மகிழ்வான வாழ்வுக்கான தேடல்
ஏ.பி. ராஜசேகரன்
பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் தொகுக்கப்பட்ட ஆங்கில எழுத்துகளும் உரைகளும் 12 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இருக்கின்றன. பல கட்டுரைகள் இன்னமும் மராத்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட வில்லை. அசலான அறிஞர் அவர். மேல்நாட்டு ஆய்வு முறையில் பயின்ற அவர் தமது கருத்துகளை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் எடுத்துரைத்தார். மறுக்கவே முடியாத ஆதாரங்கள் அவை. இந்தியாவில் தோன்றிய மூல ஆக்கங்களுடன் மேலை நாட்டு அறிஞர்களின் புதிய தத்துவங்களையும் சிந்தனைகளையும் அவர் முழுமையாக கற்றுத்தேர்ந்தார். இந்திய சமூகத்திற்கு மேலை நாட்டு அறிஞர்களின் புதிய தத்துவங்களையும் சிந்தனைகளையும் பயன்படுத்தும்போது அவற்றை இந்திய சூழ்நிலைக்கு ஏற்றார் போல் மாற்றம் செய்தார்.
டாக்டர் அம்பேத்கர் ஜனநாயகத்தின் மீது தீராத காதல் கொண்டிருந்தார் எனலாம். சமத்துவம், தனியுரிமை, சகோதரத்துவம் ஆகியவையே ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகளாக அவர் பார்த்தார். இவை மூன்றும் ப்ரெஞ்சு புரட்சியிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டதாக தோன்றினாலும் அவை பௌத்த சங்கங்களிருந்தும் பௌத்த சமூகத்திடமிருந்து பெறப்பட்டவை என விளக்கம் அளித்தார் அம்பேத்கர். இந்த மூன்றினை போலவே மற்றொரு சொற்றொடர் மீது அவருக்கு மிகுந்த ஈர்ப்பு இருந்திருப்பதாக தெரிகிறது. அது “மகிழ்வான வாழ்வுக்கான தேடல்” (pursuit of happiness). அவருடைய தொகுக்கப்பட்ட ஆங்கில எழுத்துகளில் நேரடியாக இந்த சொற்றொடர் குறைந்தது 25 முறையும், இதே அர்த்தத்தில் வேறு வடிவில் கிட்டத்தட்ட 40 முறையும் காணப்பெறுகிறது. சவுத்பரோ குழுவின் முன் 1919ல் அவர் அளித்த சாட்சியம், ‘காந்தியும் காங்கிரசும் தீண்டத்தகாத மக்களுக்குச் செய்தது என்ன?’ எனும் வெளியீடு ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனுக்காக அவர் எழுதிய மாதிரி அரசியலமைப்பு சட்டம் என பல இடங்களில் இந்தச் சொற்றொடரை காணலாம். உதாரணமாக ஷெட்யூல்ட் காஸ்ட் ஃபெடரேஷனுக்காக அவர் எழுதிய மாதிரி அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரையில் ஒவ்வொரு குடிமகனுக்கும் வாழ்வு, தனியுரிமை, மகிழ்ச்சியினை கண்டடைதல், பேச்சுரிமை, மதத்தினை பின்பற்ற சுதந்திரம் ஆகிய உரிமைகளை உறுதிசெய்வதுதான் ஐக்கிய இந்தியவின் நோக்கமாகும் என குறிப்பிடுகிறார்.
மகிழ்வான வாழ்வுக்கான தேடல் என்கிற சொற்றொடர் ஜூலை 4, 1776 அமெரிக்க சுதந்திர பிரகடனத்தில் இருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. அந்த பிரகடனம் “இந்த உண்மைகளை நாம் சுயமாக வெளிப்படுத்துகிறோம், எல்லா மனிதர்களும் சமமாக உருவாக்கப்படுகிறார்கள், பிரிக்கமுடியாத சில உரிமைகள் படைப்பாளரால் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது, அவை வாழ்க்கை, சுதந்திரம், மகிழ்ச்சி ஆகியவற்றைக் கண்டடைதல் என முழங்குகிறது. அமெரிக்காவின் கொலம்பிய பல்கலைகழகத்தில் படித்தவரான டாக்டர். அம்பேத்கர் இந்த சொற்றொடரை வகுப்பறையில் அடிக்கடி கேட்டிருக்க வேண்டும். இந்த சொற்றொடர் அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் சேர்த்தவர் பின்னாளில் அமெரிக்க ஜனாதிபதியான தாமஸ் ஜெபர்சன். அவர் இந்த சொற்றொடரை தத்துவஞானி தாமஸ் லாகிடமிருந்து எடுத்திருக்க வேண்டும் என குறிப்பிடுகின்றனர் அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட அறிஞர்கள.
இந்த சொற்றொடரின் அர்த்தம் என்ன? அமெரிக்க சிந்தனையாளர்கள் பெரும்பாலானோர் அந்த சொற்றொடர் தனி மனிதன் பொருளீட்டி சொத்துகளை உருவாக்குவதையும் அவற்றை தாமும் தமது குடும்பத்தினரும் அனுபவிப்பதே மகிழ்ச்சியை கொடுக்கும் எனவும் அப்படி தனி மனிதன் தமது மகிழ்வான வாழ்வினை தேடுவதற்கான தேடலும் உரிமையை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்கின்றனர். அதாவது மகிழ்வான வாழ்வுக்கான தேடல் தனிமனித சொத்தும் ஒன்று. தனி மனிதனை முன்னுரிமைப்படுத்திய முற்றிலும் முதலாளித்துவ சமூகமான அமெரிக்காவில் இந்த அர்த்தம் பொருத்தமாக இருக்கிறது. ஆனால் அம்பேத்கர் இதே அர்த்தத்தில் இந்தச் சொற்றொடரை பயன்படுத்தினாரா? இந்த சொற்றொடருக்கு அவருடைய விளக்கம் என்ன? டாகடர் அம்பேத்கரின் எழுத்துகளை தமிழில் மொழிபெயர்த்தவர்கள் “pursuit of happiness” சொற்றொடரை “நல்வாழ்வை துய்ப்பதற்கு”, “ஒளிமயமான எதிர்காலம்” என மொழிபெயர்த்திருக்கிறார்கள். இது நேரடி மொழிபெயர்ப்பாகவும் இல்லை, அம்பேத்கரின் எண்ணத்தை பிரதிபலிப்பதாகவும் இல்லை.
நிலவுடமை தனியாரிடமிருந்து அரசிற்கு மாற வேண்டும், தொழில்களை அரசே நடத்த வேண்டும் என்று வாதாடிய அம்பேத்கர் யாருக்கும் தீங்கு விளைவிக்காமல் பொருள் ஈட்டுவதை எதிர்த்தவரில்லை. “புத்தரா கார்ல் மார்க்ஸா?” புத்தகத்தில் சீடர் அனந்தபிடிகாவிற்கு புத்தர் அளித்த போதனை ஒன்றினை சுட்டிக்காட்டி உழைப்பினாலும் வியர்வையினாலும் நியாயமான முறையில் ஈட்டப்பட்ட பொருள் கிரகஸ்தருக்கு ஒரு வரம் என்கிறார். இந்த பொருள் மூலம் கிரகஸ்தர் தன்னையும் தம் குடும்பத்தினரையும் நண்பர்களையும் தொழிலாளர்களையும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்ள முடியும் என எடுத்துரைக்கிறார். இது மட்டுமல்ல அவரின் “புத்தரும் அவர் தம்மமும்” நூலில் அனந்தபிடிகாவிற்கு புத்தர் அளித்த அதே போதனையில் நான்கு வகை மகிழ்ச்சிகளை புத்தர் உரைத்தாக தெரிவிக்கிறார். பொருள் ஈட்டுவது, அவற்றை பிறரோடு பங்கிட்டுக்கொள்வது, கடன் இல்லாமல் இருப்பது, குற்றம் சாட்ட முடியாதபடி வாழ்தல் ஆகியவையாம் அவை. அமெரிக்க தனியுடமை சார்ந்த மகிழ்ச்சி அவருக்கு ஏற்புடையதாக இருந்தாலும் அவர் இந்த சொற்றொடரை அதிகம் பயன்படுத்தியது ஜனநாயகம் குறித்த உரையாடலின் போதுதான். ஜனநாயகத்தின் பண்புகள், நிறைகள், குறைகள், தீண்டத்தகாதவர்கள் ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்பார்ப்பவை என ஜனநாயகம் குறித்து பேசும் போது இந்த சொற்றொடரை தான் பயன்படுத்துகிறார். ஜனநாயகத்திற்கும் மகிழ்ச்சி கண்டடைதலுக்கும் உள்ள உறவினை நாம் புரிந்துக்கொள்ள நாம் அம்பேத்கரின் கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் டூயிடம் (Prof. John Dewey) செல்ல வேண்டும்.
பேராசிரியர் டாக்டர் ஜான் டூயி 20ஆம் நூற்றாண்டின் முக்கிய சிந்தனையாளர்களில் ஒருவர். கொலம்பிய பல்கலைக்கழக பேராசிரியரான அவர் சமூக சீர்த்திருத்தவாதியும் கல்வியாளரும் கூட. 1913-1916 காலக்கட்டத்தில் அம்பேத்கர் அவரிடம் தத்துவமும் அரசியல் அறிவியலும் பயின்றார். தனது சிந்தனை மீது பேராசிரியர் டாக்டர் ஜான் டூயி ஏற்படுத்திய தாக்கத்தை அம்பேத்கர் பல முறை குறிப்பிட்டிருக்கிறார். ஒரு இடத்தில் “என்னுடைய மொத்த அறிவுலக வாழ்வும் அவரிடம் பெற்றது தான்” என்கிறார்.
பேராசிரியர் டூயி சமூகம், உளவியல், மக்களாட்சி, கல்வி, மக்களாட்சியின் வெற்றிக்கு கல்வியின் பங்கு என பலதரப்பட்ட விடயங்களில் புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தினார். பேராசிரியர் டூயியின் பெரும்பாலான புத்தகங்களும் அனைத்தும் அம்பேத்கரின் நூலகத்தில் இருக்கின்றன. அவற்றில் இரண்டு புத்தகங்களை “ஜனநாயகமும் கல்வியும்”, “அறவியல்”. அம்பேத்கர் அடிக்கோடிட்டு ரசித்து வாசித்தது மட்டுமல்லாமல் தமது எழுத்துகளில் பல இடங்களில் அவற்றை பயன்படுத்தியிருக்கிறார்.
பேரா. டூயியை பொறுத்தவரை மகிழ்ச்சியை வெறும் பொருள் சார்ந்து பார்ப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. டூயி எது ஒருவருக்கு மகிழ்ச்சியளிக்கிறதோ அதனை தேர்ந்தெடுத்து அதனை அடைய விரும்பும் தனி மனித உரிமையை தவறு என சொல்லவில்லை ஆனால் அந்த தேர்வு சமூகம், அற நெறி ஆகியன சார்ந்ததாக இருக்க வேண்டும் என்கிறார். ஒழுக்க நெறி சார்ந்த ஜனநாயகம் சரியாக இயங்குவதற்கு எது சரியான மகிழ்ச்சிக்கான கண்டடைதலுக்கான வழி எனும் புரிதல் வேண்டும். சமூக அக்கறையுடனே அறம் சார்ந்த மனிதன் இயங்குவான், அவன் தம்முடைய மகிழ்ச்சிக்கான வழிமுறை பிறர் மீது என்ன வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்வான் என்கிறார் பேரா. ஜான் டூயி. அப்படியொரு மனிதனை ஒத்திசைவான குணங்களை (sympathetic character) கொண்டவர் எனவும், அந்த ஒத்திசைவு குணம் என்பது தான் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்கிறார். அதுவே ஜனநாயகத் தன்மை எனவும், சமூகத்தின் உறுப்பினர் ஒவ்வொருவரையும் அவரின் முழு திறமையை வெளிப்படுத்த சம வாய்ப்பையும் சுதந்திரத்தையும் அளிக்கும் சமூகமே ஜனநாயக சமூகம் என்கிறார். இதனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை சார்ந்து இணைந்து ஒரு ஜனநாயக சமூகத்தினை உருவாக்குவதன் மூலமே ஒவ்வொருவரும் தமது மகிழ்ச்சியை கண்டடைய முடியும் என கூறுகிறார்.
எப்போதும் போல இந்த கருத்தாக்கங்களை அம்பேத்கர் இந்திய சமூக அமைப்பிற்கு பொறுத்திப் பார்க்கிறார். ஒரு மனிதன் எப்போது மகிழ்ச்சி கொள்கிறான்? அவன் சுயமரியாதையோடு வாழவும், அறிவை பெருக்கிக்கொள்ளவும், பிடித்த தொழிலில் ஈடுபடவும், பொருள் ஈட்டவும், அரசை தேர்ந்தெடுக்கவும், அரசாங்கத்தை உருவாக்கவும் கலைக்கவும், அதற்கான சட்டம் இயற்றுதலில் பங்கு பெறவும் சாத்தியமாகும் போதுதான் மனிதன் மகிழ்ச்சி அடைகிறான் என வெவ்வேறு இடங்களில் குறிப்பிடுகிறார். மகிழ்ச்சி வெறும் பொருள் சேர்ப்பதிலில்லை. டாக்டர் அம்பேத்கர் முதலில் பிராமணியமும் சாதிய அமைப்பும் மகிழ்ச்சியினை கண்டடைதலுக்கு எதிரானது என்கிறார். மகிழ்வான வாழ்வுக்கான தேடல் நோக்கிய பயணத்திற்கு சாதி ஒரு பெருந்தடை. இந்து மதம் சமத்துவம், சுதந்திரம், தனக்கு மகிழ்ச்சியினை அளிக்கும் ஒரு தொழிலையோ கலையையோ தேர்ந்துடுப்பதை தடுக்கிறது என விளக்குகிறார். மனுவின் செயல்திட்டத்தின்படி ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பிறப்பதற்கு முன்பே அவன் தொழில் நிர்ணயிக்கப்படுகிறது, இந்து மதம் அவனுக்கு எந்த தேர்வுரிமையையும் அளிப்பதில்லை என சுட்டிக்காட்டுகிறார்.
தனக்கு விருப்பமான ஒன்றினை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்கும் போதுதான் மனிதன் மகிழ்ச்சியாக இருக்கிறான். கல்வி, வேலை என எதனையும் தேர்ந்தெடுத்து அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு சுத்தமாக இந்து மதத்தில் இல்லை என்கிறார். அது ஜனநாயக சமூகத்திலேதான் சாத்தியம். அதனால் இந்தியாவில் ஒரு ஜனநாயக அரசிற்கு இந்த சமூக நிலையில் தலையிட்டு ஒவ்வொரு குடிமகனும் தனது மகிழ்வான வாழ்வினை தேடுவதற்கான உரிமையை பாதுகாக்க வேண்டியது அவசியமாகிறது. மகிழ்வான வாழ்வினை தேடுவதற்கு தனி மனிதனோ சமூகமோ தடையாக இருப்பின் அவர்களின் அதிகாரத்தை தடுப்பதற்கு அரசாங்கம் சட்டங்களின் இயற்றி அந்த அதிகாரத்தை குறைத்திட வேண்டும் என்கிறார். ஆக மகிழ்வான வாழ்வினை அடைய ஜனநாயகம் வேண்டும். அம்பேத்கருடைய வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ஜனநாயகமே ஒரு லட்சிய சமூகத்தை உருவாக்க முடியும். அத்தகைய சமூகத்தில் சமூகத்தின் ஒரு பிரிவுக்கும் மற்றொரு பிரிவுக்கும் மாற்றங்களை கடத்தும் அளவிற்கு உறவும் தொடர்பும் வேண்டும். அனைவரும் எந்த வேறுபாடுமின்றி சார்ந்து வாழ்தல் வேண்டும். ஆனால் இப்படியொரு ஜனநாயகம் சமூகத்தில் வாழும் மக்களுக்கிடையே சகோதரத்துவம் இல்லையென்றால் சாத்தியமில்லை. சகோதரத்துவத்திற்கு மற்றொரு பெயர் தான் ஜனநாயகம். சகோதரத்துவத்துடன் ஒரு குடிமகன் மற்றொரு குடிமகனை நடத்தினால மட்டுமே அந்த குடிமகனுக்கு தனக்கு மகிழ்ச்சியை தரும் விடயங்களில் ஈடுபடுவது சாத்தியம். சகோதரத்துவம் இருந்தால் “பிறர் தமது மகிழ்ச்சிக்கு போட்டியாளர்கள் அதனால் அவர்களை தோற்கடிக்க வேண்டும் எனும் எண்ணம் பிறக்காது”. நமது மகிழ்ச்சியும் அவர்களோடு இணைந்ததுதான் என்பது புரியும். “வெறும் பொருள் ஈட்டலே மகிழ்ச்சியை கொடுக்கும் என கருதும் தனிமனித செயலுரிமை கோட்பாடு (individualism) சட்டமில்லா ஒழுங்கற்ற நிலையைதான் உருவாக்கும்”. ஆகவே சகோதரத்துவம் தழைத்தோங்கினால் மட்டுமே தானும் தமக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல்களில் ஈடுபட்ட பிறரின் மகிழ்ச்சியிலும் பங்கெடுக்க முடியும் என அம்பேத்கர் கருதுகிறார்.
அரசியலமைப்பு சட்டத்தில் தனி மனிதனின் உரிமைகளை உறுதி செய்யும் அம்பேத்கர் அதே வேளையில் அவன் சமூகத்தோடு சகோதரத்துவத்தோடு சுயமரியாதையோடு வாழ்வதை அரசு உறுதி செய்தால் மட்டுமே இந்த சாதிய சமூகத்தில் ஒருவன் தனக்கு மகிழ்ச்சியளிக்க கூடிய விடயங்களை தேர்ந்தெடுக்க முடியும் என்பதனை உணர்ந்து மகிழ்வான வாழ்வுக்கான தேடல் என்பதை நேரடியாக சேர்க்காமல் சகோதரத்துவம் என்கிற வார்த்தையை அரசியலமைப்பு சட்டத்தில் சேர்த்தார் என்று தோன்றுகிறது. சகோதரத்துவம் என்கிற வார்த்தையை பலமுறை பல்வேறு தருனங்களில் உபயோகப்படுத்தும் அம்பேத்கர் வெவ்வேறு தொடர்புடைய அர்த்தங்களில் பயன்படுத்துகிறார். அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையின் பெரும்பகுதி முற்றிலும் டாக்டர் அம்பேத்கரால் எழுதப்பட்டது என வரலாற்றாசிரியர் ஆகாஷ் சிங் ரத்தோர் தம்முடைய புதிய நூலில் நிருபித்திருக்கிறார். “சகோதரத்துவம்: சாதி மத வேற்றுமையின்றி தனிநபர் கண்ணியத்தை உறுதிப்படுத்த” எனும் வரியை அம்பேத்கர்தான் அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரையில் சேர்த்தார். இந்திய அரசியலமைப்புச் சட்ட வரலாற்றினை நோக்கினால் இதற்கு முன் சகோதரத்துவம் என்கிற வார்த்தை நேரு அறிக்கை, அரசியலமைப்பு சட்ட ஆலோசகர் பி.என் ராவ் அளித்த அரசியலமைப்புச் சட்ட வரைவு, நேருவின் நோக்கங்கள் தீர்மானம் என எதிலும் இல்லை. ஒடுக்கப்பட்டோர் கௌரவமாக தமக்கு மகிழ்ச்சி தரும் விஷயத்தை தேர்ந்தெடுப்பதற்கு சகோதரத்துவம் எவ்வளவு முக்கியம் என உணர்ந்து இந்த வரியை பிப்ரவரி 6, 1948 அன்றும் அரசியலமைப்பு நிர்ணய சபையின் மாதிரி குழுவில் முதன்முறையாக ஆறிமுகப்படுத்துகிறார் டாக்டர் அம்பேத்கர்.
ஆகவே அம்பேத்கரை பொறுத்தவரை வெறும் பொருளீட்டல் மட்டுமே மகிழ்வான வாழ்வினை அடைவதற்கான வழியில்லை. அதுபோன்று வெறும் சுதந்திரமும் சமத்துவம் இருந்தால் மட்டுமே ஒருவர் மகிழ்வான வாழ்வினை அடைய முடியாது அவர் உறுப்பினராக இருக்கும் சமூகத்தில் சகோதரத்துவமும் இருக்க வேண்டும். பிறருக்கு தீங்கு இழைக்காமல் சட்டபூர்வமாக பொருளும் ஈட்டி, பிறருடன் சகோதரத்தவத்துடன் வாழ்வதே மகிழ்ச்சிக்கான வழி.
மின்னஞ்சல்: rajasekaranab@gmail.com
காலச்சுவடு