இந்துக்களுக்கும் இந்து மதத்துக்கும் நான் பயன்படுத்தும் அளவுகோல் மிகவும் கடுமையானது. இந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால், இன்றுள்ள நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் தோற்றே போகும் என்கிறார் ‘மகாத்மா’. என் அளவுகோலின் தரம் உயர்வானது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால், அவை உயர்வானவையுõ தாழ்வானவையுõ என்பதல்ல பிரச்சனை. அவை சரியானவையுõ என்பதே.
சமூக நீதியின் அடிப்படையிலான சமூக அளவுகோலைக் கொண்டே மக்களையும் அவர்களின் மதத்தையும் மதிப்பிட முடியும். மக்களின் நன்மைக்கு அவசியமானதே மதம் என்று கொள்ளப்பட்டால், வேறு அளவுகோலைப் பயன்படுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. இந்துக்கள் மீதும் இந்து மதத்தின் மீதும் நான் பயன்படுத்தும் அளவுகோலே மிகச் சரியானது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன். அதைவிட சரியான வேறு எந்த அளவுகோலும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
நமக்குத் தெரிந்த எல்லா மதங்களும் என் அளவுகோலின் முன் தோற்றுப் போகலாம் என்ற கருத்து உண்மையாயிருக்கலாம். ஆனால், இந்தக் கருத்து, ‘மகாத்மாவை’ இந்துக்களின் தானைத் தலைவன் என்பதாகவும் இந்து மதத்துக்கு ஆதரவாகவும் போய்விடக் கூடாது. அப்படிப் போனால் அதற்கும், ஒரு பைத்தியக்காரன் மற்ற பைத்தியக்காரர்களுக்கு ஆதரவாக இருப்பது அல்லது ஒரு குற்றவாளி மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பது என்பதற்கும் வித்தியாசம் இருக்காது. நான் குற்றம் சாட்டும் நிலைமைகள் மீது எனக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புக்கு இந்துக்களும் இந்து மதமுமே காரணம்.
இந்த உலகம் மிகவும் குறைபாடுகள் கொண்ட உலகம். இதில் வாழவிரும்புபவன் அதன் குறைபாடுகளை சகித்துக் கொண்டுதான் வாழ வேண்டும் என்பதை நான் அறிவேன். நான் இருந்து வாழவேண்டிய இந்த சமுதாயத்தின் குறைபாடுகளைச் சகித்துக் கொள்ள நான் தயார். ஆனால், தவறான லட்சியங்களை வளர்க்கும் சமுதாயத்திலோ, சரியான லட்சியங்கள் இருந்தாலும் அதன்படி சமூக வாழ்வை நடத்தாத சமூதாயத்திலோ எனக்கு சம்மதமில்லை.
இந்து மதமும் இந்துக்களும் தவறான லட்சியங்களை நாடுவதாலும் தவறான சமூக வாழ்வை நடத்துவதாலும்தான் நான் அவர்களை வெறுக்கிறேன். அவர்களின் சமூக நடத்தையிலுள்ள குறைபாடுகள் மீதல்ல என் சண்டை. அதைவிட அடிப்படையானது. அதாவது அவர்களின் லட்சியங்களைப் பற்றியது.
இந்து சமூதாயத்துக்கு ஒரு தார்மீக மறுமலர்ச்சி தேவைப்படுகிறது. இதைத் தள்ளிப் போடுவது அபாயகரமானதாகுமென்று தோன்றுகிறது. இந்த தார்மீக மறுமலர்ச்சியைத் தீர்மானித்துக் கட்டுப்படுத்தயாரால் முடியும் என்பதே கேள்வி. அறிவு மலர்ச்சி பெற்றவர்களும் தம் அறிவு தெளிவால் பிறந்த முடிவையே துணிவுடன் செயல்படுத்தும் நேர்மை கொண்டவர்களுமே மேற்சொன்ன தார்மீக மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
இந்த அளவுகோலின்படி பார்த்தால், இன்றுள்ள முன்னணி இந்து தலைவர்கள் இந்தப் பணிக்கு சுத்தமாக லாயக்கற்றவர்கள் என்பது என் கருத்து. அறிவு மறுமலர்ச்சியின் பாலபாடத்தைக்கூட அவர்கள் கற்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால், பாமரப் பெரும்பான்மையைப் போலவே எளிமையாக அவர்கள் தமக்குத்தாமே மயங்கி நிற்கவும் மாட்டார்கள். மற்றவர்களின் ஆதிகால அறியாமையில் தங்களுக்கு வசதியாக குளிர்காயவும் மாட்டார்கள்.
மாத்யூ அர்னால்டின் வார்த்தைகளில் சொன்னால், இந்துக்கள் “செத்துப்போன உலகத்துக்கும் இன்னும் பிறக்க சக்தியற்ற உலகத்துக்கும் இடையில் அல்லாடுபவர்கள்” அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? தங்களின் வழிகாட்டியாக அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள “மகாத்மாவோ சிந்தனையை நிம்புபவர் அல்ல. எனவே, அனுபவ சோதனைக்குத் தாக்குப்பிடிக்கும் உருப்படியான உதவியை அவரால் தர முடியாது.
மக்கள் அறிவாளி வர்க்கத்தை உதவிக்கு எதிர்பார்க்கிறார்கள். ஆனால், இந்த அறிவாளி வர்க்கத்தினரோ நேர்மையற்றவர்களாக இருக்கிறார்கள்; அல்லது மக்களுக்கு கல்வி தந்து சரியான வழிகாட்டும் அக்கறையற்றவர்களாக இருக்கிறார்கள். உண்மையாகவே நாம் ஒரு மாபெரும் சோக நிகழ்ச்சியின் பார்வையாளர்களாக இருக்கிறோம். இந்த சோகத்தின் முன்னிலையில் “ஓ இந்துக்களே! இதுதான் உங்கள் தலைவர்களின் லட்சணம்” என்று அங்கலாய்க்க மட்டுமே நம்மால் முடிகிறது.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு’ : 1 பக்கம் : 94-96)