண்டிருக்கின்றன.
இப் பின்னணியில் தான் குறிப்பிட்ட பெரும்பான்மை சாதிகளின் கதைகள், அடையாளங்கள் ,வரலாறு போன்றவை இந்தச் சாதிகளால் மையத்திற்கு கொணப்படுகின்றன. நிறுவனங்களும் இதற்கு வழிவிட்டு தங்களை வணிக ரீதியாக தக்கவைத்துக் கொண்டிருக்கின்றன. இவ்விடத்தில் நடப்பது பிராமணர் பிராமணரல்லாதார் கூட்டு அல்லது சொல்லப்படாத புரிந்துணர்வு .இதற்கான மற்றொரு உதாரணத்தையும் இங்கு சொல்லலாம். கடந்த 40ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் அதிகமாய் விதந்தோதப்பட்டு வரும் பிம்பமாய் தேவர் இருக்கிறார். அவர் பெயர் சொல்லி புகழ்ந்து பாடும் பாடல்கள் பத்துக்கும் மேலிருக்கின்றன. இவையெல்லாம் எவ்வாறு நடந்தன? இப்போக்கை ஆரம்பித்து – தக்கவைத்து வருவது யார், எப்போதிருந்து? இவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் தேவருக்கான பிம்பங்களை காப்பது தான் தேவர் சாதித் தொகுப்பிற்கு செய்யும் தொண்டாகக் கருதும் சிலர் கம்யூனிஸ்டுகள் பெயரில் வலம் வருவதையும் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம். தங்களுக்கு கிடைத்திருக்கும் புதிய அதிகாரத்திற்கான குலக்குறியாகக் கருதி தேவரை ஒரு அரசியல் தலைவர் என்பதை விடவும் புனிதர் என்று கட்டமைப்பது இங்கு ஊடகத்தில் ஆட்சி பெற்றிருக்கும் இவர்களுக்கு அவசியமாகிறது. இச்செய்தி அவ் வகையிலான விளைவுகளில் ஒன்றே.
இதையெல்லாம் சேர்த்துப்பார்க்கும் போது தான் வெகுஜன நாளேடு ஒன்றில் இத்தகைய வரலாறு எழுதப்படுவதையும் அதை அந்நிறுவனங்கள் அனுமதிக்கிற கராணத்தையும் புரிந்து கொள்ள முடியும். தமிழ் ஊடகங்களில் நிலவும் இத்தகைய ஏற்றத்தாழ்வுடைய பிரதிநிதித்துவம் பற்றிய பேச்சு ஏன் இங்கில்லை? குறிப்பிட்ட சாதிகளே இவ்வாறுதான் என்பது இதன் பொருளில்லை.இவர்களில் பலர் தலித் பிச்சினை உள்ளிட்ட சமூக சிக்கல்களில் அக்கறை கொண்டவர்கள் என்பதில் அய்யமில்லை. ஆனால் எல்லாவற்றை பற்றியும் நாங்களே பேசுவோம் என்கிற அதிகாரம் அதில் தொக்கி நிற்பதை பார்க்கிறோம். இந்த விதத்தில் தி இந்து மட்டுமல்ல விகடன் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் இணைத்து பார்க்கப்பட வேண்டும்.
எனவே இப்பிரச்சினையில் தி இந்துவை மட்டுமல்ல அதன் செய்தியாக்க குழு, எழுதியவரின் அரசியல் என்றும் நீட்டித்து பார்க்கும் போது தான் சினிமா உள்ளிட்ட தமிழ் ஊடகத் துறையில் நெடுங்காலமாகநிலவி வரும்பிரதிநிதித்துவ ஏகபோகத்தையும் அதன்மூலம் கட்டமைக்கப்பட்டு வரும் கருத்தியல் ஏகபோகத்திற்கான காரணத்தினையும் அறிய முடியும். பாண்டே பற்றி பேச வரும் போது பாண்டேவை பேசிவிட்டு அவர் ஏன் தந்திடிவியில் அனுமதிக்கப்படுகிறார் என்றஅரசியலை பேசாது விடுவதும் இப்போது வாஞ்சி-தேவர் செய்தி பற்றி பேச வரும் போது தி இந்து பற்றி பேசிவிட்டு எழுதியவரை நோக்காமல் இருப்பதும் ஒரு அரசியல்தான். இரண்டு தரப்பின் அரசியலையும் இணைத்து பேசுவதே இன்றைய தேவை.
- ஸ்டாலின் ராஜாங்கம்