உமது உருவப்படம் பார்க்கையிலும்
ஊற்றெடுக்கும்
எமது அறிவின் தாகம்.
வானம் வழுக்கி விழுந்ததென
வகையாய் பொய்யுரைத்த
புராணப்புரட்டுகளால்
காலமெல்லாம்
குனிந்தே சுமந்தவரின்
முதுகை நிமிர்த்தியது
உனது அறிவு
தம் சாதி
உயர்வென்று காட்ட
வரலாற்றை திரிக்கும்
பேதைகள் மத்தியில்
எல்லோரும் சமமென்று
வரலாற்றை சான்றுடன்
மீட்டதால் நீ மேதை.
ஆயிரம் ஆண்டுகளாய்
பெண்களுக்கு
மதம் சொத்துரிமை மறுத்ததை
எதிர்த்து சட்டம் கண்டாய்
அதை ஏற்க மறுத்தவர் நாண
பதவியை தூக்கி எறிந்தாய்.
சமத்துவத்தை சகோதரத்துவத்தை
அரசியல் சாசன
முகப்புரையிலேயே பதித்தாய்.
ஆனாலும் என்ன
ஒற்றை செல்பெருகி
உயிர் வளர்ந்த
உண்மை சொல்லும்
அறிவியலை
தொல்ப்பொருளாளர்கள்
தோண்டியெடுத்து
கண்ணில் காட்டும்
ஆதாரத்தை கண்டப்பின்னும்
பேதமையால் சிலபேர்
இன்னும் திரிகின்றார்
சாதிப்பெருமை பேசி.
மனநோயால் பிறழ்ந்தவன்
அம்மணமாய் நின்றுக்கொண்டு
வீதியில் தம்மை
வீரனென்று
பிதற்றுவதைப் போல
சாதித்திமிர் பேசி
திரிகின்ற கிறுக்கர்கள்
மத்தியில்
உனதுருவம்
சிலையாய்தான்
நிற்கின்றது இன்றும்.
-திலகேஸ்வரன்