ஐப்பசி மாதம் தொடங்கியதும் அடை மழையும் தொடங்கிவிட்டது.வானில், நீல நிறம் மறைந்து, நிழல் குவிந்து கிடப்பதைப்போல் மேகங்கள் குவிந்துகிடந்தன. இடைவிடாமல், ‘பிசு பிசு’வென்று தூறிக்கொண்டேயிருந்தது. மரங்கள் எல்லாம் நனைந்து குளிரால் மரத்துப் போய் நின்றிருந்தன. பறவைகள் தம் சிறகுகளை இறுக்கி அணைத்து, இமைகளை மூடிக்கொண்டு கூடுகளில் ஒடுங்கிக்கிடந்தன.
அன்று மாலை மழையின் வேகம் சற்றுத்தணிந்தது. ஆனால் அடிக்கொரு தடவை வீசிய ‘சில்’லென்ற குளிர்காற்று, உடலைப் பிடித்து உலுக்கிவிட்டுச் சென்றது. எங்கு பார்த்தாலும் தரை சில்லிட்டுக்கிடந்தது தெருவில் நடந்துபோக முடியாமல் ஜனங்கள் திணறினார்கள். ஓரணாக் கொடுத்து வண்டியேற அஞ்சி, ஒன்றரை மைல் நடப்பவர்கள் கூட, அன்று பல்லைக் கடித்துக்கொண்டு வண்டியேறினர். ‘சுளீர், சுளீர்’ என்று தாக்கும் குளிர் காற்று அவர்கள் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டுபோய், வண்டியினுள் நுழைத்து முடிச்சை அவிழ்க்க வைத்தது.
தெருவின் ஓரத்திலே ஒதுங்கி நின்ற பிச்சைக்காரர்கள் தங்க இடமின்றித்தவித்தனர். அவர்களின் கந்தல் உடையால் குளிரைத் தடுக்க முடியவில்லை. வேழத்தின் வாய்ப்பட்ட கரும்பு போன்று நடுங்கியது அவர்கள் மேனி. அந்தப் பஞ்சைகளின் கும்பலில், ஓர் யுவதி பச்சைக் குழந்தையைத் தோளில் அணைத்தவண்ணம், தெருவை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். நெருப்பிடைச் சிக்கிய தளிர்க்கொத்து போல், அந்த குழந்தையின் உடல் துடித்தது. மழைத்துளிகள் குழந்தையின் மேல் விழுந்து வழிந்தோடின. குழந்தை கீச்சுக் குரலில் பரிதாரகரமாக அழுதது. அந்த வேதனையைத் தாயால் சகித்துக்கொள்ள முடியவில்லை; அவள் கண்கள், கண்ணீரை அல்ல ‡ வெந்நீரைச் சிந்தின. அவள் இதயம் விம்மி விம்மிப் பொருமியது ‡ குழந்தைக்குக் காலையிலிருந்து பால் இல்லை ; அவளுக்கும் உணவில்லை. ரிக்ஷா இழுத்துச் சென்ற அவள் கணவன், இன்னும் அந்தத் தெருவின் பக்கம் திரும்பவேயில்லை. விடாமல் பெய்த மழையில் அவன் எங்கே உறங்கிக்கொண்டு கிடந்தானோ!
தரையில் எடுத்துப்போட்ட மீனைப்போல் அவள் கண்கள் துடியாய்த் துடித்தன. வழக்கமாக ரிக்ஷா வண்டிகள் நிற்கும் இடத்தை நோக்கி அவள் நடக்கத் தொடங்கினாள்.
சக்தியிழந்த கால்கள் தள்ளாடியவாறு சென்றன. மழைக்கால உடையணிந்த சீமான்களும் சீமாட்டிகளும், ‘பஸ் ஸ்டாண்டை’ நோக்கி வந்து கொண்டிருந்தனர். அவர்கள் குழந்தைகளின் தலையில், மழைநீர் படாதபடி நவீன பாதுகாப்புக் குல்லாய்களிருந்தன. மேலே குளிர் தாக்காதபடி உடைகள் அணியப்பட்டிருந்தன. ரிக்ஷாகாரனின் மனைவி அவர்களை வெறித்துப் பார்த்துக் கொண்டு சென்றாள்.அவள் குழந்தைகூட, பாலைவனத்தில் பச்சையைக்கண்ட வழிப்போக்கன்போல், அந்தப் பணக்காரர்களைத் தன் தலையை நீட்டிப்பார்த்தது. எதிரிலே ஒரு மைனர் கால்களில் கிறுக்கிடும் பூட்ஸுடன் விரைவாக வந்து கொண்டிருந்தார். ரிக்ஷாக்காரனின் மனைவி, மைனர் செல்லும் வழியைக் குறுக்கிட்டாள். அவள் கால்களில் பூட்ஸ் கால்கள் விரைவாகச் சென்று மோதின. ‘ஐயோ,அம்மா’ என்று, அவள் காலைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள். நகம் பெயர்ந்து, ரத்தம் கசிந்தது. மைனரின் கால்கள் இடம்விட்டுப் பெயர்ந்து, சேற்று நீரில் போய்ச் ‘சளுக்’கென்று செருகிக்கொண்டன. மைனருக்குக் கோபம் மூக்கின் மேல் பொத்துக்கொண்டு வந்தது. திரும்பிப் பார்த்தார். அந்தப் பஞ்சைப் பெண், நோவு தாங்க முடியாமல் வதைந்தாள்; அவள் குழந்தை வீறிட்டுக் கத்தியது.
‘கழுதை! கண் தெரியவில்லை? மூதேவி! நீங்கள் எதற்கு உயிரை வைத்து கொண்டிருக்கிறீர்கள்? பிச்சைக்கார நாய்!’இப்படி, மைனர் தன் விஸ்வரூபத்தைக் காட்டினார்.
‘என்ன சார் மோசம்! இந்த நாய்களுக்கு மதிப்பே தெரியலை சார்; ரோடில் எப்படிப் போகணும்ங்கிற
ஒழுங்கு’…
‘ஆமாம் சார்! இதுங்களுக்கு எங்கேருந்து சார் தெரியும்!’என்று அந்தப் பக்கம் வந்தவர் தன் அபிப்பிராயத்தைத் தெரிவித்து விட்டுச் சென்றார்.
விரைவாக ஓடிவந்து நின்றது. மைனர் பாய்ந்து சென்று ‘பஸ்’ஸிற்குள் நுழைந்து அமர்ந்தார். பின்னும் சிலர் பஸ்ஸில் ஏறினர். கடைசியாக வந்த ஒரு நாகரிக யுவதி, உட்கார இடமில்லாமல் மேலே தொங்கும் தோல்பிடியைப் பிடித்துக்கொண்டு நின்றாள். அவள் காதுகளில் டோலக் ஒளிவிட்டுச் சிரித்தது. அருகில் உட்கார்ந்து கொண்டிருந்த அந்த மைனர் டோலக் ஒளியால் ஆகர்´க்கப்பட்டார். அவர் கண்களில் பரிவு தோன்றியது. நாகரிக மேதையுடன், தான் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, அந்த யுவதிக்கு ஆங்கிலச் சொற்கள் மூலம் மரியாதை கூறி உட்காரவைத்துவிட்டு, வெளியே தன் தலையை நீட்டி அர்த்தமில்லாமல் பார்த்தார்.
தன் பூட்ஸ் கால்களால் மரியாதை செய்யப்பட்ட அந்த ஏழைப் பெண் ‡ அதே இடத்தில் ‡ பஸ்ஸின் சக்கரங்களால் சிதறடிக்கப்பட்ட சேற்று நீரால் அபிஷேகம் செய்யப்பட்ட கோலத்துடன் ‡ குழந்தையை அணைத்த வண்ணம் ‡உட்கார்ந்து கொண்டிப்பது மைனரின் கண்களுக்குத் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அது வெறும் பார்வையாக மட்டுந்தான் இவருக்குத் தோன்றியது. கண்டக்டரின் விசில் சப்தம், நாகரிகத்தைக் கண்டு சாக்குருவிக் குரலில் கத்தியது ‡ பஸ் உறுமிவிட்டு நகர்ந்தது. குழந்தையின் உடல் சேறால் நனைந்து விட்டது. அவள் அழுதாள்; குழந்தையைப் பார்த்துக் கதறினாள். கால்களில் நோயைப் பொறுத்துக் கொண்டு மெதுவாக எழுந்திருந்து நிராசையுடன் தெருவைப் பார்த்தாள்.
அதோ, கொஞ்ச துரத்தில் ஒருவன் ‘ரிக்ஷா’ இழுத்துச் செல்கிறான். அவள் கணவனாகத்தான் இருக்க வேண்டும். இளைத்த உடலுடன் வண்டியை இழுத்துச் செல்பவன், அவனாகத்தானே இருக்கவேண்டும்? அந்த அடையாளந்தான் அவள் ஆவலைத் தூண்டியிருக்க வேண்டும். குழந்தையை நன்றாக அணைத்துக்கொண்டு அந்தத் திசையை நோக்கி ஓட்டமும் நடையுமாகச் சென்றாள். தெருவின் திருப்பத்தண்டை ரிக்ஷா சென்றுக் கொண்டிருந்தது. அவளும் அதன் அருகே போய்விட்டாள். அவள் கணவனேதான். மூச்சைப் பிடித்து, முதுகை வளைத்து முக்கியிழுத்துக்கொண்டு செல்கிறான் வண்டியை. வேர்வையின் துளிகளும் மழைத் துளிகளும் அவன் முதுகில் நிறைந்து கிடந்தன. ‡ ஆஜானுபாகுவாக வண்டியில் அமர்ந்திருந்தவர், அவனை அவசரப்படுத்தி வண்டியை வேகமாக இழுக்கச் சொல்லி அதட்டும் ஒலி, அந்த ஏழைப் பெண்ணின் உடலைப் பிடித்து ஆட்டியது. அவள் நடுங்கினாள் ‡ அந்த மனிதரின் முகம் அவள் எங்கேயோ பார்த்த முகம் போல் தெரிந்தது.
ஆம் பார்த்த முகம் தான்! சென்ற வாரம் அவர் விஷ்ணு கோவிலின் முன்னே பிரசங்கம் செய்ததை அவள் பார்த்ததுண்டு. பகவத் கைங்கர்யத்திலே ஈடுபட்ட பரம பக்தரான அவர், அன்று ஏதோ‡ ஆண்டவனின் பாசுரத்தை மனமுருகிப் பாடிக் கண்ணீர் விட்டு ஆனந்த பரவசராக நின்றதை அவள் பார்த்துக் கும்பிட்டுக்கூட இருக்கிறாள். வெளிவேத்தை அறிவில்லாத அந்தப் பஞ்சைப் பெண்ணால் எப்படி உணர்ந்து கொள்ளமுடியும்? ‡ தன் கணவனைக் கூப்பிட நினைத்து வாயைத் திறந்தாள். ஏனோ அவள் குரல் பாதித் தொண்டையிலேயே நின்றுவிட்டது. எதற்கும் வண்டியின் ஓரம் செல்வோமென்று அவள் நடந்துகொண்டிருந்தாள். எதிர்ப்பக்கமாக இருந்து, தெருவை அடைத்துக்கொண்டு இரண்டு ராணுவலாரிகள் வேகமாக ஓடிவந்தன. ரிக்ஷா வண்டிக்காரன் கொஞ்சம் நின்றான். பக்தர் அவசரப்பட்டார். ரிக்ஷாவை நெருங்கிக் கொண்டிருந்த அந்த ஏழைப்பெண்ணும் லாரிக்குப் பயந்து ஓரமாக ஓடினாள். போட்டியில் மிஞ்சிய ஒரு லாரி தன்கோர முகத்தை முதலில் நீட்டிவிட்டது. எதிர்பட்ட அந்தப் பஞ்சைப் பெண்ணைப் பந்துபோல் தூக்கி எறிந்து விட்டு வேகமாகப் பறந்தது ‘லாரி’. அவள் அணைப்பில் கிடந்த குழந்தை ‡ வெகு தூரத்திற்கப்பால் போய் விழுந்து உருண்டு கிடந்தது. ‘ஐயோ’ என்ற அவளின் கடைசிக் கூச்சல் எதிரொலித்துவிட்டு மறைந்தது.
ரிக்க்ஷா இழுப்பவனின் இதயம் பரிதாபகரமான கூச்சலைக் கேட்டு நடுங்கியது. அவன் தன் தலையைத் திருப்பினான், என்ன என்று பார்க்க, பக்தர் “டேய் கழுதை! சீக்கிரம் இழுத்துக்கொண்டு போடா! மடையா, என்னடா வேடிக்கை? டேய், போடா” என்று தன் கையை ஓங்கினார். ‘இதோபோறேன் சாமி!’ என்று அவன் நடுக்கத்துடன் வண்டியை இழுத்துக்கொண்டு ஓடினான். அன்று அவனுக்குக் கிடைத்த முதல் சவாரி அது. அதில் கிடைக்கும் பணத்தை எடுத்துக்கொண்டு போய் காலையில் பட்டினியோடு விட்டுவந்த தன் பச்சிளங்குழந்தைக்கும், மனைவிக்கும் கஞ்சிக்கு வழி தேட வேண்டும். அந்த நினைப்பில் தான், அவன்அந்த அரைக்கணத்தையும் கூட வீணாக்காமல் வேகமாகவே ஓடினான்.
புரட்சிப் பாவலர் தமிழ்ஒளி
21.11.1948 ‘முன்னணி’ இதழில் எழுதிய சிறுகதை