- லக்னோவில் 25.4.1948 அன்று, பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு மாநாட்டில் நான் நிகழ்த்திய உரையைத் திரித்தும் சிதைத்தும் வெளியிட்டிருப்பதைக் கண்டேன். எனது தோழர்களுக்கு எதிராக நான் பண்பற்ற வார்த்தைகளைக் கூறியதாக, உள்ளூர் பத்திரிகை ஒன்றில் சொல்லப்பட்டுள்ளது கேட்டு மனம் புண்பட்டுள்ளேன் என்பதைச் சுருக்கமாகக் கூறுவது அவசியமாகிறது. எனது உரையில் கண்ட அம்சங்களை கீழே தருகிறேன். எனக்கெதிராகத் தொடுக்கப்பட்டுள்ள விமர்சனங்களுக்கு பதில் சொல்லுவதே இதன் நோக்கம் : 1. அமைச்சரவைக் குழு வந்து சென்ற பிறகு நான் ஏன் அமைதி காத்தேன்? 2. காங்கிரஸ் அரசில் நான் ஏன் இணைந்து கொண்டேன்? 3. எதிர்காலத்தில் நான் செய்யப் போவது என்ன?
முதல் கேள்விக்கு எனது பதில் : பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, அரசியல் பாதுகாப்பை கோரியது. இதில் முக்கியமானது தனி வாக்காளர் தொகுதி. ஆரம்ப கட்டத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், பட்டியல் சாதியினர் முழுமையும் இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்கின்றனர் என்பது புரியும். இப்படி இருந்தும் நமது அமைச்சரவைக் குழுவினால் அது நிராகரிக்கப்பட்டது. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன : 1. முஸ்லிம்களுடனோ, சீக்கியர்களுடனோ ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாம் ஒரு பலவீனமான கட்சியாக இருந்தோம் 2. நமது அணி பிளவுபட்டிருந்தது. இதில் காட்டிக் கொடுப்போர் பலர் இருந்தனர்.
அமைச்சரவைக் குழுவின் முடிவுகள், பட்டியல் சாதியினரை ஒழித்துக்கட்டிவிடக் கூடியதாக இருந்தது. ஒரு தனி அமைப்பாக அது இல்லாமல் போகும் சாத்தியம் இருந்தது. அரசியல் பாதுகாப்பின்றி பட்டியல் சாதியினர் துடைத்தெறியப்பட்டிருப்பர். எனக்கு முன்னால் பேரிருள் தெரிந்ததால்தான் நான் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. இரண்டாவது கோள்விக்கு எனது பதில் : நான் காங்கிரசை எதிர்ப்பவனாகவும் தாக்கிப் பேசுபவனாகவும் இருந்தது உண்மைதான். அதே நேரத்தில் எதிர்ப்புக் காட்டுவதற்காகவே எதிரியாக இருக்கவும் நான் விரும்பவில்லை. ஒத்துழைப்பு மனப்பான்மை இருத்தல் வேண்டும். காங்கிரசை எதிர்த்துப் போராடுவதில் பயனில்லை என்று நான் கருதினேன். எனவே, காங்கிரசுடன் ஒத்துழைப்பது என்று முடிவு செய்தேன். இந்த ஒத்துழைப்பு மூலம்அரசியல் சாசனத்தில் நமக்கு சில பாதுகாப்புகள் கிடைத்தன. இந்த ஒத்துழைப்பு இல்லையென்றால், நமக்கு இப்பாதுகாப்புகள் கிடைத்திருக்காது.
- நான் அமைச்சரவையில் சேர்ந்துள்ளது குறித்து : இந்த அழைப்பை ஏற்றுக் கொள்வதற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன : 1. இந்த அழைப்பின்போது எனக்கு எந்தவித நிபந்தனையும் விதிக்கப்படவில்லை 2. பட்டியல் சாதியினருக்கு வெளியிலிருந்து செய்வதை விட, அரசாங்கத்தில் பங்கேற்று சிறப்பாகப் பணியாற்ற முடியும்.
பட்டியல் சாதியினருக்குப் பாதகமாக மோசமான சட்டங்கள் இயற்றப்படும் என்று அவர்கள் அச்சப்படத் தேவையில்லை. அவர்கள் எதற்காக அஞ்ச வேண்டும் என்றால், மோசமான நிர்வாகத்திற்குதான். நிர்வாகத்தினர், பட்டியல் சாதியினருக்கு எதிராக செயல்படுவதற்குக் காரணம், அதில் சாதி இந்து அதிகாரிகள் இருந்து கொண்டு, கிராமத்திலுள்ள சாதி இந்துக்களுக்கு ஆதரவாக செயல்பட்டு, பட்டியல் சாதியினரிடம் வலுக்கட்டாய வேலை வாங்கி, ஒவ்வொரு நாளும் அவர்களை கொடுமையாக அடக்கி ஒடுக்கி வருகின்றனர். இந்தக் கொடுமை யையும் ஒடுக்குமுறையையும் ஒழிக்க வேண்டுமெனில், பட்டியல் சாதியினர் பொது நிர்வாகப் பணியில் இருக்க வேண்டும். இதற்கு வசதியாக நாம் அரசாங்கத்தில் பங்கேற்று செயல்பட வேண்டும்; வெளியிலிருந்தல்ல.
பின்னர், பட்டியல் சாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்று சொன்னேன். மாநாட்டில் பங்கேற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு இணங்கியே நான் இதைக் கூறினேன். இரண்டு வகுப்பினரின் தேவைகளும் ஒன்றாக இருக்கும்போது, அவர்கள் ஒன்றிணையாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே. பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சாதியினருடன் இணைவதற்கு ஏன் தயாராக இல்லை என்றால், இந்த ஒற்றுமையினால் பட்டியல் சாதியினரின் நிலைக்கு அவர்களும் தாழ்த்தப்பட்டு விடுவார்களோ என்று அஞ்சுகின்றனர்.
பட்டியல் சாதியினருக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடையில் விருந்துகளும் திருமணங்களும் நடைபெற வேண்டும் என்று நான் விரும்பவில்லை. தனித்தனி சமூக அமைப்புகளாகவே அவை இருக்கும். ஆனால் தங்களது பின்தங்கிய நிலைமையை போக்கிக் கொள்வதற்காக, அவர்கள் ஏன் ஓர் அரசியல் கட்சி அமைத்துக் கொள்வதற்கு ஒன்றுபடக் கூடாது? தமது நிலைமைகளை அரசியல் பணிகள் மூலம் ஓரளவுக்கு பட்டியல் சாதியினர் முன்னேற்றிக் கொண்டுள்ளது போல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் ஏன் செய்து கொள்ளக் கூடாது?
இந்த நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர், பட்டியல் சாதியினரும் பிற்படுத்தப்பட்ட வகுப்பாரும்தான் என்று நான் சுட்டிக் காட்டினேன். அவர்கள் இந்த நாட்டை ஏன் ஆளக்கூடாது என்பதற்கு காரணம் ஏதுமில்லை. வயது வந்தோர் வாக்குரிமை உள்ளதால், உங்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு, நீங்கள் அமைப்பு ரீதியில் ஒன்றுபடுவது மிகவும் அவசியம்.
(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு : 17(3), பக்கம் 391
- நன்றி கீற்று-தலித்முரசு
Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
Previous Articleஅன்னை மீனாம்பாள் சிவராஜ் பேட்டி – 2
