சரி மூதுரையினை அம்பேத்கர் ஏன் பயன்படுத்தினார் என்பதை தெரிந்துக்கொள்வதற்கு முன்பு அதன் மூலத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்ள வேண்டும், அப்போதுதான் அம்பேத்கரின் மேதமையைப் புரிந்துக்கொள்ளத் தொடங்குவோம்.
fools rushing in where the angels fear to tread சொற்றொடரை முதலில் பயன்படுத்தியவர் Alexonder Pope என்று தோழர் ரூபா நேட் அவர்கள் சொன்னது உண்மை. அலெக்சாண்டர் போப் தான் எழுதிய An Essay on Criticism என்ற நூலில்தான் முதன்முதலில் எழுதினார், அந்த நூல் 1711 மே மாதம் 15ம் நாள் வெளியிடப்பட்டது. பின்பு போப் அவர்களின் இந்தச் சொற்றொடர் பலரால் கையாளப்பட்டது. குறிப்பாக எட்மண்ட் பர்க், ஆப்ரகாம் லிங்கன் என பெரிய பட்டியல் நீள்கிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் அது மாற்றத்தை விரும்புவோர்கள் பயன்படுத்தும் சொற்றொடராக மாறிவிட்டது.
சரி இதற்கும் சூத்திரர்களுக்கும் என்ன தொடர்பு…. அல்லது தற்கால வழக்கத்தில் பிற்பட்டோர் என்றும் மிகவும் பிற்பட்டோர் என்றும் அழைக்கப்படும் மக்களுக்கும் என்ன தொடர்ப்பு… அதைப்பற்றி பெரியார்.ஈவெரா அவர்கள் கூறுவதைப் பார்ப்போம்..
“நான் பிறப்பதற்கு முன்னோலேயே தேவடியா மக்கள் நீங்கள், நான் பிறப்பதற்கு முன்பே சூத்திரர்கள் நீங்கள்- நான்காவது சாதி நீங்கள், இப்போது நாளைக்கு நான் சாகப்போகிறேன் – சூத்திரனாய் விட்டுவிட்டுத்தானே சாகிறேன்… (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3205)”
“… சாஸ்த்திரத்திலே தேவடியாள் மகன் என்கிறான், பார்ப்பானுக்கு பிறந்தவன் என்கிறான், சூத்திரனுக்கு பெண்டாட்டியே கிடையாது என்கிறான். சூத்திரச்சி பார்ப்பானுடைய வைப்பாட்டி என்று எழுதி இருக்கிறான்…(இதையெல்லாம்) யார் கவனித்தீர்கள்… ((பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3234)”
“..ஆனதினாலே, நாம் முதலாவது இப்போது மானத்துக்காகப் போராடுகிறோம், வேறே எதற்காகவும் இல்லை. இழிவு – தேவடியாள் மகன், பார்ப்பானுடைய வைப்பாட்டி மகன், தாசிப் புத்திரன் என்று சட்டத்திலே இருக்கிறது.. (பெரியார் ஈவெரா சிந்தனைகள் தொ.1:1:3249):
பெரியார் ஈவெரா-வின் மரண சாசணத்தில் இடம்பெற்ற இந்த தீப்பொறிப் பறக்கும் பேச்சைப் படிக்கும்போது அவரின் ஆற்றாமையை, கோபத்தினை, சூத்திரர்களின் இழிவை நீக்க முடியவில்லையே என்ற இயலாமையினை புரிந்துக் கொள்ள முடியும். தமது மரண வாசலில்கூட பிற்பட்ட மக்கள் தாங்கி நிற்கும் வேசி மக்கள் என்ற இழிவைப் பற்றி அவர் கோபப்பட்டதற்கு நியாயம் இருக்கிறது. அவர் குறிப்பிட்ட அந்த இழிவிற்கு ஏராளமான சான்றுகளை ரிக் வேதத்தில் தொடங்கி, மனு, கௌடில்யம், பகவத்கீதை உள்ளிட்ட இந்துமதப் புனித நூல்களில் காணமுடியும்.
ஆயினும் இது ஒரு பக்கத்தின் உண்மை மட்டுமே. சூத்திரர்கள் வேசி மக்கள்தான் என்று இந்துமதப் புனித நூல்கள் கூறுவது உண்மை என்றாலும், அவை ஓர் ஆதி உண்மையை தொடர்ந்து மறைத்து வந்தன. அந்த ரகசிய உண்மையை முதன்முதலில் உலகிற்கு வெளிப்படுத்தியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள்தான்.
இந்தோ ஆர்ய சமூகத்தில் ஆதியில் பிராமணர், சத்திரியர், வைசியர் என்ற மூன்று வர்ணங்கள் மட்டுமே இருந்தன. ஆனால் சத்திரியர்களுக்குள் உருவான மோதலில் ஒரு பிரிவினர் தோற்கடிக்கப்பட்டார்கள், தோற்றவர்களுக்கு பிராமணர்கள் பூநூல் அணிவிக்கும் சடங்கை செய்ய மறுத்து அவர்களை சூத்திர வர்ணம் என்ற நான்காம் வர்ணமாக மாற்றினார்கள் – என்ற உண்மையை அம்பேத்கர் மட்டும்தான் முதலில் இந்த உலகிற்கு அறிவித்தார். நான்கு வர்ண தோற்றத்தைப் பற்றி கூறும் ரிக் வேதத்தின் புருஷ சுக்தம் என்பதும் இடைச்செறுகல் என்பதையும் அவர் அம்பலப்படுத்தினார்.
கேள்வி என்னவென்றால் இந்தோ ஆர்ய சமூகத்திற்கு சம்பந்தமே இல்லாத தென்னாட்டு பிற்பட்டோர் இந்த வேசி மக்கள் என்ற இழிவை சுமப்பதற்கு காரணம் என்ன.. அதைப் புரிந்துக் கொண்டால்தான் பெரியார் ஈவெரா அவர்களின் கோபத்தினைக்கூடப் புரிந்துக்கொள்ள முடியும். எனவே அதை ஆராய்வது ஒவ்வொரு பிற்பட்டத் தோழரின் கடமையாகும்.
நிலைமை இப்படி இருக்க.. சூத்திரர்களுக்கு இழைக்கப்பட்ட அவமானகரமான அநீதியைக் கண்டுப் பொங்கிய அம்பேத்கர் 15 ஆண்டுகளை செலவழித்து அதற்கான மூல உண்மையைக் கண்டுபிடித்து “ சூத்திரர்கள் என்போர் யாராய் இருந்தார்கள் – அவர்கள் இந்தோ-ஆர்ய சமூகத்தில் எவ்வாறு நான்காம் வர்ணமாக ஆனார்கள்? என்ற நூலை 1946ல் வெளியிட்டார். இந்த நூலின் முன்னுரையில்தான் அம்பேத்கர் fools rushing in where the angels fear to tread என்ற பதத்தை முதன் முதலில் பயன்படுத்தினார். பின்பு பல தருணங்களில் அவர் அதைப் பயன்படுத்தியுள்ளார் என்பது தனிக்கதை.
ஆனால் நிலைமை என்ன..? சூத்திரர்களைப் பற்றி அம்பேத்கர் கண்டுபிடித்த உண்மை எத்தனைப் பேருக்குத் தெரியும். குறிப்பாக திராவிட இயக்கங்ககூட அதைப்பற்றி அவ்வளவாக பேசவில்லை என்பது வருத்தத்திற்கு உரிய உண்மை.
இது ஒரு பக்கம் இருத்தால் மறுப்பக்கம்.. தங்களை தேவதையர் என்றுத் தேவர்கள் என்றும் சத்திரியர்கள் என்றும் அழைத்துக் கொள்ளும் தலித்தல்லாதார் தாம் சுமக்கும் வேசி மக்கள் என்று பொருள்படும் சூத்திரப்பட்டத்தின் தோற்ற மூலத்தை அறிந்திருக்கிறார்களா.? அதை அவர்கள் எப்படி, எப்போது துறப்பார்கள்..?
எனவே சூத்திரர்கள் வேசிமக்கள் என்று சொல்லப்படுவதும் உண்மை, அது இல்லை என்பதும் உண்மை. ஆனால் இந்தப் பட்டத்தைச் சுமப்பவர்கள் தாங்கள்முட்டாள் என்று கருதும் அம்பேத்கர் அவர்கள் மட்டும்தான் சூத்திர மூலத்தைக் கண்டுபிடித்தார் என்ற மிக எளிய உண்மையை மறந்து விட்டார்கள். அதற்காக அவர் நன்றியை எதிர்ப்பார்க்கவில்லை.. மாறாக வேசிமக்கள் என்ற பட்டத்தைத் துறந்தாலே அவருக்குச் செய்யும் நன்றிக்கடன்..
– சன்னா