“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?” – ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா எழுத்தாளர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளர், த.மு.எ.க.ச- வின் மாநில துணைப் பொதுச் செயலாளர், ‘புதுவிசை’ இதழின் கௌரவ ஆசிரியர். ‘இடஒதுக்கீட்டின் வரலாறு’ குறித்து இளைஞர்களுடன் கலந்துரையாட திருநெல்வேலி வந்திருந்தார். சந்தித்தோம். தாமிரபரணிப் படுகொலை நடந்த இடம், ஆற்றில் தூண்டில்களை வீசிவிட்டு மீன்களுக்காகக் காத்திருப்பவர்கள் எங்களையும் விநோதமாகப் பார்க்கிறார்கள். அந்த இடம் எல்லாவகையிலும் உரையாடுவதற்கு ஏற்றதாக இருந்தது.
“உங்களது குடும்பப் பின்னணி மற்றும் நீங்கள் இலக்கியத்திற்குள் நுழைந்த கதையைச் சொல்லுங்கள்?”
“தாய் எம்.என். ரத்தினம்மாள், தந்தை எஸ்.கே. மாரியப்பன். இவர்களின் ஏழு பிள்ளைகளில் நான் தலைச்சன். பாரூர், கம்பைநல்லூர் ஈச்சம்பாடி, ஓமலூர் ஆர்.சி.செட்டிப்பட்டி, உத்தமசோழபுரம் என நான்கு ஊர்களோடு தொடர்பு உடையதாக எங்கள் குடும்பம் இருந்தாலும், சொந்த ஊர் எது என்பதில் உண்மையிலேயே தெளிவான குழப்பமுள்ளது எனக்கு. ரோடு போடும் வேலை செய்கிற 100 பேருக்கும் குறையாத `கேங்’கின் கொத்துக்காரி எங்கள் தாத்தம்மா மாரிமுத்தம்மாள் (தந்தைவழிப் பாட்டி). அவர் சேலம் – அரூர் ரோடு போடும்போது பாப்பிரெட்டிப்பட்டிக்கு அருகில் உள்ள அலமேலுபுரத்தில் நிலம் வாங்கியதை அடுத்து நாங்கள் அங்கே குடியேறினோம். நிலத்திலேயே வீடு – ‘காட்டுக்கொட்டாய்’ என்போம். செட்டிப்பட்டியில் தி.மு.க கிளைக் கழகத்தைத் தொடங்கியவரான அப்பா, இங்கு கொட்டாயின் கூரையில் ஒசக்க மூங்கில் நட்டு தி.மு.க கொடியை ஏற்றியிருந்தார். அந்த வட்டாரத்தில் அப்போது அது அதிசயம்போல பேசப்பட்டது. இந்தப் புதிய ஊருக்கு எங்களைத் தேடிவரும் ஒறம்பரைகள் கொடியை அடையாளம் பிடித்துதான் கொட்டாய்க்கு வந்துசேர்வார்கள்.
எம்.ஜி.ஆருடன் தொடர்பிலிருந்தவர் அப்பா. எம்.ஜி.ஆர். சுடப்படாமல் இருந்திருந்தால் 1967 சட்டமன்றத் தேர்தலில் ஓமலூர் தொகுதியில் போட்டியிட தனக்கு சீட் கிடைத்திருக்கும் என்பார். படித்த பையனாக இருக்கிறான் நமக்குக் கட்டுப்படமாட்டான் என்று கருதிய ஆதிக்கவாதிகள் சிலர், அண்ணாவிடம் பேசி வேறொருவருக்கு சீட் வாங்கிக் கொடுத்து ஜெயிக்கவைத்தார்களாம்.
எம்.ஜி.ஆர், தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டபோது அப்பா தன்னைத்தானே வெளியேற்றிக்கொண்டு தி.மு.க கொடியை இறக்கிவிட்டார். அவரும் அவரது நண்பர்களும் இரவில் எங்களது ரோட்டோரத்து சோளக்காட்டில் மறைந்திருந்து திருவள்ளுவர் பஸ்கள்மீது கல்வீசி எதிர்ப்பைத் தெரிவித்தார்கள்.
அ.தி.மு.க. கொடியைப் பச்சைக்குத்திக் கொண்ட முதல் தலைமுறையினரில் அவரும் ஒருவர். 1977-ல் அரூர் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் அவர்தான் என்றிருந்த நிலையில், அந்தத் தொகுதி கூட்டணிக் கட்சியான சி.பி.எம்-முக்குப் போய்விட்டது. ‘என் சீட்டைப் பிடுங்கினதுமில்லாமல் மகனையும் கூட்டிக்கிட்டீங்களே’ என்று சந்தர்ப்பம் கிட்டும்போதெல்லாம் தோழர்களிடம் பொய்க்கோபம் காட்டுவார்.
இந்தக் காலத்தில்தான் தாத்தம்மா தன் வேலையை நிறுத்தி ‘கேங்கை’ கலைக்க வேண்டியிருந்தது. அப்பாவின் புதிய குடிப்பழக்கம் அப்போது உச்சத்திற்குப் போயிருந்தது. ஒரு குடும்பம் திடுமென அப்படியொரு வறுமைக்குள் வீழுமா என்று இப்போது நினைத்தாலும் திக்கென்றாகி கண்ணீர் முட்டுகிறது. அம்மாவழி தாத்தா அந்த நேரத்தில் எங்களைத் தாங்கிக் கொண்டார். 20-வது வயதில் தொலைத் தொடர்புத்துறையில் மணிக்கு 80 பைசா கூலியில் வேலை கிடைத்து.தேன்கனிக்கோட்டையில் சேர்ந்தேன். தொழிற்சங்க வேலைகளுக்காக 1986 டிசம்பரில் ஒசூருக்கு மாற்றல் கேட்டுவந்து 30 வருடங்களாகிவிட்டன.
1993 நவம்பர் 19-ல் மீனாவதியுடன் திருமணம். அன்றைக்குக் குடியை நிறுத்திய என் தந்தை சாகும்வரைத் தொடவேயில்லை. மகள் தீட்சண்யா, இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு
ரிசர்ச்-ல் படிக்க போபால் போய்விட்டாள். அவளிடத்திற்கு மீனாவின் தங்கை மகன் அபிசரன் வந்து சேர்ந்திருக்கிறான்.”
“நீங்கள் இலக்கியத்திற்குள்,இடதுசாரி கருத்தியலுக்குள் எப்படி வந்தீர்கள்?”
“தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் முதலாண்டு படிக்கும்போது விடுதி மாணவர்களுக்கு இடையில் சாதியடிப்படையில் கடுமையான மோதல். (இது பற்றி விகடன்.காமில் ‘ஒசூர் எனப்படுவது யாதெனில்’ தொடரில் விரிவாக எழுதியுள்ளேன்) அப்போதுதான் என்னுடன் படித்த எஸ்.திருப்பதி மூலமாக தோழர்.டி.சண்முகத்தின் தொடர்பு கிடைத்தது. அவர் வழியாகத்தான் இலக்கியத்திற்குள்ளும் இடதுசாரி கருத்தியலுக்குள்ளும் வந்து சேர்ந்தேன். இந்திய மாணவர் சங்கத்திலும் தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சங்கத்திலும் போர்க்குணத்தோடு வேலை செய்வதற்கும்கூட அவரது தோழமையே வழிவகுத்தது.”
“எப்போது உங்களை ஒரு கதைசொல்லியாக முதன்முறை உணர்ந்தீர்கள்?”
“ ‘நடமாடும் கதைக்கூடமாய் வாழ்ந்த எங்கள் தாத்தா பாட்டிகிட்டேயிருந்து பிதுரார்ஜிதமாகச் சுவீகரித்துக்கொண்ட கதைகள், எழுது எழுது என்று என்னை நெட்டித் தள்ளிய தருணத்தில்…’ என்கிற மரபான பொய் இந்தக் கேள்விக்கு அலங்காரமான பதிலாக இருக்கும். ஆனால், அன்றாடம் காடுகாடாகவும் ரோடுரோடாகவும் அல்லாடி உழைத்துக் களைத்து, கருக்கலில் வீடு திரும்பி உசோன்னு உடம்பைச் சாய்க்கிற வாழ்வைக் கொண்டிருந்த எங்கள் தாத்தாக்களும் தாத்தம்மாக்களும் எங்களுக்குக் கதையேதும் சொல்லிச் சென்றதாக நினைவிலில்லை. அவர்களாலும், அவர்களைப் பற்றியும் சொல்லப்படாத கதைகளைச் சொல்லியாக வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் துளிர்த்த தருணம் பற்றிய துல்லியமான காலக்குறிப்பு என்னிடம் இல்லை. ஃப்ளாஷ் என்கிற எனது முதல் கதை ‘செம்மல’ரில் பிரசுரமானதை ஒரு தொடக்கம் எனக் கொண்டால், அது நிகழ்ந்தது 1985-ம் ஆண்டு.”
“அனைத்தையும் நையாண்டி செய்யும் மனதையும் மொழியையும் எப்படி,எங்கிருந்து பெற்றீர்கள்?”
“அனைத்தையும் நையாண்டி செய்துவிட முடியாது; கூடாது. ஆனால், நையாண்டி செய்யத் தகுந்த அளவுக்கு இழிந்திருப்பவற்றைக் கொண்டாடி, தப்பவிடக் கூடாது. அந்த வகையில் இந்தச் சமூகத்தில் பரிகசிக்கத்தக்கவிதத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ள குடும்பம், கடவுள், மதம், சாதி, அரசு போன்றவை எனது தாக்கிலக்குகள். அவற்றின் மீது பூசி மெழுகப்பட்டுள்ள புனிதம், சாசுவதம், பெருமிதம், அதிகாரம் போன்றவற்றின் பொக்கைத்தனத்தை உணரக்கூடிய எவருக்கும் ஏற்படும் குமட்டலையே நான் எழுதுகிறேன். வலுவாக உள்ள எதிரியை முதலில் உளவியல்ரீதியாக நிலைகுலையச் செய்யும் உத்திதான் எனது நையாண்டி. அதிகாரத்திற்கு எதிராக எளிய மக்கள் ஏந்தும் வலிய ஆயுதம் பகடி. அவர்கள் புனைந்து வைத்துள்ள கதைகள், விடுகதைகள், பழமொழிகள், பாடல்கள், கேலிக் குறியீடுகளில் திளைத்துதான் எனது மனமும் மொழியும் உருவாகியிருக்கின்றன.”
“ஒரு நல்ல படைப்பிற்கான வரையறை என்ன?”
“குறிப்பிட்ட ஒன்றை எழுதும்படியாக என்னை எது தூண்டுகிறதோ, அதனை அதிகபட்ச சாத்தியங்களோடு எழுதிப் பார்ப்பதே.”
“நீங்கள் ஒரு கதையை எழுதும் ‘ப்ராசஸ்’ பற்றிச் சொல்ல முடியுமா?”
“எதுவொன்றிலிருந்தும் ஒரு கதையை என்னால் கண்டுகொள்ள முடிகிறது. ஆனால், அதை உடனே எழுதிவிடுவதில்லை. அது தொடர்பாக எனக்குள் இருப்பவற்றை முதலில் தொகுத்துக்கொள்வேன். கதையின் சட்டகம் பிடிபடுகிறது. இப்போது அதற்கு இசைவானதாக எதையேனும் படிக்கவோ பார்க்கவோ தேவையெனில், அதைச் செய்வேன். பிறகு எழுதத் தொடங்குகிறேன். தொடர முடியாத நிலையில் ஏற்கெனவே எழுதப்பட்ட பகுதியைத் திரும்பத் திரும்ப வாசிப்பேன். அதிலிருந்து ஓர் இழையைப் பிடித்துக்கொண்டு மிச்சத்தை எழுதி முடிப்பேன்.”
“இன்றைய நவீன இலக்கியத்தின் நற்போக்காகவும் பிரச்னையாகவும் எவற்றைப் பார்க்கிறீர்கள்?”
“சமூகநீதியின் ஓர் அங்கமாகக் கல்வி கற்கும் உரிமைக்கான போராட்டத்தில் சமூகத்தின் பல்வேறு அடுக்கினரும் காலத்திற்குக் காலம் அடைந்துவரும் வெற்றியானது, கலைஇலக்கியத்தில் நிலவிவந்த ஏகபோகங்களைக் கடுமையாகச் சிதைத்து வருகிறது. புத்தம்புதிதான வாழ்வனுபவங்களும், நிலப்பரப்புகளும், பருவங்களும், மாந்தர்களும், கேள்விகளும், சொல்லாக்கங்களும் இலக்கியப் பரப்புக்குள் வெள்ளமெனப் பாய்வதற்கான வெளியை அது உருவாக்கியுள்ளது. ஆனால், இப்படி எல்லாத் தரப்பிலிருந்தும் எழுத வந்ததே சனநாயகத்தன்மை ஆகிவிடாது. ‘சனநாயகம் என்பது சக மனிதர்களோடு இயைந்து வாழும் ஒரு பண்பு’ என்பார் அம்பேத்கர். ஆனால், இப்போதைய ஆக்கங்களில் பலவும் குடும்பம், சாதி, வட்டாரம், பால்மை சார்ந்த தொடக்கநிலைக் கண்ணோட்ட த்தையும் மதிப்பீடுகளையும் தாண்டாமல் முடங்கித் தேங்கியுள்ளன. பயன்பாட்டுக் கருவிகள் அதிநவீனமாகவும், சிந்தனையும் மதிப்பீடுகளும் அரதப்பழசாகவும் கொண்டிருக்கிறவர்களின் மத்தியிலிருந்து வருகிற கலைஇலக்கியவாதிகளும் அதேரீதியில் இருக்க வேண்டியதில்லை.”
“தற்காலப் பிரச்னைகளை மையமாகக்கொண்டு உடனடியாக எதிர்வினை செய்யப்படும் படைப்புகள் இரண்டாம் தரமானவை அல்லது தூய இலக்கிய மதிப்பு அற்றவை என்கிற பார்வையை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?”
“கொஞ்சமாவது மாவு புளித்தால்தான் இட்லி பதமாக வரும் அல்லது புளித்த கள்ளில் போதை அதிகம் என்கிற தர்க்கத்தை இலக்கியம் வரைக்கும் இழுத்து வரணுமா? சமகாலப் பிரச்னைகளை எவ்வளவு காலம் ஒத்திப்போட்டு ஊறவைப்பது தரமான எழுத்துக்கு ஆதாரம்? நம் கண்முன்னே நடப்பவற்றை உள்வாங்கி ஒரு படைப்பாக வெளிப்படுத்தும் மனநிலையை எய்த முடியாதவர்கள் இப்படியொரு வியாக்கியானத்தால் தம்மை நியாயப்படுத்திக்கொள்கின்றனர். காலம் எழுப்பும் சவால்களை நேருக்குநேர் நின்று எழுதினால் உதை விழும், சிறை வரும், உயிரும் போக்கடிக்கப்படும் என்கிற பயந்தோடிகளுக்கும் ‘தற்காலத்தை எழுதக் கூடாது’ என்கிற வாதம் ஒரு கவசமாக இருக்கிறது. அவர்களது ‘தூய இலக்கிய மதிப்பை’ உதிர்த்துப் பார்த்தால் அது புனிதம், தீட்டு, உயர்வு, தாழ்வு, தகுதி, திறமை, என்பதான சாதியவாதத்தில் ஊறி நொதித்தக் கலவை என்பதை அறிவோம். சங்க இலக்கியத்தின் ஊடாகச் சங்ககால வாழ்வை அறிகிறோம் எனில், 2017-ன் இலக்கியத்தை 2017-ன் வாழ்வை துள்ளத்துடிக்க அதன் சகலப் பரிமாணங்களோடும் சாத்தியங்களோடும் எழுதுவதுதானே சரி?”
“உங்களது சிறுகதைகளை ‘சமூக மிகை புனைவுக் கதைகள்’ (social fantasy stories) என்று அழைக்கலாமா?”
“மிகைப்படுத்தலுக்கு எவ்வித அவசியமும் இன்றியே சமூகம் இயற்கையிலிருந்து அன்னியமாகியபடியும் மனித மாண்புகளை இழந்ததாகவும் மிருகங்களும் நாணும்படியான மூர்க்கத்தோடும் அதிகாரச் செருக்கேறியதாகவும் சக மனிதர்களை ஒடுக்கிச் சுரண்டுவதாகவும் இழிந்துகொண்டிருக்கிறது. தனது வளர்ச்சிக்கு என உருவாக்கிக்கொண்ட கருத்தியல்களையும் நிறுவனங்களையும் குறுகிய ஆதாயங்களுக்காக நிர்மூலமாக்கிக்கொண்டுள்ளது. மக்களுக்காக அரசு என்ற நிலை மாறி, அரசுக்காக மக்கள் என்கிற தலைகீழாக்கம் அச்சமூட்டுகிறது. இப்படி யெல்லாம்கூட நடக்குமா என்று திகைத்துப்போகும் அளவுக்கு நடப்பு உண்மைகள் உள்ளன. அவற்றில் ஒரு விள்ளலை என் கதைகள் உங்களது கண்மட்டத்திற்கு கொண்டுவந்து காட்டுகின்றன. அவ்வளவு கிட்டத்தில் திடுமெனப் பார்ப்பதால் ஏற்படும் அதிர்ச்சியை நீங்கள் மிகைப்படுத்தலாக மதிப்பீடுகிறீர்கள். என் கதைகளில் நீங்கள் காண்பவை சமூகத்தின் கவனத்திற்குத் தப்பிய அதியுண்மை களே. மிகைப்படுத்துதல்கள் அல்ல.”
“ஒரு படைப்பாளியாக யாருடைய தொடர்ச்சி நீங்கள்?”
“வாய்க்குள் அடங்காத தெற்றுப்பல் அல்லது நைந்த காலுறையின் பொத்தலில் துருத்திக்கொண்டு வெளித்தெரியும் விரல் என்பதான ஒரு சித்திரம்தான் என்னைப்பற்றி எனக்குள் இருக்கிறது. அது அப்படியே தொடரட்டுமே.”
“ ‘மீசை என்பது வெறும் மயிர்’ நாவலின் வடிவத்திற்கான ஐடியாவை எப்படிப் பெற்றீர்கள்? வாசகர்களிடம் அதற்கான ரெஸ்பான்ஸ் எப்படி இருந்தது?”
“ஒவ்வொரு ஓவியமும் ஒரு கித்தானுக்குள் வரைந்து முடிக்கப்பட்டுவிடுகிற திட்பத்தை, எழுத்தின் வழியே சாதிக்க முடியுமா என்பதுதான் ஓர் எழுத்தாளருக்குரிய சவால். முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய இடம் வந்துவிட்ட பிறகு, அதைத் தாண்டிக் குதிக்கும் சாகசங்களை நான் ஒருபோதும் மேற்கொள்வதில்லை. தவிரவும், தலையணை தயாரிப்பது இலக்கியத்திற்கு அப்பாலுள்ள வேறு துறைசார்ந்த தொழில் (சிரிக்கிறார்).
‘புனைவு என்பது இரண்டு அட்டைகளுக்கு நடுவே தொடங்கி முடிவதல்ல… அது முன்னட்டையின் மேல் நுனியிலேயே தொடங்கி பின்னட்டையின் ஈற்றிலே முற்றுப் பெறுகிறது…’
‘புனைவு என்பது தன்னுடைய அல்லது அக்கம்பக்கத்தாருடைய வாழ்க்கைச் சம்பவங்களைத் தேதியையும் இடத்தையும் பெயர்களையும் மாற்றிப்போட்டு எழுதுவதல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்…’ – நாவலுக்குள் வரும் இந்த வரிகளே நாவலை எழுதியதற்கான எனது அடிப்படையை விளக்கப் போதுமானது.
நாவலைப் படித்த பலரும் அது நந்தஜோதி பீம்தாஸ் என்பவரைப் பற்றிய நூல் என்றே நம்பினார்கள். அவரைப் பற்றி இதுவரை அறிந்துகொள்ளாமல் இருந்ததற்காகக் குற்றவுணர்ச்சி கொண்டார்கள். ‘இன்றிரவு நாம் ஏன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்ளக் கூடாது?’, ‘கனவில் துரத்தும் குளம்பொலி’, ‘மீன் குடித்து வற்றிய கடல்’, ‘பாதரசத் திவலையை யார் விழுங்கப் போகிறீர்?’ ‘இருளில்தானே இருந்தோம் இதற்கு முன்னும்’ ஆகிய அவரது நூல்களையும் அவர் வசிப்பதாகக் குறிப்பிடப்பட்ட தீவையும் இணையத்தில் தேடிச் சலித்திருக்கிறார்கள். வெளிநாடு வாழ் நண்பர்களிடம் அந்தப் புத்தகங்களை வாங்கியனுப்பும்படி கேட்டிருக்கிறார்கள். பீம்தாஸை இந்தியாவுக்கு அழைத்துவந்து சில நிகழ்வுகளில் பேசுவதற்கு ஏற்பாடு செய்து தர முடியுமா என்று கேட்டவர்களும் உண்டு. ஜெர்மனிக்குப் போய்வந்த சிலர் ஈஜின் நிலவறை நூலகத்தையும் பீம்தாஸையும் காணாமல் வந்ததற்காகத் தம்மைத் தாமே நொந்துகொண்டார்கள். அவரோடு விவாதிக்க விரும்பியவர்களுக்கு அவரது மகள் செல்லக்கிளி பெயரில் நான் உருவாக்கிவைத்திருந்த மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்தேன். நிறையக் கேள்விகளை அனுப்பியிருந்தார்கள். எனது மரியாதைக்குரிய தோழர் எஸ்.வி.ராஜதுரையை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட நந்தஜோதி பீம்தாஸை, ஓவியர் கார்த்தி தனது மாமனார் திரு.அரசு சாயலில் வரைந்திருந்தார். அவரது முகத்தில் ஏதேதோ படித்திருக்கிறார்கள்.
ஒருகட்டத்தில் பீம்தாஸ் என்பவர் நந்தன், ஜோதிராவ் பூலே, பீமாராவ் அம்பேத்கர், அயோத்திதாசர் ஆகிய நால்வரின் கூட்டுக்கலவையில் உருவாக்கப்பட்ட கற்பனைப் பாத்திரம் என்று சொன்னபோது நம்புவதற்கு பலரும் தயங்கினார்கள். ‘அட்டை முதல் அட்டை வரை நான் புனைந்தெழுதிய நாவல் இது’ என்பதை நம்பவைக்க நானே சிரமப்பட வேண்டிய தாயிற்று. இந்தச் செய்தி கிடைக்கப்பெறாமல் வாசிப்பவர்கள் இப்போதும்கூட பீம்தாஸை விசாரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த நிலைமை வாசகரைக் குழப்பத்தில் ஆழ்த்த ஏற்படுத்தப்பட்டதல்ல. அந்த அளவுக்கு நம்பகமாக எழுத வேண்டும்; முடியும் என்பதுதான்.
நாவலின் அமைப்பு பற்றிப் பேசிய அளவுக்கு அதன் உள்ளடக்கமும் பேசப்பட்டது. நாவலை அல்லது நாவலுக்குள் வரும் ‘சுத்த ரத்தத்தில் அழுகும் தொப்புள் கொடி’ என்கிற பகுதியையாவது திரைப்படமாக்கப்போவதாகக் குறைந்த பட்சம் பத்துப் பேர் உணர்ச்சிவசப்பட்டுச் சொன்னார்கள். பிறகு பத்துப் பேரும் இயல்புக்குத் திரும்பி பீம்தாஸைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.”
“1990 -ல் தமிழ் இலக்கியத்தில் எழுந்த ‘தலித் அலை’ சாதித்ததாக நீங்கள் கருதுவது என்ன? அதேபோல, இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டிய ஏதேனும் தவறிவிட்டது என நினைக்கிறீர்களா… அப்படியெனில் அது என்ன?”
“ஓர் ஒடுக்குமுறை அதற்கான எதிர்ப்பையும் சேர்த்தே உருவாக்குகிறது. ஆகவே, சாதியத்திற்கும் அதை எதிர்க்கும் கருத்தியலுக்கும் ஆயுள் ஒன்றேதான். வள்ளுவம், ஆத்திச்சூடி, மணிமேகலை, சீவகசிந்தாமணி, நன்னூல், சித்தர் பாடல்கள் ஆகியவற்றில் இந்தக் கருத்தியலை இனங்கண்டு சொல்லியிருக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர். முனைவர் கோ.ரகுபதி ‘பறையன் பாட்டு- தலித்தல்லாதார் கலகக்குரல்’ என்றொரு நூலைக் கொண்டுவர இருக்கிறார். 1923 தொடங்கி கடந்த நூற்றாண்டு நெடுகச் சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிராகக் கோனார், நாடார், இஸ்லாமியர் என பலபட்டறையினர் இயற்றிய பாடல்களின் தொகுப்பு அது. லி.ரா. என்பவர் எழுதி 1933-ல் ‘ஆனந்தபோதினி’ இதழில் வெளியான ‘ரயில் பிரயாணம்’ என்கிற கதை, பொதுவெளியைப் பிறரோடு பகிர்ந்துகொள்வதில் பார்ப்பனர்களுக்கு உள்ள மனத்தடையையும் அதற்கு எதிரான குரலையும் காட்டுகிறது. அதே ஆண்டில் பம்மல் சம்பந்த முதலியாரின் ‘பிராமணனும் சூத்திரனும்’ நாடகம் சாதியத்தை மிகக் கடுமையாகச் சாடுகிறது. நூற்றாண்டு காணும் தமிழ்ஒளியின் எழுத்துகளில் கூர்மையாக வெளிப்படும் சாதி எதிர்ப்புக் கருத்தியல் இன்றைக்கும் ஆவேசம்கொள்ளச் செய்கிறது. அவரது ‘வீராயி’ காவியத்தை நாடகமாக்கியுள்ள பிரளயன், அதன் தற்காலப் பொருத்தப்பாட்டை விதந்துரைக்கிறார்.
அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டுக் கொண்டாட்டங்களின் உந்துதலால், 1990-களில் எழுதவந்த பட்டியல் சாதியினரின் ஆக்கங்களில் பெரும்பாலானவை இதுவரை சாதியம் தமக்கு இழைத்தக் கொடுமைகளைப் பேசியவை. ஒவ்வொரு 18 நிமிடங்களுக்கும் ஒரு சாதிய வன்கொடுமையை நிகழ்த்திவிட்டு, எதுவுமே நிகழாததுபோல அகிம்சை, ஆன்மிகம் என்று மினுக்கித் திரியும் இந்தச் சமூகத்தின் மனசாட்சியை இப்படியான நெக்குருகும் மன்றாடல்கள் மூலம் உலுக்கிவிட முடியாது.
நிலவும் யதார்த்தத்தை – சமூக ஒழுங்கை இப்போதைக்கு இலக்கியத்திலாவது குலைத்துப்போட வேண்டும். அதற்கு, சாதியொழிப்பை, சமத்துவ வாழ்வை ஒரு முதன்மை நிகழ்ச்சிநிரலாக முன்னெழுப்புவதன் நியாயத்தையும், தேவையையும், நிர்பந்தத்தையும் தரவல்ல ஆக்கங்களே தலித் இலக்கியமாக இருக்க முடியும் என்கிற குறைந்தபட்ச அரசியல் புரிதல் தேவை.”
“தத்துவம் சார்ந்த உரையாடல் தமிழகச் சூழலில் சுணங்கிவிட்டதா?”
“இல்லை. ‘உலகையும் உன்னையும் படைத்தது கடவுள்’, ‘கடவுள் நினைத்ததை மனிதர்களால் மாற்ற முடியாது’, ‘கடவுளை ஆன்மா நெருங்குவதே வாழ்வின் சாரம்’ என்பதாகக் கடவுளின் காலடியில் மனிதர்களை வீழ்த்துகிற ஆன்மிக குடோன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதேகூட, இந்த உரையாடல் இங்கு முனைப்பாக நடந்து வருவதன் அறிகுறி என்றுதான் கருதுகிறேன். ஆக்கலும் காத்தலும் அழித்தலும் நானே என்று மமதையுடன் இருந்த கடவுள், முதன்முதலாகத் தற்கொலை செய்துகொண்டவரின் பிணத்துக்கு முன்னே மண்டியிட்டுத் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு களத்திலிருந்து வெளியேறிவிட்டார். இயற்கையை, மனிதச் சமூகத்தை, மனத்தகவமைப்பை, பொருளியல் உறவுகளை, அரசியலை, வரலாற்றை, உலகியல் நடப்புகளை உருவாக்குவதிலும் செயல்படுத்துவதிலும் கடவுளுக்கு வழங்கப்பட்டு வந்த மகிமைமிகு பாத்திரம் கடும் அரிமானத்திற்குள்ளாகி வருகிறது. இவற்றுக்கு இடையேயான தொடர்பை, தொடர்பின்மையை, தனித்தன்மையை, மாற்றங்களை ஆய்ந்தறிந்து விளக்கும் பணி இப்போதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. சூரியனுக்குக் கீழுள்ள அனைத்தையும் விவாதிப்போம் என்பது சூரியனையும் சேர்த்தே விவாதிப்பதாக வளர்ந்துள்ளது. அணு முதல் அண்டம் வரை அனைத்தையும் விளங்கிக் கொள்வதற்கு மனிதர்கள் மேற்கொண்டுள்ள எத்தனங்களுக்குக் கடவுளின் ஆசியுண்டு என்பதான புருடாக்களைக் குறுநகையுடன் கடந்துகொண்டிருக்கிறோம்.”
“தனிமனித வாழ்க்கையில் ஒரு மனிதனுக்கு ஆன்மிகத் தேவை உண்டு என்பதை நீங்கள் ஏற்கவில்லையா?”
“தன்னையறிவது, இல்லையில்லை கடவுளை அறிவது, கடவுளையும் கடப்பது, எதுவுமற்று இருப்பது, எதுவாகவும் இருப்பது என்று ஆன்மிகம் பற்றி ஆயிரத்தெட்டு வியாக்கியானங்கள். லௌகீக வாழ்விலிருந்து ஒதுங்குவதே ஆன்மிக வாழ்வாம். எல்லாவற்றிலிருந்தும் ஒதுங்கி ஏகாந்த வெளியில் சஞ்சாரம் செய்தாலும் மூவேளை தின்பதற்கும் மூத்திரம் வந்தால் பெய்வதற்கும் தரையிறங்கத் தவறுவதில்லை. நான் யார், எங்கிருந்து வந்தேன், பிறப்பதற்கு முன்பு என்னவாக இருந்தேன், என் வாழ்வின் போக்குகளைத் தீர்மானிப்பது யார், எது, இறப்பிற்குப் பிறகு நான் என்னவாக இருப்பேன் என்று ஆன்மிகத்தில் புழங்கும் கேள்விகள் அரதப்பழசானவை. சமூக நிகழ்வுகளின் மீது வினையாற்றாமல் பாவனையான கேள்விகளை எழுப்பிக்கொண்டு சக மனிதர்களிடமிருந்து ஒதுங்கும் சுயநலப் பிண்டங்களாக மனிதர்களை மழுங்கடிக்கும் இவ்வகை ஆன்மிகம் யாருக்குத் தேவை? சாந்தம் நிம்மதி என்பதெல்லாம் அரூபமான ஒரு மனநிலை. ஆனால், திட்டவட்டமான ஒரு பண்டத்தைப்போல ஆன்மிகக் குருக்கள் அதை விற்கிறார்கள், காசுள்ளவர்கள் அதை வாங்கிட அலைகிறார்கள். நான் இவர்களிடமிருந்து வெகுதூரம் விலகி நிற்கிறேன்.”
“ஆன்மிகம் என்ற சொல் முழுவதுமாக மதமயப்படுத்தப்பட்டுவிட்டதுதான். ஆனால், கடவுள், மதங்கள் தவிர்த்த ஆன்மிக உணர்வு என்று ஒன்றே இல்லை என்கிறீர்களா? புத்தனை, பௌத்தத்தை இங்கே எப்படிப் பொறுத்துவீர்கள்? மேலும், தனிமனிதனின் ஆன்மிக உணர்வினைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாதது மார்க்ஸியத்தின் ஒரு பிரச்னையாகவும் சொல்லப்படுகிறேதே?”
“புத்தனின் ஆன்மிகம் தனக்குள் ஒடுங்கிப் போவதற்கானதல்ல. அது வேதமயப்பட்ட சடங்குகளையும் உயிர்ப்பலிகளையும் புரோகிதச் சுரண்டலையும் தடுத்து நிறுத்தி அன்பையும் சமத்துவத்தையும் போதித்து ஒரு புரட்சியைத் தொடங்கிவைத்தது. துன்பத்தில் உழலும் மனிதர்களை ஆற்றுப்படுத்துவதிலும் விடுதலை பெற்ற மனிதர்களைக் காண்பதினாலும் ஏற்படும் மனநிறைவையே புத்தன் ஆன்மிகமாகக் கண்டான். பள்ளிகளை உருவாக்கி மக்களை அறிவூட்டம் பெறச்செய்வதே சமணர்களின் ஆன்மிகமாக இருந்தது. சாதியத்தையும் உருவவழிபாட்டையும் மறுத்த சித்தர்களின் ஆன்மிகம் மக்கள் நலன் சார்ந்தது. அதனால்தான், அவர்கள் உயிர்காக்கும் மருத்துவத்தை உருவாக்கினார்கள். வாடிய பயிரைக்கண்டு வாட்டமுறும் கருணையில் இருக்கிறது வள்ளலாரின் ஆன்மிகம். மக்களை அண்டவிடாமல் விரட்டிவிட்டுத் தனிமைக்கூண்டுக்குள் தியானம் செய்வதே ஆன்மிகம் என்கிற பம்மாத்தெல்லாம் பிற்காலத்தில் வந்தது. மனிதகுலத்தின் உழைப்பிலும் அறிவிலும் செய்திறனிலும் கலையுணர்ச்சியிலும் விளையும் அனைத்தையும் துய்ப்பதற்கான ஒரு வாழ்வையே மார்க்ஸியம் வாழ்க்கை என்கிறது. ஆன்மிகம் என்று ஏதேனும் ஒன்று இருக்குமானால் அது மார்க்ஸியம் முன்மொழிகிற இந்த திளைப்பான வாழ்வின் மூலம் அடையக்கூடிய மனநிலையே. ஆனால், அப்படியான வாழ்வை உருவாக்க வக்கில்லாத, அணா பைசாவுக்குள் மனிதர்களை முடக்கிப்போடுகிற சொத்துடைமைச் சமூகமோ ஆன்மிகம் என்பதை உனக்குள் எப்படியாவது தோண்டி எடுத்துக்கொள் என்று தனிநபர் பொறுப்பாக்கிவிட்டு நழுவியோடுகிறது.”
“நிர்வாணப் போராட்டம் முதல் மலம் தின்னும் போராட்டம் வரை அன்றாடம் நடத்தப்பட்டு வருகிறது. போராட்டங்களை உரிய வகையில் அரசு கண்டுகொள்கிறதா?”
“ ‘ஒரு கட்சிக்கு மிருகபலத்தைக் கொடுத்துவிட்டு, அதனிடம் மனிதத் தன்மையை எதிர்பார்ப்பது வீண்’ என்று முன்பொருமுறை நான் எழுதியதை இங்கு நினைவுபடுத்துகிறேன். எவ்வளவு நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடினாலும் பொருட்படுத்தாத இறுமாப்பில் ஓர் அரசாங்கம் தடித்தோலுடன் திரியும்போது, மனித மாண்புகளுக்குக் கீழான வடிவங்களில் நாம் போராடுவது அவசியமற்றது. ஆட்சியாளர்களை நிர்பந்திப்பதற்குப் பதிலாக, அவர்களது கவனத்தை ஈர்த்தாலே போதும் என்கிற நோக்கமே குறைபாடுள்ளதுதான். விவசாயிகள் ஏன் மலம் தின்ன வேண்டும்? விவசாயத் தொழிலாளர்களைத் தஞ்சைப் பகுதியில் அணிதிரட்டிய மகத்தான தலைவர்களில் ஒருவர் தோழர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன். அவரும் அவரது தோழர்களும், அதிகார மமதைக்கும் ஒடுக்குமுறைக்கும் பேர் பெற்ற நீதிபதிகள், பண்ணையார்கள், அவர்களது கைக்கூலிகளின் மீது மலப்பொட்டலத்தை வீசியும் அவர்களது வீடுகளில் மலக்கரைசல் நிரம்பிய பானைகளைப் போட்டுடைத்தும் பணியச் செய்திருக்கிறார்கள். அவர்களது போராட்ட பாரம்பர்யத்தைப் பின்தொடர விரும்புகிறவர்கள், அவரது நூலில் இடம்பெற்றுள்ள இந்தக் கரைசலுக்கான செய்முறைக் குறிப்பைக் கட்டணமின்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.”
“ ‘இந்துத்துவ அம்பேத்கர்’ என்பவர் யார், புதிதாக இருக்கிறாரே?”
அம்பேத்கரைப் பொறுத்தவரை, ஆரியர்கள் இந்தியாவின் பூர்வகுடிகள் அல்லர்; வெளியே இருந்து வந்தவர்கள். பூர்வகுடிகளாகிய நாகர்களை அழித்தொழித்தவர்கள்; குதிரைகளையும் பசுக்களையும் யாகத்தில் பொசுக்கி உண்பவர்கள்; அவர்களது வேதங்களும் புராணங்களும் இதிகாசங்களும் அப்பட்டமான புளுகுமூட்டைகள்; கடவுளர்களும் ரிஷிகளும் ஆபாசத்தின் உறைவிடங்கள்; வர்ணம் வழியாகச் சமூகத்தை இணக்கம் காண முடியாதபடிக் கூறுபோட்டவர்கள்.
பார்ப்பனர்கள், வர்ணம் சாதியாகவும் உட்சாதியாகவும் சிதைவதற்கு வழிவகுத்தவர்கள். சாதித் தூய்மையைப் பாதுகாக்கக் கலந்துண்ணுதலையும் கலப்புமணத்தையும் தடுத்தவர்கள். அகமண முறையைப் புகுத்தியவர்கள். யாகங்கள், சடங்குகள், மூடநம்பிக்கைகள் வழியே சமூகத்தைச் சுரண்டியவர்கள். பவுத்தத்தை ஒழித்தவர்கள். மனுஸ்மிருதி என்கிற சட்டத் தொகுப்பின் மூலம் சமூக மேலாதிக்கத்தை நிறுவிக்கொண்டவர்கள். புனிதம், தீட்டு, உயர்வுதாழ்வு அடிப்படையில் ஒதுக்குவதையும் ஒதுங்குவதையும் கைக்கொண்டவர்கள். நாடு அடைந்திருக்கும் எல்லா இழிநிலைகளுக்கும் அவர்களது குறுகிய நோக்கிலான சிந்தனையும் செயல்களுமே காரணம்.
தீண்டத்தகாதவர்கள் இந்துமதத்தின் ஓர் அங்கமாக ஒருபோதும் இருந்திராதவர்கள்; அவர்கள் தனிக்கூறானவர்கள். பூர்வ பௌத்தர்கள். பார்ப்பன மேலாதிக்க மீட்டுருவாக்கத்தால், தாழ்நிலைக்கும் தீண்டாமைக்கும் தள்ளப்பட்டவர்கள். அவர்கள் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு இந்து மதத்திலிருந்து வெளியேறுவதே முன்நிபந்தனை… மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார் அம்பேத்கர்.
பார்ப்பனர்களின் மேலாதிக்கம் வரம்பின்றிக் கோலோச்சிய கடந்தகாலத்திற்கு இந்தியாவைக் கடத்திப்போகும் கபடமே பார்ப்பனீயம். இந்தப் பார்ப்பனீயமே இந்துத்துவம். இந்தப் பார்ப்பனீயத்தை சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றின் எதிர்மறை என்கிறார் அம்பேத்கர். அவர் காந்தியின் உயிரைக் காப்பாற்றியவர். இந்துத்துவாவினரோ காந்தியைக் கொன்றவர்கள். அம்பேத்கரால் கடுமையாகச் சாடப்பட்ட ஹிட்லரோ, இந்துத்துவாவினருக்கு வழிகாட்டி. தொழிலும் நிலமும் அரசுடைமையாக்கப்பட வேண்டும்; இந்துப் பெண்கள் சட்டத் தொகுப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற அம்பேத்கரின் நிலைப்பாடுகளில் இந்துத்துவம் எதிர்நிலை கொண்டுள்ளது. இதில் ‘இந்துத்துவ அம்பேத்கர்’ எங்கே இருக்கிறார்? (சிரிக்கிறார்)
“அம்பேத்கரும் கம்யூனிஸ்டுகளும் ஒன்றுபடும் புள்ளி எது?”
“பார்ப்பனீயத்தையும், முதலாளியத்தையும் இரட்டை எதிரிகள் எனத் தொழிலாளி வர்க்கத்திற்கு அடையாளம் காட்டினார் அம்பேத்கர். ‘இந்தியாவில் சாதிக்கு எதிராக வர்க்கம் என்ற நிலை இல்லை. மாறாக சாதி – வர்க்கம் ஒன்றின் மீது மற்றொன்று என்ற முறையில் இருக்கிறது. இந்தியாவில் விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பான்மையானவர்களும், சுரண்டலுக்கு ஆளாகியுள்ள தொழிலாளர்களில் பெரும்பகுதியினரும் தலித்துகளாவார்கள். இந்தியாவில் வர்க்கப் போராட்டம் என்பது இரண்டு கால்களின் மீதும் நிற்கிறது. ஒரு கால் பொருளாதாரச் சுரண்டல் என்றால், மற்றொரு கால் சமூக ஒடுக்குமுறை. வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வேண்டுமானால், இவ்விரண்டு கால்களாலும் நடந்தாக வேண்டும்.’ – என்று தோழர் சீத்தாராம் யெச்சூரி சொன்னதன் பொருளும் இதுதான்.”
“ஈழப் பிரச்னையின் போதான உங்கள் எதிர்வினைகள் தமிழின விரோதம் என்று விமர்சிக்கப்பட்டதே?”
“தனி ஈழம், அதற்கான ஆயுதப் போராட்டம் குறித்து மாறுபட்ட நிலைப்பாட்டை மேற்கொள்வது தமிழினத்திற்கு விரோதமாகிவிட முடியாது. அந்த நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அதன்பொருட்டு என்மீது வைத்த விமர்சனங்களுக்குச் செவிமடுக்கிறேன். பரப்பிய அவதூறுகளைப் புறந்தள்ளுகிறேன்.”
“இடதுசாரி அமைப்புகள் மக்களிடம் சென்று சேர்வதற்கு இருக்கும் தடைகள் என்னவென்று நினைக்கிறீர்கள்?”
“மார்க்ஸைத் தவிர மற்ற அனைவருமே மார்க்சிஸ்ட்டுகளாக இருந்து வகுப்பு எடுப்பதுதான் முதல் தடை. ஏற்றத்தாழ்வையும் சுரண்டலையும் இயல்பானதாக ஏற்க வைப்பதற்குக் குடும்பம், சாதி, மதம், கடவுள், கோயில், கல்விக்கூடங்கள், அரசு, ஊடகங்கள், கட்சிகள் என்று வலிமையான பல நிறுவனங்கள் ஆண்டாண்டு காலமாக முழுநேரமும் ஊழியம் செய்துவருகின்றன. தம்மை எதிர்த்தும் சமத்துவம் என்கிற கருத்தியலை முன்வைத்தும் இடதுசாரி அமைப்புகள் வளர்வதை அனுமதிக்காத இந்த நிறுவனங்கள், சிலவேளைகளில் போலியாக சமத்துவம் பேசியும்கூட தடையை ஏற்படுத்திவிடுகின்றன.
‘சமூக அழுத்தங்களால் திணறிக்கொண்டிருக்கும் மக்கள் எப்படியாயினும் இடதுசாரிகளின் தலைமையில்தான் போராடி விடுதலையடைவோம் என்று ஒருபோதும் அடம் பிடித்துக் கொண்டிருப்பது இல்லை. எந்தவொரு போராட்டத்திற்கும் சிறப்பு அழைப்பாளர்கள் கிடையாது என்கிற எளிய பாடத்தை மக்கள் அறிந்தே இருக்கிறார்கள். எனவே, போராடும் அவர்களே இடதுசாரிகளாக இருக்கிறார்கள். அதாவது, தமக்கு உள்ளிருக்கிற இடதுசாரித் தன்மைகளை ஒன்றுதிரட்டி வெளிப்படுத்து கிறார்கள். இந்த உணர்வுமாற்றத்திற்குப் பொருந்திவரக்கூடியவர்களாக இடதுசாரிகள் இருந்தால் ஏற்றுக்கொள் வார்கள். அல்லாவிடில் அந்த உணர்வுகளைத் தாங்கி வெளிப்படுத்தும் வலுவுள்ள புதிய அமைப்புகளைச் சூழல் உருவாக்கும். மார்க்ஸ் இப்போதெல்லாம் அலங்காரப் படமாகவோ, அறிவுஜீவிகள் குஷாலாக உரையாடும் தலைப்பாகவோ அல்லாமல், அவரது பெயரைக்கூட அறிந்திராத மக்களின் செயலாக வெளிப்பட்டு வருகிறார்…’ எனது நாவலில் வரும் இந்த வரிகளை உள்ளூர்த் தன்மையுடனும் உடனடித் தலையீட்டுடனும் இடதுசாரிகள் செயல்பட வேண்டும் என்கிற அவாவிலிருந்து எழுதினேன். Timely intervention through mass action என்று தோழர் பி.டி.ரணதிவே திரும்பத் திரும்ப வலியுறுத்தியதும்கூட இந்த அர்த்தத்தில்தான்.’’
“சாதியம் பற்றிய இன்றைய இடதுசாரிகளின் அணுகுமுறை என்னவாக இருக்கிறது?”
“அம்பேத்கர் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்த 1913-ல், தோழர் லெனினுடன் தொடர்பில் இருந்தவர்களால் தொடங்கப்பட்ட கதர் கட்சியே இந்தியாவிற்கான முதலாவது புரட்சிகர அமைப்பு. புலம்பெயர் இந்தியர்கள் மீதான இன ஒதுக்குதலையும் ஒடுக்குதலையும் பாரபட்சங்களையும் எதிர்ப்பதும் ஆயுதப் போராட்டத்தால் இந்தியாவிலிருந்து ஆங்கில ஆட்சியை அகற்றுவதும் இதன் நோக்கம். சாதியம் பற்றி அது மூச்சுவிடவில்லை.
தாஷ்கண்டில் இண்டியன் கம்யூனிஸ்ட் பார்ட்டி உருவாக்கப்படுவதற்கு முன்னதாக எம்.என்.ராய், அபானி முகர்ஜி, சாந்தி தேவி – மூவரும் எழுதிய அறிக்கை ஒன்று கிளாஸ்கோ சோசலிஸ்ட் இதழில் 1920-ம் ஆண்டு ஜூன் 20-ம் நாள் வெளியாகியிருந்தது. இந்தியாவுக்கான முதலாவது கம்யூனிஸ்ட் அறிக்கை எனப்படும் இதுவும் சாதியம் பற்றி வாய் திறக்கவில்லை. 1916 -ம் ஆண்டிலேயே வெளியாகி அறிவுலகத்தில் விவாதப் பொருளாகியிருந்த ‘இந்தியாவில் சாதிகள்- அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி’ என்கிற அம்பேத்கரின் ஆய்வுக் கட்டுரை இவர்களை ஈர்க்காமல் போனது தற்செயலானதுதானா? என்று யோசிக்க வேண்டும்.
தற்காலத்தில், மக்கள் ஜனநாயகப் புரட்சி, தேசிய ஜனநாயகப் புரட்சி, புதிய ஜனநாயகப் புரட்சி என்று கம்யூனிஸ்ட்டுகள் முன்மொழிந்துள்ள மூன்று திட்டங்களும் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தையும் ஆளப்படும் வர்க்கத்தையும் உருவாக்குவதில் முதன்மைப் பங்கு வகிக்கும் சாதியத்தைப் பகுப்பாய்வுக்கு உட்படுத்தவில்லை.
நிலப்பிரபுத்துவக் கட்டத்தில் உருவான சாதியம் நிலப்பிரபுத்துவம் ஒழிகையில் தானே ஒழிந்துவிடுமாம். முதலாளித்துவம் நிலப்பிரபுத்துவத்தை ஒழித்துக்கட்டாது அதனுடன் சமரசம் செய்துகொண்டது. அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொண்டு அந்நிய ஏகாதிபத்தியத்துடனும் கூட்டு வைத்திருக்கிறது. ஆகவே, இந்தக் கூட்டு அதிகாரத்தை எதிர்த்துப் புரட்சிக்காக மக்களைத் திரட்டுவதே கம்யூனிஸ்ட்டுகளின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜனநாயகக் கட்டத்தையும் தாண்டி மார்க்ஸிய அடிப்படையில் விஞ்ஞான சோசலிஸத்தை அடைவதே தமது குறிக்கோள் எனவும் சொல்லிக்கொள்ளப் படுகிறது. இந்த மூன்றிலுமே சாதி என்பது புரட்சிக்குப் பின்பு தீர்வு காணப்படக்கூடிய பல்வேறு தீங்குகளில் ஒன்றாக முன்வைக்கப் பட்டுள்ளது. சாதிக்கும் வர்க்கத்திற்கும் இருக்கும் ஊடிழை உறவு கணக்கில் கொள்ளப்படவில்லை.
பொருளாதார அமைப்பே அடிப்படைக் கட்டுமானம், சாதி போன்றவை மேற்கட்டுமானம். அடிக்கட்டுமானத்தை மாற்றிவிட்டால் மேற்கட்டுமானம் தானாக மாறிவிடும் என்பது கம்யூனிஸ்ட்டுகளின் நிலைப்பாடு. அடிக்கட்டுமானத்தை மாற்ற வேண்டுமானால், முதலில் அதன் மீதுள்ள மேற்கட்டுமானத்தை தகர்க்க வேண்டும் என்கிற அம்பேத்கரின் நிலைப்பாட்டிற்கு காலத்தின் போக்கில் வந்து சேர்ந்திருக் கிறார்கள். சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை இணைத்துக்கொண்டால், தூய வடிவிலான வர்க்கப் போராட்டம் தீட்டாகிவிடும் என்கிற சிலரது சனாதன மனதை எதிர்த்தும் இடதுசாரிகள் போராட வேண்டியுள்ளது.”
“கிராம அமைப்பு, சாதியைப் பேணுவதில் முக்கியப் பங்காற்றுகிறது. அதேசமயம் விவசாயம், கிராமப் பொருளாதாரம் போன்ற இயற்கை சார்ந்த பசுமைப் பொருளாதார வளர்ச்சிக்கு கிராம அமைப்புத் தேவைப்படுகிறது. இதை எப்படிக் கையாள்வது?”
‘கிராமப்புற நிலவுடைமையாளர்களில் பல ரகத்தினர் இருந்தபோதிலும், அவர்கள் வேறுவேறு அளவுகளில் நிலங்களை வைத்திருந்தபோதிலும் அவர்களில் பலம் பொருந்தியவர்கள்தான் இவர்களின், இந்த வர்க்கத்தின் பிரதிதிகளாக இருந்தனர். அரசு வழங்கிய மானியங்கள், அரசு ஊக்குவித்த கூட்டுறவுச் சங்கங்கள், ஏற்படுத்திக் கொடுத்த மின்சார வசதி, கொள்முதல் ஏற்பாடுகள், வங்கிக் கடன்கள், பஞ்சாயத்து அமைப்புகள் ஆகியன இவர்களின் கட்டுப்பாட்டு க்குள்தான் இருந்தன’ என்று பாலகோபால் ஆந்திராவுக்குச் சொன்னது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் பொருந்தும். (தலித்தியம் நூலுக்கான முன்னுரையில் வ.கீதா இப்படி எடுத்துரைத்திருந்தார்.) இதுவல்லாமல் இப்போது கிராமங்களை ஊடறுத்துச் செல்லும் பெருவழிச்சாலைகளை ஒட்டிய வணிகம், தாராளமயம் உருவாக்கியுள்ள சந்தை வாய்ப்புகள், தண்ணீர், வீட்டுமனை விற்பனை மூலமும் இவர்களது தொப்பை நிறைகிறது. ஆக, கிராமப் பொருளாதாரம் என்பது பெருநில உடைமையாளர்களாகிய ஆதிக்கச் சாதியினரின் வருமானத்தையே குறிக்கிறது. கிராமச் சமூகத்தோடு பகிர்ந்து கொள்ளப்படாத அந்தப் பொருளாதாரம் நசிந்தால் என்ன? நட்டுக்கிட்டு வளர்ந்தால் என்ன?
கிரம வித்தகம் என்கிற வேதப் பயிற்சிக் கட்டத்தை எட்டியவர்களுக்குத் தானமாக வழங்கப்பட்ட நிலப்பரப்பே கிராமம். ‘இந்தியாவின் ஆன்மா கிராமத்தில் இருக்கிறது என்றால், அந்தக் கிராமம் என்னவாக இருக்கிறது… ஒவ்வொரு சிற்றூர் சமூகமும் தனது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே உள்ளகமாக பொறியமைவு ஒன்றை உருவாக்கி வைத்திருப்பதாக விதந்தோதப்படுகிறது. உண்மையில் இந்தப் பொறியமைவு சாதியம்தான். ஒன்றுக்கொன்று ஒத்தாசையாக இணங்கி வாழ்தல் என்கிற மூடாக்கைப் பாசாங்காகப் போர்த்திக் கொண்டுள்ள இந்தப் பொறியமைவானது நேரடி அர்த்தத்தில் ஒதுக்குதலையும் ஒதுங்குதலையும் கீழ்ப்படுத்துதலையும் கீழ்ப்படிதலையும் அச்சாகக்கொண்டு இயங்குகிறது. அதன் சீரான இயக்கத்தைக் குலைக்க முயற்சிப்பவர்களை, அது உள்ளிழுத்து, அரைத்துக் கூழாக்கி, அந்த சதைக்கூழையே மசக்கெண்ணையாய் மாற்றிக்கொண்டு சுழல்கிறது. இந்தக் கொடூரம் வெளிப்பார்வைக்கு சட்டெனத் தெரியாததால் ஈ எறும்புக்குக்கூட இன்னல் விளைவிக்காத இரக்கக் குணம் கொண்டவர்கள், கள்ளங்கபடம் அறியாத, சூதுவாதற்ற அப்பாவிகள் எனச் சிற்றூர் சமூகத்தவரைப் பற்றிய கற்பிதம் இங்கே உலவுகிறது.’ – தோழர் ரவீந்திர பாரதியின் நாவலுக்கு நான் எழுதிய முன்னுரையில் காட்டும் இப்படியான கிராமங்கள் சிதைவது அவசியம்தான்.
இதன் பொருள் விவசாயம் அழியட்டும் என்பதல்ல. சகாயக் கூலிக்கு உழைத்து உற்பத்தி செய்துவந்த நிலமற்ற இடைநிலை மற்றும் பட்டியல் சாதியினர் பலரும் உழுதொழிலை விட்டு வெளியேறி வருகிறார்கள். துண்டு துக்காணி நிலங்களை வைத்திருப்பவர்கள், அரசாங்கத்தின் கொள்கைகள், விவசாயத் துறையில் ஏற்படுத்தும் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் அவற்றை விற்றுவிட்டோ, கரம்பாகப் போட்டுவிட்டோ வேறு வேலைகளுக்குப் பெயர்கிறார்கள். இவர்கள்தான் பெருநகரங்களின் உதிரிப்பாட்டாளிகள். விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை, விவசாய உற்பத்தி குறைகிறது, விவசாயத்தை யாரும் மதிப்பதில்லை என்கிற அங்கலாய்ப்பின் பின்னே உள்ள உண்மை இதுதான். நிலக்குவிப்பை உடைத்து நிலமற்ற வேளாண்குடிகளுக்குப் பகிர்ந்தளிக்காமல், அங்கு நிலவும் சாதி ஒடுக்குமுறையை ஒழிக்காமல், வெளியேறியவர்களை விவசாயத்திற்குத் திரும்ப அழைப்பதும் கிராம அமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்பதும் அர்த்தமற்றது.
“கேரள அரசு, ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’, ‘அரிஜன், தலித் என்ற சொல்லைப் பயன்படுத்தத் தடை’, ‘சாதிக் கலப்புத் திருமணம் புரிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு’ எனப் புதிய புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக்கியுள்ள கேரள அரசின் முடிவு சமூகநீதிக்கான பாதையில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க வெற்றி. வழிபாட்டு உரிமைக்கான போராட்டத்தை அர்ச்சகர் உரிமைக்கான போராட்டமாகவும் வளர்த்தெடுத்த பெரியாருக்குச் செலுத்தப்படும் மதிப்பார்ந்த நன்றி இது. ஆனால், ‘தலித்துகளை இந்து மதத்திற்கு உள்ளேயே இருத்திவைத்துக்கொள்ளும் ஏற்பாடு இது’ என்று சிலர் வலிந்து உள்நோக்கம் கற்பிக்கின்றனர்.
‘புரோகிதத் தொழில் பரம்பரையாக வருவதை நிறுத்த வேண்டும். இந்து என்று கூறிக்கொள்ளும் ஒவ்வொருவரும் புரோகிதராக வர அனுமதிக்க வேண்டும். இதற்கென அரசு நிர்ணயிக்கும் தேர்வில் தேர்ச்சி பெற்று, புரோகிதராக இருப்பதற்கு அரசின் அனுமதிப் பத்திரம் பெறாத எந்த இந்துவும் புரோகிதராகக் கூடாது’ என்று அண்ணல் அம்பேத்கர் கூறியிருப்பதை இவ்விடத்தில் நினைவுபடுத்திக்கொள்வது உகந்தது. ஆகவே, பெளத்தத்தை ஏற்ற தலித்துகளை இழுத்துவந்து இந்துக் கோயிலில் அர்ச்சகராக்கிவிட்டதுபோல சிலர் குமையத் தேவையில்லை. ஒரு பொதுஇடத்தில் நுழைந்து குறிப்பிட்ட தொழிலைச் செய்வதற்கு அனைவருக்கும் உள்ள உரிமை நிலைநாட்டப்பட்டிருக்கிறது. இதையடுத்துப் பெண்களையும் அவர்களுக்கு உரிய விகிதாச்சார அடிப்படையில் அர்ச்சகராக்க வேண்டும் என்கிற கோரிக்கையை எழுப்ப வேண்டியுள்ளது.
கோயில் பணியாளர்களாக இருந்து பாலியல் சுரண்டலுக்குள்ளான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு தகப்பன் யார் என்கிற கேள்விக்கு, அவர்கள் ‘கடவுளின் குழந்தைகள்’ என்னும் பொருள்படும்படியாக ஹரிஜன் என்ற சொல்லை நார்சி மேத்தா என்பவர் பயன்படுத்தியிருந்தார். அந்தப் பெயரால் காந்தி, தீண்டப்படாதாரை விளித்தபோது ‘நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா?’ என்று அம்பேத்கர் சினந்தார். ஜோதிராவ் பூலே காலந்தொட்டு புழக்கத்திலிருக்கும் தலித் என்கிற சொல்லை அம்பேத்கரும் பாவித்திருக்கிறார். ஆனாலும், அவர் தீண்டப்படாதாரைப் பட்டியல் சாதியினர் என்று 1935-ல் அரசு வகைப்படுத்தியதை ஏற்றுக்கொண்டார். அப்போதிருந்து அதிகாரப்பூர்வமாக அரசு அலுவல் மொழியில் பட்டியல் சாதியினர் என்றே சுட்ட முடியும். அரசியல் களத்தில் புழக்கத்தில் உள்ள தலித் என்ற சொல் அரசு ஆவணங்களுக்கு ஏற்புடையதல்ல. இதைத்தான் அவ்வப்போது எஸ்.சி. ஆணையம் சுற்றறிக்கையாகத் தெரிவிக்கிறது. இந்த விவரங்களுக்குள் போகாமலே, தலித் என்ற சொல்லைக் கேட்டாலே கேரள அரசாங்கம் ச்சும்மா பதறுதில்லே…ன்னு சிலர் பன்ச் டயலாக் பேசித் தேவையற்று முண்டா தட்டுகிறார்கள்.
சாதிக் கலப்புத் திருமணம் செய்து கொள்கிறவர்களும் அவர்களது சந்ததியினரும் இறுதியில் இருவருடையதில் ஏதேனும் ஒரு சாதிக்குள் முடங்கிப் போகிறார்கள். மாறாக, இவர்களைச் சாதியற்றவர்கள் என்று தனியாக வகைப்படுத்தி அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொள்வது வரவேற்கப்படக்கூடியதே. சாதிக் கலப்புத் திருமணம் செய்துகொள்கிற வர்களுக்கு உள்ளூரில் தங்க முடியாதபடி உயிராபத்து நிலவுவதால் அவர்களுக்கு முழுப்பாதுகாப்புடன்கூடிய தங்கும் விடுதிகளை அரசுகள் இந்நேரம் உருவாக்கியிருக்க வேண்டும். இப்படியான திருமணங்களை ஆதரிக்கிற இயக்கங்கள் ஒரு முன்மாதிரிக் குடியிருப்பு வளாகத்தை உருவாக்குவதைத் தங்களது செயல்திட்ட மாகக் கொள்ள வேண்டியிருக்கிறது.
‘அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்’ சட்டத்தின் முன்னோடி மாநிலமான தமிழகத்தில் அந்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் உள்ள சிக்கலைத் தீர்ப்பதற்கு ஆட்சியாளர்கள் விருப்புறுதி அற்றவர்களாக இருப்பது பெரும் அவலம். ‘சாதிக் கலப்புத் தம்பதியரின் வாரிசுகளுக்குக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் தனி இடஒதுக்கீடு தரப்பட வேண்டும்’ என்ற நீதிபதி மோகன் ஆணையத்தின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் கோரி மாநிலம் தழுவிய நடைப்பயணம் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியிடம், பரிசீலிப்பதாக உறுதியளித்த முதல்வர் இன்னும் அதில் நாட்டமின்றி இருக்கிறார்.”
“தமிழகத்தைத் தமிழன்தான் ஆள வேண்டும் என்கிற குரலை எப்படிப் பார்க்கிறீர்கள்?”
“தமிழகத்தைத் தமிழச்சிதான் ஆள வேண்டும் என்று மறந்தும்கூட நம் வாயில் வராததைத் தற்செயல் என்றே எடுத்துக் கொள்வோம். (சிரிக்கிறார்)
நமக்கு அடுத்தடுத்து வாய்த்துள்ள ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தமிழர்கள்தான். தமிழிசையும், பொன் ராதாகிருஷ்ணனும்கூட தமிழர்கள்தான். அவர்கள் வரிசையாக ஆண்டுகொண்டிருக்கட்டும். நமது உணவகங்களில் கோப்பை கழுவிக்கொண்டி ருக்கும் வடஇந்தியனை வந்தேறி என்று நாம் தூற்றுவோம். சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தமிழர்களுக்குச் சொந்தமான 27,000 ஏக்கர் நிலத்தை அபகரித்துள்ள அதானியைப் போற்றுவோம். ஓம் தமிழ்… ஜெய் தமிழ்…”
“பள்ளர்களைப் பட்டியல் சாதியிலிருந்து வெளியேறச் சொல்லும் கிருஷ்ணசாமியின் அரசியல் நகர்வை எப்படிப் புரிந்துகொள்கிறீர்கள்?”
“ ‘திடீரென ஒரு லட்சம் ரூபாய் கிடைத்தால் என்ன செய்வாய்?’ என்று கேட்டதற்கு, ‘தங்கத்தில் திருவோடு வாங்கிக்கொள்வேன்’ என்றாராம் ஒருவர். கிருஷ்ணசாமியின் நிலையும்கூட அதுதான். பட்டியல் சாதியிலிருந்து வெளியேறிப் பார்ப்பனராகிறாரா? அல்லது சாதியற்ற வராகிறாரா? மிகவும் பிற்படுத்தப்பட்டவர் நிலையைக் கோருகிறார். அதுவும் ஒரு பட்டியல்தான். ஒரு பட்டியலிலிருந்து இன்னொரு பட்டியலுக்கு மாற்றும் ஓர் அலுவல் நடவடிக்கையால் இவர்களைப் பற்றிய மற்றவர்களது பார்வை எப்படி மாறும்? சாதி இழிவு எப்படி நீங்கும்? பட்டியல் சாதியிலிருந்து கிறிஸ்தவத்திற்கு மாறியவர்கள் பி.சி பட்டியலுக்குள்தான் சேர்க்கப் பட்டார்கள். அவர்கள் மீதான தீண்டாமை நீங்கிவிடவில்லை என்பதற்கு தனியான தேவாலயங்களும் கல்லறைகளுமே சாட்சி. இதுவல்லாமல், இங்குள்ள ஆயிரக்கணக்கான சாதிகளும் உட்சாதிகளும் எந்தவொரு சாதியையும் தனக்குச் சமமாகக் கருதாத நிலையில் சாதி இழிவு எப்படி நீங்கும்?
பட்டியல் சாதியினருக்குச் சற்றேறக்குறைய மக்கள்தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்ப கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 15 சதவிகித இடஒதுக்கீடு. ஆனால், மக்கள்தொகையில் 52 சதவீதத்திற்கும் மேலாகப் பிற்படுத்தப்பட்டோர் இருந்தும்கூட உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் காரணமாகக் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் 27 சதவிகிதம் மட்டுமே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஏற்கெனவே 25 சதம் பற்றாக்குறையில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் பட்டியலுக்கு இவரை நம்பிப் போகிறவர்களுக்கு என்ன கிடைக்கும்? இப்படிக் கேட்டதுமே, ‘இட ஒதுக்கீடே வேண்டாம். எங்களை எஸ்.சி. பட்டியலிலிருந்து நீக்கினால் போதும் என்கிறார்கள்.’ இட ஒதுக்கீடு இருந்தும்கூட கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் போதுமான பிரதிநிதித்துவம் பெறுவதற்குப் போராட வேண்டியிருக்கும் நிலையில், இடஒதுக்கீடும் இல்லாமல் போனால் இந்த மக்களுக்கான வாய்ப்புகள் அடைபட்டுவிடாதா? கிருஷ்ணசாமி ஒரு காலத்தின் தேவையை நிறைவு செய்தவர். இப்போதுள்ள கிருஷ்ணசாமி தேவையற்றவர். அவரது இந்தக் கெடுமுயற்சி தனிப்பட்ட முறையில் அவருக்கு வேண்டுமானால் சில ஆதாயங்களைக் கொடுக்கலாம். அவரைப் பின்தொடரும் சாமானியர்களுக்கு ஒரு பயனும் விளையப்போவதில்லை.”
“இட ஒதுக்கீட்டுக்கான காலவரையறை குறித்து ஏராளமான உரையாடல்கள் நடந்துவருகின்றன. இதில் உங்கள் பார்வை என்ன?”
“அதிகாரப்பூர்வமான முதல் இடஒதுக்கீடு கி.மு.185-ல் மனுஸ்மிருதி மூலமாகப் பார்ப்பனர்களுக்கு நடந்தது. பூவுலகத்தின் கடவுள்கள் என்று தம்மைத்தாமே வர்ணித்துக்கொண்ட அவர்களது அனுபோகத்துக்கு ஆகச் சிறந்த அனைத்துமே ஒதுக்கப்பட்டன. காலனிய ஆட்சி வந்த பிறகும்கூட கல்வி அவர்களின் ஏகபோக உரிமையாக இருந்தது. ஆயினும், கல்வி கற்கவும் அதனாலேயே அரசு வேலை பார்க்கவும் சாதியடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை இனங்காணும் முயற்சி அப்போது தொடங்கியது. சுதந்திரத்திற்குப் பிறகு சற்றே சீரானது. பட்டியல் சாதியினருக்கும் பட்டியல் பழங்குடியினருக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கும்வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என்கிறது அரசியல் சட்டம். இது காலவரையறை அற்றது. இவர்களுக்குச் சட்டமன்ற, பாராளுமன்றத் தொகுதிகளில் வழங்கப்பட்ட ஒதுக்கீட்டுக்குத்தான் பத்தாண்டுகள் என்று முதலில் காலவரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது. பிறகு அடுத்தடுத்து இது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாறாகச் சொல்லப்படும் தகவல்கள் பொய்யானவை.”
“ரோஹித் வெமுலா, முத்துக்கிருஷ்ணன், அனிதா எனப் பல தற்கொலைகளைத் தொடர்ந்து பார்த்துவருகிறோம். சாதிய, அரசியல் பிரச்னைகளின் தீவிரம், அதன்மீதான ஆழமான உணர்ச்சிவசப்படல், அவர்களின் சூழல் என நாம் அதன் பின்னிருக்கும் நியாயத்தை ஏற்றுக்கொண்டாலும், ‘தற்கொலை கோழைத்தனம்; அதைச் சரியான முடிவாக ஏற்றுக்கொள்ள முடியாது’ என்கிற தரப்பிற்கு உங்கள் பதில் என்ன?”
“தற்கொலை கோழைத்தனம் என்றால் வாழ்வது தைரியமா? எத்தனை கூழைக்கும்பிடு, பல்லிளிப்பு, கால்பிடிப்பு? ரோஹித் வெமுலாவும், முத்துக்கிருஷ்ணனும் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரில் பார்க்காத தீண்டாமைகளையோ, பால்யத்தில் அனுபவிக்காத வறுமையையோ, திடுமெனப் பல்கலைக்கழகத்தில் எதிர்கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால், இங்கெல்லாம் காப்பாற்றிவைத்த உயிரைப் படிக்கப்போன இடத்தில் ஏன் மாய்த்துக் கொள்கிறார்கள்? அப்படியானால், அவர்களது உயிரைக் காவு கேட்கும் ஏதோவொன்று அந்த உயர் கல்வி நிறுவனங்களில் ஒளிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்? நாம் கண்டுபிடிக்க வேண்டியதும் குற்றம் சாட்ட வேண்டியதும் அந்த ஆட்கொல்லியைத்தான். அவர்களது தன்மதிப்புக்கு எந்த அளவுக்குப் பங்கம் நேர்ந்திருந்தால் உயிரையும் துச்சமெனக் கருதியிருப்பார்கள்? வாழ்வதற்கான நம்பிக்கைகள் அனைத்தையும் இந்த நாட்டின் அதிகபட்ச உயர் அதிகார மையங்கள் பறித்துக்கொண்டதற்கு பிறகல்லவா அனிதா மாய்ந்தாள்? கனவு காணச்சொல்லி உபதேசம் நடக்கிறது. கனவோடும் அதை நனவாக்கும் தகுதியோடும் வருகிறவர்களை உதாசீனம் செய்வதன் மூலம் தற்கொலைக்குத் தூண்டுகிறார்கள். இதோ இப்போது ஆந்திர நீட் கோச்சிங் மையங்களில் 60 நாட்களில் 50 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். உயிரை மாய்த்துக்கொள்ளும் வலியைவிட கடுமையானதாக அந்த வகுப்புகள் இருப்பதால்தானே இறந்திருக்கிறார்கள். கந்துவட்டிக்காரர்களின் கெடுபிடிக்குள் ஒவ்வொரு நாளைக் கடத்துவதும் எவ்வளவு அச்சமூட்டக்கூடியதாய் இருந்திருந்தால் திருநெல்வேலி தீக்குளிப்பு நடந்திருக்கும் என்று யோசியுங்கள். தனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதுகூட தெரியாமல் பேதலித்துப்போய் நிற்கும் அந்தச் சிசுவின் சாவுக்கு யார் பொறுப்பு? பாதிக்கப்பட்ட வர்களையே குற்றவாளிகளாக்கும் தந்திரம்தான் அவர்களைக் கோழைகள் என்று தீர்ப்பெழுதுவதும். அவர்களா கோழைகள்? இப்படியாகத் தொடரும் சாவுகளைத் தடுக்க இயலாமல் வியாக்கியானம் செய்துகொண்டிருக்கிற நாம்தான் கோழைகள்.”
“கல்புர்கி, கௌரி லங்கேஷ் எனப் பகுத்தறிவுவாத, இடதுசாரி எழுத்தாளர்கள், அறிவுஜீவிகள் கொல்லப்படுவது தொடர்கிறதே?”
“மாற்றுப் பண்பாட்டுப் பின்புலம் உள்ளவர்களையும் மாற்றுக் கருத்தாளர்களையும் நாட்டைவிட்டு வெளியேறச் சொல்வது அல்லது உலகத்தைவிட்டே அனுப்புவது என்னும் சகிப்பின்மையின் உச்சத்தில் நின்றாடுகின்ற வலதுசாரி அமைப்புகள் இன்னும் பலரைக் கொல்லக்கூடும் என்று உள்ளுணர்வு எச்சரிக்கிறது. தபோல்கரும் பன்சாரேயும் கொல்லப்பட்டபோது, அது மகாராஷ்டிராவில் என்றிருந்தோம். லிங்கன்ன சத்யம்பேட், கல்புர்கி கொலைகள் கர்நாடகத்தின் அந்த எல்லையில் நடக்கிறது என்றிருந்தோம். இதோ கொலையாளிகள் பெங்களூரில் கவுரியைக் கொன்றுவிட்டு அடுத்த கொலைக்குக் குறிபார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அது நானாகவும் இருக்கலாம்… நீங்களாகவும் இருக்கலாம். அந்த வகையில் என் சாவுக்கு 40 கிலோமீட்டர் அருகில் நானிருக்கிறேன்.
இத்தகைய கொலையாளிகளுக்குச் சட்டப்பூர்வப் பாதுகாப்பும் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஆசியும் கிடைக்கிறது. உயிர்வாழத் தகுதியற்றவரே கொன்றொழிக்கப்பட்டிருப்பதாகக் கொலையுண்டவர்களைத் தூற்றுவதும் (இதில் பிரபல/பிராப்ள எழுத்தாளர்களும் அடக்கம்.) கொலையாளிகளைப் போற்றுவதுமாகிய அவர்களது உத்தி, காந்தி கொலையிலிருந்து இன்றுவரை தொடர்கிறது. கோட்சேவுக்கு சிலை வைப்பதை நாம் வேறெப்படி புரிந்துகொள்வது? கொல்லப்பட்ட அஹ்லக்கின் குடும்பம் நிராதரவாக அல்லாடிக்கொண்டிருக்கும் நிலையில், அவரது கொலையில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குச் சன்மானம்போல அரசுச் சார்பு நிறுவனத்தில் பணி வழங்கப்பட்டிருக்கிறது. நீங்கள் கௌரவிக்கப்படுவீர்கள் என்கிற செய்தி கொலையாளிகளை மூர்க்கமேறச் செய்திருக்கிறது. இதன்மூலம் அவர்களை ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்ட படையாக அங்கீகரித்துத் தமக்கெதிரான விமர்சனங்களை ஒடுக்க நினைக்கிறார்கள். பீதியை உருவாக்கி, சுயத்தணிக்கைக்குள் தள்ளி, தனது குரல்வளையைத் தானே நெரித்துக்கொண்டு சாகும்படியான ஓர் உளவியல் நெருக்கடியை மாற்றுக் கருத்தாளர்களுக்கு ஏற்படுத்தவே இந்தக் கொலைகள். ஹிட்லரின் பழுப்புச்சட்டை அடியாள் படையும் முசோலினியின் கருஞ்சட்டைப் படையும் வீழ்த்தப்பட்டதைப் போல, இந்தக் காவிப்படையும் வீழ்த்தப்படும் என்று நம்பிக்கையூட்டும் விதமாகச் சொல்லி முடிக்க ஆசைதான். ஆனால், நிலைமை அவ்வாறில்லை.”
“தலித் கவிதையைத் தலித்தான் எழுத முடியும் என்கிற கருத்தை ஏற்கிறீர்களா?”
“நானும் பங்கேற்றிருந்த ஒரு நூல் வெளியீட்டு விழாவில் பேசிய எழுத்தாளர் சுஜாதா, ‘அன்னாடம் அநேக தலித்துகளைப் பார்க்கிற எனக்கு, அவர்களது வாழ்க்கையைப் பற்றி எழுத உரிமை இல்லையா?’ என்று கேட்டார். படித்து வேலை பெற்று ஒரு சராசரி நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தவரின் வாழ்நிலைக்குள் வீழ்ந்துவிட்ட எனக்குள் இருந்து எழுதுவது யார், நான் எழுதுவது யாரை என்கிற கேள்விகளால் நான் தத்தளித்துக்கொண்டி ருக்கும்போது, அவர் இவ்வாறு உரிமை கோரியது எனக்கு வியப்பாக இருந்தது. ‘அன்னாடம் ஆந்திராவுக்குள் போய்த் திரும்புவதால், நான் தெலுங்கு இலக்கியம் எழுதுவேன் என்று சென்னை–கூடூர் பாசஞ்சர் டிரைவர் அடம்பிடிப்பதற்கு ஒப்பான அபத்தமானது உங்கள் வாதம்’ என்று நான் பதில் சொல்ல வேண்டியதாயிற்று. அவருக்குச் சங்கடம்தான்.
தலித் என்பதைப் பட்டியல் சாதியினரின் மாற்றுப்பெயராக நினைத்துக்கொண்டு இப்படியான கேள்வி திரும்பத் திரும்ப எழுப்பப்படுகிறது. தலித்துகளைப் பற்றி யார் எழுதுவதையும் நான் மறுக்கவில்லை. ஆனால், அவ்வாறு எழுத விரும்புகிறவர் களுக்கு நான் சொல்ல விரும்புவது, உங்களது அறியாமையையும் சாதியவாதத்தையும் வெளிப்படுத்திக்கொள்ள இதைவிடவும் சிறந்த வழிகள் உண்டு என்பதுதான். ஏனென்றால், தலித்தாக அதாவது, சாதியச் சமூகத்திற்குப் புறத்தே இருப்பவராக வாழும் அனுபவம் இன்றி நீங்கள் எழுதி நிரப்புவதில் உங்களது அவதானிப்புகளும் விவரிப்புகளும் மொழி வளமும்தான் வெளிப்படுமே அன்றி அவர்களது வாழ்க்கை அல்ல.
அப்படியானால் செத்தவரின் வாழ்வை அவரது பிணம்தான் எழுத முடியுமா என்று குதர்க்கமாகக் கேட்கப்படுகிறது. பரவாயில்லை, நீங்கள் எழுதுங்கள். அந்தப் பிணம் வந்து ஆட்சேபிக்கப்போவதில்லை. ஆனால், நான் உயிரோடிருக்கிறேன். நான் எங்கு எப்படி என்னவாக வாழ்கிறேன் என்று ஒன்றும் தெரியாத ஒருவர் அனுமானத்தின் பேரில் என்னைப் பற்றி எதையாவது எழுதிவைத்தால், ஏனென்று கேட்பேன். அவரவர் வாழும் வாழ்வை விடுத்து அடுத்தவர் வாழ்வை எட்டிப் பார்த்து எழுத அடம்பிடிப்பதில் உள்ள தர்க்கம் புரிகிறது. சொந்தச் சாதியைப் பற்றி எழுதினால், உதை கிடைக்கும். ஊர் விலக்கமும் நடக்கும், தலித்துகளைப் பற்றி எழுதினால், சாதி கடந்த சமத்துவவாதி என்ற பெருமை கிடைக்கும். பெண்மணிகளைப் பற்றி எழுதும் ஆண்மணிகளுக்கும் இது பொருந்தும்.”
“ஒரு படைப்பாளிக்குக் கொஞ்சம் ‘மேட்னஸ்’ ‘கொஞ்சம் முட்டாள்தனம்’ தேவை. ஒரு படைப்பாளி, ‘கறாரான அறிவுஜீவி’யாக இருப்பது ‘க்ரியேட்டிவிட்டி’யைப் பாதிக்கும் என்கிற கருத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“அதென்ன ‘கொஞ்சம் முட்டாள்தனம்?’ அதிக முட்டாள்தனம் உள்ளவரால்தான் அதி உன்னதப் படைப்பைத் தர முடியும் என்று அறிவித்துவிடலாமே? வெகுமக்களி லிருந்து நாங்கள் வேறுபட்ட ஆட்களாக்கும் என்று இலக்கியவாதிகள் தாங்களாக வலிந்து பூசிக்கொண்ட பொருத்தமற்ற அலங்காரம் இது. உண்மையில், (அறிவு மங்கிய இந்த தத்திகளுக்கிடையில்) ‘எனைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்’ என்று அங்கலாய்க்கும் பாரதியின் வரி தனக்கு மட்டுமே பொருந்தும் என்பதுதான் பலரது நினைப்பு.”
“ ‘கவிதைகளில் சத்தம் கூடாது’, ‘இடதுசாரிகள் எழுதுகிற கவிதைகளில் முழக்கங்களும் முஷ்டி முறுக்கல்களும்தான் அதிகம் இருக்கின்றன’. ‘அரசியல் கவிதைகள் என நம்பி எழுதப்படுகிற பெரும்பாலான கவிதைகளில் கவிதைக்கே உரிய ஓர் அமைதியைப் பார்க்க முடிவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளுக்கான உங்கள் பதில்?”
“ ‘கவிதைகளில் சத்தம் கூடாது’ என்கிற சத்தம் பெருங்கூச்சலாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறது. சரி, இந்த வரையறையை உருவாக்கியது யார்? அதை எல்லோரும் ஏற்க வேண்டும் என்று ஏன் வலியுறுத்தப் படுகிறது? அமைதி என்பதன் பொருள் என்ன? அவ்வளவு அமைதியாக எழுதப்படும் இந்தக் கவிதைகள் எதைப் பேசுகின்றன? சுயபுலம்பல்களும் தம்பட்டங்களும் ஆழ்மன வக்கிரங்களும் தனி மனிதக் குரோதங்களும் சாதிய வன்மங்களும் தன்னைத்தானே அகழ்ந்தெடுத்துக் காட்டும் ‘தத்துவ’ தரிசனங்களும் நிரம்பி வழியும் கவிதைகளை எழுதிக் குவிக்கும் இந்த அமைதிப்படைக் கவிஞர்கள் தனக்கும் வெளியே இன்னொரு மனிதர்- அவ்வளவு ஏன்- தனது நிழல் இருப்பதைக்கூட ஏற்க முடியாதவர்கள். தன்னையன்றி வேறொன்றறியேன் பராபரமே.
‘இடதுசாரிகள் எழுதுகிற கவிதைகளில் முழக்கங்களும் முஷ்டி முறுக்கல்களும்தான் அதிகம் இருக்கின்றன’– என்று குற்றம்சாட்டுகிறவர்கள் வலதுசாரிகளின் கவிதைகளில் என்ன இருக்கிறது என்று ஆய்ந்து சொன்ன குற்றங்குறை ஏதேனும் உண்டா? அல்லது வலதுசாரிகள் என்று யாருமே இல்லை என்கிற முடிவுக்காவது வரலாமே. வலதுசாரியும் இல்லை இடதுசாரியும் இல்லை நட்டநடுசாரி என்கிறவர்கள் எதை எப்படி எழுதுகிறார்கள் என்பதும்கூட இதுவரை எழுப்பப்படாத கேள்விதான். சொற்களைத் திருகி, சொல்ல வந்ததைப் பூடகப்படுத்தி, நேஷனல் ஜியோகரபி சேனலில் காட்டும் நிலப்பரப்பை தமதென்று உருவகித்துக்கொண்டு அமேசான் காட்டுத் தாவரங்களுக்கிடையில் மறைந்தொளிந்து ரகசியம்போல் கீச்சுச்குரலில் அப்படி என்ன அதி உன்னத அரசியலை அமைதியாக எழுதி இருக்கிறார்கள் என்று சொல்லுங்களேன். அவ்வளவு நசுக்கி விடுவதற்கு அதென்ன குசுவா… இல்லை கவிதையா?
இடதுசாரிகளின் கவிதைகளுக்கு வரும் முன், இடதுசாரிக் கவிஞர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் யார் என்று பார்ப்போம். இடதுசாரி அமைப்புகளில் அங்கத்தவராக இருந்துகொண்டு எழுதுகிறவரா? அல்லது இடதுசாரிக் கருத்தியலை எழுதுகிறவரா? எது ஒன்றையும் தன்னுணர்வாக்கி அதனுள் கரைந்து கொள்ளாமல் எழுதும்போது சாரமற்ற வெறும் திப்பியே கிடைக்கிறது. வெளிப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற அளவுக்கு மனவெழுச்சி அல்லது மனவழுத்தம் தரக்கூடிய ஓர் அனுபவத்தை அதற்குரிய உணர்வோட்டத்திலும் தேர்ந்த சொற்களிலும் வெளிப்படுத்த முடியாத குறைபாட்டுடன் ஒரு வண்டிக்குப்பை ஒவ்வொரு நாளும் குமிகிறது. இதெல்லாமே இடதுசாரிகளுடையது என்று கூறுவது அவதூறு அல்லாமல் வேறென்ன? கவிதையாகாமல் இருப்பதெல்லாம் இடதுசாரிகளுடையது; கவிதையாக வந்திருப்பதெல்லாம் இடதுசாரி அல்லாதவர்களுடையது என்பதில் கவிதை பற்றிய விமர்சனம் எதுவுமில்லை. சுற்றி வளைக்காமல் பொருத்தமற்ற படிமங்களால் குழப்பாமல் சொல்லவந்ததை நேரடித்தன்மையுடன் சொன்னால் கவிதையின் அழகியல் கெட்டுப்போகும் என்றால் அந்த அழகியலைப் பாழடிப்பதுதான் இங்கு செய்ய வேண்டிய முதல் வேலை.
“ஜெயமோகன், ‘ஆதவன் தீட்சண்யாவை எழுத்தாளர் என்று பொருட்படுத்த முடியாது’ என்றாரே?”
“என்னையும் அவரைப்போன்ற எழுத்தாளர் என்று சொல்லியிருந்தால், அது எவ்வளவு பெரிய அவமானம் எனக்கு? காலாகாலத்துக்கும் துரத்தும் அந்தத் தீராப்பழி எனக்கு நேராததற்கு மகிழ்ச்சிதான். மற்றபடி அவர் எப்போதோ உளறியதை யெல்லாம் மறக்காதிருக்கும் உங்கள் நினைவாற்றல் அபாரம். இதற்காக அவர் உங்களுக்கு நன்றி சொல்லக்கூடும்.”
“மது அருந்துவதை ஓர் ஒழுக்கப் பிரச்னையாகப் பார்க்கிறீர்களா? குறிப்பாக இலக்கியவாதிகளின் மதுப்பழக்கம் குறித்துக் கடுமையாக விமர்சிக்கிறவர் நீங்கள்…”
“மது அருந்துவதை ஓர் ஒழுக்கப் பிரச்னையாக நான் பார்க்கவில்லை. அது தனிநபர்களின் தேர்வு. மதுப்பழக்கம் உள்ளவர்களுக்குச் சமூகத்தில் என்ன மரியாதை கிட்டுமோ, அது அவர்களுக்கும் கிடைக்கத்தான் போகிறது. என் கவனம் அதில் இல்லை. குடும்பத்தின் தேவைகளுக்கும் குழந்தைகளின் கல்விக்கும் ஈட்டிய வருமானத்தை குடித்தழிப்பதைக் குற்றம் என்பேன். குடித்துவிட்டு வருகிற கணவனை வீட்டுக்குள் சேர்க்காதீர்கள் என்று பெண்களிடம் அம்பேத்கர் வேண்டிக் கொண்டதும் இதன் பொருட்டே. மதுப்பழக்கம் இல்லாவிட்டால் இலக்கியத்தரம் ஒரு டிகிரி குறையும் என்பது குடிப்பதற்கென்று வருவித்துக்கொண்ட செயற்கையான காரணம் என்பது எனது அபிப்ராயம்.”
“சமூக ஊடகங்களில் தொடர்ந்து இயங்குகிறீர்கள். ஒரு புதிய மெய்நிகர் சமூகவெளி என்கிற வகையில் சமூக ஊடகங்களை எப்படி அணுகுகிறீர்கள்?”
“அவசியமானது. புதிய தொடர்புகள், புதிய உரையாடல்களுக்கு வழிவகுக்கிறது. இந்த நொடியில் உலகம் எதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கிறது என்பதைக் கவனப்படுத்துகிறது. நான் நினைப்பதை உடனுக்குடன் தெரிவிக்க முடிகிறது. கருத்துருவாக்கத்தில் பரபரப்பை உருவாக்குவதில் விவாதங்களுக்குரிய நிகழ்ச்சிநிரலை முன்னுரிமைப்படுத்துவதில் அதன் வகிபாகம் முக்கியமானது. ஆனால், என்னதான் கருத்துருவாக்கம் நடந்தாலும் அதைச் செயல்படுத்துவதற்கு நேரடியாகத்தான் களமிறங்க வேண்டும் என்கிற கவனம் தேவை. ஊரிலே வெள்ளம் புகுந்துவிட்டது என்று எல்லோரும் பதிவு போட்டுக்கொண்டிருந்தால் யார் இத்தனை சீவன்களைப் பாதுகாப்பது? சமூக ஊடகங்களுக்கு எல்லையுண்டு; அவற்றின் மூலமாகவே எல்லாவற்றையும் தீர்த்துக்கொள்ள முடியாது. நமது நேரத்தை அதற்குள்ளேயே அழித்துவிட்டு, அது விழுங்கிவிட்டதாகக் குற்றஞ்சாட்டுவது அவசியமற்றது. நமது நேரம் எதற்கானது என்று நாமே தீர்மானிக்க வேண்டும்.’’
“உங்களது இலக்கியப் பயணத்தில் இது எந்த இடம் என்று நினைக்கிறீர்கள்?”
“இடம் பற்றிய பிரக்ஞை எனக்கு எப்போதும் இருந்ததில்லை, தேவையுமில்லை. ஆனால், காலம் பற்றிய கரிசனம் உண்டு. தொடங்கித் தொடங்கிக் கிடப்பில் போட்டுள்ள, இன்னும் மனதுக்குள்ளேயே எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கிற விஷயங்களையெல்லாம் ஒரு 10 வருடங்களுக்குள் எழுதித் தீர்க்க வேண்டும் என்கிற நினைப்பு மூளையை அரித்துக்கொண்டிருக்கிறது.’’
“பயணங்கள், மக்கள் சந்திப்புகள், களப்போராட்டம், உரையாடல், எழுத்து… சோர்வாக உணர்கிறீர்களா?”
உற்சாகமாக இருக்கிறேன். இவ்வாறானதுதான் என் வாழ்க்கை. என் அப்பா அம்மா இருவருமே என்னைத் தொலைபேசியில் அழைத்ததும் ‘எந்த ஊர்லப்பா இருக்கே?’ என்றுதான் பேச்சைத் தொடங்குவார்கள். களப்போராளி என்று குறிப்பிடும்படியாக நான் எதையும் செய்துகொண்டிருக்கவில்லை என்கிற அப்பட்டமான உண்மையை உங்கள் வழியாகவாவது சொல்லிவிட வேண்டுமென நினைக்கிறேன். அதிகாரம், அடக்குமுறை, மனித உரிமை மீறல் எங்கெங்கு நடந்தாலும் தலையிலே தீப்பிடித்துக்கொண்டாற் போன்ற பதற்றத்துடன் களத்திற்குச் செல்கிற போராளிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவம், அவர்களுக்குத் தாங்கள்தான் போராளிகள் என்று சொல்லிக்கொள்ளத் தெரிவதில்லை அல்லது உரிமை கோர அவர்கள் விரும்புவதில்லை. அவர்களது நேரடிப் போராட்டங்களைப் பற்றி எப்போதாவது எழுதுவதாலோ என்னவோ, என்னைப் போன்றவர்களுக்கு களப்போராளி என்கிற பட்டம் சிரமமின்றி இலவசமாகக் கிடைத்துவிடுகிறது.
வருடத்தில் 52 ஞாயிற்றுக்கிழமைகள், 12 நாட்கள் தற்செயல் விடுப்பு, 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு, 15 நாட்களுக்கு அரைச்சம்பள விடுப்பு, 17 நாட்கள் பொதுவிடுமுறை என்று எவ்வித வருமான இழப்புமின்றி ஊர் சுற்றக் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாக நான் பயன்படுத்திக்கொள்கிறேன். வார ஓய்வுநாள் அல்லது விடுமுறை நாள்களில் மிக அரிதாகவே வீட்டில் இருப்பேன். (மற்ற நாட்களில் வீட்டில்தானே இருக்கிறேன்?). இலக்கிய அமைப்புகள் அல்லது மக்கள் இயக்கங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகக் குறைந்தபட்சம் வாரத்தில் ஒரு நாளாவது வெளியூர் சென்றுவருகிறேன். அவ்வளவுதான். தமிழ்நாட்டின் போக்குவரத்து நிலைமைகளை அனுசரித்துப் போய் நிகழ்வுகளில் பங்கெடுத்துவிட்டுத் திரும்புவதில் ஏற்படும் அற்பச் சிரமங்களைச் சிலர் களப்போராட்டம் என்று மிகைப்படுத்தி அலட்டிக்கொள்கிறார்கள். பயணம் போவதையும் நிகழ்வுகளில் பங்கெடுப்பதையுமே போராட்டம் என்பதாகப் புரிந்துகொண்டிருப்பவர்கள், அதில் ஏற்படும் சில அசௌகரியங்களைப் பொறுத்துக்கொள்வதையே தியாகம்போல கற்பிதம் செய்துகொள்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை, புதிய நிலப்பரப்புகளையும் மனிதர்களையும் அனுபவங்களையும் தருகிற பயணங்களும் சந்திப்புகளும் உவப்பானவை. இப்படி ஊர் சுற்றுகிற நேரத்தில் உட்கார்ந்து உருப்படியாக எழுதலாம்தானே என்று கேட்கலாம். உருப்படியாக எழுத வேண்டும் என்று தோன்றும்போதெல்லாம் நான் எழுதுவதற்கே முன்னுரிமை கொடுத்துவருகிறேன். தவிரவும், உருப்படியில்லாத வேலைகளுக்கு என்று நான் ஊர் சுற்றுகிறவனுமில்லை.”
“ ‘நன்றி’ என்கிற வார்த்தையை யாருக்குப் பரிசளிக்க விரும்புகிறீர்கள்?”
எனது பெற்றோர், மகன் ஆங்கில மீடியத்தில் படிக்க வேண்டும் என்கிற ஆசையில் சேலம் சி.எஸ்.ஐ. கான்வென்டில் ஆறாம் வகுப்பில் என்னைப் பெற்றோர் சேர்த்தார்கள். 5-ம் வகுப்பு வரை சாமியாபுரம் கூட்டுரோடு என்கிற குக்கிராமத்தில் ஏ,பி,சி,டி-யை பொம்மையாகப் பார்த்துவந்திருந்த எனக்கு கண்ணைக் கட்டி காட்டில்விட்டது போலிருந்தது (எனக்கும் ஆங்கிலத்துக்குமான இந்த ஏறுமாறான உறவு இன்றும் தொடர்கிறது). நாலைந்து மாதங்களுக்குப் பிறகு பள்ளிக்கூட விடுதியிலிருந்து ஓடிவந்துவிட்டேன்.
முன்பு தி.மு.க. மாநாடு ஒன்றுக்கு தருமபுரிக்கு அழைத்துப் போயிருந்த என் தந்தை அங்கிருந்த தனது தாய்மாமா வீட்டுக்கும் அழைத்துப் போயிருந்ததை நினைவில் வைத்து, விடுதியிலிருந்து நேராக அங்கு போய்விட்டேன். பள்ளிக்கூடம் லீவ் என்று பொய் சொன்னேன். இரண்டு நாட்கள் கழித்து அவர்கள் சேலத்திற்கு பஸ் ஏற்றி விட்டார்கள். அவர்கள் போனதும் நான் எங்கள் ஊர் பஸ்சில் ஏறிப் பாதிவழியில் உள்ள – 20 கிலோமீட்டர் முன்பாக- பொம்மிடி வரைக்கும் போய்விட்டேன். அதற்கு மேல் போய் அப்பாவை எதிர்கொள்ள பயமாக இருந்தது. அங்கேயே இறங்கிவிட்டேன். பொம்மிடி கவிதா தியேட்டரில் ‘நீரும் நெருப்பும்’ மேட்னி ஷோ. படம் முடிந்து வெளியே வந்தவனுக்கு எங்கு போவதென்று தெரியவில்லை. தியேட்டருக்கு எதிர்ப்புறத்தில் உள்ள மைல்கல்லில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். இருட்டிக்கொண்டிருந்தது. வாரச்சந்தைக்குப் போய்விட்டு அந்த வழியாகத் தங்கள் கிராமத்துக்குத் திரும்பிக்கொண்டிருந்த வர்களில் ஒருவர் அந்த மங்கலில் என்னைப் பார்த்துவிட்டு விசாரித்தார். அழுகையின் ஊடாகப் பேரைச் சொன்னேன், ஊரைச் சொல்லவில்லை. ‘வழிதவறவிட்ட பிள்ளைபோல’ என்று தேற்றி அவரது வீட்டுக்குக் கூட்டிப்போய்விட்டார்.
பெரிய பண்ணையம். 19 நாட்கள் அவரது வீட்டிலேயே வைத்துக் கவனித்து, பிறகு எங்கள் வீட்டுக்குக்கொண்டுசேர்த்தார். அதற்குப் பிறகு, அந்த வருடம் முழுவதும் வீட்டிலேயே இருந்து மறுபடி ஒருமுறை ஓடிப் பிடிபட்டேன். அடுத்த ஆண்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசுப் பள்ளியில் சேர்ந்தேன்.
நாளாவட்டத்தில் நான் காணாமல் போய் வீடு திரும்பியவன் என்பதையே மறந்துவிட்டிருந்தேன். அவரது பெயர் மோபிரி ரெட்டி என்பதாக நினைவில் இருக்கிறது. அவரது உருவமும்கூட கோட்டுருவாகப் பதிந்திருக்கிறது. ‘நீங்கள் அழைத்துப் போயிருக்காவிட்டால் என்னவாக ஆகியிருப்பேன்?!’ என்று அவரது கையைப் பிடித்துக்கொண்டு ஒருநாளாவது பேசியிருக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குத் தாமதமாகவே வந்தது. அவர் இப்போதிருக்க வாய்ப்பில்லை. ஆனால், அவருக்கு மானசீகமாக எனது நன்றியைச் சொல்ல விரும்புகிறேன். எனது இலக்கியச் செயல்பாடுகள் தொடர்வதற்குப் பலவகைகளிலும் துணைநிற்கும் நண்பர் பெ.குமார், மைத்துனர் எத்திராஜ் இருவரையும் இங்கு சுட்டுவது நிறைவென்று நினைக்கிறேன்.”
“தமிழில் ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கும் அதிகாரத்தை உங்களுக்கு வழங்கினால்…”
“நாமும் நோபல் பரிசையேதான் கொடுக்கணுமா? அதைத் தாண்டிய ஒரு பரிசைத் தோழர் எஸ்.வி.ராஜதுரைக்குக் கொடுப்போம். ஆனால், அவர் ஏற்றுக் கொள்ளமாட்டார். பரிசுத்தொகையைப் ‘புதுவிசை’க்கு நன்கொடையாகக் கொடுத்து, தொடர்ந்து அச்சில் வரட்டும் என்பார். (நான், ஷோபாசக்தி, ராகவன் மூவரும் சேர்ந்து ‘ஸ்பார்ட்டகஸ்’ பெயரில் மதிப்பார்ந்த விருது ஒன்றை உருவாக்க 2007 பிப்ரவரியில் லண்டனில் திட்டமிட்டோம். கைகூடவில்லை.)”
“இலக்கியம் சமூக மாற்றத்திற்கான முக்கியக் கருவி என்று திடமாக நம்புகிறீர்களா?”
“சமூக மாற்றத்திற்கான அவசியத்தை அது பேசும். அதற்கான விழைவை முன்மொழியும். அல்லது அமையப்போகும் புதிய சமூகம் குறித்த சித்திரத்தை ஈர்ப்பான வகையில் வரைந்து காட்டக்கூடும். ஆனால், அதனாலேயே மக்கள் தூண்டப்பெற்று சமூகத்தை மாற்றியமைப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக மாற்றத்திற்கான இயக்கம் முனைப்படையும்போது அதற்கான கருத்தியல் நியாயத்தைப் பரப்பும். அந்த வகையில் இலக்கியத்தை சமூக மாற்றத்திற்கான முக்கியக் கருவியாக அல்லாமல், கருவிகளில் ஒன்றாக நம்புகிறேன்.”
“உங்களை மிகவும் பாதித்த எழுத்தாளர்கள்?”
“கூகி வாங் தியாங்கோ, மஹாஸ்வேதா தேவி, ஸீக்ரிப்ட் லென்ஸ், கந்தர்வன்.”
“ஒரு கவிதை வரியோடு நிறைவு செய்வோம்…”
“… ஆட்டம் இப்போது பூஜ்ஜியத்திலிருந்து துவங்குகிறது.”
நன்றி : விகடன் – தடம் (நவம்பர் 2017)