தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களில் பட்டியலினத்தவருக்கு எதிராக நடந்த சில சம்பவங்கள் தேசிய அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளன. பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேறிய மாநிலங்களில் ஒன்றான தமிழ்நாட்டில் நடக்கும் இந்த சம்பவங்கள், மாநிலத்தின் சமூக அரசியல் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஒரு தகவலின்படி, தமிழ்நாட்டின் 37 மாவட்டங்களில் உள்ள 345 கிராமங்கள், பட்டியலினத்தோருக்கு வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புள்ள மாவட்டங்களாக அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.
தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பியான கோமதி வெங்கடரெட்டியும் தெலங்கானா ராஷ்ட்ர சமிதியின் எம்பி மன்னே ஸ்ரீநிவாஸ ரெட்டியும் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த உள்துறை அமைச்சகம் இந்த புள்ளிவிவரங்களை வெளியிட்டது.
ஆனால், இந்த புள்ளிவிவரங்களைவிட சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடக்கும் ஜாதியக் கொடுமைகளை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.
புதுக்கோட்டை வேங்கைவயல்
டிசம்பர் 2022: புதுக்கோட்டை அருகே முட்டுக்காடு ஊராட்சிக்குட்பட்ட இறையூர், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களுக்கான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலக்கப்பட்டு, அந்த நீர் பல நாட்களாக அந்தப் பகுதி மக்களுக்கு வழங்கப்பட்டது. சில குழந்தைகளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்த இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்த விவகாரம் குறித்து ஒன்றரை மாதங்களுக்கு மேல் விசாரணை நடந்த நிலையிலும் இந்தச் சம்பவத்தைச் செய்தவர்கள் யார் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. தற்போதும் இந்த விவகாரம் தொடர்பாக, மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை 60க்கும் மேற்பட்ட நபர்களிடம் விசாரித்து வருகிறது.
இந்தச் சம்பவமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதனை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள், அதே ஊரில் உள்ள தேநீர் கடையில் இரட்டைக் குவளை முறை இருப்பதைக் கண்டறிந்து உரிமையாளர் மீது வழக்குப் பதிவுசெய்தனர்.
மேலும், அங்குள்ள அய்யனார் கோவிலுக்குள் நுழைவதற்கு பட்டியல் இன மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுவந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு, பட்டியலின மக்களை உள்ளே அழைத்துச்செல்ல முயன்றார். அப்போது உள்ளூர் மக்களில் சிலர் அதைத் தடுக்க முயன்றனர். இதை மீறி பட்டியலின மக்களை அவர் அழைத்துச் சென்றார். இப்போது தேநீர் கடை விவகாரம் தொடர்பாகவும் கோவிலுக்குள் பட்டியலினத்தோருக்கு அனுமதி மறுத்தது தொடர்பாகவும் நான்கு பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.
சேலம் திருமலைகிரி
ஜனவரி 27, 2023: புதுக்கோட்டை வேங்கைவயல் சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்கும் முன்பாகவே சேலம் மாவட்டத்தில் கோவிலுக்குள் நுழைந்ததற்காக பட்டியலின இளைஞர் ஒருவர் ஆபாசமாக வசைபாடப்பட்ட நிகழ்வு நடந்தேறியது.
சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்குள் கும்பாபிஷேகம் முடிந்து வேறு பூஜைகள் நடைபெற்ற நிலையில், அந்தக் கோவிலுக்குள் பிரவீண் என்ற பட்டியலின இளைஞர் நுழைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க சாதியினர் தாங்கள் இனிமேல் இந்தக் கோவிலுக்குள் செல்லப் போவதில்லை என அறிவித்தனர். இதனால், அந்த இளைஞரை திருமலைகிரி தி.மு.க. ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் பொதுமக்கள் முன்பாக ஆபாசமாகத் திட்டினார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பரவியதையடுத்து, அவர் கட்சியைவிட்டு இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், காவல்துறை வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளது.
மதுரை காயாம்பட்டி
15, ஜனவரி, 2023: மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகில் உள்ள காயாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின இளைஞரான கண்ணன் என்பவர் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் தினத்தன்று பக்கத்து ஊரில் இருந்த உறவினர்களைப் பார்க்க இரு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர்களை வழிமறித்த அந்த ஊரைச் சேர்ந்த ஆதிக்க ஜாதி இளைஞர்கள், “ஏன் இரு சக்கர வாகனத்தை வேகமாக ஓட்டுகிறாய்?” என்று கேட்டு தாக்கியுள்ளனர். அவர் அணிந்திருந்த ஆடைகளையும் அவிழ்த்துள்ளனர். அவரது மனைவின் சேலையைப் பிடித்து இழுந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது குறித்த புகாரில் ஏழு பேர் மீது எஸ்.சி/எஸ்.டி வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. இந்த விவகாரத்தைத் தட்டிக்கேட்ட பட்டியலின மக்கள் தங்களைத் தாக்க வந்ததாக ஆதிக்க ஜாதியினர் கொடுத்த புகாரில் 26 பேர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மூங்கில்துறைப்பட்டு
18 ஜனவரி, 2023: கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பட்டியலின இளைஞர் ஒருவர் திருவண்ணாமலை மாவட்டம் தொண்டமனூர் கிராமத்தில் நடந்த பொங்கல் கலை நிகழ்ச்சிகளைக் காணச் சென்றிருக்கிறார். அங்கு அவரைச் சந்தித்த ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இளைஞர், “மச்சான்” என அழைத்து சகஜமாக உரையாடியிருக்கிறார். ஆனால், அவருடன் இருந்த மற்ற ஆதிக்க ஜாதி இளைஞர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞரை எப்படி மச்சான் என அழைக்கலாம் எனக் கூறி தகராறு செய்துள்ளனர். மேலும் தாங்கள் அணிந்திருந்த மஞ்சள் நிற சட்டைகளை வணங்க வேண்டுமெனக் கூறியுள்ளனர். இதையடுத்து இரு தரப்பிற்கும் மோதல் ஏற்பட்டு தாக்குதல் நடந்துள்ளது.
இதற்கடுத்து, பொரசப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் அம்பேத்கர் நகர் வழியாகச் சென்றபோது அவர்கள் தொண்டமனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கருதி அவர்கள் மீது அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து அந்த இருவரும் பொரசப்பட்டில் இருந்து ஆட்களை அழைத்துவந்து அம்பேத்கர் நகரிலிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த விவகாரத்தில் பொரசப்பட்டு பகுதியைச் சேர்ந்த 22 பேர் மீதும் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த 12 பேர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடலூர், சாத்துக்கூடல்
ஜனவரி, 2023: இதே பொங்கல் பண்டிகையை ஒட்டி, கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டத்தில் சாத்துக்கூடல் மேல்பாதி பகுதியில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் விளையாட்டுப் போட்டிகளை நடத்திக்கொண்டிருந்துள்ளனர். இந்த நிலையில், அருகில் உள்ள பிரதான சாலையில் வந்த சடை பரமசிவம் என ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த இளைஞர் சாலையை மறித்து தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அதன் ஆக்ஸிலேட்டரை தொடர்ந்து முறுக்கியுள்ளார். இதனால், ஏற்பட்ட சத்தத்தால் அங்குவந்த பட்டியலின இளைஞர்கள், அவரை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளனர்.
இதற்குப் பிறகு இந்த விளையாட்டுப் போட்டிகளில் கொடுப்பதற்காக பரிசுகளை வாங்க பட்டியலினத்தைச் சேர்ந்த இருவர் ஆலிச்சிகுடி வழியாக விருதாச்சலத்திற்குச் சென்றபோது, அவர்களை வழிமறித்த 7 பேர் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதைத் தட்டிக்கேட்க வந்த மேலும் இரண்டு பேருக்கும் அடி விழுந்தது. இந்த சம்பவத்தில் வழக்குப் பதிவுசெய்த காவல்துறை இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளது.
தென்காசி, பாஞ்சாலகுளம்
செப்டம்பர், 2022: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் இரு தரப்பினர் சேர்ந்தவர்கள் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ஆதிக்க சாதியினர் பட்டியல் சாதியினரிடம் வழக்குகளை திரும்பப் பெறக் கோரி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பட்டியல் சாதியினர் இதற்கு உடன்படவில்லை. இதையடுத்து, பட்டியல் சாதியினருக்கு தங்கள் கடைகளில் எந்த பொருளும் கொடுக்கக் கூடாது என ஆதிக்க சமூகத்தினர் தீர்மானம் போட்டனர். அதன் அடிப்படையில் ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஊர் தலைவர் மகேஷ்வரன் என்பவர் தமது கடைக்கு தின்பண்டம் வாங்க வந்த பட்டியலின மாணவர்களுக்கு, பொருட்கள் தர மறுத்து, அதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதற்குப் பிறகு, மகேஷ்வரனும் அவரது நண்பரும் கைதுசெய்யப்பட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். மீது குற்றச்சாட்டு
கடந்த சில மாதங்களில் ஊடகங்களில் பெரிய அளவில் கவனம் பெற்ற இந்தச் சம்பவங்கள் சமீபகாலமாக தமிழ்நாட்டில் பட்டியலினத்தவருக்கு எதிரான மனப்போக்கும் வன்முறையும் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன.
“நிச்சயமாக தமிழ்நாட்டில் பட்டியலினத்திற்கு எதிரான தாக்குதல் வருடாவருடம் அதிகரித்துவருகிறது என்பதில் சந்தேகமில்லை. ஜாதீய சிந்தனையும் வேகமாக தீவிரமாக வளர்ந்து வருகிறது. இதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாகத்தான் நாங்கள் கருதுகிறோம். இது அவர்களது செயல்திட்டம். அதன் தலைவர்கள், தொடர்ந்து ஜாதி சங்கங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்கிறார்கள். எல்லோரிடமும் ஜாதி பெருமிதத்தை ஏற்படுத்தும் வேலையைச் சேய்கிறார்கள். ஜாதி உணர்வை ஏற்படுத்தினால்தான் மத உணர்வை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார்கள். இவர்கள் ஏற்படுத்தும் ஜாதிப் பெருமித உணர்வின் வெளிப்பாடுதான் இந்தத் தாக்குதல்கள்” என்கிறார் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் கே. சாமுவேல் ராஜ்.
ஆனால், தி.மு.க. அரசு பதவியேற்ற பிறகு இந்தத் தாக்குதல் அதிகரித்திருப்பதாக விமர்சனங்கள் இருப்பது குறித்துக் கேட்டபோது, “அரசு மாறினாலும் அதிகார வர்க்கம் அதேதானே இருக்கிறது. ஆகவே இது போன்ற நடவடிக்கைகளை ஒடுக்க மிகத் தீவிரமான முயற்சிகள் தேவைப்படும். தி.மு.க. அரசு விரைவாக அந்தத் திசையில் கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் சாமுவேல் ராஜ்.
அளவு மாறவில்லை, தன்மை மாறியிருக்கிறது – ரவிக்குமார்
இந்தப் போக்கு சமீப காலத்தில் அதிகரித்திருப்பதாகத் தான் கருதவில்லை என்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் து. ரவிக்குமார். “கடந்த இரண்டு ஆண்டுகளில் இம்மாதிரி சம்பவங்களின் அளவு மாறியிருக்கிறது அல்லது அதிகரித்திருக்கிறது என்று சொல்வதைவிட இந்தத் தாக்குதல்களில் ஏற்பட்டிருக்கும் பண்பு மாற்றம்தான் கவனிக்க வேண்டியது. நேரடியான வன்முறைக்குப் பதிலாக, அவமானப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் அதிகரித்திருக்கின்றன.
கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் நிழல் அரசுதான் நடந்து வந்திருக்கிறது. இதனால், இம்மாதிரி சம்பவங்களைத் தடுக்க வேண்டிய அரசு எந்திரத்தின் முக்கிய அங்கங்களான காவல்துறை, வருவாய்த்துறை ஆகியவற்றில் பா.ஜ.கவின் தாக்கம் அதிகரித்துள்ளது. அரசியல் தளத்தில் அவர்கள் பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்த, தீவிரப்படுத்த, அது பொது வெளியிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் அரசியல் செல்வாக்கைவிட, கருத்தியல் செல்வாக்கு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்த கருத்தியல் செல்வாக்கு கட்சிகளைத் தாண்டி, கட்சிப் பாகுபாடின்றி ஊடுருவுகிறது. இது வெவ்வேறு விதமாக நடக்கிறது.
இது, பெரும்பான்மை வாதத்தை எதிர்த்துப் பேச முடியாத மௌனத்தை ஏற்படுத்துகிறது. சனதான கருத்தியலின் தாக்கம் ஒரு சமூகத்தில் அதிகரிக்கும்போது அந்தச் சமூகத்தில் ஜாதி பாகுபாடு, பாலினப் பாகுபாடு அதிகரிக்கிறது. இஸ்லாமியர், கிறிஸ்தவர் போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான மனநிலையும் அதிகரிக்கிறது. இந்த மனநிலை பா.ஜ.கவினரிடம் மட்டுமல்லாமல், பொதுச் சமூகத்திலும் அதிகரிப்பதுதான் ஆபத்து.
தி.மு.கவின் அரசியல் தலைமையைப் பொறுத்தவரை, சனாதனக் கருத்தியலுக்கு எதிராக இருந்தாலும் சமூகத்தில் பா.ஜ.கவாலும் அதன் துணை அமைப்புகளாலும் ஏற்படுத்தப்படும் பண்பு மாற்றம், அரசு எந்திரத்தில் ஏற்பட்டிருக்கும் பண்பு மாற்றம் ஆகியவற்றின் விளைவாகத்தான் தற்போது நடக்கும் சம்பவங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஆகவே, இவையெல்லாம் தி.மு.கவால் ஏற்பட்டிருப்பதாகவோ, தி.மு.க. ஆட்சி வந்த பிறகு அதிகரித்திருப்பதாகவோ பார்க்க முடியாது” என்கிறார் ரவிக்குமார்.
கழிவுநீர்த் தொட்டி, லாக்கப் மரணம்
மதுரையில் இருந்து செயல்பட்டுவரும் எவிடன்ஸ் அமைப்பு பட்டியலினத்தவருக்கு எதிரான வன்கொடுமைகளைத் தொடர்ந்து பதிவுசெய்துவருகிறது. மேலே பட்டியலிடப்பட்ட சம்பவங்களைத் தவிர, ஊடக கவனம் பெறாத வேறு சில சம்பவங்களையும் சுட்டிக்காட்டுகிறார் எவிடென்ஸ் அமைப்பைச் சேர்ந்த கதிர்.
பின்வரும் சம்பவம் இந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்தது. கடலூர் மாவட்டம் திட்டக்குடிக்கு அருகில் உள்ள கீழ்ச்செருவாய் கிராமத்தில் கவியரசன் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவருடைய மனைவி பட்டியலினத்தைச் சேர்ந்தவர். கவியரசன் வெளிநாட்டுக்குச் சென்று விட்ட நிலையில், அவர் கவியரசனின் குடும்பத்தினருடன் வசித்துவந்தார். இந்த நிலையில், தமிழ்செல்வி பட்டியலினத்தவர் என்பதால் அவருடைய பக்கத்து வீட்டினர் தமிழ்ச்செல்வியை சாதிப் பாகுபாடு காட்டி வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, தமிழ்ச்செல்வியின் வீட்டுக்கு வெளியே முள் மரங்களை வெட்டிப்போட்டுள்ளனர். இது குறித்துக் கேட்ட தமிழ்செல்வி தாக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குச் சென்ற தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளுடன் தீக்குளிக்க முயன்றார். பிறகு, அவரை காவலர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதேபோல, இந்த ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி வடுகபட்டியில் பொங்கல் திருநாளுக்கு பொங்கல் வைப்பதை ஒட்டி ஏற்பட்ட பிரச்சனையில் பட்டியலினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
மேலும், நடந்து முடிந்த குடியரசு தினத்தன்று 7 பட்டியலின தலைவர்களால் கொடியேற்ற முடியவில்லை என்கிறார் கதிர். இதுமட்டுமல்ல, கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் கழிவுநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்ய இறங்கி மரணமடைபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் அதிகம் இறப்பவர்கள் பட்டியலினத்தவர்கள்தான். அதேபோல, போலீஸ் காவல் மரணங்களும் அதிகரித்துள்ளன. இதில் இறப்பவர்களில் 80 சதவீதம் பேரும் பட்டியலினத்தவர்தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ஒட்டுமொத்தமாகவே தமிழ்நாட்டில் ஜாதிய மனோபாவம் அதிகரித்துள்ளது. காவல் துறை முழுக்க முழுக்க ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. சித்தாந்தமயமாகியுள்ளது. வேங்கைவயலில் தலித்துகள்தான் குடிநீர் தொட்டியில் மலத்தைப் போட்டதாக பா.ஜ.கவின் ஐடிவிங்கினர் சொல்கிறார்கள். காவல்துறையும் தலித்துகளையே விசாரிக்கிறது. சேலத்தில் பட்டியலின இளைஞரை ஆபாசமாகப் பேசிய ஒன்றியத் தலைவர் ஒரே வாரத்தில் ஜாமீனில் வெளியில் வருகிறார்.
இவையெல்லாம் தங்களுக்கு தெரியாமல் நடந்ததாக தி.மு.க. அரசு சொல்ல முடியாது. தி.மு.க. அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதியின் மீது நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் கதிர்.
தலித்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பது என்பது கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து அதிகரித்து வந்தாலும் கடந்த எட்டு மாதங்களில் மட்டும் அதீதமான அதிகரிப்பு இருக்கிறது என்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பொதுவாகவே இந்தியா முழுவதும் பெரும்பான்மைவாதத்தை ஏற்கும் போக்கு அதிகரித்திருப்பதன் ஒரு பகுதியாகவே இதனைப் பார்க்க வேண்டும் என்கிறார் ரவிக்குமார். “கடந்த இருபது ஆண்டுகளில், பெரும்பான்மைவாதத்தின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அது தொடர்பான ஆய்வுகள் விரிவாக நடந்ததாகத் தெரியவில்லை. அவை நடக்க வேண்டும். அப்போதுதான் ஆபத்தின் அளவு புரியும்” என்கிறார் அவர்.
“பிரச்சனை வரும்போது மட்டும் போனால் போதாது“
இதுபோன்ற விவகாரங்களில் பணியாற்றும் தலித் மற்றும் முற்போக்கு இயக்கங்கள், பிரச்சனை வரும்போது மட்டும் பேசுவதும் போராட்டம் நடத்துவதும் முழுமையாகப் பலனளிக்காது என்கிறார் ஆய்வாளரான ஸ்டாலின் ராஜாங்கம்.
“இது ஒரு நீண்ட காலப் பிரச்சனை. இந்தப் பிரச்சனைகள் தொடர்பாக பணியாற்றும் தலித் இயக்கங்களும் சரி, முற்போக்கு இயக்கங்களும் சரி, பிரச்சனை வெடித்தால் அந்தப் பகுதிக்குச் செல்கிறார்கள். அது பிரச்சனையாக மாறாத வரையில் அவை கண்டுகொள்ளப்படுவதில்லை. உதாரணமாக, புதுக்கோட்டை ஜாதிக் கலவரங்களுக்குப் பெயர்போன ஊர் அல்ல. ஆனால், அங்கு நாடு போன்ற ஜாதிய அமைப்புகள் இன்னமும் உண்டு. வெளியில் சொல்லப்படாத ஜாதிய அடக்குமுறைகள் அங்கே அதிகம். சமீப காலமாக அங்கிருப்பவர்கள் இந்தக் கட்டமைப்புகளை எதிர்க்கும்போது, அவை பிரச்சனையாகி வெளியில் தெரிய ஆரம்பிக்கின்றன. சமூக வலைதளங்கள் இதற்கு முக்கியமான காரணம். இல்லாவிட்டால் சேலத்தில் நடந்தது போன்ற நிகழ்வுகள் வெளியிலேயே தெரிந்திருக்காது” என்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.
தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரும் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2021ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் பட்டியலினத்தோருக்கு எதிராக 1376 குற்றங்கள் நடந்திருக்கின்றன. 2018ஆம் ஆண்டில் பட்டியலினத்திவருக்கு எதிராக 1413 குற்றங்கள் நடந்திருந்த நிலையில், அதற்கு அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது. 2019ஆம் ஆண்டில் 1144 குற்றங்கள் மட்டுமே பதிவாகின. ஆனால், 2020ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரித்து 1274 குற்றங்கள் பதிவாகியுள்ளன. 2021ல் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரித்திருக்கிறது.
- முரளிதரன் காசிவிஸ்வநாதன்
Source : BBC Tamil