“மதம் மாறுவதாலே பெயர்கள் மாறிவிடும் / பெயர்கள் மாறுவதால் உறவுகள் வலுவடையும் / உறவுகள் வலுவடைந்தால் உரிமைப் போர் தொடங்கும் / யுத்தப் பாதை ஒன்றே அமைதிக்கு வழிவகுக்கும்”
– என்ற தலித் சுப்பையாவின் பாடல், பெயர்களை மாற்றுவதால் நிகழும் சமூக மாற்றத்தை தமிழகத்தின் தலித் மேடைகள் தோறும் ஒலிக்கிறது. இக்கருத்துக்கு வலுசேர்க்கிறது தமிழ் முதல்வனின் பெயர் மாற்றம். கண்ணன் என்ற பெயர் தனித்தமிழ் சார்ந்த பெயராக இருப்பினும், அதில் அடிக்கும் ‘இந்துக்கவுச்சி’யால் அதை நிராகரித்து, தொல் குடிகளே தமிழர்களில் முதலானவர்கள் என்பதை அறிவிக்கும் பொருட்டு, தமிழ் முதல்வன் என்று பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்!
உலகப் புகழ் பெற்ற கீரிப்பட்டியினை பூர்வீகமாகக் கொண்டவர் தமிழ் முதல்வன். நாட்டுப்புறக் கலைகள் மிகுந்திருக்கும் ஆ. கொக்குளத்தில் பிறந்தவர். பவுத்த நெறியில் வாழ்ந்த தம் முன்னோர்கள் கீரிப்பட்டியிலிருக்கும் தங்களின் நிலங்களை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு கொடுத்து விட்டு இங்கு குடியேறியபோது, அழகன் – கருப்பாயம்மாள் ஆகிய இணையருக்கு மகனாகப் பிறந்தார்.
அவருடைய முதல் கவிதை நூலான ‘ஆயுதக் கோடுகள்’ – புதிய கண்ணோட்டத்தை வாசிப்பவர்களுக்கு ஏற்படுத்துகிறது.
தங்கள் முன்னோர்கள் நிலங்களை எல்லாம் இழந்து ஆ. கொக்குளத்தில் விவசாயக் கூலியாக வேலை செய்ய நேர்ந்துவிட்ட இடங்களில், ஆதிக்க சாதியினரின் உணவையோ நீரையோ வாங்க மறுத்து, அவர்களின் பாத்திரங்களைத் தொட மறுத்து, சாதி ஆதிக்கத்தை எதிர்த்ததைத் தன் எழுத்தில் கொண்டு வருகின்ற ஆற்றல், தமிழ் முதல்வனுக்கு இருக்கிறது. ஆங்கில இலக்கியம் படித்த இவருக்கு, படிக்கின்ற காலத்தில் சாதி இந்துக்களின் தடைகள் ஏராளமாக இருந்ததாகத் தெரிவிக்கிறார். அந்தத் தடைகளை எல்லாம் தகர்த்து, இன்றைக்கு ஓர் ஆக்கவாளியாக மிளிர்கிறார்.
தன்னுடைய அனுபவங்களின் மேல் நின்று கொண்டு தான் அநீதிக்கு எதிராக, ‘மனிதம்’ என்ற இதழை அவரால் கொண்டுவர முடிந்தது. அந்த இதழைக் கொண்டு வருவதில் பெரும் சவால்களையும் அச்சுறுத்தல்களையும் அவர் சந்தித்திருக்கிறார். பக்தி இலக்கியங்களைச் சுமந்து, தமிழும் தலித்துகளுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கருதும் தமிழ் முதல்வன், ஊடகங்களை தலித்துகள் கைப்பற்ற வேண்டும்; தலித் விடுதலைக்கு அவற்றைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்.
தமிழ் முதல்வனின் கவிதைகள் மிக நுட்பமானவை. பூடகமான மொழியில் எழுதி, ஒளிவு மறைவின்றி வரக்கூடிய எழுத்துக்களை குறிப்பாக, தலித் ஆக்கங்களை ‘வெற்று முழக்கம்’ என்று புறந்தள்ளுபவர்களுக்கு எதிராக அவர் ஒரு கவிதையை எழுதியுள்ளார் :
‘எனக்குப் புரியாமல் எழுதியதால்அறிவாளியானாய் / உனக்குப் புரியாமல் எழுதியதால் / அறிவாளியானேன்” என்று தொடங்கி, இத்தகைய எழுத்துக்களால் ஒன்றும் நிகழப் போவதில்லை என்பதை – ‘இடையில் அப்படியே இருக்கிறது சமூகம்’ என்று எழுதுவதன் மூலம் நிலைநிறுத்துகிறார்.
உடல் மீதான தீண்டாமை பருப்பொருளானது, சொற்கள் அரூபமான அதே நேரத்தில், ஆற்றல் கொண்டவையாக மாறி தீண்டாமையை மிகவும் எளிதில் நிலைநிறுத்திவிடும். இதை தமிழ் முதல்வன் எல்லோருக்கும் பிடித்த சொல்லில் – அவர் இல்லை என்றும், அவருக்குப் பிடித்த சொல்லில் பிறர் இல்லை என்றும் உடலே ஒரு சொல்லாகி, பிறருக்கும் அவருக்குமான தொடர்பினை அல்லது பிரிவினை ஏற்படுத்துகிறது என்பதைக் கூறுகிறபோது, தன்னை ஒரு நவீன கவிஞராகவும் ஆக்கிக் கொள்கிறார்.
தமிழகச் சூழலில் சாதிக்கு எதிராகவும், ஈழச்சூழலில் தமிழர்களை மீட்டெடுக்கும் அன்பின் எழுத்தாகவும் அமைகிறது தமிழ்முதல்வனின் கவிதைகள். ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆக்க மனநிலையை தக்க வைத்துக் கொள்ளும் பொறுப்பு, விளிம்பு நிலைச் சமூகத்தின் ஆக்கவாளிக்குத் தேவையாயிருக்கிறது. தமிழ் முதல்வனிடம் அத்தகைய பொறுப்புடன் இயங்க வேண்டும் என்னும் ஆதங்கம் இருக்கிறது.
உலகத்தின் எந்த மூலையில் ஒடுக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடினாலும் அவர்களோடு தன்னை இணைத்துக் கொள்வது இன்றியமையாதது. “…. மூடிய என்னிமை துளைத்து / விழுந்த ஈழச்சதைகளின் குருதிகள் / விழிகள் நிரம்ப எழுந்த போது / என்னைச் சுற்றியும் / உறங்கிக் கொண்டேயிருக்கின்றன பிணங்கள்” என்று எழுதுகின்ற வரிகளில், சகமனிதன் மீது கொள்ளுகின்ற நேயம் வெளிப்படுகிறது.
உள்ளுறுப்புகள்கூட பயன்படா நிலையில் / அப்படியே புதைப்பதா அல்லது எரிப்பதா / ஞானவெட்டியான்களிடம் மய்யம் கொண்டிருக்கிறது / விவாதங்கள் மட்டுமே ஈழச் சிக்கல் இன்றைய தமிழக அரசியலில் பகடைக்காயாக மாற்றப்பட்டு, தமிழர்களின் உயிர்களை காய்களாக வெட்டி விளையாடும் கொடுமையை விவரிக்கும் கவிதையில், தமிழ் முதல்வனின் பேனாவிலிருந்து விழும் சொற்கள் வீரியம் மிகுந்திருக்கின்றன. வெட்டியான் எனப்படும் தொழிலை இழிதொழில் என்று ஒதுக்கியவர்கள், ஞானவெட்டியான்களாக மாறி விடுதலையைக் குழிதோண்டிப் புதைக்கின்றனர். ஆனால் அவர்களின் விவாதங்கள் விண்ணைப் பிளப்பதாக இருக்கின்றன.
இந்நிலையில், சாதிச் சவுக்கடியில் வதைபட்டுக் கொண்டிருக்கும் தலித்துகள் மட்டுமே ஈழ மக்களின் வேதனையை உண்மையாக உணர முடியும் என்பதையும்; உலக அளவில் கருப்பின மக்களோடு தலித்துகளே அடையாளப்படுத்திக் கொள்ள முடியும் என்னும் கோட்பாட்டை வலியுறுத்துகிறது, அவருடைய ‘தொலைவலி’ என்னும் கவிதை.
சாதியைத் தகர்ப்பதற்கு குடும்ப அமைப்பில் மாற்றத்தையும், குடும்பங்கள் அமைவதற்கு சாதி–மத மறுப்பையும் நம் முன்னோர்கள் கோரியிருக்கின்றனர். ‘கலப்புத் திருமணம்’ என்ற சொல்லாடலையே எதிர்த்து, அதை சாதி மறுப்புத் திருமணம் என்று கூறியவர் பெரியார். ஆனால் காலங்கள் கடந்த பின்னும் எத்தனையோ அறிவியல் மாற்றங்கள் நிகழ்ந்த பின்னும் – இன்னும் திருமண விளம்பரங்களில் வரும் சாதியின் ஆதிக்கத்தை தன் கவிதையில் பகடியாக்குகிறார் :
“பெயருக்குப் பதில் சாதி / பண்புக்குப் பதில் மதம் / மண மக்கள் தேவை விளம்பரங்கள் / இணைத்துக் கொண்டிருக்கின்றன விலங்குகளை / பிரித்துக் கொண்டிருக்கின்றன மனிதர்களை”
கவிதையில் சொற்களை கோர்ப்பதும் அவற்றைத் தன் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரிப்பதும் ஒரு கவிஞனுக்குரிய உரிமை. அதைச் சிறப்பாகக் கையாள்கிறார் தமிழ் முதல்வன். தன் வாழ்வுச் சூழலில் மேற்கொள்ளப்படும் நெருக்கடிகள், வாழ்வின் மீது சுமத்தப்பட்ட பாரங்கள் ஆகியவை அவருடைய கவிதைகளில் வெளிப்படுவதைக் காட்டிலும் சமூகம் சார்ந்து அவர் கொண்ட சிந்தனைகளே அவருடைய கவிதைகளாக வெளிப்படுகின்றன.
மயக்கும் மாயச் சொற்களைக் கொண்டு படித்தவர்களைஎல்லாம் படுத்துறங்க வைக்கும் முனை மழுங்கிய தட்டை யான எழுத்துக்கள், தன்னுடைய எழுத்துக்கள் அன்று என்பதையும் மனித உறுப்புகளைச் சொல்லி அதிர்ச்சியூட்டி, அதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும் குறுக்கு எண்ணம் தனக்கில்லை என்பதையும் தன் கவிதைகள் மூலம் சொல்லாமல் சொல்லிவிடுகிறார் தமிழ் முதல்வன்.
ஆதிக்கத்தைத் தகர்க்கும் காலத்தைக் காட்ட மறுக்கும் கடிகாரத்தினையும், கணக்குத் தீர்க்காமல் கிழிந்திடும் நாட்காட்டியையும் புறக்கணித்து, தலித்துகள் அவர்களுக்கான காலத்தை உருவாக்க மீளாய்வு செய்து, அதை எப்படி நிலைநாட்ட முடியும் என்பதை கூறும்போது, அவருக்குத் தேவைப்படும் பொருட்கள் – சாதி இந்துக்களால் மறுக்கப்பட்ட தோளில் அணியும் துண்டு, உரக்கச் சொல்லப்படும் புரட்சியாளர் அம்பேத்கர் பெயர், போடக்கூடாது என தடுக்கப்பட்ட மிதியடிகள், அவர்களால் பிடுங்கப்பட்ட நிலம் முதலியவை.
இவற்றைச் சுட்டிக்காட்டி, வாழ்வில் அடைந்திருக்கும் சமூக முன்னேற்றத்தை குறிப்பிடும்போது, ஒருவேளை ஆதிக்கசாதிக்காரன் தற்கொலை புரியவும் கூடும் என்னும் அவரின் உளப்பாங்கு நோக்கத்தக்கது. கணினி சமூகமாக மாறியிருந்தாலும், அறிவியல் கருவிகள் எப்படி சாதிக்கு சாதகமானவையாக இருக்கின்றன என்பதையும், அவற்றை எல்லாம் தூர எறிந்துவிட்டு, மனிதனைப் பேசும் ஏதாவதொரு பொருளைச் செய்ய வேண்டும் என்னும் ஏக்கம் கவிதையாகி இருக்கிறது. இது, இவருடைய தனித்தன்மை. ஒடுக்கப்பட்ட மக்களின் மனநிலையில் நின்று வெளிப்படும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர் தமிழ் முதல்வன்.
எந்நிலை கண்டாலும் மறுப்பு ஒன்று மட்டுமே மானத்தைக் காத்துக் கொண்டிருக்கிறது என்னும் அவர், ஊடகத்தை தலித்துகளுக்கானதாக மாற்ற வேண்டும் என்னும் அவாவின் வெளிப்பாடாகவே ‘மக்கள் திரைப்படக் கழகம்’ ஒன்றை நிறுவி செயல்பட்டு வருகிறார். தற்பொழுது மதுரையில் வசிக்கும் தமிழ் முதல்வன், இருள் தீண்டும் இடமெங்கும் ஓய்வற்று வெளிச்ச வரிகளை எழுத முனையும் பேனாக்காரர்.
– யாழன் ஆதி