Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன

    April 14, 2025

    அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

    December 8, 2024

    ஊர்-சேரி-காலனி – மாற்றத்திற்கானத் தருணம்.

    August 7, 2024
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » தங்கவயலின் தனிப் பெரும் தலைவர் க. பூசாமி
    வாழ்க்கைக் குறிப்புக்கள்

    தங்கவயலின் தனிப் பெரும் தலைவர் க. பூசாமி

    ஏ.பி.வள்ளிநாயகம்By ஏ.பி.வள்ளிநாயகம்July 12, 2010No Comments7 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    தங்கம் கோலார் தங்கவயலில் தனது இருப்பை உணர்த்திய காலத்திலிருந்தே தொல் தமிழர்களும், அய்ரோப்பிய நிபுணர்களும் நீங்க முடியாத பிணைப்புகளோடு இருந்தனர். தொல் தமிழர்களின் உழைப்பு மூலதனம்தான் கோலார் தங்கவயலில் தங்கம் எடுக்க, ஒரே உந்து சக்தியாக இருந்தது. தங்க வயலின் விளைச்சல் குறித்து அவர்களுக்குதான் தப்ப முடியாத பெரிய பெரிய உத்தேசங்கள் இருந்தன. தங்கத்தைத் தேடுவதில், தேடிக் கண்டதில், தேவையற்ற சேர்க்கைகளைக் கழித்து தனித்ததொரு தங்கமாக வார்த்தெடுப்பதில், வேட்கையும் வைராக்கியம் நுணுக்கம் அவர்களிடமே குடி கொண்டிருந்தன.

    இதில் குறிப்பிட்டுச் சொல்லித் தீரவேண்டிய மக்கள், வட ஆர்க்காடு மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து, தங்களின் மனித ஆற்றலுக்கு உட்பட்ட வரையில் பூமியின் மய்யத்தை நோக்கிக் குடைந்து, கோலார் தங்க வயலில் உலகத்திலேயே மிக ஆழமான தூரத்தில் இறங்கி, தங்கத்தை வெட்டியெடுத்து அதை வெற்றிகரமான தொழிலாக்கினர். தொல் தமிழர்களோடு பிணைந்து சுரங்கத் தொழில் நடத்திப் புகழடைந்தவர்கள், இங்கிலாந்து நாட்டவரான ‘ஜான் டெய்லர் அண்ட் சன்’ நிறுவனத்தினர். 19 ஆம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாக, மிக அதிக அளவில் தங்கத்தை உற்பத்திச் செய்யும் சுரங்கப் பகுதி கோலார் தங்க வயலென நிலை நிறுத்தினர்.

    கிராமங்களின் சாதி ஆதிக்கச் சூழலின் விளைவு என்ற வகையில், இடம் பெயர்தல் ஒரு கிளர்ச்சியாகிப் போனதில், அது மற்றவர்களுக்கு மலினப்படாமல் சுயம் காக்கும் இயக்கமானது. சேற்றில் சிதறிய சோற்றுப் பருக்கைகளை அந்தச் சேற்று நீரிலேயே கழுவி விழுங்கி, உண்ட கையைக் கோவணத்தில் துடைத்துக் கொண்டு, பரம்படித்து பயிர் வளர்த்த வேளாண்குடி மக்கள் தங்க வயல் சூழலுக்கேற்ப மாற்றமடைந்தனர். அடிக்கடி ஏற்படும் பூமி அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பளிக்கத்தான் தட்டி வீடுகள் என்று ஆங்கிலேயர் வழங்கிய எட்டடிக் குடிசைகளில் வாழ்ந்தே தங்கத் தொழிலாளர் ஆகினர்.

    வைகறை முதல் அந்தி இருட்டு சாயும்வரை உழைத்த காலமான அன்று எட்டுமணி நேர வேலை என்ற வரையறுப்பு இல்லை. இருப்பினும், மக்களின் பழக்க வழக்கங்களில் மாறுதல்கள் தோன்றி அய்ரோப்பியப் பண்பாட்டிற்கேற்ப நடை, உடை, சிகையலங்காரம், வழக்கு மொழியில், உணவு முறையில் ஆங்கிலக் கலப்பு எனப் புதிய சூழ்நிலை தங்க வயலில் உருவாகியது. தொல் தமிழர்கள், பல்லாயிரம் அடிகள் பூமிக்கடியில் இறங்கி, பாறையைப் பிளந்து ரத்தம் சிந்தி ‘கீழே போனால் பிணம்; மேலே வந்தால் பணம்’ என்னும் தங்க வயலுக்கே உரிய ‘புண் மொழி’க் கேற்ப உயிரைப் பணயம் வைத்தே சுரங்கத் தொழிலை வளர்த்தெடுத்தனர்.

    1880 சுரங்கத் தொழிலின் தொடக்கமாகக் கருதப்படுகிறது. முதல் இருபதாண்டு (1880 – 1900) சுரங்கத் தொழில் வளர்ச்சியுற்ற காலத்திலேயே, ஆதிதிராவிடர்கள் வெறும் பாட்டாளிகள்தான் என்பதைத் தாண்டி, ஒருசில சமூக ஆளுமைகள் சிந்திக்க வேண்டிய, செயல்பட வேண்டிய முன்னேற்ற கட்டத்திற்கு வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆதிதிராவிடர் சதாயத்தின் அறிவு – ஆக்கப் பரிணாமத்தை வெளிச்சமாக்கிய தொழில் விற்பன்னர்களாக வாய்த்தனர். சமூகப் பாட்டாளி வர்க்கம் உருமாற்றம் பெறுவதின் படிமங்களாயினர். இவர்களில் முதன்மையானவர், கோலார் தங்கவயல் மைசூர் மைன்ஸ் பொறியாளரும், ஆதிதிராவிடர் மகாஜனசபையின் தலைவருமான க. பூசாமி.

    “சுரங்கத் தொழிலில் புகழ் பெற்ற காண்ட்ராக்டராகவும், திறமை மிக்க இஞ்சினீயராகவும் க. பூசாமி பணியாற்றியபோது, தனது தொழில் ஆற்றலில், காழ்ப்புணர்வு கொண்டு மாசு கற்பித்த ஆங்கிலேயர்க்கு அடங்கி செயல்பட விரும்பாமல், சுயமரியாதை வீரராய் பதவி விலகி, இனி வெள்ளையர் கம்பெனியின் மண் மீது கால்களை வைப்பதில்லை எனச் சூளுரைத்துத் தங்க வயலிலேயே பற்றிப் படர்ந்து, வெள்ளையருக்குத் தாம் எந்த வகையிலும் குறைந்தவரல்ல என்பதை நிரூபணம் செய்பவராய், தங்க வயலின் தெற்கே அய்ந்து கிலோ மீட்டர் தொலைவில், பிசாநத்தம் பகுதியில் தனது சுய முயற்சியில் ஒரு புத்தம் புது தங்கச் சுரங்கத்தை நிறுவினார். அதன் தலைமை இஞ்சினீயராகத் தானே பொறுப்பேற்றுத் தங்க உற்பத்தி செய்து, தன்னகங்கார ஆங்கிலேயரைத் தலைகுனிய வைத்துப் பாடம் புகட்டினார்.”

    கே.எஸ். சீதாராமன் எழுதிய “கோலார் தங்க வயல் வரலாறு’ நூலிலிருந்து பக்கம் : 187

    சுரங்கத் தொழிலியல் துறையில் தேர்ச்சிப் பெற்ற க. பூசாமி, பொறியாளராய் பொறுப்பேற்று, தங்கத்தை அடையும் ஆற்றல்களின் வாசல்களைத் திறந்து வைத்த ஒரு சிறந்த சுரங்கத் தொழிற்கலை நிபுணர் ஆவார். தொழிலறிஞர் க. பூசாமி, ஆங்கிலேயர் அடங்கிய தங்க உற்பத்தி குழுமத்திற்கும், சுதேசி விதேசி பொறியாளர்கள் அடங்கிய தங்க உற்பத்திக் குழுவிற்கும், தங்கம் எடுக்க வியூகத்தை வகுத்துக் கொடுப்பதில் பாலமாகத் திகழ்ந்தார். சுரங்கத் தொழில் பொறியியல் கல்வியில் அந்தந்த காலத்திற்கு ஏற்ற வகையில் மாறுதல்களைக் கொண்டு வந்தார். ஆங்கிலேயர்களின் சுரங்கத் தொழில் நிலைய அக மதிப்பீட்டு முறைமைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்து, சுரங்கத் தொழிலை நிலைப்படுத்தி, வெற்றியாக்கி, விரிவாக்கி தன்மையானப் பங்காற்றினார்.

    சுரங்கத் தொழில் மேதையான இவர், சுரங்கத் தொழிலுக்கான தொழிற்சாலைக் கட்டடங்கள், காரியாலயங்கள், ஆங்கிலேயர்களுக்கான பங்களாக்கள் முதலியனவற்றைக் கட்டும் கட்டடத் தொழிலிலும் சிறப்புற்றார். தங்கவயலின் சுரங்கத் தொழில் தேவைகளுக்கேற்ப கட்டடக் கலையைக் கட்டமைத்த ஆதர்ச சக்திகள் வரிசையில் இடம் பிடித்தார். கட்டடக் கலையின் எல்லைகளுக்குச் சென்று சஞ்சாரம் செய்த இணையற்ற கட்டடக் கலைஞரான இவர், கட்டட ஒப்பந்தக்காரர் நிலையில் பெரும் செல்வந்தர் ஆனார். அக்காலத்தில் இருந்த முன்னோடி ஆளுமையோடு ஒரு சேர அணிவகுத்து வெளிப்பட்ட மிக முக்கிய புள்ளிகளாய் எம்.சி. மதுரைப் பிள்ளை, ஆர்.ஏ. தாஸ், செல்லப்பா போன்றோர் விளங்கினர்.

    இவர்கள் அனைவருக்கும் வைணவ மயக்கமிருந்த போதிலும், ஆதிதிராவிடர் சமூக நலனில் தெளிவுள்ளவர்களாக இருந்தனர். தங்கள் பணக்கார வாழ்விலும் மிகப் பெரிய சக்தியாக, தம் தாழ்த்தப்பட்ட மானுடத்தையே நேசித்தனர். தங்களுக்கான முன்னேற்றத்தை தோற்றப்படுத்தியபடியே ஒரு முனையில் நகர்ந்து சென்றாலும், மறுமுனையில் சமூக முன்னேற்றமே இவர்களுடையது. இவர்கள் சமூகத்தில் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துபவர்களாகவும், சமூக வளர்ச்சிக்குத் தங்களை அர்ப்பணிப்பவர்களாகவும், கொடை வள்ளல்களாகவும் திகழ்ந்தனர்.

    இவர்கள், தங்கள் ஆன்மீகச் சாய்மானமான வைணவத்தை, பார்ப்பனர்களின், பார்ப்பனியர்களின் குறுக்கீடு இல்லாமல் தாங்களே ஆட்சி செய்தனர். “தங்கவயல் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்குத் தொண்டாற்றும் பணியில், வைணவர்களின் சேவைக்கு ஈடுகொடுக்க ஏனையோரால் இன்று இயலாது” என பவுத்த மார்க்க ஆளுமையான இ.நா. அய்யாக்கண்ணு புலவர் அவர்கள் அங்கீகரிக்கும் அளவிற்கு, தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான க. பூசாமி மற்றும் எம்.சி. மதுரைப்பிள்ளை, ஆர்.ஏ. தாஸ் போன்றோரின் தலைமையில் வைணவர்களின் சமூகத் தொண்டு விரிவடைந்தது.

    இதில், தொண்ணூறு சதவிகிதத்திற்குமேல் தாழ்த்தப்பட்ட மக்கள் ஒருங்கே சேர்ந்து வாழ்ந்த ஒரே நகரமாக விளங்கிய தங்கவயலில், சமூகப் புரட்சியின் முன்னணித் தலைவர் க. பூசாமியே ஆவார். தலைவர் க. பூசாமி, பொருளாதாரத்தில் உச்சத்தில் இருந்த நிலையில் தம் தனித்துவத்தை மக்கள் வசப்படுத்தி, ‘என் இன நன்மைக்கு இன்று நான் என்ன செய்தேன்?’ என்ற கேள்வியை மனத்தில் இருத்திக் கொண்டு, பலனைப் பற்றி எண்ணாமல் சமூக மனிதரான மனப்பக்குவத்திற்கே தன் மனித இயங்கியலை ஒப்படைத்தார். பறிபோன அவர்களின் வாழ்வியல் உரிமைகளை மீட்டெடுக்க, எம்.சி. மதுரைப் பிள்ளையைத் தோழமையாகக் கொண்டு, ‘கோலார் தங்க வயல் ஆதிதிராவிடர் மகா ஜன சபை’யினைத் தோற்றுவித்து அதன் தலைவரானார். சபையின் செயலாளராக மைசூர் மைன்ஸ் வி.எம். வடுகதாசரை பொறுப்பேற்கச் செய்தார். சபையின் செயலாளரை ஆசிரியராகக் கொண்ட ‘திராவிடன்’ இதழும் வெளிவருமாறு செய்தார். இருக்கும் நிலையிலிருந்து ஏற்றமிகு நிலைக்குச் செல்ல கொந்தளிப்புகளை ‘திராவிடன்’ இதழ் உண்டாக்கியது.

    தனிநபர் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும், மூலதனமே இல்லாத தாழ்த்தப்பட்டோருக்கு கல்விதான் மூலதனம் என்பதை உணர்ந்த தலைவர் பூசாமி, 1900 ஆம் ஆண்டு வரை கல்வி கற்க வாய்ப்பின்றி, வயது வந்தோரில் பெரும்பாலோர் ‘கை நாட்டு’ வைக்கும் நிலையில் மாரிக்குப்பத்தில் சிறீ ஆண்டாள் பள்ளியை நிறுவினார். இதில், ஆரம்பக் கல்வியை முடித்த ஆதிதிராவிடர்கள், கடைநிலை ஊழியர்களாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டுத் தமது சுயமுயற்சியில் அடுத்த மேல் வேலையில் அக்கறைக் காட்டி, ஆங்கில மொழியை அழகாய் வடிவமைத்து உத்தியோக உயர்வு பெற்று எழுத்தர்களாக முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    பிரிட்டிஷ் இந்தியாவின், இந்திய அமைச்சர் மாண்டேகு செம்ஸ்போர்ட் சென்னைக்கு வருகை புரிந்தபோது, அவரைச் சந்தித்து சமூக விசாரணையை க. பூசாமி ஏற்படுத்தினார். “இந்திய அமைச்சருக்கு வரலாற்றில் ஆதிதிராவிடர்கள் யார் என்பதை விளங்கப்படுத்தி, அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாக உள்ள சமூகத் தீமைகளை எடுத்துரைத்தார். பூர்வ குடியினரை ஆதிதிராவிடரென்றே அழைக்கும்படி, இந்திய ஆளுநருக்குத் தந்தி கொடுத்தார். ஆதிதிராவிடர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் வீச்சில் தங்க வயல், பிரம்மபுரம், சென்னை ஆகிய இடங்களில் மாநாடுகளை நடத்தினார். வட தமிழகத்தில் மாநாடுகள் நடத்த உதவினார். மைசூர் சமஸ்தானத்திலும் சென்னை மாகாணத்திலும், அரசியல் அதிகாரப்பகிர்வில் தனிப் பிரதிநிதித்துவம் தாழ்த்தப்பட்டோருக்கு வேண்டும் என்பதை வலியுறுத்தினார். அவர்களுக்கு அரசியல் அதிகாரத் தனித்தன்மையை நிலைநாட்ட, புரட்சியாளர் அம்பேத்கர் வட்டமேசை மாநாட்டில் லண்டனில் பங்கேற்றபோது அம்பேத்கரின் எண்ணம் ஈடேற, ஆதிதிராவிடர் மகாஜன சபை சார்பில் வாழ்த்துத் தந்தியினை தலைவர் பூசாமி அனுப்பி வைத்தார்.

    1924 மார்ச் 17 அன்று மைசூர் சமஸ்தானத்தில் மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட அசெம்பிளி ஏற்படுத்தப்பட்டது. சமஸ்தானம் முழுமையிலுமிருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தவருக்கு 35 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் தலைவர் பூசாமி, ஆதிதிராவிடர் மகாஜன சபையின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் காரியமாக, தாழ்த்தப்பட்டோர் இழிவான சொல்லாடல்களால் பாவிக்கப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைத்து, அரசு ‘ஆதிதிராவிடர்’ எனும் பெயரில் கையாள்வதில் வெற்றி கண்டார். மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் அவ்வாறே விளங்கும் நடைமுறையைக் கொண்டு வந்தார்.

    அவ்வப்போது நடைபெற்ற பிரதிநிதி சபைக் கூட்டங்களில், தாழ்த்தப்பட்டோருக்குக் கல்விச் சலுகை, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, தொழில் மற்றும் விவசாயத்திற்கு உதவி ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து அரசை தாழ்த்தப்பட்டோர் நலனில் செயல்பட வைத்தார். தலைவர் பூசாமி, தன்னளவில் தன் சமூக மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் விதத்தில், வெள்ளையர்களுக்குச் சவால் விடும் வகையில் கார்கள், லாரிகள், பேருந்து வாகனங்கள் பலவற்றுடன் ராபர்ட்சன் பேட்டையில் ‘கே டாக்கீஸ்’ அருகில் ‘சிறீ ஆண்டாள் மோட்டார் சர்வீஸ் அண்ட் ஒர்க்ஸ்’ எனும் போக்குவரத்துக் கழகத்தை நிறுவி வேலை வாய்ப்பினை அளித்தார்.

    சிறீ நம் பெருமாள் பள்ளியை நிறுவிய தலைவர் எம்.சி. மதுரைப் பிள்ளை காலமானதையடுத்து, 1935 இல் அப்பள்ளியின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். கல்விக்கென எவ்வளவு செலவழித்தாலும் வீணில்லை என்பதே இவரது கொள்கை. அக்காலத்தில் எட்டாம் வகுப்புக்குக்கூட அரசுத் தேர்வுகள் நடைபெற்றதன் பொருட்டு, தங்கவயலில் முதன் முதலாக இரவுப் பள்ளி வகுப்புகள் நடத்தி, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் முதல் தரத்தில் தேர்வு பெற ஊக்குவித்தார். இரவுப் பள்ளி வகுப்புகள் நடந்தேற, சிறீ நம் பெருமாள் பள்ளி மேலாளர் வி.டி. பெரியாழ்வாரை பொறுப்பேற்கச் செய்தார்.

    தங்கச் சுரங்கத் தொழிலாளர்களுக்கு 1929 வரை எந்தவிதப் பொழுது போக்கு அம்சமும் கிட்டாமல், அவர்கள் மனவறட்சிக்கு ஆளாகியிருந்த நிலையில், பூசாமி அவர்கள், 1930 இல் நியூ இம்பீரியல் ஹாலை ஆங்கிலேயர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்து, தமிழ் பேசும், பாடும் படமான ‘சத்தியவான் சாவித்திரி’யை வெளியிட்டார். தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்கள் புழங்கிய அரங்கம் அசுத்தமாகிவிடுகிறது என்று காரணம் காட்டி, ஆங்கிலேயர்கள் குத்தகை உரிமம் தொடரத் தயக்கம் காட்டியதால், இதை மானப் பிரச்சனையாக எதிர்கொண்ட பூசாமி அவர்கள், ‘சுயமரியாதையின் சின்னமாக’ ‘ஜுபிலி ஹால்’ திரையரங்கத்தை 1936 ஆம் ஆண்டில் கட்டி முடித்து வடதமிழகம் புகழத் திறப்பு விழா நடத்தினார். பூசாமி அவர்களின் சுயமரியாதை வீரியத்தைப் புகழ்ந்து இ.நா. அய்யாக்கண்ணு புலவர், வி.எம். தாவீதுப் புலவர், வி.எம். வடுக நம்பியார், மதுரகவி சி.எஸ். அதிரூபநாதன், ஏ. பாக்கியநாதன் போன்றோர் புகழ்மாலை சூட்டினர்.

    பூசாமி அவர்களின் பெருமுயற்சியால் 1937 ஏப்ரல் 5 ஆம் நாள் அன்றைய மைசூர் திவான் ராஜ மந்த்ரப் பிரவீணா என். மாதவராவ் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, 1938 செப்டம்பர் 7 ஆம் நாள் இளவரசர் கண்ட்டீரவ நரசிம்மராஜா (உடையார்) அவர்களால் தங்க வயல் சானிடரி போர்டு உயர் நிலைப் பள்ளி திறந்து வைக்கப்பட்டது. குறைந்த பேச்சு நிறைந்த செயல் என்பதனை வாழ்வின் குறிக்கோளாக ஏற்றுச் செயல்பட்டு வந்த பூசாமி அவர்கள், தாம் திரட்டிய செல்வத்தின் பெரும் பகுதியை தம் மக்களின் நலனுக்குக் கொடுத்தே மகிழ்ந்தார்.

    மக்கள் சேவையின் பொருட்டே, பெங்களூர் சென்று திரும்புகையில் 1941, சூன் 27 ஆம் நாள் கோலார் நெடுஞ்சாலையில் காரிலிருந்தபடியே மாரடைப்பால் மக்களை விட்டுப் பிரிந்தார். இறுதி மரியாதையைச் செலுத்த தங்கவயல் மக்கள் அனைவருமே திரண்டு வந்து கண்ணீர் வடித்தனர். இவரது இறுதி ஊர்வலத்திற்கு ஈடான ஒன்று, அதன் பிறகு தங்கவயலில் நடந்தேறியதில்லை. 26.7.1941 அன்று கோலார் தங்கவயல் ஆதிதிராவிடர் மகாஜன சபை சார்பில், மாபெரும் இரங்கல் கூட்டம், சீப் மைனிங் இன்ஸ்பெக்டர் கே. துரைசாமி அவர்கள் தலைமையில் ராபர்ட்சன்பேட்டை கிங் ஜார்ஜ் ஹாலில் நடைபெற்றது.

    தனிப் பெரும் தலைவர் பூசாமி அவர்கள், தொல் தமிழர்களின் வாழ்வியல் உரிமைக்கும், சுயமரியாதைக்கும், சுதந்திரத்திற்கும், வளர்ச்சிக்கும் உத்திரவாதமாக வாழ்ந்தவர். சாராம்சத்தில் பவுத்த வாழ்வியல்படி, தானும் வாழ்ந்து உயர்ந்து, சமூகத்தையும் உயரச் செய்தவர்.

    (நன்றி : தலித் முரசு நவம்பர் 2005)

    Share this:

    • Click to share on Twitter (Opens in new window)
    • Click to share on Facebook (Opens in new window)
    • Click to share on WhatsApp (Opens in new window)

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous Articleமாற்றுப்பாதை – பூவிழியன்
    Next Article மாற்றுப்பாதை – டி.எல்.சிவகுமார்
    ஏ.பி.வள்ளிநாயகம்

      ஏ. பி. வள்ளிநாயகம் (1953 ஆகத்து 19 – 2007 மே 19)விளிம்புநிலை வரலாற்று வரைவாளர்; சமநீதி எழுத்தாளர்; இதழாளர்; அரசியல் ஆசிரியர்; சமூகச் சீர்திருத்தக்காரர். ஒடுக்கப்பட்டோர் விடுதலையும், பவுத்தமும், பெண்ணியமும், சமூக நீதி விழுமியங்களும் இவரது எழுத்தின் அடிநாதமாக அமைந்தது. தன்னலமற்ற, கொள்கை சமரசமற்ற, சுயமரியாதை வீரராகவும் சமூக மனிதராகவும் வாழ்ந்தவர். தமிழகம் எங்கும் சுற்றுப் பயணம் செய்து நாங்கள் இந்துக்கள் அல்லர்'என்ற விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக நடத்தியவனார். கடந்த இருபது வருடங்களாக சமூக மாற்றத்திற்கான அவாவுடன் பவுத்தம், அம்பேத்காரியம், பெரியாரியம் ஆகிய கொள்கைகளைத் தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு, களப்பணியாற்றியதோடு, 25க்கும் மேலான நூல்களை தலித் இயக்கத்திற்கான கொள்கைப் படைக்கலன்களாக கொண்டு எழுதியிருக்கிறார். இவர் 2007-ல் காலமானார்.

      Related Posts

      சமூக வீரன் -ஆம்ஸ்ட்ராங்

      July 12, 2024

      கப்பலோட்டிய தமிழன் பி.எம். மதுரைப்பிள்ளை

      August 11, 2022

      தென்திசை முளைத்த செஞ்சுடர் உ.ஆ.பெருமாள் பீட்டர்

      August 10, 2022
      Leave A Reply Cancel Reply

      Newsletter

      About Us
      About Us

      ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

      இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

      இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

      www.ambedkar.in
      Email Us: ambedkar.in@gmail.com
      Contact: +91 9841544115

      Facebook X (Twitter) YouTube WhatsApp

      Subscribe to Updates

      Get the latest creative news from FooBar about art, design and business.

      அண்மைய பதிவுகள்

      புத்தருக்கு மூன்று நோக்கங்கள் இருந்தன

      April 14, 2025

      அம்பேத்கர்: எல்லோருக்குமான தலைவர்

      December 8, 2024

      ஊர்-சேரி-காலனி – மாற்றத்திற்கானத் தருணம்.

      August 7, 2024

      ‘முற்போக்கான’ தமிழ்நாட்டில் சாதி ஆணவக் கொலைகள், தாக்குதல்கள் தொடருவது ஏன்?

      July 28, 2024
      Facebook X (Twitter) Instagram Pinterest
      © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

      Type above and press Enter to search. Press Esc to cancel.

      %d