காலனிய இந்தியாவில் நிர்வாக பணிபுரிவதற்கான அதிகாரிகளை நியமிப்பதற்கான தேர்வுகளை அரசு இங்கிலாந்தில் நடத்தி வந்தது. இந்தியர்கள் இந்த தேர்வில் பங்கேற்கும் வண்ணம் இந்தியாவிலும் இந்த தேர்வினை நடத்த வேண்டும் என தாதாபாய் நவ்ரோஜி போன்ற தலைவர்கள் குரலெழுப்பினர். அதற்காக பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் தீர்மானம் ஒன்றையும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றினர்.
ஆனால் இந்த தேர்வை இந்தியாவில் நடத்தக் கூடாதென ரெட்டைமலை சீனிவாசன் கடுமையாக எதிர்த்தார் . இந்த தேர்வு இந்தியாவில் நடத்தினால் பிராமணர்கள் மட்டுமே தேர்வாகி அதிகாரிகளாக வரக்கூடும். ஏனென்றால் பிற சமூகங்கள் இன்னமும் உயர்கல்வியை எட்டாத நிலையில் பிராமணர்கள் அதிகாரிகளாக வந்தால் சாதி பாகுபாட்டால் ஒடுக்கப்பட்டோரின் நிலை இன்னமும் மோசமாகும் என்று கருதினார். அவரின் பறையர் மகாஜன சபா ஐசிஎஸ் தேர்வை இங்கிலாந்திலேயே நடத்த விண்ணப்பம் செய்தது.காங்கிரஸ் அளித்த விண்ணப்பத்திற்கு மாற்றாக 112 அடி நீளமுள்ள 3412 பேர் கையொப்பம் கொண்ட மனுவை சபா 23 December 1893 அன்று மெட்ராஸ் மாகாண கவர்னரிடம் வழங்கியது. பிறகு ஆங்கிலேய அரசு இந்தியாவில் தேர்வை நடத்தும் யோசனையை கைவிட்டது. அதற்கு காரணம் இந்த மனு தான் என ரெட்டைமலை சீனிவாசன் தனது சுயசரிதையில் ஒரு வரியில் தெரிவித்திருந்தாலும் இதுவரை அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
நாங்கள் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் நூலகத்தின் இந்தியா ஆபிஸ் (India Office) கோப்புகளை இணையத்தில் ஆய்வு செய்தபோது இது சம்பந்தமான கோப்பு கிடைத்தது. அந்த கோப்பினையும் 1890-1895 ஆண்டுகள் பிரிட்டிஷ் பாராளுமன்ற உரைகள் நடவடிக்கைகள் ஆய்வு செய்ததன் மூலம் ரெட்டைமலை சீனிவாசனின் “பறையர் மனு” எவ்வளவு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணம் என்று புலப்பட்டது.
AB Rajasekar
நண்பர் ஸ்டாலின் ராஜங்கத்துடன் இணைந்து EPW (Engage)ல் எழுதிய கட்டுரை