ஆந்திர மாநிலத்தில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் புதியதாக 13 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன. அதில் அமலாபுரத்தினை மாவட்ட தலைநகராக கொண்டு கோனசீமா என்ற மாவட்டம் உருவாக்க அரசு முடிவு செய்திருந்த நிலையில், அம்மாவட்டத்திற்கு “டாக்டர்.அம்பேத்கர் கோனசீமா” என பெயரிட தீர்மானிக்கப்பட்டது.
டாக்டர்.அம்பேத்கரின் பெயரினை மாவட்டத்திற்கு வைக்க கூடாது என ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. வன்முறைக்காரர்கள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் கார்களுக்கு தீவைத்து கொளுத்தினர். அம்பேத்கரின் பெயரினை இரவோடு இரவாக மாவட்டத்திற்கு வைக்கவில்லை. கடந்த 15 நாட்கள் அனைத்து கட்சியினருடனும் கலந்து ஆலோசித்த பிறகுதான் இம்முடிவினை அரசு அறிவித்துள்ளது. கண்டிப்பாக அம்பேத்கரின் பெயரினை மாவட்டத்திற்கு சூட்டுவோம்; பெயரை நீக்குவதற்கு வாய்ப்பே இல்லை என அம்மாநில நீர்பாசனத்துறை அமைச்சர் விஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் ஜமைக்கா சென்று, அதன் தலைநகரில் அமைந்துள்ள தெரு ஒன்றிற்கு டாக்டர்.அம்பேத்கரின் பெயர் வைக்கிறார். ஆனால் இந்தியாவில் இப்படியான நிகழ்வு அரிதிலும் அரிதாகவே நடக்கும். அப்படி நிகழ்ந்தாலும் சாதி இந்துக்களின் நெருக்கடிக்கு அரசு ஒரு கட்டத்தில் அடிபணியவே செய்கிறது.
டாக்டர்.அம்பேத்கர் காலனி என பெயர் வைப்பதில் இருந்து சற்று காலத்திற்கு முன்னர்தான் அம்பேத்கர் தெரு, அம்பேத்கர் சாலை என பெயர் வைக்க தொடக்கி இருக்கிறோம். இப்படியான சூழலில் ஒரு மாவட்டத்திற்கு அம்பேத்கரின் பெயரினை சூட்ட முனைந்ததிற்காகவே ஜெகன் மோகன் தலைமையிலான ஆந்திர அரசுக்கு மிகப்பெரிய சல்யூட். இந்திய அரசியலமைப்பின் தந்தை என போற்றப்படும் டாக்டர் அம்பேத்கரின் பெயரினை ஒரு மாவட்டத்தின் வைப்பதில் என்ன சிக்கல் இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரையில் இத்தகைய சிக்கலோ, எதிர்ப்போ எழவில்லை என்றால்தான் ஆச்சரியப்பட வேண்டும்.
உலக நாடுகள் அனைத்தும் டாக்டர்.அம்பேத்கரின் அறிவையும் ஆற்றலையும் பாராட்டி வரும் நிலையில், அவர் பிறந்து, தனது வாழ்நாள் முழுவதையும் செலவழித்த இந்நாட்டு மக்கள் அவரை எதிர்க்க என்ன காரணம். வேறு என்னவாக இருக்க முடியும் சாதிதான். இந்து மதத்தினால் தீண்டத்தகாத சாதி என வரையறுக்கப்பட்ட ஒரு சாதியில் பிறந்த ஒருவனை; உலகநாடுகள் மேட்சும் அறிவாற்றலை பெற்றிருப்பினும், உயர் பதவிகள் வகித்திருப்பினும் ஒருபோதும் தன் தேசத்தின் தலைவராகவோ, தனது தலைவராகவோ ஏற்காத நாட்டு மக்களை என்னவென்று கூறுவது.
நிச்சயம் இதற்கு அறியாமை காரணமல்ல, சாதிய மனநிலை மட்டுமே காரணம். அம்பேத்கர் சிலையின் மீதும், அவரது பெயரின் மீதும் கல்வியறிவு பெற்ற இளைஞர்களே வன்மத்தையும் வன்முறையையும் தொடர்ந்து நிகழ்த்தி வருகின்றனர்.
2008-ம் ஆண்டு நவம்பர் 12-ம் தேதி சென்னையில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கார் சட்ட கல்லூரியில் இரு தரப்பினர் இடையே பெரும் வன்முறை நிகழ்ந்தது. சாதி இந்து மாணவர்கள் தொடர்ந்து தலித் மாணவர்களின் மீது வன்மத்தை செலுத்தி வந்துள்ளனர். நவம்பரில் நடந்த கலவரத்திற்கு அடித்தளம் இடப்பட்டது, அக்டோபர் 30 குரு பூஜையில் ஒட்டப்பட்ட சுவரொட்டில் எழுந்திருந்த வசனமேயாகும். அச்சுவரொட்டியில் “எக்குலமும் வாழணும், தேவர்கள் மட்டும் ஆளணும்” என்ற வாசகம் அச்சடிக்கப்பட்டு இருந்தது. அதோடு டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் என்பதற்கு பதிலாக, “சென்னை அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பற்றி தலித் மாணவர்கள் சாதி இந்து மாணவர்களிடம் கேட்டதற்கு, “அவன் எங்களுக்கு என்னடா செஞ்சான், அவன் பேரை நாங்க எதுக்கு போடணும்” என ஒருமையில் பேசியதே பின்னர் வன்முறையாக மாறியுள்ளது. டாக்டர்.அம்பேத்கர் சட்ட கல்லூரி என்ற பெயரினை கூட பயன்படுத்தாத அளவிற்கு அவனது முளையினை மழுங்கடித்தது அறியாமை இல்லை என்பதே இதன் மூலம் விலக்கிக் கொள்ள வேண்டும்.
படித்த, அதுவும் ஜனநாயகத்தின் நான்கு தூண்களின் ஒன்றான சட்டத்தினை பயிலும் மாணவர்களின் மத்தியில் இப்படியானதொரு சாதிய வன்மத்தினை தகர்க்காதது கல்வி நிறுவனங்களின் தவறும் கூட.
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் டாக்டர். அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றின் ஒரு பகுதியினை பாடமாக நிர்ணயிக்கப்பட்டு கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் அம்பேத்கர் பற்றிய பாட திட்டங்கள் இருக்கின்றன. அது வெறுமனையே அம்பேத்கர் ஏதோ ராஜா வாழ்க்கை வாழ்ந்தது போன்றும், சாதி இந்துக்களால் எந்தவித தீண்டாமை கொடுமையும் அனுபவிக்காதது போன்றதொரு சித்தரிப்பினை தருவதாகவே உள்ளது. அவர் இந்த நாட்டின் கட்டமைப்பிற்காக, சமூக ஏற்றத்தாழ்வுகளை களைவதற்காக, பெண்களின் உரிமைக்காக, தொழிலாளர்களின் உரிமைக்காக செய்த எந்த காரியங்களை பற்றியும் மாணவர்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதில் அரசு இயந்திரங்கள் முனைப்பாக இருப்பதாகவே தெரிகிறது.
ஆனால், கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பாட திட்டமாக சேர்க்கப்பட்டுள்ள “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற புத்தகமானது சாதி இந்துக்களால் அவரது வாழ்வில் சந்தித்த தீண்டாமை கொடுமைகளை பற்றியதாகும்.
உலக நாடுகள் அம்பேத்கரின் சிலைகளை அவர்களது நாடுகளில் திறப்பதும், அவர் அங்கு தங்கியிருந்த இல்லத்தை நினைவிடங்களாக மாற்றும் நிகழ்வுகள் நடந்துவரும் வேலையில், தனது சொந்த நாட்டில் அவரது வீட்டின் மீது கற்கள் வீசுவது, அவரது சிலைகளை உடைப்பது, அவமானம் செய்வது போன்ற நிகழ்வுளையே உலக நாடுகளுக்கு இந்தியா சமர்பிக்கிறது. நீங்கள் இந்த கட்டுரையினை படித்து கொண்டிருக்கையில் கூட இந்தியாவில் ஏதோ ஒரு இடத்தில் அம்பேத்கரின் சிலை உடைக்கப்பட்டு இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை. அம்பேத்கார் பெயரினை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளே அம்பேத்கார் சிலைகளுக்கு கூண்டு அமைத்து, அதில் “இந்த கூண்டினை நிறுவியது நாங்கள் தான்” என்பது போல தங்கள் கட்சியின் பெயரினை எழுதி வைக்கும் அவலங்கள் இன்று அரங்கேற்றப்பட்டு வருகிறது. அனைவரது விடுதலைக்காகவும் படுபட்டவரை இன்று நாம் அவரது பெயரையே வைத்து கூண்டில் அடைக்கிறோம். இதைவிட அவமானம் அம்பேத்கருக்கு நிகழவா போகிறது.
பொதுவெளியில் மட்டுமல்லாமல், கல்வி நிறுவனங்களிலும் இந்நிலையே தொடர்கிறது. சென்னைப் பல்கலைக்கழக சேப்பாக்க வளாகத்தின் முதன்மை கட்டிடத்தில் 2015-16 ஆண்டிலேயே பல்வேறு நெருக்கடிகளுக்கு பிறகு அம்பேத்கரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 2016-17 கால கட்டத்தில் சென்னைப் பல்கலைக்கழக தரமணி முதுகலை ஆண்கள் விடுதியில் நான் தங்கி படித்து வந்தேன். எனது அறையில் அம்பேத்கரின் பெரிய புகைப்படம் ஒன்றினை வைத்திருந்தேன். புகைப்படத்தினை பார்க்கும் போதெல்லாம் அகில பாரத வித்தியார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பை சார்ந்த எம்.பி.ஏ. மாணவர் ஒருவர் கேலி செய்யும் விதமாக “ஜெய் பீம்! ஜெய் பீம்!” என என்னை பார்த்து கூறுவார். பதிலுக்கு எதையும் பேசாமலே பல நாட்கள் கடந்துள்ளேன். ஒரு முறை என்னிடம் அந்நபர், ‘அம்பேத்கரை புடிக்குமா’ என கேட்க, ‘புடிக்கும்’ என பதிலளித்த என்னிடம் “உன்னோட ரூம்-ல இருக்குற அம்பேத்கர் போட்டோவை கிழிச்சிட்டா என்ன பண்ணுவ” என மிக சாதாரணமாக கேட்ட கேள்வி விளையாட்டுக்கான கேள்வியாக நிச்சயம் எடுத்துக்கொள்ள முடியாது. அவ்வளவும் சாதிய வன்மம்.
இப்படியாக புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் மீது காலம் நெடுக வன்மத்தையே இந்திய சாதிய சமூகம் நிகழ்த்தியுள்ளது. ஆந்திராவில் இன்று நிகழும் “டாக்டர்.அம்பேத்கர் கோனசீமா” மாவட்ட பெயர் குறித்த வன்முறை வெறியாட்டத்தில் அரசு எம்மாதிரியான முடிவினை எடுக்கும் என்பது நமக்கு நன்கு தெரிந்ததே. இருப்பினும், அம்பேத்கரின் செயலினையும், கனவினையும் எவ்வாறாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல போகிறோம் என்பதை எண்ணமாக மட்டும் இல்லாமல் செயலாக முன்னெடுக்க கடமைப்பட்டிருக்கிறோம். இதனை நினைவில் கொண்டு முற்போக்கு சிந்தனை கொண்ட அனைவரும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் என்பதே நிதர்சனம்.