உயர்கல்வி வளாகங்களில் தற்கொலைகள் தொடர்கின்றன. கடந்த ஆண்டு ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரோஹித் வெமுலா தற்கொலை செய்துகொண்ட வெம்மை அடங்குவதற்குள்,இப்போது டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் இறந்திருக்கிறார். முன்பு, இளநிலை ஆய்வுப்படிப்பை ஐதராபாத் பல்கலைக்கழகத்தில் படித்தபோது ரோஹித் வெமுலாவின் பக்கத்து அறை மாணவராக இருந்த முத்துக்கிருஷ்ணன், இப்போது வெமுலாவின் முடிவையே எட்டியிருப்பது நமக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. முத்துக்கிருஷ்ணன் தமிழக மாணவர் என்பது நம்மை இதைச் சார்ந்த விவாதத்தோடு மேலும் நெருக்கமாக்குகிறது.
பிறந்த ஊரிலிருந்து வெளியேறி, வெளியில் வந்து படிப்பதையே பெரும் வரமாக பார்க்கத்தக்க குடும்பத்தில் பிறந்த முதல்தலைமுறை படிப்பாளியான முத்துக்கிருஷ்ணன், நாட்டின் தலைநகரிலிருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகமொன்றில் முனைவர் பட்ட ஆய்வில் சேர்ந்து படித்ததை அவர் குடும்பம் எவ்வாறு பெருமையாக எடுத்துக்கொண்டிருக்கும் என்பதை சொற்களால் விவரிப்பது கடினம். ஆனால்,அக்கனவுகள் நொறுங்கிப்போகும் விதத்தில் அவன் பிணமாக திரும்பி வருவான் என்பதை அக்குடும்பம் ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. கூலி வேலைக்குச் செல்லும் எளிய தலித் குடும்பத்தில் மூத்த மகன்,அடுத்தடுத்து திருமணமாகாத சகோதரிகள், இம்மொத்தச் சூழலையும் நினைத்துப் பார்க்கும்போது நமக்குள் ஒரு அவலம் எழுவதைப் போன்ற உணர்வையே அடைகிறோம். அதற்கு முன்பு, அதே சேலம் ஜலகண்டபுரத்தைச் சேர்ந்த பன்னியாண்டி என்ற சிறுபான்மை தலித் குடும்பமொன்றில் பிறந்து முதல் தலைமுறை படிப்பாளியாக ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை முனைவர் பட்ட மாணவராக இருந்த செந்தில்குமார் இறந்துபோனார்.
இவ்வாறு தற்கொலைகள் தொடர்ந்துகொண்டேயிருக்கின்றன சாவுக்குப்பின் அதைப் பற்றி நாம் பேசத் தொடங்குகிறோம். ஒரு சாவு உடனடியாக உருவாக்கும் அனுதாபம், அதிர்ச்சி, ஆவேசம் சார்ந்து சாவையும் செத்தவரின் பின்னணி பற்றியும் பேசுகிறோம். உடனடியாக இவற்றையெல்லாம் சுட்டிப் பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால், நாம் அதைத் தாண்டிய விஷயங்களைப் பேசாமல் விடுகிறோம். சாவுக்கான காரணங்கள் பற்றியோ, அது நடந்தமைக்கான விரிவான பின்னணி பற்றியோ பேசாமல் உடனடி கோபத்தை வெளிப்படுத்துவதோடு அப்பிரச்னையைப் பற்றிய நம்முடைய பேச்சையெல்லாம் அத்தோடு முடித்துக்கொள்கிறோம். ஏனெனில், உடனடி ஆவேசமே நமக்கு போதுமானதாகவிருக்கிறது. அதுதான் உடனடி அரசியல் பலனைத் தருகிறது. உடனடியாக அரசியல் எதிரிகளைக் கட்டமைக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு முறையும் செத்தவன், செத்தவன் பின்னணி என்பதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்போமெனில் அடுத்தடுத்த சாவுகளை நாம் எப்படி தடுக்க முடியும்? சாவுக்கு காரணமான சமூக, அரசியல், கலாச்சார பின்னணிகளை எப்போது ஆராயப் போகிறோம்? ஆராய்ந்த முடிவுகளை எப்போது விவாதமாக்கப்போகிறோம்?
முத்துக்கிருஷ்ணனின் சாவுக்கு பலவிதமான காரணங்கள் சொல்லப்பட்டாலும் அவை யாவும் யூகங்களாகவே இருக்கின்றன. ஆனால், அவர் கல்விநிறுவனத்தில் சந்தித்த சொல்லப்படாத பிரச்னைகள் உளவியல் அழுத்தங்களாக மாறியிருக்கின்றன என்பதை முக்கியமான காரணமாக பலரும் குறிப்பிடுகின்றனர். வாழ்க்கைக்கான எதிர்காலத்தையும் அறம்சார்ந்த மதிப்பீடுகளையும் உருவாக்கப்போவதாக நாமெல்லாம் நம்பிக்கொண்டிருக்கும் கல்வி வளாகங்களிலேயே, அதிலும் உயர்கல்வி நிறுவனங்களிலேயே முதல்தலைமுறைப் படிப்பாளிகள் பலரும் தொடர்ந்து செத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த உயர்கல்வி நிறுவனங்களின் நடைமுறை பற்றிய கேள்விகளை நாம் உருவாக்க வேண்டும்.
சமூக ஏற்றத்தாழ்வுகளும் பாகுபாடுகளும் வெளிப்படையாக உலவும் கிராமங்களிலிருந்து விடுபட்டு நகரங்களுக்கும் நகரங்களின் நவீன நிறுவனங்களுக்கும் செல்லவெண்டும் என்பது நம்முடைய சமூகநீதி கருத்தியலின் அங்கமாக கூறப்பட்ட காலம் ஒன்றிருந்தது. ஆனால், இன்றைக்கு நவீன நிறுவனங்களிலேயே நிலவும் பாகுபாடுகளின் வெளிப்பாடுதான் இதுபோன்ற சாவுகளுக்கு காரணமாகியிருக்கின்றன என்பது நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. நவீன நிறுவனங்களின் செயல்படும் விதங்கள் பற்றிய விரிவான பரிசீலனை தேவைப்படும் நேரம் இது. உள்ளூரின் பாரம்பரிய சாதிய அமைப்புகள் மேற்கொண்ட ஏற்றத்தாழ்வுகள் வெளிப்படையானதாயிருக்க நவீன நிறுவனங்களில் அதே ஏற்றத்தாழ்வு மறைமுகமானதாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறதா என்பதை நாம் ஆராய வேண்டும். வெளிப்படையான பாகுபாடுகளைக் கண்டுபிடித்துவிட முடியும். மறைமுகமானவற்றை கண்டுபிடிக்க முடியாது என்பதுதான் இதிலிருக்கும் கூடுதல் அபாயம். மறைமுகமான பாகுபாடுகளாக இருப்பதால் அதைக் கண்டறியவோ, தடுக்கவோ கூடிய சட்டவிதிகளோக்கூட நம்மிடம் இல்லை.இன்றைய பிரச்சினையே அதுதான்.
கிராமப்புறத்திலிருந்தும் கல்வியற்ற பின்புலத்திலிருந்தும் சென்ற மாணவர்கள் மாண்டுபோனதற்கான காரணங்கள் வெளிப்படையானதாக இல்லை. மறைமுகமான பாகுபாடுகளுக்கு ஆதாரம் இருப்பதில்லை. எனவே, அதைப் புகாராக கொண்டுசென்றாலும் நிரூபிக்க முடியாது. எனவேதான் செந்தில்குமார் தொடங்கி முத்துக்கிருஷ்ணன் வரையில் பலரின் மரணமும் மர்மமானதாகவே இருந்துவிட்டது. காரணங்களை நிரூபிக்க முடியாமலேயே போய்விட்டது. தனிமை,வெறுமை, மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் சிக்கல்கள் அவர்களை விரட்டி தற்கொலையில் நிறுத்துகிறது என்றே சொல்ல வேண்டும்.
இடஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து பரவலாயிருக்கும் உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்துச் செல்லும் மாணவர்கள் மீது அது தொடர்பான சீண்டல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடந்த சில பத்தாண்டுகளாக உள்ளூரில் ஆதிக்கம் புரிந்துவந்த சாதியினரில் கணிசமானோர் அதிகார மட்டத்திற்கு சென்றுள்ளனர். இது மட்டுமல்லாமல் சமூக அளவிலும் அரசியல் அளவிலும் சாதி அடையாள செயற்பாடுகள் பெருகியுள்ளன. அவையெல்லாம் கல்லூரி வளாகத்தையும் பெருமளவில் பாதித்திருக்கின்றன. மாநில அளவில் உள்ள கல்வி நிறுவனங்களிலேயே ஆசிரியர்களிடையேயும் ஆசிரியர் மாணவர்களிடையேயும் சாதி சார்ந்த அணிதிரட்சி உருவாகிவிடுகின்றன. கருத்தரங்குகள், ஆய்வுத் தலைப்புகள், நிதி, மதிப்பெண் என யாவும் சாதிமயமாகியிருக்கின்றன. இவை உயர்கல்வி நிறுவனங்களில் வேறுமாதிரி செயல்படுகின்றன. அந்நிறுவங்களின் கட்டமைப்பே முதல் தலைமுறை எளிய கிராமப்புற மாணவர்களுக்கு அந்நியமானதாக இருக்கிறது. அதை தெரிந்துகொள்ளவும் அதற்கேற்ப பழகிக்கொள்ளவுமே இம்மாணவர்களின் முக்கால்வாசி படிப்புகாலம் முடிந்துபோகிறது. முதலில் அங்கு பேசப்படும் ஆங்கிலமொழியே அவனுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. ஆங்கிலத்தை நன்கு தெரிந்துவிட்டாலும், அதன் ஆய்வு மொழி,தேர்வுமுறை, மதிப்பெண், மதிப்பிடும் ஆசிரியர்கள் மாணவர்களை அனுகும் விதம் இவையெல்லாம் சேர்ந்தே அவனை சிக்கலுக்கு உள்ளாக்குகிறது. இத்தருணத்தில் உதவவேண்டிய ஆசிரியர்கள் அவனை சீண்டுதல், புறக்கணித்தல், அவமானப்படுத்துதல் என்றெல்லாம் செய்யத் தொடங்குகிறார்கள். அம்மாணவனின் சமூகப் பின்புலம் அத்தகைய ஏளனத்திற்கான வாய்ப்பை அவர்களுக்கு கொடுக்கிறது. தங்களுக்குள் சமூக அரசியல் ரீதியாக ஊறிக்கிடக்கும் வன்மங்களை வெளிப்படுத்துகிறார்கள். இவையே இன்றைய முக்கியமான பிரச்சினை.
இது போன்ற பின்தங்கிய சூழ்நிலையிலிருந்து வரும் மாணவர்களின் பின்னணியில் வைத்து அவர்களை அணுகும், புரிந்துகொள்ளும் நிலைமை குறைவாகவே இருக்கிறது. செத்தப்பின் கோசம்போடும் அரசியல் அமைப்புகளுக்கும் இவற்றையெல்லாம் வலியுறுத்தக்கூடிய தொலைநோக்குப் பார்வைகளும் இருப்பதில்லை. மாணவர்களின் இது போன்ற சிக்கல்களை அறியவோ அவர்களை ஆற்றுப்படுத்தும் அமைப்புகளோ நம் கல்வி நிறுவனங்களில் இல்லை. ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திலும் இத்தகைய பின்னணியை ஆராயும் மாணவர்கள் தங்கள் சிக்கல்களுக்காக முறையிடும் மையங்கள், ஆசிரியர்களால் மேற்பார்வையிடப்படும் ஆய்வுகள் மீதான மதிப்பீடு போன்றவற்றை தொடர் கண்காணிப்பின் கீழ் கொணரவேண்டும். குறிப்பாக ஆய்வுக்காக அரசால் தரப்படும் உதவித்தொகையை நிறுத்திவைத்தல், கையெழுத்திட மறுத்தல், தனக்கொரு பங்கை கோருதல் போன்ற முறைகேடுகள் பற்றிய புகார்களும் இருக்கின்றன. இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் இச்சாவுகளை தடுக்க முடியாது. பிறகு மாணவன் தான் சார்ந்த கிராமப்புற சூழலிலிருந்து பெயர்ந்து முற்றிலும் புதிய இடத்திற்கு வரும்போது ஏற்படும் உளவியல் சிக்கல்களையும் நாம் கணக்கெடுத்துப் பார்க்க வேண்டும். 2011ம் ஆண்டு முன்னாள் யுஜிசி இயக்குநர் தோரட் தலைமையிலான கமிட்டியால் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்கள், ஆய்வேடுகள், ஆகியவற்றில் நிலவும் பாரபட்சம் குறித்து விரிவாக அலசப்பட்டுள்ளன.
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் கனவாக கல்வியே இருக்கிறது. அம்பேத்கரை கல்விக்கான குறியீடாகவே அவர்கள் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் மீது கல்விச்சூழலே நவீன அதிகாரமாக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். சமூகம் ஜனநாயகப் பூர்வமாக இல்லாதபோது அங்கே கல்விநிலையமொன்றை திறந்தால் மாற்றத்தைக் கொணர முடியும் என்று நம் முன்னோடித் தலைவர்கள் நம்பினார்கள். ஆனால், இங்கே கல்வி அமைப்பே ஜனநாயகமில்லாமல் இருக்குமானால் நாம் என்ன செய்ய முடியும்?
ஆசிரியர் குறிப்பு
ஸ்டாலின் ராஜாங்கம், ஆய்வாளர், எழுத்தாளர்.