ஷரன் ஷர்மா இயக்கத்தில் ராஜ்குமார் ராவுடன் இணைந்து ‘மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி’ திரைப்படத்தில் நடித்திருக்கும் பிரபல இந்தி நடிகையான ஜான்வி கபூர், அண்மையில் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்திருக்கிறர். அந்த பேட்டியில் வரலாற்றின் எந்த காலக்கட்டத்துக்கு செல்ல விரும்புகிறீர்கள் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “தேசத்தந்தை மகாத்மா காந்திக்கும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் குழுவின் தலைவராக இருந்த அம்பேத்கருக்கும் இடையில் சாதி குறித்த அவர்களின் பார்வையையும், கருத்துகளையும், விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
சாதி குறித்த கண்ணோட்டத்தில் அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையேயான விவாதங்களையும் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அது காண்பதற்குக் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அவர்களின் சித்தாந்தங்களுக்கு இடையேயான உரையாடலையும், அவர்களின் திட்டங்கள் எவ்வாறு உருவாகின, அது எப்படி மக்களைப் பாதித்தது ஆகிய அந்த உரையாடல், ஒரு அழுத்தமான சொற்பொழிவாக இருக்கும்.
சாதிப் பிரச்னைகளில் அம்பேத்கர் – காந்தியின் கருத்துகள் முற்றிலும் வேறுபட்டவை என்பதை ஒப்புக்கொள்கிறேன். சாதி அடிப்படையில் அம்பேத்கரின் பார்வை ஆரம்பத்திலிருந்தே மிகவும் தெளிவானதாக இருந்தது. அதே நேரம், காந்தியின் சாதி குறித்த பார்வை மாறிக்கொண்டே இருந்தது.
சாதியின் அடிப்படையிலான அந்த வாழ்க்கையை வாழ்ந்தவருக்கும், மூன்றாவது நபரின் பார்வையிலிருந்து அதைப் பற்றி அறிவதற்கும் இடையே ஒரு பெரிய வித்தியாசம் இருக்கிறது. என் பள்ளியில் சாதி பற்றிய விவாதங்கள் நடந்ததில்லை. என் வீட்டிலும் சாதி பேசப்பட்டதில்லை. ஆனால் எனக்கு எப்போதும் வரலாற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் அதிகம்” எனப் பதிலளித்திருக்கிறார்.