பகுதி இரண்டு
நீதிக்கட்சி பவள விழா மலரில் அன்னை மீனாம்பாள் பேட்டி.
1902 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 26ம் நாள் இரங்கூனில் பிறந்த மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் கண் பார்வையற்ற நிலையிலும் இன்றும்கூட பழைய செய்திகளை நினைவாற்றலுடன் கூறுவதில் திறமை உடையவராக இருக்கி றார் என்பதை 6.11.90 அன்று அவரை சென்னை டிரான்சன் கார்டன் தெருவில் உள்ள (கெல்லீஸ்) அவரது இல்லத்தில் சந்தித்தபோது தெளிவாக உணர முடிந்தது. காவல்துறையில் துணை ஆணையாளராக பதவியாற்றி ஓய்வுபெற்ற அவரது மகன் தயாசங்கர் இல்லத்தில்தான் மூதாட்டியார் அவர்கள் இருந்து வருகிறார்கள்.
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கத்துடன் துவக்கத்தில் தொடர்பு கொண்டுஉயிரோடு இருக்கக்கூடிய விரல்விட்டு எண்ணக்கூடியவர்களுள் ஒருவராக இருக்கக்கூடியவர் என்ப தால், நீதிக்கட்சி பவள விழா மலரில் அவரை நேர்முகமாகக் கண்டு பழைய நினைவுகளை புதிய தலைமுறையினரின் வெளிச்சத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்ற ஆவலில் அவரைச் சந்தித்தோம். திராவிடர் கழகத் தலைமை நிலைய செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றனுடன் வடசென்னை மாவட்ட திராவிடர் கழகத் துணைத்தலைவர் வி.எம். நாராயணன், எக்ஸ்ரே கருணாகரன் ஆகியோர் உடன் வந்திருந்தனர்.
கேள்வி : தங்களுக்கும், நீதிக்கட்சிக்கும் சுயமரியாதை இயக்கத்துக்கும் தொடர்பு எப்படி ஏற்பட்டது?
பதில்: என்னுடைய பெரியப்பா வேணுகோபால் பிள்ளை இந்த இயக்கங்களுடன் தொடர்பு கொண்டவர். கடப்பையில் நகராட்சி ஆணையாளராகப் பணிபுரிந்தவர். சென்னை ஸ்பர்டாங் சாலையில் டாக்டர் டி. எம்.நாயர் ஆற்றிய உரை புகழ்பெற்ற ஒன்றாகும். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்களே இவர்தான். இந்த முறையிலே எங்கள் குடும்பத் தொடர்பு நீதிக்கட்சியோடு இருந்தது. ஒரு நாள் சி.டி. நாயகம் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்தார். அப்பொழுது ராஜாஜி பிரதமராக இந்தியைத் திணித்த சமயம். பார்ப்பனர்கள் சூழ்ச்சியால் இந்தி திணிக்கப்படுகிறது. இதனை நாம் தடுத்து நிறுத்தாவிட்டால், வரும் காலத்தில் நம்பிள்ளைகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். நாம் பெரியாரோடு சேர்ந்து கொண்டு ஏதாவது செய்தாக வேண்டும் என்று கூறினார். எனது துணைவர்சிவராஜ் அவர்கள் யோசிக்கலாம் என்றார். நான் திருமணம் ஆன புதுசு. அப்பொழுது சட்டென்று சொன்னேன். இதில் யோசிக்க என்ன இருக்கிறது? தீவிரமாக இந்தியை எதிர்க்கத்தான் வேண்டும் என்று சொன்னேன். குழந்தை சொல்லுது சரி என்று சொல்லுங்கள் என்றார் சி.டி. நாயகம்.
முதலில் சென்னை தியாகராயர் நகரில் பொதுக் கூட்டம் ஏற்பாடாயிற்று. அந்தக் கூட்டத்தை சுமங்கலிதான் துவக்கி வைக்க வேண்டும் என்றார் சி.டி. நாயகம். அந்த முறையிலே முதன்முதலாக நான் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் அது. பெண் ஒருவர் பேசுகிறார் என்றவுடன், ஆச்சிரியத்துடன் கூடினார்கள். ஏனென்றால் அந்தக் காலத்தில் பெண்கள் எல்லாம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதோ, பேசுவதோ மிகவும் அதிசயம். அடுத்து இராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோவில் தெருவில் உள்ள பெரிய மைதானத்தில் எனது தலை மையில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டம். இந்தியை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது. அந்தத் தீர்மானத்தை எடுத்துக் கொண்டு பிரதமர் ராஜாஜியைச் சந்திக்கச் சென்றார்கள். நான் நல்ல எண்ணத்தோடுதான் இந்தியைக் கொண்டு வந்திருக்கி றேன். சுதந்திரம் வந்தால் இந்தியாவுக்குப் பொது மொழி இந்திதான். இதை ஏன் எதிர்க்கிறீர்கள் என்று ராஜாஜி பதில் கூறி அனுப்பி விட்டார்.
இதனைத் தொடர்ந்து நாட்டில் ஏராளமான அளவில் இந்தி எதிர்ப்புப் பொதுக்கூட்டங்கள் நடக்கத்தொடங்கின. மீர்சாப்பேட்டை, தேனாம் பேட்டை என்று பரவியது. ஒருநாள் கி.ஆ.பெ. விசுவநாதம் இராயப்பேட்டை ஆண்டியப்பத் தெரு வில் உள்ள (கதவு எண் 12) எங்கள் வீட்டுக்கு வந்தார். அவருடன் ஸ்டாலின் செகதீசன் என்பவரையும் அழைத்து வந்தார். இந்தியை எதிர்த்து எங்கள் வீட்டிலேயே ஸ்டாலின் செகதீசன் என்பவர் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். ஏராளமான பொதுமக்களும் பிராமுகர்களும் எங்கள் வீட்டுக்கு வர ஆரம் பித்தார்கள்.
சென்னைக் கடற்கரையில் பெரியார் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. பெரியாரைக் கைதுசெய்துவிட்டார்கள். பட்டுக்கோட்டை கே.வி. அழகிரிசாமி யையும் கைது செய்துவிட்டார்கள். அந்த நேரத்தில் நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினேன். ராஜாஜி என்னைக் கைது செய்யவில்லை. அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காலகட்டத்தில் வெள்ளைக்காரர்கள் வீட்டில் எல்லாம் சமையல் காரர்களாக (பட்லர்) பெரும்பாலும் தாழ்த்தப்பட்டவர்கள் இருந்தார்கள். அவர்கள் எல்லாம் ராஜாஜியிடம் சென்று, மீனாம்பாள் அம்மாளை எந்த காரணத்தை முன்னிட்டும் கைது செய்யக்கூடாது. மீறி கைது செய்தால் நாங்கள் வேலைக்குப் போகமாட்டோம் என்று கூறிவிட்டார்கள். ராஜாஜியும் எப்படியோ என்னைக் கைது செய்யவேண்டாம் என்று கூறி விட்டார்.
கேள்வி : தாழ்த்தப்ட்ட மக்களுக்குத் தாங்கள் ஆற்றிய குறிப்பிட்டத்தக்க பணி என்ன?
பதில் : அகில இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோர் அமைப்பு (AllIndia Scheduled Caste Federation) என்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.பல மாநிலங்களில் எம்.சி. ராஜா அவர்ளைத் தலைவராகத் தேர்ந் தெடுத்தார்கள். உத்திரப்பிரதேசம், வங்காளம் போன்ற இடங் களில் எம்.சி. ராஜா அவர்களைத் தேர்ந்தெடுத்தனர். மத்தியப் பிரதேசத்தில் டாக்டர் அம்பேத்கரைத் தேர்ந்தெடுத்தார்கள். சென்னையிலே மாநாடு கூட்டி டாக்டர் அம்பேத்கர் அவர் களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்தோம். எம்.சி. ராஜா எங்களுக்கெல்லாம் ஒரு வகையில் உறவினர். உறவினர் கள் எல்லாம் என்னிடம் வந்து உறவுக்காரர் என்று கூடப் பார்க்காமல் இப்படி செய்கிறீர்களே என்றார்கள். நாட்டின் எதிர் காலத்தைப் பார்க்கவேண்டுமா? சொந்த பந்தத்தைப் பார்க்க வேண்டுமா என்று திருப்பிக்கேட்டேன்.
மாநாடு எங்கு நடத்துவது என்று யோசித்துக் கொண் டிருந்தோம். அப்பொழுது சென்னை அய்லாண்டு திடலில் நீதிக்கட்சியின் மாநாடு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது 1939 டிசம்பர் மாதத்தில் அந்த மாநாட்டுப் பந்தலிலேயே ஒரு குறிப்பிட்ட நேரம் தாழ்த்தப்பட்டோர் மாநாடு நடத்துவதற்கு வாய்ப்பு அளித்தார்கள். நீதிக்கட்சி மாநாட்டின் செயலாளராக இருந்த கந்தர்ராவ் நாயுடு இந்த உதவியைச் செய்ய முன்வந்தார். அந்த காலத்தில் பணத்துக்குப் பெருங்கஷ்டம். நான் போட்டிருந்த நான்கு பவுன் வளையல்களை அடமானம் வைத்து மற்ற செலவுகளைச் செய்தோம். இரண்டு மூன்று மணிநேரத்துக்குள்ளாகவே சுவரொட்டி அச்சிட்டு ஒட்டி மாநாட்டைச் சிறப்பாக நடத்திவிட்டோம். மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் அவர்களைத் தலைவராகத் தேர்ந்தெடுத்த தீர்மானத்தை அம்பேத்கர் அவர்களுக்கே அனுப்பி வைத்தோம்.
ஆனால் அம்பேத்கர் அவர்கள் தலைவர் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். நான் கோபக்காரன், எனக்கு இந்தப் பதவி எல்லாம் ஒத்துவராது நீயே இரு என்று கூறி எனது கணவர் சிவராஜ் அவர்களைத் தலைவராக நியமித்தார். நாக்பூரில் மாநாடு நடத்தி சிவராஜ் அவர்கள் தலைவராக முறைப்படி அறிவிக்கப்பட்டார். அந்த மாநாட்டை ஏற்பாடு செய்தவரே டாக்டர் அம்பேத்கர் அவர்கள்தான். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் அகில இந்திய அமைப்பின் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டது. அப்பொழுது ஒரு குறிப்பிட்டத்தக்க நிகழ்ச்சியாகவே கருதப்பட்டது.
கேள்வி : தந்தை பெரியார் அவர்களோடு தாங்கள் இணைந்து பணியாற்றிய நிகழ்ச்சிகள் பற்றிக்கூறுங்கள்.
பதில் : நான் ஏராளமான சுயமரியாதைத் திருமணங் களுக்குத் தலைமை தாங்கி நடத்தி இருக்கிறேன். பெரியார் அவர்கள் கலந்துகொண்ட திருமணங்களிலும் கலந்துகொண்டு பேசி இருக்கிறேன். சென்னை பெரம்பூரில் என் தலைமையிலும் பெரியார் தலைமையிலும் ஒரு சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. கடுமையான மழை, தாழ்த்தப்பட்டோர் பகுதி… ஒரே சேறும் சகதியுமாகிவிட்டது. திருமணம் முடிந்து சாப்பிட்டுப் போகச்சொன்னார்கள். நான் ஏதோ சமாதானம் சொல்லி சாப்பிடவில்லை. பெரியார் என்ன செய்தார் தெரியுமா? மேலே இருந்த ஓலையைக் கீழே எடுத்துப்போட்டு அப்படியே உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்துவிட்டார். பெரியார் எந்தவித77
ஏற்றத்தாழ்வும் பார்க்கமாட்டார். நான் நாராயிணி அம்மாள், டாக்டர் தருமாம்பாள் ஆகியோர் பேசிக்கொண்டிருந்தபோது, காந்தியாருக்கு மகாத்மா என்ற பட்டம் கொடுத்து அழைக்கிறார் கள். நாம், நம் மக்களுக்காக எல்லாவற்றிலும் முன்னின்று பாடுபடுகிற ஈ.வெ.ரா. அவர்களுக்கு ஒரு பட்டம் கொடுத்து அழைக்க வேண்டும் என்ற முடிவு செய்தோம். அப்பொழுது தான் பெரியார் என்று அழைப்பது என்று முடிவு செய்து, பிறகு பெண்கள் மாநாடு கூட்டி பெரியார் என்று பட்டம் கொடுத் தோம். அதை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக தன் வாழ்நாளில் நான் கருதுகின்றேன்.
கேள்வி : வேறு முக்கிய நிகழ்ச்சிகள்
பதில் : நான் எனது கணவர் சிவராஜ் அவர்களுடன் பம்பாயில் உள்ள அம்பேத்கர் அவர்கள் வீட்டுக்குச் சென்று இருக்கிறேன். அவரே சமையல் செய்து எங்களுக்கு விருந்து பரிமாறிய நிகழ்ச்சி மறக்கமுடியாத ஒன்று. சென்னைக்கு வேல்ஸ் இளவரசர் வந்தபோது, எங்களுக்குத் தனி அழைப்புக் கொடுக்கப்பட்டு, அந்த விருந்தில் கலந்துகொண்டோம். சென்னை, அண்ணாமலைப் பல்கலைக் கழக செனட் உறுப்பினராக இருந்திருக்கின்றேன். கவுரவ மாஜிஸ்ரேட் போன்ற பொறுப்புகளில் இருந்திருக்கின்றேன். இரங்கூனில் எனது பாட்டனார் மதுரைப்பிள்ளை பிரபல வணிகர். விக்டோரியா, மதுரை மீனாட்சி என்கிற இரண்டு லாஞ்சுகள் அவருக்குச் சொந்தமானவை. இண்டர்மீடியட் படித்துவிட்டுத் திருமணத்துக்காக 16வது வயதில் சென்னைக்கு வந்தேன். எனது கணவர் சிவராஜ் எனது அத்தை மகன் ஆவார். அந்தக் காலத் திலேயே வக்கீலுக்குப் படித்தவர். அப்பொழுதெல்லாம் இந்த சமுதாயத்தில் இவ்வளவு தூரம் படித்தவர்கள் மிகவும் குறைவு. அம்பேத்கர் அவர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண் டிருந்தார். தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாக சட்ட உதவிகள் செய்வார்.
நானும் என் கணவரும் அப்பொழுது அவர் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் தலைவருமான N.சிவராஜ். ஆயிரத்தில் ஒருவராக, பல லட்சம் தாழ்த்தப்பட்ட சமூகத்தின்விடிவெள்ளியாக விளங்கிய டாக்டர் அம்பேத்கருக்காக சென்னை சென்ட்ரல் இரயில்வே நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தோம். முதலில் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்றது நான் தான். டாக்டர் அம்பேத்கரை வரவேற்கப் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தால் ரயில்வே நிலையத்திலிருந்து வெளியே வருவதற்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. 1944 ஆம் ஆண்டை என்னால் மறக்க இயலாது. அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் கழகத்தின் மத்திய கூட்ட மைப்பின் மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நடை பெற்றது. அதில் இந்தியாவில் உள்ள எல்லா பகுதிகளில் உள்ள தாழ்த்தப்பட்ட கழகத்தின் தலைவர்களும், செயலாளர்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்த மாநாட்டில் தாழ்த்தப்பட்ட சமூகத்தின் எதிர்காலத்தைப் பற்றி தீர்மானம் செய்யப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் பல கருத்துக்கள் பரிமாறப்பட்டன. மறுநாள் மாலை தாழ்த் தப்பட்ட இனத்தவரின் மாண்புமிகு தலைவரை சிறப்பு செய்வ தற்காக ஒரு தேநீர் விருந்திற்கு ஏற்பாடு செய்தேன். புன்னகை தவழும் முகத்துடன் உள்ளே நுழைந்த அவர். அங்கு வந்திருந்த கற்றறிந்த சான்றோர்களைப் பார்த்து மிகுந்த மகிழ்விற்கும், ஆச்சரியத்திற்கும் உள்ளானார் ஏன் என்றால் அக்கூட்டத்தில் படித்த பெண்கள், அறிஞர்கள் இருப்பதை அறிந்து வியந்தார். அவர்களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் போது அவர் கூறிய வார்த்தைகள் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது. மறுபடியும் டாக்டர் அம்பேத்கரை மும்பையில் நடைபெற்ற கருத்தரங்கில் சந்திக்க நேர்ந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற அம்மாநாட்டில் மூன்றாவது நாள் பெண்கள் மாநாட்டில் நான் தலைமையேற்று நடத்தினேன். அப்பொழுது டாக்டர் அம்பேத்கர் என். சிவராஜ் மற்றும் பொதுச் செயலாளர்கள் பங்கு பெற்றிருந்தனர். அந்த மாநாட்டில் டாக்டர் அம்பேத்கர் நிகழ்த்திய எழுச்சியூட்டும் உரை இன்னும் என் நினைவில் பசுமையாக உள்ளது.
நானும் எனது கணவரும் ஒருமுறை அவருடைய ராஜகிரகம் என்ற பங்களாவிற்கு சென்றபோது, அவருடையபங்களாவில் சந்தித்தேன். அன்று இரவு நானும் என் கணவரும் தாழ்த்தப்பட்ட இனத்தவர்களின் எதிர்காலம் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். பசிபிக் உறவு மாநாட்டிற்கு செல்லவிருந்த என் கணவருக்கு மாநாட்டில் செய்ய வேண்டிய வகை பற்றி குறிப்புக் கொடுத்துக் கொண்டிருந்தனர். அச்சமயம் இரண்டாம் உலகப்போர் நடந்து கொண்டிருந்தபடியால் டாக்டர் அம்பேத்கர் என் பக்கம் திரும்பி திருமதி. மீனாம்பாள் சிவராஜ் அவர்களே இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாநாட்டு பிரதிநிதியாகவும், அகில இந்திய தாழ்த்தப்பட்ட கழகத்தின் தலைவர் என்கிற முறையிலும் அமெரிக்கா செல்லவிருக்கிறார். அங்கு நிகழவிருக்கும் உலக மாநாட்டில் நம் நாட்டில் வாழும் கோடிக்கணக்கான தீண்டப்படாத மக்களின் உரிமைகளுக்காக வாதாடவும், நாம் அனுபவிக்கும் துன்பங்களை எடுத்துரைக்க வும் இவர் செல்லவிருக்கிறார். உங்கள் கணவர் நல்லபடியாக திரும்பி வருவார் என்று உறுதியளிக்க இயலாது. இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? அவர் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையென்றால் உடனே கூறுங்கள் அவருக்கு பதிலாக நான் போகிறேன் என்றார். நான் அவரிடம் என்னுடைய கணவர் செல்வதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அப்படி ஏதேனும் அசம்பாவிதம் நடந்தாலும் நான் தங்களை குறை கூற மாட்டேன். மாறாக என்னுடைய கணவர் ஓர் உயரிய நோக் சுத்திற்காக எங்களை விட்டு பிரிந்தார் என்று நிறைவேைவன் என்றேன். அவர் என்னைப் பார்த்து புன்னகைத்து நல்லது நான் உன் தைரியத்தைப் பாராட்டுகிறேன் என்றார். அடுத்த நாள் எனது கணவர் அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பின் டாக்டர் அம்பேத்கர் ஐயாவிடம் சொல்லிக்கொண்டு நானும் என் புதல்வனும் சென்னைக்கு திரும்பினோம். டாக்டர் அம்பேத்கர் எனது கணவரின் உடல்நிலை குறித்து அடிக்கடி எனக்கு கடிதம் எழுதுவது உண்டு.
டாக்டர் அம்பேத்கர் மந்திரியாக இருந்தபொழுது அவருடைய தனி நூலகத்தில் அற்புதமான புத்தகத்தொகுப்பை என்னால் காண நேர்ந்தது. அறம், பொருள், இன்பம் குறித்து 2000 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட திருக்குறளும் அதில்அடக்கம் இந்த நூலை எழுதிய திருவள்ளுவரும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது முறை நான் அவரை சந்தித்தபோது அவர் அப்போது உழைப்பாளர்களின் மந்திரியாக இருந்த தலைவரை, புது தில்லியில் உள்ள தென் இந்தியா சுற்றுப்பயணம் மேற் கொண்டர். அவருடன் ராஜ்போஜ்யும் அவருடன் வருகை தந்தார். அந்த சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை, கோவை, ஆந்திரமாநிலம் போன்ற இடங் களுக்குச் சென்றார். நானும் அவர்களுடன் பயணம் மேற் கொண்டு அவருடைய உரைகளை தமிழில் மொழி பெயர்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவர் சட்ட அமைச்சராக பொறுப் பேற்ற பின், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனபோது எப்படியாவது அவரை சந்தித்து உதவி செய்யவேண்டும் என்று விரும்பினேன். ஆனால் தவிர்க்க இயலாத பல காரணங்களினால் போக முடியாமல் நேர்ந்தது. அதன்பிறகு அந்த வீரர் பலகோடி தாழ்த்தப்பட்ட மக்களின் ஒப்பற்ற தலைவரை இந்தியாவின் தவப்புதல்வரை சந்திக்க முடியாமல் போனது. டாக்டர் அம்பேத்கர் ஒரு சிறந்த அறிஞராக, நேர்மையான அரசியல் வாதியாக. தைரியமான. உண்மையான மனிதராக இவ்வுல கிற்கே எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்.
(நன்றி பக்கங்கள்: 73-80, விடுதலைப் பதிவுகள் தொகுப்பு லலூ. பாக்கியராஜ், கலகம் வெளியிட்டகம், சென்னை,மார்ச் 2012).
இவ்விரு நேர்காணல்களில் வரும் சில செய்திகள் பற்றிய விளக்கங்கள்.
1.தமது குடும்பம் போலவே தந்தை சிவராஜ் அவர்களின் குடும்பமும் மிகுந்த செல்வந்த குடும்பம் என்று அன்னை மீனாம்பாள் அவர்கள் கூறியுள்ளார். இதை நிரூபிக்கும் விதமாகவே தந்தை சிவராஜ் அவர்கள் சில சூழல்களில் பேசியுள்ளதை பெங்களூர் பாவலர் சி. பாலசுந்தரம் அவர்கள் தமது ராவு பகதூர் என் சிவராஜ் வாழ்க்கை நினைவுகள் நூலில் தருகின்ற ஒரு குறிப்பு வருமாறு:
“சிந்தித்துப் பாருங்கள்!
நம்ம பசங்க நீங்க நல்லா படிக்கணும்.படிக்க மாட்டேன்றானுங்க ! பாவம் வீட்டு கஷ்டம் ! அதோடு வாழுற இடமும் அப்படி ! இப்படி பல கஷ்டம்! ஆனாலும் நீங்க கஷ்டப்பட்டு, பசி, பட்டினியாயிருந்து படிச்சி முன்னுக்கு வரணும். அம்பேத்கார் பாருங்க ! நானாவது வசதியான குடும்பம் ! நல்ல வாழ்வு ! வறுமையே தெரியாது. சாதி. தீண்டாமை தொல்லை இவை எதுவும் இல்லை. பாவம் அம்பேத்காருக்கு இருந்த துன்பம், துயரம், கொடுமை, அவர் பட்ட கஷ்டம் சிறுவயது முதல் பரோடா அரசரிடம் வேலக்குச் சென்ற வரையில் அவர் பட்ட அவமானம், அடைந்த ஆபத்து, கேட் இழிசொல் போல் நானோ, நீங்களோ அடையவில்லை. ஆகவே, அதெல்லாம் நீங்கள் நினைத்துப் பார்த்து, உங்கள் பிள்ளைகளுக்கு ஆணுக்கும் பெண்ணுக்கம் சொல்லிக் கொடுத்து படிக்கச் செய்யுங்கள். உங்களுக்கு குடிப்பழக்கம் கூடாது. சுத்தமாக இருக்கணும். சுய மரியாதையாக வாழணும்.”
(பக்கம்: 29, ராவ் பகதூர் என் சிவராஜ் வாழ்க்கை நினைவுகள் ஆசிரியர் டாக்டர் சி பாலசுந்தரம், பதிப்பாளர் டாக்டர் யமுனா தேவேந்திரன்)
1.1 தந்தை சிவராஜ் அன்னை மீனாம்பாள் அவர்களின் குடும்ப வளம் பற்றி அறிஞர் அன்பு பொன்னோவியம் தருகின்ற சிறந்ததொரு சான்று வருமாறு:
“சிவராஜ் அவர்களுடைய தந்தையார் ஓர் அரசாங்க அதிகாரியாவார் சிவராஜ் அவர்களுக்கு ஒரு சகோதானும் சகோதரியும் இருந்தனர் இவர்களது கல்வி வசதிக்காகக்கடப்பாவில் பணியாற்றிக் கொண்டிருந்த திரு நமசிவாயம் பிள்ளை அவர்கள் சென்னைக்கு தன் குடும்பத்தைக் கொண்டு வந் தார் தன் மக்களுக்கு நல்ல கல்வியைத்தர வேண்டுமென்ற பேரவாவினால் பிள்ளைகளைச் சீரும் சிறப்புமாக வளர்த்தார் அவருடைய குடும்பம் ஏற்கனவே படித்த வசதிபடைத்த குடும்பமாகவே இருந்தது அதற்கு ஒரு சிறந்த பாரம்பரியமும் உண்டு
சிவராஜ் அவர்களுடைய மாமன் ஒருவர் டாகடா ஐயாசாமி M D என்பவர் அவர் மருத்துவ தொழிலில் பெயரும் புகழோடும் வாழ்ந்தவர் அன்றைய ஆங்கிலேய வைசராய கவர்னர் ஜெனரல் அவர்களின் சிறப்பு டாக்டராகப்பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றவர் Dr ஐயாசாமி M D அவரி களைப்பற்றி புகழ் பெற்ற ஆங்கில வார ஏடான “இல்லஸ்டரேட் வீக்லி யில் 30 6 1920ல் சிறப் புக்க டுரை எழுதப்பட்டது அவரது பெருமைக்கோர் நல்ல சான்றாகும்.
சிவராஜ் அவர்களுடைய ஒன்று விட்ட பாட்டனார் இரங்கூன் ராயபகதூர் பெ.மா மதுரைப் பிள்ளை ஆவார் இரங்கூனில் கப்பல பெரும் வணிகராகத் திகழ்ந்தவர் கோடீஸ்வரர்! என்று பெய ரெடுத்தவர், பன்மொழி வல்லுனர் புலவர்களுக்கும் கவிஞர்களுக்கும் வாரி வழங்கிய புரவலராக விளங்கியவர் அதனால் அவரை வள்ளல் மதுரைப்பிள்ளை என்று சிறப்பித்துக் கூறுவார்கள் இவர் ஆதிதிராவிடப்பழங்குடி சமூதாயக் காப்பாளராகவும் அறநெறி பண்பாளராகவும் பொதுப் பணித்தொண்டராகவும் இலக்கியத்துறைகளில் நாட்டமுள்ளவராகவும், பாட்டு கூத்துப போன்ற கலைத்துறைகளில் ஈடுபட்டும் பிறரை ஊக்குவித்தும் புகழோடு வாழ்ந்தவர் இவரது இல்லம் சென்று இரத்து பாடிப்பரிசில் பெற்றவர்கள் ஏராளம் 158 பல்வேறு இனப்புலவர்களும் கவிஞர்களும் சேர்ந்து 1045 பக்கங்கள் கொண்ட மதுரைப் பிள்ளை பிரபந்தம் என்ற ஒரு பெரு நூலைப்படைத்திருக்கி றார்கள் மதுரைப்பிள்ளை அவர்களைப்பற்றி நூறாண்டுகளுக்கு முன்பு 22-11-1886 ஆம் ஆண்டில் மெடராஸ் மெயில் என்ற ஆங்கில நாளேட்டில் வெளிவந்த செய்திகளிலிருந்து இவரது பெருமை யை அறியலாம்
சிவராஜ் அவர்களுடைய மற்றொரு உறவினர் வேலூர் கோவிந்த ராஜ பாகவதர் முத்தமிழ் வித்தகராகவும், தமிழறிஞராகவும் திகழ்ந்தவர் ஆதி திராவிடர் என்ற பெயருக்கு அரிய விளக்கத் தைத் தந்தவர் வள்ளுவரைப் பற்றி ஆராய்ந்து கூறியவர் இவருடைய மகனார் நான் V G வாசு தேவப்பிள்ளை என்பவர் சிவராஜ் அவர்களுடைய மாமனார் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர் களுடைய தந்தையார் இவர் ஆதி திராவிடப் பெருந்தலைவர்களில் ஒருவராக இருந்து பெரும்தொண்டு செய்தவர் மாநகராட்சி, சென்னை சட்டமன்றம் ஆகியவைகளில் வீற்றிருந்து சமுதாயத் திற்கு அரும் பணியாற்றியவர் இப்படிப்பலர் ஆகவே சிவராஜ் அவர்களுடைய குடும்பம் நூறு ஆண்டுகளுக்கு முன்பே வளமோடும் வசதியோடும் வாழ்ந்ததில் வியப்பு ஏதுமில்லை!
(பக்கங்கள்: 11 12 அறவுரை ஏப்ரல் மே 1992,)
2. அன்னை மீனாம்பாளின் தந்தை மற்றும் பாட்டனார், வாசுதேவ பிள்ளை மதுரைப்பிள்ளை உள்ளிட்ட முன்னோடிகளின் பெரிய வரலாறுகள் பற்றி தமிழில் நூற்றாண்டு கண்ட அறிஞர் அன்பு பொன்னோவியம் மட்டுமே எழுதியுள்ளார் அவர் வைத்த குறிப்புகளை வைத்து தான் இன்றைக்கு நாம் நிறைய தேட வேண்டி இருக்கின்றது.
3. அன்னை மீனாம்பாள் அவர்கள் டாக்டர் அம்பேத்கரிய இயக்கத்தோடு இணைந்து நின்ற செய்திகள் பல ஒளிப்படங்களாகவும் கிடைக்கின்றன.பல குறிப்புகளாகவும் பல அறிஞர்களால் மேற்கோள் கட்டப்பட்டுள்ள.
4. நீதிக்கட்சி மற்றும் பிராமணர் அல்லாதார் இயக்கத்தோடு தந்தை சிவராஜ் அவர்கள் அன்னை மீனாம்பாள் அவர்கள் இணைந்து நின்ற நீண்ட வரலாறை அவ்வாறாகவே திராவிட இயக்க வரலாறுகள் நீதி கட்சி மலர்கள் மற்றும் ஒளிப்படங்கள் பறைசாற்றி நிற்கின்றன. இந்திய எதிர்ப்பு போராட்டத்திலும் மற்றும் தந்தை பெரியாருக்கு பெரியார் பட்டம் வழங்கியதிலும் இன்னும் பல சமூகப் பங்களிப்புகளிலும் சிறந்து விளங்கிய அன்னை மீனாம்பாள் பற்றி விரிவான பதிவுகள் இன்னும் வெளிவர வேண்டும்.
5. தந்தை சிவராஜ் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை மிக விரிவாக அம்பேத்கர் பிரியன் அவர்கள் தமிழில் 1994 இல் கொண்டு வந்தார். அந்த நூலிலும் நீதி கட்சி 75 ஆவது ஆண்டு மலரில் இருந்து எடுக்கப்பட்ட அன்னை மீனாம்பாளின் பேட்டியை இணைத்துத் தந்துள்ளார். பக்கங்கள் 262-268)
6. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தமக்கு விருப்பமானவர்கள் வரும்பொழுது சிறப்பாக சமைத்துத் தருவார் என்பதை அன்னை மீனாம்பாளின் குறிப்புகள் மட்டுமின்றி அவரது அன்றாட பழக்கங்கள் பற்றி எழுதிய தேவி தயாள் அவர்களின் குறிப்புகளும் காட்டுகின்றன.
+விரிவான வாசிப்பிற்கு பார்க்க பக்கங்கள்: 181 182 பாபாசாகிப் அருகில் இருந்து சலீம் யூசுப் ஜி தமிழில் பிரேமா ரேவதி மைத்திரி வெளியீடு)
(மேலும் டாக்டர் அம்பேத்கரின் துணைவியார் சபிதா அம்பேத்கர் அவர்களும் அண்ணல் அம்பேத்கரின் சமையல் கலை உணர்வு பற்றி விரிவாக எழுதியுள்ளார் பார்க்க பாபா சாகிப் டாக்டர் அம்பேத்கர் உடன் என் வாழ்க்கை சவீதா அம்பேத்கர் ஆங்கிலத்தில் நதிம்கான், தமிழில்த. ராஜன் எதிர் வெளியீடு 2023)
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleஎங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
க ஜெயபாலன்
ஜெயபாலன் சிறந்த உரையாளர். அம்பேத்கரியலையும், பவுத்தத்தையும் ஓயாமல் பரப்பும் ஆற்றலாளர். தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும், பேசிக் கொண்டும் இருக்கும் அவர் – ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நதியின் தன்மையுடையவர்.
