பார்ப்பனியச் சமூக அமைப்பில் ஒடுக்கப்பட்டவர்கள் என்பவர்கள், மனிதகுல நகர்வில் அவர்கள் முன்னேறி நின்ற சமூக உச்சத்திலிருந்து பார்ப்பனர்களாலும் – பார்ப்பனியர்களாலும் கீழே தள்ளப்பட்டு அழுத்தப்பட்ட வர்கள் என்கிற வரலாற்று உண்மையை அறிந்தவர்கள். தலித் மக்களின் விடுதலை என்பது, மீண்டும் உச்ச இலக்கை நோக்கிய மேல் நகர்வாகத்தான் இருக்க முடியும் என்ற வரலாற்றுப் பொறுப்பையும் சுமந்தவர்கள்.
மதுரைப் பிள்ளையின் முன்னோர்கள், தங்களுக்கு முந்தைய தலைமுறைகள் திரும்பத் திரும்ப தவறவிட்ட தருணங்களைத்திரும்பிப் பார்க்கத் தலைப்பட்டவர்களாய், சாதிப்புதர்செழித்த சமூகக் கானலில் எதிர்ப்புயலாய் எழுந்து நின்று சாகசமாய், சந்தர்ப்பத்தையும் சூழலையும் தன் வசப்படுத்தக் கற்றவர்களாய் மாற்றுத் தொழில்களில் நிலைக் கந்தக்கவர்கள் ஆனார்கள். சமூகத்தில் பொருளியல் நோக்கில் முதலிடம் தேடிய பயணத்தில் முத்திரை பதித்த அவர்கள், திரைக்கடலோடி திரவியம் தேடினார்கள். புலம் பெயர்ந்து அடைக்கலம் ஆனதில், புகலிடமான பர்மாவின் தலைநகரமான ரங்கூன் அவர்களை செல்வச் சீமான்களாக உயர்த்திக் கொண்டது.
மதுரைப்பிள்ளையும் தன் முன்னோர்களைப் போலவே, மரபான பார்ப்பனியச் சமூக மதிப்பிடலில் அடங்க மறுத்து திமிறி எழுந்தவர், பிறவி முதலாளித்துவ பின்னடைவுப் புள்ளிகளையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு, தனது வளர் முகப்பாய்ச்சல் கொண்ட தொழில் முனைப்பில் பேருரு தரித்து நின்றவர். இத்தகைய வளர்ச்சிக்கு அவரது முன்னோர்களின் தாழ்வு மனப்பான்மையை விட்டொழித்த பாங்கும், இடம் பெயர்தலும், அவர்கள் இயங்கிய காலத்து ஆங்கிலேயர் ஆட்சியும், கிறித்துவ காலத்து ஆங்கிலேயர்ஆட்சியும், கிறித்துவ நிறுவன கல்விக் கொடையும், தலித்துகளின் அரசியல் எழுச்சியும் மிகுந்த ஒத்திசைவாய் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ரங்கூன் மதுரைப்பிள்ளை என்றழைக்கப்பட்ட பி.எம். மதுரைப்பிள்ளை, சென்னை மாநகரில் 1858ஆம்ஆண்டில் பிறந்தவர். மதுரைப்பிள்ளையின் தந்தையார் மார்க்கண்டன் பிள்ளை. இன்று சென்னை வேப்பேரியிலுள்ள செயின்ட்பால் உயர்நிலைப்பள்ளி, அக்காலத்தில் எஸ்.பி.ஜி. பள்ளியாக இருந்தது. அப்பள்ளியில்தான் மதுரைப்பிள்ளை தன் தொடக்கக் கல்வியினை 1860களில் கற்றார். 1870களின் தொடக்கத்தில் ரங்கூனில் உயர் கல்வியினை அடைந்து, 1876இல் சென்னை தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் தமது பட்டப்படிப்பினை முடித்தார்.
தான் பெற்ற ஆங்கிலப் புலமையினாலும், கல்வி அறிவினாலும், கூர்மையினாலும் மதுரைப்பிள்ளை 1877இல் தன்னுடைய 19 ஆவது வயதிலேயே சென்னை மாகாண ஆளுநர் பக்கிங்ஹாம் பிரபுவின் நேர்முக உதவியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். அவருடைய நிர்வாகத் திறனும். லகுவான காரியசித்தமும், உழைப்பில் அயராத பண்பும்நாளடைவில் மதுரைப்பிள்ளையை “ரங்கூன் ஸ்ட்ராங் ஸ்டீல்’ என்ற நிறுவனத்திற்குப் பொறுப்பேற்க வைத்தது.
மதுரைப்பிள்ளை, 1885இல் தன்னுடைய 27 ஆவது வயதில் ரங்கூன் நகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டார். 1890வரை அய்ந்து ஆண்டுகள் அப்பொறுப்பிலிருந்து ரங்கூன் நகர வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டார். அவருடைய காலத்தில்தான் ரங்கூன் நகரம் வளர்ச்சி அடைந்தது என்றால் மிகையாகாது. மதுரைப் பிள்ளை, தொழிற் துறையில் கொள்கைகளை வகுத்துச் செயல் வடிவம் கண்டதால், நகராட்சி எல்லைக்குட்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி ரங்கூன் மக்கள் பல நன்மைகளை அடையச் செய்தார். ஒரு மாதிரி அரசின் செயலதிபராய் செயல்பட்ட அவரின் சீரிய நிர்வாகத்தால் குடிநீர், உணவுப் பொருட்கள் பங்கீடு, கல்வி, சுகாதாரம், சாலை போக்குவரத்து, மின்சார வசதி, தொழிற்துறை நிறுவனங்கள், வணிக மய்யங்கள் பேணப்பட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.
அக்காலத்தில் இலங்கையில் தோட்டப்பயிர் உருவாக்கப்படவும், மலேசியாவில் ரப்பர் தோட்டங்கள் வளர்த்தெடுக்கப்படவும், ஆப்பிரிக்காவில் கனிமச் சுரங்கங்களில்பாடுபடவும், பனாமாவில் கரும்புத் தோட்டங்கள் அமையவும் தாழ்த்தப்பட்ட தமிழர்களே பெரும்பான்மையினராகப் புலம்பெயர்ந்து சென்றனர். கடல் பயணத்தின் போது அவர்கள் ஆடு, மாடுகளைப் போல் அடைக்கப்பட்டது மட்டுமில்லாமல், கப்பலில் தனித்தளத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.
இக்கொடுமைக்கு முடிவு கட்ட எண்ணிய மதுரைப்பிள்ளை அவர்கள், இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே இரண்டு லட்ச ரூபாய்க்குச் சொந்தமாக கப்பல் ஒன்றை வாங்கினார். ஆங்கிலேயே அரசிடம் கப்பல் பயண ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு, ஆங்கிலேயே ஆட்சி எல்லை முழுவதும் பிழைப்புக்கென அணியமான தாழ்த்தப்பட்ட தமிழர்களை சுயமரியாதையோடு சேர்ப்பித்தார்.
1900களின் தொடக்கத்தில் ஆங்கிலேயர்களின் கடல் வர்த்தக நலன்களுக்கு சவால்விடுத்து பல கப்பல் நிறுவனங்கள் உருவாயின. 1905ஆம் ஆண்டு சூலை மாதம் “பெங்கால் ஸ்ட்ரீம் நேவிகேஷன்’ என்ற நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது.இஸ்லாமிய வர்த்தகர்களும் ஜமீன்தார்களும் இணைந்தே இந்நிறுவனத்தை அமைத்தனர். அடுத்து வ.உ.சி.யின் முன் முயற்சியில் சிவபுரம் ஜமீன்தாரைக் குறிக்கும் சி.வி. கம்பெனி எனப் பெயரிடப்பட்ட “சுதேசி ஸ்ட்ரீம் நேவிகேஷன்’ என்ற நிறுவனம் 1906இல் தொடங்கப்பட்டது.
சி.வி. கம்பெனி, பலரைப் பங்குதாரர்களாகக் கொண்டதாகும். அதை நிர்வகிக்க ஓர் அறக்கட்டளையும் அமைக்கப்பட்டது. அது பதினைந்து இயக்குநர்களைக் கொண்டிருந்தது. சி.வி. கம்பெனியின் செயலாளர் எச்.ஏ.ஆர். ஹாஜி பகீர் முகம்மது செயிட் ஆவார். இவ்விரண்டு நிறுவனங்களுமே வர்த்தகப் போட்டியில் தாக்குப் பிடிக்க முடியாமல் வீழ்ந்து போயின. இருப்பினும் 1905க்கும் 1930க்கும் இடையில் 30 சுதேசிக்கப்பல் நிறுவனங்கள் தோற்றுவிக்கப்பட்டன.
இதில், ஆங்கிலேயர் அல்லாதவர்களில் முதன் முதலில் கப்பலோட்டியவர் என்ற பெருமை, தாழ்த்தப்பட்ட தமிழரான மதுரைப் பிள்ளையையே சாரும். சமநீதிக் கண்ணோட்டத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென கப்பல் வாங்கிய மதுரைப்பிள்ளை, ஆங்கிலேயர் வாணிபக் குழுமத்தில் பணியாற்றும்போது வர்த்தகத்தில் ஒழுங்கையும் நம்பிக்கையையும் வளர்த்தெடுத்துக் கொண்டதால், சொந்தமாக “கப்பல் துபாஷ் ஸ்டீவ்டேன்’ என்ற ஏற்றுமதி இறக்குமதிக்கான வர்த்தக நிறுவனத்தையும் வெற்றிகரமாக நடத்தினார்.
மதுரைப்பிள்ளையின் உலக சுற்றுப் பயண அனுபவத்தைக் கேள்விப்பட்டு, பரோடா மன்னர் தன்னை உலகத்தைச் சுற்றிக் காண்பிக்கும்படி கேட்டுக் கொண்டார். மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க மதுரைப் பிள்ளை, தன் கப்பலிலேயே அழைத்துச் சென்று பரோடா மன்னருக்கு உலக நாடுகளையெல்லாம் சுற்றிக் காண்பித்தார். நாடாண்ட ஒரு மன்னருக்கு உலக நாடுகளைக் காண்பித்த பெருமை மதுரைப் பிள்ளைக்கே உண்டு.
இந்நிகழ்ச்சியையொட்டி, அறிவாசான் அயோத்திதாசப் பண்டிதர் அவர்கள், பரோடா மன்னர் கெய்க்வாட் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், “”எங்கள் குல வழித்தோன்றல் மதுரைப்பிள்ளை அவர்கள் உங்களுக்கு உலகத்தைச் சுற்றிக் காண்பித்தததற்கு நன்றியாக, நீங்கள் எங்கள் குல இளைஞன் அம்பேத்கர் அமெரிக்காவில் படிப்பதற்கு உதவி செய்திருக்கிறீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளது கவனத்திற்குரியதாகும்.
பொருளியல் முன்னேற்றத்தில் மதுரைப்பிள்ளை நடந்த தடமும், தொடர்ந்த புலமும், தெரிவு செய்த கோணமும் இன்றுவரை அவருக்கு ஒரு வழித்தோன்றலை சுட்டிக்காட்டிட முடியாதபடி அவரே தனித்துவமாக நிலைக்கக் காண்கிறோம். “ஆதிதிராவிடர் மகாஜனசபா’வின் புரவலராகயிருந்த மதுரைப்பிள்ளை அவர்கள், தாழ்த்தப்பட்ட தமிழர்களின் தலைவர்களுக்கும் – தளபதிகளுக்கும் பெரும் பின்புலமாக இருந்தார். “ஆதிதிராவிடர் மகாஜனசபா’வை கட்டிக்காத்து சிறப்பாக உழைத்தவர்களுக்குப் பொருளுதவியினை அள்ளி வழங்கினார்.
அக்காலத்தில் சென்னை மாநகரில் சபாவின் முன்னணி செயல் வீரர்கள் என்று குறிப்பிடத்தக்கவர்களாய் இருந்த புரசை கிராமத்தெரு சடகோபன், லாடர்ஸ் கேட் மணிவாசகம், ஜார்ஜ் டவுன் மகிமைதாஸ் போன்றவர்களுக்கு குடும்பச் சுமை இல்லாதவாறு, அவர்களின் குடும்பங்களைப் பராமரித்து வந்தார்.
கோலார் தங்கச் சுரங்கத்தில் மதுரைப்பிள்ளை “காண்ட்ராக்ட்’ எடுத்திருந்தார். அவ்வகையில் அவர் அடிக்கடி கோலார் தங்க வயலுக்குச் சென்று வந்ததால், கோலார் தங்க வயல் “ஆதிதிராவிடர் மகாஜன சபை’க்கும் புரவலர் ஆனார். அதே போன்று தென்னாப்பிரிக்காவில் மதுரைப்பிள்ளைக்கு வர்த்தக நிறுவனம் இருந்ததால், “டர்பன் ஆதிதிராவிடர் மகாஜன சபா’க்கு புரவலர் ஆனார். பிழைப்புத் தேடி பிரிட்டிஷ் சாம்ராச்சியம் முழுவதும் பரவியிருந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் எதிர்பார்ப்பின் குவிமய்யமாக மதுரைப் பிள்ளை திகழ்ந்தார்.
மதுரைப்பிள்ளை தலித் மக்களின் கல்வி, மருத்துவம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். தென்னாப்பிரிக்காவில், அதன் தலைநகரமான டர்பனில் தாழ்த்தப்பட்ட தமிழருக்கென ஒரு கல்விக்கூடத்தை ஏற்படுத்தினார். அந்நகரில் இருந்த அரசு மருத்துவமனைக்கு ஒரு பெருந்தொகையை நன்கொடையாக வழங்கி, தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உரிய அங்கீகாரத்துடன் உரிய மருத்துவ வசதி பெற வழிவகுத்தார்.
சென்னையில் ஓர் உயர்நிலைப் பள்ளியை நிறுவி, தலித்துகளின் கல்விக்கு வித்தூன்றினார். சென்னையில் அக்காலத்தில் ராஜா சர் ராமசாமி மருத்துவமனையை “கஞ்சித் தொட்டி ஆஸ்பத்திரி’ என்றே அழைப்பார்கள். ஏழைகளே பெரும்பாலும் பயன் பெற்று வந்த இம்மருத்துவமனைக்கு மதுரைப்பிள்ளை பெருந்தொகையை நன்கொடையாக அளித்தார். தலித் மக்கள், தலித் அல்லாத ஏழை மக்களுக்குத் திருமணங்களை அவரே செலவு செய்து முடித்து வைத்தார்.
மதுரைப்பிள்ளை, தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் தலைமை தாங்கியவர் ஆவார். எதார்த்த வகையில் எழுத்தில் பூர்த்தியானவர்களாக பெரும்பாலோர் தாழ்த்தப்பட்ட தமிழர்களாகவே இருந்த அக்காலத்தில், மதுரைப் பிள்ளை தமிழ் மொழிக் காவலராகவே விளங்கினார்.
மொழி, பண்பாடு இவற்றின் பாதுகாப்பு மிக மிக இன்றியமையாதது என்பதை உணர்ந்த அவர், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தமிழ் விற்பன்னர்களாக வலம் வந்த தமிழ்ச் சங்க ஆஸ்தானக் கவிராயர் சட்டவதானம் வைரக்கண் வேலாயுதப் புலவர், திவ்விய கவிராகு வேல்தாஸ், புரசை கிராமத்தெரு கவி சாமிநாதப் பண்டிதர், கோலார் தங்கவயல் அய்யாக்கண்ணு புலவர், ஆதிதிராவிடர் சரித்திரத்தை எழுதிய சென்னை எழும்பூர் திரிசிரபுரம் பெரும் புலவர் பெருமாள் பிள்ளை, ரங்கூன் புலவர் கபால மூர்த்தி, கத்திவாக்கம் கா.நா. எல்லப்பதாசர், வன்னியம்பதி சாக்கிய தோமாஸ் புலவர் போன்றோரை அரவணைத்துக் காத்து நின்றார்.
மேலும், தலித் அல்லாதாரான தஞ்சை சமஸ்தானப் புலவர் டி.பி. துரைசாமி, திருமலைராயன் பட்டினம் தமிழ் வித்துவான் நா. ராமசாமி, நாகை மாணிக்கம் கவிராயர், சேலம் சதாவதானம் பாலசுப்பிரமணி அய்யர், தமிழ்ப் பண்டிதர் பு.த. செய்யப்ப (முதலியார்) கி.ஆதிமூல (முதலியார்) நாகை மு. செவ்வந்தி மரைக்காயர், மதுரகவி தேவராஜம் (பிள்ளை) கும்பகோணம் மகாவித்துவான் கணபதி (அய்யர்) போன்றோர் மதுரைப் பிள்ளையின் தமிழார்வம் மிக்க வள்ளல் தன்மை மீது புகழ்பாடி பொன்னும் பொருளும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மதுரைப்பிள்ளை, தனது மக்கள் பொது அறிவு பெற்று சமூக விழிப்புணர்வை அடைய – சமூக மாற்றத்திற்கான கருத்துகளையும், வரலாற்றுச் செய்திகளையும் அச்சிட்டு இலவசமாக மக்களிடம் வழங்கினார். 500க்கும் மேற்பட்ட தமிழ்ப் புலவர்கள் கருத்துரைத்த 1,300 பக்கங்களைக் கொண்ட “மதுரைப் பிரபந்தம்’ என்ற நூல் மதுரைப்பிள்ளையின் தமிழ்க் கொடையை விவரிக்க அக்காலத்தில் வெளியிடப்பட்டது.
சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியம் என்று வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தின் மாமன்னராயிருந்த அய்ந்தாம் ஜார்ஜ் மன்னரால் “சிறந்த மக்கள் தொண்டர்’என்று மதுøரப்பிள்ளை பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டார். ஏறத்தாழ கால் நூற்றாண்டுக் காலம் இரண்டாவது வகுப்பு மாகாண கவுரவ நீதிபதியாகப் பணியாற்றிய அவர், பிரிட்டிஷ் அரசின் மதிப்பிற்குரியவராகவும், சென்னை கல்கத்தா, பம்பாய் மாகாண ஆளுநர்களின் நண்பராகவும் விளங்கினார்.
கோடீஸ்வர மதுரைப்பிள்ளை என்று தாம் அழைக்கப்பட்டு வந்தாலும், செல்வத்தாலும் அரசியல் செல்வாக்காலும் தன்னை பிறர் எடைபோடுவதை மதுரைப்பிள்ளை விரும்பாதவராய் இருந்தார். செல்வாக்கு, செல்வம் என்பன இன்று வரும் – நாளை போகும் என்பதைக் கருத்தில் கொண்டு, வாழும் வரை சமூக மனிதராகவே வாழ்ந்து சமூகத்தில் தனக்கான மதிப்பீட்டை உயர்த்திக் கொண்டே இருந்த மதுரைப்பிள்ளை, தன்னுடைய 55ஆவது வயதில், 1913இல் இயற்கை எய்தினார்.
தொல் தமிழர்களுக்கான ஒவ்வொரு எத்தனங்களையும் சாத்தியங்களாய் தன் வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டிய மதுரைப்பிள்ளை – அன்றைய தலைவர்களோடு, போராளிகளோடு, தொண்டர்களோடு பல்வேறு சுமைகளைப் பகிர்ந்து கொண்டு தோள் கொடுத்து வந்தவர். அவர், தம் மக்களை ஏறெடுத்து விட்ட அறைகூவல் – “முடியும் என்பதே முதல் வெற்றி’ என்பதுதான்.
“தலித் முரசு’ – ஏப்ரல் 2003