சின்னி என்ற அந்தச் சிறுமி சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது. நெடுஞ்சாலையோரக் கிராமமொன்றில் வசிக்கிறாள் அவள். வீட்டில் நிறைமாதக் கர்ப்பிணியாய் சாப்பிடாமல் படுத்திருக்கும் அம்மா. அவளுக்கு ஒரு அக்காவும் ஒரு தம்பியும் இருக்கிறார்கள். வேலை தேடிச் சென்ற அப்பா இன்னும் வீடு திரும்பவில்லை. வீட்டில் கைப்பிடியளவு எஞ்சியிருந்த அரிசியை அம்மா தன் மூத்த மகளுக்குக் கொடுக்க, அவள் சாப்பிடாமல் சின்னிக்குக் கொடுக்க, சின்னி அதை அப்படியே தம்பிக்குக் கொடுத்துவிடுகிறாள். இந்த நிலையிலும் தன் பிள்ளைகளை நினைத்து அந்த அம்மாவுக்குப் பெருமிதம்.
பசியே அன்றாடமாக இருக்கும் சின்னியின் வாழ்க்கையில் ஓராண்டுக்கு முன்பு ஒரு வசந்த காலம் வந்தது. அதுவும் எப்படித் தெரியுமா? ஒரு விபத்தால். சாலையில் விளையாடிக்கொண்டிருக்கும்போது லாரியில் சின்னி அடிபட்டுவிட, லாரியின் உரிமையாளர் சின்னியை ஒரு மருத்துவமனையில் கொண்டுவந்து சேர்க்கிறார். தினமும் சின்னிக்குப் பழங்கள், ஐஸ்கிரீம், சாக்லேட் என்றெல்லாம் வாங்கிக்கொண்டு வருகிறார். அவள் குணமாகி வீட்டுக்குச் சென்ற பின்னும் மாதாமாதம் அவள் வீட்டுக்கு நூறு ரூபாய் கொடுக்கிறார். அந்தச் சாலையைக் கடக்கும்போதல்லாம் சின்னிக்குத் தின்பதற்கு ஏதாவது தந்துவிட்டுப் போவார். இப்படியே கொஞ்ச காலம் கழிந்த பிறகு அந்த உபகாரங்கள் நின்றுவிடுகின்றன. வெறுமனே சிரிப்பைத் தந்துவிட்டுப் போகும் லாரியைத் தினமும் பார்க்கிறாள் சின்னு. இப்படியே எதிர்பார்த்து எதிர்பார்த்துக் கடைசியில் துணிந்து ஒரு முடிவெடுக்கிறாள், லாரிக்குக் குறுக்கே பாய்ந்து லாரியை நிறுத்துவதென்று. கதையில் தொடக்கத்தில் ஒரு தவளை அடிபட்டுச் செத்துக் கிடக்கும். அதேபோல் இறுதியில் சின்னியும் லாரியில் அடிபட்டுச் செத்துக் கிடக்கிறாள். தலித் மக்களின் வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் உதாரணமாக இந்த ஒப்புமை ஆகிவிடுகிறது.
கொலக்கலூரி எனோச் எழுதிய ‘பசி’ என்ற இந்தச் சிறுகதை மிகவும் சிறியது. ஆனால், அதன் வீரியமோ நட் ஹாம்சனின் ‘பசி’ நாவலுக்கு இணையானது. ஆனால், நட் ஹாம்சனின் நாயகனின் பசிக்கும் சின்னியின் பசிக்கும் நுட்பமான வேறுபாடு உள்ளது. அதுதான் சாதியம்!
தெலுங்கு மொழியின் தலித் எழுத்துக்களைத் தொகுத்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து சமீபத்தில் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகப் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டிருக்கும் ‘The Oxford Indian Anthology of Telugu Dalit Writing’ என்ற முக்கியமான தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் கதைதான் இது. இந்தக் கதையைப் போல சாதி வன்கொடுமையின் வெவ்வேறு பரிமாணங்களைப் பேசும் தலித் எழுத்தாளர்கள் பலரின் கதை களும் இந்தத் தொகுப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பாடல்கள், கவிதைகள், சிறுகதைகள், நாவல்/ நாடகப் பகுதிகள், சுயசரிதை கள், கட்டுரைகள், வரலாறு என்று பன்முக வீச்சில் தலித் எழுத்துக்கள் இந்தத் தொகுப்பில் மொழிபெயர்க் கப்பட்டிருக்கின்றன. புருஷோத்தம், கீதா ராமஸ்வாமி, கோகு ஷ்யாமளா ஆகியோர் இதன் பதிப்பாசிரியர்கள்.
2012-ல் தமிழ் மொழியின் தலித் எழுத்தாளர்களின் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பாக ஆக்ஸ்ஃபோர்டு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ‘The Oxford Indian Anthology of Tamil Dalit Writing’, மலையாள தலித் எழுத்தாளர்களின் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ‘The Oxford Indian Anthology of Malayalam Dalit Writing’ போன்ற தொகுப்புகளின் தொடர்ச்சியாக, தெலுங்கு தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகியிருக்கின்றன. இந்திய இலக்கிய மொழிபெயர்ப்பின் பெரும் நிகழ்வுகளுள் ஒன்றாக இதைச் சொல்லலாம்.
இதற்கு முன்பு இந்த அளவுக்கு தலித் எழுத்தாளர்களின் படைப்புகள் உலக அரங்குக்குச் சென்றதில்லை. தமிழ் தலித் எழுத்துக்களின் மொழிபெயர்ப்புத் தொகுப்பின் முன்னுரையில் ரவிக்குமார் சொல்வதுபோல, தமிழிலேயே இதுபோன்ற விரிவான தொகுப்பு வரவில்லையே! தலித் இலக்கியங்கள் இல்லாமல் இந்திய இலக்கியங்களைப் பற்றிய சித்திரம் முழுமையாகாது என்பதால் இந்த மொழிபெயர்ப்புகள் பெரும் முக்கியத்துவம் பெறுகின்றன.
தலித் இலக்கியத்தின் வரலாறு
1970-களில் மராத்திய மொழியில் ‘தலித் இலக்கியம்’ என்ற அடையாளத்துடன் ஒரு பேரியக்கம் தோன்றி அதன் தாக்கம் இந்தியா முழுவதும் பரவ ஆரம்பித்தாலும் அந்த அடையாளமின்றியே காலம்காலமாக ஏதோ ஒரு வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் இலக்கிய மரபு தொடர்ந்துவந்திருக்கிறது. இதில் வாய்மொழி மரபு முக்கிய இடம் வகிக்கிறது. நவீன காலத்தில் 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலிருந்து தலித் சமூகத்தைச் சேர்ந்த சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் தங்கள் எழுத்துக்களை அச்சு வாகனத்தில் ஏற்றி சமூகத்தின் ஒரு ஓரத்திலிருந்தபடியே ஒடுக்கப்பட்ட தங்கள் குரலை வெளிப்படுத்திவந்தார்கள். தமிழில் அயோத்திதாசர் ஒரு உதாரணம்.
இப்படி ஒடுக்கப்பட்ட சமூகங்களின் குரல் பல திசைகளிலிருந்து பல பத்தாண்டுகளாக ஒலித்துவந்தாலும் தொண்ணூறுகளை ஒட்டிய காலத்தில் தலித் இலக்கியம் பெரும் இயக்கமாக உருவானது. அம்பேத்கர் நூற்றாண்டு நிகழ்வின் உடனிகழ்வாக இந்த இயக்கம் இன்னும் முடுக்கம் பெற்றது. அதுவரை எழுதப்பட்ட எழுத்துக்களுக்கு நேரெதிர்த் திசையிலிருந்து தலித் படைப்பாளிகளின் எழுத்துக்கள் புறப்பட்டுவர ஆரம்பித்தன. வலி, துயரம், சாதிய வெறி, சமூக நீதி, ஒடுக்குமுறையின் பரிமாணங்கள் போன்றவற்றை மட்டும் தலித் எழுத்துக்கள் பேசவில்லை, அவர்களின் காதல் உள்ளிட்ட உணர்வுகளும் வாழ்க்கைத் தத்துவமும்கூட இந்த எழுத்துக்களில் வெளிப்பட்டன. ஒரு கட்டத்தில் சிறுபத்திரிகை என்ற வட்டத்தைத் தாண்டி வெகுஜனப் பத்திரிகைகளிலும் தலித் படைப்பாளிகளின் எழுத்துக்கள் இடம்பெற்றன. எனினும் தலித் படைப்பாளிகளுக்கு உரிய அங்கீகாரம் இன்னும் தரப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தத் தொகுப்புகள் மட்டுமல்லாமல் வேறு சில முயற்சிகளும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. சோ. தர்மனின் ‘கூகை’ நாவல் ஆங்கிலத்தில் வசந்தா சூர்யாவால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ‘கூகை’ என்ற பறவையை ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையோடு குறியீடாக வைத்துப் பேசும் நாவல் இது. இளவரசன் திவ்யா காதல் விவகாரம் பெரும் பிரச்சினையாக வெடிப்பதற்குச் சிறிது காலத்துக்கு முன்பு அந்த துயர சம்பவத்தைப் போன்ற ஒரு கதையை எழுத்தாளர் இமையம் எழுதினார், ‘பெத்தவன்’ என்ற பெயரில். அந்தக் குறுநாவல் கீதா சுப்பிரமணியனால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.
பாட நூல்களில் தலித் இலக்கியம்
மேற்கண்ட புத்தகங்களோடு சேர்த்துக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது ‘Listen To The Flames’ என்ற புத்தகம். இந்திய அளவிலான தலித் இலக்கியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் படைப்புகளை மொழிபெயர்த்து இதில் தொகுத்திருக்கிறார்கள். அம்பேத்கரின் ‘விசாவுக்காகக் காத்திருத்தல்’ கட்டுரையின் மொழிபெயர்ப்பும் சுயசரிதைப் பகுதியில் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கிறது. எல்லாவற்றையும்விட இந்தப் புத்தகம் பாடத்திட்டத்திலும் இடம்பெற்றிருக்கிறது. சாதியத்தைப் பற்றிய குறிப்புகளை அமெரிக்கப் பாடங்களில் இடம்பெறச் செய்யக் கூடாது என்று இந்துத்துவ சக்திகள் முயன்றுவரும் காலத்தில் இங்கேயே அது நிகழ்ந்திருப்பது ஆரோக்கியமான விஷயம். மாணவர்களுக்கு தலித் படைப்புகளை அறிமுகம் செய்யும் அற்புதமான தொகுப்பு இது.
ஆக்ஸ்ஃபோர்டு வெளியிட்டுவரும் தொகுப்புகள் தலித் எழுத்துக்களை உலக அளவில் கொண்டுசெல்லும் முயற்சியாக அமைந்துள்ளன. ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து ஒலிக்கும் விளிம்புநிலை மக்களின் குரல்களோடு இப்போது இந்தியக் குரல்களும் சேர்ந்து ஒலிக்கின்றன.
நன்றி : தமிழ் இந்து ஜூன்5, 2016