நமது கருணைதங்கிய இராஜாங்கத்தார் சாராயம் , வெள்ளி , மண் தைலம் , புகையிலை என் நான்கின் பெயரிலும் வரிகளை இன்னும் அதிகப்படுத்துவதாகக் கேள்விப்படுகிறோம். அவற்றுள் மநுகுலத்தாருக்கு சீர்கேட்டை உண்டுசெய்யும் சாராயம், புகையிலை இவ்விரண்டிற்கும் வரிகளை அதிகப்படுத்துவது சுகமேயாம்.
மநுக்களுக்கு உபகாரமாக விளங்கும் வெள்ளியின் பேரிலும், மண்தைலத்தின் பேரிலும் வரிகளை அதிகப்படுத்தாமலிப்பது சுகமாம். எவ்வகையிலென்னில், தற்காலம் வெள்ளி சகாயமாகக் கிடைக்கின்ற படியால் ஒருரூபா, அரைரூபா. கால்ரூபா வென்னும் வெள்ளி நாணயங்கள் சேதமில்லாமல் வழங்கிவருகின்றன. பிரிட்டிஷ் ஆட்சியால் கார்க்கப்பட்டக் குடிகளும் வெள்ளிப் பாத்திரங்களையும் நகைகளையும் விசேஷமாகக் கையாடிவருகின்றார்கள். வெள்ளிப்பாத்திரங்களும், வெள்ளி நகைகளும் சகலவகுப்பார் வீடுகளிலும் விசேஷமாகப் பரவிவருவதினால் பிரிட்டிஷ் ராஜநீதியின் சிறப்பும், அவர்களது கருணையும் தெள்ளற விளங்குகின்றது. மநுக்களின் சிறந்த வாழ்க்கையே இராஜாங்க சிறப்பாதலின் வெள்ளி நாணயத்தின்மீது வரி விதிக்காமலிருக்க வேண்டுகிறோம்.
மண்தைலத்தின் சுகமோ தினேதினே ஓரணா சம்பாதிக்கும் கூலியாளும் ஒருகாசு தைலமேனும் வாங்கிக் குடுக்கையில் வைத்துத் தீபமேற்றி வெளிச்சத்தில் புசித்து சுகித்து வருகின்றார்கள். இதேதீபத்தை ஆமணக்கு நெய்யில் பெரும்பாலும் எரித்துவந்தவர்கள் அத்தகைய பூமிவிருத்திசெய்து எள்நெய், ஆமணக்கு நெய், தென்னெய் மற்றுமுள்ள விளைபொருள்களை விருத்திசெய்து வந்தவர்கள் யாவரும் தாங்களும் பூமிவிருத்திகளை செய்யாது மற்று ஏழைகளையும் அப்பூமிகளை அநுபவிக்கவிடாது கெடுத்துவிட்டு இராஜாங்க உத்தியோகங்கள் பெற வேண்டியதற்காய் பி.ஏ. எம்.ஏ பாஸ் செய்ய ஆரம்பித்துக் கொண்டார்கள். அதனால் ஆமணக்கு நெய் விருத்தியுங்கெட்டு அதினால் எரியுந் தீபமும் ஏற்றப்படாமல் மண்தைலத்தைக் கொண்டே ஏழைகள் யாவரும் தீபமேற்றி வெளிச்சத்தில் உலாவிவருகின்றார்கள். இத்தகையாய் கனவான்கள் வீடுகள் முதல் ஏழைகள் வீடுகள் வரையிலும் இருளடையாமல் தீபமேற்றி வெளிச்சத்தில் உலாவவைத்து பிரிட்டிஷ் ஆட்சியை பிரகாசிக்கச் செய்து அதன் கருணையை விளக்கிவருகின்றபடியால் சருவ சீவராசிகளுக்கும் வெளிச்சத்தை யளித்து காக்கும் மண்தைலத்தின் மீது வரிவிதிக்காமலிருக்க வேண்டுகிறோம் .
சாரயத்திற்கோ இன்னும் வரியை அதிகம் உயர்த்த வேண்டுகிறோம். ஏனென்பார்களாயின் மனிதர்களாகப் பிறந்தும் மிருகத்திற்குங் கேடாகச் செய்துவிடுவது சாராயமேயாம் சுயபுத்தியைக் கெடுத்து அதன் மயக்கத்தால் வண்டியிலிருந்தேனும் குதிரையிலிருந்தேனும் விழுந்து மடியச்செய்வது சாராயமேயாம் பிரபுவாயிருந்து சகல ஏழைகளுக்கும் அன்னமளித்துவந்தவன் குடிக்கக் கஞ்சற்று குண்டியில் கட்டதுணியற்று ஏழைகளையண்டி இரக்கச்செய்வது சாராயமேயாம் இத்தகைய லாகிரி வஸ்துவிற்கு வரியை அதிகப்படுத்துவதுடன் அதிக வெறியால் வீதிகளில் உழுதும் உதாசின வார்த்தைகளைப் பேசியுந் திரிவோரை ஈஸ்ட் இந்திய கம்பெனி அதிகார காலத்தில் பன்னிரண்டாறென்னும் ஒன்றரை டெஜன் அடி அடித்தும் சீர்திருத்தி வந்த சட்டத்தை அமுலுக்குக் கொண்டுவந்தாலும் சுகமே புகையிலைக்கும் வரியை இன்னும் அதிகப்படுத்த வேண்டுகிறோம். ஏனென்பார்களாயின் சிறு வயதிலேயே மக்களின் மார்பு வரண்டு உதிரங் கக்கச்செய்வது புகையிலையேயாம் பத்துப் பன்னிரண்டு வயதுடைய சிறுவர்களை யெல்லாம் பெற்றோர்களிடங் காக திருடச்செய்து பொடியும் சுருட்டும் சிகரேட்டும் வாங்கிப் பிடிக்கச்செய்து நெஞ்சு வரண்டும் பீநிசம் தோன்றியும் மதிமயக்கி மடியச்செய்வது புகையிலையேயாம்.
ஆதலின் புகையிலையின் வரியையும் அதிகப்படுத்துவதுடன் பதினாறு வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பீடி , சிகரேட்டு , பொடி முதலிய வஸ்துக்களை உபயோகிப்பார்களாயின் அதையும் தடுக்கத்தக்கச் சட்டங்களை ஏற்படுத்த வேண்டுமென்று கோருகின்றோம். மார்ச் 16 , 1910 –
பண்டிதர் அவர்கள் எந்த அளவுக்கு மானுட நேயமும் உயர்ந்த பண்பாடும் மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் உணர்ந்து பேசுகிறார் என்பது எண்ணிப் போற்றத்தக்கது. மேலும் இளைய தலைமுறை பாதுகாக்கப்பட வேண்டும் அவர்கள் தீய பழக்க வழக்கங்களில் சிக்கிக் கொள்ளக் கூடாது அதற்குரிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்று அவர் சிந்திப்பது பல தலைமுறைகளுக்கு முன் நோக்கிச் செல்கிறார் என்பது தெளிவாக விளங்கும். மதுவின் கொடுமைகள் குறித்து பண்டிதர் எழுதுவதும் பின்னாளில் முருகேச பாகவதர் போன்ற இசைப் புலவர்கள் மற்றும் பல்வேறு சிந்துநூல்கள் மதுவிலக்கை மையப்படுத்தி எழுதப்பட்டன என்பது கவனத்திற்குரியது.மேலும் மண் தைலம் என்று பண்டிதர் அவர்கள் கூறுவது மண்ணெண்ணெய், சீமெண்ணெய் என்றெல்லாம் அழைக்கப்படும் கெரோசின் ஆயில் தான் என்று எண்ணுகிறோம். மக்கள் பயன்பாட்டுடன் இங்கே பண்டிதர் கூறுகிறார். (மேலும் இது கல்நெய் மற்றும் உலோக வகை ஒரு வகை மருந்து தைலம் என்றும் குறிப்பிடுகின்றனர்)ஏனென்றால் மின்சாரப் பயன்பாடு எல்லா இடங்களிலும் வருவதற்கு முன்னர் இதைத்தான் ஆசிய நாடுகள் பலவற்றிலும் ஐரோப்பிய நாடுகளிலும் கூட பயன்படுத்தியுள்ளனர்.
பேரா.க.ஜெயபாலன்