டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற மதங்களை தவிர்த்து
புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்ன ?
– உருகேன் சங்கரக்ஷிதா .
டாக்டர் அம்பேட்கர் அவர்களின் கூற்றுப்படி, நான்கு முக்கிய மதங்கள் தற்பொழுது இவ்வுலகின் பெருவாரியான மக்களால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
இம்மதங்கள் கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் இன்றும் பெருவாரியான மக்களிடத்தில் மாபெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த நான்கு முக்கிய மதங்கள் பவுத்தம், கிருஸ்துவம், இஸ்லாம் மற்றும் இந்துத்துவம் ஆகும். இதன் நிறுவனர்கள் முறையே புத்தர், இயேசு கிருஸ்து, முகமது நபி மற்றும் கிருஷ்ணர்.
இம்மாபெரும் நிறுவனர்கள் ஒவ்வொருவரையும் பற்றி டாக்டர் அம்பேட்கர் சில தகவல்களை முன்வைக்கிறார். டாக்டர் அம்பேட்கர் அவர்கள் இயேசு கிருஸ்துவை பற்றி சொல்லுவதாவது, அவர் தாம் கடவுளின் மகன் என்றும், மற்றும் யார் கடவுளின் இராஜ்யத்தை அடைய விரும்புகிறார்களோ, யார் முக்தி அடைய விரும்புகிறார்களோ அவர்கள் கண்டிப்பாக இதை ஏற்க வேண்டும் என்றும், அவ்வாறு ஏற்காவிடில் ஒருக்காலும் முக்தி கிடைக்காது என்றும்,. கூறுகிறார். இதுவே கிருஸ்த்தவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது, என்று டாக்டர் அம்பேட்கர் கூறுகிறார்.
டாக்டர் அம்பேட்கர் அவர்கள் முகமது நபி பற்றி சொல்லுவதாவது, அவர் தன்னை கடவுளின் தூதர் என்றும், அவரே கடவுளின் கடைசி தூதர் அவருக்கு பிறகு தூதர்கள் யாரும் பூமியில் கிடையாது என்றும் உரிமை கொண்டாடுகிறார்.
மேலும், கிருஷ்ணர் பற்றி டாக்டர் அம்பேட்கர் சொல்லும்பொழுது, கிருஷ்ணர் என்பவர் இயேசு, முகமது இவர்களை காட்டிலும் ஒரு படி மேலே சென்று தானே கடவுள் என்று உரிமை கொண்டாடுவதோடு மட்டும் அல்லாமல் தன்னை பரமேஷ்வரன் என்கிறார்.
இதுவே மூன்று மதங்களின் நிறுவனர்களையும் அவர்களின் உரிமை குரல்களையும் பற்றி டாக்டர் அம்பேட்கர் அவர்கள் நம்முன் வைக்கும் தகவல்களாகும்.
-டாக்டர் அம்பேட்கர் அவர்கள் புத்தர் பற்றி ஆய்வு செய்யும் பொழுது அவர் கூறியது, புத்தர் தான் ஒரு மனிதபிறவி என்பதை தவிர வேறு ஏதும் உரிமை கோரவில்லை. அவர் தன்னுடைய அயராத முயற்சியின் காரணமாகவே உயர்ந்த நற்பண்புகளையும் பூரண உயர் ஞானமும் பெற்றார்.
டாக்டர் அம்பேட்கர் இவர்கள் நான்கு பேரையும் இருவகையாக பிரிக்கிறார். இயேசு, முகமது மற்றும் கிருஷ்ணர் இவர்கள் மூவரும் தங்களை ‘மோட்சதத்தா’க்களாக வெளிப்படுத்துகிறார்கள். அதாவது இவர்கள் மனிதர்களுக்கு முக்தி கொடுப்வர்கள் அல்லது முக்திக்கு கொண்டுசெல்பவர்கள் என்று சொல்லலாம்.
ஆனால் எல்லா இடங்களிலும் புத்தர் தன்னை ஒரு ‘மார்கதத்தா’ என்றே கூறுகிறார். இதன் பொருள், புத்தர் முக்திக்கான பாதையை மட்டுமே காண்பிப்பவர். ஒவ்வொரு மனிதனும் தன் சொந்த முயற்சியின் மூலமே முக்தியை சென்றடைய முடியும். இதனால் புத்த தம்மத்தை மனிதயியல் மதம் என்றே கூறலாம்.
மனிதயியல் என்பது தறகால மேற்கத்திய புரிதலான மனிதயியல் அல்ல. பவுத்தம் மனிதனுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய ஒரு மதம். அது கடவுளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது.
உண்மையில் அது எந்த விதத்திலும் கடவுளுக்கு இடம் கொடுப்பதில்லை. அதற்கும் மேலாக, டாக்டர் அம்பேட்கர் மற்ற மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க காரணம் என்னவெனில்,
அது மனித தன்னம்பிக்கையை மையமாக கொண்டு கடவுள் நம்பிக்கையற்ற மதமாக உள்ளது. இயேசு கடவுளின் மகன், முகமது நபி கடவுளின் தூதர் மற்றும் கிருஷ்ணர் தானே கடவுள் என்கிறார்.
ஆனால் புத்தர் தன்னை எந்த விதத்திலும் கடவுளுடன் தொடர்பு படுத்தவில்லை. பவுத்தமும் எந்த விதத்திலும் கடவுளுடன் தொடர்புடையது அல்ல. கடவுள் என்ற வார்த்தையை பவுத்த அகராதியில் கண்டெடுக்க இயலாது.-இங்கே புத்தருக்கும் மற்ற மூன்று மதங்களின் நிறுவனர்கள் அல்லது போதகர்களுக்கும் இடையில் வேறொரு வித்தியாசமும் உள்ளது.
அது இயேசு கிருஸ்த்து, முகமது நபி மற்றும் கிருஷ்ணர் இவர்கள் மூவரும் உரிமை கொண்டாடுவது யாதெனில், என்னவெல்லாம் அவர்கள் போதித்தார்களோ அது குறையற்றது அதனால் அவற்றை கேள்விக்குட்படுத்த முடியாது. மனிதர்கள் நன்றி கடன்பட்டவர்கள் ஆதலால் கட்டாயமாக அதை ஏற்கவேண்டும்.இயேசு கடவுளின் மகன், முகமது நபி கடவுளின் தூதர் மற்றும் கிருஷ்ணர் தானே கடவுள் என்பதால் அவர்களால் என்ன போதிக்கப்பட்டதோ அது நேரடியாகவோ மறைமுகமாகவோ கடவுளிடமிருந்து வந்தது.
கடவுள் அனைத்தையும் அறிந்தவர். ஆகவே எவ்வாறு அவர்களுடைய போதனை தவறானதாக இருக்க முடியும்?.ஆனால், புத்தர் எப்பொழுதும் தன் போதனைகள் கடவுளிடமிருந்து வந்தது என்றோ அல்லது குறைகளுக்கு அப்பாற்பட்டது என்றோ உரிமை கொண்டாடியது கிடையாது. மாறாக என்னவெல்லாம் அவர் போதித்தாரோ அதனை பற்றி அவர் கூறும்பொழுது, இது என்னுடைய சொந்த அறிவுத்திறன், இது ஒவ்வொரு மனிதனுக்குமான சொந்த அனுபவம் சார்ந்த உண்மையே என அறிவித்தார். மற்றவர்களும்அவர்களுடைய அறிவுத்திறனாலும், சொந்த அனுபவத்தாலும் உணர்ந்து தெளிவு பெற்ற பிறகே இதை ஏற்க வேண்டும் என்கிறார்.
ஒரு பொன் வியாபாரி தங்கத்தை உரசிபார்த்து பரிசோதிப்பதை போல் தன்னுடைய போதனைகளை பரிசோதிக்க வேண்டும் என்கிறார். மற்ற எந்த போதகர்களும் இவ்வாறு ஒருபோதும் கூறியது கிடையாது. ஏனைய மதபோதகர்கள் அதாவது பவுத்தர் அல்லாத மதபோதகர்கள் தங்கள் போதனைகளை நம்ப வேண்டும் என்றே வலியுறுத்துவார்கள்.ஆனால், புத்தர் தம் வார்த்தைகளை நமக்குள் பரிசோதித்து பார்க்கும் படி கேட்டுக்கொண்டார். அவர் நம்முடைய அறிவு என்னும் தீயில் அவருடைய போதனைகளின் உண்மையை முயன்றறிய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.ஆகவே, டாக்டர் அம்பேட்கர் மற்ற மதங்களுக்கு மாற்றாக புத்த தம்மத்தை தேர்ந்தெடுத்தார்.
-டாக்டர் அம்பேட்கர் புத்த தம்மத்தை தேர்ந்தெடுக்க மேலும் சில காரணங்களையும் இங்கே குறிப்பிடலாம்.டாக்டர் அம்பேட்கர் கூறியது, பவுத்தம் ஒழுக்கத்தை அடிப்படையாக கொண்டது.
இந்துத்துவம் ஒருவருடைய ஜாதி கடமைகளை அடிப்படையாக கொண்டது. பவுத்தம் எக்காலத்திலும் விஞ்ஞானத்துடன் முரண்படுவது கிடையாது.பவுத்த புத்தக தொகுப்பினுடைய ஏதாவது ஒரு அறிக்கை, நவீன விஞ்ஞான அறிவிற்கு முரண்பட்டு இருப்பதாக நாம் கண்டுபிடித்தோம் எனில் அதை புத்தக தொகுப்பிலிருந்து நீக்குவதற்கு நமக்கு முழு சுதந்திரம் உள்ளது. மற்ற சமயங்களை பினபற்றுவோருக்கு இந்த சுதந்திரம் கிடையாது.
எடுத்துகாட்டாக, ஒரு கிருஸ்த்தவர் பைபிளில் உள்ள ஓர் அறிக்கை நவீன விஞ்ஞான அறிவிற்கு முரண்பட்டு உள்ளதாக கண்டுபிடித்தாலும் அதனை பைபிளில் இருந்து நீக்குவதற்கு உண்மையில் அவருக்கு சுதந்திரம் கிடையாது.ஏனெனில் பைபிளில் எந்த தவறும் இருக்க முடியாது, பைபிள் கடவுளுடைய வார்த்தைகள் என நம்பப்படுகிறது.இதுவே, டாக்டர் அம்பேட்கர் அவர்கள் மற்ற எல்ல மதங்களை தவிர்த்து புத்த தம்மத்தை தேர்ந்தெடுத்தார் என்பதற்கான ஒரு கண்ணோட்டம் ஆகும்.