பௌத்த மதமாற்றப் பேருரை
[quotes quotes_style=”bquotes” quotes_pos=”center”]
தீண்டப்படாத இந்துவாய்ப் பிறந்தது என் அவலம்;
ஆனால் இந்துவாய் இறக்கமாட்டேன்
[/quotes]
பத்தாண்டு கால இடையறாத சமூகப் போராட்டத்தின் பின்னணியில் இன்றைய அரசியல், சமூக நிலைமைகளை மீள்பார்வை செய்யும் நோக்கில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் மாநாடு ஒன்றை 1935, ஞாயிற்றுக் கிழமையன்று, நாசிக் மாவட்டம் இயோலாவில் நடத்தத் தீர்மானித்தார்.
1935, அக்டோபர் 12 சனிக்கிழமையன்று காலை 11 மணிக்கு டாக்டர் அம்பேத்கர் நாசிக்கை அடைந்தபோது, அவர் பெரும் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டு பெரும் ஊர்வலத்துடன் நகரத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டார், நாசிக் நகரில் ஒரு நூலகத்தை அவர் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“தன்னுதவியில் நீங்கள் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். உங்கள் மேம்பாட்டுக்காக உங்கள் சொந்தக் காலில் நின்று நீங்கள் போராட வேண்டும். பேரிடர் ஏதும் நிகழ்ந்து நான் இறக்க நேரிட்டாலும் எனக்குப் பின்னர் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்திச் செல்ல இயலவேண்டும்”.
இரவிவார் பேட்டை ஹீராலால் சந்தில் இரவு 9 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பல சாதி விருந்தில், காங்கிரஸ்காரர்களில் தேஷ் பாண்டே ஒருவர் மட்டுமே கலந்து கொண்டார்.
1935 அக்டோபர் 13 ஞாயிறன்று டாக்டர் அம்பேத்கர் விஞ்சூர் சென்றிருந்தபோது, அங்கு வரவேற்கப்பட்டார். அவ்வாறே அவர் இயோலா செல்லுகையில் வழியில் கிராம மக்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
இயோலா நகராட்சி மன்றம் காலையில் அவருக்கு வரவேற்புப் பட்டயம் வழங்கியது. அதற்கு நன்றி தெரிவித்து டாக்டர் அம்பேத்கர் உரையாற்றுகையில் கூறியதாவது:
“நெடுநாளாய்த் தொடர்ந்து வரும் நமது போராட்டங்களுக்குப் பின்னரும், தீண்டப்படாத மக்கள் குறித்த அவர்களது மனப்பான்மையில் மாற்றமேதுமில்லை யென்றும், நம்மிடம் அவர்கள் நேயத்தோடு நடந்து கொள்ளப் போவதில்லையென்றும் முடிவுக்கு வந்துள்ளோம். எனவே நாம் இந்துக்களிடமிருந்து விலகி, தன்னுதவி, தன் மேம்பாட்டுக்கான போராட்டம் அவற்றிலேயே நம்பிக்கை வைப்பது என முடிவு செய்துள்ளோம்”.
1935 அக்டோபர் 13 இரவு 10 மணிக்கு இயோலாவில் மாநாடு கூடியது. ஐதராபாத் சமஸ்தானம் மத்திய மாநிலம் ஆகியவற்றின் சார் பாளர்களுடன் பல்வேறு வகையான கருத் தோட்டங்கள்கொண்ட தீண்டப்படாத மக்கள் 10,000 பேர் அளவுக்கு மாநாட்டில் கலந்து கொண் டனர். மாநாட்டின் வரவேற்புக் குழுத்தலைவர் அம்ரித்ராவ் ரங்காம்பே அவர்கள் தங்கள் எதிர்காலம் குறித்துத் திட்டமிடுதலில் ஒடுக்கப் பட்ட வகுப்பு மக்கள் காட்டும் ஈடுபாட்டையும் பேரார்வத்தையும் குறித்துத் தமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொண்டு வரவேற்புரையில்,
“சீரழிவுற்ற இந்து சமயத்தில் ஒரு வகுப்பினர் என்ற வகையில் பார்ப்பனர்கள் மட்டுமே நலன் பெற்று வருதலால், அதைப் பார்ப்பனீயம் என்று கூறுவதே முற்றிலும் பொருந்தும்” எனக் கூறினார்.
ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நீண்ட, உணர்வு நிறைவுரையில் டாக்டர் அம்பேத்கர் அவர்கள், பொருளாதாரம், சமூகம், கல்வி, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் தற்போதைய அவல நிலையை எடுத்துரைத்து, இந்து சமயமென்னும் ஒரே அமைப்பின் கீழ் வரும் தங்களுக்கும், குறைந்தபட்ச மனித உரிமைகளாவது கிடைக்க வேண்டுமென்பதற்கான போராட்டத்தில் அவர்கள் செய்த மகத்தான தியாகங்களைச் சுட்டிக் காட்டினார். குறிப்பாக கலாராம் கோயில் நுழைவு இயக்கத்தின்போது கடந்த ஐந்தாண்டுகளில் எவ்வாறு அவர்கள் மனிதத்தன்மையின்றி நடத்தப்பட்டனர் என்பதையும், எளிய உரிமைகளை இந்து சமுதாயத்தில் சமத்துவ நிலையையும் அடைவதற்கான அவர்களது போராட்டத்திற்குப் பயன் ஏதும் விளையாமையையும் அவர் குறிப்பிட்டார். இக்குறிக்கோள்களை அடைவதற்காக செலவிடப் பட்ட பணம், காலம், மேற்கொண்ட உழைப்பு ஆகியவை அனைத்தும் விரயமானது குறித்து அவர் நொந்த உள்ளத்துடன் வருந்தியுரைத்தார்.
எனவே, இந்த விவகாரத்தில் தீர்க்கமான தோர் முடிவு எடுப்பதற்கான காலகட்டம் வந்து விட்டதென அவர் உரைத்தார். அவர்கள் அனு பவித்து வரும் தாழ்ச்சிகளும், அவர்களை எதிர் கொள்ளும் இயலாமைகளும் அவர்கள் இந்து சமூகத்தில் உறுப்பினர்களாய் இருப்பதன் விளைவே எனக் கூறினார். அவர்கள் இந்து சமயத்தைக் துறந்து, தங்களுக்குச் சம தகுதியும், பாதுகாப்பான நிலையும் தந்து தங்களைக் கண்ணியத்துடன் நடத்தும் பிறிதொரு சமயத்தில் சேருதல் நன்றல்லவா என வினாவினார்.
பின்னர் அவர் தமது குரலை உயர்த்தி, இந்து சமயத்துடனான தொடர்புகளை அறுத்துக்கொண்டு தங்களுக்கு அமைதியையும் தன் மதிப்பையும் பிறிதொரு மதத்தில் நாடுமாறு கூறியதுடன், புதிய சமயத்தைத் தேர்ந்தெடுக்கும் போது சமத்துவ நிலை, சமத்துவ நடத்துமுறை, சமத்துவ வாய்ப்புகள் ஆகியவற்றுக்குத் தங்குதடையற்ற உறுதியுண்டா என்பதை விழிப்புடன் ஆய்ந்து நோக்க வேண்டுமென்றும் கூறினார்.
தம்மைப் பற்றி, தமது தனி முடிவைப் பற்றிக் கூறுகையில் அவர் ஏதோ தீவாய்ப்பால் தாம் ஒரு தீண்டப்படாத இந்து வாய்ப் பிறந்துவிட்டதாகவும், அதைத் தடுத்தல் தனது ஆற்றலில் இருக்கவில்லையென்றும் அதனால் பல இன்னல்களையும் இழிவுகளையும் எதிர் கொள்ள நேர்ந்ததாகவும் கூறி, ‘ஆனால் நான் ஓர் இந்துவாகவே இறக்கமாட்டேன் என்பது மிக உறுதி‘ என்றும் இடியாய் முழங்கினார்.
பின்னர் அவர் வன்கொடுமை மேல்சாதி இந்துக்களுக் கெதிராகக் கடந்த ஐந்தாண்டு காலப் போராட்டம் பயனற்றதே எனக் குறிப்பிட்டு காலாராம் கோயில் சத்தியாக்கிரகத்தை உடனடியாக நிறுத்துமாறு மக்களைக் கேட்டுக்கொண்டார். அவர்களது முயற்சிகளையெல்லாம் தோற்கடித்த இந்துக்கள் இந்நிலைக்கு வருந்துவதாகவோ திருந்துவதாகவோ தோன்ற வில்லையென்றும் குறிப்பிட்டார். இந்து சமயத்தைவிட்டு நிரந்தரமாய் வெளியேறிவிடத் தீர்மானித்துவிட்டதைப் புறவுலகுக்குப் புலப்படுத்தும் வகையில் இனியனைவரும் நடந்துகொள்ள வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். சுதந்திர மனிதர்களுக்கான வாழ்க்கை வழியைத் தாங்களே தேர்ந்தெடுத்து கொண்டதையுணர்த்துமாறும் வேண்டினார்.
அதற்கேற்பவே, முழுமையான விவாதத்தின் பின்னர், இந்து சமுதாயத்தில் தங்களுக்குச் சமத்துவ நிலை வேண்டும் எனும் கோரிக்கைக்கு மேல்சாதி இந்துக்கள் வேண்டுமென்றே பாராமுகம் காட்டி வரும் நிலையைக் கருத்தில்கொண்டு, தீண்டப்படாத மக்கள் இந்து சமயத்தில் சமத்துவ நிலை பெற வேண்டுமென்று பத்தாண்டுகளாக நடத்திவரும் போராட்டத் தின் மூலம், இரு தரப்பாருடைய நிலையையும் மேம்படுத்தி வலிவூட்டும் நம்பிக்கையைக் கைவிட்டு விடுமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், இந்து சமயத்தின் ஏனைய பிரிவினருக்கு இணையான சமத்துவ நிலையையும் கௌரவ மான வாழ்க்கையையும் பெறமுடியுமென்னும் பயனற்ற முயற்சிகளில் தங்கள் ஆற்றலைச் சிதறடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டது.
***
டாக்டர் அம்பேத்கர் அவர்கள், தமது துணைத் தலைவர்களுடன் இயோலாவிலிருந்து நாசிக் சென்று தங்கினார். அவரது தங்கலின் போது மெகவால் எனப்படும் துப்புரவாளர் அமைப்பு அவர்களுக்குத் தேனீர் விருந்தும் இரவு விருந்தும் 1935 அக்டோபர் 15, 16 தேதிகளில் வழங்கியது.
இந்து சமயத்தைத் துறந்து பிறிதொரு சமயத்தைத் தழுவவிருப்பதென்று டாக்டர் அம்பேத்கர் தெரிவித்த செய்தி உலகளாவிய வட்டத்தில் விரிந்து பரவியது. இந்து சமூகத்தின் மீது சீறிப் பாய்ந்த சூறைக்காற்றாய் அது விளங்கியது. இந்துக்களை நடுக்குறுத்தும் இடியெனவும் அது விளங்கியது. இந்து சமூகத்தின் பல்வேறு பிரிவினரிடையே ஓர் ஆரவாரத்தையும் இவ்வறிவிப்பானது தோற்று வித்தது. இது குறித்து இந்து சமூகத்தின் பல்வேறு பிரிவினரின் எதிரொலிப்புகள் கீழே தரப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் இந்தத் தீர்மான மானது பிடிவாதமும் இரக்கமற்ற மனமும் கொண்ட பழமைவாத இந்துக்கள் பால் பாதிப்பு எதையும் விளைவிக்கவில்லை. தேங்கி அழுகும் நிலையில் ஆழ்ந்துவிட்ட அவர்கள் தங்கள் சிந்தனைத் திறனையும் தொலைநோக்கையும் இழந்து நின்றனர். கல்வியறிவற்ற பார்ப்பனரல்லாத இந்துக்கள், சமய விவகாரங்களில் பார்பபனர்கள்தான் முடிவெடுக்க வேண்டும் என்று கருதினார்கள். இயோலாத் தீர்மானத்தைக் கேட்டு, பழமைவாத இந்துக்கள் பெருமகிழ்ச்சியடைந்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். கோயில் நுழைவு சத்தியாக்கிரகத்தினால் ஐந்தாண்டுகளான அலைக்களிப்புக்குள்ளாகி இருந்த நாசிக் மாவட்டப் பழமைவாத இந்துக்கள், இந்து சமயத்தை விட்டு விலகுவதென்னும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் தீர்மானத்தினால் பெருமகிழ்ச்சியே அடைந்தனர். தீண்டப்படாத மக்களின் இப்புதிய தீர்மானத்தைக் காரணம் காட்டி, நாசிக் தேர்த் திருவிழாவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குமாறு மாவட்ட ஆட்சியாளருக்கு அவர்கள் விண்ணப்பம் கொடுத்தனர். ஆனால் விவரமறிந்த, அரசியல் நோக்குடன் சிந்திக்கும் மக்களின் கருத்து நாடு முழுவதிலும் தீண்டப்படாத மக்களின் தீர்மானத்துக்கு எதிராகவே இருந்தது.
சிந்தி இந்து ஒருவர், இந்து சமயத்திலிருந்து டாக்டர் அம்பேத்கர் விலகினால் அவரைக் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்தி இரத்தக் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
புத்த மதத்திற்குத் தாம் மாறுவதை புதுடில்லியிலிருந்து அறிக்கை மூலம் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிரகடனம் செய்தார். அந்த அறிக்கை வருமாறு:
26, அலிப்பூர் சாலை,
சிவில் லைன்ஸ், டில்லி,
செப்டம்பர் 23, 1956
புத்த மதத்தில் நான் சேருவதற்கான தேதியும் இடமும் இப்போது இறுதியாக முடிவு செய்யப்பட்டுவிட்டன. நாகபுரியில் துஷ்ஷெரா நாளன்று அதாவது 1956 அக்டோபர் 14 ஆம் தேதி அது நடைபெறும். மதமாற்ற வைபவம் காலை 9 மணிக்கும் 11 மணிக்கும் இடையே நடைபெறும். அன்றைய தினம் மாலையில் கூட்டத்தில் நான் உரை நிகழ்த்துவேன்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,
செப்டம்பர் 23, 1956.
இது சம்பந்தமான நிகழ்ச்சி நிரலின் முழு விவரமும் பிரபுத்ர பஷத் வார இதழில் பிரசுரிக்கப்பட்டது. புத்த மதத்துக்கு மாறுபவர்கள் 19 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது! இந்த மதமாற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் முழுப் பொறுப்பும் இந்திய பௌத்த கவுன்சிலின் நாகபுரி கிளையிடம் ஒப்படைக்கப்பட் டது. இதன்படி கமிட்டியின் செயலாளரான திரு. டபிள்யூ. எம். கோட்போலே துண்டு பிரசுரம் ஒன்றை வெளியிட்டார். அது வருமாறு:-
வெகுஜன மதமாற்றம்
1956 அக்டோபர் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விஜயதசமி தினத்தன்று காலை 8 மணி அளவில் நாகபுரியில் நடைபெறும் ஒரு வைபவத்தில் டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவுவார். பர்மாவைச் சேர்ந்த வரும் தற்போது இந்தியாவில் இருப்பவருமான வணக்கத்திற் குரிய பிஷ சந்திரமணி மகா தேரா இந்த நிகழ்ச்சியை நடத்தி வைப்பார்.
புத்த மதத்தில் சேர, விரும்புபவர்கள் இதே வைபவத்தில் அதனைச் செய்யலாம். அவர்கள் சுத்தமான வெண்ணாடைகள் அணிந்திருக்க வேண்டும்.
நிதி வழங்க வேண்டுகோள்
அறச் செயலார்ந்த இந்த வைபவத்தில் லட்சக்கணக்கில் மக்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாபெரும் நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பை பாரதீய பௌத்த ஜன சமிதியின் ஸ்தல கிளையிடம் வணக்கத்திற்குரிய பாபா ஒப்படைத்துள்ளார். இந்தக் கிளைக்கு மக்கள் முடிந்த எல்லா உதவிகளையும் செய்வார்கள் என்று நம்பப்படுகிறது. நிதி உதவி செய்பவர்கள் சம்பந்தப்பட்ட சமிதியிடமிருந்து ரசீதுகள் பெறவேண்டும். வெளி ஊர்களில் இருப்பவர்கள் பண அஞ்சல் மூலம் நிதி உதவி செய்யலாம்.
இந்த வைபவத்தை நடத்துவதில் பங்கு கொள்ள விரும்புபவர்கள் கீழே கையெழுத்திடுள்ளரை 1956 செப்டம்பர் 30 ஆம் தேதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ சந்திக்கலாம்.
டபிள்யூ எம்.கோட்போலே,
செயலாளர்,
பாரதீய பௌத்த ஜன சமிதி
தேதி, (நாகபுரி கிளை) கோதான் மான்ஷன் செப்டம்பர் 21, 1956.
நாகபுரி
*
டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் வணக்கத்திற்குரிய பிக்கு சந்திரமணிக்கு எழுதிய கடிதத்தில் இந்த மதமாற்ற நிகழ்ச்சியை நடத்தித் தரும்படிக் கேட்டுக்கொண்டார். அந்தக் கடிதம் வருமாறு:-
26, அலிப்பூர் சாலை,
டில்லி,
செப்டம்பர் 24, 1956.
அருட்திரு பிக்கு சந்திரமணி,
குஷேனரா, கோரக்பூர் மாவட்டம்,
உத்தரப்பிரதேசம்,
அருட்டிரு பான்ட்டே
நானும் என் மனைவியும் புத்த மதத்தைத் தழுவ முடிவு செய்திருப்பதை உங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சமயச் சடங்கு 1956 அக்டோபர் 14 ஆம் தேதி நாகபுரியில் நடைபெறவிருக்கிறது. இந்த சடங்கு நடைபெறும் நேரம் காலை 9 மணி முதல் 11 மணி வரை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சடங்கை நீங்கள் நடத்தித் தர வேண்டும் என்பது எங்களது பெருவிருப்பம். நீங்கள் தற்போது இந்தியாவிலுள்ள மிகவும் மூத்த பௌத்த சந்நியாசி என்ற முறையில் இந்த சடங்கை நீங்கள் நடத்துவது மிகவும் உசிதமாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இப்போதைய உங்களது உடல் நிலையில் நீங்கள் நாகபுரிக்கு வருவதில் உள்ள சிரமத்தை நாங்கள் உணர்கிறோம். நீங்கள் குஷனாராவிலிருந்து நாகபுரிக்கு விமானம் மூலமோ அல்லது ரயில் மூலமோ வருவதற்கு ஏற்பாடு செய்கிறோம். மேலும் நாகபுரியில் நீங்கள் தங்குவதற்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து தருகிறோம். குஷனாராவிலிருந்து நாகபுரிக்கு உங்களை அழைத்து வர யாரையேனும் அனுப்பு கிறோம். எங்கள் அழைப்பை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா என்பதை அன்பு கூர்ந்து தெரிவியுங்கள்.
உங்கள் அன்புள்ள
(ஒப்பம்)
பி.ஆர். அம்பேத்கர்
அன்பு வணக்கங்கள்
***
இந்த நிகழ்ச்சியை ஒட்டி பிரபுத்த பாரத், 1956 அக்டோபர் 12 ஆம் தேதி ஒரு சிறப்பு மலர் வெளியிட்டது.
இந்த நிகழ்ச்சியில் எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் சந்தாத் தொகை ஒரு ரூபாய் செலுத்தி உறுப்பினராகும்படி குழு அவர்களைக் கேட்டுக் கொண்டது. செலவை ஏற்றுக் கொள்வது நாகபுரி மக்களின் பொறுப்பாகும். வரவேற்புக் குழு உறுப்பினர் கட்டணம் ரூ. 25/- எவர் வேண்டுமானாலும் வரவேற்புக் குழுவில் இடம் பெறலாம்.
மத மாற்றத்துக்குப் பதிவு செய்து கொள்வது 1956 அக்டோபர் 12 ஆம் தேதி ஆரம்பமாவதாக அறிவிக்கப்பட்டது. மதமாற்றம் நடைபெறும் இடத்தில் கூட அலுவலகம் செயல்படும். பதிவு செய்துகொண்ட பிரதிநிதிகள் அனை வருக்கும் தலா இரண்டு நுழைவுச் சீட்டுகள் வழங்கப்பட்டன; மதமாற்றம் நடைபெறும் மண்டபத்திற்குள் செல்வதற்கு இவை பயன்படும்.
வெள்ளை நிற அரைக்கால் சட்டையும் அதே போல் வெள்ளை நிற சட்டையும் அணிந்து வருமாறு தொண்டர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாகபுரிக்கு வெளியே இருந்து வரும் தொண்டர்களுக்கு வழிகாட்டும் பொறுப்பு திரு.கே.வி. உம்ரே, திரு.சச்சிதானந்த மங்கே, திரு.ஆர்.ஆர். பட்டீல் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மக்களின் வேண்டுகோளின் பேரில் மக்களை பம்பாயிலிருந்து நாகபுரிக்குக் கொண்டுவர ஒரு விசேட ரயில் வண்டியை ரயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இந்த ரயில் 1956 அக்டோபர் 12 ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு பம்பாய் வி.டி.யிலிருந்து புறப்படுவதாக இருந்தது. அவ்வாறே ரயில்வே அதிகாரிகள் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டனர். எனினும் நாகபுரிக்குச் செல்லும் எல்லா ரயில் வண்டிகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த ரயில் நின்ற ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் மேன்மேலும் பெருந்திரளான மக்கள் ஏறினர்.
நாகபுரியில் இந்த மக்கள் அனைவரும் தங்குவதற்கு பள்ளிக் கூடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டது. நாகபுரி தெற்கு அம்பசாரி சாலையில் அம்மைப்பால் கழகத்துக்கு அருகிலுள்ள திறந்தவெளி மைதானத்தில் மதமாற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. தரையில் மூங்கில் விரிப்புகள் போடப் பட்டிருந்தன; மைதானம் எங்கும் சுமார் 3000 மின்சார பல்புகள் பொருத்தப்பட்டிருந்தன. பெண்களுக்குத் தனி இடம் ஒதுக்கப் பட்டிருந்தது.
திரு. ரெராம் கௌடேயும் திரு. டபிள்யூ. எம்.கோட் போலேயும் ஒரு துண்டு வெளியீட்டை வைத்திருந்தனர். மதமாற்ற நிகழ்ச்சியின் விவரங்கள் அதில் தரப்பட்டிருந்தன.
சனிக்கிழமை 13 – 10 – 1956
மாலை 5 – 8 பரித்ரான்
8 – 10 சொற்பொழிவு
திரு.டி.வாலிசின்ஹா
பொதுச் செயலாளர்,
மகாபோதி கழகம்.
புத்தரின் வாழ்க்கையையும் இந்தியாவில் உள்ள புகழ் பெற்ற பௌத்த தலங்களையும் பற்றிய ஒளி விளக்கக் கண்காட்சி.
ஞாயிறு 14 – 10 – 1956 (அசோக விஜயதசமி)
காலை 8 – 11 டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,
திருமதி. மைசாகேப்
அம்பேத்கர் மற்றும் ஏனையோரை
மதமாற்றம் செய்யும் நிகழ்ச்சி,
நடத்துபவர் வணக்கத்திற்குரிய
சந்திரமணி மகாஸ்தவீர்,
காலை 11-11.25 புத்தர் சிலையை வழங்குதல் டாக்டர் பி.ஆர். அம்பேத்கருக்கு
கல்கத்தா மகாபோதி கழகம்
மாலை 6 – 7 சொற்பொழிவு
திரு.டி.வாலிசின்ஹா
பொதுச் செயலாளர், மகாபோதி கழகம்.
இரவு 8 – 11 யுகியாத்ரா அவுரங்காபாத்
மிலிந்த கல்லூரி நடத்தும்
மராத்தி நாடகம்.
திங்கள் 15.10.1956
காலை 8 – 11 சொற்பொழிவு
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்
இரவு 8 – 10 ஒளிவிளக்கக் கண்காட்சி
*
அக்டோபர் 14, 1956:
மக்கள் அதிகாலையில் எழுந்து தீக்ஷா பூமி நோக்கி ஊர் வலமாகச்சென்றனர்; ஊர்வலத்தில் கோஷங்களை முழங்கிய வண்ணம் சென்றனர். 2 முதல் 25 லட்சம் மக்கள் குழுமியிருந்த னர். காலை 7 மணிக்குள் பந்தலில் பாதி நிரம்பி இருந்தது. இந்த வைபவத்தை நடத்தும் பொறுப்பு நாகபுரி மற்றும் பம்பாய் ‘சமதா சைனிக் டள்’ளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியின்போது 10 முதல் 11 காவல் துறையினர்தான் பாதுகாப்புக்கு வந்திருந்தனர். பத்திரிக்கையாளர்களுக்கு விசேட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பத்திரிக்கை நிருபர்கள் வந்திருந்தனர். மதம் மாறும் நோக்கத்துடன் வந்திருந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்ததால் அனுமதி சீட்டுகள் அனைத்தும் தீர்ந்து விட்டன. எனவே அனுமதியின்றி எல்லோருமே இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொள்ளலாம் என்று அழைப்பாளர்கள் அறிவிக்கும் படியான நிலைமை ஏற்பட்டது.
மதமாற்றச் சடங்கு :
காலை 9.30 மணிக்கு மகாஸ்தவீர் பிக்கு சந்திரமணியுடன் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மதமாற்ற சடங்கு நடைபெறும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அந்த நேரத்திற்குள் சுமார் 5 லட்சம் முதல் 6 லட்சம் மக்கள் அங்கு திரண்டு வந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஏனைய பிக்குகள் பின்வருமாறு:-
(1) தெரோ பன்னாட்டிஸ், சாஞ்சி விகார், போபால்.
(2) வணக்கத்துக்குரிய பிக்கு எச்.சித்தாத்திஸ்ஸா, இலங்கை
(3) வணக்கத்திற்குரிய எம்.சௌகரத்னா, சாரநாத், காசி.
(4) பிக்கு ஜி.பிரத்னியானந்த், புத்த விகார், லட்சுமணபுரி
(5) நெர் ஷிரம்னெர், தம்மோத்ய விகார், மேற்கு வங்கம்
(6) அருட்டிரு பரம்சாந்தி
குமாரி இந்துதாய் வரலேயின் வரவேற்பு கீதத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமாயிற்று. இந்த சந்தர்ப்பத்தில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் தந்தையான ராம்ஜி மலோஜி சுபேதாருக்கு பாராட்டுரைகள் மலைபோல் குவிந்தன.
பின்னர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரும் மைசாகேபும் புத்தரின் திருவுருவச் சிலைக்கு முன்னால் கூப்பிய கரங்களுடன் நின்றனர். மகாஸ்தவீர் சந்திரமணி திரிசரணத்தையும் பஞ்ச சீலத்தையும் பாலிமொழியில் பின்கண்டவாறு பாராயனம் செய்தனர்;
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்ம சம்புத்தாச
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்ம சம்புத்தாச
நமோ தஸ்ஸ பகவதோ அரஹதோ சம்ம சம்புத்தாச
இதன் பொருள்:
(புனிதரை, தகை சான்றவரை முற்றிலும் ஞானம் பெற்றவரைப் போற்றுவோம்!)
புத்தம் சரணம் கச்சாமி
தம்மம் சரணம் கச்சாமி
சங்கம் சரணம் கச்சாமி
துதியம்பி புத்தம் சரணம் கச்சாமி
துதியம்பி தம்மம் சரணம் கச்சாமி
துதியம்பி சங்கம் சரணம் கச்சாமி
ததியம்பி புத்தம் சரணம் கச்சாமி
ததியம்பி தம்மம் சரணம் கச்சாமி
ததியம்பி சங்கம் சரணம் கச்சாமி
இதன் பொருள்
நான் புத்தரைப் பின்பற்றுகிறேன்
நாம் தம்மத்தைப் பின்பற்றுகிறேன்
நான் சங்கத்தைப் பின்பற்றுகிறேன்
இரண்டாம் தடவை நான் புத்தரைப் பின்பற்றுகிறேன்
இரண்டாம் தடவை நான் தம்மத்தைப் பின்பற்றுகிறேன்
இரண்டாம் தடவை நான் சங்கத்தைப் பின்பற்றுகிறேன்
மூன்றாம் தடவை நான் புத்தரைப் பின்பற்றுகிறேன்
மூன்றாம் தடவை நான் தம்மத்தைப் பின்பற்றுகிறேன்
மூன்றாம் தடவை நான் சங்கத்தைப் பின்பற்றுகிறேன்)
பஞ்சசீலம்:
1.பானாதிபாதா வெரமணீ – சிக்காபதம் சமாதியாமி
2.அதின்னாதனா வெரமணீ – சிக்காபதம் சமாதியாமி
3.காமேசு மிச்சாகாரா வெரமணீ – சிக்காபதம் சமாதியாமி
4.முசாவாத வெரமணீ – சிக்காபதம் சமாதியாமி
5.சுராமெரய – மஜ்ஜா – பமாதத்தானா வெரமணீ – சிக்காபதம் சமாதியாமி
இதன் பொருள்:
- உயிர்ராசிகளைக் கொல்வதில்லை என்ற விதியைக் கடைப்பிடிக்க நான் உறுதி பூணுகிறேன்.
- வழங்கப்படாத எதையும் எடுத்துக்கொள்வதில்லை என்ற விதியைக் கடைப்பிடிக்க நான் உறுதி பூணுகிறேன்.
- பாலின ஒழுங்கீனத்தில் ஈடுபடுவதில்லை என்ற விதியைக் கடைப்பிடிக்க நான் உறுதி பூணுகிறேன்.
- பொய் பேசுவதில்லை என்ற உறுதியைக் கடைப்பிடிக்க நான் உறுதி பூணுகிறேன்.
- மயக்க வெறியூட்டும் குடிப்பழக்கத்திலும் மருந்து பழக் கத்திலும் ஈடுபடுவதில்லை என்று நான் உறுதி பூணுகிறேன்.
இவ்வாறு மகாஸ்தவீர் சந்திரமணி தீக்சை அளித்து டாக்டர் பாபாசாகெபையும் மைசாகேப் அம்பேத்கரையும் புத்த மதத்தில் இணைத்தார்.
இதனைத் தொடர்ந்து டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புத்தர் சிலைக்கு மாலை அணிவித்து அதன் முன்னால் மூன்று முறை தலை வணங்கினார்.
ஏனையோரை மதம் மற்றும் சடங்கு காலை 10 மணிக்குத் தொடங்கிற்று. இந்து மதத்தைத் துறந்து புத்தமதத்தைத் தழுவ விருப்பமுள்ளவர்கள் எழுந்து நின்று கைகளைக் கட்டிக் கொண்டு தன்னைத் தொடர்ந்து திரிசரணையும் பஞ்சசீலத்தை யும் ஒப்புவிக்க வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பிரகடனம் செய்தார். இந்த பிரகடனத்தைத் தொடர்ந்து கூட்டம் முழுவதும் எழுந்து நின்றது. டாக்டர் பி.ஆர்.அம்பேத் கர் அவர்களுக்கு தீக்சை அளித்து அவர்களைப் புத்த மதத்தில் இணைத்துக் கொண்டார்.
இந்த சடங்கின் ஒரு பகுதியாக கூட்டத்தினரை 22 சூளுரைகளை எடுத்துக் கொள்ளச் செய்தார். அவை வருமாறு:
- பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.
- ராமன், கிருஷ்ணனிடம் எனக்கு நம்பிக்கை இல்லை; அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.
- கௌரி, கணபதி மற்றும் இதர இந்து மத தெய்வங் களிடமும் பெண் தெய்வங்களிடமும் எனக்கு நம்பிக்கை இல்லை, அவர்களைத் தொழுது வழிபடவும் மாட்டேன்.
- கடவுள்களின் அவதாரத் தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.
- மகான் புத்தர், விஷ்ணுவின் அவதாரம் என்று நான் நம்பவில்லை, நம்பவும் மாட்டேன்.
- நான் ‘சிராத்தம்’ செய்யமாட்டேன். ‘பிண்ட தானமும்’ தரமாட்டேன்.
- புத்தரின் சித்தாந்தங்களுக்கும், போதனைகளுக்கும் மாறான முறையில் எவ்வகையிலும் செயல்படமாட்டேன்.
- பிராமணர்களைக்கொண்டு எந்த சமய சடங்கு களையும் செய்யமாட்டேன்.
- மனிதகுலத்தின் சமத்துவத்தில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.
- சமத்துவத்தை நிலைநாட்டப் பாடுபடுவேன்.
- புத்தர் போதித்த எண்வழி மார்க்கத்தைப் பின்பற்றுவேன்.
- புத்தர் வகுத்துத் தந்த ‘பத்து பரமிதாக்களை’ நான் பின்பற்றுவேன்.
- அனைத்து ஜீவராசிகளிடமும் பரிவோடும் பாசத் தோடும் நடந்து கொள்வேன். அவற்றை அன்போடு பேணி வளர்ப்பேன்.
- நான் திருடமாட்டேன்.
- நான் பொய் சொல்லமாட்டேன்.
- சிற்றின்ப பாவங்களை செய்ய மாட்டேன்.
- மது அருந்த மாட்டேன்.
- பிரத்னியா (விவேகம்) சீல் (சீலம்) காருண்யா (கருணை) ஆகிய மூன்று புத்தமதக் கோட்பாடுகளுக்கு இணங்க என் வாழ்க்கையை நடத்த நான் முயல்வேன்.
- மனித குலத்தின் வாழ்வுக்கும் வளத்துக்கும் பாதகம் விளைவிக்கும், மனிதர்களைப் பாகுபடுத்திப் பார்த்து அவர்களைக் கீழ்த்தரமாக நடத்தும் எனது பழைய இந்து மதத்தை விட்டு புத்த மதத்தை இப்போது தழுவுகிறேன்.
- புத்த தம்மம் சத்தம்மம் என்று உறுதியாக நம்புகிறேன்.
- நான் ஒரு புதிய வாழ்க்கையில் அடியெடுத்து வைப்பதாகக் கருதுகிறேன்.
- புத்தரின் போதனைகளின்படி இனி நடப்பதென இப்போது முதல் உறுதி மேற்கொள்கிறேன்.
*
இறுதியில் அகில இந்திய மகாபோதி கழகத்தின் பொதுச் செயலாளரான திரு.வாலி சின்ஹா டாக்டர் பி.ஆர்.அம்பேத் கருக்கு புத்தர் சிலையைப் பரிசளித்தார்.
புத்த மதத்தைத் தழுவிய பிரமுகர்கள் வருமாறு:- ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளரான ராஜபாவ் கோப்ராகாடே என்ற பார்; பி.டி; ஷெட்யுல்டு ஜாதிகள் சம்மேளனத்தின் பம்பாய் மாநிலத் தலைவரான பி.கே. என்ற தா சாகேப் கெய்க்வாட், பம்பாய் பிராந்திய ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.டி.பண்டாரே, சாந்தாபாய் தானி, சி.என்.மொகித்தே, ஷெட்யூல்டு ஜாதிகள் சம்மேளனத்தின் குஜராத் கிளையின் தலைவரான ஜி.டி.பார்மர், கே.கே.பார்மர், டி.ஜி. ஜாதவ், சரோஜினி ஜாதவ், வி.ஆர்.ரான்னபஸ் புனா; எம்.எம்.சசலேகர், ஹரிதாஸ் அவாலே, சதானந் ஃபுல்ஜெலே, அஹோத்தே, வி.எஸ்.பாகரே, எஸ்.ஏ.உப்ஷியாம், பி.எஸ்.மோரே, பி.எச்.வரலே, தோந்திராம், பகரே, யஷ்வந்தராவ் அம்பேத்கர், (டாக்டர் பி.ஆர்.அம்பேத் கரின் புதல்வர்) முகுந்தராவ் அம்பேத்கர், பி.சி.காம்ளே முதலியோர்.
நீதிபதி பவானி சங்கர் நியோகி பௌத்த சமிதியின் செயலாளரான வி.எம்.குல்கர்னி, ஔரங்காபாத் மிலிந்த் கல்லூரியின் முதல்வரான திரு.எம்.பி.சிட்னிஸ், திரு.பி.எஸ்.கபீர் ஆகியோரும் புத்த மதத்துக்கு மாறினர்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்குப் பாராட்டுத் தெரிவித்து வந்திருந்த பல்வேறு கடிதங்கள் மதமாற்ற சடங்கு முடிவடைந்த தும் வாசிக்கப்பட்டன. இந்தக் கடிதங்களை எழுதியவர்களில் பின்வருவோரும் அடங்குவர். பர்மாவின் பிரதம மந்திரி யு.பி.ஸ்வே, பர்மாவின் முன்னாள் பிரதமர் யு – நு, கொழும்புவைச் சேர்ந்த எச்.டபிள்யூ. அமர் சூர்யா, கல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் அரவிந்த பரவா, ரங்கூனைச் சேர்ந்த மஹதெரோ யு – பன்னாலோக் முதலியோர். இந்த நிகழ்ச்சி காலை 11 மணிக்கு முடிவடைந்தது.
அக்டோபர் 14 ஆம் தேதி மாலை ஔரங்காபாத் மிலிந்த் கல்லூரி மாணவர்கள் ‘யுக் யாத்ரா’ என்ற நாடகத்தை அரங் கேற்றினர்.
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தாம் மதம் மாறியது சம்பந்தமான சொற்பொழிவை 1956 அக்டோபர் 15 ஆம் தேதி நிகழ்த்தினார்.
அவர் கூறியதாவது:
எனது பௌத்த சகோதரர்களே, எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்திருப்பவர்களே, நேற்றும், இன்று காலையும் மதமாற்ற சடங்கு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்வது சிந்தனையாளர்களுக்கு அநேகமாகக் கடினமாக இருக்கக் கூடும். அவர்களது அபிப்பிராயத்திலும் எனது அபிப்பிராயத்திலும் நேற்று நடைபெற்ற மதமாற்ற நிகழ்ச்சி இன்றும், இன்று நடைபெற்ற நிகழ்ச்சி நேற்றும் நடைபெற்றிருக்க வேண்டும். இந்தப் பொறுப்பை நாங்கள் ஏன் ஏற்றுக் கொண்டோம். இதற்கு அவசியம் என்ன, இதன் விளைவு யாது என்பதைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது. இதைப் புரிந்து கொண்டால்தான் எங்கள் பணியின் அடித்தளம், அஸ்திவாரம் வலுவாக இருக்கும். இந்தப் புரிதல் நிகழ்ச்சி ஏற்கனவே நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால் சில விஷயங்கள் நிச்சய மற்று இருப்பதால் இவ்வாறு இயல்பாகவே நடைபெறுகிறது. இந்த சமயச் சடங்கைப் பொறுத்தவரையில் என்ன நடைபெற வேண்டுமோ அது நடைபெற்றுள்ளது. எனினும் நாட்கள் மாறிவிட்டதால் எதுவும் கெட்டு போய் விடவில்லை.
பலர் பின்வரும் கேள்வியை என்னிடம் கேட்டனர்: இந்த வைபவம் நடைபெறுவதற்கு நாகபுரியை நீங்கள் ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்? இந்த விழா ஏன் வேறு ஏதேனும் ஊரில் நடைபெறவில்லை? ஆர்.எஸ்.எஸ்.ஸின் (ராஷ்ட்ரிய சுவயம் சேவக் சங்) ஒரு பெரிய பட்டாளம் நாகபுரியில் இருப்பதால் அவர்களைத் திக்கு முக்காடச் செய்யவே இந்த விழா இந்நகரில் ஏற்பாடு செய்யப்பட்டதாக சிலர் கூறுகின்றனர் இது உண்மை அல்ல. இந்தக் காரணத்துக்காக இந்த விழா நாகபுரியில் நடைபெறவில்லை. எங்கள் பணி பிரம்மாண்டமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் அதற்கு மிக முக்கிய மானது. எனது மூக்கை சொரிந்து கொண்டு சகுனம் சரியாக இல்லை என்று கூற எனக்கு நேரம் கிடையாது.
இந்த இடத்தைத் தெரிந்தெடுத்தற்கான காரணம் வேறு. இந்தியாவில் புத்த மதத்தைப் பற்றிப் பிரசாரம் செய்தவர்கள் நாகா மக்களே என்பதை பௌத்த வரலாற்றைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். நாகர்கள் ஆரியர்களின் உக்கிரமான பகைவர்கள்; ஆரியர்களுக்கும் ஆரியல்லாதவர்களுக்கும் இடையே பல உக்கிரமான போர்கள் நடைபெற்றுள்ளன. நாகர்களை ஆரியர்கள் சுட்டெரித்த நிகழ்ச்சிகளை புராணங்களில் படிக்கலாம். அகஸ்தியரால் ஒரே ஒரு நாகரை மட்டும் காப்பாற்ற முடிந்தது. அவரது வழித் தோன்றியவர்களே நாங்கள்.
மிகக் குரூரமான அடக்குமுறை, ஒடுக்குமுறையைச் சகித்துக்கொண்டு வந்த நாகா மக்களுக்கு இதிலிருந்து, மீள ஒரு மாமனிதர் தேவைப்பட்டார். அந்த மாமனிதரை அவர்கள் கௌதம புத்தரில் கண்டனர். எனவே, அவர்கள் மகான் புத்தரின் போதனைகளை இந்தியா முழுவதிலும் பரப்பினர். அப்படிப்பட்ட நாகர்கள் நாங்கள். நாகா மக்களின் பிரதான உறைவிடம் நாகபுரியிலும் அதனைத் சுற்றிலுமே அமைந்திருந்தது. அதனால் தான் இந்த நகரம் நாகபுரி என்று அழைக்கப்படுகிறது. நாகர்களின் நகரம் என்று இதற்குப் பொருள். இந்த இடத்திலிருந்து சுமார் 27 மைல் தொலைவில் ஒரு குன்று இருக்கிறது. நாகர்ஜன் குன்று என்பது அதன் பெயர். இதற்கு அருகில் ஓடும் நதியின் பெயர் நாகா நதி என்பதாகும். இங்கு வசிக்கும் மக்கள் காரணமாகவே இந்த நதி இப் பெயரைப் பெற்றது. நாகா மக்கள் வாழும் பிரதேசத்தின் வழியாகப் பிரவகித்துச் செல்லும் நதி நாகா நதியாகும்.
இந்த இடத்தை அதாவது நாகபுரியைத் தேர்ந்தெடுத்ததற் கான பிரதான காரணம் இதுதான். இதைத் தவிர வேறு எவரை யும் சினம் கொள்ளச் செய்யும் நோக்கம் ஏதும் எனக்கு அறவே இல்லை. அதுவும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சினை என் மனதில் துளிகூட இடம் பெறவில்லை. இந்த ரீதியில் எவரும் இதனை அர்த்தப் படுத்திக் கொள்ளக்கூடாது.
எதிர்த்தரப்பினருக்கு இது விஷயத்தில் வேறு காரணங்கள் இருக்கக் கூடும். எதிர்ப்பைக் காட்டுவதற்காக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். இந்தப் பணியைத் தொடங்கியதற்காகப் பலர் என்னை குறை கூறியுள்ளனர். பத்திரிகைகளும் என்னைத் தாக்கி எழுதியுள்ளன. சிலருடைய விமர்சனம் மிகவும் கடுமையாக உள்ளது. பரிதாபத்துக்குரிய தீண்டப்படாத என் சகோதரர்களை நான் தவறான பாதையில் இட்டுச் செல்லுகிறேன் என்பது அவர்களது கருத்து. இன்று தீண்டப்படாதவர்களாக உள்ளவர்கள் என்றென்றும் தீண்டப்படாதவர்களாக இருப்பார்கள் என்றும் தற்போது பெற்றுள்ள உரிமைகளை அவர்கள் இழப்பார்கள் என்றும் கூறி அவர்கள் எங்கள் மக்களை தவறான பாதையில் இட்டுச் சென்று வருகின்றனர்; வழக்கமான பாதையையே பின்பற்றுங்கள் என்று எங்களில் கல்வியறிவில்லாதவர்களுக்குப் போதனை செய்து வருகின்றனர். இளைஞர்கள், முதியவர்களில் சிலரை வழி தவறச் செய்யக் கூடும். மக்களின் உள்ளங்களில் ஏதேனும் ஐயங்கள் ஏற்படு மானால் அந்த ஐயங்களை அகற்றுவது நமது கடமையாகும். இவ்வாறு அவர்களது ஐயங்களை அகற்றுவது நமது இயக்கத்தின் அடித்தளத்தை, அஸ்திவாரத்தைப் பலப்படுத்தும், வலுப்படுத்தும்.
இறைச்சி உண்ணக்கூடாது என்ற ஓர் இயக்கம் கடந்த காலத்தில் நம் மத்தியில் இருந்து வந்தது. தீண்டத்தக்கவர்கள் இதனைத் தங்கள் தலையில் விழக்கூடிய ஓர் இடிபோல் கருதினர். உயிரோடிருக்கும் எருமையின் பாலை அவர்கள் குடிக்கலாம். எருமை இறந்த பிறகு அதன் உடலை நம் தோள்களில் நாம் சுமந்து செல்ல வேண்டும் என்பது விசித்திரமான பழக்கம் அல்லவா. இறந்து போன உங்கள் தாயை சுமந்து செல்ல எங்களை ஏன் அனுமதிக்க மறுக்கிறீர்கள் என்று அவர்களை நாம் கேட்கிறோம். இறந்துபோன எருமை அவர்கள் நமக்குத் தருவது போல் காலமான தங்கள் தாயை அவர்கள் நமக்குத் தர வேண்டும். சிறிது காலத்திற்கு முன்னர் யாரோ ஒருவர் ‘கேசரி’யில் பின்வருமாறு எழுதினார்; சில கிராமங்களில் ஆண்டுதோறும் 50 கால்நடைகள் இறக்கின்றன; அவற்றின் இறைச்சி ஒருபுறமிருக்க அவற்றின் தோல், கொம்புகள், எலும்புகள், வால்கள் முதலியவற்றின் விற்பனையிலிருந்து 500 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். இதனை அவர்கள் இழக்கப் போகிறார்களா? உண்மையில் இத்தகை பிரச்சாரத்துக்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் என்ன? இத்தகைய பிரச்சாரத் துக்கு நமது சாகேப் (தலைவர்) பதிலளிக்கவில்லை என்றால் அவர் வேறு என்னதான் செய்யப் போகிறார் என்று நமது மக்கள் கேட்கின்றனர்.
ஒரு சமயம் ஒரு கூட்டத்தில் பேசுவதற்காக சங்கம்னருக்குச் சென்றிருந்தேன். அங்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அச்சமயம் ‘கேசரி’ பத்திரிகையிலிருந்து ஒரு நிருபர் அங்கு வந்திருந்தார். அவர் எனக்கு ஒரு துண்டு காகிதம் அனுப்பி அதில் பின்வருமாறு கேட்டிருந்தார்: இறந்து போன பிராணிகளைச் சுமந்து செல்ல வேண்டாம் என்று உங்கள் மக்களுக்கு நீங்கள் ஆலோசனை கூறி வருகிறீர்கள். பாவம், அவர்கள் எவ்வளவு பரிதாபத்துக்குரியவர்கள்! அவர்களது பெண்களுக்கு உடுக்க சேலை இல்லை; அணிய ரவிக்கை இல்லை, உண்ண உணவில்லை, வீடு வாசல் நிலம்புலம் இல்லை. இவ்வாறு இருக்கும் போது தோல், இறைச்சி, சாணம் முதலியவற்றிலிருந்து வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைப்பதை விட்டு விட்டு வரும்படி நீங்கள் அவர்களுக்குப் பரிந்துரைக்கிறீர்கள். இது உங்கள் மக்களுக்குப் பெரும் இழப்பு இல்லையா?’’
நான் கேட்டேன்: ‘’உங்கள் கேள்விக்கு நான் எங்கு பதிலளிக்க வேண்டும்? இங்கே இந்த நடைக்கூடத்தில் பதிலளிக்கட்டுமா, அல்லது கூட்டத்தில் பதிலளிக்ககட்டுமா? மக்கள் மத்தியில் பதிலளிப்பதுதான் சாலச் சிறந்தது’’. அந்த நபரிடம் நான் மேலும் கேட்டேன்: ‘’இது மட்டும்தானா அல்லது வேறு ஏதேனும் கேட்க நீங்கள் விரும்புகிறீர்களா?’’ அவர் சொன்னார்: ‘’இதற்குப் பதிலளித்தால் போதும் அவ்வளவு தான்’’. அந்த நபரை நான் கேட்டேன். ‘’உங்களுக்கு எத்தனை குழந்தைகள்? நீங்கள் எத்தனை பேர் இருக்கிறீர்கள்?’’ அவர் கூறினார்: ‘’எனக்கு ஐந்து குழந்தைகள் இருக்கிறார்கள்’’. நான் சொன்னேன்: அப்படியானால் உங்கள் குடும்பம் பெரிது. எனவே நீங்களும் உங்கள் உறவினர்களும் கிராமத்தில் இறந்து போன எல்லா விலங்குகளையும் சுமந்து சென்று 500 ரூபாய் சம்பாதிக்கலாம் இல்லையா? இதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தோடு வருடம் 500 ரூபாய் வருமானம் கிடைக்க நான் ஏற்பாடு செய்கிறேன். என்னுடைய மக்களுக்கு உணவு, உடை, உறைவிடம் கிடைக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இந்த அனுகூலத்தைப் பயன்படுத்திக் கொள்ளக் கூடாது? ஏன் இதை நீங்கள் செய்யக்கூடாது? இதனை நாம் செய்தால் நாம் பயனடைவோம். இதனை நீங்கள் செய்தால் இது உங்களுக்கு அனுகூலமாக இருக்காதா? செத்த பிராணிகளை சுமந்து செல்லுங்கள்’’ என்று கூறினேன்.
நேற்று ஒரு பிராமண இளைஞன் என்னிடம் வந்தான்; அவன் கேட்டான்; ‘நாடாளுமன்றத்திலும் மாகாண சட்ட மன்றங்களிலும் உங்களுக்கு தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள் ளன. அவற்றை ஏன் துறக்கிறீர்கள்?’ நான் சொன்னேன்: ‘நீ ஒ மஹராசி நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் உள்ள இடங்களை நிரப்புகிறீர்கள். பணித்துறைகளிலுள்ள காலி இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்த இடங்களுக்கு எத்தனை எத்தனையோ, பிராமணர்களும் ஏனையோரும் விண்ணப்பித்து வருகிறார்கள். பணித்துறைகளில் நடப்பது போல் பிராமணர்களாகிய நீங்கள் மஹர்களாகி இந்த ஒதுக்கப்பட்ட இடங்களை ஏன் நிரப்பக்கூடாது?’’.
நாங்கள் அடைந்துள்ள இழப்புக்காக நீங்கள் ஏன் அழுகிறீர்கள் என்பது தான் அவர்களிடம் நான் கேட்கும் கேள்வி. மனித ஜீவன்களுக்கு அருமையிலும் அருமையானது விலைமதிப்பற்ற சுயமரியாதையே தவிர பொருளாதார ஆதாயமோ அனுகூலமோ அல்ல. நற்பண்பும் நற்குணமும் படைத்த ஒரு பெண்மணி ஒழுக்கக்கேடால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நன்கு அறிவார். எங்கள் பம்பாயில் விலைமாதர்கள் வசிக்கும் ஒரு வட்டாரம் உள்ளது. இங்குள்ள பெண்கள் காலை 8 மணிக்கு எழுந்திருக்கிறார்கள்; அருகிலுள்ள உணவு விடுதியில் காலை சிற்றுண்டி கொண்டு வரும்படி பணிக்கிறாக்£ள் (பெண்கள் பேசும் குரலில் இங்கு டாக்டர் அம்பேத்கர் பேசுகிறார்) ‘’ஓ சுலைமான் ஒரு தட்டுக் கொத்துக் கறியும் (கீமா) ரொட்டியும் கொண்டுவா. அவ்வாறே சுலைமான் தேநீர், கேக்கோடு கொத்துக்கறியைக் கொண்டு வருகிறார். ஆனால், என் தாழ்த்தப்பட்ட சகோதரிகளுக்குச் சாதாரண ரொட்டியும் சட்னியும் கூடக் கிடைப்பதில்லை. அப்படியிருந்தும் அவர்கள் அன்பும் பண்புமிக்க விழுமிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.
நாங்கள் தன்மானத்துக்காகவும் சுயமரியாதைக்காகவும் போராடி வருகிறோம். மனிதனை முழுநிறைவான நிலைக்கு இட்டுச் செல்ல நாங்கள் தயாராகி வருகிறோம். அதன் பொருட்டு எத்தகைய தியாகமும் செய்ய சித்தமாக இருக்கி« றாம். இந்தப் பத்திரிகையாளர்கள் (அவர்களைச் சுட்டிக்காட்டி, கடந்த நாற்பது ஆண்டுகளாக என்னை அதலகுதலப்படுத்தி வருகிறார்கள். இன்றைய நாள் வரை அவர்கள் என்னைப் பற்றி எவ்வளவு இழித்தும் பழித்தும் பேசி வருகிறார்கள் தெரியுமா! இப்போதாவது இதைப்பற்றிச் சிந்திக்கும் படி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்; இந்தச் சிறுபிள்ளைத்தனத்தைக் கைவிட்டு விவேகத்துடன் நடந்து கொள்ளும்படி அவர்களை வேண்டிக் கொள்கிறேன்.
புத்த மதத்துக்கு மாறிய பிறகும் கூட எனக்குரிய அரசியல் உரிமைகளை நான் பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. (அம்பேத்கர் வாழ்க என்று இடிமுழக்கம் போன்ற கோஷங்கள் ஒலிக்கின்றன). என் மரணத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை என்னால் கூற இயலாது. தற்போதைய நிலைமையில் நாம் அதிகம் போராட வேண்டும். பௌத்தத் தைத் தழுவியதால் சிரமங்கள் இருக்கவே செய்யும். அவற்றை எவ்வாறு தவிர்க்க வேண்டும், எத்தகைய முயற்சிகளையும், வாதங்களையும் நாம் மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நான் முற்றிலும் சிந்தித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனது பையில் நிறைய தீர்வுகள் இருக்கின்றன. அவை என்ன என்பதை நான் நன்கு அறிவேன். நான் பெற்ற இந்த உரிமைகள் மக்களுக்காகப் பெற்றவையாகும் இந்த உரிமைகள் பெற்ற ஒருவர் அவற்றை நிச்சயம் பாதுகாக்கவே செய்வார். இந்த உரிமைகளையும் வசதிகளையும் பெற்றவனாக நான் இருந்தால், அவற்றை மீண்டும் பெறும் நம்பிக்கை எனக்கு உண்டு. ஆதலால், இப்போது நீங்கள் என் மீது தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும். எதிர்ப்பிரசாரத்தில் அணுவளவும் உண்மை இல்லை.
ஒரு விஷயம் குறித்து நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் பரந்த அளவில் விவாதம் நடைபெற்று வருகிறது. ஆனால். நான் ஏன் புத்த மதத்தைத் தழுவினேன் என்று எவருமே என்னிடம் கேட்கவில்லை. வேறு மதத்தைத் தழுவாமல் இந்த மதத்தை மட்டும் நான் ஏன் தழுவினேன்? எந்த மதமாற்ற இயக்கத்திலும் இது மிக முக்கியமான அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது எந்த மதத்துக்கு மாறவேண்டும், அதனை ஏன் தழுவ வேண்டும் என்பதை அடிப்படையான கேள்வியாக எடுத்துக்கொள்ள வேண்டும். 1935 இல் இயோலில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இந்து மதத்தை நிராகரிக்கும், புறக்கணிக்கும் இயக்கத்தை நாங்கள் தொடங்கினோம். நீண்ட நாட்களுக்கு முன்பே நான் ஒரு பிரதிக்கினை எடுத்திருந்தேன். நான் ஓர் இந்துவாகப் பிறந்தாலும் ஓர் இந்துவாகச் சாகமாட்டேன் என்பது தான் அந்தப் பிரதிக்கினை. அதனை நான் நேற்று நிறைவேற்றிக் காட்டினேன். இதற்காக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். மிகவும் இரும்பூதெய்துகிறேன். நரகத்திலிருந்து விடுபட்டதாக உணர்கிறேன். கண்ணை மூடிக் கொண்டு என்னைப் பின்பற்றுபவர்களை, பௌத்தத்தைத் தழுவ விரும்புபவர்களை நான் விரும்பவில்லை. பௌத்தத்தைத் தழுவ விரும்புபவர்கள் நன்கு தெரிந்து, புரிந்து, உணர்ந்து அதனை ஏற்க வேண்டும். அவர்களது மனச்சான்று அந்த மதத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மனித குலம் முன்னேறுவதற்கு மதம் முற்றிலும் இன்றியமையாதது. காரல் மார்க்ஸைப் படித்த பிறகு சமய மறுப்பாளர் குழு ஒன்று உருவாயிற்று என்பதை நான் அறிவேன். சமயம், மதம் பயனற்றது, வீணானது என்பது அவர்களது கருத்து. அவர்கள் மதத்துக்கு முக்கியத்துவம் தருவதில்லை அதனை மதிப்பதில்லை. காலையில் அவர்கள் காலையுணவு உண்பார்கள். அதில் ரொட்டி, பாலேடு, வெண்ணெய், கோழி இறைச்சி முதலியவை இருக்கும்; பின்னர் மதியம் முழுச் சாப்பாடு, ஆழ்த்த தூக்கம்; அடுத்துத் திரைப்படங்கள் பார்த்தல், இத்யாதி. இதுதான் அவர்களது வாழ்க்கைக் கோட்பாடு. இவைதான் நடைமுறைத் திட்டம். என்னுடைய கருத்து – என் தந்தை ஏழையிலும் ஏழை; இத்தகைய உயர் இன்ப வாழ்க்கையை நான் கனவிலும் எண்ணிப் பார்க்க முடியாது. என்னுடைய வாழ்க்கை போன்ற மிகவும் சிரம வாழ்க்கையை எவரும் ஒருபோதும் வாழ்ந்திருக்க முடியாது. எனவே சுகபோகங்கள் இல்லை என்றால் ஒரு மனிதனுடைய வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக, மிகுந்த இன்னல் நிறைந்ததாக இருக்கும் என்ற உணர்வு எனக்கு இருந்தது. பொருளாதார உயர்வுக்கான, மேம்பாட்டுக்கான இயக்கம் எவ்வளவு அவசியம் என்பது எனக்குத் தெரியும். அத்தகைய இயக்கத்துக்கு நான் எதிரி அல்ல. மனிதன் பொருளாதார ரீதியில் முன்னேற வேண்டும்.
ஆனால், இந்த விஷயத்தில் ஒரு முக்கியமான தனித் தன்மையைக் காண்கிறேன். எருமைக்கும் காளைக்கும் மனிதனுக்கும் இடையே வேறுபாடு இருக்கிறது. காளைக்கும் எருதுக்கும் தினமும் தீவனம் தேவைப்படுகிறது. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால் இவை இரண்டுக்கும் இடையே ஒரு வேறுபாடு இருக்கிறது. எருமைக்கும் காளைக்கும் மனம் என்று ஒன்று இல்லை; மனிதனுக்கு உடலும் அத்துடன் மனமும் இருக்கிறது. எனவே இவை இரண்டைப் பற்றியும் அக்கறை கொள்ள வேண்டும். மனம் வளர்க்கப்பட வேண்டும். அது பண்படுத்தப்பட வேண்டும். அது பண்படுத்தப்படுவதற்கு உள்ளாக வேண்டும். உணவைத் தவிர, மனிதனுக்கும் பண்பட்ட மனதுக்கும் இடையே எந்த ஒட்டும் உறவும் இல்லை என்று வாதிக்கும் நாட்டுடனோ, மக்களுடனோ எத்தகைய சம்பந்தமும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. ஏனைய மக்களுடன் மனிதன் உறவு வைத்துக் கொள்ள வேண்டுமென்றால் ஆரோக்கியமான உடலும் அதே போன்று ஆரோக்கியமான பண்பட்ட மனமும் இருப்பது அவசியம். இல்லையென்றால் மனித குலம் முன்னேறிவிட்டதாகக் கூற முடியாது.
மனிதனது உடல் அல்லது உள்ளம் அதாவது மனம் ஏன் அவல நிலையில் உள்ளது? அவனது உடல் நோய்வாய்ப் பட்டதாக இருப்பதோ அல்லது அவனது மனம் உற்சாகமற்று இருப்பதோ இதற்கான காரணங்களாகும். மனதில் உற்சாகம் இல்லையென்றால் முன்னேற்றம் சாத்தியமில்லை. அவனுக்கு இந்த உற்சாகம் ஏன் இருப்பதில்லை? முன்னேறுவதற்கு எத்தகைய வாய்ப்பும் இல்லாதிருப்பதோ அல்லது அவனுக்கு நம்பிக்கை இல்லாதிருப்பதோ முதல் காரணமாகும். இவ்வாறிருக்கும்போது அவன் எவ்வாறு உற்சாகமானவனாக இருக்க முடியும்? அவன் சீர்குலைந்தவனாக இருக்கிறான். தனது உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும்போது அவன் உற்சாகமடைகிறான். இல்லை என்றால் என்ன நடக்கும்? ஒரு பள்ளிக் கூடத்தில் ஆசிரியர் பின்வருமாறு கூப்பாடு போடுகிறார்: ‘ஏய், யார் இவன்? இவன் ஒரு மஹர். இந்தக் கேடுகெட்ட மஹர் பரீட்சையில் முதல் வகுப்பு பெறுவானா? அவன் ஏன் முதல் வகுப்பு பெற விரும்புகிறான்? அவன் மூன்றாம் வகுப்பு பெற்றால் போதாதா? முதல் வகுப்பு பெறுவது பிராமணனுக்குள்ள தகுதி’. இப்போதுள்ள சந்தர்ப்ப சூழ்நிலைமைகளில் இந்தப் பையன் எவ்வாறு உற்சாகம் பெறுவான்? எவ்வாறு முன்னேறுவான்? உற்சாகத்துக்கான ஆணி வேர் மனதில் பொதிந்துள்ளது, எவனது உள்ளமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கின்றனவோ, எவன் தைரியசாலியாக இருக்கிறானோ, துன்ப துயரங்கள் மலை போல் அலைமோதினாலும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும் என்று எவன் திட நம்பிக்கை கொண்டிருக்கிறானோ அவனிடம்தான் உற்சாகம் கரை புரண்டோடும்; அவன் தான் அருஞ்செயல் புரிவான். இத்தகைய விசித்திரமான சித்தாந்தம் இந்து மதத்தில் நிலை கொண்டுள்ளது; இது ஒருபோதும் உற்சாகத்தைத் தோற்றுவிக்காது. சந்தர்ப்ப சூழ்நிலைமைகள்தான் மனிதனை உற்சாக மற்றவனாக ஆக்குகின்றன என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறுதிசெய்யப்பட்டு வந்திருக்கிறது. இத்தகையவர்கள் தோற்றுவிக்கப்படும்போது அவர்கள் அதிகப்பட்சம் எழுத்தர் பணியை மேற்கொண்டு தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர். வேறு என்ன நடைபெறும்? இந்த எழுத்தர்களைப் பாதுகாப்பதற்கு ஒரு பெரிய எழுத்தர் தேவைப்படுகிறார்.
மனிதனது ஆர்வத்துக்கு, உற்சாகத்துக்கு அடித்தளமாக இருப்பது மனம். ஆலைகளின் உரிமையாளர்களைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். அவர்கள் தங்கள் ஆலைகளில் நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். அங்கு நடைபெற வேண்டிய பணிகளை அவர்கள் தங்கள் நிர்வாகிகளைக் கொண்டு செய்து கொள்கிறார்கள். ஆலைகளின் உரிமையாளர்கள் கெட்ட பழக்க வழக்கங்களில் ஈடுபடுகிறார்கள். அவர்களது மனங்கள் பண்பட்ட முறையில் வளர்க்கப்படுவதில்லை. எங்கள் மனங்களில் உணர்ச்சி ஆர்வத்தைத் தோற்றுவிக்க நாங்கள் ஓர் இயக்கத்தைத் தொடங்கினோம். அப்போதுதான் எங்கள் படிப்பு ஆரம்பமாகும், இடுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு தான் நான் என் படிப்பைத் தொடங்கினேன். பள்ளிக் கூடத்தில் குடிப்பதற்குத் தண்ணீர் கூட எனக்கு கிடைக்கவில்லை. பள்ளிக் கூடத்தில் தண்ணீர் இல்லாமலேயே பல நாட்களைக் கழித்தேன். பம்பாயில் எல்பின்ஸ்டன் கல்லூரியில் கூட இதே நிலைமைதான் நிலவியது. சூழல் இவ்வாறு இருக்குமானால் எத்தகைய நிலைமை தோற்றுவிக்கப்படும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? எழுத்தர்கள்தான் உருவாக்கப்படுவார்கள்.
டில்லி நிர்வாகக் கவுன்சிலில் நான் இடம் பெற்றிருந்தபோது லின்லித்கோ பிரபுதான் வைசிராயாக இருந்தார். அவரிடம் நான் இவ்வாறு கூறினேன்: ‘’வழக்கமான செலவினத்தோடு, முஸ்லீம்களின் கல்விக்காக நீங்கள் அலிகார் பல்கலைக்கழகத்துக்கு மூன்று லட்ச ரூபாய் செலவிடுகிறீர்கள்’’. ஆனால் நாங்கள் இந்துக்களும் அல்ல, முஸ்லீம்களும் அல்ல. எங்களுக்கு நீங்கள் ஏதேனும் செய்ய நினைத்தால் அவர்களுக்குச் செய்வதை விட ஆயிரம் மடங்கு அதிகம் செய்ய வேண்டும். அது வேண்டாம், முஸ்லீமுகளுக்குச் செய்யப்படும் அளவாவது குறைந்த பட்சம் எங்களுக்குச் செய்யுங்கள். இதற்கு லின்லித்கோ பிரபு பின்வருமாறு கூறினார். ‘நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்களோ அதை எழுதிக் கொடுங்கள்’. அவ்வாறே நான் ஓர் அறிக்கை தயாரித்தேன். அந்த அறிக்கை இன்னும் என்னிடமே உள்ளது. ஐரோப்பியர்கள் மிகவும் பரிவிரக்கம் கொண்டவர்கள். எனது யோசனையை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் எந்த நோக்கத்துக்காக செலவிட வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது. நமது சிறுமிகள் கல்வி கற்றவர்கள் அல்ல. எனவே அவர்கள் கல்வி கற்பதற்கு ஏற்பாடு செய்து தரப்படவேண்டும். அவர்களுக்கு உணவு வசதி செய்து தரவேண்டும். இதன் பொருட்டு பணம் செலவிடப்பட வேண்டும். நமது பெண்களுக்குக் கல்வி வசதி செய்து தந்து, அவர்கள் படித்தவர்களானால் பல்வேறு உணவு வகைகளைத் தயாரிப்பதற்கு என்ன வசதி இருக்கிறது? அவர்கள் கல்வி கற்பதன் இறுதிப் பலன் என்ன? அரசாங்கம் இதர துறைகளுக்குப் பணம் செலவிடுகிறது; கல்விக்கு செலவிடாமல் நிறுத்திக் கொள்கிறது. எனவே, ஒரு நாள் லின்லித்கோ பிரபுவிடம் சென்றேன்; கல்விக்காக அரசாங்கம் பணம் செலவிடுகிறது. அவரிடம் நான் பின்வருமாறு கூறினேன்; ‘’நீங்கள் கோபப்படவில்லை என்றால் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். நான் ஐம்பது பட்டதாரிகளுக்கு இணையானவன். இல்லையா?’’ இதை அவர் ஒப்புக் கொண்டார். அவரிடம் மீண்டும் கேட்டேன். ‘’இதற்கு என்ன காரணம்?’’ அவர் சொன்னார்: ‘’அந்தக் காரணம் எங்களுக்குத் தெரியாது. நான் சொன்னேன்:’’ நான் ரொம்பவும் படித் திருக்கிறேன். நான் நினைத்தால் அரச சிம்மாசனத்திலேயே உட்கார முடியும். இத்தகையவர்கள்தான் எனக்கு வேண்டும். ஏனென்றால் இங்கிருந்து ஒட்டுமொத்தமாக நமது கண்காணிப்பையும் நாம் மேற்கொள்ள முடியும். நமது மக்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், இத்தகைய கூரிய நோக்கு கொண்ட மனிதர்கள் படைக்கப்பட வேண்டும். ஒரு சாதாரண எழுத்தர் என்ன செய்ய முடியும்? நான் கூறியதை அந்தக் கணத்திலேயே லின்லித்கோ பிரபு ஏற்றுக் கொண்டார். மேற்படிப்புக்காகப் பதினாறு பேர் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டனர். சில மண் பானைகள் வானலில் பாதி வேக வைத்துச் சுடப்படுவதும், சில பானைகள் முற்றிலும் வேக வைத்து சுடப்படுவதும் உண்டல்லவா, இதே போல் அந்தப் பதினாறு பேர்களில் சிலர் பாதி வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும், சிலர் முழுவதுமாக வேக வைத்துச் சுடப்பட்டவர்களாயும் இருந்தனர். இது வேறுபட்ட விஷயம்! பின்னாளில் சி.ராஜ கோபாலாச்சாரி இந்த மேற்கல்வி திட்டத்தையே ரத்து செய்துவிட்டார்.
இந்த நாட்டில் இத்தகையதோர் நிலைமை நிலவவே செய்கிறது; இது வரவிருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்துக்கு நம்மை உற்சாக மற்றவர்களாக ஆக்கவே செய்யும். இப்படிப்பட்டதோர் நிலைமை நிலவும் வரை நமது முன்னேற்றத்தில் நமக்கு ஆர்வம் இருக்காது. இந்து மதத்தில் நாம் இருக்கும் வரை இது விஷயத்தில் நம்மால் எதுவும் செய்ய இயலாது. மனுஸ்மிருதியில் சதுர்வருணம் இடம் பெற் றுள்ளது. இந்த சதுர்வருண அமைப்பு முறை மனித குலத்தின் முன்னேற்றத்துக்கு மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. சூத்திரர்கள் குற்றேவல் பணிகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று மனு ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட வர்களுக்கு ஏன் கல்வி வேண்டும்? பிராமணன் கல்வி கற்க வேண்டும், க்ஷத்திரியன் ஆயுதமேந்த வேண்டும், வைசியன் வாணிகம் செய்ய வேண்டும், சூத்திரன் குற்றேவல் புரிய வேண்டும். இவ்வகையில் யார் பயனடைவார்கள்? பிராமணன், க்ஷத்திரியன், வைசியன் ஓரளவு பயனடைவார்கள். ஆனால் சூத்திரர்கள் விஷயம் என்ன? இந்த மூன்று வருணத்தாரைத் தவிர இதர சாதியினரிடம் உற்சாகம் இருக்குமா? இந்த சதுர்வருண அமைப்பு முறை தற்செயலானதல்ல. இது ஒரு வழக்கமல்ல; இது சமய அமைப்பு.
இந்து மதத்தில் சமத்துவத்துக்கு இடமில்லை. ஒரு சமயம் நான் திரு. காந்தியிடம் சென்றிருந்தேன். அப்போது அவர், ‘நான் சதுர்வருண அமைப்பில் நம்பிக்கை வைத்திருக்கிறேன்’’ என்று சொன்னார். நான் கேட்டேன்: ‘’உங்களைப் போன்ற மகாத்மாக்கள் ‘சதுர்வருணத்தை’ நம்புகிறீர்களா? அது சரி இந்த சதுர்வருணம் என்பது என்ன? அது எவ்வாறு அமைந்திருக்கிறது? (இப்போது டாக்டர் அம்பேத்கர் தனது உள்ளங்கையைத் தட்டையாக வைத்துக் கொண்டு விரல்களை ஒன்றன் மீது ஒன்றாக வைத்துக் காட்டினார்). சதுர்வருணம் உயரமாக இருக்கிறதா அல்லது தட்டையாக இருக்கிறதா. சதுர்வருணம் எங்கிருந்து தொடங்குகிறது, எங்கு முடிவடைகிறது? காந்திஜி இதற்கு பதிலளிக்கவில்லை. என்ன பதிலளிக்க முடியும்? எங்களைப் பாடழிவு செய்தவர்களும் இந்து மதத்தால் அழிந்தொழிய வேண்டும். இந்து மதத்தை அவசியமின்றி நான் குற்றம் சாட்டவில்லை. இந்து மதத்தால் எவரும் வாழ்வு வளம் பெற மாட்டார்கள். அந்த மதமே ஒரு சீரழிந்த மதமாகும்.
நமது நாடு ஏன் அந்நியர் ஆட்சியின் கீழ் வந்தது? 1945 வரை ஐரோப்பா போர்களில் மூழ்கிப்போயிருந்தது. எத்தனை படை வீரர்கள் கொல்லப்பட்டார்களோ அத்தனைப் படை வீரர்கள் ராணுவத்துக்குப் புதிதாகச் சேர்க்கப்பட்டனர். நாம் போரில் வெற்றி பெற்றுவிட்டோம் என்று அச்சமயம் யாராலும் கூற முடியவில்லை. நமது நாட்டில் எல்லாமே அறவே மாறுபட்டதாக, வேறுபட்டதாக இருந்தது. க்ஷத்திரியர்கள் கொல்லப்பட்டால் அவ்வளவுதான். நாம் ஒழிந்தோம். ஆயுதங்கள் பெற்றிருக்கும் உரிமை நமக்கு இருந்திருந்தால் இந்த நாடு அடிமைப்பட்டிருக்காது. எவராலும் இந்த நாட்டை வெல்ல முடியாது.
இந்து மதத்தில் இருப்பதன் மூலம் எவரும் எவ்வகையிலும் வளமுற இயலாது, நலமுற முடியாது. இந்து மதத்தில் அடுக்கமைவு முறை நடைமுறையில் இருந்து வருவதால் உயர் வருணத்தவர்களும் சாதியினரும் தான் நலமுறுகின்றனர், வளம் பெறுகின்றனர், ஆனால் மற்றவர்களின் நிலை என்ன? கதி என்ன? ஒரு பிராமணப் பெண் குழந்தை பெற்ற கணமே அவருடைய கண்கள் உயர்நீதிமன்ற நீதிபதி பதவி எங்கு காலியாக இருக்கிறது என்று சல்லடைப் போட்டு துளாவுகின்றன. இதற்கு மாறாக, நமது தோட்டிப் பெண் ஒரு குழந்தையை ஈணும் போது எங்கு தோட்டி வேலை காலியாக இருக்கிறது என்று தான் அவருடைய கண்கள் தேடுகின்றன. இத்தகைய ஒரு விசித்திரமான, வேதனையான அமைப்பு முறை நிலவுவதற்கு இந்து மதத்தின் வருண – அமைப்பு முறையே காரணம். இதிலிருந்து எந்த முன்னேற்றத்தை நாம் காண முடியும்? புத்த மதத்தில் தான் வாழ்வு வளத்தையும் நலத்தையும் எய்த முடியும்.
புத்த மதத்தில் 75 சதவீத பிக்குகள் பிராமணர்கள், 25 சதவீதத்தினர் சூத்திரர்களும் ஏனையோரும். ஆனால் பகவான் புத்தர் சொன்னார்: ‘’ஓ பிக்குகளே நீங்கள் பல்வேறு நாடுகளிலிருந்தும் சாதிகளிலிருந்தும் வந்திருக்கிறீர்கள். நதிகள் அவற்றின் மாகாணங்களில் பெருக்கெடுத்துச் செல்லும் போது தனியாகவே அவ்வாறு செல்கின்றன. ஆனால் அவை கடலில் கலந்துவிடும்போது தமது தனித்தன்மையை இழந்து விடுகின்றன; ஆறும் கடலும் ஒன்றாகி விடுகின்றன. பௌத்த சங்கம் ஒரு மகா சமுத்திரம் போன்றது. இந்த சங்கத்தில் அனைவரும் சமத்துவமானவர்கள். நதிகள் சமுத்திரத்தில் கலந்து விடும் போது எது கங்கையின் நீர், எது மகாநதியின் நீர் என்று இனம் காண முடியாது. இதே போன்று தான் நாம் புத்த சங்கத்தில் சேர்ந்துவிடும்போது நாம் நமது சாதியை இழந்து விடுகின்றோம். அனைவரும் சரிசமத்துவமாகிவிடுகிறோம். இத் தகைய சமத்துவத்தை ஒரேயொரு மாமனிதர்தான் போதித்தார். அந்த மாமனிதர்தான், மேதை தான் புத்தர் பிரான் (பலத்த கரகோஷம்).
‘மதம் மாறுவதற்கு ஏன் நீங்கள் இவ்வளவு காலத்தை எடுத்துக் கொண்டீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள்? இத்தனை காலமாக நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இது முக்கியமான கேள்வி. ஒரு மதத்தின் மீது பற்று கொள்ளச் செய்வது எளிதான காரியமன்று. இது தனியொரு மனிதனின் பணியல்ல. மதத்தைப் பற்றிச் சிந்திக்கும் எவரும் இதைத் தெரிந்து கொள்ளவே செய்வர். என்னைப் போன்று இவ்வளவு பொறுப்பேற்றிருப்பவர் உலகில் யாரும் இல்லை. எனக்கு நீண்ட நெடுங்கால வாழ்க்கை கிடைக்குமானால், திட்டமிட்ட என் பணியை நிச்சயம் நிறைவேற்றுவேன். (டாக்டர் பாபாசாகெப் அம்பேத்கர் நீண்ட நெடுங்காலம் வாழ்க என்ற கோஷங்கள் எண்திக்கும் எதிரொலிக்கின்றன.)
மஹர் ஒரு பௌத்தராவதால் அப்படி என்ன நடத்துவிடப் போகிறது என்று சிலர் கூறுவார்கள். அப்படிச் சொல்லாதீர்கள் என்று அவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இது அவர்களுக்கு ஆபத்தானது. மேல் தட்டில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் மதத்தின் அவசியம் பற்றி உணர மாட்டார்கள். இவர்களில் அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு வசிப்பதற்கு மாடமாளிகைகள் இருக்கின்றன; அவர்களுக்கு சேவை செய்வதற்கு வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்; அவர்களுக்குப் பணமும் பந்தாவும், செல்வமும் செல்வாக்கும் அந்தஸ்தும் மரியாதையும் இருக்கின்றன. இவ்வகையைச் சேர்ந்தவர்கள் மதத்தைப் பற்றி நினைப்பதற்கோ அல்லது அது குறித்து கவலைப்படுவதற்கோ அவசியமில்லை.
மதம் ஏழைகளுக்கு அவசியமானது. மதம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவசியமானது. ஒரு மனிதன் நம்பிக்கையை ஆதாரமாக கொண்டு தான் வாழ்கிறான். வாழ்க்கையின் ஆணிவேர், அடிவேர் நம்பிக்கையில்தான் பொதிந்துள்ளது. இந்த நம்பிக்கை இழக்கப்படுமானால் வாழ்க்கை என்ன ஆவது? மதம் நம்பிக்கையை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ஏழை எளிய மக்களுக்கு ஒரு செய்தியைக் கூறுகிறது – பயப்படாதீர்கள், வாழ்க்கை நம்பிக்கை அளிப்பதாகவே இருக்கும், இது உறுதி என்று – இதனால் தான் ஏழைகளும் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களும் மதத்தை அரவணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவில் பிரவேசித்தபோது ரோமாபுரியும் அதன் அண்டை நாடுகளும் மிகவும் அவல நிலையில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்க வில்லை. அச்சமயம் ஏழை எளிய மக்களுக்கு கிச்சடி வழங்கப் பட்டன. யார் கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாக மாறி னார்கள்? ஏழை எளிய மக்களும் அடித்தட்டு வர்க்க மக்களும் கிறித்தவர்களானார்கள். கிறிஸ்துவ மதம் பிச்சைக்காரர்களின் மதம் என்று நிப்பன் கூறினார். ஆனால் இதே கிறிஸ்துவ மதம் ஐரோப்பாவிலுள்ள அனைவரது மதமாக எப்படி ஆயிற்று என்ற கேள்விக்குப் பதிலளிக்க அவர் உயிரோடில்லை. அவர் உயிரோடு இருந்திருந்தால் இதற்கு அவர் பதிலளிக்க வேண்டியிருந்திருக்கும்.
புத்தமதம் என்பது மஹர்கள் மங்கர்களின் மதம் என்று சிலர் கூறுவார்கள். பிராமணர்கள் கௌதமரை ‘போ கௌதம்’ என்று அழைப்பார்கள். ‘போ கௌதம்’ என்றால் ‘அரே கௌதம்’ என்று பொருள். இவ்வாறாக பிராமணர்கள் புத்தர் பெருமானை நையாண்டி செய்தார்கள். ராமர், கிருஷ்ணன், சங்கரர் போன்றோரின் உருவச் சிலைகளை அயல்நாடுகளில் விற்பனைக்கு வைத்தால் எத்தனை சிலைகள் விற்பனையாகும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அதே சமயம் புத்தர் பிரானின் சிலைகளை விற்பனைக்கு வைத்தால் ஒரு சிலை கூட எஞ்சியிருக்காது (பலத்த கரவொலி) இந்தியா இருக் கட்டும், வெளிநாடுகளில் சென்று பாருங்கள். உலகிற்குத் தெரிந்த பெயர் புத்தர் பிரானின் பெயராகத்தான் இருக்கும். இவ்வாறு இருக்கும்போது இந்த மதத்தைப் பரப்புவதை யாரால் எப்படி தடுக்க முடியும்!
நாங்கள் எங்கள் பாதையில் செல்லுகிறோம், நீங்கள் உங்கள் பாதையில் செல்லுங்கள். நாங்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துக் கொள்வோம். இது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. இது மேம்பாட்டுக்கும் முன்னேற்றத்துக்கும் இட்டுச் செல்லும் பாதை. இது புதிய பாதை அல்ல. இந்தப் பாதை எங்கிருந்தும் இரவல் பெறப் பட்டதல்ல. இது இங்கிருந்து பெறப்பட்டதே. இது முழுக்க முழுக்க இந்தியப் பாதை. புத்த மதம் இந்தியாவில் 2000 ஆண்டு களாக நிலைத்திருந்து வருகிறது. உண்மையைக் கூறுவதானால் பௌத்தத்தை ஏன் முன்னரே தழுவாமல் போய் விட்டோம் என்று வருந்துகிறோம். புத்தர் பிரான் போதித்த கோட்பாடுகள், சித்தாந்தங்கள் அமரத்துவம் வாய்ந்தவை. ஆனால் புத்தர் இப்படியெல்லாம் உரிமை கொண்டாடவில்லை. காலம் மாறுபடுவதற்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. இத்தகைய தாராளப் போக்கை வேறு எந்த மதத்திலும் காண முடியாது.
புத்தமதம் சிதைவுறுவதற்கு பிரதான காரணம் முஸ்லீம்களின் படையெடுப்புகளேயாகும். முஸ்லீம்கள் தங்கள் படையெடுப்புகளின் போது புத்தர் பிரானின் உருவச் சிலைகளை அழித்து சிதைத்தனர். இதுவே புத்த மதத்தின் மீது தொடுக்கப்பட்ட முதல் தாக்குதலாகும். இந்தப் படையெடுப்பு களுக்கு அஞ்சி புத்தபிக்குகள் தப்பிச் சென்றனர். சிலர் திபேத் துக்குச் சென்றனர். சிலர் சீனாவுக்கு சென்றனர். சிலர் வேறு எங்கோ சென்றனர். எந்த ஒரு மதத்தையும் பாதுகாப்பதற்குப் பொது மக்கள் ஆதரவு தேவை. வடமேற்கு எல்லைப்புறத்தில் ஒரு கிரேக்க மன்னர் ஆண்டு வந்தார். அவர் பெயர் மிலிந்தா. இந்த மன்னர் எப்போதும் விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். விவாதங்களில் பங்கேற்பது அவருக்குத் தனி மகிழ்ச்சி அளித்து வந்தது. வாதிடும் திறமையுள்ளவர்கள் என்னிடம் வந்து வாதிக்கலாம் என்று இந்துக்களிடம் அவர் கூறுவது வழக்கம். அவர் வாதத்தில் பலரை வாயடைக்கச் செய்துவிட்டார்.
ஒரு சமயம் புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுடன் வாதிக்கலாம் என்று அவர் எண்ணினார். எனவே, புத்த மதத்தைச் சேர்ந்த வாதத் திறமையுள்ள எவரையேனும் அழைத்து வரும்படி கூறினார். எனவே பௌத்தர்கள் இந்த விவாதத்தில் கலந்து கொள்ளும்படி நாகசேனனை கேட்டுக் கொண்டனர். நாகசேனன் ஒரு படித்த மேதை பிராமணர். நாகசேனனுக்கும் மிலிந்தாவுக்கும் இடையே என்ன விவாதம் நடைபெற்றது என்பது ஒரு நூலின் மூலம் உலகுக்குத் தெரிய வந்துள்ளது. ‘மிலிந்த பன்ஹா’ என்பது அந்த நூலின் பெயர். மிலிந்தா ஒரு கேள்வி கேட்டார். மதம் ஏன் சிதைந்து வருகிறது? நாகசேனன் இதற்குப் பதிலளித்து மூன்று காரணங்களை கூறினார்.
முதல் காரணம்: ஒரு குறிப்பிட்ட மதம் போதிய பக்கு வமடையாததாக இருப்பதாகும். அந்த மதத்தின் அடிப்படை சித்தாந்தங்கள் ஆழமானவையாக இருப்பதில்லை. அது ஒரு லௌகிக மதமாகிறது. இத்தகைய மதம் குறுகிற காலமே நிலைத்து நிற்க முடியும்.
இரண்டாவது காரணம்: நன்கு படித்த பிரசாரகர்கள் ஒரு மதத்தில் இல்லையென்றால் அந்த மதம் சீணிக்கிறது என்பதாகும். நன்கு கற்றுணர்ந்தவர்கள் மதத்தின் தத்துவத்தை திறத்தோடு தாகத்தோடு போதிக்க வேண்டும். எதிர்த்தரப் பினருடன் வாதிடுவதற்கு போதகர்கள் தயாராக இல்லை யென்றால் அப்போது அந்த மதம் சிதைகிறது.
மூன்றாவது காரணம்: மதமும், மத சித்தாந்தங்களும் படித்தவர்களுக்கு மட்டுமே இருந்து வருவதாகும். சாமானிய மக்களுக்கு கோவில்களும் புண்ணிய ஸ்தலங்களும் உள்ளன. அவர்கள் அங்கு சென்று இயற்கை கடந்த தெய்வீக சக்தியை வணங்கி ஆராதிக்கின்றனர்.
நாம் புத்த மதத்தைத் தழுவும் போது இந்தக் காரணங் களை எல்லாம் மனத்திற்கொள்ள வேண்டும். பௌத்த மத சித்தாங்கள் லௌகிகமானவை என்று எவரும் கூற முடியாது. 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்று புத்த மதத்தின் அனைத்து சித்தாந்தங்களையும் உலகம் முழுவதும் போற்றுகிறது. அமெரிக்காவில் 2000 பௌத்த நிறுவனங்கள் உள்ளன. 3 லட்ச ரூபாய் செலவில் இங்கிலாந்தில் ஒரு புத்தர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பௌத்த அமைப்புகள் உள்ளன. புத்தரின் கோட்பாடுகள், சித்தாந்தங்கள் சாகாவரம் பெற்றவை. எனினும் இது கடவுளின் மதம் என்று புத்தர் உரிமை கொண்டாடவில்லை. தம்முடைய தந்தை ஒரு சாதாரண மனிதர் என்றும் அவ்வாறே தானும் சாதாரணமானவர் என்றும் புத்தர் கூறினார். உங்களுக்கு விருப்பமிருந்தால் இந்த மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த மதம் உங்கள் பகுத்தறிவுக்கு ஒத்ததாக இருந்தால் இதனை ஏற்றுக் கொள்ளுங்கள். இத்தகைய பெருந்தகையை வேறு எந்த மதத்திலும் அனுமதிக்கப்படவில்லை.
புத்த மதத்தின் மூல அடித்தளம் எது? புத்தரின் மதத்துக்கும் ஏனைய மதங்களுக்கும் இடையே மிகப்பெரும் வேறுபாடு உள்ளது. மற்ற மதங்கள் மனிதனை கடவுளுடன் சம்பந்தப்படுத்துவதால் அவற்றில் மாற்றங்கள் செய்வது சாத்தியமில்லை. கடவுள் இயற்கையைப் படைத்தார் என்று இதர மதங்கள் போதிக்கின்றன. கடவுள் அனைத்து வானத் தையும் காற்றையும் சந்திரனையும் சூரியனையும் மற்றும் இதர பலவற்றையும் படைத்தார். நாம் செய்வதற்கு கடவுள் எவற்றையும் விட்டு வைக்கவில்லை. எனவே நாம் கடவுளை வழிபட வேண்டும் என்று அவை கூறுகின்றன. மரணத்திற்கு பிறகு கடவுளின் தீர்ப்பு நாள் ஒன்று உள்ளது. அனைத்தும் அந்த தீர்ப்பையே பொறுத்துள்ளது என்று கிறித்துவ மதம் கூறுகிறது. ஆனால் புத்த மதத்தில் ஆண்டவனுக்கோ, ஆன்மாவுக்கோ இடம் ஏதும் இல்லை. உலகெங்கும் துயரம் நிலவுகிறது. 90 சதவீத மக்கள் துயரத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். அல்லலுறுகின்றனர் என்று புத்தர் கூறினார். இந்த அழுத்தப்பட்ட, பரிதாபத்துக்குரிய மக்களை துயரத்திலிருந்து விடுவிப்பதே புத்த மதத்தின் தலையாய பணியாகும். புத்தர் கூறியவற்றிலிருந்து மாறுபட்ட எதையும் கார்ல் மார்க்ஸ் கூறிவிடவில்லை. புத்தர் குறுக்குமறுக்காக சுற்றி வளைத்து எதையும் சொல்லவில்லை.
சகோதரர்களே, நான் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன். எல்லா அம்சங்களிலும் இந்த புத்த மதம் முழு நிறைவானது. எத்தகைய இழுக்கும் வழுவுமற்றது. அதே சமயம் இந்து மதத் கோட்பாடுகளோ எத்தகைய ஆர்வத்தையும் உத்வேகத்தையும் தோற்றுவிக்க முடியாதவை. பட்டம் பெற்ற அல்லது படித்த ஒரு நபரை நேற்றுவரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் சமூகம் உருவாக்கவில்லை. இங்கு ஒரு விஷயத்தை தயக்க மயக்க மின்றிக் கூற விரும்புகிறேன். நான் படித்த பள்ளிக் கூடத்தில் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் ஒரு பெண்மணி இருந்தார். அவர் மராத்தா. அவர் என்னைத் தொடமாட்டார். வயதான வர்களை மாமா என்று அழைக்கும்படி என் தாய் என்னிடம் கூறுவார். அவ்வாறே தபால்காரரை மாமா என்று அழைப்பேன் (பலத்த சி£ப்பு). என் குழந்தைப் பருவத்தில் பள்ளியில் படிக்கும்போது ஒரு நாள் எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. இதை எனது வகுப்பு ஆசிரியரிடம் கூறினேன். ஆசிரியர் என் பாதுகாப்புக்காக பணியாளரை அழைத்தார். என்னை குழாய் இருக்குமிடத்துக்கு அழைத்துச் செல்லும்படி அவனிடம் கூறினார். குழாய் இருக்குமிடத்துக்கு நாங்கள் சென்றோம். பணியாள் குழாயைத் திறந்தான் நான் தண்ணீர் குடிதேன். பொதுவாகப் பள்ளிக் கூடத்தில் நான் குடிப்பதற்குத் தண்ணீர் கிடைக்காது. பின்னாளில் மாவட்ட நீதிபதியாகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவ்வகையான பணியில் என்னால் நீடித்திருக்க முடியவில்லை. அப்போது எனக்கு ஒரு பிரச்சினை ஏற்பட்டது. என் சகோதரர்களின் நல்வாழ்வுக்கான, நலனுக்கான பணியை யார் மேற்கொள்வது என்பதே அந்தப் பிரச்சினை. எனவே, நான் பார்த்து வந்த உத்தியோக பந்தத் திலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன்.
ஒரு தனிநபர் என்ற முறையில் இந்த நாட்டில் நான் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை (கரகோஷம்). வைசியர், க்ஷத்ரியர், பிராமணர் ஆகியோரைப் பற்றி உங்கள் மனதில் உள்ள கருத்துக்கள் எவ்வாறு சரிந்து விழுந்து அழிக்கப்படும் என்பதே இப்போதைய உண்மையான பிரச்சினை. எனவே இந்த மதத்தைப் பற்றிய விவரங்களை எல்லா அம்சங்களிலும் உங்களுக்குத் தருவது எனது கடமையாகும். இது சம்பந்தமாக பல நூல்களை எழுதி, உங்களது ஐயங்களையும் ஊசலாட்டங் களையும் போக்குவேன். இந்தப் பிரச்சினையில் நீங்கள் முழு அளவுக்குத் தெளிவும் விளக்கமும் பெற எல்லா உதவிகளையும் செய்வேன். குறைந்தபட்சம் தற்போதைக்கு என் மீது நம்பிக்கை வையுங்கள்.
ஆனால் அதே சமயம் உங்களது பொறுப்பும் மிகப் பெரியது. மற்றவர்கள் உங்களை மதித்துப் போற்றும் வகையில் உங்களது நடத்தை இருக்க வேண்டும். மதம் என்பது நமது கழுத்தைச் சுற்றிக்கட்டப்பட்டுள்ள ஒரு பிணம் என்று நினைக் காதீர்கள். புத்தமதத்தைப் பொருத்த வரையில் நமது இந்திய நாடு அதற்கு அந்நியமல்ல. எனவே புத்த மதத்தை மிகச் சிறந்த முறையில் பின்பற்ற நாம் உறுதி பூண வேண்டும். மஹர் மக்கள் புத்த மதத்துக்கு அவக்கேட்டைக் கொண்டு வந்துவிட்டார்கள் என்ற பழிச்சொல்லுக்கு நாம் ஆளாகக் கூடாது; இது விஷயத்தில் நாம் உருக்கு உறுதியோடு இருக்க வேண்டும். இதனை நாம் சாதித்தோமானால் நம் தேசமும் நாமும் ஆக்க வளமுறுவோம்; செழித்தோங்குவோம்; அதுமட்டுமல்ல உலகம் முழுவதற்குமே இந்த நற்பேறு கிட்டும். நீதி நிலைநாட்டப் பட்டாலொழிய உலகம் சமாதானம் நிலவாது.
இந்தப் புதிய பாதை மகத்தான பொறுப்புகள் நிறைந்தது. நாம் சில உறுதிகளைப் பூண்டுள்ளோம். சில விருப்பங்களை வெளியிட்டுள்ளோம் என்பதை இளம் மக்கள் மனதில் கொள்ள வேண்டும். அவர்கள் சுயநலப் போக்கு கொண்ட சோம்பேறி களாகி விடக்கூடாது. இந்த நோக்கத்துக்காக நமது வருவாயில் குறைந்தபட்சம் 20ல் ஒரு பங்கையாவது வழங்குவது எனத் தீர்மானிக்க வேண்டும். என்னுடன் உங்கள் அனைவரையும் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். ஆரம்பத்தில் ததாகட் ஒரு சில நபர்களுக்கு தீக்சை தந்தார். இந்த மதத்தை பரப்ப முழு மூச்சோடு பாடுபடுங்கள் என்று அவர்களை வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து யாஷாவும் அவருடைய நாற்பது நண்பர்களும் புத்த மதத்தை தழுவினர். யாஷா பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இந்த மதம் எப்படி இருக்கிறது என்பதை மகான் புத்தர் அவர்களிடம் பின்வருமாறு எடுத்துரைத்தார்: இந்த மதம் பகுஜன் ஹிதே, பகுஜன் சுகே, லோகானுகம்பே, தம்மா அதி கல்யாணம், மதிய கல்யாணமா பர்யவாசன் கல்யாணம். ததகாதா அப்போதைய நிலைமை களுக்கு ஏற்ப தமது மதத்தை எப்படிப் போதிப்பது என்பதைத் தீர்மானித்தார். இப்போது இதற்கான செயல் திட்டத்தை நாம் வகுக்க வேண்டும். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ஒவ்வொருவரு மற்றவருக்கு தீட்சை அளிக்க வேண்டும். ஒவ்வொரு பௌத் தருக்கும் தீட்சை அளிக்கும் உரிமை உண்டு என நான் பிரகடனம் செய்கிறேன்!
இவ்வாறு பௌத்தர்களதும் அழைப்பார்களதும் இடிமுழக்கம் போன்ற கையொலிகளுக்கிடையே டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் உரையை முடித்தார்.
*
ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிற்று
இந்திய மகாபோதி கழகத்தின் பொது செயலாளராக, அருட்திரு டி.வாலிசின்ஹா நிகழ்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ளும்படி விசேடமாக அழைக்கப்பட்டிருந்தார். மதமாற்ற வைபவத்தை நேரில் கண்டு அது குறித்து அவர் செய்துள்ள வருணனை பௌத்தத்தைத் தழுவுவதில் பாபாசாகேபின் ஆதரவாளர்கள் காட்டிய எல்லையற்ற ஆர்வத்தைக் காட்டு வதாக உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியைப் பற்றி அருட்திரு டி. வாலிசின்ஹா கூறுவதாவது:
‘’1956 அக்டோபர் 14 ஆம் தேதி நவ இந்தியாவின் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத தினமாகும். ஏனென்றால் இந்த தினத்தில்தான் டாக்டர் அம்பேத்கரும் அவருடைய 5,00,000 ஆதரவாளர்களும் திரிசரணத்தையும் பஞ்சசீலத்தையும் பாராயணம் செய்து பகிரங்கமாக புத்த மதத்தை தழுவினர். மகாராஷ்டிரா பிரதேசத்தைச் சேர்ந்த நாகபுரி நகரில் 14 ஏக்கர் காலி நிலத்தில் இந்த மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வைபவத்துக்காக அங்கு ஒரு பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்கான அழைப்பைப் பெறும் பேற்றினை பெற்றேன். அங்கு திரண்டிருந்த ஒரு பெரிய ஜனசமுத்திரம் திரிசரணத்தையும் பஞ்சசீலத்தையும் வார்த்தைக்கு வார்த்தை சொல்லுக்கு சொல் பாராயணம் செய்யும் நேர்நிகரற்ற காட்சி இன்னும் என் மனத்தில் பசுமரத்து ஆணிபோல் ஆழப்பதிந்துள்ளது. எல்லை யற்ற ஆர்வமும் உற்சாகமுமிக்க இத்தகைய ஒரு ஜன சமுத்திரத்தை என் வாழ்நாளில் நான் கண்டதே இல்லை. 14 ஆம் தேதி காலையும் அதற்கு முந்திய நாள் இரவும் ‘பகவான் புத்தருக்கு ஜே’ என்ற கோஷங்கள் இடி முழக்கம் போன்று விண்ணைப் பிளந்தன.
ஆடவர்களும் பெண்களும் குழந்தைகளும் சிலர் தம் கைகளில் பால்மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளுடனும் சிலர் கரங்களில் பௌத்த கொடிகளுடனும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கூட்டம் கூட்டமாக, அணி அணியாக வற்றாத வரையாத வெள்ளம்போல் திரண்டு வந்து கொண்டிருந்தனர். பந்தலுக்குள் இடம் பெறுவதற்குக் காத்தவண்ணம் ஆயிரக்கணக்கானோர் சாலையோரங்களில் குழுமியிருந்தனர். நாங்கள் நகரத்தைச் சுற்றிப் பார்த்தோம். எங்கு பார்த்தாலும் ஊர்வலங்களுக்குப் பின்னர் ஊர்வலங்களாக கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்று கொண்டிருந்தன. நாங்கள் சிரமத்தோடு அங்கு சென்றடைந்த போது எங்கள் கார் மேடைக்குப் பின்னால் போய் நிற்பதற்காக ஏராளமான தொண்டர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்திக் கொண் டிருந்தனர்.
மேடையிலிருந்து நான் சுற்றும் முற்றுப் பார்த்தபோது என் முன்னால் ஓர் பிரம்மாண்டமான ஜன சமுத்திரம் அலைமோதிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன். இது ஓர் அற்புதமான காட்சியாகும். எனக்குத் தெரிந்தவரை மத மாற்றம் இவ்வளவு பிரம்மாண்ட அளவில் எங்கும் நடை பெற்றதை நான் பார்த்ததில்லை. டாக்டர் அம்பேத்கர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். எனினும் அவர் உணர்ச்சி பொங்க ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பேசினார். அப்போது தாம் புத்த மதத்தை தழுவியதற்கான காரணத்தை அவர் புட்டுப் புட்டு வைத்தார். அவர் கூடியிருந்த மக்களுக்கு ஐந்து போதனை களை அருளினார். அவர் கூறியதை மக்கள் அப்படியே திரும்பக் கூறினர். இந்த ஒலி நீண்ட தூரம் வரை பிரதிபலித்தது. புத்தரின் உருவச் சிலையை டாக்டர் அம்பேத்கருக்கு வழங்க மகாபோதிக் கழகத்தின் சார்பில் அவருக்கு மாலை அளிவித்த போது எங்களது 70 ஆண்டுக்கால முயற்சி வெற்றி பெற்றதை உணர்ந்தேன். அப்போது எல்லையற்ற மகிழ்ச்சியால் என் கண்கள் குளமாயின. என் கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடியது. டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் இந்தியாவில் மீண்டும் புத்த சாசனத்தை நிலைநாட்டு வதை நோக்கமாக கொண்டதாகும்.
*
இதே போன்று பர்மா உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான யு சான் ஹிதூன் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். புத்த மதத்துக்கு மாறியமைக்காக தமது வாழ்த்துச் செய்தியில் அவரைப் பாராட்டியிருந்தார். ‘புத்தரும் அவருடைய தம்மமும்’ என்ற நூலை அவர் எழுதி வருவதையும் சிலாகித்திருந்தார்.
அந்தக் கடிதம் பின்வருமாறு:
என் அன்பார்ந்த டாக்டர் அம்பேத்கர்,
இந்தியாவில் புத்த சாசனத்தை மீண்டும் நிலை நாட்டுவதற்கு நீங்கள் ஆற்றிவரும் மகத்தான பணிக்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஜெயந்தி ஆண்டில் நீங்கள் புரிந்துள்ள என்றென்றும் மறக்க முடியாத சாதனைக்காக பர்மாவிலுள்ள பௌத்தர்கள் அனைவரது உள்ளங்களும் உங்களை ஆராதிக்கின் றன. புத்தரின் தாயகத்தைச் சேர்ந்த லட்சேப லட்சக்கணக்கான மக்கள் அவர் ஏற்றி வைத்த விளக்கின் ஒளியில் உங்கள் தலைமையில் மீண்டும் திரும்பிவர ஆரம்பித்திருப்பதை அறிய புத்த சாசன கவுன்சிலும் பர்மா பௌத்தர்களும் எல்லையற்ற மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகின்றனர். இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் புத்த சாசனம் மீண்டும் நிலை நாட் டப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நீங்கள் ஆரம்பித்து வைத்த பணியை தொடர்ந்து மேற் கொள்வதில் மூன்றாவது டபிள்யூ எப்பி மாநாடு பர்மாவில் நடைபெற்றபோது என் பங்கை சிறிதளவு ஆற்ற முடிந்தது. கடந்த மாதம் 28 ஆம் தேதி சட்டா சங்கயானா குகையில் மகாதொஸ் முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற ஒரு விழாவில் சுமார் 5000 தமிழர்கள் சம்பிரதாய முறையில் புத்த மதத்தை ஏற்றுக் கொண்டனர். காபினட் அமைச்சர்களும் பௌத்தத் தலைவர்களும், ரங்கூனிலுள்ள ஏராளமான தமிழர் களும், ரங்கூனிலும் பர்மாவின் ஏனைய பகுதிகளிலுள்ளவர் களும் உங்கள் தலைமையை ஏற்க மிகுந்த ஆர்வத்தோடு வருகின்றனர்.
முன்னமேயே உங்களுக்குக் கடிதம் எழுதாமைக்காக மிகவும் வருந்துகிறேன். அதற்காக ஆயிரக்கணக்கில் என் மன்னிப்புகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சட்ட பணி யிலும், வெளி நாடுகளில், அதிலும் குறிப்பாக ஜப்பானில் புத்த மதத்தைப் பிரசாரம் செய்யும் பணியுடன் சம்பந்தப்பட்ட சட்டா சங்கயானா நடவடிக்கைகளிலும் இதர நடவடிக்கைகளிலும் நான் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன். ஜப்பானில் பௌத்தத்தை நிலைநாட்டுவதற்கு ஒரு கழகத்தைத் தோற்றுவிக்க செல்வாக்கு மிக்க ஏராளமான பௌத்தத் தலைவர்களைத் திரட்டி யிருக்கிறேன் என்பதை அறிய நீங்கள் பெரிதும் மகிழ்ச்சி அடை வீர்கள் என்று நம்புகிறேன். பர்மாவைச் சேர்ந்த சுமார் 15 மகா தெரஸ்கார்களுடன் 1957 மே மாதம் மூன்று கேந்திரங்கள் அமைக்கப்படவிருக்கின்றன. மோஜியிலும், ஐயோஷிராவிலும் ஏற்கனவே கட்டிடப் பணிகள் ஆரம்பமாகி நடந்து வருகின்றன. ஜப்பானியக் கழகத்திலிருந்து ஒரு தூதுக்குழு ஏற்கனவே இங்கு வந்துள்ளது. கடந்த மாதம் 27 ஆம் தேதியிலிருந்து அது அன்றா டம் என்னுடன் விவாதித்து வருகிறது.
புத்த மதத்தைப் பற்றி நீங்கள் எழுதும் நூலை பிரசுரிப்பதற்காகும் செலவை ஏற்பதைப் பொறுத்தவரையில், ஆசியா பவுண்டேஷனிலிருந்து என்னால் நிதி உதவி பெற முடியவில்லை. பிரதிநிதிகள் மாற்றலாகிச் சென்றதே இதற்குக் காரணம். நீங்கள் இங்கு இருந்த போது உங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திய பிரதிநிதி விரைவிலேயே மணிலாவுக்கு மாற்றப்பட்டார். புதிய பிரதிநிதி இவ்வகையான விஷயங்களில் அதிகம் அக்கறை கொண்டவராக இருப்பதாகத் தெரிய வில்லை. இது விஷயத்தில் என்னால் ஏதேனும் செய்ய முடியும் என்று நம்புகிறேன். ஆனால் விரைவில் இதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை.
எளிதான போட்டிகள் மூலம் மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்குவதைப் பொறுத்தவரையில் இந்த யோசனையை கோட்பாட்டளவில் ஏற்றுக் கொள்வதற்கு புத்த சாசன கவுன்சிலின் முக்கியமான உறுப்பினர்களை சம்மதிக்க வைத்துள்ளேன். எனவே, கவுன்சிலிடம் முன்வைக்கப்பட்டிருந்த ஒரு விரிவான திட்டத்தையே நீங்களோ அல்லது திருமதி. அம்பேத்கரோ எங்களுக்கு அனுப்ப வேண்டும்.
இந்திய ஜெயந்தி குழுவின் அழைப்பின் பேரில் யூநு, பிரதம நீதிபதி யு தெய்ன் மாங் ஆகியோரும் நானும் மொத்தம் ஒன்பது பேர் புது டில்லியில் நடைபெறும் ஜெயந்தி விழவில் கலந்து கொள்ள வருகிறோம். பர்மாவிலிருந்து சுமார் 10 பேர்கள் அடங்கிய பிரதிநிதிக் குழுவுக்குத் தலைமை தாங்கி 4வது டபிள்யூ எப்பி மாநாட்டில் கலந்து கொள்ள காட் மண்டுக்குப் புறப்படுகிறேன். என் மனைவியும் என்னுடன் வருகிறார். லும்பினியிலிருந்து புதுடில்லிக்குப் புறப்பட்டுச் செல்லுவோம். இந்த மாதம் 22 ஆம் தேதி வாக்கில் புதுடில்லியில் இருப்போம் என்று எதிர்ப்பார்க்கின்றோம்.
திருமதி அம்பேத்கருக்கும் உங்களுடைய ஏனைய சகோதரர்களுக்கும் என்னுடைய அன்பான விசாரிப்புகள்.
தம்மாவிலுள்ள உங்கள் அன்பார்ந்த
(ஒப்பம்)
யு சான் ஹிதூன்,
நீதிபதி, உச்சநீதிமன்றம்,
பர்மா ஒன்றியம் ரங்கூன்
பெறல் :
டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்,
எம்.ஏ.பி.எச்.டி., டி.எஸ்.ஸி.,
எல்.எல்.டி., டி. லிட்டரேச்சர், பார் – அட் – லா
சட்ட அமைச்சர், உறுப்பினர், மாநிலங்கள் அவை,
26, அலிபூர் சிவில் லைன்ஸ், புதுடில்லி, இந்தியா
***