ஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத்திட்டங்களான புதிய கல்விக் கொள்கையையும் பொது சிவில் சட்டத்தையும், உடனே நடைமுறைக்குக்கொண்டுவரத்துடித்துக் கொண்டிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். கொடுத்துள்ள வழிகாட்டலின் அடிப்படையில் மோடியின் அமைச்சரவை சகாக்கள் புதிய கல்விக்கொள்கை குறித்த அவசரச்சட்டத்தை எழுதிக்கொண்டிருக்கிறார்கள். அறிவிப்பு எந்நேரமும் வெளியாகலாம்!
பெரும்பான்மை பலத்துடன் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் நரேந்திர மோடி, தனது மூன்றாண்டு கால ஆட்சியை நடத்தி முடித்துள்ளார். கடந்த மூன்றாண்டுகளில் அவர் அறிவித்த திட்டங்களையும் ஆணைகளையும் ஆய்வு செய்து பார்த்தால், அவரது ஒவ்வொரு நடவடிக் கைக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற இந்து பயங்கரவாத அமைப்பு பின்புலமாய் இருந்து வருவதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். பெரும்பான்மை பலத்துடன் கூடிய நிலையான ஆட்சி, வலிமையான பிரதமர், கருப்புப்பண மீட்பு, பொருளாதார வளர்ச்சி போன்ற கவர்ச்சி மிகுந்த, வெளிமுலாம் பூசப்பட்ட முழக்கங்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ததன் மூலம், இந்தியா முழுவதிலும் பரவலான ஆதரவைப் பெற்று எதிர்பாராத வகையில் ஆட்சியைப் பிடித்த மோடி, ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், ‘நாங்கள் விரும்பியதைச் செய்யவே மக்கள் எங்களுக்கு பெரும்பான்மை பலத்துடன் அட்சி அதிகாரத்தை வழங்கியுள்ளனர்’ என்றார்.
பிரதமர் மோடியும், அவருக்குப் பின்புலமாய் இருந்து செயல்பட்டுவரும் இந்துமத பாசிச சக்திகளும் தாங்கள் விரும்புகிறபபடி அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதல்களையும், இந்திய மக்களுக்கு அது வழங்குகிற அடிப்படை உரிமைகளையும் மிகத்தந்திரமான முறையில் பெரும்பான்மைவாத அரசியலைக்கொண்டு மாற்றி எழுதத் துடிக்கிறார்கள். ‘இந்தியாவில் அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிடுவார்’ என பாரதிய ஜனதா கட்சியினரால் பிரச்சாரம் செய்யப்பட்ட மோடி, கடந்த மூன்றாண்டுகளில் எதையெதையெல்லாம் மாற்ற முயற்சித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தகதைதான். இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைக் கேலி செய்யும் வகையில் மோடி முன்னெடுத்துவரும் பெரும்பான்மைவாத பாசிச அரசியல், பாபாசாகேப் அம்பேத்கர் எச்சரித்தபடி, இந்திய நாட்டையே மிகப்பெரும் குடிமக்கள் போரில் கொண்டு போய் நிறுத்தப் போகிறது.
திட்டக் கமிஷன் ஒழிப்பு, தேசிய ஒருமைப்பாட்டுக்குழு ஒழிப்பு, பண மதிப்பு நீக்கம், மத்திய அரசுப்பள்ளிகளில் சமஸ்கிருத மொழி பாடம் கட்டாயம், இந்திய மக்களின் தேசிய உணவான மாட்டுக்கறி உணவைத் ஒழித்துக் கட்டும் வகையில் கோழைத்தனமாக அறிவித் துள்ள பசுவதைத் தடுப்புச்சட்டம் மற்றும் பசு, காளை, ஒட்டகம் விற்பனைத் தடைச் சட்டம் போன்ற அறிவிப்புகளை எவ்வித விவாதமும் நடத்தாமல் எதேச்சதிகாரத்துடன் அறிவித்தார் மோடி. அத்தகு ஆணவமிக்க அவரது நடவடிக்கைகளினால் நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்ன என்பதை மோடி விளக்க வேண்டும். நாட்டை சுத்தப்படுத்தும் ‘ஸ்வேட்ச் பாரத் அபியான்’ திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட தொகையில் 100 கோடியை விளம்பரத்திற்காக மட்டுமே மோடி செலவிட்டார். ‘ஸ்வேட்ச் பாரத் அபியான்’ உள்ளிட்ட அவரது திட்டங்களினால் ஏற்பட்ட பலன்கள் என்ன என்பதை மக்கள் அறிவார்கள்!
எந்தவொரு நாட்டையும் பாசிச ஆட்சியாளர்கள் கைப்பற்றும்போது, முதலில் அவர்கள் கைவைப்பது அந்நாட்டின் நீதித் துறையின்மீது தான். இந்திய நாட்டின் மிகப்பெரும் பலமாக இருந்துவரும் ‘மதச்சார் பின்மை அரசு’ என்ற இலட்சியத்தை மிக மலிவான முறையில் கேலி செய்தும், தந்திரமான முறையில் கேள்விக்குட்படுத்தியும் வரும் மோடி, எடுத்த எடுப்பிலேயே நாட்டின் மதச்சார்பின்மையை ஒழித்துக்கட்டும் கண்ணோட்டத்துடன் நீதித்துறையின் மீது கை வைத்தார். அவரது விருப்பப்படி தீர்ப்பெழுதும் நீதிபதிகளை நீதித்துறைக்குள் ஊடுருவச் செய்யும் நோக்கத்துடன் நீதிபதிகள் தேர்வாணையத்தை உருவாக்கினார். அந்த முயற்சியில் அவர் படுதோல்வி அடைந்த கதையை நாட்டு மக்கள் மறந்துவிடமாட்டார்கள். ஆனாலும் நாட்டை இந்துமத அழுக்குகள் நிறைந்த குப்பையாக மாற்றும் மோடியின் முயற்சி தொடர்ந்து கொண்டிருக்கிறது. மாநிலங்களின் பொருளாதார தற்சார்பை ஒழித்துக்கட்டிய ஜி.எஸ்.டி. விவகாரங்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்து மோடியின் அடுத்த ‘அஸ்திரம்’ புதிய கல்விக்கொள்கை அறிவிப்பாகத்தான் இருக்கப்போகிறது.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]‘கல்வி என்பது ஒவ்வொருவரையும் சமூக மனிதனாக மாற்றவும் அவர்களிடத்தில் சமூக உணர்வை வளர்த்தெடுக்கவும்பயன்படவேண்டும்’ என்பார் பாபாசாகேப் அம்பேத்கர்.[/quotes]
மக்களின் வாசிப்பிற்காகவும், மக்களிடமிருந்து ஆலோசனைகள் பெறுவதற்காகவும் கடந்த 2016 ஆம் ஆண்டில் பா.ஜ.க. அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையினால் வெளியிடப்பட்ட ‘புதிய கல்விக் கொள்கை – 2016’, ஒரு சில மாற்றங்களுடன் அவசரச் சட்டத்தின் மூலம் நடைமுறைப்படவிருக்கிறது. ஆட்சி முடிய இன்னும் இரண்டே ஆண்டுகள்தான் இருப்பதால், பா.ஜ.க. தனது கனவுத் திட்டமான பொது சிவில் சட்டத்தையும், புதிய கல்விக் கொள்கையையும் உடனே நடைமுறைக்குக்கொண்டுவர துடித்துக்கொண்டிருக்கிறது.
‘புதிய இந்தியா 2022’ என புதுக்கதை பேசத்தொடங்கியிருக்கும் மோடி, ‘புதிய கல்விக் கொள்கை – 2016’ குறித்து எதுவும் தெரியாதது போல நடித்து வருகிறார். ஆனாலும் அவரது அமைச்சரைவை சகாக்கள் புதிய கல்விக் கொள்கை குறித்த அவசரச் சட்டத்தை எழுதிக் கொண்டிருக்கிறார்கள். மோடியின் புதிய கல்விக்கொள்கை, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்து பாசிச அமைப்புகள் நீண்டகாலமாக பேசி வரும் ‘பிறப்பு அடிப்படையிலான தொழிற்முறை கல்வியை’ அடிப்படையாகக் கொண்டுள்ளது என்ற குற்றச்சட்டுகள் கடந்த ஓராண்டாகவே கூறப்பட்டு வருகின்றன.
1836இல் இந்திய மண்ணில், பிரிட்டிஷ் ஆட்சி நடைபெற்ற பகுதிகளில் மட்டும் முதன் முதலாக நடைமுறைப்படுத்தப்பட்ட மெக்காலே கல்விக்கொள்கை முதல் மோடி முன் வைத்துள்ள 2016 கல்விக்கொள்கை வரை இது வரை இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்ட எந்த கல்விக்கொள்கையும் நாட்டு மக்களிடையே சமூக மனப்பான்மையை வளர்க்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டதல்ல. ‘கல்வி என்பது ஒவ்வொருவரையும் சமூக மனிதனாக மாற்றவும் அவர்களிடத்தில் சமூக உணர்வை வளர்த்தெடுக்கவும்பயன்படவேண்டும்’ என்பார் பாபாசாகேப் அம்பேத்கர். ஆனால் கெடுவாய்ப்பாக இந்திய மண்ணில் இன்று வரை அப்படியொரு கண்ணோட்டத்துடன் ஒரு கல்விக் கொள்கையும் வகுக்கப்படவில்லை.
ஆங்கில ஆட்சி நிர்வாகத்திற்கு பயன்படும் பணியாளர்களை உருவாக்கும் மலிவான நோக்கத்துடன், ஆங்கிலக் மொழிக் கல்வியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட மெக்காலே கல்விக்கொள்கை 1836ல் நடைமுறைக்கு வந்தது. அதன் பின்னர், 1882 இல் ஹண்டர் கல்விக் குழு, தாய்மொழி மூலம் தொடக்கக் கல்வி வழங்கும் பொறுப்பை உள்ளூர் அமைப்புகளிடம் வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்ளும்படி ஆங்கில அரசை வலியுறுத்தியது. அதனடிப்படையில் நாடு முழுவதிலும் கிறிஸ்தவ மிஷனரிகளும் உள்ளூர் பிரமுகர்களும் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கினார்கள். அப்படித் தொடங்கப்பட்ட பள்ளிகளில் தீண்டத்தகாத சமூகத்தைச் சார்ந்த குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நடைமுறை அரை நூற்றாண்டுக்கும் மேலாக நீடித்தது. ஆனாலும், முகமதியர் சமூகக் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதற்காக ஆங்கில அரசு சிறப்பு நிதியத்தை உருவாக்கியது. இந்தப் பாகுபாட்டை உணர்ந்த நிலையில்தான், 1892ல் சென்னை விக்டோரியா டவுன்ஹாலில் நடைபெற்ற சென்னை மகாஜன சபை நடத்திய மாநாட்டில், பஞ்சமர்களுக்கென தனியாக பள்ளிகளையும் விடுதிகளையும் உருவாக்க ஆங்கில அரசுக்கு கோரிக்கை விடுக்கும்படி முழங்கினார் பண்டிதர் அயோத்திதாசர்.
நாடு விடுதலையடைந்த பின்பு 1948ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அப்போதைய பிரதமர் நேருவால் அமைக்கப்பட்ட பல்கலைக்கழக கல்விக்குழு, கல்லூரிக் கல்வியை தனியார்மயமாக்கியது. பல்கலைக்கழக மானியக் குழுவையும் உருவாக்கி அதன் மூலம் தனியார் கல்வி நிறுவனங்கள் அரசு உதவி பெற்றுக்கொள்ளும் நடைமுறையை வகுத்தளித்தது. இதன் மூலம் நாடெங்கிலும் கல்வி நிறுவனங்கள் பெயரில் கட்டண வசூல் வேட்டை தொடங்கி வைக்கப்பட்டது. மேல்நிலைக் கல்வியின் மேம்பாட்டிற்கான கருத்துருவை வழங்கும்படி 1952 – 53இல் அமைக்கப்பட்ட சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் இலட்சுமணசாமி முதலியார் கல்விக்குழு, தமிழ் உட்பட தேசிய இனங்களின் மொழிகளில் கல்வி வழங்குவது மிகுந்த பலனளிக்கும் என்ற கொள்கை வரைவை அளித்து, ஜனநாயகத்தை அனைத்துத் தளங்களிலும் மதித்து நடக்கும் குடிமக்களை உருவாக்கும் விதத்தில் கல்வி வழங்கப்பட வேண்டும் என்ற சிறப்பு வாய்ந்த கருத்துருவையும் முன்வைத்தது.
அதைத் தொடர்ந்து 1964 – 65 இல் அமைக்கப்பட்ட கோத்தாரி கல்விக்குழு மிக முக்கியமான 22 வழி காட்டுதல்களை அரசுக்கு வழங்கியது. அவற்றில் ஆசிரியர்களின் கல்வி மற்றும் தரம் குறித்து அக்குழு முன்வைத்த பரிந்துரைகளில் பல இன்றும் நடைமுறையில் உள்ளன.
அதன் பின்னர், முன்னாள் இந்திய பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி அரசினால் உருவாக்கப்பட்ட தேசிய கல்விக் கொள்கை – 1986இல் இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்கப்பட்டு, 1990ல் ஆச்சார்யா ராமமூர்த்தி தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்ய மீண்டும் ஜனார்த்தன ரெட்டியின் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டு 1992இல் நடை முறைப்படுத்தப்பட்டது. அதன் மூலம் மனப்பாடம் செய்து ஒப்பித்து மதிப்பெண் எடுக்கும் சமகால கல்விமுறை ஏகபோகமாக நடை முறைப்படுத்தப்பட்டது.
1991-இல் காட்(GAAT) ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டதால், அந்த ஒப்பந்தத்தை உருவாக்கிய டங்கல் கருதுகோள்களின்படி, பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களுக்கு வேலையாள் பிடித்துக்கொடுக்கும் வகையில் நாட்டின் கல்விக்கொள்கையை அப்போதைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்மராவ் மாற்றியமைத்தார். அதன்படி ‘எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம்’ என்ற கோட்பாடு மிகத்தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஒரு மாணவனின் தகுதி, திறன் அனைத்தையுமே அவனது ஆங்கில அறிவைக் கொண்டு தீர்மானிக்கும் பண்பாடு நாடெங்கிலும் வளர்த்துவிடப்பட்டது.
முன்னதாக 1976இல், எமர்ஜென்சி காலத்தில் இந்திராகாந்தியால் கொண்டுவரப்பட்ட 42ஆவது அரசமைப்புச்சட்டத் திருத்தம் இந்திய கல்வியியல் வரலாற்றில் ஒரு அடிப்படையான மாற்றத்தைக் உருவாக்கியது. அதுவரை மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் இருந்து வந்த கல்வியை அந்த சட்டத்திருத்தம் பொதுப்பட்டியலுக்குள் கொண்டு வந்தது. நாட்டின் கல்வித் தரத்தை மத்திய மாநில அரசுகள் இணைந்து மேம்படுத்த வேண்டும் என்பதும், இரு அரசுகளும் கல்வி தொடர்பான செயற்பாடுகளில் அவரவர் மதிப்பீடுகளை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்பதும் குறிப்பாக மாநில அரசுகளின் கல்வி முனைப்புகள் மதிக்கப்படவும் மத்திய அரசால் ஏற்கப்படவும் வேண்டும் என்பதும் அதன் அடிப்படைகளாக இருந்தன.
அந்தப் புரிதலின் தொடர்ச்சியாகத்தான், கடந்த 5 ஆண்டுகளில் கல்வி தொடர்பான ஒப்புரவான நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் ஒரு குறிப்பிடத் தகுந்த எல்லைகளை எட்டின. அவற்றுள், 2013-இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ‘தொடக்கநிலை குழந்தைப் பராமரிப்பு மற்றும் கல்வி குறித்த தேசியக்கொள்கை’, ‘தேசிய இளைஞர் கொள்கை’, ‘திறன் வளர்ப்பு மற்றும் தொழில் முனைப்பு குறித்த தேசியக்கொள்கை’ ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, அரசமைப்புச் சட்டத்திருத்தம் 89, சட்ட விதி 21-ன் மூலம், 6 லிருந்து 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி வழங்குவதை அடிப்படை உரிமையாக்கி, ‘இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் – 2009’ என்ற சட்டத்தை இயற்றி, அதன் மூலம் குழந்தைகளுக்கான கல்வி உரிமை கட்டாயமாக்கப் பட்டுள்ளது. மிகவும் தாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாக இருப்பினும், மேற்கண்ட கல்வி தொடர்பான செயற்பாடுகளில் மாநில அரசுகளின் பங்கு முதன்மையானதாகக் கருதப் பட்டது. அதற்கேற்றாற்போல மத்திய அரசும் தனது பங்களிப்பைச் செலுத்தியது.
ஆனால், பிரதமர் மோடி அரசு விவாதப்படுத்தியுள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை – 2016’ கடந்த 70 அண்டுகால இந்திய கல்வி வரலாற்றில் எதிர்மறையான மாற்றத்தைக் கொண்டுவரத் துடிக்கிறது. நாட்டு மக்களுக்கு கல்வி அளிக்கும் விஷயத்தில், மாநில அரசுகளை நேரடியாகக் கட்டுப்படுத்தி, முற்றிலும் தனது விருப்பப்படி பாடத்திட்டங்களை அமைத்து, அவற்றை மாநில அரசுகளின் செலவில் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற ‘மோசடித் திட்டம்’தான், ‘புதிய கல்விக்கொள்கை’ என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உண்மையில் இது மோடியின் விருப்பம் அல்ல. மாறாக, மோடியின் பிறப்பிடமான ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நீண்டநாள் கனவுத்திட்டமாகும்.
மோடி மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்குள் 2018-2019 கல்வி ஆண்டிலாவது தனது கனவுத்திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு. நாட்டில் இந்து புராண இதிகாசப் புளுகுகளை மாணவர்களுக்கான பாடங்களாக மாற்றுவதன் மூலம், இந்து புராணங்களை அடுத்தத் தலைமுறையினருக்குக் கற்றுக்கொடுத்து, அதனடிப்படையில் இந்தியாவில் ‘இந்து அரசை’ நிரந்தரமாக இந்திய மண்ணில் நிலை நிறுத்திவிடமுடியும் என ஆர்.எஸ். எஸ். கனவு காண்கிறது. எனவே தான், மாணவர்களுக்குக் கல்வி தொடர்பான பாடத்திட்டங்களை உருவாக்குவதில் மாநில அரசுகளுக்கு இருக்கும் அதிகாரத்தைப் பறிக்கும் வேலைத்திட்டத்துடன் புதிய கல்விக்கொள்கையை ஆளும் மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
‘மனனம் செய்து ஒப்பிக்கும் முறை’யில் வடிவமைக்கப்பட்டு, வெறும் புத்தக அறிவி னைச் சோதிப்பதாக மட்டுமே பள்ளிக்கல்வி மதிப்பீட்டு முறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன எனவும், முதுகலைப்பட்டம் பெற்றும்கூட இளைஞர்களை வேலையில்லாதவர்களாக இருக்கச்செய்யும் கல்விமுறைதான் நடைமுறையில் உள்ளது எனவும் மோடி அரசின் கல்விக் கொள்கை குறைபட்டுக் கொள்கிறது. ஒட்டுமொத்த கல்வி அமைப்பு முறையிலும் அதன் நிர்வாக அமைப்பு முறையிலும் மாற்றத்தைக் கொண்டுவருவதும். ஆளுகை மற்றும் நிர்வாகக் கொள்கைகள் ஆகியவற்றில் புதிய வெளிச்சத்தை கொண்டு வருவதும் அவசியம் என மோடி அரசின் புதிய கல்விக் கொள்ளை அறிவித்துள்ளது. கல்வித் தளங்களில் நாட்டில் நீண்டகாலமாக நிலவி வரும் பிற்போக்குத்தனமான மதிப்பீட்டுமுறைகளிலிருந்து முனைப்பான கல்வித் திட்டத்தை முன்வைப்பதாகக் கூறுகிறது மோடி அரசின் கல்விக்கொள்கை.
அங்கன்வாடிகளிலேயே குழந்தைகளின் திறனைக் கண்டறிந்து, குழந்தைகளின் தரத்தை முடிவு செய்து, அதற்கேற்றபடி கற்கவேண்டிய கல்வி வழியையும் நிர்ணயித்து குழந்தைகளுக்கு வழிகாட்டப்படும் என்கிறது ‘புதிய கல்விக் கொள்கை’. குழந்தைகளின் கல்வித்திறன், தொழிற்கல்வித்திறன் ஆகியவற்றை பள்ளிக்கல்விக்கு முந்தைய அங்கன்வாடிகளிலேயே முடிவுசெய்து, அதற்கேற்றபடி குழந்தைகளைத் தரம் பிரிக்கும் வேலையை புதிய கல்விக் கொள்கை செய்யவிருக்கிறது. பல்வேறு சமூகப் பின்னணியில் பிறந்து வளரும் குழந்தைகள் கற்கும் கல்வியின் அடிப்படையில்தான் தங்களின் திறனை வளர்த்துக்கொள்கின்றன. மிகவும் மோசமான சமூகப் பின்னணிகொண்ட குழந்தைகள் தங்களின் சமூகப் பின்புலத்தை கல்வியின் மூலமாகவே மாற்றியமைக்கின்றன. கல்வி என்பது அங்கன்வாடியிலிருந்து தொடங்கி அங்கேயே முடிவதில்லை. அது மக்களின் வாழ்நாள் முழுவதும் மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ஊற்று. அதை அங்கன்வாடியிலேயே முடித்து வைக்கும் வேலையை, புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மோடி அரசு அதைச்செய்ய முயற்சிக்கிறது. கொடும் பார்ப்பன முதலமைச்சாராக இருந்த ராஜாஜி கொண்டு வந்த குலக்கல்வி முறையை நினைவூட்டு வதாக அமைந்துள்ள இந்தச் சிந்தனை, ஆர்.எஸ்.எஸ்ஸின் வேலைத்திட்டம் என திட்டவட்டமாகச் சொல்கிறோம்.
ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத்தேர்ச்சி என்ற கொள்கை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்கிறது புதிய கல்விக்கொள்கை. பட்டியலின மற்றும் பழங்குடிச் சமூகங்களிலிருந்து பள்ளிக்கு வரும் குழந்தைகள் பெரும்பாலும் தொடக்கக் கல்வியுடன் நின்று விடுகின்றன. எட்டம் வகுப்புவரை கட்டாயத்தேர்ச்சி என்ற நடைமுறைதான் கடந்த சில ஆண்டுகளாக மேற்கண்ட சமூகக் குழந்தைகளின் ‘இடைநிற்றலை’ குறைத்துவந்துள்ளது. இப்போது மீண்டும் ஐந்தாம் வகுப்புவரைதான் கட்டாயத் தேர்ச்சி என்ற திட்டம் நடைமுறைக்கு வருமானால், அது பட்டியல் மற்றும் பழங்குடிச் சமூகக் குழந்தைகளின் கல்வியை நிச்சயமாகப் பாதிக்கும்.
மாணவர்களின் விருப்பங்களினடிப் படையில், அவர்களின் இயல்பு சார்ந்த தொழிற்கல்வியை வழங்குவதற்கான தொழிற்துறை ஆலோசகர்கள் நியமிக்கப்படுவர் என்கிறது புதிய கல்விக்கொள்கை. கற்றலில் பின்தங்கியுள்ள மாணவர்களுக்கு மேலும் சிறப்புப் பயிற்சிகள் அளிப்பது குறித்து சிந்திக்காமல் அவர்களை தொழிற்சார்ந்த கல்வியில் ஈடுபாடு காட்டச் செய்வது மாணவர்களின் உயர்கல்வி உரிமையை மறுப்பதாகும். பொதுவாக, நிலமற்ற வேளாண்மைக் கூலிக் குடும்பங்களிலிருந்து பள்ளிக்கு வரும் முதல் தலைமுறை மாணவர்களின் கற்றல்திறன் தொடக்கத்தில் தடுமாற்றத்தை சந்திக்க நேரிடுமானால், ‘உனக்குத் தொழிற்கல்வி தான் தேவைப்படுகிறது’ எனக்கூறி உயர்கல்வி பெறுவதிலிருந்து அவர்களை தடுக்கும் தந்திரமான நடவடிக்கையில் அரசு ஈடுபடத்திட்டமிட்டுள்ளது. இதைச் செய்வதன் மூலம் உயர்கல்விக்கு மேட்டுக்குடி மாணவர்களை மட்டும் அனுப்பி, உயர்கல்வியை குறிப்பிட்ட வகுப்பினரின் சொத்தாக மாற்றும் வேதகால நடைமுறையை மீண்டும் இந்தியாவில் கொண்டுவர அரசு திட்டமிடுகிறது.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]
இந்திய நாட்டின் வரலாற்றை வேதகால முறைமைப்படி எழுத விரும்பும் இந்துத்துவச் சிந்தனைவாதிகளின் வேலைத்திட்டத்தை‘புதிய கல்விக்கொள்கை’ மூலம் நடைமுறைப்படுத்த மோடி அரசு துடிக்கிறது.
[/quotes]
மேலும், பழங்குடி மாணவர்கள், அவர்கள் வாழும் அந்தந்த மாநில மொழிகளில் கல்வி கற்பதற்கு சிரமப்படுகிறார்கள் எனக்கூறும் கல்விக்கொள்கை, அவர்களுக்கு பல்மொழி பாடத்திட்டம் பயிற்றுவிக்கப்படும் என அறிவிக்கிறது. ஒரு மொழியையே கற்க இயலாத நிலையில் உள்ள மாணவர்கள் பல்மொழிகளை எவ்வாறு கற்பார்கள்! பல்மொழி பயிற்றுவிப்பு என்ற பெயரில், பழங்குடி மாணவர்களுக்கு இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க மத்திய அரசு திட்ட மிடுகிறது.
பள்ளிவிட்டுப் பள்ளிமாறும் முறை தடுத்து நிறுத்தப்படும் என்கிறது புதிய கல்விக் கொள்கை. தாங்கள் விரும்பும் பள்ளியில் கல்விகற்றுக்கொள்ளும் மாணவர்களின் கல்வி உரிமையை இந்த பிரிவு தடுத்து நிறுத்துகிறது. மாணவர்களிடையே நிலவும் மோதல்களி னாலும், ஆசிரியர்களின் தவறான நடவடிக் கைகளினால், பள்ளிகளின் தரத்தினாலும் பள்ளிமாற விரும்பும் மாணவர்களின் உரிமையை தடுத்துநிறுத்த முயற்சிக்கிறது. மேலும் புதியகல்விக்கொள்கையில் பள்ளி களுக்கு தரவரிசை வழங்கப்படும் என்று கூறுகிறது அரசு. பள்ளிகளைத் தரம் பிரிப்பதன் மூலம் மாணவர்களிடையே மேல் கீழ் மனப் பான்மை வளராதா! தரப்படுத்துதலின் மூலம் மாணவர்களின் கல்வித் திறனை அரசு எவ்வாறு மேம்படுத்த முடியும். தரம் பிரிப்பது என்பதே வணிக நோக்கிலான செயல் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. அதைச் செய்வதன் மூலம் மாணவர்களின் திறனை ஒருபோதும் மேம்படுத்த முடியாது.
நாடு முழுமைக்கும், மொழிப்பாடங்கள் மற்றும் கணித, அறிவியல், பாடங்களை மாநில அரசுகள் தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், சமூகஅறிவியல் பாடத்தை மட்டும் மத்திய அரசு வழங்கும் எனவும் கல்விக்கொள்கை கூறுகிறது. அதோடு, பள்ளிகளின் தரம் குறைந்து காணப்படுவதற்குக் காரணம் தலைமையாசி ரியர்களே என்று குறைபட்டுக்கொள்ளும் மத்திய அரசு, நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தலைமையாசிரியர்களை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளுக்கு மத்திய அரசே அனுப்பிவைக்கும் என்றும் கல்விக்கொள்கை கூறுகிறது.
சமூக அறிவியல் பாடத்தினை மட்டும் இந்தியா முழுமைக்கும் மத்திய அரசே வழங்கும் என்று மோடி அரசு கூறுவதன் பின்னணியை எவரும் எளிதில் புரிந்துகொள்ள முடியும். இந்திய நாட்டின் வரலாற்றை வேதகால முறைமைப்படி எழுத விரும்பும் இந்துத்துவச் சிந்தனைவாதிகளின் வேலைத்திட்டத்தை‘புதிய கல்விக்கொள்கை’ மூலம் நடைமுறைப்படுத்த மோடி அரசு துடிக்கிறது. அதற்கான பாடத்திட்டங்கள்கூட தயாராகிவிட்டன. புராண இதிகாசங்களிலிருந்து இந்திய வரலாற்றை எழுதி, வேதகால மடமைகளை இந்திய நாட்டின் பெருமைகளாகச் சித்தரிக்கும் அப்பாடத் திட்டங்களை வெட்கமற்ற முறையில் பாராட்டிப் பேசினார் மோடி. வருங்காலத்தில் அவற்றைத்தான் சமூக அறிவியலாக நமது மாணவர்கள் கற்கப் போகிறார்கள்.
மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்களை மட்டும் நாங்கள் தான் ‘சப்ளை’ செய்வோம் எனக்கூறுகிறது மத்திய அரசு. புதிய கல்விக்கொள்கை நடைமுறைப் படுத்தப்பட்டால், தலைமையாசிரியர்களின் பணியிட மாற்றங்களும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். பள்ளிகளில் பணியாற்றுவதற்கென்றே சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்ட தலைமையாசிரியர் பிரிவு உருவாக்கப்பட்டு, அப்பிரிவிலிருந்தே பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் அனுப்பிவைக்கப்படுவர். அவ்வாறு செய்வதன் மூலம், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பள்ளிகளுக்கு தங்கள் ‘கையாள்’ ஒருவரை அனுப்பி, எவ்வித செலவும் இல்லாமல் மாநில அரசுப் பள்ளிகளை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதுதான் மோடி அரசின் நோக்கம். இதனால் பள்ளிகளில், மத்திய – மாநில அரசுகளின் ‘இருவகை ஆட்சி’ நடைபெற்று பள்ளிகளில் பெரும் குழப்பம் நிகழப்போகிறது.
மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளை அந்தந்தப் பகுதியில் இயங்கி வரும் கேந்திர வித்யாலயாக்களுடன் இணைத்து, இரண்டையும் கண்காணிக்கும் பொறுப்பு கேந்திர வித்யாலயாவுக்கு வழங்கப்படும் என புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. மாநில அரசுகள் நடத்தும் பள்ளிகளை மத்திய அரசின் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரும் மறைமுக சதித் திட்டத்துடன் இக்கொள்கை வகுக்கப்பட்டுள்ளது. மெல்ல மெல்ல இந்தி வழிக் கற்றல் முறையை இந்தியா இவ்வளவு தலையீடு செய்தாலும், மாநில அரசு நடத்தும் பள்ளிகளுக்கு உதவித் தொகையாக ஒரு ரூபாய்கூட மத்திய அரசு தராது எனக் கூறியுள்ளதுதான் மோடி அரசின் ஆணவப்போக்கிற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
இப்போதுவரை உயர்கல்வி ஆய்வு உதவித்தொகை பல்கலைக்கழக மானியக்குழு தான் வழங்கிவருகிறது. ஆனால், அவ்வுதவித் தொகையை, இந்தியக் கல்விப் பணி என்ற ஒரு புதிய அமைப்பை உருவாக்கி, இந்திய அளவி லான தேர்வுகளை நடத்தி, அதில் வெற்றிபெறும் மாணவர்களுக்குத்தான் ஆய்வு உதவித்தொகை வழங்கப்படும் என்று புதிய கல்விக்கொள்கை கூறுகிறது. இதன் மூலம் கல்விப்புலத்தில் தன்னதிகாரத்துடன் இயங்கும் தேசிய அளவிலான எல்லா கல்வி அமைப்புகளையும் முடக்கிவிட்டு, எதேச்சதிகார கல்வி முறையை மத்திய அரசு நடைமுறைப்படுத்தத் துடிக்கிறது.
இவ்வளவு திட்டங்களையும் வாய்கிழியப் பேசும் மோடியின் புதிய கல்விக்கொள்கை, கல்வித்திட்டங்களுக்கான நிதிஒதுக்கீட்டை மட்டும் 1986இல் வகுக்கப்பட்ட கொள்கையின் படி, ஜி.டி.பி.யில் 6% என்ற அளவில்தான் நிதி ஒதுக்கீடு இருக்கும் என்கிறது. நாட்டில் உள்ள 90 சதகிவித அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மற்றும் கல்லூரிகள் உட்கட்டமைப்பு இல்லாமலும், கழிப்பறை, விளையாட்டு மைதானம் இல்லாமலும் கதவு ஜன்னல்கள் இல்லாத வகுப்பறைகளுடனும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. நாடு முழுவதிலும் அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் பற்றாக்குறை நீடிக்கிறது. இவற்றைச் சரி செய்வதற்கே மத்திய அரசு பல லட்சம் கோடிகளை ஒதுக்கியாக வேண்டும். அவற்றைப் பற்றித்தான் மோடி முதலில் கவனம் செலுத்தியிருக்கவேண்டும். ஆனால் வெறும் வாய்ப்பந்தல் போடுவதில் மோடியின் ஆட்கள் நேரத்தைச் செலவிட்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே, பதவி ஏற்ற நாளிலிருந்து, பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினருக்கென மத்திய பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதியை மிகத் தந்திரமான முறையில் குறைத்து பல குழப்படிகளைச் செய்து வரும் மோடி அரசு, அச்சமூக மாணவர்களின் கல்வித்தரத்தினையும், உயர்கல்வி வாய்ப்பினையும் உறுதி செய்வதற்கான எந்த சிறப்புத்திட்டத்தையும் தனது கல்விக் கொள்கையில் முன் வைக்கவில்லை. அதே நேரத்தில் நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆன போதிலும் நாட்டில் தலைவிரித்தாடும் மதவாதம், சாதி வெறியாட்டம், ஊழல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றைக் கணக்கிலெடுத்துக்கொண்டு, அவற்றைக் களையும் நோக்கில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். வேலைவாய்ப்பு, தரம், வருவாய் என்ற பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மட்டும் புதிய கல்விக் கொள்கையை நடுவணரசு உருவாக்கியிருப்பது மிகவும் கவலையளிக்கும் செயலாகும்.
கல்வியை, நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புபடுத்தும் அதேவேளையில், மூடநம்பிக்கைகளையும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை தேசத்தின் பெருமையாகக் கருதும் தனிமனித இயல்புகளில் மாற்றத்தை உருவக்க வேண்டிய கல்வியையும் மக்களுக்கு அளித்தாக வேண்டும். ‘கல்விகற்ற ஒருவன் ஒழுக்கமில்லாதவனாக இருந்தால், அவன் மிருகத்தைவிட மோசமான வனாகவே இருப்பான்’ என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். நாடு எத்தகைய பொருளாதார வளர்ச்சியை எட்டிய போதிலும், மேம்பட்ட மனிதத் தன்மையுடைய மனிதர்களை நமது கல்வி உருவாக்கத் தவறுமேயானால், இந்திய சுயநலமும், மதவெறியும் பாலியல் ஒழுக்கக்கேடும் நிறைந்த கொடிய மனிதர்களின்வாழும் நரகமாகவே இந்தியா இருக்கும். இந்தியர்களை பணக்காரர்களாக மாற்றுவதைவிட ஜனநாயகம், சகோதரத்துவம், பிரதிநிதித்துவம், நீதி, பாலின சமத்துவம் ஆகிய மதிப்பீடுகளை இந்தியர்களுக்குக் கற்றத்தருவதே நமது கந்வியின் மிக முக்கிய நோக்கமாக இருக்கவேண்டும். அத்தகைய மன வளர்ச்சியை, இந்தியர்களின் மனங்களில் வளர்த்தெடுக்கும் கல்விமுறையே இந்திய நாட்டின் அவசரத் தேவையாக உள்ளது. ஆர்எஸ்எஸ்ஸின் கையாளான மோடியிடம் இதை எதிர்பார்ப்பது மடத்தனமானதாகவே இருக்கும்!
———————————-
2017 ஆகஸ்ட் மாத ‘பீமாநதி’ இதழில் எழுதிய கட்டுரை