உலகத் தொழிலாளர்களின் வரலாற்றில் அவர்களின் உரிமைகளுக்காக முதன்முதலில் 1856-ல் ஆஸ்திரேலியாவில் போராட்டம் தொடங்கப்பட்டது. கால ஓட்டத்தில் முப்பது ஆண்டுகள் கடந்த பின்னர் 1886-ல் ‘ஹேமார்கெட் நிகழ்ச்சி (Haymarket affair) ஒன்று, அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரில் இல்லினாஸ் மாகாணத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில் எல்லாவிதமானத் தொழில் புரியும் தொழிலாளர்கள் சுமார் 2,00,000 பேர் கலந்துக் கொண்டார்கள். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூன்று நாட்கள் பொதுவேலை நிறுத்தப் போராட்டமாகத் தொடர்ந்து நடத்தப் பட்டது.
நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே காவல் துறையினர் தடியடி அட்டூழியத்தில் ஈடுபட்டனர். தொழிலாளர்கள் அதையும் எதிர்கொண்டு கட்டுக்கோப்பாக தொடர்ந்து போராடவே காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் நான்குபேர் உயிரிழந்தார்கள்.
இவ்வாறு போராட்டம் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கும்போது யாரெனக் கண்டறிய முடியாத ஒருவனால் வெடிகுண்டு வீசப்பட்டு பன்னிரெண்டு பேர் உயிரிழந்தனர். இவர்களில் ஏழுபேர் காவல் துறையைச் சேர்ந்தவர்கள். இவ்வாறு உயிர்த் தியாகம் செய்து போராட வேண்டியக் காரணம் என்ன?
ஆலையின் சங்கு அலறக் கேட்டதும், காலைக்கடன் முடித்து வேலைக்குச் செல்லும் தொழிலாளி மாலை வரையில் ஓய்வின்றி உழைத்து வந்தான். ஓய்வின்றி உழைத்தவன் ஓய்வு வேண்டுமென்றான். காலை முதல் மாலை வரை, அல்லது இரவு வரை, 12 மணி நேரம், 14 மணி நேரம் என ஓயாது உழைத்துக் களைத்தவன் “ஒரு நாளைக்கு 8 மணி நேரம்தான் வேலை செய்வோம், ஒரு வாரத்தில் ஆறு நாட்கள் மட்டுமே, ஒரு வாரத்தில் 48 மணிநேரம் மட்டுமே வேலை செய்வோம்” என உரிமைக் குரலெழுப்பிப் போராடிய தினமே உலக தொழிலாளர்கள் தினமான ‘மே’ தினமாகும்.
8 மணி நேர வேலைக்காகப் போராடி சிகாகோ நகரில் உதிரம் சிந்தி உயிரிழந்தோர்கள் எங்கள் தோழர்கள் என உரத்துப் பேசும் பொதுவுடைமைக் கட்சி (கம்யூனிஸ்ட்) தோழர்களும், தலைவர்களும் ஒன்றை மறந்து விட்டார்கள். இந்தியத் தொழிலாளர்கள் உதிரம் சிந்தி உயிரிழக்காமல் தங்களின் உரிமைகளைப் பெற்றார்களே அது எப்படி? யாரால்?
இந்த வினாவுக்கு விடைகாண வேண்டும், அப்போதுதான் உழைப்பாளிக்கு உண்மை புரியும். உண்மையை மறைப்போருக்கும் தெளிவு பிறக்கும்.
“ஒருவனால் கோடி மக்கள்
உயர்ந்தனர் என்றால் – அந்த
ஒருவனே நீதான்” – உன்னால்
உயர்ந்தவர் எண்ணிப்பார்த்தால் போதும்.
பொதுவுடைமைக் காரர்கள் – இனியாவது
எண்ணிப் பார்க்கவேண்டும்.
தொழிலாளி வர்க்கத்தின் துயர்
துடைத்தச் செம்மல்
தொண்டு மனம் படைத்தோன்
தூய நெஞ்சினன்.
ஆங்கிலேயர் அரசவையில்
ஆட்சிக் கட்டிலில் ஏறியவர்
அகிலத்தின் சிறந்த அறிவாளி
அம்பேத்கர் ஆற்றிய பணிகள் காண்போம்!
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் 1936-ல் ‘சுதந்திர தொழிலாளர் கட்சியை’த் (Independent Labour Party) தொடங்கினார். இக்கட்சியின் சார்பில், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் தேர்தலில் போட்டியிட்டு 15 உறுப்பினர்கள் பம்பாய் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பொதுமக்களின் உரிமைகளை மீட்டெடுக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் இவர்கள் சட்டசபையில் போராடினார்கள். மக்கள் மத்தியில் தொண்டாற்றினார்கள்.
இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளையும், நலன்களையும் சட்டத்தின் மூலம் பாதுகாத்த முழு முதல் முன்னோடி டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களே!
1938-ல் இரயில்வே தொழிலாளர்களின் கூட்டத்தில் பேசுகையில் கூறுகிறார்… “தொழிலாளர்களுக்கு இரண்டு பகைவர்கள் இருக்கிறார்கள். அந்த இரு பகைவர்களையும் எதிர்த்துப் போராட வேண்டியது தொழிலாளர்களின் கடமையாகும். அந்தப் பகைவர்கள் :
1. பிராமணத் தத்துவங்கள்
2. முதலாளி வர்க்கம்
பிராமணர்கள் ஒரு சமுதாயமாகக் கூட்டாக அனுபவித்து வரும் தனிச் சலுகைகளையோ, அவர்களின் அதிகாரத்தையோ, நன்மைகளையோ எதிர்க்க வேண்டும் என்பது இதன் பொருளல்ல. இதன் பொருள்… பிராமணீய கொள்கைகளில் சுதந்திரம், சமத்துவம், மனிதநேயம் இல்லை. இக்கொள்கையால் பிராமணர்கள் நம்முடைய சரிசம சமூக உரிமைகளை மறுக்கின்றார்கள். இக்கோட்பாடுகளின் முன்னோடிகள் பிராமணர்கள் என்றால், மற்ற சாதியினரும் இக்கொள்கைகளைக் கடைப்பிடிக்கின்றார்கள். அதனால் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் முன்னேற்றம் தடைப்படுகிறது” என்று டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் சொன்ன நிலைமை இன்று வரை மாறவில்லை.
“முதலாளிகளின் சுரண்டலை எதிர்த்துப் போராடும் அதே வேளையில் பிராமணீயத்தையும் நாம் எதிர்த்துப் போராட வேண்டும். பிராமணீயத்தை எதிர்க்கின்றவர்கள் மிகமிகக் குறைவானவர்கள். பிராமணீயம் என்பது முதலாளித்துவத்துக்கு வல்லமை சேர்க்கும் மிகப் பெரிய இராட்சதன். இதனை அழிக்காமல் முதலாளித்துவத்தை ஒழிக்க முடியாது. எனவே நாம் இவற்றை எதிர்த்துப் போராடவேண்டும். உழைக்கும் வர்க்கம் பிராமணீய கொள்கைகளை எதிர்த்துப் போராடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. மாறாக பிராமணீயம் தழைத்திட, அதன் ஆதிக்கம் நிலைக்க சமுதாயத்தில் தனிச் சிறப்புப் பெற, பொருளாதாரத்தில் வளம்பெற, அரசியல் அதிகாரம் பெற இந்த நாட்டை ஆளுவோர் உதவிப்புரிவார்கள். எனவே இழப்பதற்கு ஏதுமில்லாத உழைக்கும் மக்கள் இதனை உணர்ந்து தங்களின் செயல்பாடுகளைத் தொடர்வார்களே யானால் காலம் கடந்தேனும் இந்நாட்டில் பண்பாட்டுப் புரட்சிக்கு வழி வகுத்தோராவார்கள்” என்றுரைத்தார்.
ஆங்கிலேயர் ஆட்சியில் ஜூலை 1942 முதல் ஜூன் 1946 வரை வைஸ்ராய் மந்திரி சபையில் தொழிலாளர் அமைச்சராக நியமனம் பெற்ற டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், உழைக்கும் தொழிலாளர்களின் – செட்யூல்டு இனத் தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல – அனைத்து இன ஆண் – பெண் தொழிலாளர் களுக்காக, அவர்களின் நல்வாழ்விற்காகச் செய்தவைகளைப் பார்ப்போம் :-
முத்தரப்பு மாநாடு
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் தொழிலாளர் துறை அமைச்சராக 20-7-1942ல் பதவி ஏற்றார். அப்பதவியை ஏற்றவுடன் ஒரே மாதத்தில் ஆகஸ்டு 7ஆம் தேதி முதன்முதலில் தொழிலாளர் முத்தரப்பு மாநாட்டைக் கூட்டினார். இதன்மூலம் ஒவ்வொருவரும் தங்கள் பிரச்சனைகளைப் பேசித் தீர்க்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தினார். உலகில் எந்த நாடும் செய்யாத இந்தச் சிறப்புமிக்கச் செயலைச் செய்ததின் மூலம் அனைத்து நாட்டுத் தொழிலாளர் களின் தொழிற்சங்கத் தலைவர்களால் பாராட்டப்பட்டார்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1945 நவம்பர் 27, 28 தேதியில் புதுடெல்லியில் நடைபெற்ற ஏழாவது கூட்டத் தொடரின் இந்திய தொழிலாளர் மாநாட்டில் மிக முக்கியத்துவம் வாய்ந்த குறைந்த அளவு வேலை நேரம் (Reduction in factory working hours)மசோதாவைக் கொண்டுவந்தார். முதலாளிகள் முன்போன்று லாபம் கிடைக்காது என்று அஞ்சி மிகவும் குழப்பமும் கோபமும் அடைந்தனர். தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்து வரவேற்றனர்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தன் வாதத் திறமையினால் முதலாளிகளின் அச்சத்தை அகற்றினார். இப்போது இரண்டு மடங்கு லாபம் என்றால் 8 மணி நேர வேலையின் மூலம் மூன்று மடங்கு லாபம் பெறலாம். அதிகமான வர்களை வேலைக்கு அமர்த்த முடியும், வேலை இல்லா திண்டாட்டம் குறையும் என்றும், ஏற்கனவே இரண்டாவது உலகப் போரின்போது சிறிதும் ஓய்வின்றி நீண்ட நேரம் உழைத்து உருக்குலைந்துள்ள தொழிலாளர்களின் களைப்பு நீங்கவும், தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலே தொழிலாளர்களால் வேலையை கவனமாகச் செய்ய முடியாது என்றும் வாதாடி முதலாளி களையும் அரசையும் பணியவைத்து சட்டமாக்கியவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்.
அகவிலைப்படி (Dearness Allowance)
கோட்டையில் எமது கொடிதான் பறக்கவேண்டுமென்ற பேராணவத்தால் உலக வல்லரசு நாடுகளில் இரண்டாம் உலகப் போரினைத் தொடுத்தார்கள். அதன் விளைவால் இந்தியாவில் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு உணவுப் பொருள்களின் விலையும், மக்களுக்குத் தேவைப்பட்ட அத்யாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்ததினால் தொழிலாளர்கள் மட்டுமல்ல, அனைத்து இந்திய மக்களும் இன்னலுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இதனால் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் மிகவும் கவலை அடைந்தார். மற்ற அரசியல் தலைவர்கள்போல் மக்களுக்காக முதலைக் கண்ணீர் வடிக்காமல் அவர்களின் வாட்டம் போக்க அரசாங்கத்தையும், முதலாளிகளையும் சந்தித்துப் பேசி அகவிலைப்படியும் (Dearness Allowance) பற்றாக்குறையைச் சமாளிக்க குறைந்த விலையில் தொழிலாளர்களுக்குப் பொருள்கள் கிடைக்கவும் வழிவகுத்தார்.
தொழிலாளர்களின் (உடல்) நல காப்பீட்டு திட்டம் (Labour Welfare Funds)
1943ஆம் ஆண்டு இந்தியத் தொழிலாளர்களின் முத்தரப்பு மாநாடு நடத்தப் பட்டது. அதில் தொழிலாளர்களின் உடல்நல காப்பீடு திட்டத்தை உருவாக்கிட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் திரு. B.P. அகர்கர் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, அவர்களின் பரிந்துரைகளின்படி தொழிலாளர்களின் உடல்நல காப்பீடு திட்டத்தைத் தயாரித்து சட்டமாக்கினார்.
இந்திய புள்ளி விவரச் சட்டம்
1942ம் ஆண்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் இயற்றிய இந்திய புள்ளி விவரச் சட்டம் மட்டும்தான் தொழிலாளர் நலன், தொழிலாளர் நிலைமை, அவர்களின் கூலி விகிதம், இதர வருமானம், விலைவாசி, கடன், வீடு, வேலைவாய்ப்பு, வைப்புநிதி மற்றும் இதர நிதிகள், தொழில் தகராறு போன்ற தொழிலாளர்கள் நிலைமைகளைச் சிறந்த முறையில் தயாரிப்பதற்கு உதவியாகயிருந்தது என்று திரு. D.K. பைசன்டிரி (முன்னாள் டெப்யூட்டி பிரின்சிபால், இந்திய அரசுத் தகவல் அதிகாரி) தன்னுடைய நூலில் கூறியுள்ளார்.
நிலக்கரி-மைக்கா சுரங்கத் தொழிலாளர்கள் நலதிட்டம்
நிலக்கரி தொழில் அக்காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கிய பங்கு வகித்தக் காரணத்தினால் அந்தத் தொழிலாளர்களுக்கான நலநிதி அவசரச் சட்டத்தை 1944 ஜனவரி 31ஆம் தேதி இந்திய அரசை இயற்றும்படி செய்தார்.
தம்முடைய நுண்ணிய அறிவாற்றலினால் இந்தத் தொழிலாளர் சேம நலநிதி செயல்பாடுகளுக்கு அத்தொழிலாளர்களின் முதலாளிகளே இந்நிதியினை அளித்திடுமாறும் அதன் மூலம் தொழிலாளர்கள் வீட்டு வசதி, குடிநீர் வினியோகம், சாலை வசதிகள், கல்வி, பொழுதுபோக்கு, கூட்டுறவு வசதிகளடைய ஏற்பாடுகள் செய்தார். இதன்மூலம் பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைந்தனர். இதேபோல் மைக்கா சுரங்கத் தொழிலா ளர்கள் சேம நலநிதி மசோதாவை 1946 ஏப்ரல் 8ஆம் தேதி மத்திய சட்டசபையில் கொண்டுவந்தார்.
மருத்துவச் செலவை திரும்ப பெறும் சட்டம்
1927ஆம் ஆண்டில் நடைபெற்ற சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் உடல் நலமின்மைக் காப்பீட்டுத் திட்டத்தினை (Sickness Insurance) ஏற்படுத்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1928-ல் இந்தியாவில் இது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. ஆனால் அரசினால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 1943ல் நடைபெற்ற மூன்றாவது நிரந்தரத் தொழிலாளர்கள் குழுக் கூட்டத்தில் உடல்நலக் குறைவு காப்பீட்டிற்கான தீர்மானத்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டுவந்தார்.
தொழிலாளர்களும், முதலாளிகள்/மாநில அரசுகளும் செலவுகளைப் பகிர்ந்து கொள்ளும்படியான இந்தத் திட்டத்தை மாநில அரசு நிராகரித்ததால் இதன் மீது எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. பின்னர் இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டது.
ஆய்வின் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவச் செலவிற்கான பணத்தைத் திரும்பத் தருவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொழிலாளர்களின் உடல் நலமின்மையால் உள்ள ஒரு சிலருக்கு காட்டப்படும் சாதகமான பரிகாரம் அடங்கியதே இம்மசோதா என்று மாநில அரசுகள் குற்றம் சாட்டியதிலிருந்தே தொழிலாளர்கள் நலன்களை மேம்படுத்துவதற்காக டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எந்த அளவிற்கு அக்கறையும், ஆர்வமும், முயற்சியும், முனைப்பும், உறுதியும், ஊக்கமும் கொண்டு உழைத்திருக்கிறார் என்பதை அறியலாம்.
மாநில தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் (E.S.I.)
தொழிலாளர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டங்களில் முக்கியமானதாகக் கருதக்கூடியது மாநில தொழிலாளர் காப்பீட்டுச் சட்டம் (Employees State Insurance). இதன் மூலம் தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி, மருத்துவ விடுமுறை, பிரசவக்கால உதவி, காயம், உடல் ஊனமுற்றால் அதற்கான ஈட்டுத்தொகை எனப் பல வசதிகளைச் செய்து கொடுக்கிறது. 1948 ஏப்ரல் 19ஆம் தேதி இதை சட்டமாக்கியவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர். கிழக்கு ஆசிய நாடுகளிடையே முதலாவதாக தொழிலாளர்களின் நலனுக்காக இன்சூரன்ஸ் சட்டம் இந்தியாவில்தான் கொண்டுவரப்பட்டது. டாக்டர் V.V. கிரி, திரு. V.B. கார்னிக், டாக்டர் N. பாலகிருஷ்ணன் நாயர் மற்றும் பல்வேறு தொழிற் சங்க தலைவர்களும் அறிவு ஜீவிகளும் இந்தத் திட்டத்தைப் பாராட்டினர். ஆனால் இத்திட்டத்தைக் கொண்டுவருவதற்காகப் பாடுபட்ட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை ஜாதியின் காரணமாக இந்தப் புகழுக்குரியவரைப் புறக்கணித்துள்ளனர்.
மகளிர் மகப்பேறு கால சட்டம்
பம்பாய் மாநில ஆலோசனைச் சபையில் (Legislative Council) உறுப்பினராக இருந்த டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1928 மார்ச் 19ஆம் தேதி மகளிர் மகப்பேறுகால சட்டத்தை (Maternity Benifit for Woman Labourers Bill) கொண்டு வந்தார்.
ஒரு பெண் தொழிலாளி தான் பிரசவமுற்றிருக்கும் காலத்தில், பிரசவத்திற்கு முன்னும் பின்னும் சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டியது அவசியமாகிறது. அந்த நேரத்தில் அரசாங்கத்தில் பணிபுரியும் பெண்களுக்கு அரசும், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களுக்கு முதலாளிகளும், அந்த ஓய்வு காலத்தில், அவர்களுக்கு விடுமுறையுடன் கூடிய ஊதியத்தை வழங்க வேண்டும் என்று கூறினார்.
பம்பாய் மாநில அரசு இந்த மசோதாவை ஏற்காமல் நிராகரித்துவிட்டது. பின்னர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் விடாமுயற்சியினால் 1929ல் மகாராஷ்டிர மாநிலம் இதனை நடைமுறைபடுத்தியது. அதைப் பார்த்து 1930ல் மத்தியபிரதேசமும், 1934ல் சென்னையிலும் சட்டமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பின்னர் மற்ற மாநிலங்களில் சட்டமாயிற்று.
1943 ஆகஸ்டு 2, 18 தேதிகளில் சுரங்கங்களில் பணிபுரியும் பெண் தொழிலாளர் களின் உரிமத்தை அரசு நீக்கிவிட்டது. இதனால் ஆயிரக்கணக்கான பெண்கள் வேலையிழந்து வேதனையுற்றனர். இந்தக் கொடுமைக்கு எதிராய் குரல் கொடுத்து தீவிரமாக அரசை வற்புறுத்தி 1946 பிப்ரவரி 1ஆம் தேதி மீண்டும் அப்பெண் தொழிலாளர்களுக்கு உரிமம் வழங்கப்பட்டது. இதன் மூலம் பெண்களுடைய துயரை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் போக்கினார்.
1946ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி தலைக்குமேல் பொருத்தப்பட்ட குழாயுள்ள குளியல் அறை, மலக் கழிப்பிடம், சிறுநீர் கழிப்பிடம் தொழிற்சாலைகளில் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் சட்டம் இயற்றினார். அதற்கு 10 சதம் அரசு மான்யம் அளிக்கும் என்றும் கூறினார்.
வைப்பு நிதி சட்டம் (Provident Fund Act)
அக்காலத்தில் தொழிலாளர்கள் கூலி மிகக் குறைவாக இருந்தது. அதனால் தொழிலாளர்கள் மிகவும் கடனாளியாக இருந்தனர். வேலையில் இருந்து ஓய்வு பெறும்போது தங்கள் எதிர்காலம் இருண்டு இருந்ததை நினைத்து மிகவும் வேதனையுடன் செல்வர். இவர்களின் இந்த வேதனையைக் கண்ட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர், இவர்கள் வாழ்வில் விளக்கேற்றி நிம்மதியளிக்க வேண்டும் என்று 1943 செப்டம்பர் 6, 7 தேதிகளில் நடைபெற்ற இந்திய தொழிலாளர் முத்தரப்பு மாநாட்டில் வைப்பு நிதிச் சட்டத்தைக் கொண்டுவர முயன்றார்.
அரசு இவ்விஷயத்தை, அடுத்த நிரந்தர தொழிலாளர் குழுவில் எடுத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தது. இதன் வரிவடிவ விதிகள் இந்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. முதலில் மனமுவந்து ஏற்கும் வைப்பு நிதி (Voluntry Provident Fund) ஏற்படுத்துவதற்கான முயற்சியும், அது சிறப்பாக இல்லாத காரணத்தால் கட்டாய வைப்பு நிதி (Compulsory Provident Fund) 1948ல் இந்திய தொழிலாளர் மாநாட்டில் மசோதா கொண்டுவரப்பட்டது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் திறமையான விவாதத்தால் 1951 நவம்பரில் கட்டாய வைப்பு நிதி அவசரச் சட்டமாக இயற்றப்பட்டது.
தேசிய வேலைவாய்ப்பு அலுவலகம் (Employment Exchange)
இரண்டாவது உலகப்போர் முடிந்தவுடன் இராணுவத்தில் பணியாற்றியவர்கள் பணியின்றி வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். போர்ப்படைக் கருவி தயாரித்து உதவிய கைத்தொழில் வினைஞர்கள் வேலையின்றி வீதியில் நிற்க வேண்டியவர்களானார்கள். மேலும் நாட்டில் படித்த பல இளைஞர்கள் வேலையின்றி வாடுவதை கண்டு மனம் வருந்திய டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் 1943ல் நிரந்தரக் குழுவின் மூன்றாவது கூட்டத்தில் இவ்வகை இளைஞர்களுக்கு அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் அமைக்கப்பட்டது போல் ஒரு தேசிய தொழிலமர்த்தும் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என்றும், போர்ப்படை வீரர் மற்றும் போர் நிறுத்தத்தினால் வேலையிழந்த தொழிலாளர்களும், படித்த இளைஞர்களும் இதில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அரசும் தொழிற்கூடங்களும் அவர்களுடைய தேவைக்கு ஏற்ப வேலைவாய்ப்பு அளிக்கவேண்டும். தொழிற்சாலைகளில் இருந்து எத்தனை பேர் வேலைக்கு எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது என்னும் விவரத்தை அளிக்கவேண்டும் என்ற தீர்மானத்தைக் கொண்டுவந்தார்.
முதலாளிகள் இரண்டாவது நிபந்தனையை ஏற்கவில்லை. முதலாளிகள் தங்கள் விருப்பம்போல் தொழிலாளர்களை நியமிக்கவும், வீட்டிற்கு அனுப்பவும் பிரச்சினையாக ஆகிவிடும் என்று பயந்தனர். டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் இடைவிடா முயற்சியினால் தேசிய வேலைவாய்ப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் லட்சகணக்கான இராணுவத்தினரும் படித்த இளைஞர்களும் பயனடைந்துள்ளனர்.
பெண்கள், குழந்தை தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டம்
இந்திய தொழிற்சாலை சட்டத்தின் மூலம் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் அனைத்துப் பாதுகாப்பு, சுகாதாரம், ஓய்வு, அதிக நேரம் செய்யும் வேலைக்கு (Over Time)ஒன்றரை மடங்கு சம்பளம், வேலை நேரத்தை குறைத்தல், விடுமுறை, இரவில் வேலை செய்யக்கூடாது போன்ற பல நலன்கள் சட்டமாக இயற்றப்பட்டது.
தொழிற்சங்கங்களுக்குக் கட்டாய அங்கீகாரம் அளிக்கும்
சட்ட மசோதா
இந்திய தொழிலாளர் சட்டம் 1926ல் இயற்றப்பட்டது. இது தொழிற்சங்கங்களைப் பதிவு செய்துகொள்ள மட்டுமே உதவி செய்தது. ஆனால் முதலாளிகள்/அரசு அங்கீகரிக்க ஏற்பாடு செய்யவில்லை. 1943 நவம்பர் 8ஆம் தேதியன்று இந்திய தொழிற்சங்கங்கள் திருத்த மசோதாவைக் கொண்டுவந்தார். இதை முதலில் மக்களின், தொழிலாளர்களின் மத்தியில் பொதுக்கருத்தினை ஏற்படுத்தி பின்னர், மத்திய சட்டசபைக்குக் கொண்டுவந்தார். ஆனால் அங்கு இது நிறைவேறவில்லை. மீண்டும் 1946 பிப்ரவரி 21ஆம் தேதி சட்டசபையில் சமர்ப்பித்தார். இந்திய விடுதலை வேலைகள் காரணமாக அது கிடப்பில் போடப்பட்டது. அதுவே சுதந்திரத்திற்குப் பின்னர் சட்டமாகியது.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் இந்திய தொழிலாளர்
மாநாடும் அதன் நன்மைகளும்
1945 நவம்பர் 27-28 தேதிகளில் நடந்த மாநாட்டிற்குத் தொழிலாளர் மந்திரிகளின் மாநாடு, நிரந்தர மாநாடு, முத்தரப்பு மாநாடு என்று பலவித பெயர்கள் சூட்டப்பட்டன. மாநாடு கமிட்டி இதை தொழிலாளர் மாநாடு என்று அழைக்க முடிவுசெய்தது. மாநாட்டின் தலைவர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்கள் இந்தியத் தொழிலாளர் மாநாடு என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். தொழிலாளர்ளின் தோழர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் என்பதற்கு இதைவிட சிறப்பான நிகழ்ச்சி வேறு இருக்க முடியாது.
இந்த மாநாட்டில் ஆய்வு செய்யப்பட்ட முக்கிய விஷயங்கள்
1. தொழிற்சாலைத் திருத்தச் சட்டம்
2. ஊதியத்துடன் விடுமுறை.
3. எட்டு மணிநேர வேலை.
4. தொழிற்துறை நடைமுறை விதிகள்.
5. தொழிற்சங்கங்களுக்குக் கட்டாய அங்கீகாரம்.
6. தொழில் தகராறு சட்டம்.
7. உணவு, சிற்றுண்டி சாலை.
8. குறைந்தபட்சக் கூலி நிர்ணயம்.
மற்றும் பல தொழிலாளர் நல விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
பழைய சட்டங்களில் பல புதிய திருத்தங்களைக் கொண்டுவந்ததன் மூலம் தொழிலாளர்களுக்குப் பல நன்மைகள் ஏற்படுமாறு மாறுதல் செய்தார். தொழிற் சாலைகளில் குளிப்பதற்கும், கை, கால் கழுவுவதற்கும், தீ விபத்தினைத் தடுப்பதற்கான சாதனங்கள் அமைக்கவும், தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை (C.L), விடுமுறையை இரண்டு ஆண்டுகள் சேமித்து வைத்துக் கொள்ளும் வாய்ப்பு, சட்டபூர்வமான வேலை நிறுத்தம், கதவடைப்பிற்கு 30 நாட்கள் விடுமுறை அளித்தல், அதாவது அதிகப்படியாக வேலை செய்த நேரத்திற்குரிய ஊதியத்தை (மூன்று மாத சராசரி ஊதியத்தில் பாதியை) தொழிலாளர் விடுமுறையில் செல்லும் முன் அளிக்கச் செய்தார். கட்டாய விடுமுறை நாட்களுக்கு (Compulsory) ஈடு செய்யும் (Compensation)முறையை அளிக்கவும் சட்டம் வகுத்தார்.
டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கார் தொழிலாளர் நல அமைச்சராக ஆவதற்கு முன்னால் தொழிலாளர்களின் சமூக நல பாதுகாப்பு, தொழிலாளர்களின் நலன் பேணுதல், சுகாதார வசதிகளை கவனித்தல், தொழிலாளர் சமூக நல காப்பீடு, தொழிலாளர் உடல் நலமின்மைக் காப்பீடு போன்ற பல நன்மைகளைப் பற்றி ஒருவரும் கவலைப்பட்டது கிடையாது என்பதைத்தான் இந்திய தொழிலாளர்கள் சரித்திரம் காட்டுகிறது.
அதேபோல் இந்தச் சட்டங்கள் அனைத்தையும் உருவாக்கிட டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் எவ்வளவு துன்பங்களையும், தொல்லைகளையும், எத்தனை இரவு, பகல் என்றும் பாராமல் இந்தத் திட்டங்களைத் தீட்டியதுடன் இவைகள் நிறைவேறிட மத்திய மாநில அரசுகளுடனும், முதலாளிகளுடனும் போராடி அனைத்து எதிர்ப்புகளையும், முட்டுக்கட்டைகளையும் கடந்து தன் உடல் நலத்தையும், சுகத்தையும், இன்பத்தையும் இந்தியத் தொழிலாளர் களுக்காக இழந்த அந்த மாமேதை ஜாதியின் பெயரால் மறைக்கப்பட்டுள்ள கொடுமையைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். தொழிற்சங்கத் தலைவர்கள் நன்றிவுணர்வுடன் அவர் செய்துள்ள நன்மைகளைத் தொழிலாளர்களுக்கு இனியாவது சொல்லி மனசாட்சியுடன் நடந்துகொள்ள வேண்டும்.
*****
“இந்திய நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தினர் அதாவது ஏழை எளிய மக்கள், தம்மிடையே ஏழை – பணக்காரன் என்ற வேறுபாட்டை தவிர வேறு எந்த வேறுபாட்டையும் பார்ப்பதில்லையா? இவர்கள் இந்த வேறுபாட்டைப் பார்க்கவே செய்கிறார்கள் என்பது உண்மையென்றால், அத்தகைய பாட்டாளி மக்கள் பணக்காரர்களுக்கு எதிராக எந்த வகையில் ஒன்றுபட்ட அணியாகத் திரள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? பாட்டாளி வர்க்கம் ஒன்றுபட்டு ஓரணியாகத் திரள முடியாத நிலையில் புரட்சி எப்படி சாத்தியமாகும்?
அநேக தொழில்களை இந்துக்கள் இழிவானதென்று கருதுவதால், அத்தொழில் களைச் செய்வோர்க்கு அத்தொழிலின் மீது வெறுப்பு வளர்க்கிறது. இந்த இழிவைக் கருதி, அத்தொழிலைச் செய்யாமல் தட்டிக் கழிக்கவும், தப்பித்துக் கொள்ளவும் தூண்டுகிறது. மனம் விரும்பிச் செய்யாத தொழிலில் திறமையைக் காட்டத்தான் முடியுமா?” – டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
– Tamil Maraiyan
– Tamil Maraiyan
1 Comment
அற்புதமான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே