‘பரியேறும் பெருமாள்,’ ‘அசுரன்’ ஸ்டைலில் ஒரு படம் எடுத்து ஒட்டுமொத்தத் தெலுங்குத் திரையுலகின் வாழ்த்து மழையில் நனைந்துகொண்டிருக்கிறார் டோலிவுட் இயக்குநர் கருணா குமார். வழக்கமான தெலுங்கு சினிமாக்களில் இருந்து வேறுபட்டு தனித்த அடையாளத்துடன், லாக்டெளனுக்கு முன் களமிறங்கியது ‘பலாசா 1978.’ இன்று ஆந்திராவின் மெகா ஸ்டார்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை அதுதான் ஹாட் டாப்பிக். தனது முதல் படத்திலேயே முத்திரை பதித்த இயக்குநர் கருணாகுமார், பத்து வருடங்களுக்கும் மேலாக சென்னையில் இருந்ததால், ‘`தமிழ் பேச மட்டுமல்லாமல், எழுதக்கூடத் தெரியும்’’ என்கிறார். அவரிடம் பேசினேன்.
“முதலில் உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க…’’
“என் சொந்த ஊர் ஆந்திராவுல 200 குடும்பங்கள் மட்டுமே வாழுற ஒரு குக்கிராமம். அதனால, நான் பத்தாவது படிச்சு முடிச்சவுடனே சென்னைக்கு ஓடிவந்துட்டேன். ஹோட்டல் வேலையில தொடங்கி, சென்னையில நான் பார்க்காத வேலைகளே இல்லை. அதேநேரம். இலக்கியம் மீதிருந்த ஆர்வத்தால தெலுங்குல சிறுகதைகள் எழுதிட்டிருந்தேன். அங்கே எனக்கு நல்ல வரவேற்பும் அறிமுகமும் உண்டாச்சு. அதன் மூலமா தெலுங்கு சினிமாவுக்குள்ள நுழைஞ்சேன். முதல்ல தெலுங்கு-தமிழ் டப்பிங் படங்களுக்கு வசனம் எழுத ஆரம்பிச்சு, அப்படியே படிப்படியா திரைக்கதை எழுதக் கத்துக் கிட்டேன். நான் இதுவரை எந்த இயக்குநர் கிட்டயும் அசிஸ்டென்ட்டா வேலை பார்த்தது இல்லை. சினிமா பார்த்துதான் படம் எடுக்கக் கத்துக்கிட்டேன். அப்படியே முதல் படமான ‘பலாசா’வையும் எடுத்திட்டேன். மக்கள்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு. இன்டஸ்ட்ரிலயும் நல்லா இருக்குறதா பாராட்டினாங்க. அடுத்து நாலு படங்கள் ஒப்பந்தம் ஆகியிருக்கு. அதுல மூணு படம் ‘பலாசா’ ரிலீஸுக்குப் பிறகு புக் ஆன படங்கள்.’’
‘`வழக்கமான தெலுங்கு சினிமாக்களில் இருந்து மாறுபட்ட சினிமாவாக வெளிவந்திருக்கிறதே பலாசா 1978?’’
‘`நான் தெலுங்கு மட்டுமல்லாம தமிழ், மலையாளம், இந்தி, கொரியன் உள்ளிட்ட பிற மொழிப்படங்களையும் விரும்பிப் பார்ப்பேன். அப்போதான், மற்ற மொழிகள்ல வெளியாகுற மாதிரி உண்மைக்கு நெருக்கமா, யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்குற மாதிரியான படங்கள் தெலுங்குல குறைவுன்னு தெரிஞ்சுக்கிட்டேன். தமிழ்லயும் கமர்ஷியல் சினிமாக்கள் எடுக்குறாங்க. ஆனால், ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்கள்கூட நல்ல கதையம்சம் கொண்ட படங்கள்லயும் நடிக்க முன்வர்றாங்க. தெலுங்குல அப்படி நடக்குறதே இல்ல. தெலுங்கு இலக்கியம் நல்ல செழிப்பானது. அங்கே கதைகளுக்குப் பஞ்சமே இல்லை. வங்காள இலக்கியத்துக்கு அடுத்ததா தெலுங்குலதான் ஒரு லட்சத்துக்கும் மேலான சிறுகதைகள் வெளிவந்திருக்கு, ஆனா, நல்ல கதையமைப்பு கொண்ட யதார்த்த வாழ்க்கையைப் பிரதிபலிக்குற படங்கள் தெலுங்குல வர்றதே இல்ல.’’
‘`முதல் படத்திலேயே சாதிப் பிரச்னையைக் கையிலெடுக்கக் காரணம் என்ன?’’
‘`சமூகத்தைக் கூர்ந்து கவனிக்க வேண்டியது ஓர் இலக்கியவாதியோட அடிப்படைக் கடமையா நான் பார்க்குறேன். ஒரு சிறுகதை ஆசிரியரா இந்த சமூகத்தை நான் கவனிக்கும்போது, இங்க முதன்மையான பிரச்னையா இருக்குறது சாதிதான். மற்ற எல்லாப் பிரச்னைகளையும்விட சாதிப் பிரச்னைதான் உடனடியா தீர்க்கப்பட வேண்டியதாகவும் இருக்கு. தமிழ்நாட்டைவிட, ஆந்திராவில் சாதியக் கொடுமைகள், கொலைகள் அதிகம். சிறுவயதிலிருந்து நானே அதற்கு சாட்சியாகவும் இருந்திருக்கிறேன். அதுதான் காரணம்.’’
‘`இதுவரை தெலுங்கில் சாதியச் சிக்கல்கள் குறித்துப் பேசும் திரைப்படங்கள் வெளிவரவேயில்லை என்கிறீர்களா?’’
‘`அப்படிச் சொல்லவில்லை. ஒன்றிரண்டு திரைப்படங்கள் வெளிவந்திருக்கின்றன. ஆனால், மிகவும் மேலோட்டமாக, யாரும் நோகாதபடிக்கு வந்திருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், ‘நாங்கள் உங்கள் வாழ்க்கைக்கு ஒளி ஏத்துறோம், உங்களைக் காப்பாத்துகிறோம்’ என ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த கதாபாத்திரங்கள் தலித் கதாபாத்திரங்களை வாழவைப்பது போலத்தான் வெளிவந்திருக்கிறது. உண்மைநிலையை எடுத்துச் சொல்லும்வகையில் எந்தத் திரைப்படமும் வெளிவந்ததில்லை. ‘பலாசா’ அதைச் செய்திருக்கிறது.’’
‘`படத்தில் இசை சார்ந்த பதிவுகள், அதையொட்டிய கதாபாத்திர உருவாக்கங்கள் அதிகம். இதற்கு பிரத்யேகக் காரணம் எதுவும் உண்டா?’’
‘` ‘அமைதியான இந்த பூமியில முதல் சத்தம் உருவாக்குனதே நாங்கதான். அந்தச் சத்தம்தான், எல்லா விழாக்கள்லயும், வாழ்க்கை முழுவதும் உங்ககூட வருது’’ எனத் தெலுங்கில் தலித் மக்களின் இசையான தாரைதப்பட்டையைப் பற்றிய ஒரு நாட்டுப்புறப்பாடல் இருக்கிறது. அதன்படி தலித் மக்கள்தான் இந்த மண்ணின் ஆதிக்குடிகள். அவர்கள் இசைத்ததுதான் ஆதி இசைக் கருவிகள். அதனால், தலித் மக்களைப் பற்றிய படத்தில் இசை சார்ந்த பதிவு என்பது தவிர்க்க முடியாதது.’’
‘` ‘பலாசா’வில் தமிழ்ப் படங்களின் தாக்கம் அதிகமாக இருப்பதாகத் தெரிகிறதே. உதாரணமாக, தேர்தலில் போட்டியிட சீட் கேட்கும் காட்சி ‘புதுப்பேட்டை’யை நினைவுபடுத்துகிறதே?’’
‘` ‘அதிகாரம்தான் அத்தனை பூட்டுகளுக்குமான திறவுகோல்’ என அண்ணல் அம்பேத்கர் சொல்லியிருக்கிறார். ஆனால், தலித் மக்கள் தொடர்ந்து அரசியல் தளத்தில் புறக்கணிப்பட்டு வருகிறார்கள். இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்களாக, போஸ்டர் ஒட்டுவதற்கும், கொடி பிடிப்பதற்கும் மட்டுமே அவர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரு சில இடங்களில் விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால், பெரும்பான்மையாக இந்த நிலைதான் இருக்கு. அதைப் பதிவு செய்யவே படத்தில் அந்தக் காட்சியை வைத்திருந்தேன். அதேநேரம், தமிழ், மலையாளத் திரைப்படங்களின் தாக்கம் என்னிடத்தில் இருந்தால் அதை நான் ஆரோக்கியமான விஷயமாகத்தான் பார்க்கிறேன். பாலா, வெற்றிமாறன், பா.இரஞ்சித் எனத் தமிழில் எனக்குப் பல இன்ஸ்பிரேஷன்கள் உண்டு. அவர்களின் படங்களைப் பார்த்துத்தான் கதைசொல்லும் முறையை நான் கற்றுக் கொண்டேன். ‘பலாசா’வைத் தமிழிலும் எடுக்கலாம் என்று இருக்கிறேன்.’’
‘`படத்தில் கதாநாயகனின் பாத்திரம் ‘அடித்தால் திருப்பி அடி’ என்கிற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வன்முறையைத் தூண்டாதா?’’
‘’தலித் மக்களை மற்ற சாதியினர் இவ்வளவு காலம் கடுமையான ஒடுக்குறைக்கு ஆளாக்கியிருந்தாலும், யாரையும் அவர்கள் பழிவாங்க வேண்டும் என நினைக்கவில்லை. ஆனால், அவர்களை இன்னமும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்க வேண்டும் என யாராவது நினைத்தால் அவர்கள் பொறுத்துக்கொண்டிருக்க மாட்டார்கள் என்பதைப் பதிவு செய்யத்தான் ஹீரோ கதாபாத்திரத்தை அப்படி வடிவமைத்தேன்; வன்முறையைத் தூண்டுவதற்காக அல்ல.’’
Source ; Anandavikatan
இரா.செந்தில் கரிகாலன்