தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகின்றனரா, இல்லையா என்பதுதான் முக்கியக் கேள்வி. இக்கேள்வி தாழ்த்தப்பட்ட மக்களால் இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று, வாழ்வியல் சார்ந்த பார்வை. அதிலிருந்து, தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உயர்விற்கான உறுதியான வழி கல்வி, உயர் வேலைவாய்ப்பு மற்றும் மேம்பட்ட வருமானத்திற்கான வழிகளில் இருப்பதாகவே நினைக்கின்றனர். சமூக வாழ்வில் நல்ல இடத்தில் தாங்கள் அமர்ந்து விட்டால், பழமைவாதிகள் இவர்கள் மீது கொண்டிருக்கும் மதம் சார்ந்த பார்வை மதிப்பானதாக மாறும் என்று நம்புகின்றனர். ஒருவேளை அப்படி மாறாவிடினும், அது எந்த விதத்திலும் அவர்களுடைய வாழ்வியல் நலன்களைப் பாதிக்கப் போவதில்லை என நம்புகின்றனர். இந்த அடிப்படையில், ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் திறனையும் பலத்தையும் கோயில் நுழைவு போன்ற ஒன்றுமில்லாத விஷயங்களில் செலுத்தப் போவதில்லை என்று கூறுகின்றனர். அதற்காக அவர்கள் போராடாமல் இருப்பதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. அந்த வாதமானது, சுயமரியாதையை அடிப்படையாகக் கொண்ட வாதம்.
இந்தியாவில் உள்ள அய்ரோப்பியர்கள் தங்கும் விடுதிகள் முன்பும், மற்ற சமூக விடுதிகளிலும், “நாய்களுக்கும் இந்தியர்களுக்கும் அனுமதி இல்லை” என்ற அறிவிப்புப் பலகைகளை மாட்டியிருந்த காலம், மிக அதிக நாட்களுக்கு முன்பு அல்ல. இன்று இந்து கோயில்களில் மாட்டப்பட்டிருக்கும் அறிவிப்புப் பலகைகள் அதற்கு ஒத்தவையே. ஒரே வேறுபாடு என்னவெனில், இந்து கோயில்களில் உள்ள பலகைகள் நடைமுறையில் சொல்வது என்னவெனில் “எல்லா இந்துக்களுக்கும் எல்லா மிருகங்களுக்கும், தெய்வங்கள் உட்பட, அனைவருக்கும் அனுமதி உண்டு. தீண்டத்தகாதவர்களுக்கு மட்டும் அனுமதி கிடையாது.”
இரண்டு இடங்களிலும் சிக்கலே. ஆனால், அய்ரோப்பியர்கள் தங்கள் திமிரினால் விலக்கி வைத்த இடங்களில், இந்துக்கள் ஒருபோதும் தங்களை அனுமதிக்கும்படி கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை. இந்துக்களின் திமிரால் விலக்கி வைக்கப்பட்ட ஓரிடத்தில் அனுமதி கோரி ஏன் தீண்டத்தகாதவர்கள் கெஞ்ச வேண்டும்? இதுதான் வாழ்வியல் நலன்களில் ஈடுபாடு கொண்டுள்ள ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மனிதனின் நியாயமான வாதம். அவர் இந்துக்களிடம் இவ்வாறு கூற தயாராக இருக்கிறார் : “உங்கள் கோயிலை திறப்பதும் திறவாமல் இருப்பதும் நீங்கள் முடிவெடுக்க வேண்டிய ஒன்றே தவிர, நாங்கள் போராட வேண்டிய ஒன்றல்ல. மனித மாண்பினை மதிக்காமல் இருப்பது தவறானது என்று நீங்கள் நினைத்தால், கோயிலை திறந்து விட்டு யோக்கியராக நடந்து கொள்ளுங்கள்; அல்லது யோக்கியராக இருப்பதை விட இந்துவாக இருப்பதே முக்கியம் என்று கருதினால் கதவை சாத்திக் கொண்டு எக்கேடும் கெட்டுப் போங்கள். நான் வரவேண்டிய அவசியம் இல்லை.”
வாதத்தை இந்த முறையில் வைக்கவே நான் விரும்பினேன். ஏனெனில், பண்டித மதன் மோகன் மாளவியா போன்ற மனிதர்களின் மனங்களில் இருந்த அழுக்கை நான் நீக்க விரும்பினேன். அவர்கள் தாழ்த் தப்பட்ட வகுப்பினர் அவர்களுடைய தயவினை எதிர்பார்த்து நிற்பதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
அடுத்த கோணம், ஆன்மீகத்தின் அடிப்படையிலானது. மதம் சார்ந்த கருத்தோட்டத்தைக் கொண்ட மனிதர்களாக, தாழ்த்தப்பட்ட மக்கள் கோயில் நுழைவினை விரும்புகிறார்களா, இல்லையா என்பதுதான் கேள்வி. வாழ்வியல் பார்வை மட்டும் நிலவினால் தற்பொழுது இருப்பதைப் போன்று ஆன்மீகப் பார்வையில் அவர்கள் கோயில் நுழைவிற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் அவர்களின் இறுதி பதிலானது மகாத்மா காந்தியும் இந்துக்களும் கீழ்க்காணும் கேள்விகளுக்கு அளிக்கும் பதிலைப் பொருத்தது. கோயில் நுழைவை வலிய அனுமதிப்பதன் பின்னணி என்ன? எது அதனைத் தூண்டியது?
இந்து மதக் கட்டமைப்பில் தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக மேம்பாட்டிற்கு இறுதி இலக்காக கோயில் நுழைவுதான் இருக்க வேண்டுமா? அல்லது அது வெறும் முதல் படிதானா? முதல் படி எனில், இறுதி இலக்கு என்ன? கோயில் நுழைவுதான் இறுதி இலக்கெனில், தாழ்த்தப்பட்ட மக்கள் அதனை ஆதரிக்கவே முடியாது. சொல்லப் போனால், அவர்கள் கோயில் நுழைவினை மட்டும் மறுதலிக்கப் போவதில்லை. மாறாக, இந்து சமூகம் ஒட்டுமொத்தமாக தங்களை மறுதலித்ததாகவே கருதி, தங்களுக்கான இடத்தை வேறு எங்கும் தேட விழைவர். மாறாக, இதுதான் முதல்படி எனில், அவர்கள் அதற்கு ஆதரவளிக்கக் கூடும். அப்படியானால் இந்தியாவில் இன்று நடப்பதற்கு இணையான நிலை ஏற்படும்.
இந்தியாவிற்கு அதிகாரம் வேண்டுமென அனைத்து இந்தியர்களும் கேட்டுள்ளனர். எனினும் உண்மையில் அரசியல் சட்டமானது, அதற்கு சற்றுக் குறைவாகத்தான் இருக்கும் என்றபோதும் பல இந்தியர்கள் அதனை ஏற்றுக் கொள்வர். ஏன்? விடை என்னவெனில், இலக்கு தெளிவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை பல படிகளை கடந்து அடைவதா அல்லது ஒரே தாவலில் அடைவதா என்பது பொருட்டல்ல. ஆனால் பிரிட்டிசார் இந்தியாவிற்கு அதிகாரம் வேண்டும் என்ற இலக்கை ஒப்புக் கொள்ள மறுத்திருந்தால், இப்போது நடைபெறும் பகுதி சீர்திருத்தங்களை ஒருவரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள். அதைப் போலவே, மகாத்மா காந்தியும் மற்றவர்களும், தங்களுக்கான இலக்காக வரித்துக் கொண்டிருப்பது இந்து கட்டமைப்பில் உள்ள தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் சமூக நிலையை உயர்த்துவது என்பதானால், கோயில் நுழைவு குறித்து ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் மனப்போக்கைத் தெளிவுபடுத்த முடியும். இதில் தொடர்புடைய அனைவரின் தகவலுக்காகவும் பரிசீலனைக்காகவும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரின் இலக்கு என்ன என்பது விளக்கப்படும்.
பாபாசாகேப் டாக்டர்.அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17 (1), பக்கம் :198