சாதி இருள் நீக்க வந்த அருந்ததி
எல்.சி. குருசாமி
– ஏபி.வள்ளிநாயகம்
மானுடத்தில் தங்களைப் பற்றியும், தங்களுக்குள் இயல்பாகப் பதிந்தவை – பாதித்தவை பற்றியும், தங்களை உருவாக்கியவை பற்றியும் தலித் மக்கள் தங்களின் “மானுட அழகியல் வரலாற்றை’ எழுத வேண்டியிருக்கிறது. பார்ப்பனிய சமூக அமைப்புக்குப் பிறகு, தலித்துகளின் சுயநிர்ணயத்துக்கான உரிமையையும், சுயமரியாதையையும் அங்கீகரித்தது. அவற்றை நடைமுறைப்படுத்த உண்மையான அக்கறை நீண்ட காலமாகவே எடுக்கப்படவில்லை.
வரலாற்றில் பார்ப்பன – பார்ப்பனிய பயங்கரவாதிகளை மீண்டும் மீண்டும் துல்லியமாக எதிர்த்து வருபவர்கள் தலித் மக்கள் தான். ஆனால், தலித் மக்கள் நடத்திய, நடத்தும் கலகங்களைப் பற்றியோ, உரிமைப்போராட்டங்களைப் பற்றியோ, இவைகளுக்கு வித்திட்ட தலைவர்களைப் பற்றியோ – தலித் அமைப்புகளிடம் கூட முறையான,முழுமையான தகவல்கள், பதிவுகள் இல்லை. தலித் மக்களின் வரலாறு என்பது, இம்மண்ணின் மைந்தர்களின் வரலாறு.
எத்தனையோ கெடுபிடிகளுக்கும் அவர்கள் தொடர்ந்து தாக்குப்பிடித்து வந்திருப்பது என்பதே, வரலாற்றில் அவர்கள் என்றும் அடிமைகளாக இருந்ததில்லை என்பதைப் பறைசாற்றும். பார்ப்பனியச் சமூக அமைப்பை எதிர்த்துச் சமர் புரிந்த வடபுலத்துப் பெரியாரான புரட்சியாளர் அம்பேத்கரும் தென்புலத்து அம்பேத்கரான தலைவர் பெரியாரும் பிறப்பதற்கு முன்னரே – தமிழ்நாட்டில் விடுதலை இயக்க ஆணிவேர்களாய் அறிவாசான் அயோத்திதாசப் பண்டிதரும்,தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரும் வாய்த்தனர்.
அவர்களைத் தொடர்ந்து விடுதலை இயக்க வேர்களாகவும் விழுதுகளாகவும் கிளைத்தவர்களை, கிடைக்கின்ற தரவுகளைக் கொண்டு பதிவு செய்வது, நமது அடிப்படையான கடமை ஆகிறது. தமிழ் நாட்டில் சாதியை எதிர்த்துக் குரல் எழுப்பி, இயக்கங்களைக் கட்டமைத்துப் போராடியவர்களில் குறிப்பிடத்தக்கவர், லோகபாகு கூட்டப்பா குருசாமி அவர்கள்.
சாதியச் சமூக அமைப்பின் மிச்ச சொச்சங்களுக்கு எதிரான இறுதிப் போராட்டத்தின் சாம்பலிலிருந்துதான் பொதுவுரிமைச் சமூகத்தை நிர்மாணிக்கும் “புதிய மனிதன் எழுவான்’ என்று, உறுதியுடன் தம் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியவர் அவர். 1885 இல் சென்னை புளியந்தோப்பில் உண்மை, உழைப்பு, உயர்வு இவை களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்த லோகபாகு கூட்டப்பாவிற்கு மகனாகப் பிறந்தார், குருசாமி. அவரது முன்னோர்கள் ஆங்கிலேயே ஆட்சியாளரிடம் “கான்ட்ராக்ட்’ தொழில் புரிந்தமையால் வசதிமிக்க பின்புலத்தைக் கொண்டிருந்தார். சூத்திரர்களில் ஆயிரத்தில் ஒருவர்கூட படிக்க முடியாத அக்காலகட்டத்தில் கல்லூரிப் படிப்புவரை பயின்றார்.
புரட்சியாளர் அம்பேத்கருக்கு அய்ந்து வயது மூத்தவரான குருசாமி, தனது சமூக வாழ்வை, தம் 26ஆம் வயதில் தொடங்கினார். “ஆதிதிராவிட மகாஜன சபா’வில் தன்னை இணைத்துக்கொண்டு, பெருந்தலைவர் எம்.சி. ராஜாவுடன் சமூகப் பணியைத் தொடர்ந்தார். தன்னலமற்ற, சமூக நல நோக்கத்தோடு நேர்மையும் திறமையும் ஆற்றலும் கொண்டு தலித் மக்களுக்கெனப் புது உலகம் படைக்கக் கிளம்பிய அவர், இந்துமதச் சிறைக்குள்ளிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர். இந்துமத ஆதிக்கமும், எந்தவித சடங்கு – சம்பிரதாயங்களும் தம் மக்களுக்கு விலங்குகளாகிவிடக்கூடாது என்பதில் கரிசனம் கொண்டிருந்தார்.
வர்ணாசிரம அழுக்குப் பிடிக்குள் அகப்பட்டுக் கொண்டிருந்த தலித் மக்களிடம் உறவின் முறையைக் கட்டி எழுப்பினார். குலத் தொழில், இழிவுத் தொழில் என்பதிலிருந்து அவர்களை விடுவித்து, அவர்களை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் அமைப்பாக்கப்பட்ட தொழிலாளர்களாகப் பணி செய்யும் வாய்ப்பினை ஏற்படுத்தினார். 1915இல் “சேம்பர்ஸ்’நிறுவனத்திடமிருந்து கான்ட்ராக்ட் எடுத்து, அந்த “காண்ட்ராக்டி’னை மக்களுக்கு விட்டு அவர்கள் பலனடைய வழிவகை செய்தார். சென்னை புளியந்தோப்பு, பெரம்பூர், அருந்ததியர்புரம், ஓட்டேரி பகுதிகளில் வாழ்ந்த தலித் மக்கள் இதன் மூலம் பொருளாதார வலிமை பெற்றனர்.
1880-க்கும் 1915-க்கும் இடையே பார்ப்பனரல்லாத தலைவர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டது. அரசியலில் ஒருங்கிணைந்து முன்னேற்றம் காண்பதற்குத் தடையாக இருக்கும் சமூகப் பிரிவு கேடுகளை ஒழிக்க முன்வரவேண்டும் என்ற உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. நீதிக் கட்சியின் தலைவரான டி.எம்.சங்கரன் நாயர், “”சாதி, வர்ணம்என்ற தடைகள் அகற்றப்பட்டாலொழிய அரசியல் முன்னேற்றம் என்பது குதிரைக் கொம்பே” என்று மிகவும் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டார். எல்.சி.குருசாமி அவர்கள், டி.எம்.நாயரோடு தொடர்பு கொண்டு பார்ப்பனரல்லாதார் இயக்கத்திலும் பங்கெடுத்துக் கொண்டார்.
1920 ஆம் ஆண்டு நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான பி.டி.ராஜன் அவர்களின் சித்தப்பா லட்சுமணசாமி (முதலியார்) தான், மதுரை மாவட்டம் உத்தமபாளையத்தில் முதல்”அருந்ததியர் சங்கம்’ ஏற்படக் காரணமாக அமைந்தவர். அச்சங்கம், “அருந்ததியர் மகா ஜன சங்கம்’ ஆகும். அச்சங்கம் அருந்ததியர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தது.
சென்னை மாகாண அருந்ததியர் சங்கம் எனப் பெயர் கொண்ட இச்சங்கத்திற்கு, எச்.எம்.ஜெகந்நாதன் தலைவர். எல்.சி.குருசாமி இதன் பொதுச்செயலாளர். அருந்ததியர்களுக்கென அருந்ததியர்களால் முதன் முதலில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு தான் அது. 1920இல் ஏற்படுத்தப்பட்ட அச்சங்கம். “ஆதிதிராவிட மகாஜனசபா’ வையும் சகோதர இயக்கமாகப் பாவித்துக்கொண்டது.
பிறவித் தொழில் பேதத்தால், இழிந்து நிற்கும் தம் மக்களுக்கு கல்வியே ஏணியாகும் என்பதை உணர்ந்த எல்.சி. குருசாமி, தம் மக்களுடைய நாகரீக வாழ்க்கைக்கு அடிப்படையான கல்வியைப் பெறச் செய்வதில் முனைப்புக் காட்டினார். அருந்ததியர் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தை ஆங்கிலேய அரசுக்கு எடுத்துரைத்து, அரசிடம் உதவி பெற்று, 1921இல் இரண்டு பள்ளிகளை அருந்ததியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து ஏற்படுத்தினார். இப்பள்ளிகளைத் தொடர்ந்து சென்னையில் பல இடங்களிலும் பள்ளிகளை நிறுவினார். செங்கற்பட்டு, பொன்னேரி பகுதிகளிலும் பள்ளிகளை ஏற்படுத்தினார்.
சென்னையிலும் புறநகரிலும் பல மாணவர் விடுதிகளை உருவாக்கினார். தலித், பழங்குடி மாணவர்களுக்கு, படிப்பில் ஊக்கமும் உற்சாகமும் ஏற்பட வழி வகுத்தார். சென்னை மாகாண அருந்ததியர் சங்கத்திற்குத் தலைமை அலுவலகம் ஏற்படுத்தினார். திருவிதாங்கூர் மகாராஜாவிடம் அன்பளிப்பாகக் கட்டடத்தைப் பெற்றார். சென்னை பெரம்பூர் பேரக்ஸ் இடத்தில் அருந்ததியர்களுக்கென சங்கக் கட்டடம் அமையப்பெற்றது.
1921இல் “பி அண்டு சி’ மில்லில் தொழிலாளர்களுக்கிடையே சாதிக் கலவரம் மூண்டது. எங்கு பார்த்தாலும், சாதி வெறியர்களின் கோரத்தாண்டவம் நடந்த வண்ணமிருந்தது. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. தலித் மக்கள் வெளியே நடமாட முடியாத சூழ்நிலை. இந்நிலைமையில் எல்.சி.குருசாமி, பெருந்தலைவர் எம்.சி.ராஜா, சாமி தேசிகாநந்தா ஆகியோருடன் இணைந்து தலித் மக்களுக்குத் துணையாக நின்றார். ஆங்கிலேயே அரசிடம் எடுத்துக் கூறி, தக்க இடங்களைப் பெற்று, அதில் தலித் மக்களுக்குப் பாதுகாப்பு அளித்தார்.
கல்வி, சொத்து, ஆயுதம் இவற்றை மநு பயங்கரவாதம் நம் முன்னோர்களிடமிருந்து பறிமுதல் செய்ததால்தான், நாம் தாழ்த்தப்பட்டவர்களானோம் என்பதைப் பிரகடனம் செய்த எல்.சி.குருசாமி, மண் இல்லாதவன் மனிதனே இல்லை என்ற முடிவுக்கு வந்தார். 1921இல் ஆங்கிலேயே அரசிடம் வாதாடி – பெரம்பூர், புளியந்தோப்பு வேப்பேரி, புதுப்பேட்டை,கொய்யாத்தோப்பு, மயிலாப்பூர், ராயபுரம், கல்மண்டபம் ஆகிய இடங்களில் குடியிருப்புப் பெற்றுத் தந்தார்.
1923 முதல் தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரோடு தொடர்பு கொண்டு இணைந்து பணியாற்றுவதில் ஆர்வம் கொண்டார். செங்கற்பட்டு மாவட்டத்தில் திருவள்ளூர், பொன்னேரி வட்டங்களில் தலித் மக்கள் பண்ணை அடிமைகளாகவே இருந்து வந்தனர். எல்.சி.குருசாமி அவர்கள் பண்ணை அடிமைகளை விடுவிக்க,அவர்கள் பட்டிருந்த கடன்களை அவரே முன்னின்று பொறுப்பேற்று அவரது சொந்தப் பணத்தில் பைசல் செய்தார். பண்ணை அடிமைகளிலிருந்து விடுதலை பெற்ற தலித் மக்களுக்கு, விவசாயம் செய்து பிழைக்க நல்ல பண்பட்ட உழவு நிலங்கள் அரசு மூலம் கிடைக்க வழி செய்தார். மீண்டும் அவர்கள் அடிமைகயாகா வண்ணம் தக்க பாதுகாப்பு தந்தார்.
நீதிக்கட்சி ஆட்சிக் காலத்தில், 1920லிருந்து 10 ஆண்டுகள் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராகவும், 22ஆண்டுகள் தொடர்ந்து கவுரவ நீதிபதியாகவும் இருந்தார். 1926இல் கோடம்பாக்கம் கைத்தொழில் பள்ளி நலக்குழுவிலும், நகரக் கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் குழுவிலும் பங்கேற்றுச் சிறப்பான தொண்டாற்றினார். 1927ஆம் ஆண்டு இவரது மக்கள் சேவையினை அங்கீகரிக்கும் பொருட்டு ஆங்கிலேயே அரசு “ராவ்சாகிப்’ பட்டத்தினை வழங்கிச் சிறப்பித்தது.
சென்னை, செங்கற்பட்டு மாவட்ட கல்விக் கழகங்களில் அங்கம் வகித்ததைத் தொடர்ந்து, 1929இல் சென்னை பல்கலைக்கழக உறுப்பினராக அமர்த்தப்பட்டார். 1953இல் டெல்லியில் கூடிய இந்திய வாக்காளர் குழு கூட்டத்திற்குச் சென்று, தலித் மக்களுடைய அந்தஸ்து, பதவி பாராமல் அவர்களுக்கு வாக்குரிமை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்தார்.
1924இல் நடந்த வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டு ஈழவ மக்களின் சமூக ஜனநாயக உரிமைப் போராட்டத்திற்கு ஆதரவளித்தார். 1924லிருந்தே தந்தை பெரியாருடன்தொடர்பு கொண்டார். 1937இல் திருவிதாங்கூர் ஆலய நுழைவுப் போராட்டத்திற்கு சென்னையிலிருந்து போராட்ட வீரர்களை அழைத்துச் சென்று, ஈழவ மக்களின் ஆலய நுழைவுப் போராட்டம் வெற்றிபெற உதவியாக இருந்தார்.
1942இல் தலித் மக்களிடம் சுய பொருளாதார ஆளுமையை உருவாக்க வேண்டி “பெரம்பூர் லெதர் ஒர்க்கர்ஸ் கோ ஆப்பரேடிவ் சொசைட்டி’யினை உருவாக்கினார். அதில் தோல் பொருள் தொழிலாளர்களை பெருவாரியாக அங்கம் வகிக்கச் செய்தார். மிக சிறப்பாகவும் செழிப்பாகவும் “சொசைட்டி’யை நடத்தி நல்ல கணிசமான சம்பளத்தை தொழிலாளர்கள் பெறுமாறு செய்தார்.
கூட்டுறவுச் சங்கத்தைப் போலவே, மாலு கம்பெனி என்ற பெயரில் மற்றுமொரு நிறுவனத்தையும் மக்களுக்காக ஏற்படுத்தினார். அதன் மூலம் அவர்கள் பெரும் பொருள் சம்பாதிக்க வழி காட்டினார். 1944இல் கடப்பை, கிருஷ்ணா மாவட்டங்களில் தலித் மக்கள் பஞ்சமி நிலங்கள் பெறுவதற்கு வழி செய்தார். இங்கு நடந்த பஞ்சமி நில மீட்புப் போராட்டத்திற்கு தாத்தா ரெட்டமலை சீனிவாசனாரை முன்னிலைப்படுத்தி வெற்றி பெற்றார்.
1949இல் சாதி ஆணவம் கொண்ட ரெட்டிகள், ஏனைய சாதி இந்துக்களுடன் சேர்ந்து பொன்னேரி வட்டத்திலுள்ள ஆம்பூர் சேரிக்குள் நுழைந்து, வன்கொடுமைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர். பாலியல் வன்கொடுமை, தீ வைப்பு, சொத்துகள் சூறையாடல், ஆயுதத் தாக்குதல் ஆகிய கொடுமைகளைச் செய்தார்கள். செய்தி அறிந்த எல்.சி.குருசாமி அவர்கள் ஆவேசம் அடைந்தவராய், சென்னை மாகாண ஆளுநரிடம் முறையிட்டு – பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார். சாதி இந்துக்கள் மீது வழக்கு போட்டு தண்டனையும் வாங்கித் தந்தார்.
எல்.சி. குருசாமி அவர்கள், ஒரு சாதனை செய்ய வேண்டுமென்ற நோக்கில் ஒருபோதும் செயல்பட்டதில்லை. அவரின் ஒவ்வொரு செயல்பாடுகளும் சாதனைகளாகவே மாறின. தலித் அமைப்புகளை தன் சகோதர இயக்கமாகவும்,சமகாலத்தில் வாழ்ந்த தலித் தலைவர்களை தன் சகோதரர்களாவும் பாவித்தார். பார்ப்பனரல்லாதார் இயக்கங்களை நட்பு இயக்கமாகவும் அதன் தலைவர்களை நண்பர்களாகவும் பாவித்தார். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட தலித் மக்களுக்காக எந்தவொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொண்டார். அந்த வகையில், ஆங்கிலேயர் ஆட்சியினையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டார்.
தலித்துகளில் சமூக ஒடுக்குமுறை, பொருளாதார ஒடுக்குமுறை, அரசியல் ஒடுக்குமுறை ஆகியவற்றை மிகக்கடுமையாக சந்திப்பவர்கள் அருந்ததியர்கள்தான். அடுக்கி வைக்கப்பட்ட பானைகளில் கடைசிப் பானையாக இருப்பவர்கள் அருந்ததிய சகோதரர்கள்தான். தன்னை யாரும் அடிமைப்படுத்திவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் யாரும் – தானும் யாரையும் அடிமைப்படுத்திவிடக்கூடாது என்பதிலும் தெளிவாக இருக்க வேண்டும்.
தாம் ஒரு அருந்ததியர் என்பதற்காக மட்டும் அவர் அருந்ததியர்களுக்காக உழைக்கவில்லை . தலித் விடுதலையின் முன் நிபந்தனை அருந்ததியர் விடுதலையாக இருந்ததினாலேயே – அவர் அருந்ததியர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உழைத்தார். சீரிய பகுத்தறிவுவாதியான அவர், அனைத்து தலித் மக்களுக்குமான தலைவராவார்.
உண்மையான பாட்டாளி வர்க்கத்தின் உண்மையான தலைவரான எல்.சி.குருசாமி அவர்கள், ஏறத்தாழ 50ஆண்டுகால சமூக வாழ்விற்குப் பிறகு, 1966இல் தன்னுடைய 81 ஆவது வயதில் மறைந்தார். இவரது வாழ்க்கை வரலாறும், சமூகப் பங்களிப்பும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றிலிருந்து மட்டுமல்ல, தலித் இயக்க வரலாற்றிலிருந்தும் மறைக்கப்பட்டுள்ளது. வாழ்ந்து வரும் எந்த சமூகமும் தன் விடுதலை வீரர்களை மறக்க முடியாது. மேன்மையான விடுதலை வீரர்களையும், சமூகத்தின் பாதுகாவலர்களையும் மறந்துவிடும் மக்கள், நிச்சயமாக தங்கள் பிந்தைய தலைமுறையினருக்கு ஒளியையும், சமூக நீதியையும் கைமாற்றித் தரமுடியாது.
“தலித் முரசு’ – செப்டம்பர் 2002.
Share.

அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

Comments are closed.