Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    ambedkar.in
    • Dr.அம்பேத்கர்
      • எழுத்தும் பேச்சும்
      • நூல் தொகுப்புகள் (Text) – தமிழில்
      • பாபாசாகேப் நூல் தொகுப்புகள் – தமிழ் (அனைத்தும்)
      • Writings & Speeches (English)
      • மேற்கோள்கள்
    • பௌத்தம்
      • பௌத்த கட்டுரைகள்
      • ஆய்வுகள்
      • குறிப்புகள்
      • பௌத்த நூல்கள்
    • வேர்களும் விழுதுகளும்
      • வாழ்க்கைக் குறிப்புக்கள்
    • வன்கொடுமை
      • சமூக வன்கொடுமைகள்
      • சட்டப் பாதுகாப்பு
    • கலை இலக்கியம்
      • கட்டுரைகள்
      • கவிதைகள்
      • சிறுகதைகள்
      • ஆவணப்படங்கள்
      • பாடல்கள்
      • உரைகள்
      • ஒலி/ஒளிப் பதிவுகள்
      • சினிமா
      • நூல்கள் – வெளியீடுகள்
    • சிறப்புப் பக்கம்
      • நேர்காணல்கள்
      • அலசல்
    ambedkar.in
    Home » சிங்கப்பூரில் சாதிய அடையாளங்கள் – பேராசிரியர் ஜான் சாலமன்
    சிறப்புப் பக்கம்

    சிங்கப்பூரில் சாதிய அடையாளங்கள் – பேராசிரியர் ஜான் சாலமன்

    Sridhar KannanBy Sridhar KannanApril 29, 2021No Comments8 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஜான் சாலமன், தமிழ் மற்றும் சீன (ஹொக்கியன்) இனக்கலப்புள்ள மூதாதையரைக் குடும்பப் பின்னணியாகக்கொண்டவர்.

    புலம்பெயர்தல், காலனியாதிக்கத்தின் பண்பாட்டுத் தாக்கம், இனம் என்கிற கருத்தாக்கம் ஆகியவற்றின்மீது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறார். தேசிய, இன அடையாளங்கள் குறிப்பாக அவை எவ்வாறு கட்டமைக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்பதிலும் அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களின்மீதும் ஆய்வுக்கவனம் குவிக்கும் ஜான் சாலமனிடம் சிங்கப்பூரில் சாதி குறித்த வெளிப்படையான நேர்காணல்.

    தங்கள் கல்வி, பணி, ஆராய்ச்சி, குடும்பம் ஆகியவற்றைப் பற்றி…

    நான் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசியராக 2016ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றுகிறேன். சிங்கப்பூர் வரலாறு, வெகுஜனக் கலாச்சாரம், பிரிட்டிஷ் பேரரசு, ஆசிய வரலாறு ஆகியவற்றைக் குறித்து அங்கு வகுப்புகள் நடத்துகிறேன். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் என்னுடைய கல்வியும் வேலையும் அமைந்திருந்தன. என் இளநிலைக் கல்லூரிப் படிப்பையும் முனைவர் பட்டத்தையும் நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பெற்றேன்.

    நான் ஒரு சிங்கப்பூரன். தமிழ் மற்றும் சீன (ஹொக்கியன்) இனக்கலப்புள்ள மூதாதையரைக்கொண்ட குடும்பப்பின்னணி என்னுடையது. புலம்பெயர்தல், காலனியாக்கத்தின் பண்பாட்டுத் தாக்கம், இனம் என்ற கருத்தாக்கம் ஆகியவற்றின் மீது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறேன். தேசிய மற்றும் இன அடையாளங்கள் மீது அதுவும் குறிப்பாக அவை எவ்வாறு கட்டமைத்துப் பராமரிக்கப்படுகின்றன என்பதிலும் அவற்றின் வரலாற்றுப் பின்புலங்களின்மீதும் எனக்கு ஆய்வுக்கவனம் உண்டு.

     

    சிங்கப்பூரில் தமிழர்களிடையே நிலவிய தீண்டாமை குறித்து ஆய்வு செய்யவேண்டுமென்ற எண்ணம் எவ்வாறு உண்டானது?

    என் இளநிலைக் கல்லூரிக் கல்வியின்போது இந்தியாவைக் குறித்த பாடமொன்றின் வழியாகத்தான் அந்த ஆர்வம் முதலில் எழுந்தது. வரலாற்றிலும் தற்காலத்திலும் இந்தியாவில் தலித்துகள் பட்ட, படும் பாடுகளையும் தலித் சமூகங்களின் இழிநிலையையும் குறித்துக் கற்றுணர்ந்தேன். அதன்மூலம்  இச்சமூகங்களின் வரலாறுகளைப் புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் வலுவடைந்தது. மேலும் தொடர்ந்து மேம்படும் கல்வி, சமுதாயச் சீர்திருத்தம், அரசியல் மற்றும் சட்ட ரீதியான முயற்சிகள் ஆகிய அனைத்தையும் தாண்டி எவ்வாறு ஒரு சில சமூகங்களால் மற்ற சில சமூகங்களின்மீது தொடர்ந்து நீண்ட நெடுங்காலத்துக்கு ஆதிக்கம் செலுத்தவும் ஒடுக்கவும் முடிகிறது என்பதை ஆழமாக ஆராயவேண்டும் என்ற ஆர்வமும் முக்கியமான காரணம்.

    இருபதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிறிஸ்தவமதப் பரப்புநர்கள் உருவாக்கி அளித்த இனவரைவியல் மற்றும் ‘திராவிட’ தமிழ் அடையாளம் குறித்த கருத்தாக்கங்கள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்புகளை என் இளநிலைக் கல்லூரிக் கல்வியின் இறுதியாண்டில் ஆராய்ந்தேன். சாதிப்பிரச்சனைகளும் சாதியமைப்பை மறுப்பதும் தமிழ் அடையாளம் எவ்வாறு விளக்கப்பட்டது என்பதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது. குறிப்பாக 19ம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து 20ம் நூற்றாண்டின் தொடக்கம்வரையிலான காலகட்டத்தில் செயல்பட்ட பெரியார் போன்ற சமூக சீர்திருத்தவாதிகளால் அது முன்னெடுக்கப்பட்டது.

    மேலும் தொடர்ந்து ஆராய்ந்ததில், 1918 முதல் 1939 வரையிலான இரண்டு உலகப்போர்களுக்கிடையேயான காலகட்டத்தில், இந்தியாவிலிருந்த இத்தகைய தமிழ்ச் சமுதாய இயக்கங்களுக்கும் காலனியாதிக்கத்துக்குட்பட்ட சிங்கப்பூரிலிருந்த தமிழ்ச் சமூகத்திற்கும் வலுவான இணைப்புச் சரடுகள் இருந்ததைக் கண்ணுற்றேன்.

    காலனியாதிக்கத்துக்குட்பட்ட காலத்தில் சிங்கப்பூருக்கும் மலாயாவின் பிற பகுதிகளுக்கும் தீண்டப்படாத சாதிகளிலிருந்து பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் புலம்பெயர்ந்ததை அறிந்தபோது அவர்களின் வாழ்வனுபங்கள் இங்கு எவ்வாறு இருந்திருக்கும் என்று அறிந்துகொள்ளும் ஆர்வம் பிறந்தது.

    விளிம்புநிலை மனிதர்களான இவர்கள் ஒரு அந்நிய தேசத்தின் பல்லினச் சூழலை எப்படி எதிர்கொண்டனர்? அவர்களுடைய சாதி அடையாளங்கள் என்னவாயின? வலுவிழக்காமல் தொடர்ந்ததா? எதிர்ப்புக்குள்ளானதா? காலத்தால் மாற்றமடைந்ததா? தற்கால சிங்கப்பூரில் தமிழ் இந்துக்களின் பொதுவாழ்விலும் அடையாளத்திலும் சாதி பொருட்படுத்தும்படியாக இல்லை என்று வைத்துக்கொண்டால் இந்த மாற்றம் எப்போது எப்படி நடந்தது? இப்படியான கேள்விகள்தாம் என்னை நீங்கள் குறிப்பிட்ட தீண்டாமை குறித்த  ஆராய்ச்சிக்குத் தூண்டின.

    20ம் நூற்றாண்டு சிங்கப்பூரில் சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள் தமிழ்ச் சமூகத்தில் விரவியிருந்த சாதிவேற்றுமைகளை அகற்றுவதற்குச் செய்த பங்களிப்பு என்ன?

    சிங்கப்பூரிலும் மலாயாவின் மற்ற பகுதிகளிலும் சமுதாயச் சீர்திருத்த இயக்கங்கள் அந்த வகையில் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்திருக்கின்றன எனலாம். குறிப்பாகச் சாதியத்தில் ஊறிப்போயிருந்த சமூகங்களிடையே சாதியடையாளம் குறித்த மாற்றுச் சிந்தனைகளை விதைத்தது.

    சாதி என்பது பிற்போக்கான, நவீனகாலத்துக்கு ஒவ்வாத, எந்தவகையில் பார்த்தாலும் நியாயமற்ற ஒரு விஷயம் போன்ற சிந்தனைகளை இச்சீர்திருத்தவாதிகள் முன்வைத்தனர். அதேநேரத்தில் முன்பு ‘தீண்டப்படாதவர்’களாயிருந்து பிறகு இச்சீர்திருத்த இயக்கங்களில் பங்கேற்றுத் துடிப்புடன் செயல்பட்டவர்களை மரியாதை, கண்ணியம், சமத்துவம் ஆகியவற்றுக்கு அடையாளமாகக் காட்டினர்.

    இவ்வியக்கங்கள் சாதி குறித்த மக்களின் நிலைப்பாட்டை ஒரே இரவில் மாற்றிவிட்டதாகச் சொல்வதற்கில்லை என்றாலும் மற்ற காரணிகளும் சேர்ந்து சாதி இங்கு மெல்லத் தேய்ந்து காணாமற்போவதற்கு அவ்வியக்கங்கள் அளித்த புதிய சிந்தனைகள் முக்கியமான காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

    இரண்டாம் உலகப்போரும் ஜப்பானிய ஆதிக்கமும் அன்றைய சிங்கப்பூரில் தமிழரிடையே நிலவிய சாதியை எவ்வாறு பாதித்தது?

    இரண்டாம் உலகப்போர் பலவகையில் இந்தியச் சமூகத்தை ஆழமாக பாதித்தது, மாற்றியமைத்தது. இந்திய தேசிய ராணுவத்தையும் இந்திய சுதந்திரத்தையும் ஆதரித்த அச்சமூகத்தின் மீதான போர்க்கால பாதிப்பு சுபாஸ் சந்திரபோஸ் வருகைக்குப்பின் கூர்மையடைந்தது.

    போஸ் ஒரு சிக்கலான ஆளுமை. பல்வேறு செயல்பாடுகள் அவருக்கிருந்தன என்றாலும் இந்தியச் சமூகத்தை ஒருங்கிணைப்பதும் அவர்களைப் போரில் ஈடுபத்துவதற்காக ‘நவீன’ப்படுத்துவதும் அவர் செய்யமுயன்றவற்றுள் ஒன்று. ஜான்சிராணி ரெஜிமெண்ட்டை உருவாக்கி அதில் பெண்களைப் போர்புரிய இணைத்தது ஒரு நல்ல உதாரணம். அதற்கு சில ஆண்டுகளுக்குமுன் அப்படி ஒன்றை இங்குக் கற்பனைசெய்வதுகூடக் கடினமாக இருந்திருக்கும்.

    அவர் ஒரு கோவிலுக்குச் சென்றபோது சாதி வேற்றுமை பாராட்டக்கூடாது என்பதை வலியுறுத்தியிருக்கிறார். அக்காலத்தில் மலாயா முழுவதும் பல இந்து ஆலயங்களில் தீண்டப்படாத சாதிகளுக்கு நுழைவு மறுக்கப்பட்டிருந்தது. இரண்டாம் உலகப்போருக்குப் பின்னரே ஆலயங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சாதி அடிப்படையில் அல்லாமல் அனைவர்க்கும் தம் கதவுகளைத் திறந்தன. போரும் ஜப்பானிய ஆக்கிரமிப்பும் ஆழமான அடிப்படை மனமாற்றத்துக்குக் காரணமாக இருந்தன என்பதை இந்த உதாரணத்திலிருந்து புரிந்துகொள்ளலாம்.

    போர்க்காலத்தில் உண்டான தாக்கங்கள் போர்முடிந்தபின்னும் நீடித்தன. துறைமுகப் பகுதியொன்றில் தீண்டப்படாத சாதியைச் சேர்ந்த சக பணியாளர்க்கு அருகில் அமர்ந்து உண்ணமறுத்த ஒருவரை ஜப்பானியப் போர்வீரர் கன்னத்தில் அறைந்ததை நான் ஆய்வுக்காக நேர்காணல் செய்த ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.

    ஜப்பானிய ஆதிக்கத்தின் இறுதியாண்டுகளில் அனைவர்க்கும் சமமாகக் கிடைத்த இன்னல்களும் அடிப்படைத்தேவைகள்கூட நிறைவுறாத சூழலும் சமுதாயச் சமப்படுத்திகளாக இருந்திருக்கக்கூடும். போருக்குப் பிந்தைய காலத்தில் சாதி குறித்த மனப்பான்மைகள் மாறியதால் தீண்டப்படாதவர்களுக்கு நன்மை உண்டானது என்றாலும் போர்க்காலத்தில் அவர்கள் அதிக அல்லலுற்றார்கள் என்பதில் ஐயமில்லை.

    சிங்கப்பூரின் அன்றைய பொதுப்பணித்துறையில் பணிபுரிந்த பல இந்திய நகராட்சி ஊழியர்கள் (அவர்களுள் தீண்டப்படாத சாதிகளைச் சேர்ந்தவர்கள் அதிகம்) ஜப்பானிய ஆதிக்கத்தின்போது அதிக எண்ணிக்கையில் இறந்துபோனது தரவுகளிலிருந்து தெரியவருகிறது. போருக்குப்பிறகு மொத்தமாகவே அத்துறை மீண்டும் உருவாக்கப்படவேண்டிய அளவுக்கு அந்த இறப்புகள் இருந்தன. இதற்கான துல்லியமான காரணம் இன்னதுதான் என்று தெரியாவிட்டாலும் சயாம் மரண ரயில் திட்டத்தில் வல்லந்தமாக ஈடுபடுத்தப்பட்டிருக்கலாம் என்று நம்புவதற்கு இடமுள்ளது. மலாயா தோட்டத்தொழிலாளர்கள் பலருக்கும்கூட அது நடந்திருக்கிறது.

    சிங்கப்பூரின் பொதுவெளிகளில் சாதி முழுவதும் மறைந்துவிட்டது என்பது கண்கூடு. ஆனால் குடும்பத்தின் தேர்வுகளிலும் தனிப்பட்ட அளவிலும் நிலைமை எப்படி இருக்கிறது? ஆய்வுகள் என்ன சொல்கின்றன?

    சமுதாய வேற்றுமை மற்றும் உயர்வுதாழ்வு கற்பித்தல் என்கிற அளவில் சாதி பொதுவெளியில் கிட்டத்தட்ட இங்கு மறைந்துவிட்டது. குடும்பத்தின் தேர்வுகளில் இன்னும் சாதி இருக்கிறதா என்பதைத் தற்காலச் சமுதாயத்தை ஆராயும் ஆய்வாளர்கள்தாம் சொல்லவேண்டும். எனக்குத் தெரிந்தவரை சில குடும்பங்கள், குழுக்கள் அவர்களது சாதிகளைக் குறித்து அறிந்திருக்கின்றனர். அவர்களும் அதைப் பண்பாட்டு வேறுபாட்டுக்கான காரணமாகத்தான் பார்க்கின்றனரே ஒழிய உயர்வுதாழ்வு என்ற ரீதியில் அல்ல. மேலும் சிலர் சாதியை இனக்குழு அடையாளமாகக் குறிப்பிடுகின்றனர். அதுவும் இந்தியாவில் இருக்கும் உறவுக்குழுக்களோடு அடையாளப்படுத்திக்கொள்ளத்தானே ஒழிய மேல்கீழ் பார்ப்பதற்காக அல்ல. எழுபதுகளில் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்ட சமூகவியல் ஆய்வுகளில் அப்போதே பலரும் சாதியைவிடப்  பொருளாதார நிலையும் தொழில் நிமித்தமான பதவிகளும்தான் தங்கள் பிள்ளைகளின் கணவன் அல்லது மனைவி தேர்வுக்கு முக்கியமானவைகளாக இருக்கும் என்று தெரிவித்திருந்தனர்.

    ‘உயர்ந்த’ சாதியினருக்குப் பொதுவாக அவர்களின் சாதிப்பின்புலத்தைக் குறித்து அறிந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் அதிலும்கூட பிராமணர்கள் போன்ற உயர்சாதிகளிடையே இங்கு தங்கள் சாதி குறித்த ஒருவித சங்கடமான உணர்வே நிலவுகிறது என்று சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதற்குக்காரணம் சமூகநீதி, ஏற்றத்தாழ்வு கற்பித்தல், பிறப்பின் அடிப்படையில் சலுகைகளை அனுபவித்தல் ஆகியவற்றுடன் சாதி பிணைந்திருப்பதே.

    சிலருக்கு இங்கு தங்கள் சாதி தெரிந்திருந்தாலும் பல சிங்கப்பூர் இந்தியர்களுக்குத் தம் சாதி குறித்து அறவே ஏதும் தெரியாது. அவர்களின் பெற்றோரோ அல்லது மூதாதையரோ சாதி அடையாளம் தங்களோடு போகட்டும் என்று கருதிக் கவனமாகச் செயல்பட்டதன் காரணமாகத்தான் இது நடந்திருக்கமுடியும். சிங்கப்பூரின் தற்காலச் சமுதாயத்தில் சாதியின் முக்கியத்துவம் எவ்வளவு குறைவாக உள்ளது என்பதையும் இது உணர்த்துகிறது.

    இந்துக்கள் அல்லாத தமிழர்களிடம் சிங்கப்பூரில் சாதி என்ன இடத்தைக் கொண்டிருந்தது என்பதைக்குறித்த வரலாற்றுப் பார்வையை அளிக்க இயலுமா?

    சீக்கியர்கள் மலையாளிகள் உட்படப் பல சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தினரிடமும் சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இருந்திருக்கின்றன. இந்துக்கள் அல்லாத தமிழர்கள் எனப்பார்த்தால் சாதி மிகவிரைவாக அவர்களிடமிருந்து மறைந்திருக்கிறது. இந்தியாவில் நிலைமை இன்னும் அந்த அளவுக்கு மாற்றமடையவில்லை. சில இந்துக்களல்லாத தமிழ்ச்சமூகத்தைச் சாதி இன்னும் ஆட்டிப்படைத்துவருகிறது.

    தமிழ்க் கத்தோலிக்க வெள்ளாளர்கள் எவ்வாறு தங்கள் சாதி அடையாளத்தை மாற்றமில்லாமல் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதைக் குறித்த சில ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றைக் குறித்த விரிவான தகவல்கள் என்னிடமில்லை என்றாலும் என் கணிப்பில் இப்படியான சமூகங்கள் விதிவிலக்குகளாகத்தான் இருக்கக்கூடும்.

    சிங்கப்பூருக்குப் புலம்பெயர்ந்த தமிழ்ச்சமூகத்தை உலகின் இன்னபிற பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழரோடு ஒப்பிடும்போது சாதியின் பாதிப்பு எவ்வாறு இருக்கிறது?

    பொருளாதார முன்னேற்றம் கண்டுவிட்ட மேலை நாடுகளுக்குச் சமீப காலங்களில் புலம்பெயர்ந்தவர்களிடையே சாதி அடையாளமும் ஏற்றத்தாழ்வு கற்பித்தலும் அழுத்தமாக உள்ளது. ஐக்கிய இராச்சியம், கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் சக இந்தியரிடமிருந்து தலித்துகள் ஒதுக்குதலை எதிர்கொள்கின்றனர்.

    பழமையான புலம்பெயர் சமூகங்களில் ஒன்றான சிங்கப்பூர் இந்தியச்சமூகம் பல்வேறு காலகட்டங்களில் இங்கு வந்ததன் காரணமாக சாதி குறித்த மனப்பான்மை அடிப்படையில் மாறியிருக்கிறது. சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் மைய நீரோட்டத்தில் இணைவது உட்படப் பல காரணிகளினால் பாதிக்கப்பட்ட இன்றைய சிங்கப்பூர் இந்தியச் சமூகம் கிட்டத்தட்ட சாதி அமைப்பை இங்கு நிராகரித்துவிட்டது.

    சீன, மலாய் அல்லது வேறெந்த சமூகங்களிலாவது இந்தியாவின் சாதி அமைப்பு போலப் பிறப்பின் அடிப்படையிலோ அல்லது தொழிலின் அடிப்படையிலோ ஒரு கட்டமைப்பு இருந்ததுண்டா? பிற இனத்தவர் இந்திய சாதி அமைப்பு குறித்து என்ன நினைக்கின்றனர்?

    ஆசியப் பண்பாடுகளைக் கணக்கிற்கொண்டு பார்க்கும்போது ஜப்பானியரின் பிறப்பின் அடிப்படையிலான ஓர் அமைப்பு இந்திய சாதியமைப்புக்கு நெருக்கமாக வருகிறது. அங்கிருந்த ‘புராகுமின்’ மக்களின் அனுபவங்களை இங்குள்ள தீண்டப்படாதவர்களின் பாடுகளுக்கு இணைவைக்கலாம். நானறிந்தவரை சீன, மலாய் இனத்தினரிடையே சாதியமைப்புகள் ஏதுமில்லை. முக்கியமான பல சீனப் பேரரசர்கள் எளிமையான விவசாயிகளாக இருந்தவர்கள். அதேவேளையில் இவ்விரண்டு இனங்களிலும் வர்க்கம் ஒரு முக்கியமான விஷயமாக இருந்துள்ளது.

    காலனி ஆதிக்கக் காலத்தில் சீனர்களும் மலாய்க்காரர்களும் இந்தியரின் சாதியமைப்பை ஒரு ஆர்வத்தின் காரணமாகக் கவனித்தனர் என்றாலும் அது இன்னொரு சமூகத்தின் விதி என்ற அடிப்படையில் புரிந்துகொண்டுவிட்டனர் என்பதால் அதைக்குறித்து செய்வதற்கு அவர்களிடம் குறிப்பாக ஏதுமில்லை.

    லேவாதேவித் தொழில்செய்தவர்கள் கீழ்ச்சாதியினரிடமிருந்து பெற்ற பணத்தை நேரடியாகக் கையால் தொடாமல் தவிர்ப்பதற்காகச் செய்த முயற்சிகளைக் கண்டு நகைத்த இந்தியரல்லாத மக்கள் பற்றிய குறிப்பு நம்மிடம் இருக்கிறது. மிகத்தெளிவாக என்ன நடந்தது என்பது தெரியாவிட்டாலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலத்தில் உயர்சாதி இந்து ஒருவர், ஒரு மலாய்க்காரரைத் தாழ்ந்தசாதிக்காரரை நடத்துவதுபோல நடத்தமுயன்றதால் அந்த மலாய்க்காரர் கோபப்பட்ட நிகழ்ச்சிப்பதிவு இருக்கிறது.

    இறுதியாக, இந்திய மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் கோபிக்கடை வைத்திருந்த சீனர்கள் தீண்டப்படாதவர்களுக்குத் தகரக்குவளைகளும் மற்றவர்களுக்குக் கண்ணாடிக்குவளையும் வைத்திருந்தது குறித்த தகவலும் நம்மிடையே உண்டு. அவர்கள் தங்களின் வாடிக்கையாளர்களான சாதி இந்துக்களைத் தக்கவைத்துக்கொள்ளவே அவ்வாறு செய்தனர் என்பதில் சந்தேகமில்லை. இந்த வழக்கம் சமூக சீர்திருத்தவாதிகளின் துடிப்பான நடவடிக்கைகளால் ஒரு முடிவுக்கு வந்தது. கோபிக்கடை சீன முதலாளிகளிடம் அவர்களே பேசி வழக்கத்தை மாற்றினர்.

    சாதி எவ்வாறு எதிர்கொள்ளப்பட்டது என்ற பல்வேறு எடுத்துக்காட்டுகளைப் பார்த்தோம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சாதியையும் சாதியமைப்பையும் ஒரு பல்லின சமூகச் சூழலில் எங்கிருந்தோ கொண்டுவந்து எளிதாக நிலைநிறுத்திவிட முடியாது என்பது விளங்கும்.

    தெற்காசிய நாடுகளைப் பற்றி அறிந்துகொள்வதற்கான சிங்கப்பூரின் பள்ளிப்பாடத்திட்டமொன்றில் சாதி அமைப்பைக் குறித்த விவரங்கள் உள்ளதாக உங்கள் ஆய்வில் ஒரு விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. அது மேலைக் கல்வியாளர்களின் நோக்கில் அமைக்கப்பட்டிருந்ததாகச் சொல்லலாமா? சாதியைக் குறித்துக் கற்பிப்பதற்கு மாற்று நோக்கு ஏதுமுண்டா?

    சாதி என்பது ஒரு இடியாப்பச் சிக்கலான சமுதாயப் பிரச்சனை. நான்கு ‘வர்ணங்கள்’ கொண்ட பிரமிடு போன்ற அமைப்பை மாணவர்களிடம் காட்டி அது சாதியமைப்பின் அடுக்குகளைப் பிரதிநிதிப்பதாகக் கூறுவது அபாண்டமாக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு காலாவதியான காலனியத்துவக் கருத்தாக்கமாகும். சாதியமைப்பு குறித்த இன்றைய பல பார்வைகள் காலனியாதிக்கக் காலத்தில் உருவானவை.

    சாதி அமைப்பைக் குறித்து ஒரு மேலோட்டமான, சுருக்கமான விவரத்தை மாணவர்களுக்கு அளிக்கவேண்டும் எனும்போது அதில் எவ்வளவு நுட்பமான விவரங்களைச் சேர்க்கமுடியும் என்பதற்கு ஓர் எல்லை உள்ளது. அதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது. ஆனால் சாதியை ஒரு பழமையான காலமாற்றங்களுக்கு உட்படாத இறுகிய அமைப்பாக அல்லாமல் வெவ்வேறு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட போட்டிகளால் தொடர்ந்து மாறிவந்துள்ள ஒரு சமுதாய அமைப்பாக மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வழியைக் கண்டுபிடிப்பது நல்லது. ஏனெனில் மாற்றங்களைச் சந்தித்திருக்கும் ஓர் அமைப்பை மேலும் மாற்றவும் சீர்திருத்தவும் இயலும் என்பதை மாணவர்கள் உணர்ந்துகொள்வர்.

    மிகவும் கவனமாகப் பார்க்கவேண்டியது எதுவென்றால் சாதி முற்கால இந்தியச் சமுதாயத்தில் அனைவர்க்கும் ஓர் இடத்தை உறுதிசெய்ததால் நல்லிணக்கத்தைக் கொணர்ந்தது என்பது போன்ற கருத்துகளை மாணவர்களிடம் கொண்டுசெல்வது குறித்துத்தான். பல ஆண்டுகளுக்குமுன் ஒரு பள்ளிப்பாடத்தில் அத்தகைய ஒரு கருத்தைக் கண்டேன். இதைப்போன்ற கருத்துகள் ஆபத்தானவை என்பதைச் சொல்லவேண்டியதில்லை.

    பண்பாட்டைப் பாதுகாப்பது, அடையாளத்தை உறுதிசெய்வதற்கான தேவை போன்றவை எழுந்து  வலுவடைந்துள்ள உலகமயமாக்கப்பட்ட சூழலில் ‘சாதியைப் பண்பாடாக்குதல்’ தவிர்க்கவியலாத ஒன்று எனக் கருதுகிறீர்களா? 

    இல்லை. சாதியைப் பாதுகாப்பது உலகமயமாக்கச் சூழலின் தவிர்க்கப்படவியலாத விளைவாகவோ பண்பாட்டுக்கூறுகள் தேய்ந்து காணாமற்போய்விடும் என்கிற அச்சத்தால் உந்தப்பட்டோ நடப்பதாக நான் நினைக்கவில்லை. ஏதாவது ஒரு குழு அல்லது சமூகம் அதிகாரத்தையோ சலுகைகளையோ தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வழியிருந்தால் அதை நியாயப்படுத்தவும் தொடர்ந்து பாதுகாத்துக்கொள்ளவும் கருத்தியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியிலும், பண்பாட்டுக்கூறுகளாக ஆக்குவதன் வழியாகவும் முயல்கிறது.

    உலகமயமாக்கத்துக்கு முன்னரே சாதி உடும்புப்பிடியான சமூக அமைப்பாக இருந்ததைக் காணமுடிகிறது. ஆகவே காலசூழ்நிலைகளுக்கு ஏற்றபடி பல்வேறு வடிவங்களில் தகவமைத்துக்கொண்டு சாதி தன்னைத்தானே காத்துக்கொள்ளக்கூடிய வல்லமையுள்ளதாக இருக்கிறது. சாதியைப் ‘பண்பாடாக்குதல்’ அல்லது சாதி ஓர் இன அடையாளம் மட்டுமே எனக்குறிப்பிடும் சொல்லாடல்கள் பல நேரங்களில் சாதியின் தகவமைத்துக்கொள்ளும் திறனைப் புலப்படுத்துவதாக இருப்பதாகவே நினைக்கிறேன்.

    புலம்பெயர் தமிழரிடையே சாதி குறித்த ஆய்வுகள் எத்திசையில் செல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்கு எது முக்கியமான ஆய்வாக இருக்கும்?

    பொருளாதார அடிப்படையில் இல்லாவிட்டாலும் பண்பாட்டு ரீதியில் இந்தியா தொடர்ந்து ஒரு சர்வதேச சக்தியாக வளர்ந்துவருவதால் இந்தியப் பிரச்சனைகள் புலம்பெயர் சமூகங்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    சிங்கப்பூரைப் போன்ற ஓரிடத்தில் இந்தியச் சமூகமும் தமிழ்ச் சமூகமும் பல அடுக்குகளைக்கொண்டதாகவும் பல்வேறு காலகட்டங்களில் புலம்பெயர்ந்தவர்களை உள்ளடக்கியதாகவும் இருப்பதால் இந்தியாவைக் குறித்த மனப்பாங்கில் வெவ்வேறு போக்குகள் காணப்படுகின்றன. ஆகவே சாதி குறித்த மனப்பாங்கு தமிழ்ச் சமூகத்தின் கலவை மாறுவதற்கேற்ப எவ்வாறு மாறுகிறது என்பதை ஆய்வுசெய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

    வரலாற்று ஆய்வைப் பொறுத்தவரை என்னுடைய ஆய்வு சிங்கப்பூர்த் தமிழ் அடையாளமானது சாதி சார்ந்த அடையாளம் அற்றதாக மாற்றம்பெற்று வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது. அந்த வளர்ச்சி அதிர்ஷ்டத்தாலோ எதிர்பாராத வரலாற்றுச் சம்பவங்களாலோ அல்லாமல் சமுதாயச் சீர்திருத்தம் மற்றும் கவனமான முயற்சி ஆகியவற்றால் விதைக்கப்பட்டது. இன்றைய தலைமுறை அதன் பலன்களை அறுவடை செய்துவருகிறது.

    ***

    [நேர்காணலும் மொழிபெயர்ப்பும் : சிவானந்தம் நீலகண்டன். ‘தி சிராங்கூன் டைம்ஸ்’ நவம்பர்/டிசம்பர் 2019 இதழில் வெளியானது]

    சிங்கப்பூரில் தீண்டாமை தேய்ந்து மறைந்தது குறித்த ஜான் சாலமனின் ஆய்வுநூல் :

    A Subaltern History of the Indian Diaspora in Singapore: The Gradual Disappearance of Untouchability 1872-1965, by John Solomon, New York, Routledge, 2016, ISBN: 9781138955899
    
    ***

    Share this:

    • Click to share on Twitter (Opens in new window)
    • Click to share on Facebook (Opens in new window)
    • Click to share on WhatsApp (Opens in new window)

    Like this:

    Like Loading...

    Related

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Previous ArticleA Kannada novel decodes Dalit lives
    Next Article Culture as Capital!
    Sridhar Kannan
    • Facebook

    அம்பேத்கரியர், தலித் ஆவண தொகுப்பாளர், அம்பேத்கர்.இன் வலைத்தளத்தின் நிறுவனர்.

    Related Posts

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

    December 2, 2025

    பாபாசாகேப் அம்பேத்கர் கொண்டாடிய புத்தபூர்ணிமை விழாக்கள்

    October 14, 2025
    Leave A Reply Cancel Reply

    Newsletter

    Recent Posts
    • ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
    • எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!
    • அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1
    • யுனெஸ்கோ தலைமையகத்தில் டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் மார்பளவு சிலை திறப்பு
    Random Posts

    வரலாற்றை நினைவு கூர்வோம்!

    January 1, 2018

    அன்னை ரமாபாய்: பீம்ராவை அம்பேத்கராக மாற்றியவர்

    May 27, 2022

    வேதங்களின் தோற்றம்: பிராமணிய விளக்கம் அல்லது சுற்றிவளைத்துப்பேசும் தன்மை

    May 19, 2021

    “சுயமரியாதையோடு வாழறது தப்பா?” – கதறும் கச்சநத்தம்

    June 12, 2018
    Archives
    About Us
    About Us

    ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்நிலைத் துயரங்கள், படும் சமூக அவலங்கள், எழுச்சிமிக்கப் போராட்டங்கள், ஈட்டிய வெற்றிகள், தீவிர அரசியல் இயக்கங்கள் குறித்த ஆவணங்கள், நிழற்படங்கள், எழுச்சிமிக்கப் பாடல்கள், ஆவணப்படங்கள் ஆகியவற்றோடும்.... இந்திய மண்ணில் சமூக சமத்துவத்திற்காகவும், பொருளாதார சமத்துவத்திற்காகவும் குரல் எழுப்ப உங்களையும் இணைத்துக்கொண்டு....

    இரண்டாயிரம் கால வரலாற்றோடு...

    இடைவெளியற்ற விடுதலைப்பயணமாய்...

    www.ambedkar.in
    Email Us: ambedkar.in@gmail.com
    Contact: +91 9841544115

    Facebook X (Twitter) YouTube WhatsApp
    அண்மைய பதிவுகள்

    ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற யாருடன் இணைய வேண்டும்?-பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர்

    January 9, 2026

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2

    December 23, 2025

    எங்களை படுகுழியிலிருந்து மீட்டவர் மறைந்தார்!

    December 6, 2025

    அன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி-1

    December 2, 2025
    நன்கொடையளிக்க விரும்பினால்
    Demo
    Facebook X (Twitter) Instagram Pinterest
    © 2009 www.ambedkar.in. Designed by Bodhi Technologies.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

     

    Loading Comments...
     

      %d