பறவைகள் கீச்சிடும் சத்தம், வண்டுகள் ரீங்காரம், எங்கோ வெட்டவெளியில் இருந்து இரைச்சலுடன் ஓடும் நாயின் குரைப்பு என துவங்குகிறது “பரியேறும் பெருமாள் பி.ஏ.,பி.எல்.” எனும் உயிரை உருக்கி வடித்த ஒரு புதிய தமிழ் சினிமா. கருப்பி எனும் நாயின் நான்கு கால்களை தூண்களாக்கி நகரும் கதை என நினைக்கும் முன்னமே சுக்கு நூறாய் உடைந்து நொறுங்குகிறது நம் மனம் ரயிலின் விசையில் சிதறுண்டுபோன கருப்பியின் உடலைப்போல். தம்முடன் நம்பி வந்த வாயில்லா ஜீவனின் கழுத்தில் துண்டைக் கட்டி ரயில் தண்டவாளத்தில் கட்டிவிட்டவர்களின் கொடூர ஜாதிவெறி குற்றுயிரும் குலைஉயிருமாக சிதைந்தபோகும் கருப்பியைக் கண்டதும் விளங்குகிறது. ஒரு குட்டை நீரில் குளிப்பாட்டியதற்காக அந்த நீரில் மூத்திரம் பெய்யும் ஜாதிய திமிரும், அதற்காகவே அந்த நாயைக் கொல்லத்துணிந்த ஒருதுளி கருணையற்றவரின் கொலைவெறியும் புதிதல்ல தமிழகத்தில். தலித் குடிகளின் ஆண் நாய் கள்ளர் வீட்டு பெண் நாய் கர்ப்பத்துக்கு காரணமானதால் அந்த ஆண் நாயை அடித்துக் கொன்றதுடன் அந்த நாயை வளர்த்த தலித் குடிசையையும் நாசப்படுத்தி இனி எந்த தலித்தும் ஆண் நாய் வளர்க்கக்கூடாது என கட்டுப்பாடு விதித்த தமிழ் நாட்டு நாய்-ஜாதிய வரலாறு ஏராளம். தமது சுயமரியாதைக்கான கலக வடிவமாக ஒரு மனிதன் இறந்தால் என்ன கர்மகாரியங்கள் செய்வார்களோ அத்தனையும் கருப்பி எனும் நாய்க்கு செய்தது தமிழ் சினிமாவில் புதிய மானுடத்தின் கலை வடிவம் கொடுத்து நகர்கிறான் பரியேறும் பெருமாள்.
1870-களில் புத்தச்சேரியாம் புதுசேரியில் பொன்னுத்தம்பி பிள்ளை எனும் இந்தோ-பிரெஞ்சு வழக்குரைஞர் அன்றைய தலித் குடிகளை பிராமினிக் வரிசை எனப்படும் சென்சசில் சேர்க்காதபோது தம் மக்களை ஐரோப்பியன் சென்சஸ் வரிசையில் இணைக்கப்போராடி வெற்றி பெற்றபின் “ரினோஸான்ஸ்” எனப்படும் “ஹிந்துயிசத்திலிருந்து விலகியவர்கள்” எனும் 2000 தலித் குடிகளை கொண்ட ஒரு ஹிந்து-அல்லாத தலித் குடிகள் எனும் அந்தஸ்தை இன்றும் ஒரு சாரார் “இந்தோ-பிரெஞ்சு” குடிகளாக இருப்பதற்கு காரணமாக இருந்தவர். ஜாதிய தீண்டாமை கொடுமையாக இருந்த பிரஞ்சு-இந்தியாவில் அக்கொடுமைக்கு எதிராக போராட்டம் கண்டவர் பொன்னுத்தம்பி பிள்ளை. ஜாதி-எதிர்ப்பில் பண்டிதர் அயோத்திதாசருக்கும் முன்னவர் என சொன்னால் மிகையாகாது. 1860-களிலேயே பொன்னுத்தம்பி பிள்ளை பாரிசுக்கு சென்று சட்டம் படித்தவர். சட்டம் படிக்கும் முன் அவர் அனுபவித்த ஜாதிய கொடுமைகள், சட்டம் படித்த பிறகு புதுச்சேரியில் வழக்குரைஞராக கோர்ட்டுக்கு உள்ளே வழக்கறிஞருக்கான உடையை அணிந்து செல்ல தடை கோரிய ஜாதி-ஹிந்துக்களுக்கு எதிராக பாரிஸ் கோர்ட்டில் நீதி கிடைக்க அவர்பட்ட பாடுகளும் அவமானங்களும், பரியேறும் பெருமாள் எனும் தலித் இளைஞன் சட்டம் படிக்கச் செல்லும் கல்விக் கூடத்தில் அனுபவிக்கும் ஜாதிய தீண்டாமை அடக்குமுறைகளை உள்நிறுத்திய சமூக அவமானங்களும் இன்னும் மாறாமல் தான் இருக்கின்றன என்பதை பரியேறும் பெருமாள் சினிமா விளக்குகிறது.
உலகத்தில் மிகச் சிறந்த அரசமைப்பு சட்டத்தை சுதந்திர இந்தியாவுக்கு வழங்கிய நவ இந்தியாவின் தந்தை டாக்டர் பாபாசாகேப் அம்பேட்கர் எனும் மாமனிதனின் துன்பியலின் தொடர்ச்சியாகவே, பல ஒடுக்கப்பட்ட மாணவர்க்கு இந்திய துணைக்கண்டம் எங்கும் ஜாதியை அடியொற்றி நடக்கும்உடல்ரீதியான உளவியல் ரீதியான ஒடுக்குமுறையை பரியேறும் பெருமாள் மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார
மாரி செல்வராஜ் தொடுக்கும் காட்சியியல் போர் கருப்பி எனும் கலகக் குறியீட்டு அரசியலை முன் நிறுத்தி மிக வலுவாக தழிழ் மக்களின் ஜாதிய உளவியல் சிக்கலை உடைக்க ஒரு உரையாடலை துவக்கி இருக்கிறது. அம்பேத்கரியத்தை அப்படியே ஒரு சொல்லாடலும் மாறாமல் கொடுத்த பா.ரஞ்சித்தின் சமூக-சமமற்ற ஜாதி அடுக்கை உடைக்கும் கருத்தியலை செரித்துக்கொள்ள இயலாமல் திணறிக் கொண்டிருக்கும்போதே, தமிழ் பண்பாட்டு புனைவுகளில் புதைந்திருக்கும் முரட்டு ஜாதிய மூர்க்கத்தை அதனூடாகவே உள்நுழைந்து அக்கினி தகிக்கும் தனது மனவேதனை கசக்கிப் பிழிந்த ஒரு சிறு கண்ணீர் துளியால் உடைத்து நொறுக்குகிறான் பரியேறும் பெருமாள். தவறாக பயன்படுத்துகிறர்கள் என வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நிர்மூலமாக்கத் தவிக்கும் உச்சநீதி மன்றத்தின் நீதியரசர்களின் மேசை மீது காட்சிக்கு சிக்காமல் பதுங்கி ஒளிந்திருக்கும் ஜாதிய வன்கொடூர பயங்கரவாத தடயங்களை “இந்தா எடுத்துக்கொள்ளுங்கள்,” என வீசி எறிகிறான் பரியேறும் பெருமாள்.
‘தலித் ஆண்கள் மீது தாம் கொண்ட உயர்ந்த காதலை நாலு-வர்ணத்தில் கீழ் ஜாதியான ஆதிக்க (சூத்திர) ஜாதிப் பெண்கள் வெளிப்படுத்தலாம், ஆனால் ஜாதிக்கே சம்மந்தம் இல்லாத ஜாதிமறுக்கும் தலித் ஆண்கள் வெளிப்படுத்தக்கூடாது’ என்ற ஹிந்து-சமூக ஜாதி அடுக்கு அநீதியையும், ஜாதியற்றவரை நாயாகப் பார்க்கும் வரை ஆதிக்க ஜாதிகள் தொடர்ந்து நடத்தும் கொலைகளுக்கு சொற்ப விளக்கங்கள் தயாரித்துக் கொண்டு தம் பெண்களின் பின்னத்தில் கர்ப்பப்பையில் ஜாதிய புனிதத்தை சட்டம்போட்டு ஆணி அடித்து மாட்டி வைத்திருக்கும் தொடர் எதிர் முரண்களையும் மென்மையாக விளக்கி ஒரு புதிய உரையாடலுக்கு அழைப்பு விடுக்கிறான் பா.ரஞ்சித்தின் “நீலம்” பரப்பும் மாரி செல்வராஜின் அம்பேத்கரிய அக்கினி குஞ்சு கதிர் எனும் “பரியேறும் பெருமாள்!”
நான் என்றைக்கோ 1980களில் படித்த வில்லியம் வாட்ஸ்வொர்த்தின் “Solitary Reaper” கவிதை தான் நினைவுக்கு வந்தது. தனியாக ஒரு பெண் ஒரு இனிய சோகப்பாடல் பாடிக்கொண்டே விளைந்த கோதுமை கதிர்களை அறுத்து சுமைக்கட்டி தன் பாடலின் வழி ஒரு புரியாத கண்ணீர் கதையை போர்நாளில் விளைந்த சோக முரணை தான் மட்டுமே தனக்காக விளக்கி தனியாக போராடும் விதமாக இனிய தனியிசையாக பாடுவதாக வில்லியம் வாட்ஸ்வொர்த் கவிதை அமைத்திருக்கும். பரியேறும் பெருமாள் தனது வாழ்வில், தனித்து எழும் தனித்து குரலெழுப்பும் தனியாகவே அழுதுகொள்ளும் தனியாகவே மனித மாண்பை மீட்கும் போராட்டக்குணம் படைத்தவனாக இருக்கிறான்.
1991-ல் பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்தநாள் நூற்றாண்டு முதல் எழுந்த சமத்துவத்தை நிலைநாட்டும் ஜனநாயகப் போராட்டம் நடக்கும்போதே குஜராத்தின் பல கிராமங்களில் ஜாதி-ஹிந்துக்களின் பெண்களை காதலித்து கல்யாணம் செய்துகொண்ட பல தலித் இளைஞர்களின் பிறப்புறுப்புக்கள் அறுக்கப்பட்டு தீயிலிட்டு கொளுத்தி அவற்றின் மீது தாண்டவம் ஆடினர் குஜராத் ஜாதி-ஹிந்துக்கள். ஆணவக்கொலையின் ஆவணமாக குஜராத் தலித் இலக்கியங்கள் பதிவு செய்தது இன்னும் எனது நினைவில். அதன் ஒரு கவிதையை நான் மொழிபெயர்த்து வெளியிட்டேன். அதன் துவக்கம் பின்வருமாறு இருந்தது:
“எனது ஆணுறுப்பை அறுத்து
நடுரோட்டில் கொளுத்தி
அதன் மீது நடனம் ஆடினீர்கள் –
அவ்வளவு அழகா எனது ஆணுறுப்பு?”
சாக்ய மோஹன்