நான் புலி; என்னோட நகத்தையும் பல்லையும் புடுங்கிட்டு என்னை பூனையாக்கிட முடியுமா உங்களால்? புலியத்தான் கூண்டுல அடைப்பானுங்க. பசுவ மரத்துல கட்டுவானுங்க. ஏந்தெரியுமா?புலி என்øனக்காவது ஒரு நாளைக்கு பாஞ்சிடும்” என்று உணர்ச்சிப் பொங்க பேச, எதிர்முனையில் என்னால் அமைதியாக கேட்டுக் கொள்ளத்தான் முடிந்தது. அத்தனை உணர்வுப் பெருக்கும் நேர்மையும் பற்றியெரிய பேசியவர் கரன்கார்க்கி. சென்னையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். “கறுப்பர் நகரம்’ என்று ஆங்கிலேயர்களால் அடையாளப்படுத்தப்பட்ட வடசென்னை அவர் வாழிடம்.கிராமத்தில் வாழ்ந்து, தங்களுடைய முன்னோர்களின் வாழ்வியலைக் கதையாடல்களாக்கிய தலித் எழுத்தாளர்களில், சென்னையில் பிறந்து கூவத்தின் கரைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட சென்னை நகர தலித் மக்களின் வாழ்க்கையை – “அறுபடும் விலங்கு’ என்னும் நாவலால் பேசியவர் கரன்கார்க்கி. தினகரன் என்ற தன் இயற்பெயரை மக்சீம் கார்க்கியின் நினைவாகவும், ரஷ்ய இலக்கிய வாசிப்பின் ஆழத்தை உணர்த்துவதற்காகவும் கரன்கார்க்கி என்று புனைந்து கொண்டவர். கரன்கார்க்கியின் உரையாடல்கள் தீர்க்க முடியாத அவலங்களைப் பேசுவதாகவும், சதா கேள்விகளை எழுப்புவதாகவும், தன்மீதும் தன் சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்ட காயங்களுடனான அவமானங்களைக் குறித்ததாகவும் – முந்நூறு ஆண்டுகளுக்கான பாரிய வரலாற்றைப் பதிவு செய்யும் வாஞ்சை மிகுந்ததாகவும் இருக்கிறது.
வாசிப்பின் மீதும் கல்வியின் மீதும் தீராத தாகத்தோடு இருப்பவர் கரன்கார்க்கி. அதிகளவில் நூல்களை வாசிக்கும் பழக்கம் கொண்ட அவரின் போக்கை மாற்றியது – “இவர்தான் லெனின்’ என்னும் நூல்! அதை வாசிக்கும்போது, அவர் அடைந்த மனநிலையினை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஆனால், ரஷ்ய இலக்கியங்களைப் போல வாழ்வைச் சொல்லக் கூடியனவாக தமிழ்க் கதைகள் இல்லை என்பது அவர் கருத்து. பின்னர் கே. டேனியலின் நூல்களை வாசிக்கும்போதுதான் தனக்கு தலித் இலக்கியத்தின் சரடு பிடிபட்டதாகக் கூறும் கார்க்கி, தான் சார்ந்திருக்கும் பகுதி மக்களின் வாழ்வை, வரலாற்றை எழுத வேண்டும் என்று முடிவு செய்து, அதற்கான தரவுகளைத் திரட்டத் தொடங்கினார். அதுதான் “அறுபடும் விலங்கு’ நாவல்.
2000 ஆம் ஆண்டு எழுதி முடிக்கப்பட்ட நாவலை 2009 ஆம் ஆண்டுதான் அவரால் நூலாக்க முடிந்தது. அவருடைய நாவலை வெளியிடுவதாக மூன்றாண்டுகள் தொடர்ந்து பொய் சொன்ன பதிப்பகங்களும் உண்டு. நாவலை வெளியிடுவதற்காக அவர் அலைந்து கொண்டிருந்தபோதுதான் யாழினி முனுசாமியின் “முரண்களரி’ தொடர்பு ஏற்பட்டு அதன் மூலம் நாவல் வெளிவந்திருக்கிறது. இந்நாவல், 336 பக்கங்களில் தலித் அரசியலைப் பேசுகிறது. தெளிவான தலித் அரசியலையும் அதற்கு தேவையான இந்துமத எதிர்ப்பையும் தன் பாத்திரங்களில் வைத்துப் பேசும் கலைத்திறன் கார்க்கிக்கு வாய்த்திருப்பது பாராட்டுக் குரியது. நாவலில் வருகின்ற ஆசிரியர் – மாணவர் பாத்திரங்கள் முக்கியமானவை. சாமுவேல் ஆசிரியர் தலித்தாகவும் மாணவர் சங்கரன் பார்ப்பனராகவும் உருவாக்கப்பட்டு, இருவருக்குமான உரையாடல்கள் இயல்பாகவும் அதே நேரத்தில் தலித் அரசியலை கூர்மையாகப் பேசுவதாகவும் அமைந்துள்ளது. புரட்சியாளர் அம்பேத்கர் குறித்தும் காந்தியின் அரசியல் குறித்தும் பாத்திரங்கள் பேசுவதாக அமைந்த உரையாடல்கள், தலித் கதையாடலுக்கான புதிய வெளியை உற்பத்தி செய்திருக்கின்றன.
அம்பேத்கர் மற்றும் அம்பேத்கரியல் இயக்கம் சார்ந்த உரையாடல்களை முன்வைப்பது என்பது, பல தலித் எழுத்தாளர் களால் கைகூடாத ஒன்று. ஆனால் கார்க்கி அதை செவ்வனே செய்திருக்கிறார். அம்பேத்கர் – காந்திக்கு இடையிலான அரசியல் மோதல், உச்சகட்டத்திலிருந்த வட்டமேசை மாநாட்டுக் காலங்கள் பற்றியெல்லாம் பாத்திரங்கள் பேசும்போது, வாசகர்கள் தலித் அரசியலுக்கான வெளியினைப் பெறுகிறார்கள்.
இந்நாவலுக்கான அணிந்துரை எழுதிய பா. ரவிச்சந்திரன் கூறியதைப் போல, தேச விடுதலையைவிட சமூக விடுதலையைத்தான் தலித்துகள் விரும்பினார்கள் என்ற கருத்து நாவலில் விரவி இருப்பதைக் காணலாம்.
நாவல் வெளிவந்த பிறகு தனக்கு இன்னும் பொறுப்புகள் கூடியிருப்பதாகக் கூறும் கரன்கார்க்கி, அவருடைய அப்பட்டமான தலித் நாவலான “அறுபடும் விலங்கு’ குறித்து தலித் எழுத்தாளர்களோ, தலித் இதழ்களோ எதுவுமே பேசவில்லை என்னும் வருத்தம் அவருக்கு இருக்கிறது. இந்நாவலுக்கு வாசகர்கள் காட்டும் ஆதரவு தனக்கு உந்து விசையாக இருக்கிறது என்கிறார். நேரில் சந்திக்கும் மாணவர்களும் ஆய்வாளர்களும் தன்னுடைய நாவலுக்காக தன்னிடம் அன்பு காட்டுகின்றனர்; ஆனால், தலித் எழுத்தாளர்கள் தன்னை கண்டும் காணாமல் போய்விடுகின்றனர் என்கிறார்.
“ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்துதான் சிறந்த இலக்கியம் வரும். நான் அத்தகைய சிறந்த இலக்கியத்தை எழுதுவேன்” என்று தன்னம்பிக்கையுடன் கூறும் கரன்கார்க்கி, அதற்காக வட சென்னை மக்களின் வாழ்வியலைப் படிக்கிறார். பல எழுத்தாளர்களின் கதைகளை தான் வாசிக்காவிட்டாலும் மக்களை வாசிக்கிறேன் என்கிறார்.
வெள்ளைக்காரர்களின் வருகை, தலித் மக்களுக்கு காலம் தந்த கொடை. அவர்கள்தான் நமக்கு கல்வியை அளித்தனர். முந்நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை நகரத்தின் மொழி, ஆங்கிலேயர்களால்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். உள்ளூரில் சிவப்பாக இருக்கும் மேல்தட்டு மக்கள் இவர்களோடு பேசியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், சிவப்பாய் மஞ்சள் பூசிய முகத்தோடு எங்கள் பகுதிக்கு வரும் இட்டலி விற்கும் பெண்ணையே தமிழச்சி என்றுதான் எங்கள் பகுதி மக்கள் கூறிக் கொண்டிருந்தனர். தாங்களும் தமிழர்கள் என்பதை அவர்கள் அறியாமலேதான் இருந்தார்கள். எனவே, ஒலிக்குறிப்புகளோடு வாழ்ந்திருந்த மக்களுடன் உரையாடியவர்கள் வெள்ளைக்காரர்கள்தான்; அவர்கள் பேசிய கொச்சைத் தமிழே “துரை பேசுகிறார் என்றால், சரியாக இருக்கும்’ என்று இவர்கள் பேசியிருப்பார்கள். அதுதான் இன்றைய சென்னை சேரித் தமிழாக இருக்கிறது.
“கீது’, “வாமே’, “போமே’ போன்ற சொல்லாடல்கள் எல்லாம் இப்படித்தான் வந்திருக்க வேண்டும் என்றும், “வா மேன்’ “போ மேன்’ என்பதுதான் “வாமே போமே’ என்று மாறியுள்ளதாகக் கூறுகிறார் இவர். இத்தகைய மொழியாடல்களுடன் வாழ்கின்ற மக்களின் வரலாறுகள் பதிவாக்கப்பட வேண்டும் என்கிறார் கரன்கார்க்கி.
கரன்கார்க்கியின் இரண்டாவது நாவல் “கறுப்பு விதைகள்’. இந்நாவல், சென்னை நகரத்தில் உள்ள குப்பைப் பொறுக்கும் மூன்று சிறுவர்களின் வாழ்க்கையைப் பற்றியது. கல்வி உரிமைக்கான சட்டங்கள் இருந்தும் இன்றும் சாலைகளில் பெரும் பைகளைத் தூக்கிக் கொண்டு குப்பைகளைக் கிளறுகிற குழந்தைகள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் தானே சட்டங்கள்கூட சட்டை செய்யாமல் இருக்கின்றன. முக்கியமாக உழைக்கும் சிறார்களின் வாழ்க்கைப் பதிவாக நாம் “கறுப்பு விதை’களைச் சொல்லலாம்.
நேரடியான தீண்டாமைக் கொடுமை அனுபவம் ஏதாவது உண்டா எனக் கேட்டதற்கு, சிறுவனாக இருந்தபோது வந்தவாசிக்கு அருகில் உள்ள தன்னுடைய தாத்தா ஊருக்குப் போகும்போதெல்லாம் சாதி இந்துக்கள் எதிரில் வரும்போது போகக்கூடாது என தடுக்கப்பட்டது நினைவுக்கு வருகிறது என்கிறார். அப்போது அதை தான் உணரவில்லை எனவும், தற்போது அதன் கொடுமையும் வெம்மையும் தன்னைத் தாக்குவதாகவும், திண்ணியத்திலும் மேலவளவிலும் தானே துன்பப்படுவதாகவும் உணர்வதாகக் கூறுகிறார். அத்தகைய போக்குகளை எல்லாம் ஆக்கங்களாக உருவாக்க வேண்டும் என்பதுதான் கரன்கார்க்கியின் ஆவல்.
செம்மாந்த நிலையில் தலித் இலக்கியம் வளர்ந்து கொண்டிருப்பதாகவும், உன்னதமான இலக்கியங்களை தலித்துகள்தான் உருவாக்க முடியும் என்பதும் கரன்கார்க்கியின் கருதுகோள். மற்றவர்கள் உருவாக்குவது அழகியலோடு இருந்தாலும், அது வெறும் காகிதமாகத்தான் இருக்கும். மக்களின் விடுதலையைப் பேசாத இலக்கியம், காகிதக் கட்டு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. மனித விடுதலையை மீறிய அழகு எங்கிருக்கிறது என்ற அவருடைய கேள்வி ஆய்வுக்குரியது.
இந்து மதத்திலிருந்து விடுபடுவதுதான் தலித் விடுதலை சாத்தியப்படுகின்ற புள்ளி என்னும் அம்பேத்கரிய கொள்கையில் மிகவும் அழுத்தமாக இருக்கிறார் கரன்கார்க்கி. நான் சேரியில் இருக்கிறேன் என்று சொல்வதற்கு எப்படி நா கூசுகின்றதோ, அதைப் போலத்தான் ஒரு தலித், “தான் ஓர் இந்து’ என்று சொல்வதற்கு வெட்கப் பட வேண்டும். அந்த அசிங்கத்திலிருந்து விடுபடுவதுதான் வாழ்க்கையின் சாரம் என்று அவர் கூறும்போது அவருடைய கொள்கைப் பிடிப்பு நமக்குப் புலனாகிறது. இங்கிருக்கின்ற எல்லாமே மத ரீதியானதாகவே இருக்கின்றன. அவற்றை மாற்றி எழுதக்கூடிய வரலாற்றை, கலை இலக்கிய வடிவத்தை உருவாக்க வேண்டும் என்பதும் கார்க்கியின் எண்ணம்.
இணைய இதழ் ஒன்றில் அவர் தொடராக எழுதிய “கறுப்பர் நகரம்’ என்னும் நாவல் விரைவில் வரவிருக்கிறது. தான் வாழ்ந்த வாழ்வை தன் மக்களின் வாழ்வை நீள்கதைகளாக ஆக்கித் தந்து கொண்டிருக்கிற கார்க்கி, தன்னை “படைப்பாளி’ என்று சொல்வதைவிட, இந்த சமூகத்திற்கு எழுத்துவேலை செய்பவன் என்று கூறுவதில்தான் மகிழ்வடைகிறார். அவருடைய எழுத்துகளை தொடர்ந்து வாசிப்பதுதான் அவருக்கு நாம் தரும் ஊக்கம். கரன்கார்க்கியைப் போன்றவர்கள் ஒருசிலர்தான். அதில் அவர் தன் சுவடுகளை ஆழப் பதிக்கிறவர்.
– யாழன்ஆதி
கரன்கார்க்கியை தொடர்பு கொள்ள : 98845 18986