வன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கேரளாவில் 30 தலித் அமைப்புகள் இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை முடங்கியது..
ஏப்ரல் 2 ம் தேதி நாடுமுழுவதும் சில குறிப்பிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்துக்கு அழைப்பு விடுத்திருந்த போது கேரளாவில் வேலைநிறுத்தம் நடைபெற்றது.
மாநிலஅரசின் போக்குவரத்துக் கழகம், தனியார் பேருந்து இயக்குநர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் வழக்கம்போல இயங்கும் என்று முன்னதாகவே அறிவித்திருந்தன.
ஆனால் மாநிலத்தின் பல இடங்களில் ஆர்ப்பாட்டக்காரர்கள் வாகனங்களை ஓடுவதை தடுத்து நிறுத்தும் வகையில் வழிமறித்தனர்.
கொச்சியில், போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்த தலைவர்களில் முக்கியமானவரான கீதானந்தன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டு சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.,
கைது செய்யப்படுவதற்கு முன் கீதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”கேரளா முழுவதும் பெருமளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன. அவ்வகையில் எங்கள் ஆர்ப்பாட்டம் வெற்றியடைந்துள்ளது. நாங்கள் கைது செய்யப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.. ” என்றார்.
கண்ணூர் மாவட்டத்தில் வணிகர் சங்கங்கள், கடைகள் மூடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தேர்வுத்தாள் திருத்தும்பணி பாதிப்பு
கொல்லத்தில், மாநில அரசின் பேருந்து ஒன்றின்மீது கல்வீச்சு நடந்தது. கொல்லம் மாவட்டத்தில் போக்குவரத்து பாதிப்புகள் இருந்ததால் பத்தாம் வகுப்பு தேர்வுத்தாள்கள் திருத்தும் முகாம்களுக்கு செல்லும் ஆசிரியர்கள் அங்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பெண் ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், ”நாங்கள் முகாமுக்குச் செல்லமுடியும் என்று தோன்றவில்லை. மாநில அரசு அளித்த உறுதியின்பேரில்தான் நாங்கள் இன்று தேர்வுத்தாள் திருத்த வரலாம் என்று முடிவு செய்தோம். போக்குவரத்தை சீர் செய்ய காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் இப்போது அங்கு செல்லமுடியாமல் தவிக்கும் நிலையே ஏற்பட்டுள்ளது” என்றனர்.
மாநில தலைநகர் திருவனந்த புரத்தில் ஐடி ஊழியர்கள் டெக்னோபார்க் வளாகத்திற்கு செல்லும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பல்கலைத் தேர்வு ஒத்திவைப்பு
இன்று நடைபெற வேண்டிய பல்கலைக்கழகத் தேர்வுகள் வேறு நாட்களில்மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
ஏப்ரல் 3 அன்று உச்ச நீதிமன்றம் தலித் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்த உச்ச நீதிமன்ற உத்தரவிட்டது.