இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் சமூக விடுதலையை நோக்கமாகக் கொண்டு பயணம் செய்து கொண்டே இருந்த டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஹைதராபாத் மற்றும் உஸ்மானியா பல்கலைக்கழகம் மற்றும் நிஜாம் பேரரசர் மாளிகை என பல இடங்களுக்கு 1932 ,1938,1944, 1950 ,1953 களில் என்று பல தடவை ஆந்திர மண்ணில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் பயணம் செய்துள்ளார்.
இது பற்றிய பதிவுகள் ஆங்கிலத்தில் சிலவும் தெலுங்கில் சிலவும் வந்துள்ளன. இதுதொடர்பாக செய்திகள் கிடைத்தால் நண்பர்கள் பகிர வேண்டுகிறேன்.
1938
1938 டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் அவுரங்காபாத்தில் அவுரங்காபாத் மாவட்ட ஒடுக்கப்பட்டோர் வகுப்பு மாநாட்டிற்கு அம்பேத்கர் தலைமை ஏற்றார் .ஐதராபாத் சமஸ்தானத்தில் நடைபெற்ற தீண்டப்படாத வகுப்பாரின் முதலாவது மாநாடு இதுவேயாகும். வரவேற்புக் குழுவின் தலைவர் தீண்டப்படாத வகுப்பாரின் இன்னல்களை நிரல் படுத்திக் கூறினார்….ஹைதராபாத் தீண்டப்படாத மக்களிடம் சுயமரியாதை இயக்கத்தின் இன்றியமையாமையை வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் உரையாற்றினார்.
(பக்கம் 464- 465: டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு தனஞ்செயன் கீர் தமிழில் க.முகிலன்)
20/ 9/ 1944 வருகை:
வரலாறு காணாத வரவேற்பு
வைஸ்ராய் நிர்வாகக் கவுன்சில் உறுப்பினரான டாக்டர் அம்பேத்கர்
ஹைதராபாத்திற்கு வருகை தந்தார்.
டாக்டர் அம்பேத்கர் தென்னிந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது நிஜாம் ஆட்சிக்கு உட்பட்ட ஹைதராபாத் மாகாணத்திற்கு 20/9/1944 அன்று முதல் முறையாக விஜயம் செய்தார். வீகம் பெற்றோல் நிலையத்தில் ஹைதராபாத் அட்டவணைச் சாதியினர் கூட்டமைப்பு தலைவர் ஜே.சுப்பையா, திருமதி சுப்பையா, திருமதி ராஜ் மணி தேவி, திருமதி மத்ரே ஆகியோர் அவரை வரவேற்றனர்.
ஹைதராபாத் மாநில சமையல் இனத்தைச் சார்ந்த பெண்களும் ஆண்களும் அவருக்கு உற்சாகமாக வரவேற்பு அளித்தது என்றும் நினைவில் நிற்கும்.டாக்டர் அம்பேத்கருக்கும் அளித்த மரியாதை அணிவகுப்பு மிகச் சிறந்ததாக இருந்தது.இத்தகைய அணிவகுப்பு மரியாதை வைஸ்ராயிக்கும் கூட ஒருபோதும் கிடைத்து விடாது.அம்பேத்கர் வாழ்க என்ற முழக்கம் வானில் இயங்கும் போது எதிரொலித்தது செகந்திராபாத் ரயில் நிலையத்திலிருந்து பாச்-பந்து சேவாஹாலுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர் நிகழ்ச்சி நடந்த பந்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.இந்த நிகழ்ச்சியின் வரவேற்பு குழு தலைவரான பிரேம்குமார் டாக்டர் அம்பேத்கரை வரவேற்று பேசினார். சமே இல்லத் சம்மேளனத்தின் சார்பில் ஜே. எச். சுப்பையா உரை நிகழ்த்தினார்.
பெருத்த கரவொலிகளுக்கிடையே டாக்டர் அம்பேத்கர் பேச எழுந்தார்.
அவர் 45 நிமிடம் இந்தியில் பேசினார் அவரது கருத்தாழமிக்க இதயத்தை தொடும் அழகான பேச்சினால் வந்திருந்தோர் அனைவரும் கட்டுண்டனர்.அனைவரும் சமம் என்ற இடத்தின் கீழ் ஒன்றுபட்டு நிற்குமாறு கேட்டுக்கொண்டார்.அவரின் விரிவான உரைகளையும் செய்திகளையும் டைம்ஸ் ஆப் இந்தியா, பாம்பே க்ரானிக்கிள் உள்ளிட்ட பல்வேறு பத்திரிகைகளில் செய்திகளாக வெளியிட்டு உள்ளன
(பக்கங்கள் 393- 394-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பேச்சும் எழுத்தும் தொகுதி 37 தமிழ்)
1950 வருகை
“அவுரங்காபாத்தில் அவர் தொடங்க இருந்த கல்லூரி தொடர்பான பணியை முன்னிட்டு 1950 மே 19ஆம் நாள் டாக்டர் அம்பேத்கர் ஐதராபாத்திற்குச் சென்றார்.ஹைதராபாத்தில் அவர் தங்கியிருந்த பொழுது கொழும்புவில் பௌத்த இளைஞர் சங்கம் ஏற்பாடு செய்துள்ள பௌத்த மாநாட்டிற்கு தான் அழைக்கப்படுகின்ற செய்தியை அறிவித்தார்.”(பக்கம் 627-டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு-தனஞ்செயன் கீர்- தமிழில் முகிலன், மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி.)
1953 உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் கவுரவ டாக்டர் பட்டம்.
“தக்காணத்தில் உள்ள ஐதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழகம் 1953 ஜனவரி 12-ஆம் நாள் டாக்டர் அம்பேத்கரின் சிறப்புகளையும் சாதனைகளையும் மதித்துப் போற்றுகின்ற வகையில் அவருக்கு இலக்கியத்தில் சிறப்பு டாக்டர் பட்டம் வழங்கியது.அம்பேத்கரின் மேதைமைத் தன்மையையும் உயர்வினையும் அங்கீகரித்து அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த தந்தை என்பதைப் போற்றி அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பெருமை இந்தியாவிலேயே இப்பல்கலைக்கழகம் தான் பெற்றது”
(பக்கம் 665-மேற்படி நூல்)
- பேரா.க.ஜெயபாலன்