[quotes quotes_style=”bpull” quotes_pos=”left”]தொழில்நுட்ப வீச்சால், தொலைவுகளற்றதாக பூமி மாற்றப்பட்டு விட்டதாலும், பேரண்டம் சுருங்கத் தொடங்கியதாலும், உற்சாகமடைந்திருக்கிறார்கள் மனிதர்கள். தத்துவம், அரசியல், சமூகம், உரிமை, உயிர் அனைத்தும் விற்பனைப் பண்டங்களாகின்றன. உடல் மட்டும் கொண்ட மனிதர்களுக்கு இனி இடமில்லை என்கிறது உலகு. ஆனாலும், அநீதிக்குள்ளாகிய மனிதர்கள் மூடப்பட்டுவிட்ட வழிகள் முன் காத்துக் கிடக்கிறார்கள்.
இந்தியாவிலும் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது. நெடுங்காலமாகச் சுமந்து திரியும் அவலங்களைத் துடைக்க, அதிகாரத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கிறார்கள் ஒடுக்கப்பட்ட மக்கள். ‘மக்களுக்காக மக்களால்’ என வர்ணிக்கப்பட்ட மக்களாட்சி நெறிமுறைகளைப் புதைக்க, பன்னாட்டு பெருமுதலாளிகளுடன் கை கோர்க்கிறார்கள் ஆட்சியாளர்கள். சமூகத்தில் வாய்க்காது போன உரிமைகள், அரசியல் தளத்தில் மட்டும் வாய்க்குமா? கனவுகளைச் சுற்றிப் படரும் ஜனநாயக இருளை பவுத்த ஒளி துலக்கட்டும். அதைத் தேடிய பயணம் இது.
– யாக்கன்[/quotes]
மனித இனத்தின் நீண்ட நெடிய சிந்தனை அனுபவங்களால் செழிப்புற்றிருக்கிறது உலகம். முடிவற்றுத் தொடர்ந்து கொண்டிருக்கும் மனிதத் துயரங்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் சமய நெறிமுறைகளும் தத்துவங்களுமே தீர்வைத் தர முயன்றிருக்கின்றன. அறியப்படாமலிருக்கும் எதிர்காலப் பேரழிவுக் கெல்லாம் அவையே பொறுப்பு. மனித நம்பிக்கையின் ஊற்றுக் கண்களாய் இருக்கும் அவை, பெருந்தொலைவு களுக்கிடையில், பலவகை மொழிகள், பண்பாடுகள், வழிபாட்டுக் கூறுகள், வாழ்க்கை முறைகள் ஆகியவற்றைக் கொண்டு வாழும் மக்களை இணைக்கும் பாலமாகவும் விளங்குகின்றன. ஆயினும், மனித இனம் அரசு என்ற முரண் பகை கொண்ட நிறுவனத்திடம் அடிபணிந்து கிடக்கிறது. உடைமை வர்க்கத்தின் நலன்களைப் பாதுகாக்கவே அரசுருவாக்கங்கள் நிகழ்ந்தன. அதே நேரத்தில், ஒடுக்கப்படுகின்ற, சுரண்டப்படுகின்ற மக்களுக்காகவும் அரசு செயல்படுகிறது என மக்கள் நம்ப வைக்கப்பட்டுள்ளனர்.
அரசு என்பது அரசியல் தத்துவமாகவும், நடைமுறைக் கோட்பாடாகவும் உருமாற்றம் அடைந்திருக்கிறது. ஆனாலும், இனக்குழுக்களாகத் திரளத் தொடங்கி, இன்று வல்லரசு வடிவமெடுத்திருக்கும் அரசுகள் மிகக் கொடூரமான ஒடுக்குமுறைகளால் உருவாக்கப்பட்டவையே! ஒடுக்குமுறையால் மட்டுமே அரசுகள் உயிர் வாழ்கின்றன. இனி, அரசுகளின் பிடியிலிருந்து மக்கள் விலகி ஓடிவிட முடியாது. தனது எல்லைக்குட்பட்ட ஒவ்வொரு உயிரினத்தையும் அங்க அடையாளங்களுடன் ஆவணப்படுத்திக் கண்காணித்து வருகின்றன அரசுகள். அரசின் அதிகாரம் யாரிடம் போய்ச் சேர்ந்தாலும், அதன் செயல்தன்மையில் ஒரு மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. நிரூபிக்கப்பட்டது அது மட்டுமல்ல, அரசின் செயல்பாடுகளுக்கு பங்கம் விளைவிப்போர் மரணமடைவார்கள் அல்லது ஒடுக்கப்படுவார்கள் என்பதும்கூடத்தான்.
அரசு என்ற கொலை எந்திரத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்ல மக்களால் இயலுமா? எல்லைக் கோடுகளால் மக்களையும், வான், கடல், நிலம் என அனைத்தையும் கூறுபோட்டுச் சொந்தம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றன அரசுகள். தன்னிடமிருப்பதைக் காக்கவும், இல்லாதவனிடமிருந்து இருப்பதையும் எடுத்துக் கொள்ளவும் துடிப்புடன் அவை செயலாற்றுகின்றன. மனிதர்களிடமிருந்து மனிதர்களைக் காக்கவும், மனிதர்களுக்காக மனிதர்களைக் கொல்ல வும் உருவான அரசுகள், பேரண்டத்திலும் எல்லைக் கோடுகளை வரையத் தொடங்கியுள்ளன. இனி அரசுகளுக்கென்று மீதமிருக்கும் ஒரே வேலை இப்புவியை அழிப்பதுதான்!
முடியாட்சி, காலனியாட்சி, ராணுவ ஆட்சி, மக்களாட்சி என அனைத்து வகை ஆட்சிமுறைகளையும் மக்கள் பார்த்தாகி விட்டனர். ஆயினும், சுதந்திரமான வாழ்க்கைக்காகவும், சுரண்டலற்ற வளத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் மக்கள் ஏங்கி, அலைந்து கொண்டிருக்கிறார்கள். அவையெல்லாம் அரசுகளிடமிருந்து ஒருபோதும் கிடைக்கப் போவதில்லையென அறிந்தும், மிதிபடும் எறும்புகளாக சாரை சாரையாக அரசுகளிடம் செல்கின்றனர். அதன் செயல் தளங்களில் வீணடிக்கப்பட்ட நம்பிக்கைகளோடு காத்துக் கிடக்கின்றனர். பிரபஞ்சத்தையே அழிக்கும் அறிவு படைத்த மக்கள், தங்களால் உருவாக்கப்பட்ட அரசு எந்திரத்திடம் வீழ்ந்து கிடப்பதை ‘மனித இனத்தின் மரணம்’ எனச் சொல்லலாம். ஏனென்றால், ‘அரசு’ என்ற நிறுவனமே தனியுடைமை வெறிகொண்ட மக்களின் இறுதி முடிவு. அதைக் கடந்து அவர்களுக்கு இருக்கும் ஒரே நம்பிக்கை ‘கடவுள்’ என்னும் வெற்றுச் சொல் மட்டுமே!
1917 நவம்பர் 7இல் ரஷ்யாவில் நடந்த தொழிலாளர் புரட்சிக்குப் பிறகு, ரஷ்யன் சோவியத் சமன்மைக் குடியரசுக்கான அரசியல் சட்டத்தை உருவாக்கியபோது, லெனின் இப்படிச் சொன்னார் : ‘ரஷ்யாவின் தொழிலாளர்களும், விவசாயிகளும் நடத்திய புரட்சியால், உலக வரலாற்றில், இரண்டு சகாப்தங்கள் உருவாகியிருக்கின்றன. ஒன்று, பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசு; மற்றொன்று, முதலாளித்துவ நாடாளுமன்ற அரசு.” இதுவரை உலகில் தோன்றிய அரசுருவாக்கங்களில், எதிரெதிர் தத்துவக் கோட்பாட்டு நடைமுறைகளுடன் நிலை பெற்று இயங்கிக் கொண்டிருப்பவை இவ்விரண்டு அரசு முறைகளேயாகும்.
அமெரிக்கப் புரட்சிக்குப் பிறகு, 1776 சூலை 4 ஆம் நாளில், அமெரிக்காவின் மூன்றாவது குடியரசுத் தலைவரான ஜார்ஜ் வாஷிங்டனின் நண்பரும், பிரபல அடிமை வியாபாரியுமான தாமஸ் ஜெபர்சன் வகுத்துத்தந்த அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடனம், மூன்று தத்துவங்களைக் கொண்ட அரசுருவாக்கத்தை வலியுறுத்தியது. அவை, வாழ்க்கை சுதந்திரம் மகிழ்ச்சியின் தேட்டம் ஆகியவையாகும். ‘மகிழ்ச்சியின் தேட்டம்’ என்ற சொல்லுக்கான முழுப் பொருளும் அச்சொல்லில் பொதிந்திருக்கவில்லை என்று கருதினார், அமெரிக்காவின் அரசியல் சாசனத்தை உருவாக்கித் தந்த லாக். 1787இல் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டபோது, அடிப்படைக் கோட்பாடுகளை, வாழ்க்கை சுதந்திரம் – சொத்துரிமை என்று மாற்றினார் அவர்.
அமெரிக்காவின் பூர்வீகப் பழங்குடி மக்களை அடிமைகளாக்கி வைத்திருந்த அய்ரோப்பிய வந்தேறிகளே, அமெரிக்காவின் சுதந்திரக் குடிமக்களாயினர். ஏனெனில், அமெரிக்க அரசியல் சாசனம், அடிமைகளை வைத்துக் கொள்ள அனுமதி அளித்தது. அடிமைகள், குடிமக்களின் சொத்துக்களாக்கப்பட்டனர். ஆங்கில காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகும், அமெரிக்க அடிமைகள் அடிமைகளாகவே இருந்தனர். அதிகாரம், காலனி ஆட்சியாளர்களிடமிருந்து சொத்துடைமை வர்க்கத்தின் கைக ளுக்கு மாறியது.
பிரிட்டிஷ் – ஸ்பானிய காலனி ஆட்சியை வீழ்த்தி உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட அமெரிக்கச் சுதந்திரப் பிரகடனத்தையும், அதன் அரசியல் சட்டத்தையும் பின்பற்றியே உலக நாடுகள் அனைத்தும் தங்கள் அரசுருவாக்கக் கோட்பாடுகளை ஏற்படுத்திக் கொண்டன. முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக, காலனி ஆதிக்கத்திலிருந்த இந்தியாவும், அமெரிக்க அரசுருவாக்கக் கோட்பாடுகளில் தனக்குத் தேவையானவற்றை எடுத்துக் கொண்டது. வெள்ளையர்கள் விட்டுச் சென்ற சட்டங்களும், ஆட்சி நிர்வாக முறைகளுமே இந்தியாவை ஆளப் போதுமானவையாக இருந்தன. “சமூகத்தில் புதிய வர்க்க உறவுகள் உருவான பிறகு, எப்பொழுதுமே அரசியல் சட்டங்கள் தங்களைத் தாங்களே உருவாக்கிக் கொள்ளும்” என்பார் காரல் மார்க்ஸ். அவரது வார்த்தைகளுக்கு எதிர் நிரூபணமாக, இந்தியாவில் காலனி ஆட்சி விலகிச் சென்ற பிறகு, புதிய வர்க்கம் எவையும் உருவாகவில்லை. எனவே, புதிய சட்டங்களுக்கான தேவையும் எழவில்லை.
பலாத்காரமான ஆயுதப் புரட்சியின் மூலமாகவோ, நீண்ட காலமாக வளர்த்தெடுக்கப்பட்ட விடுதலை உணர்வோடு திரண்ட மக்கள் பேரெழுச்சியினாலோ, இந்தியாவின் விடுதலை மலரவில்லை. மாறாக, கழிவிரக்கம் தேடிய காந்தியின் எரிச்சலூட்டும் போராட்டங்களும், பீதியூட்டிய மதவெறிப் பயங்கரமும்தான், வெள்ளையாட்சி முடிவுக்கு வரக் காரணமாக அமைந்தன. எனவேதான், புத்துணர்ச்சியுடையதாக இந்தியாவின் சுதந்திரம் இருக்கவில்லை. விடுதலைக்கான நாட்கள் நெருங்கிக் கொண்டிருந்தபோது, இந்திய மக்களைத் தங்களின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்க விடாமல், ஒரு பெரும் துயரம் தடுத்து நிறுத்தியது. அது ‘தேசப் பிரிவினை’யாகும்.
காலனியாதிக்கத்தின் இந்தியா பாகிஸ்தான் எல்லைகளில், பஞ்சாபிலும், கல்கத்தாவிலும் பெரும் கலவரம் மூண்டிருந்தது. மூன்றே நாட்களில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இந்திய மக்கள் பைத்தியங்களாகி விட்டிருந்தார்கள். அதன் தலைவர்களோ, தங்களைக் காத்துக்கொள்ள பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் புகுந்தனர். மதவெறியிலிருந்து மக்களை மீட்பதே அவர்களுக்கு முதல் வேலையாக இருந்தது.
அந்த வேலையைச் செய்து முடிக்க இந்தியாவின் வயது முதிர்ந்த ‘மகாத்மா’ உட்பட எவராலும் முடியவில்லை. மத பயங்கரவாதத்தினூடாக, துண்டாடப்பட்டுப் பிரிந்த இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே லட்சக்கணக்கான மக்கள், தாங்கள் பிறந்து வாழ்ந்த மண்ணை விட்டு கண்ணீர் மல்க அலைந்து கொண்டிருந்தார்கள். குடும்பங்கள் பிரிந்தன. இனி ஒருபோதும் சந்திக்க முடியாத எல்லைக்கோட்டு வேலிகளுக்குள் அடைக்கப்பட்டனர் மக்கள். இந்துவாகவோ, முஸ்லிமாகவோ, சீக்கியராகவே அடையாளம் காணப்பட்ட இந்தியர்களுக்குத் தான் விருப்பப்பட்ட இடங்களில் குடியேற வாய்ப்பும் அவகாசமும் கொடுக்கப்பட்டது.
சாதியச் சமூகத்தின் கொடூரமான ஒடுக்குமுறைகளையும், உயிர்வதைகளையும், பாலியல் சுரண்டலையும் அனுபவித்துக் கொண்டிருந்த தீண்டத்தகாத மக்கள், எங்கும் தப்பிச் செல்ல முடியவில்லை. அப்படியொரு வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
இறுதியில், பேரழிவைக் கொண்டு வந்த மகிழ்ச்சியாக, கறுப்பின அடிமைகளோடு சுந்திரம் பெற்ற அமெரிக்காவைப் போல, எட்டுக்கோடி தீண்டத்தகாத இந்தியர்கள் உட்பட 40 கோடி மக்கள் கொண்ட ஏழ்மை நிறைந்த இந்தியாவிற்கு 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திரம் கிடைத்திருந்தது. எண்ணிக்கையிடப்படாத வறுமையும், அறியாமையும் கொண்ட பல்லாயிரக்கணக்கான கிராமங்களில் வாழ்ந்த 30 கோடிக்கும் மேலிருந்த இந்திய மக்களுக்குச் சுதந்திரம் என்பது, இன்னது என்று அறிந்து கொள்ள முடியாததாக இருந்தது. நீண்டிநெடிய அடிமைத்தனத்திலிருந்து தாங்கள் பெற்ற சுதந்திரத்தைப் புரிந்துகொள்ள முடியாத மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். அப்படித்தான் சுதந்திர கால இந்தியர்கள் இருந்தார்கள்.
மக்கள் மட்டுமல்ல, அவர்கள் பெற்ற சுதந்திரமும் பரிதாபத்திற்குரியதாகவே இருந்தது. மிகப்பெரும் உள்நாட்டுப் போரால், இந்தியா என்னும் சொல்லும் அது பெற்ற சுதந்திரமும் துண்டு துண்டாகச் சிதறும் என்றுதான் உலகின் அனைத்து நாடுகளும் எண்ணின. சுதந்திரத்திற்குப் பிறகு வந்த இரு வாரங்களில் நடந்த படுகொலைகள், பார்ப்பனிய சாதியச் சமூகம் வளர்த்தெடுத்த மூடநம்பிக்கை மிகுந்த இந்திய மக்கள் எத்தகைய குரூரமானவர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தின. இந்தியாவை ஆட்சி செய்ய வேண்டுமானால், மிகக் கடுமையான சட்டங்கள் தேவை என்று உலக நாடுகள் எண்ணின. ஆனால், சில மாதங்களிலேயே பேரழிவிற்குப் பிந்தைய மயான அமைதிக்குத் திரும்பியது இந்தியா. தங்களை ஆள்வதற்குத் தகுதியான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இந்தியா தயாராகியது.
‘சுயராஜ்ஜியம்’ பற்றிய பேச்சு எழுந்த காலத்திலிருந்தே இந்தியர்கள் தங்களின் நாட்டை ஆள, தாங்களாகவே அரசியல் சட்ட வரைவின் அடிப்படை நோக்கங்களை உருவாக்கி வைத்திருந்தார்கள். 1927 ஆம் ஆண்டில் மோதிலால் நேருவால் முன்மொழியப்பட்டிருந்தவை, இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் புகழ் வாய்ந்தவைகளாகக் கருதப்பட்டன. ஆனாலும், அரசியல் சாசனத்தை வகுக்கும் பொறுப்பை, இந்தியர்களிடம் ஒப்படைப்பதற்கு ஆங்கில அரசு பெரும் தயக்கம் காட்டியது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. ஒன்று தங்களது ஆட்சியிலும்கூட, பல்வேறு சமஸ்தானங்களாகவும், ஜமீன்களாகவுமே நீடித்து வந்த ஆங்கில இந்தியாவை, இந்திய தேசியத்திற்குள் கொண்டுவர முயற்சித்த இந்திய தேசியவாதம், ஆங்கிலேயர்களுக்கு அபத்தமானதாக இருந்தது. இரண்டாவது, பூதாகரமாகக் கிளம்பிக் கொண்டிருந்த இந்து – முஸ்லிம் மத பயங்கரவாதம். இவை இரண்டையும் கட்டுப்படுத்தி நிர்மாணிக்கும் தகுதி, இந்தியர்களுக்கு உண்மையிலேயே இல்லாதிருந்தது. ஆனாலும், அதிகாரக் கைமாற்றலுக்காகக் காத்திருந்த பார்ப்பன – பனியாக்கள், வளமானதொரு அரசியல் அமைப்பிற்கான அடிப்படைகளைக் கைவசம் வைத்திருந்தனர்.
1946 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 9 ஆம் நாள் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் முறையாகக் கூடியது. அக்கூட்டத் தொடரிலேயே, அரசியல் அமைப்பின் நோக்கங்கள் பற்றிய தீர்மானத்தை ஜவகர்லால் நேரு முன்மொழிந்தார். சமூக, பொருளாதார, அரசியல், நீதி, சமவாய்ப்பு, சம அந்தஸ்து, சட்டத்தின் முன் சமத்துவம், எண்ணம், கருத்து, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு, தொழில், கூட்டுச் சேருதல், செயல்பாடு ஆகியவற்றில் அனைத்து மக்களுக்கும் சுதந்திரம், சிறுபான்மையோர், பின்தங்கியோர், பழங்குடிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆகியோருக்குப் போதிய பாதுகாப்பு போன்ற மய்யக் கூறுகள் தீர்மானத்தில் இடம் பெற்றிருந்தன.
தீர்மானத்தின் முன்மொழிவுகளை ஏற்றுக்கொண்ட அரசியல் நிர்ணய சபை, வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு முடிவை எடுத்தது. பின்னாளில், இந்திய அரசியல் சட்டத்திற்குப் பெரும் புகழையும், பெருமையையும் பெற்றுத் தந்த முடிவாக அது இருந்தது. 1947 ஆகஸ்ட் 29இல் உருவாக்கப்பட்ட அரசியல் சட்ட வரைவுக் குழுவிற்குத் தலைவராக டாக்டர் பி.ஆர். அம்பேத்கரைத் தலைவராக நியமித்ததே அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு.
உலகில் வேறெங்கும் காண முடியாதபடி திகைப்பூட்டும் அள விற்கு வேற்றுமைகளும் விரோதங்களும் நிறைந்த இந்தியாவிற்காக, மொழியாலும், பண்பாட்டாலும், சாதிகளாலும் எண்ணற்ற வகையில் பிளவுண்டு கிடந்த இந்திய மக்களுக்காக, அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பணியை அம்பேத்கர் ஆர்வமுடன் ஏற்றுக்கொண்டதை, இந்தியாவிற்குக் கிடைத்த பெரும் பேறு எனச் சொல்ல வேண்டும். இந்திய சாதியச் சமூகத்தால் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கனவை நெஞ்சில் சுமந்து கொண்டு, ஒடுக்குகிற, ஒடுக்கப்படுகிற, சுரண்டுகிற, சுரண்டப்படுகிற அனைத்து மக்களுக்காகவும் திறந்த மனதுடன், உயர்ந்த நோக்கத்துடன் அவர் பணியாற்றினார். அதனால்தான், பெரும் சோதனைகளைக் கண்ட பின்னரும், இந்திய அரசியல் அமைப்பு, நிறைவேறாத கனவு களுடன் பற்றாக்குறைகளுடன் கடந்த அய்ம்பதாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இந்திய மக்களின் மதிப்பிற்குரியதாக, நம்பிக்கைக்குரியதாக இன்னமும் நீடிக்கிறது.
ஆயினும், ‘முழுமையானதும், முதன்மையானதும்’ என்று புகழப்படும் உலகின் மிக நீளமான இந்திய அரசியல் சாசனம், தன் மக்களுக்கு வழங்கியிருந்த உறுதிகளை நசுக்கத் தொடங்கியிருக்கிறது. அநீதி இழைக்கப்பட்ட ஒரு மிகப்பெரும் மக்கள் திரளுக்கு, சமூக அரசியல் பொருளாதார சமத்துவத்தை வழங்க, அரை நூற்றாண்டு காலம் அதற்குப் போதுமானதாக இல்லைபோலும். நாட்டின் எதிர்காலத்தையும், மக்களின் நம்பிக்கைகளையும் நாடாளுமன்ற பேரிரைச்சலில் கரைத்து மறைக்கிறது, இந்திய நாட்டின் மக்கள் ஜனநாயகம். பேரொளியாய் நம்பிக்கையூட்டிய காலம் போய், ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக உரிமைகளை, ஆட்சி அதிகாரக் கனவுகளை விழுங்குகிற இருளாய் மாறியிருக்கிறது.