என்னுடைய 55வது பிறந்த நாளை முன்னிட்டு உங்களுடைய சிறப்பு மலருக்கு ஒரு செய்தி அனுப்புமாறு என்னை நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்தியாவில் அரசியல் தலைவர் தீர்க்கதரிசியின் அந்தஸ்தில் வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது துரதிருஷ்டவசமான உண்மை யாகும். இந்தியாவுக்கு வெளியில் தமது தீர்க்கதரிசிகளின் பிறந்த நாளை மக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியாவில் மட்டுமே தீர்க்கதரிசிகளின் பிறந்த நாட்கள் போன்றே அரசியல் தலைவர்களின் பிறந்த நாட்களும் கொண்டாடப் படுகின்றன. அது இவ்வாறு இருப்பது பரிதாபத்திற்குரியதே. தனிப்பட்ட முறையில், என்னுடைய பிறந்த நாள் கொண்டாடப் படுவதை நான் விரும்பவில்லை. நான் ஓர் அதீத ஜனநாயகவாதியாக இருப்பதால், மனித வழிபாட்டை நான் விரும்புவதில்லை. இதை ஜனநாயகத்தின் ஒரு வக்கிரம் என்று கருதுகிறேன். ஒரு தலைவரைப் பாராட்டுவது, நேசிப்பது, மரியாதை செய்வது, மதிப்பது ஆகியவை அவற்றிற்கு அவர் தகுதியுடையவராயிருந்தால் அனுமதிக்கப் படக்கூடியவையே. தலைவருக்கும் அவரைப் பின்பற்று பவர் களுக்கும் இது ஏற்புடையதாகும். ஆனால் தலைவரை வழிபடுவது நிச்சயமாக அனுமதிக்கப்பட முடியாதது. அது இருவரையும் மனச்சோர்வடையச் செய்யும். ஆனால் இவையயல்லாம் இப்பொழுது நாம் எடுத்துக் கொண்டுள்ள வியத்திற்கு அப்பாற்பட்டதாகும். ஓர் அரசியல் தலைவர், தீர்க்கதரிசியின் அந்தஸ்தில் வைக்கப்பட்டு விடுவாரே யானால், அவர் தீர்க்கதரி சியின் பாத்திரத்தை ஆற்ற வேண்டும், தீர்க்கதரிசி செய்ததைப் போன்றே அவர் தன்னைப் பின்பற்று வோருக்கு நற்செய்தி வழங்க வேண்டும்.
தீண்டப்படாதாருக்கு நான் என்ன நற்செய்தி கொடுக்க முடியும்? நான் அவர்களுக்கு ஒரு நற்செய்தி கொடுக்க இயலாது. ஆனால் கிரேக்கப் புராணத்திலிருந்து ஒரு கதையை அவர் களுக்கு நான் சொல்லி, ஒரு நீதியை சுட்டிக்காட்ட முடியும். இந்தக் கதையானது கிரேக்க தேவதை டெமிடெருக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஹோமரின் துதிப்பாடலில் அடங்கியிருக்கிறது. இந்த மகத்தான பெண் தெய்வம், தனது மகளைத் தேடி அலைந்தபோது, கெலியோசின் தர்பாருக்கு எவ்வாறு வந்து சேர்ந்தார் என்பதை டெமிடெருக்கான இந்த துதிப்பாடல் எடுத்துக் கூறுகிறது. ஓர் அடக்கமான செவிலித்தாயின் உருவத்தில் வந்த தேவதையை யாரும் அடையாளம் காணவில்லை.
மெடொனீரா அரசி, தனக்குப் புதிதாகப் பிறந்த குழந்தை டெமேஃபூனை (பின்னர் டிரிபிள்டோலெமஸ் என்று அறிவிக்கப் பட்டவர்) அந்த செவிலித்தாயின் பராமரிப்பில் ஒப்படைத்தாள். ஒவ்வொரு மாலையிலும், மூடிய கதவுகளுக்குப் பின்னால் வீட்டிலுள்ள யாவரும் தூங்கிக் கொண் டிருக்கும் போது டெமிடெர் இளம் சிசு டெமோஃபூனை குரூரமான எண்ணத்துடன் அவனுடைய செளகரியமான தொட்டிலிலிருந்து வெளியே எடுப்பாள். ஆனால் எதார்த்ததில், அவனை இறுதியில் கடவுள்தன்மை பெறச்செய்யும் விருப்பத் துடன் அவனிடம் மிகுந்த பாசம் கொண்டிருந்தாள். பிறந்த மேனியுடன் கூடிய அந்தக்குழந்தையைக் கனல் வீசும் நெருப்புக் கங்குகளின்மீது கிடத்துவாள். இந்த டெமோஃபூன் குழந்தை அனல்வீசும் நெருப்புக் கங்குகளின் வெப்பத்தை சமாளித்து, இந்த வேள்வியிலிருந்து புதிய பலம்பெற்றது. அவனிடம் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட சக்தி, வீரார்ந்த தன்மை காணப்பட்டது. அனைத்து நம்பிகைக்கும் அப்பால் அதன் புகழ் ஓங்கியது. ஆனால் மெடொனீரா மிகவும் கவலையடைந்தாள், ஒரு நாள் மாலை, அந்தப் பரிசோதனை நடைபெறும் அறைக்குள் திடுப்பிரவேசமாய்ப் புகுந்தாள், தனது தவறான அச்சங்களினால் தூண்டப்பட்ட அவள், பணியாற்றிக் கொண்டிருந்த தேவதையை அப்பால் நெட்டித் தள்ளி குழந்தையை எடுத்துக் கொண்டு நடந்தாள். இதன் விளைவாக, அவள் குழந்தையைக் காப்பாற்றினாள். ஆனால் அதி மனிதனை (சூப்பர்மேன்) யும் இறுதியாகக் கடவுளையும் இழந்தாள்.
இந்தக் கதை நமக்கு எதை போதிக்கிறது? போராட்டம் மற்றும் தியாகத்தின் மூலமாக மட்டுமே அரிய செயல்களை சாதிக்க முடியும் என்பதை போதிக்கிறது என்று நான் கருதுகிறேன். நெருப்பாற்றில் நீந்தாமல் மனித மாண்போ அல்லது கடவுள் தன்மையோ பெற முடியாது. தீ தூய்மைப்படுத்து கிறது, தீ வலுப்படுத்துகிறது. அது போன்றுதான் போராட்டமும், துன்ப துயரம் அனுபவிப்பதும் கீழே அழுந்தப்பட்ட மனிதன் போராட்டத்திற்கும் கஷ்டப்படுவதற்கும் தயாராக யிருந்தாலொழிய அவன் மேன்மையை அடைய முடியாது. தனது வருங்காலத்தைக் கட்டியமைப்பதற்கு அவன் வாழ்க்கைச் செளகரியங்களையும் தற்காலத் தேவைகளையும் கூடத் தியாகம் செய்வதற்குத் தயாராக இருக்க வேண்டும்.
பைபிளின் (விவிலியத்தின்) மொழியை உபயோகிப்ப தெனில், வாழ்க்கையின் ஓட்டத்திற்கு அனைவரும் அழைக்கப் படுகிறார்கள். ஆனால் ஒரு சிலரே தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏன்? இதற்கான காரணம் தெளிவு, பெரும்பாலான ஒடுக்கப்பட்ட மக்கள் வாழ்க்கை யின் இந்த ஓட்டத்தில் பெருமிதம் அடையத் தவறுகிறார்கள், ஏனெனில் அவர்களின் எதிர்காலத் தேவைகளுக்காக, தற்காலத்தின் இன்பங்களை தியாகம் செய்வதற்கு உரிய துணிவோ உறுதியோ அவர்களிடத்தில் இல்லை.
இந்தக் கதையில் அடங்கியுள்ளதைக் காட்டிலும் கூடுதல் மேலான மற்றும் மகத்தான செய்தி வேறு இருக்க முடியுமா? நான் ஒன்றைக் குறிப்பிட முடியும். தீண்டப்படதவர்களுக்கு என்னால் சிந்தித்துப் பார்க்க முடிகின்ற சிறப்பும், பொருத்த மானதுமான செய்தி அதுதான், அவர்களது போராட்டத்தையும் துன்ப துயரங்களையும் நான் அறிவேன். விடுதலைக்கான தமது போராட் டத்தில் அவர்கள் என்னைக் காட்டிலும் கூடுதல் கஷ்டங்களை அனுபவித்திருக்கிறார்கள் என்பதை நானறி வேன். இவ்வளவிருந்தும் வேறு எந்த நற்செய்தியும் அவர்களுக்கு நான் வழங்க முடியாது. என்னுடைய செய்தி போராட்டம், கூடுதல் போராட்டம், தியாகம், கூடுதல் தியாகம் என்பதேயாகும். தியாகங் களை அல்லது கஷ்ட நஷ்டங்களை எண்ணாமல் போராடுவது மட்டுமே அவர்களுக்கு விடுதலையைக் கொண்டுவரும். வேறு எதுவும் அல்ல.
தீண்டப்படாதவர்கள் எழுச்சியுறுவதற்கும் எதிர்ப்பதற் கும் ஒரு கூட்டு சித்தத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். தமது பணியின் புனிதத் தன்மையில் அவர்கள் நம்பிக்கை வைத்து, தமது லட்சியத்தை அடைவதற்கு ஆணை பூர்வமான உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும். அவர்களின் கடமை மகத் தானது, நோக்கம் மிகவும் உன்னதமானது. எனவே தீண்டப் படாதவர்கள் ஒன்று திரண்டு பின்வருமாறு பிரார்த்தனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.
தாங்கள் எந்த மக்களிடையில் பிறந்துள்ளார்களோ அவர் களை உயர்த்தும் கடமையை உணர்ந்துள்ளவர்களே மேன்மை யடைவார்கள். தமது பொன்னான நாட்களை, தமது சக்தியை, ஆன்மாவையும் உடலையும், தமது பலத்தையும் அடிமைத் தனத்தை எதிர்க்கும் இயக்கத்தை முன்னெடுத்து செல்ல அர்ப்பணிப்பதற்கு சபதம் மேற்கொள்பவர்களே மேன்மை யடைவார்கள். நல்லது வந்தாலும், கெட்டது வந்தாலும், சூரிய ஒளி வீசினாலும், புயல் வீசினாலும், கெளரவம் வந்தாலும், அவமரியாதை ஏற்பட்டாலும் தீண்டப்படாதவர்கள் தமது மனித மாண்பை பூரணமாகத் திரும்பப் பெறுகின்ற வரையில் போராட்டத்தை நிறுத்துவதில்லை என்று சபதமேற்பவர்களே மேன்மையடைவார்கள்.
‘ஜெய்பீம்’ இதழ் வாசகர்களுக்கு
டாக்டர் அம்பேத்கரின் எழுதிய வாழ்த்துச்செய்தி