அம்பேத்கர் உருவும் மறு உருவாக்கங்களும் நூலை முன்வைத்து….
அனிதாவின் தற்கொலையையொட்டி, தமிழ்த் திரைப்படத் துறையினர் ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டத்தில் இயக்குநர் பா.இரஞ்சித்தின் ஆவேச எதிர்வினை, தமிழ்ச் சூழலில் கடும் விவாதப்பொருளானது. “எத்தனை நாளைக்குத் தமிழன், தமிழன்னு பூச்சாண்டி காட்டப்போறீங்க? அனிதா ஒரு தலித் பெண். இங்கே சமூகநீதி என்பது தலித்துகளின் பிரச்னைகளை அங்கீகரிப்பதாக இல்லை” என்பது இரஞ்சித் பேச்சின் சாராம்சம். ‘இந்த மேடையில் ஏன் இரஞ்சித் இதைப் பேச வேண்டும்? அனிதா ஒரு தலித் பெண் என்பதனால் அவர் தற்கொலைக்குத் தள்ளப்படவில்லை. பறிக்கப்படும் மாநில அரசின் உரிமைகள், ‘ஒரே தேசம்’ என்ற பெயரில் நடத்தப்படும் அதிகாரக் கருத்தியல் வன்முறை ஆகியவைதான் அனிதாவின் மரணத்துக்குக் காரணம்’ என்பது இரஞ்சித்தை விமர்சித்தவர்களின் வாதம்.
‘அடையாளங்கள்’ என்பவை எப்போதுமே ஒருபடித்தானவையாகவோ துல்லியமானதாகவோ இருப்பதில்லை. ஒருவர் தமிழராக இருக்கும் அதே நேரத்தில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராகவோ, குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராகவோ, குறிப்பிட்ட பால் அடையாளத்தைக் கொண்டவராகவோ, குறிப்பிட்ட வர்க்கப்பின்னணிகொண்டவராகவோ இருக்கிறார். ஏதேனுமோர் அடையாளத்துக்குக் கூடுதல் அழுத்தம் தரப்பட்டே அடையாள அரசியல் கட்டமைக்கப்படுகிறது. நமது எல்லா வகையான அரசியல்களும் ஏதேனுமொரு வகையில் அடையாள அரசியலாகவே இருக்கிறது. ‘தமிழர்’ என்ற பொது அடையாளமும் ‘தலித்’ என்ற தனித்த அடையாளமும் ஏன் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருக்கிறது? அப்படி முரண்பட வேண்டியது அவசியம்தானா? இந்த முரண்களை முற்றிலுமாக ஒழிக்க முடியாதா?
இரஞ்சித் மேடையில் பேசிய பேச்சின் முக்கியமான பகுதி குறித்து விவாதிக்கும் போதுதான், நாம் இன்னும் கொஞ்சம் தெளிவடைய முடியும். “எங்க ஏரியாவுல பெரியார் தெரு இருக்கு. காமராஜர் தெரு இருக்கு. ஆனா, மத்தவங்க இருக்கிற ஏரியாக்களில் எத்தனை அம்பேத்கர் தெரு இருக்கு?” என்கிற முக்கியமான கேள்வியை பா.இரஞ்சித் முன்வைக்கிறார். உண்மையில் பா.இரஞ்சித் பொது அடையாளத்தில் இணைய விரும்புகிறாரா, அல்லது துண்டித்துக்கொண்டு தனி அடையாளத்தை முன்வைக்க விரும்புகிறாரா?
[quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]ஆசிரியர், கல்லூரி முதல்வர், அரசியல் தலைவர், தொழிற்சங்கத் தலைவர், பொருளியல் நிபுணர், சட்ட அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், கணக்காளர், வழக்கறிஞர், பங்குச் சந்தையின் வர்த்தக ஆலோசகர் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார் அம்பேத்கர். இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியான பல பரிமாணங்கள்கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே. [/quotes]
ஆழமாக யோசித்துப் பார்த்தால், ‘பொது அடையாளம்’ என்று முன்வைக்கப்படுவதன் அரசியல் குறித்துதான் அவர் கேள்வி எழுப்புகிறார். ‘அம்பேத்கர்’ என்பது பொது அடையாளமா, தனி அடையாளமா? அவரைப் பொது அடையாளமாக இந்தப் பொதுச் சமூகம் உணர்ந்திருக்கிறதா, ஏற்றுக் கொள்கிறதா என்கிற கேள்வியிலிருந்து நாம் இந்த விவாதத்தை இன்னும் கொஞ்சம் நீட்டித்துக்கொள்ளலாம். இதுபற்றி உரையாடும்போது, இணையாக அம்பேத்கர் குறித்துத் தமிழில் வந்துள்ள ஒரு முக்கியமான புத்தகம் குறித்துப் பேச வேண்டியிருக்கிறது.
‘அம்பேத்கர் உருவும்-மறு உருவாக்கங்களும்’ என்ற புத்தகம் பா.பிரபாகரனால் எழுதப்பட்டு மதுரை, ‘கருத்து=பட்டறை’ வெளியீடாக வந்திருக்கிறது. ‘அம்பேத்கர் குறித்து நமக்கு என்ன தெரியும்?’ என்ற அடிப்படையான கேள்வியின் மீது இந்தப் புத்தகம் கட்டப்பட்டிருக்கிறது. ‘அம்பேத்கர் குறித்து உங்களுக்கு என்ன தெரியும்?’ என்ற கேள்வி, வெறுமனே பாடப்புத்தகத்தின் வழியாக அம்பேத்கரை அறிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்ல, முற்போக்கு அரசியல் பேசுபவர்
களுக்கும்தான்.
‘அம்பேத்கர் ஒரு தலித் தலைவர்; இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எழுத்து வடிவம் தந்தவர்’ என்பதே அம்பேத்கர் குறித்து நமக்குள் இருக்கும் பிம்பங்கள். ‘முற்றுப்பெறாத குறிப்புகளில் வெளிப்படும் அம்பேத்கரின் ஆளுமை’ என்ற கட்டுரை அம்பேத்கரின் பல பரிமாணங்களை விரிவாக விளக்குகிறது. ஆசிரியர், கல்லூரி முதல்வர், அரசியல் தலைவர், தொழிற்சங்கத் தலைவர், பொருளியல் நிபுணர், சட்ட அமைச்சர், தொழிலாளர் துறை அமைச்சர், கணக்காளர், வழக்கறிஞர், பங்குச் சந்தையின் வர்த்தக ஆலோசகர் என்று பல்வேறு பணிகளை மேற்கொண்டிருக்கிறார் அம்பேத்கர். இந்திய அரசியல் வரலாற்றில் இப்படியான பல பரிமாணங்கள்கொண்ட ஒரே தலைவர் அம்பேத்கர் மட்டுமே.
அவரது ஆய்வுப் படிப்பு, ரூபாய் நோட்டுக்கும் இந்தியப் பொருளாதாரத்துக்குமான உறவு குறித்தது. பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி நீட்ஷே வரை அவர் விரிவாக எழுதியிருக்கிறார். பூனா ஒப்பந்தத்திற்குப் பிறகு அரசியலில் விரக்தி ஏற்பட்ட காலத்தில் ‘இந்திய ராணுவம்’ குறித்த ஒரு புத்தகத்தை எழுதத் தொடங்கினார் அம்பேத்கர். ‘நீர்ப்பாசனம், மின் ஆற்றல் குறித்த அம்பேத்கரின் எழுத்துகள் முறையாகத் தொகுக்கப்பட்டு விவாதிக்கப்படவில்லை’ என்கிறார் பா.பிரபாகரன். பொதுவாக அரசியல் தலைவர்கள் தாங்கள் செயல்பட வேண்டிய அரசியல் சூழல் குறித்தும் அதன் பிரச்னைகள் குறித்தும், சிந்திப்பதற்கும், பேசுவதற்கும், எழுதுவதற்கும்தான் முக்கியத்துவம் தருவார்கள். ஆனால், அம்பேத்கரோ பொருளாதாரம், தொழில்நுட்பம், ராணுவம், விவசாயம், தத்துவம், வரலாறு எனப் பல்வேறு தளங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்து, சிந்தித்து எழுதினார். ஆனால், அம்பேத்கர் ஏன் வெறுமனே ‘தலித் தலைவராக’ மட்டுமே அறியப்படுகிறார் என்பது இந்தப் புத்தகம் எழுப்பும் வலுவான கேள்வி. இதே கேள்வியைத்தான் எளிய முறையில் பா.இரஞ்சித்தும் கேட்கிறார்.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]அம்பேத்கர் என்ற மாமனிதர் குறித்த வாழ்க்கைச் சித்திரங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, அவரை முழுமையாக அறியும் வகையில் உருவாக்கப்படவில்லை. முழுமையடையாத பல கையெழுத்துப் பிரதிகளில் அம்பேத்கரின் அறிவும் கனவும் தேங்கி நிற்கின்றன. [/quotes]
அம்பேத்கர் குறித்து நமது பாடத்திட்டங்களும் அரசியல் கட்சிகளும் உருவாக்கியுள்ள பிம்பங்கள் அவரைச் சரியாக மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவில்லை. இறுதியில் ஒரு ‘சாதித் தலைவராக’வே அவரது பிம்பம் எஞ்சி நிற்கிறது. அம்பேத்கரின் சிந்தனைப் பங்களிப்புகளே சரியாகக் கொண்டுசெல்லப்படாதபோது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த செய்திகள் எவ்வளவு தூரம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டிருக்கும்? எப்போதுமே காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான முரண் குறித்தும் உறவு குறித்தும் பேசப்பட்டு வந்திருக்கிறதே தவிர, அம்பேத்கருக்கும் நேருவுக்கும், ஜெகஜீவன் ராமுக்கும், பெரியாருக்கும், மீனாம்பாள், சிவராஜ் போன்ற தமிழகத் தலித் தலைவர்களுக்குமான உறவுகள் குறித்து அதிகம் எழுதப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார் இந்த நூலின் ஆசிரியர். அம்பேத்கரோ, அவர் உருவாக்கிய இயக்கங்களின் வரலாறோ, தமிழ் இலக்கியங்களுக்குள் கொண்டு வரப்படவில்லை (அழகிய பெரியவன் விதிவிலக்கு). வயலின் கற்பதில் ஆர்வம் கொண்ட அம்பேத்கர், கிரிக்கெட்டிலும் ஆர்வம்கொண்டவராக இருந்தார். அந்நாளைய சிறந்த தலித் கிரிக்கெட் வீரரான பல்வன்கர் பாலுவுக்குப் பாராட்டு விழா நடத்த முயன்றார். இந்த பாலு, பூனா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர்களில் ஒருவர். அம்பேத்கர் என்ற மாமனிதர் குறித்த வாழ்க்கைச் சித்திரங்கள் முழுமையாகத் தொகுக்கப்பட்டு, அவரை முழுமையாக அறியும் வகையில் உருவாக்கப்படவில்லை. முழுமையடையாத பல கையெழுத்துப் பிரதிகளில் அம்பேத்கரின் அறிவும் கனவும் தேங்கி நிற்கின்றன.
இரஞ்சித்தின் படங்கள்மீது வைக்கப்படும் முதன்மைக் குற்றச்சாட்டு, அவர் ஏன் பெரியார் படங்களைத் தன் சினிமாக்களில் காட்டுவதில்லை என்பது. பெரியாரைத் தலித்துகளுக்கு எதிராக நிறுத்தும் சமீபத்திய சூழலில் இது சங்கடத்தை அளிப்பதாகத்தான் இருக்கிறது. ஆனால், மணிவண்ணன், சத்யராஜ், வேலுபிரபாகரன், கமல்ஹாசன் என்று பெரியாரியம், தமிழ்த்தேசியம், மார்க்ஸியத்தைத் தங்கள் படங்களில் மேலோட்டமாகவாவது சொன்னவர்களின் எத்தனை சினிமாக்களில் அம்பேத்கர் படம் காட்டப்பட்டிருக்கிறது? தருமபுரி பிரச்னை உச்சத்தில் இருந்த காலத்தில் வெளிவந்த படம்தான் ‘ஜோக்கர்’. பெரியார் சிலைக்குக் கீழே சாதி மறுப்புத் திருமணம் நடப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். கதை நிகழும் இடம் தருமபுரி. ஆனால், ஓர் இடத்திலும் அம்பேத்கர் படம் இருக்காது. நம் முற்போக்காளர்களின் தன்னுணர்விலேயே அம்பேத்கர் விடுபட்டிருப்பதை நாம் அவலமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. முற்போக்காளர்களின் நிலையே இதுதான் என்றால் பொதுச் சமூகம் ‘அம்பேத்கர்’ என்ற அடையாளத்தை எப்படி எதிர்கொள்கிறது?
நமது தமிழ் சினிமாக்களில், நீதிமன்றங்களில் காந்தியின் படமும் காவல் நிலையங்களில் அம்பேத்கர் படமும் மாட்டப் பட்டிருப்பதாகக் காட்சிப்படுத்தப்படுவதை, ‘பொதுவெளியும் கட்டமைக்கப்படும் அம்பேத்கர்களும்’ கட்டுரையில் சுட்டிக்காட்டும் பா.பிரபாகரன், ‘இதுவே அநீதிதான்’ என்கிறார். காந்தியை நீதிக்கான குறியீடாகவும் அம்பேத்கரை வெறுமனே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அல்லது முறைகேடாகப் பயன்படுத்துவதற்கான குறியீடாகவும் காட்டும் செயல் என்று விமர்சிக்கிறார்.
கல்வி நிறுவனங்களிலும் மற்ற பல பொதுவெளிகளிலும் ‘அம்பேத்கர்’ என்ற அடையாளம் பொதுச் சமூகத்தால் எப்படி எதிர்கொள்ளப்படுகிறது என்பதை ‘அம்பேத்கர் எனும் உருவும் மறு உருவாக்கங்களும்’ என்னும் கட்டுரையில் விரிவாகச் சுட்டுகிறார். மேற்கண்ட இரண்டு கட்டுரைகளுமே அம்பேத்கர் என்னும் அடையாளம் தலித் அல்லாத மற்றவர்களால் எப்படி எரிச்சலுடனும் பதற்றத்துடனும் எதிர்கொள்ளப்படுகிறது என்பதை விவரிக்கிறது. அம்பேத்கரின் உருவத்தை ஏதேனும் ஒருவகையில் வைத்திருக்கும் ஒருவர் தலித்தாகத்தான் இருப்பார் என்று மற்றவர்கள் தாங்களாகவே யூகித்துக்கொள்கிறார்கள். ‘தீண்டாமை ஒரு பெருங்குற்றம்’ என்று பாடப்புத்தகங்களில் அச்சடிக்கப்பட்டாலும் அம்பேத்கர் என்பவர் தாழ்த்தப்பட்டவர்களுக்கும், ஆதிதிராவிடர் பள்ளிகளுக்குமே உரித்தானவர் என்ற தீண்டாமை மனநிலையே கல்வி நிறுவனச் சூழலில் நிலவுகிறது. ‘அம்பேத்கர்’ என்னும் அடையாளத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பல வன்முறைகளைப் பட்டியலிடுகிறார் பா.பிரபாகரன்.
2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருத்தங்கல் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிக்கச் சாதி மாணவர்கள் அம்பேத்கர் குறித்த பாடத்தை நடத்தக் கூடாது என்று ஆசிரியர்மீது கற்களைவிட்டு எறிந்தார்கள். 2008-ல் சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் படித்த ஆதிக்கச் சாதி மாணவர்கள், அம்பேத்கர் பெயரை எடுத்துவிட்டு, வெறுமனே ‘சட்டக் கல்லூரி’ என்று சுவரொட்டி ஒட்டினார்கள். இதையடுத்து ஏற்பட்ட மோதல் வன்முறைத் தாக்குதலாக மாறியது. 2015-ல் மகாராஷ்டிரா மாநிலம், ஷீரடியில் அம்பேத்கர் குறித்த பாடலை செல்போன் ரிங்டோனாக வைத்திருந்த சாகர் ஷெஜ்வால் என்ற நர்சிங் மாணவரை, எட்டுபேர்கொண்ட கும்பல் தாக்கிக் கொலை செய்தது. இப்படி நாடு முழுவதும் அம்பேத்கர் என்ற அடையாளத்தைப் பயன்படுத்துவதற்கு எதிரான கசப்பு உணர்வைப் பார்க்க முடிகிறது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அம்பேத்கர் சிலை கூண்டுக்குள்தான் இருக்கிறது. அம்பேத்கர் என்னும் அடையாளம் சாதிய அடையாளமாகவும் தீண்டத்தகாத அடையாளமாகவுமே பொதுச் சமூகத்தால் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பல்வேறு துறைகளில் பங்களிப்புகளைச் செய்த ஒரு மகத்தான அறிவுஜீவியை வெறுமனே சாதித் தலைவராகப் பார்த்து நிராகரிப்பதுதான் பொதுச் சமூகம் என்றால், தலித்துகள் எப்படி பொது அடையாளத்தை ஏற்றுக்கொள்வார்கள்?
அதே நேரத்தில் அம்பேத்கரைச் சாதிய அடையாளத்திலிருந்து விடுவித்து ‘பாரதியத் தலைவராக’ மாற்றும் வேலையை இந்துத்துவவாதிகள் கச்சிதமாகச் செய்கின்றனர். மாநில அரசுகளுக்கான அதிகார வரம்புகள், மொழிவாரி மாநிலங்கள், காஷ்மீர் பிரச்னை, பொது சிவில் சட்டம், பாகிஸ்தான் பிரிவினை, இந்தி மொழி ஆகியவை குறித்த அம்பேத்கரின் கருத்துகளை அதன் பின்னணியிலிருந்து பிய்த்தெடுத்து, தங்களுக்கு வசதியான ஒரு ‘பாரதியத் தலைவராக’ அவரை உருவாக்கிக்கொள்கின்றனர். அம்பேத்கரை ஓர் இந்துத்துவத் தலைவராக முன்னிறுத்துவதன் மூலம், தலித்துகளுக்கும் சிறுபான்மையினருக்குமான மோதல்களை உருவாக்குவது என்பதும் இந்துத்துவ அரசியலின் ஒரு பணி.
இதை விரிவாக, ‘எதிர்ப்பும் வெறுப்பும் : அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத் தடையை முன்வைத்து’, ‘அம்பேத்கரின் மதமாற்ற அரசியலும் இன்றைய மதமாற்றங்களும்’, ‘டிசம்பர் நினைவுகளும் தலித் இஸ்லாமியர் அனுபவங்களும்’ ஆகிய கட்டுரைகளில் விளக்குகிறார் பா.பிரபாகரன். தனது முந்தைய இரு நூல்களான ‘அம்பேத்கரின் பெண்ணியம்’ (2009), ‘அம்பேத்கரும் அவதூறுகளும்’ (2010 டிசம்பர்) ஆகியவற்றிலும் அம்பேத்கர் வெறுமனே தலித்துகளின் தலைவர் அல்ல என்று நிறுவி, தொழிலாளர்களுக்கும் பெண்களுக்கும் அவர் மேற்கொண்ட பணிகள் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார் பா.பிரபாகரன். அம்பேத்கரை எல்லோருக்குமான பொது அடையாளமாக மாற்ற வேண்டியது பெரியாரியக்கங்களின், இடதுசாரிகளின், திராவிடக் கட்சிகளின், முற்போக்குத் தமிழ்த் தேசியவாதிகளின் பணி. அதை அவர்கள் செய்யத் தவறும்போது இந்துத்துவவாதிகள் அம்பேத்கரை சுவீகரித்துக்கொள்கின்றனர்.
பொது அடையாளம் தங்களை அங்கீகரிக்க வேண்டுமென்று விரும்புவதும், சமயங்களில் பொது அடையாளத்திலிருந்து விலகி நின்று தமக்கான குரலை எழுப்புவதும் உலகம் முழுக்கவே ஒடுக்கப்பட்டவர்களின் இயல்பாக இருந்திருக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ‘லண்டனில் நடத்தப்பட்ட ஐ.சி.எஸ். தேர்வுகளை இந்தியாவில் நடத்த வேண்டும்’ என்று இந்துத்துவவாதிகள் குரல் எழுப்பியபோது, ‘லண்டனில்தான் ஐ.சி.எஸ். தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்’ என்று குரல் கொடுத்தார் இரட்டைமலை சீனிவாசன். அக்காலகட்டத்தில் பார்ப்பனர்கள் கடல் தாண்டிச் செல்வது தீட்டுக்குரியச் செயலாகக் கருதப்பட்டது. இந்தியாவில் ஐ.சி.எஸ். தேர்வுகள் நடத்தப்பட்டால், காலங்காலமாய்க் கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்ற பார்ப்பனர்களோடு போட்டியிட வேண்டிய சூழல் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் என்றார் இரட்டைமலை சீனிவாசன். எப்போதுமே ஒடுக்கப்பட்டவர்களின் குரல் சந்தேகத்துடன் கூடிய குரலாக ஒலிக்கத்தான் செய்யும். ஆனால், சமத்துவத்துடன் கூடிய பொது அடையாளத்தை வளர்த்தெடுக்க விரும்புபவர்கள், அந்தக் குரல்களில் உள்ள நியாயங்களைப் புரிந்துகொள்வதுடன் முரண்பாடுகளைக் களைவதற்கு முன்கை எடுக்க வேண்டியது அவசியம்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு ஒரு காலகட்டத்தில் தலித் மக்களின் பிரச்னைகள் பற்றி மட்டுமே கவனம் செலுத்திவந்தது. ஆனால், இப்போது ‘தமிழர்’ என்னும் பொது அடையாளத்துக்குக் கூடுதல் அழுத்தம் தந்து அரசியல் பணிகளை மேற்கொள்கிறது. ஈழப் பிரச்னை, மரணதண்டனை ஒழிப்பு, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு எனப் பல பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறது. தி.மு.க-வே நடத்தத் தவறிய ‘மாநிலச் சுயாட்சி’ மாநாட்டை நடத்தியதோடு, ‘கவர்னர் பதவி தேவையில்லை’ என்ற தி.மு.க-வின் பழைய கோரிக்கைக்குப் புத்துயிர் அளிக்கிறது. ஆனால், இன்னும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைத் தலித்துகள் கட்சியாகவும், தொல்.திருமாவளவனைத் தலித் தலைவராகவும் மட்டுமே பார்க்கிற பார்வைதான் இருக்கிறதே தவிர, அவரைப் பொதுச் சமூகத்துக்கான அரசியல் தலைவராகப் பார்க்கும் பார்வை ஏன் உருவாகவில்லை? எங்கே பிரச்னை இருக்கிறது?
அதே நேரத்தில் தனி அடையாளத்துக்கு அழுத்தம் தருவது என்ற பெயரில் விலகல் மனப்பான்மையை மேற்கொள்வதும் பயனளிக்காது. சென்னை ஐ.ஐ.டி-யில் ‘அம்பேத்கர் பெரியார் படிப்பு வட்ட’த்துக்குத் தடை விதிக்கப்பட்டபோது, ‘அம்பேத்கர் பெயரில் வேண்டுமானால் வாசகர் வட்டம் இருக்கட்டும். ஈ.வெ.ரா பெயரை அனுமதிக்க மாட்டோம்’ என்றார்கள் இந்துத்துவவாதிகள். பெரியார் எதிர்ப்பு தலித்தியவாதிகளும் மௌனத்தின்மூலம் அதை ஆமோதிக்கவே செய்தனர். பெரியாரையும் மார்க்ஸியத்தையும் முன்வைக்கும் தொ.பரமசிவன், அ.மார்க்ஸ், எஸ்.வி.ராஜதுரை, வ.கீதா போன்றவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் இந்த விலகல் தலித்தியவாதிகள் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ போன்ற புத்தகத்துக்கு சின்ன எதிர்வினைகூட ஆற்றுவதில்லை. இத்தகைய விலகல் மனோபாவம் என்பது மறைமுகமாக இந்துத்துவத்துக்குப் பயனளிப்பதில்தான் முடியும்.
‘சாதிகளை மறந்துவிட்டுத் தமிழர்களாக ஒன்றிணைவோம்’ என்ற பொது அடையாளத்துக்கான கோரிக்கை, கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் யதார்த்தத்துக்கு மாறானது. சாதிய வன்முறைகளின்போது பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்காமல், அவர்களின் நியாயங்களைப் பேசாமல், அம்பேத்கர், அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி.ராஜா, இமானுவேல், எல்.சி.குருசாமி போன்றவர்களை அனைவருக்குமான பொது அடையாளமாக மாற்றாமல், பொது அடையாளங்களின் கீழ் திரளும் தலித்தல்லாதவர்களைச் சாதிய நீக்கம் செய்யாமல் சமூக ஒற்றுமை என்பதோ பொதுக் கோரிக்கைகளுக்கான அணி திரள்வது என்பதோ சாத்தியமில்லை.
நன்றி : தடம் (விகடன்) அக்டோபர் 2017