“பஞ்சமா பாதகம்” எனும் எதிர்வினை கட்டமைப்புக்குள் சுருங்கியிருந்த இந்திய பண்பாட்டுலகம், “பஞ்ச சீலம்” எனும் நல்வினை வழியொழுகும் தனிமனித மற்றும் சமூக ஒழுக்கநெறியை மானுடத்திற்கு வழங்கியது இந்திய தொல்குடி அடையாளமாகிய புத்த தம்ம அடையாளம். புத்தம் எனும் அறிவையும், தம்மம் எனும் அறத்தையும் சேர்த்து இழைத்த சங்கம் எனும் அமைப்பின் வழி பகிரும் எல்லா உயிர்களுக்குமான அன்பை வலியுறுத்திய உயர்ஞான் எய்திய புத்த பெருமானின் போதனைகளை ஒருங்கிணைத்த திபீடகங்கள் அல்லது திரிபீடகங்கள் என்றழைக்கப்படும் வினைய, சுத்த மற்றும் அபிதம்ம பீடகங்கள், பஞ்சமாப்பாதக வர்ண-ஜாதி-வர்க்க பேத மானுட-எதிர் பண்பாட்டுக் கூறுகளை உடைத்து நொறுக்கிய புதிய மானுட எழுச்சியின் அடையாளம் தான் தொல்குடி அடையாளம்.
தமிழில் சங்ககாலம் என புனையப்பட்ட காலத்தில் வர்ண-ஜாதிய-மத-கடவுள் அடையாளங்களை அடியொற்றி விரிக்கப்பட்ட இலக்கிய மரபு அகம் புறம் என தமிழ் சமூக அமைப்பியலை விளக்கும்படியாக இருக்கிறது. போர், வாள், வில்-அம்பு, ஆண் எனும் இறை அதிகாரம் என விரியும் ஷத்திரியர் தர்மம்; பெண்ணை 1. அச்சம், மடம், நாணம், கற்பு, பயிர்ப்பு எனும் இலக்கணத்தில் பதுமையாகவும், ஆணின் கலவி சுகத்திற்கு மட்டுமே விளங்கும் பரத்தியாகவும் இருக்க வலியுறுத்தும் ஆணுலகு-வாழ் அடையாளம் என மட்டுமே குறுகியதாகவே திணைப்பாடல், மற்றும் ஆற்றுப்படை திரட்டுகளில் தமிழரின் அடையாளம் காட்டப்பட்டிருக்கின்றது.
தமிழக வரலாற்றில் சங்கம்-மருவியகாலம் என குறைத்து புனையப்பட்ட காலம் அதாவது தெற்கில் “Buddha Era” எனப்படும் “புத்த தம்ம காலம்” களப்பிரர் அல்லது களப்பரா என திரிக்கப்பட்ட களப்பறையர் (ஆதாரம்: கோரமங்கலம் செப்பேடு) காலம் இன்றைக்கு தமிழ்-மொழி செம்மொழி, தமிழ்-இலக்கியம் செவ்விலக்கியம் என உலகம் போற்றும் அளவிற்கு தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் சிறப்புற அமையச் செய்யும் இலக்கண தொழிற்சாலைகளை உருவாக்கிய காலம். காப்பியங்கள், இலக்கண நூல்கள், திரிக்குறள் எனும் திருக்குறள் உள்ளிட்ட பதினென் கீழ்கணக்கு நூல்கள், அம்பிகை அம்மன் எனும் ஞானத்தாய் அவ்வையார் வழங்கிய திரிவாசகம் (ஆத்திச் சுவடி, கொன்றை வேந்தன் & வெற்றிமாலை) உருவான காலம் களப்பறையர் காலம். ஆனால், ஒருபக்கம் திரிக்குறளை உலக அளவில் உயர்ந்த நூலாகவும், வள்ளுவர் வாழ்ந்த காலத்தை மிகச் சிறந்த காலமாகவும் புகழ்ந்து கொள்ளும் இந்திய மற்றும் தமிழக வரலாற்றாளர் திரிக்குறள் எழுதப்பட்ட காலமான களப்பறையர் காலத்தை இருண்டகாலம் என கதைப்பதன் நோக்கம் நமக்கு நகைப்பைத் தருகிறது. தனது “தமிழ் இலக்கிய வரலாறு” எனும் நூலில், பேராசிரியர் சி. பாலசுப்பிரமணியம் வரிகளில் சொல்ல வேண்டுமென்றால், “களப்பிறர்கள் பாலி மொழியினை ஆதரித்தனர். ஆதலால், தமிழர் தம் மொழி, கலை, நாகரிகம் முதலிய முக்கிய கூறுகளை இழக்க நேரிட்டது. இக்காலத்தில் ஏற்பட்ட அயலார் ஆட்சியிலே தமிழ் மொழி ஆதரிக்கப்படாமல் தாழ்த்தப்பட்டு வளர்ச்சிக் குன்றி போற்றுவாரற்று விளங்கியதால், தமிழ் மொழியில் சிறப்பான நூல்கள் தோன்றுவதற்கு இயலாமல் போய்விட்டது. எனவே தமிழ் இலக்கிய வரலாற்றிலேயே இக்காலத்தை “இருண்டகாலம்’ என்று குறிப்பர்.”
கொலை, களவு, கலவி, பொய், கள் எனும் பஞ்சமாபாதகங்களை அடியொற்றி படைக்கப்பட்ட இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுள், வர்ணம், ஜாதி (உயர்குலம், தாழ்குலம்) கூறுகளை உள்ளடக்கிய சமூக கட்டமைப்புக்குள் தான் தமிழரின் சிறப்பு அடையாளம் என சங்க இலக்கியம் காட்டுகிறது எனபதை மறுப்பாரில்லை. ஆயினும், இப்பஞ்சமாப்பாதக அதம்மங்களை உடைக்கும் அறச் சிந்தனை மரபை விளக்கும் திரிக்குறள், போன்ற உலகத்தரம் வாய்ந்த நூல்களை வழங்கிய புத்த காலத்தை (களப்பறையர்) காலத்தை “இருண்டகாலம்” என கதைப்பாரை எதிர்ப்பாருமில்லை.
வர்ண-ஜாதிய அதம்ம மரபுகளை உடைத்துபோடும் புத்தர் போதித்த அறம் எனும் சுதந்திர-சமத்துவ-சகோதரத்துவ பண்பாட்டு மரபை வழங்கிய காலத்தை ‘இருண்டகாலம்’ என அழைப்பது மானுடத்தின் மீதான கேளிக்கைதான். இந்த வரலாற்று புரட்டலையும் முரண்பாட்டையும் இந்த அரங்கம் இனியாவது கேள்விக்கு உட்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
வரலாற்றாளர் வெறுப்புடன் புனைந்த இருண்டகாலத்திலிருந்து மணிமேகலை எனும் அறியாமை இருள் நீக்கும் போதிச் சுடர் பரப்பிய தொல்குடி அடையாளத்தை அறிவோம். உலகின் முதல் காப்பியமான சிலபதிகாரமும், இரண்டாம் காப்பியமான மணிமேகலையும் போதிநாதன் புத்தனின் அறத்தை விளக்கும் நூல்கள். பாலி மொழியில் தேர்ந்த அறிவாற்றல் செறிந்த சாத்தனார் எனும் பெயரே இன்றும் தொல்குடியரின் அடையாளமாக இருக்க, புத்தரின் மத்தியப்பாதையை அடியொற்றிய சாத்தனார் வழங்கிய காப்பியமே தொல்குடிகளின் ஆறாம் பறைந்த அடையாளம்.
“இளங்கதிர் ஞாயிறு எள்ளுந் தோற்றத்து விளங்கொளிமேனி விரிசடையாட்டி… தென்திசைப் பெயர்ந்த” தெய்வம், ஜம்பு மரத்தின் கீழ் உயர்ஞானம் பெற்ற சாம்பவ பதியினள் தொல்குடிகளாம் சாம்பவர் அடையாளம். ஜம்பு மரத்தின் கீழ் உயர்ஞானம் அடைந்த சாம்பவள் பதியினளும், வேம்பின் கீழ் ஞானம் பெற்ற திருவாசகம் வழங்கிய அம்பிகைஅம்மன் ஞானத்தாய் அவ்வையாரும், தமிழர் அதுவரை அறியாத ‘பெண்களும் ஞானம் எய்துவர்’ எனும் பேருண்மையும் தொல்குடியினரின் சிறப்பு அடையாளம். இல்லாத்தாள் மற்றும் பரத்தி எனும் இரண்டு வேடங்கள் மட்டுமே பெண்ணுக்கு தந்த தமிழர்க்கு, சாத்தனார் “அறச்செல்வி” எனும் மூன்றாம் நிலை எட்டும் பிக்குணி, ஞானத்தாய், அம்மன் எனும் புதிய மானுட உருவத்தை பெண்ணுக்கு தந்த புத்த தம்மத்தை போற்றி காப்பிய அடையாளம் பதிக்கிறார். இல்வாழ்க்கையையும், விபச்சார வாழ்க்கையையும் தாண்டிய தனிமனிதனையும் சமூகத்தையும் நெறிபடுத்தும் பிக்குணி எனும் மூன்றாவது நிலையை பெண் எட்டுகிறாள். இதுவே தொல்குடிகளின் முக்கிய அடையாளமாக நான் பார்க்கிறேன். இதை பண்டிதர் அயோத்திதாசர் பல்வேறு எண்ணற்ற சான்றுகளை முன்னிறுத்தி இதுவரை யாரும் செய்திராத இலக்கிய வரலாற்று ஆய்வுகளின் மூலம் விளக்குகிறார்.
வடக்கில் சாரநாத்தில் அசோகர் வழங்கிய கல்வெட்டுகளில் “தம்மம் அளித்த ‘சாக்யமுனி’யின் முதல் பேருரை” என்று கோதம புத்தரை “சாக்யமுனி” என்றுதான் அடையாளப்படுத்துகிறார். வடக்கில் சாக்கயர்கள் ஷத்திரியர் குலத்தை சேர்ந்தவர் என கோதம சித்தார்த்தரை அடையாளப்படுத்துவதை அறிகிறோம். தெற்கில் சாக்கையர் தொல்குடிகளாக இருக்க அறிகிறோம். குறைந்தது 800 பாடல் வரிகளிலாவது சேக்கிழாரின் பெரியபுராணமும், சம்மந்தரின் தேவாரப்பாடல்களும், மற்றும், நாலாயிரத்திவ்விய பிரபந்தப் பாடல்களும், புத்த குடிகளையும், ஜைன மற்றும் அஜீவகர்களையும் கழுவேற்றி இனப்படுகொலை செய்து ஏற்றிப் பாடிய இன்னபிற பக்தி இலக்கிய பாடல்களும் தென்னகத்தில் வாழ்ந்த “சாக்கையர்” வரலாற்றை நமக்கு விளக்குகின்றன. சாக்கையர், வள்ளுவர், நிமித்திகர் என நீளும் சாக்கையர் வரலாறு, தேரர் (தேரவாதம்-பறைந்தவர், ஹீனர் (ஹீனயானத்தை பறைந்தவர், யானையேறி பிடறிபிடித்து முரசுகொட்டி அரசு செய்திகளையும், புத்த தம்ம செய்திகளையும் பறைந்தவர் என தொல்குடிகளின் அடையாளத்தை மீட்கிறது மணிமேகலை:
“வச்சிர கோட்டத்து மனங்கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்றுரி போர்த்த இடியுறு முழக்கிற்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை
முரசுகடிப் பிகூஉம் முதுகுடிப் பிறந்தோன்”
என சாக்கைய வேந்தன் வள்ளுவனை போற்றிப்பாடும் மணிமேகலை வழங்கிய “சாத்தன்” எனும் பெயரும் சாக்யமுனியின், “ஆயிரநாமத் தாழியன் திருவடி”.
“இந்திரர்” எனும் முக்கிய சொல்லாடல் “ஐந்திரியம்” எனும் “ஐந்திரியத்தை அதாவது ஐம்புலன்களை அடக்கி உயர்ஞானம் அடைந்த புத்தரை குறிப்பதை மணிமேகலை விளக்கவல்லது. வள்ளுவன் கூறும், “பொறிவாயில் ஐந்தவித்தான் பொய் தீரொழுக்கும் / நெறிநின்றார் நீடு வாழ்வார்” எனும் குறள் வெண்பா ஐந்து இந்திரியங்களையும் வென்ற இந்திரர் என்னும் புத்தரையே குறிப்பதை இளங்கோவடிகளும் குறிப்பிடுகிறார். சிலம்பில் அறியப்படும் “அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும் / இந்திரர் வியாரம் ஏழுடன் போகி” எனும் வரிகளில் “இந்திரர் வியாரம்” எனும் சொற்றொடர் காவிரிபடுகையில் ஐந்திரரான புத்தருக்கு எழுப்பட்ட விகாரைகளை குறிக்கிறது. இதுவே இந்திரர் தொல்குடி அடையாளமாக நிகழ்காலத்திலும் தொடர்கிறது. இந்திரர் விழாவின்போது ஐந்திரராகிய புத்தருக்கு தீபத்திருநாள் எடுக்கும்படியாய், காவிரியில், “நாவலோங்கிய மாபெருந் தீவினுள் / காவேற் தெய்வந்தேவர் கோற்கொடுத்த / தீபசாந்தி செய்தருனன்னாள்” மணிமேகலை வரும் வரிகளில் வரும் “தீபசாந்தி” எனும் சொல்லை “தீவக சாந்தி” என மாற்றி பதிப்பித்த உ.வே. சாமிநாதர், பண்டிதர் அயோத்திதாசர் எடுத்துத் தரும் பல மணிமேகலை பாடல்களை துண்டித்தும் திரித்தும் இருப்பது கவனிக்கத்தக்கது.
பண்டிதர் அயோத்திதாசர் குறிப்பிடுவதைப் போல, “போதி நிழற்பொருந்தித் தோன்றும் நாதன்பாத நவிகேட வேத்தலென்று” மணிமேகலையில் புத்தரின் போதனா நிலையைக் கூறி இருப்பதற்கு ஆதாரமாக, இன்றும் அரச மரத்தடியில் செங்கல்லை நட்டு முனியாண்டவன் பூசை செய்வார்கள்; அரசாணிக்கால் நட்டு புத்தர் சாட்சியாக விவாகங்கள் நடத்ததுவார்கள். புத்தரின் சடலத்தை எரித்தபோது சுடலையில் இருந்து எடுத்துவந்த சாம்பலை நெற்றியில் பூசிக் கொள்ளும் வழக்கத்தை இன்றும் பலதரப்பட்ட மக்கள் பூசிக்கொள்வது தொல்குடியரின் அடையாளமே என்றி வேறில்லை.
மணிமேகலை கூறும் தொல்குடிகளின் மொழி அடையாளமாக பாலியும், பாலி எனும் அமுதசுரபியிலிருந்து உறுப்பெற்று தம்மம் பரவ சிறப்பிக்கப்பட்ட தமிழ் மொழியும் முக்கியம் வாய்ந்தது. பாலிமொழி வித்தகரான சாக்யமுனி புத்தர் “தண்டமிழாசான் சாத்தநிக்துரைக்கு”. தமிழ் அட்சரங்களை வடித்துகொடுத்த தமிழ்தலைவன் எனவும் புத்தர் புகழபடுகிறார். பாலிக்கும் தமிழுக்கும் ஆன உறவை புத்தரின் வழியேகிய தம்மத்தை பேசும் “மெய்த்தமிழ்” என்று வீரசோழியம் பெருமிதம் கொள்கிறது:
“மதத்திற் பொலியிம் வடசொல் கிடப்பும் தமிழ்மரபு
முதத்திற் பொலியேழை சொற்களின் குற்றமும் ஓங்குவினை
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்க பன்னூறாயிரம்
விதத்திற் பொழியும் புகழ் அவலோகிதன் மெய்தமிழே”
மேலும், கோதம புத்தர் காலத்தில் விறுவிறுப்படைந்திருந்த இலக்கணத் தொழிற்சாலைகள், சாம்ராட் அசோகரின் காலத்தில் முக்கிய அட்சரங்களையும் எழுத்து வடிவங்களையும் உருவாக்க வழிவகுத்தது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளில் பயன்படுத்த கரோஷ்தியும், இந்திய துணைக்கண்டம் முழுதும் முக்கிய மக்கள் மற்றும் அரசு அலுவல் மொழியாக இருந்த பாலி மொழி பயன்படுத்த பிரமியும் அழகுற வடிவமைக்கப்பட்டன. அதற்கு அசோகரின் கல்வெட்டு சான்றுகளே சாட்சியம். பின்னர் தென்பகுதியில் பிரமியின் பயன்பாட்டை தமிழும், வடபகுதியில் சமஸ்கிருதமும் பயன்படுத்திக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் அட்சரங்களின் தலைவனாம் சாக்கைய குடிகளான தொல்குடிகளின் மொழி அடையாளமாகவும் விளங்கிய புத்தரின் அடையாளத்தை சிறப்புற கூறும் “மணிமேகலை துறவு” தொல்குடிகளின் அறம் பறையும் அறிவர் அடையாளங்கள் பலவற்றை உள்நிறுத்தி சிறப்புநிலை எய்துள்ளது என்பதை அறிவோமாக.
நான் நேசித்து உள்ளிழுத்து வாசித்து சுவாசித்து என் வினையும், ஊழும், துன்பவியல் விலக்கல் தேடி அலையும் மனதை தூய்மைபடுத்தும் மணிமேகலை அறம் கூறும் தொல்குடி அடையாளம் காணும் முயற்சி தொடரும் என ஒரு கவிதையுடன் முடிக்கிறேன்.
ஆதியின் வடிவாம் விரிகமலன் சிரசெழுந்த
ஜோதியின் கீற்றில் விடியும் – ஞாலம்
மேகலை தந்தபுது மானுடக் கலகத்தொல்
தேடலில் வெல்லும் அறம்.
(சாக்ய மோஹன்)