கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்டோரின் இதயங்களில் ஒளிவிளக்காக வாழ்பவர் பாபாசாகேப் அம்பேத்கர். அந்த விளக்குக்குத் தன்னையே எண்ணெயாக உருக்கிக்கொண்டவர் அவரின் மனைவி ரமாபாய். தீராத வறுமையிலும், நெடிய பிணியிலும், அடுத்தடுத்துப் பிள்ளைகளைப் பறிகொடுத்த நிலையிலும், தன் மரணவேளையிலும்கூட ‘அம்பேத்கர்’ என்ற லட்சியவாதிக்குத் தடையாக இருக்காமல், அவருக்காகத் தன் வாழ்வையே தியாகம் செய்திருக்கிறார்.
அதனால்தான் அம்பேத்கர் ‘பாகிஸ்தான் பற்றிய சிந்தனைகள்’ என்ற நூலை ரமாபாய்க்குச் சமர்ப்பித்து, ‘பீம்ராவாக இருந்த என்னை டாக்டர் அம்பேத்கராக மாற்றியவர்’ என்று நன்றியோடு நினைவுகூர்ந்திருக்கிறார். தான் வாசிக்கும் அறைக்கும் அவரின் பெயரையே சூட்டியிருக்கிறார்.
அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்று நூல்களில் ரமாபாய் குறித்த தகவல்கள் அரிதாகவே கிடைக்கும் நிலையில், தலித் பேந்தர்ஸ் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான ஜே.வி.பவாரும் (தமிழில் பா.பிரபாகரன்), மராட்டிய எழுத்தாளர் பேபி காம்ப்ளேவும் (தமிழில் இறையடியான்) எழுதிய நூல்கள் சற்று விரிவான தகவல்களை அளிக்கின்றன.
வறுமையே வாழ்வு
மஹாராஷ்டிரத்தில் உள்ள வனாட் கிராமத்தில் 7.2.1897 அன்று ரமாபாய் பிறந்தார். நிலமற்ற கூலித் தொழிலாளியான ரமாபாயின் தந்தை தத்ரேவின் குடும்பத்தை எல்லா பக்கமும் வறுமை சூழ்ந்திருந்தது. தொபாத் கடலில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மீன் பிடிக்க அனுமதி மறுக்கப்பட்டதால், தத்ரே கடற்கரையில் சுமை தூக்கும் வேலை செய்தார். சிறுவயதிலேயே தாயை இழந்த ரமாபாய், அடுத்த சில ஆண்டுகளில் தந்தையையும் இழந்தார். அதனால், ராமாபாயை அவரது தாய்மாமா பம்பாய்க்கு அழைத்துசென்று வளர்த்தார். பீம்ராவ் அம்பேத்கரும் சிறுவயதிலே தாயை இழந்து தந்தை சுபேதார் ராம்ஜி சக்பாலின் அரவணைப்பில் வளர்ந்தார்.
சுபேதார் தன் மகனுக்குத் திருமணம் செய்துவைக்கப் பெண் தேடியபோது, ரமாபாயின் அமைதியான குணம் அவருக்குப் பிடித்துப்போனது. இரு குடும்பங்களும் ஏழ்மையில் இருந்ததால் பைகுலா மீன் மார்க்கெட்டையே மணமேடையாக மாற்றி 04.04.1906 அன்று பீம்ராவுக்கும் ரமாபாய்க்கும் திருமணத்தை நடத்திவைத்தார். பீம்ராவை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருந்த சுபேதார், அதனைத் தன் மருமகளிடமும் உறுதியாகக் கூறினார். இதனால், குடும்ப பாரம் அனைத்தையும் தானே சுமந்து, பீம்ராவ் படிப்பு கெடாமல் பார்த்துக்கொண்டார் ரமாபாய். பீம்ராவ் தான் படித்ததுடன் ரமாபாயும் படிக்க வேண்டும் என நினைத்து, அவருக்கு எழுதப் படிக்கக் கற்றுக்கொடுத்தார்.
சாணி அள்ளிய பொழுதுகள்
சுபேதார், ரமாபாயின் ஒத்துழைப்பால் அம்பேத்கர் மெட்ரிக் தேர்வில் ‘மகர்’ சாதியில் முதல் ஆளாக வெற்றிபெற்றார். சுபேதாரின் மறைவுக்குப் பின் குடும்பம் வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்கியது. ஆனாலும், ரமாபாய் தன் கணவரின் லட்சியங்களுக்காகக் கிழிந்த சேலையுடன் கூலி வேலை தேடி அலைந்தார். பல இரவுகளைப் பட்டினியோடு கடந்தார். அவர் வெளிநாட்டில் டாக்டர் பட்டங்களும், பாரிஸ்டர் பட்டமும் பெற்ற காலத்தில் ரமாபாய் சாலையோரங்களில் சாணி அள்ளிக்கொண்டிருந்தார்.
‘புருஷன் வெளிநாட்டில் பாரிஸ்டராக இருக்கிறார். இவள் இங்கு கூலி வேலைக்குச் செல்கிறாள். மைல் கணக்கில் விறகு சுமக்கிறாள். சாணி அள்ளுகிறாள். இதெல்லாம் இவளுக்குத் தேவையா?’ என அக்கம்பக்கத்தினர் ஏசினர். இதனால் ரமாபாய் ஊரார் விழிப்பதற்கு முன்பாகவே அதிகாலையில் எழுந்துசென்று சாணி அள்ளிவருவார்.
சாகேப்பின் லட்சியமே முக்கியம்
அம்பேத்கர் லண்டனில் ‘ரூபாயின் சிக்கல்’ ஆய்வேட்டை எழுதிய தருணத்தில், பிள்ளைகளுக்குப் பால் வாங்கவும் மருந்து வாங்கவும் ரூபாய் இல்லாமல் ரமாபாய் தவித்திருக்கிறார். அந்தச் சமயத்தில் அம்பேத்கர், ‘கங்காதர் எப்படி இருக்கிறான்? அவனை வங்கிக்கு அழைத்துச் சென்று வங்கி சார்ந்த பணிகளைக் கற்றுக்கொடு’ என ரமாபாய்க்குக் கடிதம் எழுதுகிறார். அதற்கு இவர், ‘கங்காதர் நலமாக இருக்கிறான். அவனை வங்கிக்கு அழைத்துச்சென்றேன். சிறப்பாகக் கற்றுக்கொள்கிறான்’ என்று பதில் அனுப்பினார்.
படிப்பு முடிந்துவந்த அம்பேத்கர், ‘கங்காதர் எங்கே?’ எனக் கேட்டபோது, ‘ஓராண்டுக்கு முன்பே இறந்துவிட்டான்’ என ரமாபாய் கதறினார். குழந்தையின் மரண செய்தியைக் கூறினால், அம்பேத்கர் படிப்பைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு வந்துவிடுவார் என்பதால், அந்தப் பெருந்துயரத்தை ரமாபாய் தனக்குள் புதைத்துக்கொண்டிருக்கிறார். வறுமையின் கொடுமைக்கு கங்காதர், ரமேஷ் என அடுத்தடுத்து 4 பிள்ளைகள் இறந்துபோனார்கள்.
மாமிச உணவும் வளையலும்
அம்பேத்கர் தன் தந்தையின் நினைவு தினத்தில் பம்பாய் விடுதி மாணவர்களுக்கு மாமிச உணவு பரிமாற விரும்பினார். மத நம்பிக்கை கொண்ட ரமாபாய், ‘நினைவு நாளுக்கு மாமிச உணவு பரிமாறலாமா?’ என்று தயங்கினார். அதற்கு அம்பேத்கர், ‘விடுதியில் தங்கியிருக்கும் மாணவர்கள் மாமிச உணவு சாப்பிட்டு நீண்ட காலமாகியிருக்கும். அவர்களுக்கு மாமிச உணவு வழங்கினால், எனது தந்தை கோபித்துக்கொள்ள மாட்டார்.
மாறாக மகிழ்ச்சி அடைவார்’ என்று கூறினார். அம்பேத்கரின் நோக்கத்தைப் புரிந்துகொண்ட ரமாபாய், தனது திதி விரதத்தைக் கைவிட்டு, மாணவர்களுக்கு மாமிச உணவு சமைத்துக் கொடுத்திருக்கிறார். ரமாபாயின் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த சமயத்தில் தார்வாடில் இருந்த பி.ஹெச்.வாரலே வீட்டில் ஓய்வெடுத்தார். அப்போது பி.ஹெச்.வாரலே நடத்திய மாணவர் விடுதிக்கு அரசின் மானியம் கிடைக்காததால், மாணவர்கள் பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டது. ரமாபாய், உடனடியாகத் தனது கையில் இருந்த 12 கிராம் தங்க வளையல்களை அடகு வைத்து விடுதி மாணவர்களின் பசியை ஆற்றினார்.
ரமாபாயின் முதல் பேச்சு
வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கரின் செயல்பாட்டுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதனால் பம்பாய் துறைமுகத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, அவரை வரவேற்று மாலை அணிவித்தனர். அனைவரும் அவருக்கு மாலை அணிவிப்பதைக் கண்குளிரப் பார்த்த ரமாபாய், கடைசியாக சாகேபுக்கு மாலை அணிவித்தார். அந்த மேடையில் முதன்முதலாக ரமாபாய் பேசும்போதும், பின்னர் ஒய்.எஸ்.ஹொங்கலின் வீட்டில் நடந்த மகளிர் கூட்டத்தில் பேசும்போதும் ஒடுக்கப்பட்டோரின் விடுதலை குறித்தே பேசியதாக ‘ஜனதா’ இதழில் வெளியாகியுள்ளது.
இந்தியாவிலேயே அம்பேத்கருக்குத்தான் அதிக சிலைகள் வைக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அந்தச் சிலைகள் நிற்கும் காலமெல்லாம் ரமாபாயும் நிலைத்திருப்பார்!
– இரா.வினோத்,
தொடர்புக்கு: vinoth.r@hindutamil.co.in
Courtesy : Hindu Tamil
Note: This news piece was originally published in https://www.hindutamil.in/ and used purely for non-profit/non-commercial purposes exclusively for Human Rights.