ஒடுக்கப்பட்ட மக்களின் பௌத்த நெறியேற்பு குறித்து
ஒடுக்கப்பட்ட மக்கள் மிக நீண்டகாலமாக நடத்தி வரும் சமூக விடுதலைப் போராட்டம், அண்மைக் காலமாக, தேக்கநிலையை எட்டிவிட்டதாகப்பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. முன்னெப்போதையும்விட மிகக் கூர்மையான கருத்தியலுடன் போராட, தலித் மக்கள் முனைப்புக் காட்டி வருகிறார்கள். அரசியல் தளத்தில் கடந்த கால் நூற்றாண்டு காலமாக நடத்திய எழுச்சியான செயற்பாடுகளின்மூலம், மதிக்கத்தக்க அரசியல் சக்தியாக அம்மக்கள் திரண்டிருக்கிறார்கள். அரசியல் அதிகாரத் தின் முக்கியத்துவத்தையும் உணரத்தொடங்கியிருக் கிறார்கள். அதே வேளையில் பண்பாட்டுத் தளத்திலும், புதிய எழுச்சி உருவாகி வருகிறது.
பன்னெடுங்காலமாகச் சாதி இழிவில் அமிழ்த்தி வைத்திருக்கும் இந்துப் பண்பாட்டிலிருந்து வெளியேறி, பூர்வீக பௌத்தத்தில் இணைவதற்கான கருத்தியல், தலித் இளைஞர்களிடையே பொங்கிப்பெருகி கொண்டிருக் கிறது. பூர்விகத் தொல்குடிகளின் பௌத்தப் பண் பாட்டை மீட்டுரு வாக்கம் செய்யும் நோக்கோடு, மகா பண்டிதர் அயோத்திதாசர் காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதிவரை, எழுச்சியான பௌத்த இயக்கங்கள் தோன்றி வளர்ந்த தமிழக மண்ணில், மீண்டும் பௌத்த மீட்சிக்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி யுள்ளன.
முழுசுதந்திரத்தை அளிக்கும் இறுதிப் போராட்ட மாக, பாபாசாகேப் அம்பேத்கரால் அடையாளம் காட் டப்பட்ட ‘பௌத்த மத மாற்றத்தின்’ முக்கியத்துவத்தை, புதிய தலித் தலைமுறை அடையாளம் கண்டுகொண் டிருக்கிறது. இதை மகத்தான வரலாற்றுத் திருப்பம் எனச் சொல்ல வேண்டும். பௌத்த ஏற்பின் முக்கியத்துவத்தை உணர்ந்ததின் மூலம், புதிய தலித் தலைமுறைகளுக்கு, பாபாசாகேப் அம்பேத்கர் மிகப்பெரும் மீட்புப் பேரொளியாகத் திகழ்கிறார். இதை தலித் அரசியலின் இரண்டாம் எழுச்சியாகக் குறிப்பிட வேண்டும்.
சமகால சமூக, அரசியல், பொருளாதாரச் சிக்கல் களை, குறிப்பாக இந்துச் சாதியத்தையும் அதன் இரக்க மற்ற பாகுபாட்டுணர்வையும் எதிர்த்துப் போராட, பௌத்தம் உதவுமா? என்ற கேள்வி தலித் இளைஞர்கள் சிலரை வாட்டுகிறது. பௌத்த மதத்தில் உள்ள மூட நம்பிக்கைக்களும், கட்டுக்கதைகளும், தொல்மரபுப் பௌத்த நாடாகிய இலங்கையில் நடத்தப்பட்ட தமிழினப் படுகொலையும், பௌத்தம் குறித்த மிகப் பெரும் சந்தேகங்களை நம்மில் உருவாக்கி வைத்துள் ளன. பௌத்தம் குறித்து இந்துச் சமூகம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கும் பிற்போக்கான கருத்துகளும், பௌத்தம், நவீன நாகரீகத்திற்குப் பொருத்தமற்றது போன்ற சிந்தனைப் போக்குகளும் கூட, நமது முன்னோர்கள் போற்றிப் பாதுகாத்த பௌத்தத்திலிருந்து நம்மை விலக்கி வைத்திருக்கிறது.
கடந்த கால, நூற்றாண்டு காலமாக இந்திய அளவிலும், தமிழக அளவிலும் மக்கள் அமைப்புகளை கட்டி இயக்கம் நடத்திய தலித் தலைவர்கள், அரசியல் அதிகாரத்தை நோக்கியே தங்களின் முழுச்செயல் பாட்டையும் அமைத்துக்கொண்டனர். பண்பாட்டுத் தளத்தில் தலித் மக்கள், இந்துப் பண்பாட்டில் ஆழமாக வேர்விடுவதையும் கவனிக்கத் தவறினர். பல தலைவர்களுக்குப் பௌத்தம் குறித்த அடிப்படைகளே தெரியா மல் இருந்தன. தலித் மக்களின் இந்து பண்பாட்டு வழக்கங்களைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. பல தலித் தலைவர்கள் இன்று வரையிலும் தீவிர இந்துப் பண்பாட்டாளர்களாக இருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
கடந்த நீண்டகால, அரசியல் போக்குகளினால், தலித் இளைஞர்கள் மிகக் கடுமையான கருத்தியல் சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார்கள் என்பது நம் முன் உள்ள கூடுதல் சுமையாகும். டாவோவியம் தொடங்கி, பின் நவீனத்துவம் வரை அனைத்து ‘இயங்களும்’ தலித் (மக்களை) இளைஞர்களை நோக்கியே வீசப்படுகின்றன. புதிதாக முளைக்கும் எந்தவொரு முற்போக்குக் கட்சியும் தலித் இளைஞர்களையே குறி வைக்கிறது. எந்தவொரு கருத்தியலுக்கும் எளிதில் பலியாகும் கொள்கை வலிமையற்றவர்களாக தலித் இளைஞர்கள் இருப்பதுதான் அதற்கு காரணம். இவையெல்லாம், தலித் விடுதலை வரலாற்றில் எப்போதும் பின்னடைவை உருவாக்கும் காரணிகளாக இருந்து வருகின்றன.
உண்மையில் கடந்த, இரண்டாயிரம் கால விடுதலை போராட்டத்தைப் புரிந்து கொள்வதிலும், அந்த வரலாற்றின் மீது நம்பிக்கை வைப்பதிலும்தான் சிக்கல் நீடித்து வருகிறது. வரலாற்றை அறிந்து கொள்வதில் நாம் அக்கறை காட்டாமல் போனதும், வரலாற்றின் மீது நம்பிக்கையற்றுப் போனதும், நமது முன்னோடிகள் காட்டிச் சென்ற விடுதலைப் பாதையை அலட்சியப் படுத்தியதும்தான் தலித் மக்களின் நீண்டகாலத் தோல் விக்குக் காரணம்.
வரலாற்றை அறியாதவர்களால் வரலாற்றைப் படைக்க முடியாது என்றார் பாபாசாகேப் அம்பேத்கர். இந்த மண்ணையும், செழுமை வாய்ந்த மனித நாகரீகத்தையும் உருவாக்கி போற்றிப் பாதுகாத்த, மாண்புடைக் குடிகளாக வாழ்ந்த மண்ணின் மைந்தர்களான தொல் குடித் தலித் மக்களின், மண்ணையும், மாண்பையும் பறித்து, அம்மக்களின் அனைத்து வாழ்வியல் உரிமைகளையும் மறுத்து, சாதித்தீண்டாமை இழிவில் அமிழ்த்தி, ஏழ்மையும் அறியாமையும் கொண்ட வாழ்க் கையில் சிறை வைத்திருப்பது, கொடிய இந்துச் சாதிப் பண்பாடுதான் என்ற வரலாற்றை தலித் இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அத்தகை இந்துப் பண்பாட்டிலிருந்து வெளியேறுவதுதான் விடுதலைப் பயணத்தின் தொடக்க கட்டச் செயல்பாடாக அமையும். சாதி அடிமைத்தனத்திலிருந்து தலித் மக்களுக்கு விடுதலைப் பெற்றுத்தரப் போராடிய நமது முன்னோடிகள் அனைவரும், இந்து பண்பாட்டிலிருந்து தலித் மக்கள் வெளியேற வேண்டும் என்றும், தலித் மக்கள் இந்துக்களே அல்ல; அவர்கள் தனித்த பண்பாடுடைய தனித்த வகுப்பினர் என்றும் முழங்கினர். தமிழ் மண்ணில் பகுத்தறிவு மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மகா பண்டிதர் அயோத்திதாசர், தொல்குடி மரபுடைய தலித் மக்களை ‘பிறவி பௌத்தர்கள்’ என அறிவித்தார்.
தொல்குடி மக்கள் குறித்த ஆய்வுகளை மேற் கொண்ட கால்டுவெல் மற்றும் கர்னல் ஆல்காட் போன்ற நேர்மையான ஐரோப்பிய ஆய்வாளர்கள், தீண்டாமை இழிவில் அமிழ்த்தி வைக்கப்பட்டுள்ள தலித் மக்கள், மொத்தமாகவோ அல்லது பெரும்பான்மையாகவோ பௌத்தர்களாக வாழ்ந்தவர்கள் என்று பதிவு செய்துள்ள னர். பூர்வ பௌத்தர்கள் என்பதற்காகவே அம்மக்கள் ஒடுக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என கர்னல் ஆல்காட் விளக்குகிறார்.
இத்தகையத் துல்லியமான வரலாற்றுப் பூர்வமான வழிகாட்டல்கள் இருந்தும் கூட, இன்றும் தலித் மக்கள் இந்து கோயிலுக்குள் நுழைய போரட்டங்களை நடத்து வதுபரிதாபத்திற்குரியதாகும். 1920-களிலிருந்து 1956 முடிய சுமார் முப்பத்தைந்து ஆண்டுகாலம், ஒடுக்கப் பட்ட மக்களின் விடுதலைக்குப் போராடிய பாபாசாகேப் அம்பேத்கரின் வாழ்க்கையே தலித் மக்களுக்கான விடுதலை பாதையாக அமைந்துள்ளது. கலாராம் கோயில் நுழைவுப் போராட்டம், மகத் குளத்தில் இறங்கி தண்ணீர் பருகி உரிமையை நிலைநாட்டிய போராட்டம், கலப்பு உண்ணல், கலப்பு மணம் போன்ற அனைத்து சமூகப் போராட்டங்களை நடத்திய டாக்டர். அம்பேத்கர், சாதி இந்துக்களின் இரக்கமில்லா கல்நெஞ்சத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இந்து சமூகத்தில் இரண்டறக் கலந்துவிட முயற்சிக்கும் தலித் மக்களை ஒருபோதும் இந்துக்கள் தங்களோடு சேர்த்துக்கொள்ள மாட்டார்கள் என்ற தீர்மானகரமான முடிவுக்கு வந்தார் டாக்டர். அம்பேத்கர்.
அதன் பின்னர்தான், இந்துக்களை வெல்வதற்கு அரசியல் அதிகாரம் தேவை என்ற எண்ணத்தில், சவுத் போரா கமிட்டி, சைமன் கமிஷன், வட்ட மேசை மாநாடுகள், இரட்டை வாக்குரிமை, பூனா ஒப்பந்தம், தனித் தொகுதிகள், இடஒதுக்கீடுகள் என அரசியல் போராட்டங்களை நடத்தினார். அரசியல் அதிகாரத்தை நோக்கிய அவரது பயணம், 1952-ல் இந்திய அரசின் முதல் சட்ட அமைச்சர் பதவியை துறந்த பிறகு முடிவுக்கு வந்தது. 1956-ல் அக்டோபர் 14-ஆம் நாளில், நாகபுரி மண்ணில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களோடு பௌத்தம் ஏற்றுக் கொண்ட பிறகுதான், அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க பௌத்த மத மாற்ற மேடையில் நின்று கொண்டு, ‘இன்று நான் சுதந்திர மனிதாகி விட்டேன்’ என்று அறிவித்தார்.
இந்து சாதியாத்திற்கு அண்ணல் அம்பேத்கர் கொடுத்த மரண அடி அது. பௌத்தத்தை ஏற்ற அவரது முடிவு, திடீரென ஒரே நாளில் எடுக்கப்பட்ட முடிவல்ல, 1935-ல் இயோலா மாநாட்டில், ‘நான் ஒரு இந்துவாகப் பிறந்து விட்டேன், ஆனால் ஒரு போதும் இந்துவாகச் சாக மாட்டேன்’ எனச் சூளுரைத்தார். அப்போது முதல், 1956 மட்டும், சுமார் இருபதாண்டுகள், பௌத்தத்தில் இணைவது குறித்து சிந்தித்து வந்தார். தலித் மக்களோடு சேர்ந்து ஒட்டு மொத்தமாக இந்து மதத்திலிருந்து வெளியேறி விட வேண்டும் என்ற அவரது துடிப்பு, எந்த மதத்தில் இணைய வேண்டும் என்பது குறித்த ஆய்வை தீவிரமாக்கியது. கிறித்துவம், இசுலாம், சீக்கியம் என, இந்தியாவில் உள்ள அனைத்து மதங்கள் குறித்தும் ஆய்வை மேற்கொண்டார். சீக்கியம் குறித்த ஆய்வை மேற்கொள்ள பஞ்சாபிற்குத் தனது நம்பிக்கைக்குரிய ஆய்வாளர்களை அனுப்பினார். பௌத்தம் குறித்த அனைத்து நூல்களையும் வாசித்தறிந்தார். பௌத்த மூலநூல்களை கற்பதற்காகவே, பாலி மொழியை கற்றார். இறுதியாக தனி மனித சுதந்திரத்தையும், சமத்துவத் தையும் தன்னொழுக்கம் மிகுந்த சமூகத்தையும் பற்றிப் பேசும் பௌத்தமே, பின்பற்ற வேண்டிய சிறந்த மார்க்கம் எனத் தீரமானித்தார்.
பௌத்தத்தில் காணப்பட்ட கட்டுக்கதைகளும் புராண புளுகுகளும் பகுத்தறிவிற்கு ஒவ்வாத ஜாலங்களையும் களைந்து, புத்தர் போதித்த தூய்மையான தம்மத்தை (புத்தரின் போதனைகளை) மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்பதற்காகவே, தனது உடல் நலத்தை பற்றிக்கூட கவலை கொள்ளாமல், இரவு பகலாக ‘பௌத்தமும் அவரது தம்மமும்’ என்ற நூலை எழுதி முடித்தார். தலித் இளைஞர்களுக்கு இன்று ஏற்படும் அனைத்து கருத்தியல் சிக்கல்களுக்கும் தீர்வு தரும் வகையில் அந்த நூலை மிகச் சிறந்த பௌத்த ஆவணமாக வடிவமைத்தார். பௌத்தம் குறித்த எத்தகையக் கேள்விகளுக்கும் விடை தரும் நூலாக அது அமைந்தது. தலித் மக்கள் விரும்பும் சாதி ஒழிப்பையும், சமத்துவ சமூகத் தையும் பௌத்தம் தீவிரமாக முன்னெடுப்பதை ‘புத்தரும் அவரது தம்மமும்’ என்ற டாக்டர் அம்பேத்கர் எழுதிய நூல் ஆணித்தரமாக நிறுவுகிறது.
உலகின் முதல் மனித உரிமைப் போராளியான புத்தரின் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டதாகக் கூறிக் கொள்ளும் இலங்கை அரசு, அங்குள்ள தமிழ் மக்களை இனப்படுகொலை செய்ததின் மூலம், புத்தரின் போதனை களைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டது. மனித உரிமைகளுக்காக முதல் குரல் எழுப்பிய புத்தர் காலடி பட்ட இலங்கை, இன்று படுகொலைக் களமாகிப் போய் விட்டது. பிற பௌத்த நாடுகளில் கடவுள், சடங்குகள், புராதனக் கதைகள் நிறைந்த மூடநம்பிக்கைகளை விதைக்கும் இடமாக மாறியுள்ளன. அறிவியலுக்கும் பகுத்தறிவுக்கும் பொருந்தாத பௌத்தக் கோட்பாடுகள் புத்தரின் போதனைகளுக்கு எதிரானவை.நவீன பாதையைச் சுட்டிக் காட்டும் ‘நவயானா பௌத்தத்தை’ டாக்டர் அம்பேத்கர் உருவாக்கி விட்டுச் சென்றுள்ளார்.
அவர் காட்டிய பௌத்தம், உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்தனை சுதந்திரத்தை அளிக்கும் சமூகக் சிந்தாந்தமாக இருக்கிறது. உண்மையில் புத்தர் அவற்றையே போதித்தார். அன்பு, இரக்கம், கருணை போன்ற கோட்பாடுகளோடு துன்பியலாகவும் பௌத்தக் கோடுபாடுகள் அமைந்துள்ளதாகக் கூறப்படுவதை புத்தரே மறுத்தார். மாறாக சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் போதிக்கும் மார்க்கமாக பௌத்தம் இருந்ததை டாக்டர் அம்பேத்கர் நிறுவுகிறார். அதனடிப்படையில், சாதிய இழிவிலிருந்து வெளியேற நினைக்கும் எவரும் பௌத்தத்தில் இணைந்து சமூக அரசியல் அவலங்களுக்காக, அநீதிகளுக்காகப் போராடும் பௌத்த சமூக அமைப்பை நாம் உருவாக்காத் தலைப்பட வேண்டும்.
ஒன்று திரட்டப்பட்ட சமூகமாக தலித் மக்கள் மாறுவதற்கு நம் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிவது ‘பௌத்தம்’ மட்டுமேதான். பௌத்தத்தில் இணைவதன் மூலமே, தலித் மக்கள் தங்களுக்குள் மூண்டு வருகிற உட்சாதிப் பகை உணர்வை ஒழித்துக் கட்ட முடியும். பௌத்தத்தில் இணவதன் மூலமே, தலித் மக்கள் நவீன அரசியலுக்குக்கேற்ற்படி திரண்டு நிற்கும் மக்கள் திரளாக மாறமுடியும். ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் அனைவரும் பௌத்தத்தில் இணைந்தால் அது ஏற்படுத்தப் போகும் அரசியல் விளைவுகள் மகத்தான தாக இருக்கும். எனவே, பௌத்த ஏற்பை விரைவு படுத்து வதன் மூலம், தலித் அமைப்புகள் பலம் பெறமுடியும்.
பௌத்தத்தில் இணைவதற்கு, தலித் இளைஞர்கள் பெருமளவு தயங்கி நிற்பதற்குப் பல சிந்தனைத் தடைகளைச் சாதி இந்துச் சமூகம் உருவாக்கிக்கொண்டே இருக்கின்றது. குறிப்பாக கம்யூனிசம், திராவிடம், தமிழ் தேசியம் போன்ற கருத்து நிலைகளில் தலித் இளைஞர்களை முற்போக்கு இடைநிலைச் சாதியினர் சிறை வைத்துள்ளனர். அத்தகையோரை அடையாளம் கண்டு, தலித் இளைஞர்களை பாபாசாகேப் அம்பேத்கரின் விடுதலைப் பாதையில் இணைக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடைமையாகும், வரலாற்றுவாக்கிலான தலித் விடுதலை போராட்டப் பாதையையும் அதற்கு எதிராக முற்போக்குச் சாதி இந்துக்கள் ஏற்படுத்தும் கருத்தியல் தடைகளையும் தலித் இளைஞர்கள் புரிந்து கொள்வதன் மூலமே அவர்களால் சரியான பாதையில் பயணம் செய்ய முடியும்.
இன்று, பௌத்தத்தைப் பரப்புகிறோம் என்ற பெயரில் பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் தவறான அல்லது டாக்டர் அம்பேத்கர் காட்டிய பௌத்தத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜப்பான், தைவான், இலங்கை, சீனம் போன்ற நாடுகளில் உள்ள பௌத்த மதத் தலைவர்களிடமோ பௌத்த மதப் பரப்பு நிறுவனகளிடமோ நிதியைப் பெற்றுக்கொண்டு, அந்தந்த நாடுகளில் உள்ள பௌத்தக் கோட்பாடுகளை தலித் இளைஞர்களிடையே பரப்பி வருகின்றனர், இதற்கு சில பௌத்த பிக்குகள் துணை போகிறார்கள். தமிழகத்தில் இன்று நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு சில பௌத்த பிக்குகளில் ஒன்றிரண்டு பேர்களைத் தவிர, மற்றவர்களுக்கு டாக்டர் அம்பேத்கர் குறித்தோ, அவரது பௌத்த சிந்தனைகள் குறித்தோ போதிய அக்கறையில்லை. கிறித்துவ மதப் பாதிரியார்களைப் போலவும், சீரழிவு இந்துச் சாமியார்களைப் போலவும், ஒழுக்க கேடாகவும் ஊழல் பேர்வழிகளாகவும் சில பௌத்த பிக்குகள் நடந்துகொள்கிறார்கள். இத்தகைய போலி பௌத்த பிக்குகளிடம் தலித் இளைஞர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அறிவியலுக்கும், மனித மாண்புகளுக்கும் ஒவ்வாத கருத்துக்களைக் கூறும் பௌத்த பிக்குகளை, தன்னொழுக்கக் கேடான, தான் தோன்றித் தன மான பிக்குகளை கொண்டு நாம் ஒருபோதும் பௌத்தத்தை வளர்த்தெடுக்க முடியாது
மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் போல் செயற்பட்டு வரும் சில பௌத்த அமைப்புகள் பௌத்தம் குறித்த பல்வேறு கருத்துக் குழப்பங்களை தலித் இளைஞர்கள் மத்தியில் விதைத்து வருகின்றனர். புராதன பௌத்த கட்டுக் கதைகளையும், மூட நம்பிக்கை கள் மிகுந்த சடங்குகளையும் கொண்டிருக்கும் தைவான், ஜப்பான் பௌத்த மதக் கோட்பாடுகளை தமிழக மண்ணில் பரப்பி வருகின்றனர். சமூக அரசியல் தத்துவமான பௌத்தத்தை மதச் சாயம் கலந்து வீரியமிழக்கச் செய்து வருகின்றன. பௌத்தக் கொட்பாடுகளை ஜப்பானிடமிருந்தோ, சீனத்திடமிருந்தோ, தைவானிடமிருந்தோ அறிந்து கொள்ள வேண்டியத் தேவை தமிழக இளைஞர்களுக்கு இல்லை. இரண்டாயிரம் ஆண்டுகால தமிழ் இலக்கியமெங்கிலும் மிக ஆழமாகப் பதிவாகியுள்ள மரபான பௌத்தம் தமிழகத்திற்கு வழிகாட்டி நிற்கிறது. சாதியத்திற்கு எதிராகவும் ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வும், ஆதிக்கத்திற்கு எதிராகவும் போராடும் பௌத்தமே இன்றையத் தேவை. அத்தகைய பௌத்ததின் மூலமே ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தை ஒன்றினைக்க முடியும். மகா பண்டிதர் அயோத்திதாசர், தோழர் சிங்காரவேலு, பேராசிரியர் லஷ்மிநரசு, பாபாசாகேப் அம்பேத்கர் போன்ற மாபெரும் பௌத்த முன்னோடிகள், சமூக, அரசியல், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிரான, இந்துச் சாதிப் பண்பாட்டிற்கு எதிரான பௌத்தத்தை முன் வைத்தனர். சமூகத் தீங்குகளுக்கு எதிராகப் போராடும் குணத்தை, அந்த மாபெரும் தலைவர்களுக்கு வழங்கியது பௌத்த கோட்பாடுகளே!
எனவே எத்தகைய பௌத்தத்தை நாம் முன் னெடுத்துச் செல்லவேண்டும் என்ற கருத்து குழப்பத்திலிருந்து பௌத்த பரப்புரைவாதிகள் விடுபட வேண்டும். பௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் உயிர்த்தெழச் செய்ய போராடிய நமது முன்னோடிகள் சமூக, அரசியல், பொருளாதாரப் பாகுபாடுகளுக்கு எதிராகப் போரா டும் பௌத்தத்தையே நமக்கு மொழிந்துள்ளனர். உண்மையான பௌத்தமும் அதுதான்.
அத்தகைய உண்மையான, புத்தர் போதித்த பௌத்த பாதையை மக்களுக்கு அறிவிப்பதன் மூலம், பௌத்தத்தை ஒரு நவீன சமூக அரசியல் இயக்கமாக நம்மால் முன்னெடுத்துச் செல்ல முடியும். சமூக அரசியல் ஏற்றத் தாழ்வுகளையும், நவீன உலக மயமாக்கலையும், ஊதாரித்தனமான இந்துச் சமூகச் செயல்பாடுகளையும் எதிர்கொள்ளும் புரட்சிகர போராட்ட உளவியலை, இளைஞர்கள் மத்தியில் பௌத்தக் கோட்பாடுகளின் மூலமே உருவாக்க முடியும்.
கடந்த கால்நூற்றாண்டுகளாகத் தமிழகத்தில் எழுச்சியாகச் செயற்பட்டு வரும் தலித் அரசியல், தனக்கென ஓர் பண்பாட்டு செயற்பாடு எதையும் குறிப்பாகச் சுட்டவில்லை. பௌத்தம் குறித்து சிலர் பேசினாலும், அது மேம்போக்காகவோ அல்லது ஒரு வரி செய்தியாகவோ பேசப்பட்டுள்ளது. சமூக அரசியல் நீதியிலாகத் திரளும் மக்களிடையே, அவ்வப்போது உருவாகும் அல்லது எதிர்களால் உருவாக்கப்படும் பிளவுகளிலிருந்து அந்த மக்கள் பின்பற்றும் பொது பண்பாடுகள் காப்பாற்றும். அத்தகையப் பொது பண்பாடு எதுவும் தலித் மக்களிடையே இல்லாமல் இருப்பது அபத்தமானது. அம்மக்களிடையே எத்தகைய சமூக, அரசியல் எழுச்சி உருவானலும் அது நிலையாக இருக்க வேண்டுமானால், அவர்களுக்கென ஒரு பொதுப் பண்பாடு தேவை.
அந்தப் பொது பண்பாடு பௌத்தமாகத்தான் இருக்க முடியும். இன்றைய தலித் மக்களின் முன்னோர்கள் பௌத்தர்களாக வாழ்ந்தார்கள் என்ற வரலாற்று உண்மை அனைத்து வரலாற்றாய்வள்ளவர்களாலும் ஏற்று கொள்ளப்பட்டிருக்கிறது. இந்திய ஆய்வாளர்கள் மட்டுமல்ல, கால்டுவெல் போன்ற போற்றத்தக்க ஆய் வாளர்கள்கூட, ’இன்று கருத்து மேனியுடன், கழனி களிலும் காடுமலைகளிலும் உழைத்து வரும், தீண்டத் தகாதவர்களாக கருதப்படும் மக்களின் முன்னோர்கள், மொத்தமாகவோ, அல்லது பெரும் பகுதியாகவோ பௌத்தர்களாக வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று ஆணித்தரமாக நிறுவுகிறார்.
எனவே தலித் மக்களின் முன்னோர்கள் பின் பற்றிய பூர்வ பௌத்தக் கோட்பாடுகளை, பௌத்தப் பண்பாட்டை மீண்டும் அம்மக்களின் பொது பண் பாடாக மாற்றியாக வேண்டும். அதற்கு கடுமையான பிரச்சாரம் தேவை. நடவடிக்கைகள் தேவை. ஆனால், கடந்த 40 ஆண்டுகளாக தமிழகத்தில் பௌத்தம் குறித்தச் செயற்பாடுகள் மிகக் குறைவாகவே அமைந்தன. பௌத்தப் பரப்புரைகளில், பௌத்த மத மாற்றங்களில் ஈடுபட்ட சிலரும்கூட, தங்களை முழுமையான பௌத் தர்களாக மாற்றிக் கொள்ளவில்லை. மேடைகளில் மட்டும் புத்தம், புத்தம் சரணம் கச்சாமி பாடிவிட்டு, வீடுகளில் இந்துச் சடங்குகளையும், இந்துச் சாமிகளை யும் வைத்திருக்கும் அபத்தனமான மனிதர்களால் எப்படி பௌத்தத்தை வளர்க்க முடியும். இத்தகைய மனிதர்களே எதிர்கால பௌத்தத்தின் எதிரிகள். இத்தகைய போலியான செயற்பாடுகளே தலித் இளைஞர்களுக்கு பௌத்ததின் மீது நம்பிக்கை ஏற்படுவதைத் தடுக்கின் றன. மேலும், மேடைகளில் பௌத்தத்தை ஏற்று கொண்ட தாக அறிவித்துவிட்டு, அதை அரசு ஆவணங்களிலும் குடும்ப ஆவணங்களிலும் பதிவு செய்வதைச் சிலர் திட்டமிட்டே தவிர்த்து விடுகின்றனர். முழுச் சுதந்திர மானச் சிந்தனையோடும், நம்பிக்கையோடும் பௌத் தத்தை ஏற்பவர்களே சமூகத்தின் எதிர்காலத்திற்குப் பயன்படுவர். ஆவணங்களிலும் சமூகத்திலும் தங்களை இந்துக்கள் என்று பதிவுசெய்துகொண்டு மேடைகளில் புத்தம் சரணம் கச்சாமி பாடுவது எதற்கும் பயன்படப் போவதில்லை.
பறிக்கப்பட்ட தங்களின் உரிமைகளை மீட்கப் போராடும் தலித் இளைஞர்களின் போராட்ட உணர்வை பௌத்தமும் அதன் போதனைகளும் மழுங்கடித்து விடும் என்ற எண்ணம், தலித் தலைவர்களிடையே நீடித்து வருகிறது. அது தவறான எண்ணம் என்பது அவர் களுக்குத் தெரிந்தும், அந்த எண்ணத்தைக் கைவிட அவர்கள் மறுத்து வருகிறார்கள். எனவே தங்கள் அமைப்பில் உள்ள தலித் இளைஞர்களிடையே பௌத்தக் கருத்துகளை எடுத்துச் செல்ல பெரும் தயக்கம் காட்டி வருகிறார்கள். அல்லது, தலித் மக்களிடையே ஒரு பொதுவான பண்பாட்டைக் கட்டி எழுப்புவதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணராதிருக்கிறார்கள். எனவே தான், அரசியல் தளத்தில் தலித் தலைவர்களால் குறிப்பிட தகுந்த வெற்றி எதையும் பெற முடியவில்லை.
எனவே தலித் இளைஞர்கள் தங்கள் அளவிலான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டியவர்களாக இருக்கிறார்கள், அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களின் தலைமுறைகளுக்கும் நீடிக்கப் போகும் சாதி இழிவை நீக்குவதற்கு, பௌத்தத்தை ஏற்று, இந்து அடை யாளத்தை ஒழித்துக் கட்டியாக வேண்டும். படித்த தலித் இளைஞர்களிடையே, பௌத்தத்தில் இணைந்தால், இட ஒதுக்கீடுகள் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. 1994-ம் ஆம் ஆண்டு மத்திய அரசு நிறைவேற்றிய சட்ட திருத்தத்தின் பயனாக, பௌத்தத் தில் இணையும் பட்டியல் சாதியினருக்கு, இட ஒதுக் கீட்டு உரிமைகளைப் பெற வழிவகை செய்யப் பட்டுள் ளது. அதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பௌத்தத்தில் இணையும் பட்டியல் சாதியினருக்கு பட்டியல் சாதிச் சான்று வழங்கப்பட வேண்டும் என்று அரசாணைகள் பிறப்பித்துள்ளன. அதனடிப்படையில் ஏராளமானோர் பௌத்த மத பட்டியல் சாதியினர் சான்றுகள் பெற்று இட ஒதுக்கீடுகளைப் பெற்று வருகின்றனர். அதே நேரத்தில், இந்திய அரசும், மாநில அரசுகளும் பௌத்தர்களை, இசுலாமியர்களைப் போல, கிறித்தவர்களைப்போல சிறுபான்மை இனத்தவராக அங்கீகரித்துள்ளன. எனவே சிறுபான்மை இனத்தவருக்கு அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளையும் தலித் சமூகத்தவரால் பெற முடியும். எனவே, 1956-ல் பாபாசாகேப் அம்பேத்கர் பௌத்தம் ஏற்றபோது ஆற்றிய தம்ம உரையில் குறிப்பிட்டதைப் போல, பௌத்தத்திற்கு மாறினாலும் நமது அரசியல் உரிமைகள் நம்மைப் பின் தொடரும்.
எனவே, எந்த வகையில் பார்த்தாலும், பௌத்தத்தை ஏற்று, இந்து மத தொகுப்பிலிருந்து வெளியேறு வது தான் தலித் மக்கள் முன்னிருக்கும் சிறந்த விடுதலை வழியாகும். இதைப் புரிந்துகொண்டு, மேலும் எழும் சந்தேகங்களுக்கும், பௌத்தம் ஏற்ற பின்னர் எதிர்காலத் தில் ஏற்படப் போகும் தடைகளுக்கும் ஒரு சமூகமா(க)ச் சேர்ந்து விவாதித்துத் தீர்வுகளை எட்டிவிட முடியும். எனவே, நம்பிக்கையோடு பௌத்தத்தில் இணைந்து, ஒரு பொதுவான பௌத்த பண்பாட்டை தங்களுக்குள் உரு வாக்கிட, இளந்தலை முறையினர் முயற்சிக்க வேண்டும்.
‘அரசியல் அதிகாரம்’ என்ற ஒற்றை இலக்குடன் தலித் அரசியல் கட்சிகள் ஒரே போக்கில் செயல்பட்டு வருகின்றன. அரசியல் அதிகாரத்தை அடைய ‘தலித்’ என்ற அடையாளம் தங்களுக்கு தடையாக இருக்கிறது என்று தலித் தலைவர்கள் வெளிப்படையாகவே பேசுகிறார்கள். பொது அரசியல் நுழைவதற்காக தங்களின் அடிப்படைக் கொள்கைகளைக் கைவிட்டு வருகின்றனர். குறிப்பாகத் தலித் அடையாளத்தையும் அரசியலையும் கைவிட்டு, தமிழ்த் தேசிய அடையாளத்தையும் அரசியலையும் ஏற்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சாதி ஒழிப்பு அரசியலைப் பேசி தலித் இளைஞர்களைத் திரட்டும் தலித் அமைப்புகள், சாதி இந்துக்களின் முற்போக்குத் தத்துவமான ‘தமிழ் தேசிய அரசியலுக்கு’ இரையாகிவிடுவது பரிதாபகரமானது. தமிழ் தேசிய அரசியலைப் பேசுவதன் மூலம், சாதி இந்துக்களின் நன் மதிப்பைப் பெற்று, தேர்தலில் வாக்குகளைப் பெற முடியும், அதன் மூலம் அரசியல் அதிகாரத்தை பெற முடியும் என்று அற்பத்தனமாக தலித் தலைவர்கள் சிந்தித்து வருகிறார்கள். திராவிடம், தமிழ்த் தேசியம் என எந்த அரசியலைப் பேசினாலும், முல்லைப் பெரியார் அணைச் சிக்கல், காவிரி நீர்ச் சிக்கல், ஈழ விடுதலை, தமிழிழம் என எந்த தமிழர் நலன் பேசினாலும் தலித் தலைவர்களுக்கு சாதி இந்துக்கள் வாக்களிக்க மாட்டார்கள். அதிகாரத்தை வழங்கிவிட மாட்டார்கள். சாதி இந்துக்களின் நன்மதிப்பைப் பெற்றால் மட்டுமே அவர்களின் வாக்குகளைப் பெறமுடியும். நன்மதிப்பை பெறுவது என்பது வாய்மூடி மௌணியாக இருப்பதாகும். தலித் மக்களின் வாழ்வாதார உரிமைகள் குறித்து வாய் திறவாமல் இருப்பதாகும்.
எனவே சாதி இந்துக்களின் தயவில் கிடைக்கும் அரசியல் அதிகாரம் எதற்கு பயன்படும் என்பதற்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே சாட்சி. எனவே தலித் கட்சிகள் தங்கள் சொந்த பலத்தில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்துச் சிந்திக்க வேண்டும். அதற்குத் தீவிரமான, தொடர்ச்சி யான, கடுமையான களப்பணி தேவை. தலித் மக்களின் சிந்தனை முறையில் மாற்றத்தை உருவாக்கினால் மட்டுமே தலித் கட்சிகள் அதிகாரத்தை பெறமுடியும். சாதி இந்துக்களும், இந்து சமூகமும் உருவாக்கி வைத் துள்ள போர்க்களத்தில் வாள்வீசும் தலித் தலைவர்களால் வெற்றி பெற முடியாது என்பதை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். டாக்டர் அம்பேத்கரைத் தவிர சாதி இந்துக்களுக்காகப் பேசிய வேறு ஒருவரை அவர்களால் காட்டமுடியுமா? பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீடுகள் குறித்து ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை நிறுவ மறுத்த நேருவை எதிர்த்துத்தான் டாக்டர் அம்பேத்கர் தனது சட்ட அமைச்சர் பதவியைத் துறந்தார். ஆனாலும், சாதி இந்துக்கள் அதற்கு நன்றி பாராட்டுவதில்லை. எந்தவொரு சாதி இந்துவும், கம்பீரமாக நிற்கும் டாக்டர் அம்பேத்கரின் சிலையை கண்டால் வெறுப்படைகின்றான் அல்லது அதை சிதைக்க வேண்டும் என எண்ணுகிறான். எனவே எந்த சூழ்நிலையிலும் தலித் தலைவர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்து விட்டு சாதி இந்துக்கள் வேடிக்கை பார்க்க மாட்டர்கள்.
எனவே, தலித் அடையாளத்தைத் துறப்பதன் மூலமும், தலித் மக்களின் உரிமைகளைப் பற்றி பேசுவதை நிறுத்துவதன் மூலம் சாதி இந்துக்களின் நன் மதிப்பைப் பெற முடியும் என்ற எண்ணப்போக்கு முற்றிலும் தவறானது. மாறாக சாதி இந்துக்களுக்கு இணை யான மனித பலத்தை, நிதி ஆதாரத்தை, உருவாக்கி தங்களின் பலத்தைத் தலித்துகள் நிரூபித்தாக வேண்டும். சமூகத் தளத்தில் பண்பாட்டின் அடிப்படையில் தான் அத்தகைய பலத்தைத் தலித் மக்கள் பெறமுடியும். இந்துத் தொகுப்பில் இருக்கும் வரை அது சாத்தியமல்ல. எனவே, தலித் மக்கள் ஒரு பொதுப்பண்பாட்டை நோக்கி அணிதிரட்ட தலித் தலைவர்கள் முன் வர வேண்டும். திறந்த சிந்தனையுடன் டாக்டர் அம்பேத்கர் காட்டிய பௌத்த வழியைப் பற்றி விவாதிக்க முன் வரவேண்டும்.
வருங்கால தலித் தலைமுறைகளுக்கு துல்லியமான விடுதலைப் பாதையை வகுத்தளிக்க வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆயிரமாண்டு காலமாக, இந்தியச் சமூகத்தை தன் கோர பிடிக்குள் வைத்துச் சீரழித்து வரும் இந்துச் சாதியப் பண்பாட்டை வீழ்த்தி, மனித மாண்புகளுக்காவும், அமைதியான சகோதரத்துவம் நிறைந்த சமூகத்திற்காகவும் குரல் எழுப்பும் பௌத்தத்தை இந்திய மண்ணில் மீண்டும் நிலைநிறுத்த வேண்டியதும் நமது தலையாயக் கடமையாகும். அத்தகு வரலாற்றுக் கடமையை நாம் நிறைவேற்றுவோமே யானால், கொடிய இந்து இந்தியாவை வீழ்த்தி மாண்பு மிக்க பௌத்த இந்தியாவை உருவாக்கி, நமது முன்னோர்களின் உண்மையான பௌத்தத்தை மீண்டெழச் செய்தவர்களாவோம். அதுவே, ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயிரமாண்டுகால விடுதலை அரசியலின் அடிப்படையாகும்.
2012 சூலை