சாதியின் இருள் கொட்டடிகளில் அடைபட்டிருந்த தலித் மக்களை துணிச்சலுடன் மீட்பதற்கு, சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் சிலர் களமிறங்கினார்கள். அவர்கள் விடுதலையின் சூரியனை திசை மாற்றி ஒடுக்கப்பட்டிருந்த மக்கள் மீது விழ வைத்தனர். ரெட்டமலை சீனிவாசன் அவர்களில் ஒருவர். அவர் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தலித் மக்களுக்காகப் போராடியவர். இதழ் நடத்தியவர். உலகம் சுற்றியவர். அரசியலில் பங்கேற்றவர். அண்மையில் அவர் பிறந்த சூலை மாதத்தில் தமிழக அரசு, சென்னை காந்தி மண்டபத்தின் ஒரு மூலையில் ரெட்டமலை சீனிவாசனுக்கு சிலை எழுப்பியுள்ளது. ரெட்டமலை சீனிவாசன் நிச்சயமாக இப்படி நினைவு கூரப்படவேண்டிய ஒரு தலைவர் அல்லர். தமிழக அரசும் தலித் மக்களும் அவரை மிகச் சிறப்பாக நினைவு கூர்ந்து கொண்டாடி இருக்க வேண்டும். இந்தியாவில் தலித் மக்களின் காலம்-அவரிடமிருந்தும், அவரைப் போன்ற ஒரு சிலரிடமிருந்தும்தான் தொடங்குகிறது. தலித் மக்களின் நவீன வரலாற்றின் முதல் வரியை எழுதியவர் ரெட்டமலை சீனிவாசன்.
ரெட்டமலை சீனிவாசனின் வாழ்க்கை-தேடல், ஆர்வம், தன் முனைப்பு ஆகிய கூறுகளால் நிரம்பியது. பயணங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது அவருடைய வாழ்க்கை. அவர் பிறந்த கோழியாளம், ஏரிகள் நிறைந்த செங்கற்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. பாசன வசதிகள் நிறைந்த நிலப்பரப்பு. நிலவுடைமைச் சமூகம் செழித்து வாழும் பூமி. சோழர்களும், பல்லவர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு சனாதன தருமத்தை வளர்த்து நிலை நாட்டிய மண். ஆதிக்கச் சாதியினரின் நிலங்களில் தலித் மக்கள் ஏவல் வேலைகளைச் செய்து பிழைப்பு நடத்திய பகுதி. நிலவுடைமைச் சமூகத்தில்தான் சாதிய வழக்கங்கள் ஆழமாய் வேரூன்றி இருக்கின்றன. ஆண்டான் அடிமை முறை அச்சமூகத்தில் உறுதியாய் இருக்கிறது. வயிற்றுப் பிழைப்புக்கு அங்கே தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினரைத்தான் சார்ந்து இருந்தாக வேண்டும். சீனிவாசனின் குடும்பமும் அப்படி இருந்த ஒரு குடும்பம்தான். ஏதோ சில காரணங்களுக்காக அக்குடும்பம் தஞ்சைக்கு இடம் பெயர்ந்தது. சாதிய கொடுமைகள் அவர்களை அப்படி துரத்தியிருக்கலாம்.
இந்தியாவில் சாதிய இறுக்கத்தைக் குலைத்ததில் கிறித்துவத்திற்கு பெரும் பங்கு உண்டு. சென்னையில் 1726 ஆம் ஆண்டிலேயே கிறித்துவ அறிவை பரப்புவதற்கான சங்கம் (Madras Mission of the Society for Prepagating Christian Knowledge) தொடங்கப்பட்டுள்ளது. இவர்களின் மதமாற்றப் பணி அப்போதே தொடங்கியும் விட்டது. செங்கற்பட்டில் 1880 இல் மத மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் இந்த இறைப்பணியாளர்களால் தொடங்கப்பட்ட பள்ளிகளோ அதற்கும் முன்னரே செயல்படத் தொடங்கி விட்டன. 1839 இல் காஞ்சிபுரத்திலும், 1840 இல் செங்கற்பட்டிலும், 1857இல் திருவள்ளூரிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஜான் ஆன்டர்சன் என்பவரால் தொடங்கப்பட்ட புனித கொலம்பா–கூடி பள்ளியில் ஒரு சம்பவம் நடந்தது.
1838 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மூன்று பறையர் இன மாணவர்கள் வந்து சேர்ந்தார்கள். பார்ப்பதற்கு நேர்த்தியாகவும், நல்ல உடைகளுடனும், நெற்றியில் பொட்டுடனும் இருந்ததால் அம்மாணவர்களை யாரும் அய்யப்படவில்லை. ஆறு நாட்களுக்குப் பிறகு, சேர்ந்தது பறையர் இன மாணவர்கள்தான் என்று அறிந்ததும் 100 சாதி இந்து மாணவர்கள் பள்ளியிலிருந்து நின்றுவிட்டார்கள். அப்பள்ளியின் மொத்த மாணவர் எண்ணிக்கை 277. அத்தனைப் பேரும் ஆதிக்க சாதியினரே. அவர்களின் பெற்றோர், தலித் மாணவர்களை பள்ளியை விட்டு நீக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்தும் ஆன்டர்சன் மறுத்து விட்டார் (“செங்கற்பட்டு பகுதி தலித் கிறித்துவர்கள்’-முனைவர் பி. தயாநந்தன், “உள்ளூர் தலித் கிறித்துவர் வரலாறு’, ISPCK, 2002).
இந்த இறை பணியாளர்கள் எழுதிய கடிதக் குறிப்புகள் வாயிலாக தலித் மக்கள் ஆயாக்கள், தோட்டக்காரர், சமையலர், வேலைக்காரர் போன்ற பணிகளுக்கு ஆங்கிலேயர்களால் சேர்த்துக் கொள்ளப்பட்டது தெரிய வருகிறது. ஆங்கிலேயர்களின் தலித்துகளை விடுவிக்கும் செயல், சாதி இந்துக்களை வெறியேற்றி, மேலும் சாதிய தர்மங்களை இறுக வைத்திருக்கும். வாஞ்சிநாதனின் வரலாறு இதை நமக்குத் தெரிவிக்கிறது. வெள்ளையரிடமிருந்து இந்து தர்மத்தை காப்பாற்றி மீட்டெடுப்பதைத்தான் இங்குள்ள ஆதிக்க சாதி தலைவர்கள் தேசியமாகக் கருதி இருக்கின்றனர். இந்திய விடுதலைப் போரின் அடிநாத இழைகளில் ஒன்றும் அதுவே. அப்படியானதோர் இறுக்கமான சூழல், சீனிவாசனின் காலத்தில் இருந்திருக்கும் என்று கருத இடமிருக்கிறது.
சென்னையில் 1937இல் நடைபெற்ற சாதி வன்கொடுமை ஒன்றை அம்பேத்கர் தமது நூலொன்றில் மேற்கோளாகக் காட்டுகிறார். சாதி இந்து ஒருவரின் பிணத்தின் மீது ஆதிதிராவிட நண்பர் ஒருவர் வாய்க்கரிசி போட்டதால் சண்டை உருவாகி, இரண்டு பேர் கத்தியால் குத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இறந்து விட்டார். ரெட்டமலை சீனிவாசனின் இளமைக் காலத்தில் இத்தகு கொடுமைகள் இன்னும் அதிகமாக இருந்திருக்கக்கூடும். அவர்களின் குடும்பம் தஞ்சைக்கு போன பிறகு, அவர் படிப்பதற்கு கோவை சென்றார். அங்கும் அவரை சாதி விடவில்லை.
“கோயம்புத்தூர் கலா சாலையில் நான் வாசித்தபோது சுமார் 400 பிள்ளைகளில் 10 பேர் தவிர மற்றவர்கள் பிராமணர். ஜாதி கோட்பாடுகள் மிகக்கடினமாய் கவனிக்கப்பட்டன. பிள்ளைகளிடம் சிநேகித்தால் ஜாதி, குடும்பம், இருப்பிடம் முதலானவைகளை தெரிந்து கொண்டால் அவர்கள் தாழ்வாக என்னை நடத்துவார்கள் என்று பயந்து, பள்ளிக்கு வெளியே எங்கேனும் வாசித்துக் கொண்டிருந்து, பள்ளி ஆரம்ப மணி அடித்த பிறகு வகுப்புக்குள் போவேன். வகுப்பு கலையும்போது என்னை மாணவர்கள் எட்டாதபடி வீட்டுக்கு விரைவாக நடந்து சேருவேன்” என்று தன் இளமைக்கால சாதிய கொடுமைகளின் உக்கிரத்தை எழுதுகிறார்.
[quotes quotes_style=”bpull” quotes_pos=”right”]தலித் மக்களை சாதி இந்துக்களிடமிருந்து பாதுகாப்பது, அவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்குவது, அம்மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஆகிய மூன்று வழிமுறைகளில் அமைந்தால் நலம் என்று அவர் நம்பினார்.[/quotes]
இவ்வனுபவத்தை குறித்து எழுதும் போது, “பிள்ளைகளோடு கூடி விளையாடக் கூடாமையான கொடுமையை நினைத்து மனங்கலங்கி எண்ணி எண்ணி இந்த இறுக்கத்தை எப்படி மேற்கொள்ளுவதென்று யோசிப்பேன்” என்று அழுத்தமாக தனது மன உணர்வினையும் பதிவு செய்கிறார். சாதிக்கு எதிரான கோபமும் ஆத்திரமும் இளமைக் காலத்திலேயே சீனிவாசனிடம் இருந்தது. அவர் குடும்பத்தின் இடமாற்றம் (செங்கற்பட்டு, தஞ்சை, கோவை) அவருக்கு தமிழகத்தில் அன்று நிலவிய சாதி இறுக்கத்தை உணர்த்தியிருக்கிறது. சாதியை ஒழிப்பது எப்படி என்று அவர் தத்துவார்த்தமாகவும், அறிவியல் பூர்வமாகவும் சிந்திக்கவில்லை. பிற்காலத்தில் அம்பேத்கர் தனது விசாலமான அறிவால் அதை மேற்கொண்டார். அயோத்திதாசரின் அணுகுமுறையோ தலித் மக்களை மேல் நிலையாக்கம் செய்வதில் மய்யம் கொண்டிருந்தது. ரெட்டமலை சீனிவாசனின் சமகாலத்தவரான கேரள தலித் தலைவர் அய்யன் காளியினுடையது திருப்பி அடித்தல், வீரமூட்டுதல் ஆகியவற்றில் நின்றது.
ஆனால், ரெட்டமலை சீனிவாசனின் அணுகுமுறையும் சிந்தனையும் வேறு மாதிரியாக இருந்தது. கண்ணெதிரில் அன்றாடம் நடைபெறும் சாதிக் கொடுமைகளைப் போக்கிட எப்படியாவது முயல வேண்டும். அது தலித் மக்களை சாதி இந்துக்களிடமிருந்து பாதுகாப்பது, அவர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகளை வழங்குவது, அம்மக்களிடையே விழிப்புணர்வினை ஏற்படுத்துவது ஆகிய மூன்று வழிமுறைகளில் அமைந்தால் நலம் என்று அவர் நம்பினார். அவர் பெற எண்ணிய பாதுகாப்பு, சட்டப்பூர்வமானதும், அரசு வழங்குவதுமான பாதுகாப்பு. அப்பாதுகாப்பை வழங்க அப்போதிருந்த ஆங்கில அரசால் மட்டுமே முடியும். அதனால் எப்படியாவது அந்த அரசின் தலைமைக்கு தலித் மக்களின் நிலையை கொண்டு செல்ல வேண்டும் என்று சீனிவாசன் நினைத்தார்.
ஆங்கில அரசின் கவனத்துக்கு தலித் மக்களின் நிலையை தெரியப்படுத்த வேண்டும். அதுவும் கீழ்மட்டப் பிரதிநிதிகளிடமின்றி நேரடியாக மன்னரிடமோ, அரசியிடமோ சென்றுதான் தெரியப்படுத்த வேண்டும் என்பது சீனிவாசனின் வாழ்க்கை லட்சியம். இந்திய தலித் தலைவர்கள் யாரிடமும் காணாத ஒரு சிறப்பு இது. அவர் லண்டன் செல்வதற்கு எடுத்த அத்தனை முயற்சிகளும் இந்தப் பேரவாவினால் உருவானதுதான். தென் ஆப்பிரிக்காவில் போய் அவர் சிக்கிக் கொண்டதும் இந்த முயற்சியால்தான். 1880இல் நீலகிரியில் கணக்கராகப் பணியில் சேர்ந்த போதே தீவிரப்படத் தொடங்கிய லண்டன் பயண எண்ணம், 1929இல்தான் நிறைவேறியது. அவர் வாழ்க்கையில் சுமார் 49 ஆண்டுகளை இந்த லட்சியமே எடுத்துக் கொண்டது. அவருடைய லண்டன் பயண முடிவு எளிமையானதும், போதாமைகள் நிறைந்ததும்தான். ஆனால் அக்காலச் சூழலில் அந்த எண்ணம் வேறுபட்டதும், வரவேற்கக்கூடியதுமான ஒன்றே!
“இந்த இனத்தவர்கள் (தலித் மக்கள்) அபிவிருத்தியை நாடி நான் லண்டன் நகருக்குப் பிரயாணமானபோது பத்திரிகையை (“பறையன்’) நடத்த தக்கவர் கிடையாமல் போனதால் பத்திரிகை பிரசுரம் நிறுத்தப்பட்டது” என்றும் “லண்டன் நகருக்குப் போய் தாழ்த்தப்பட்டவர்கள் இடுக்கண்களை எடுத்துக் காட்டி பிரிட்டிஷாரின் அனுதாபத்தை நாடி வரவேண்டுமெனப் பம்பாயைச் சேர்ந்தபோது, என் தகப்பனாரும் தமையனாரும் எனக்குத் தந்தியனுப்பி திரும்பி வரும்படி கேட்டார்கள். சுடுகாடு போன பிணம் திரும்பாதென்ற தீர்மானத்தோடு மேற்கு திசையை நோக்கிப் போகும் கப்பல்களில் முதல் கிடைத்த கப்பலில் பிரயாணமாகி கீழ் ஆப்பிரிக்கா ஜான்சிபார் என்னும் தீவு சேர்ந்தேன்” என்று தமது லண்டன் பயணத்தைப் பற்றி விவரிக்கிறார் சீனிவாசன்.
காந்தியுடன் சென்று தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தங்கி படம் எடுத்த ஏ.கே. செட்டியாரைப் போல பண பலமோ, தொடர்புகளோ சீனிவாசனுக்கு அன்று இல்லாமல் இருந்தது. அவருடைய முயற்சிகள் எல்லாமே தற்சார்பு கொண்டவைதான். லண்டன் செல்வதற்காகப் புறப்பட்ட அவர் ஆப்பிரிக்காவின் ஜான்சிபார் தீவுக்குச் சென்று, இரண்டு ஆண்டுகள் தங்கி, தன் அடுத்த பயணத்துக்காக பணம் சேர்த்தார். பின்னர் அங்கிருந்து டர்பன் போவதற்காகப் புறப்படும் அவர் டலகோபே துறைமுகத்தில் இறங்கினார். அங்கு சீனிவாசனை கடும் காய்ச்சல் (மலேரியா) பிடித்துக் கொண்டது. டர்பன், நெட்டால் மாநிலத்திலுள்ள வருள ஆகிய இடங்களிலெல்லாம் அவர் இருந்தபோது மலேரியா போன்ற நோயும், பணக் கடினமும் அவரை வாட்டின.
1900இல் அவர் பம்பாயைவிட்டு புறப்பட்டதிலிருந்து 1921இல் நாடு திரும்பும் வரை இந்த நிலையே நீடித்தது. அந்ததேசத்தில் என் நலிவு தீர பல வருஷங்களாயின என்று குறிப்பிடுகிறார் சீனிவாசன். இருபத்தோறு ஆண்டுகளாக அவரின் நலிவு தொடர்ந்தது. அவரின் லட்சியத்தை அடைவதற்கான முயற்சிக்கு செலவிட்ட காலத்தில் பாதியை தென் ஆப்பிரிக்காவில் இருந்த நாட்களே எடுத்துக் கொண்டன. இவ்வாண்டுகளில் அவருக்கு காந்தியை தென் ஆப்பிரிக்காவில் சந்திக்கவும் நேர்ந்தது (1902).
ரெட்டமலை சீனிவாசன் 1882 இல் பிளாவட்ஸ்கியை சந்தித்திருக்கிறார். 1884இல் சென்னை தியோசபிகல் சங்க விழாவில் பங்கேற்றிருக்கிறார். அவர் கண்முன்பாகவே தான் காங்கிரஸ் கட்சியும் உதயமாகியிருக்கிறது. 1896இல் காந்தியை சென்னையில் சந்தித்தார். தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் அவரை சந்திக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இத்தனை வாய்ப்புகள் இருந்தும் அவர் காங்கிரஸ் வழியிலோ, காந்தியின் பின்னாலேயோ செல்லவில்லை. இது, ரெட்டமலை சீனிவாசனுக்கு என்று தனி வழியும், சிந்தனையும் இருந்ததை தெளிவுபடுத்துகிறது.
ஆங்கிலேய அரசை அதன் எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டு, தனியே ஒரு படையையும் அமைத்தபடி வெளியிலிருந்து போரிட்டு வெல்ல வேண்டும் என்று நேதாஜி நினைத்தது போலத்தான்-ரெட்டமலை சீனிவாசனும் ஆங்கிலேயே அரசிடம் நேரடியாகத் தம் மக்களின் அவல நிலையை சொல்லி, சமூக விடுதலையைப் பெற்றுவிட வேண்டும் என்று நினைத்ததும். சுபாசின் முயற்சி கூட்டு முயற்சி எனில், சீனிவாசனின் முயற்சியோ தனிமனித முயற்சி. வன்முறையை விரும்பாத அமைதி முயற்சியும் கூட. முசோலினி, ஹிட்லர் போன்ற மனித இனப்பகைவர்களுடன் கூட்டு வைத்து எப்படியாவது தனது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று சுபாஷ் எண்ணியது போல, தமது கொள்கையை இழந்து காங்கிரசுடனும், காந்தியுடனும் ரெட்டமலை சீனிவாசன் போக விரும்பவில்லை. அவர் இறுதியில் தனது கொள்கைகளோடு இணைந்து போகிற அம்பேத்கருடன் சேர்ந்து சென்றே தமது இலக்கினை நிறைவேற்றிக் கொண்டார். தென் ஆப்பிரிக்காவிலிருந்து அவர் திரும்பியபோது லண்டன் போக இயலாத துக்கத்தால் அவர் மனம் வெதும்பியது.
வட்டமேசை மாநாட்டுக்கு இரு முறை சென்று வந்த பிறகே அவருடைய மனம் அமைதி கொண்டது. “இருபது வருஷங்களாய் லண்டன் போக நான் கொண்டிருந்த நோக்கம் நிறைவேறியது என் இனத்தவர்கள் பெற்ற பாக்கியமாகும்” என்று தன் ஜீவிய சரித்திரத்தில் (1939) எழுதுகிறார். தென் ஆப்பிரிக்காவில் அவர் இருந்த பகுதிகள் கடல் மட்டத்திலிருந்து 2000 அடி உயரம் கொண்ட மலைப் பகுதிகளாகும். கடும் குளிரும், பூச்சிகளால் ஏற்படும் நோய்களும் அவரை அங்கு தாக்கியிருக்கும். எந்த நவீன வசதிகளும் அற்ற காலத்தில் அவரின் கடல் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. உயிரைப் பணயம் வைத்துதான் இச்செயல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. இதற்கான நெஞ்சுரமும், துணிச்சலும் அளப்பரியது என்றே சொல்ல வேண்டும். அது, ரெட்டமலை சீனிவாசனிடம் இருந்திருக்கிறது.
வட்டமேசை மாநாட்டிலும் அதன் பின்னர் பூனா ஒப்பந்தத்திலும் ரெட்டமலை சீனிவாசன் ஆற்றிய பங்கை நாடு அறியும். அம்பேத்கருடன் இணைந்து நகமும் சதையுமாக அவர் உழைத்தார். லண்டனில் ஜார்ஜ் மன்னரையும், ராணியையும் சந்திக்கச் சென்றபோது இந்தியாவில் நிலவும் சாதிக் கொடுமைகளை விவரித்தார். அவர் கொண்டிருந்த இலக்கினை அடைந்த தருணம் அது. தலித் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டப்படியான உரிமைகளைப் பெற்றுத்தரவும் விரும்பிய ரெட்டமலை சீனிவாசன், தனது சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேல்சபை உறுப்பினர் பதவியையும், “பறையன்’ இதழையும் பயன்படுத்திக் கொண்டார். 1992இல் சட்டமன்ற உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் சீனிவாசன் கொண்டு வந்த சட்ட முன் வரைவுகளும், பதிவு செய்த எதிர்ப்புகளும், அளித்த மனுக்களும் மிகவும் முக்கியமானவை.
1893இல் அவருடைய முயற்சியில் தலித் மக்களின் சார்பாக அரசிடம் கொடுக்கப்பட்ட புகார், ஒரு பாதுகாப்பு அரண்போல அம்மக்களுக்கு விளங்கியது. இந்தியாவிலேயே சிவில் சர்வீஸ் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலி யுறுத்தியதற்கு எதிராகத் தரப்பட்ட மனு அது. இந்தியாவில் அத்தேர்வு நடத்தப்படுமானால், ஆதிக்க சாதி இந்துக்களே அரசின் உயர் பதவிகளுக்கு எளிதில் வந்து விடுவார்கள் என்று தலித் மக்கள் கருதினர். 1898 இல் சீனிவாசன் கொடுத்த மனுவின் அடிப்படையிலேயே தலித் மாணவர்களுக்கான தனிப் பள்ளிகள் தோற்றம் பெற்றன.
வழிவழியாக இருந்து வரும் கிராம நிர்வாக அதிகாரி, கணக்குப்பிள்ளை ஆகியோரின் பதவிகளை ஒழிக்கவும், அவர்களால் பிடிக்கப்படும் குற்றவாளிகள் தொழுவத்தில் கட்டி வைத்து தண்டிக்கப்படாமலிருக்கவும் சட்டங்களை கொண்டுவந்தார் சீனிவாசன். மது விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார் அவர். வார விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சாராயக் கடைகளையும், கள்ளுக்கடைகளையும் மூடவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தலித் மக்கள் கல்வியறிவு இன்றி இருந்ததால் ஒப்பந்தங்கள் எழுதப்படும் போதும், வேறு சில பத்திரப் பதிவுகளின் போதும் எளிதில் ஏமாற்றப்பட்டு விடுவார்கள் என்பதை உணர்ந்து, தாசில்தார் முன்னிலையில்தான் அவர்கள் கைநாட்டுப் போடவேண்டும் என்ற முறையை கொண்டு வரவும் அவர் விரும்பினார்.
தலித் மக்களுக்கு பயிர்த்தொழில் புரிய இலவச நிலம் வழங்கப்படவே (பஞ்சமி நிலம்) முயற்சிகளை மேற்கொண்டவர் அவரே. இவ்விரண்டும் அவருடைய சொந்த வாழ்வனுபவத்திலிருந்து உருவானவை எனலாம். 1925இல் ரெட்டமலை சீனிவாசனால் கொண்டு வரப்பட்ட வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பொதுச் சாலைகள், பொதுக்கிணறுகள், பொதுக்கட்டடங்கள், கடைத்தெருக்கள் ஆகியவற்றை தலித் மக்களும் பயன்படுத்திக்கொள்ள இச்சட்டம் வகை செய்தது. தலித் மக்களை இந்த இடங்களிலே தடுப்பவர்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கவும் வழியேற்படுத்தியது. தலித் மக்களுக்கென தனி அலுவலர் அமைக்க வேண்டி இவர் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே “லேபர் கமிஷனர்’ என்ற பதவி உருவாக்கப்பட்டது. இதுவே பின்னாளில் தலித் மக்களுக்கென்று அமைச்சர்களை அமைப்பதற்கு வகை செய்தது.
ரெட்டமலை சீனிவாசனின் பரப்புரைக் களமாக “பறையன்’ இதழ் இருந்திருப்பதை சொல்லலாம். 1893இல் தொடங்கப்பட்ட அவ்விதழ் ஏழு ஆண்டுகள் வரை வெளியானது. அவருடைய சிறு பிரசுரங்களும் தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்கை ஆற்றியிருக்கின்றன. சமகால சிக்கல்களுக்கான உடனடி மருந்தாக இச்சிறு வெளியீடுகளை சொல்லலாம். மக்கள் வாங்கிப் படிப்பதற்கு ஏற்ற விலையில், அவர்களின் நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளாதபடி இவ்வெளியீடுகள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்பட்டிருக்கின்றன. இச்சிறு வெளியீடுகளை அதிக அளவில் மக்களிடையே எளிமையாக பரவலாக்கிவிடவும் முடியும். “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்திருத்த’ நூலை ஓர் அணாவுக்கு அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார்.
“நான் பிரசுரித்திருக்கும் சிறு புத்தகத்தை அதிகாரிகளுக்குக் காட்டி நாட்டிலுள்ள தாழ்த்தப்பட்டோர் இப்போது பலயிடங்களில் சவுக்கியங்களை அனுபவித்து வருகிறார்கள்” என்று இச்சிறு நூல்களின் பயன்பாட்டைப் பற்றி எழுதுகிறார். சீனிவாசன் அவர்கள் தான் நடத்திய இதழுக்கு “பறையன்’ என்று பெயர் வைத்ததே துணிச்சலான ஒரு செயல்தான். “பறையர்’ இனத்தவனொருவன் “பறையன்’ என்பவன் நான் தான் என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பானாகையால் பறையன் என்னும் மகுடம் சூட்டி ஒரு பத்திரிகையைப் பிரசுரித்தேன்” என்கிறார் அவர்.
நோய்களுக்கு காரணியான பொருளே அந்நோய்க்கான மருந்து என்ற சாமுவேல் ஹானிமனின் தத்துவம், ஹோமியோபதியாய் வளராத காலத்திற்கு முன்னரே; கருப்பர்களே! உங்களின் கருப்புத் தோலை பதாகையாக உயர்த்திப் பிடியுங்கள் என்ற கருப்பின தத்துவம் உருப்பெறாததற்கு முன்னரே; பின் நவீனத்துவ கருத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்னரே சீனிவாசனின் இந்தப் பிரகடனமும், பத்திரிகையும் வெளியாகியுள்ளன. தலித் மக்களை விழிப்புறச் செய்ய வேண்டும் எனில், அவர்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டியது முதல் படியாகும். ரெட்டமலை சீனிவாசன் 1980இல் சென்னைக்கு வந்த பிறகு மூன்று ஆண்டு காலமாக இன ஆய்வினை மேற்கொண்டிருக்கிறார்.
பிற்காலத்தில் அவருக்கு சென்னை பல்கலைக் கழகம், ஆய்வறிஞர் (Fellowship of Madras University) என்ற பட்டத்தை வழங்கியது. இலக்கியத்திற்கு இதுவே அடிப்படை. அவருடைய எழுத்தாளுமையை அவர் வெளியிட்ட சிறு வெளியீடுகளும், ஜீவிய சரித்திர சுருக்கமும் சொல்கின்றன. எளிய நேரடியான எழுத்து முறை அவருடையது. அவருடைய ஆங்கிலப் பேச்சாற்றல் சிறப்பாகக் குறிக்கப்படுகிறது. தலித் மக்களுக்கு நல்லொழுக்கம், நற்பண்பு ஆகியவற்றை போதிப்பதன் மூலம் திருத்திவிட முடியும் என்றும், அவர்களின் தோற்றத்துக்கு சிறப்புத் தன்மையை தருவதன் மூலம் மேல்நிலையாக்கம் செய்து விட முடியும் என்றும், அவர்களின் வறிய நிலைக்கு மாற்றாக பொருளாதார வாய்ப்புகளையும், சட்ட அனு மதிகளையும் அளித்து கைதூக்கி விட்டுவிட முடியும் என்றும் பலவாறாக தலைவர்கள் அணுகிய சூழல் நிலவிய காலம் அது.
அக்காலத்தில் ரெட்டமலை சீனிவாசனின் அணுகுமுறைகளும், கருத்துகளும் வேறு மாதிரியாக இருந்திருக்கின்றன. தலித் மக்களின் விடுதலைக்கு அரசை இணங்க வைத்தல், ஆதரவு சட்டங்களை உருவாக்குதல், தலித் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல் என்கிற பல்முனை செயல்பாடுகளை கொண்டவையாக இருந்திருக்கிறது அவருடைய அணுகுமுறை. மதமாற்றம் போன்ற சில கருத்துகளில் மாறுபட்டிருந்தாலும் வட்டமேசை மாநாட்டின் போதும், பூனா ஒப்பந்தத்தின் போதும் அம்பேத்கருடன் நின்ற ஒரே தலித் தலைவர் தாத்தா ரெட்டமலை சீனிவாசன் மட்டும் தான். காந்தியம், காங்கிரஸ் என்கிற மாயைகளுக்கு ஆட்படாதவராக, அம்பேத்கருடன் இணைந்து நின்ற தலைவராக அவர் இருந்திருக்கிறார் தலித் இன ஆய்வாளராக, தமிழகத்திலும், ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற இடங்களில் பயணம் செய்து வளமான அனுபவம் பெற்றவராக, அரசியல் போராளியாக, லட்சியவாதியாக, இதழாளராக, எழுத்தாளராக, பேச்சாளராக, சட்டமன்ற உறுப்பினராகப் பன்முகத் தன்மைகளுடன் விளங்கிய ரெட்டமலை சீனிவாசன், அம்பேத்கரின் ஆளுமையோடு நெருங்கி வருகிறார்.
காலத்தின் மறதியில் அழுத்தினாலும் திமிறி எழும் ஆளுமை அது. அவருக்கு ஒரு சிலை திறந்தும், அஞ்சல் தலை வெளியிட்டும் அரசு தனது கடமையை முடித்துக் கொண்டது. தலித் அமைப்புகள் அறிக்கை விட்டும் கூட்டம் நடத்தியும் முடித்துக் கொண்டன. இது போதாது. ரெட்டமலை சீனிவாசனுக்கு ஒரு நினைவகம் வேண்டும். அவருடைய சிறு வெளியீடுகளும், சட்டமன்ற உரைகளும் தொகுக்கப்பட்டு செம்பதிப்பாக வெளியிடப்பட வேண்டும். பாட நூல்களில் அவருடைய வரலாறு சேர்க்கப்பட வேண்டும்.
– அழகிய பெரியவன்