அந்தச்சொல் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததென்றும் அதன் மூலச்சொல் தல் என்றும் அறியப்படுகிறது. தல் என்றால் உடைந்தவை, பிரிக்கப்பட்டவை, நொறுங்கியவை, கிழிந்தவை, மிதிபட்டவை, சிதறடிக்கட்டவை, அமிழ்த்தப்பட்டவை, அழிக்கப்பட்டவை என்று பல அர்த்தங்களில் புரியப்படும். வரலாறு நெடுகிலும் மதத்தாலும் சமூகக் கட்டுமானங்களினாலும் கொடுமைப்படுத்தப்பட்ட அவர்களுக்கென அடயளமில்லாது காலம் வெறும் வெற்றுத் தாளாய் கழிந்து போயிருந்தது.
என்னைக் கருவுற்றிருக்கும்போது என்தாய் தெள்ளித் தின்ற மண்ணைத்தவிர எனது மண் எது எனும் யுகக்கேள்வியோடு புதைந்து கிடந்தார்கள். சென்ற முப்பது நாற்பது வருடங்களில்தான் பெயரே இல்லாமல் இருந்த அவர்களுக்கு, ஒரு புதிய பெயர் மேலெழுந்து வந்ததிருக்கிறது. வடமாநிலங்களில் மட்டுமே புழக்கத்திலிருந்த இந்தச் சொல் “பாசா சபத் கோஸ்” என்கிற வடமொழி அகராதியில், முன்னேற்றமில்லாத பிற்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பகுதி என்று பொருள்படுத்தப் பட்டிருக்கிறது. தீண்டப்படாத இந்துக்களாகிய ‘அச்சுத்’, தொண்ட்டூழியம் செய்கிற ‘சூத்ரா’ ஆகியோரை உள்ளடக்கிய சொல் இது. உச்சி ஜதான் எனும் உயர் ஜாதியினரால் மிதித்து நசுக்கப்பட்ட (ஹினி ஜாதி) கீழ்மக்கள் எனப் பஞ்சாபி மொழிபெயர்ப்பாளர் பாய் ஜஹான் சிங் கூறுகிறார்.
அந்தப் புதிய புரிதலுக்கான விதையை விதைத்ததவர்கள், புதிய பெயரை அவர்களுக்குச் சூட்டியவர்கள் இரண்டு பேர். மஹாத்மா ஜோதிபாய் பூலேவும், இறுபதாம் நூற்றாண்டின் கலக்காரர் அம்பேத்கரும் தான். அச்சுத் எனும் வடமொழி வார்த்தைக்கு தலித் எனும் நாமகரணம் சூட்டுகிறார்கள் அவர்கள் இருவரும்.
பெண்கள், வீடற்ற நிலமற்ற விவசாயிகள், தொழிலாளர்கள், புத்த மதத்துக்கு மாறியவர்கள், புத்திஸ்ட், மலைவாழ் மக்கள்,
தாழ்த்தப்பட்டவர்கள். அரசியல், மத மேலாதிக்கத்தால் சுரண்டப்பட்டவர்கள் எல்லோருமே தலித் எனும் பட்டியலுக்குள் இடம் பெறுவதாக 1973 ல் மராட்டிய மாநிலத்திலிருந்து வெளியான தலித் பேந்தர் ஆப் இந்தியா இயக்கத்தின் அறிக்கை பிரகடனப் படுத்துகிறது.
நால்வகை அடுக்குகளாக இந்திய மனிதர்கள் பிரிக்கப்பட்டார்கள். அவர்களின் மேல் நான்கு வகையான மாய நிறம் பூசப்பட்டது. அதுவே நிஜமென்று கருதி ஒருவருக்கொருவர் விலகி நின்றார்கள். சூழ்சியின் பலனை அதை உருவாக்கியவர்களே அனுபவித்தார்கள். அந்த சூழ்சியாளர்கள் மனிதர்களுக்கிடையிலான இடைவெளியில் புகுந்து விளையாண்டனர். அந்த விளையாட்டில் எப்போதும் அவர்கள் மட்டுமே ஜெயித்தார்கள். அல்லது அவர்கள் ஜெயிக்கிற மாதிரியே எல்லாவற்றையும் வடிவமைத்துக்கொண்டார்கள்.
ஆனால் இந்த ஆடுகளத்திற்குள்ளே நுழைய விடாமல் ஒரு பகுதியினரை வெகுதூரத்துக்கு விரட்டியடித்தார்கள். அப்படி விரட்டப்பட்டவர்களுக்கான அடையாளமும் சரித்திரமும் காலம் முழுவதும் கண்ணீராகவே கழிந்துபோயிருக்கிறது. வெற்றியை மட்டுமே பதிவு செய்யும் சரித்திரச் சூத்திரமும் கூட ஆதிக்க சூழ்ச்சிதவிர வேறில்லை. எனவே இரண்டாயிர ஆண்டு கால வரலாற்றில் அவர்கள் பற்றிய குறிப்பேதும் கானப்படவில்லை. அவர்கள் தான் வகைப்படுத்தப்படாதவர்கள் என்றும் புற ஜாதியினர் என்றும் பஞ்சமர்கள் என்றும் அறியப்பட்ட இந்திய தேசத்து உதிரிகள். அவர்கள் தலித்துகள்.
இந்தியப் பெருவெளியெங்கும் தலித் குமுரல்கள் கேள்விகளாக எழுந்து தமது சந்ததியினரையும், ஏனைய பரந்த சிந்தனையுள்ள மக்களையும் அதுகுறித்து விசனம் கொள்ள வைத்தது. ஆனால் ஆங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்த, இந்த குமுரல்களை இணைக்கிற மனிதராக டாக்டர் அம்பேத்கர் புறப்பட்டார். கற்பி ஒன்றுசேர் போராடு என்ற மூன்று சொல்லால் இந்திய தலித் இயக்கங்களுக்கு உந்து சக்தியாக மாறினார்.
1891 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மோவ் என்னும் ஊரில் பிறந்த அவர் 1919 ஆம் ஆண்டு தலித் இயக்கங்களில் தன்னை இனைத்துக்கொண்டார். அன்றிலிருந்து தனது அந்திமக்காலம் வரை தனது வாழ்நாளை ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவே அர்ப்பணித்தார். 1931 ல் லனடன் மாநகரில் நடந்த வட்ட மேஜை மாநாடும், அங்கு அவர் முன்னிறுத்திய இரட்டை வாக்குரிமை கோரிக்கையும் உலகம் உற்றுநோக்கிய வராலாற்று நிகழ்வுகளாகும். மஹாத்மாக் காந்தியின் உண்ணாவிரதத்தால் இரட்டை வாக்குரிமைக் கோரிக்கையைக் கைவிட்டு விட்டு அதற்குப்பதிலாக பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகப் பிரதிநிதித்துவம் பெறுமளவுக்கு இட ஒதுக்கீட்டைப் பெற்றுத்தந்தார்.
ஒடுக்கப்பட்டவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுத்தால் மட்டுமே ஒட்டுமொத்த விடுதலை சாத்தியம் என்கிற கொள்கையில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த அம்பேத்கர் 1936 ஆம் ஆண்டு சுதந்திரத் தொழிலாளர் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் 1942 ஆம் ஆண்டு அகில இந்திய பட்டியல் இனத்தவர் சங்கம் ( All India Scheduled Cast Federation= SCF ) ஒன்றை ஆரம்பித்தார். இந்தியாவில் அப்போது நிலவி வந்த சமூக பின்புலங்களைக் கருத்தில் கொண்டு அரசியல் அதிகாரம் பெறுவது ஒன்றே தலையாய நோக்கம் என்பதில் அவர் திடமாக இருந்தார்.
இந்தியாவின் அரசியல் அதிகாரம் இந்துக்களுக்கும் முஸ்லீமகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களூக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கான பங்கினை சட்டபூர்வமக்கவேண்டும். இந்த மூன்று சம பங்கான தூண்களின் மேலே தான் எதிர்கால இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக வேண்டும். அப்படியோர் நிலைமை உருவாக நீங்களெல்லோரும் ஒரே கொடியின் கீழ் ஒன்றுபடவேண்டும். இதுவரை உங்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டதற்கு, ஒற்றுமையில்லாமல் இருந்தது ஒரு காரணமாகும். ஒன்றுபடுங்கள் நமக்கான உரிமைகள் சர்வநிச்சயமாக வந்துசேரும்.
SCF ன் கிளைகள் பஞ்சாப், உத்திரப்பிரதேசம், வங்காளம், மற்றும் மதராஸ் ஆகிய மாகாணங்களில் நிறுவனமாகி 1956 வரை செயலாற்றியது.
சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் அம்பேத்கர் சட்ட அமைச்சசராகப் பதவி வகித்தார். அரசியல் சாசன வரைவு குழுவின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சாசனம் தலித்துகளுக்கு வழங்கிய உரிமைகளின் பட்டியல் மிக நீளமானது. அதில் கணக்கிலடங்காத அரசியல், சமூக, பொருளாதார உரிமைகள் குவிந்துகிடக்கிறது. நிஜமான அக்கரையோடு அவை பின்பற்றப்பட்டிருக்குமானால் தொடரும் வன்முறைகளும் கொடூரங்களும் இன்னும்கூட துப்புறவுக்கு தோட்டி என்கிற இழிகொடுமை இல்லாது போயிருக்கும். ஆனால் சலுகைகளும் உரிமைகளும் அமல்படுத்துகிற அதிகாரம் தானாகவே உயர் ஜாதியினரின் கைகளுக்குப் போனதால், அது ஒரு காகிதப்பரிசாக மட்டிலும் இன்றளவும் தொடர்கிறது.
SCF ஐத் துவங்கிய பிறகு அம்பேத்கர் மக்கள் கல்வி சங்கத்தைத் துவங்கினார். அதனால் மராட்டிய மாநிலத்தில் அதிக எண்ணிக்கையிலான பள்ளிகள் கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட்டன. கற்பி ஒன்றுசேர் போராடு என்கிற கோசத்தை அவரது தொண்டர்களிடமும் ஏனைய தலித் இயக்கங்களிடமும் உரக்கச்சொனார். ஒடுக்கப்பட்டவர்களின் முழு விடுதலைதான் எல்லாவற்றிற்கும் மாற்று என்பதில் மிக உறுதியாக இருந்தார். அதனால் தன்னால் சாத்தியப்பட்ட வரையிலும் கலகக்குரல் எழுப்பிக்கொண்டேயிருந்தார். ஒடுக்கப்பட்டவர்களின் மீது தொடர்கிற ஆதிக்கத்துக்கும், வன்கொடுமைகளுக்கும் காரணம் இந்து மத அடிப்படை வாதம் என்பதில் எந்த கருத்து ஊசலாட்டமும் இல்லாதிருந்தார். அதனாலேயே 1956 ஆம் ஆண்டு தன் வாழ்நாளின் கடைசிக் கலகமாக ஆயிரக்கணக்கான தொண்டர்களோடு புத்த மதத்தைத்தழுவினார்.
பின்னர் இந்தியத் தலித்துகளை ஒன்று திரட்டும் முயற்சியாக ”மக்கள் ஜனநாயகக் கட்சி” என்ற ஒன்றை ஆரம்பித்தார்.பின்னர் அதன் பெயரை இந்தியக் குடியரசுக் கட்சி என்று மாற்றினார். கட்சியின் நிறுவனச் சாசனங்களை உருவாக்கி அதை ஏனைய தலித் தலைவர்களின் ஒப்புதலுக்காக சுற்றறிக்கையாக அனுப்பினார். அது ஒப்புதலாகி வருகிற வரை காலம் காத்திருக்க வில்லை. இந்திய நிலப்பரப்பில் ஒடுக்கப்பட்டவர்களை செருப்போடு நடக்க, ஓரளவேனும் மனித அடையாளத்தோடு வாழவைக்கக் கனவுகண்ட கண்கள் அதே 1956 டிசம்பர் மாதம் இதே நாளில் நிலைகுத்தி நின்றது.
சுதந்திர நாளின் பின்னிரவில் நிருபர்கள் நேருவிடம் போனார்களாம் நேரு தூங்கிவிட்டாரென்று காவலாளி சொன்னாராம், ஜின்னாவின் வீட்டுக்காவலாளியும் அதே பதிலைச்சொன்னாராம், அம்பேத்கர் வீட்டு விளக்கு அணையாது எறிய அப்போதும் கண்விழித்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தாராம். நேருவும், ஜின்னாவும் தூங்கிப்போன இந்தப் பின்னிரவில் நீங்கள் மட்டும் ஏன் தூங்கவில்லை எநக்கேட்டதற்கு இந்தியாவும் பாகிஸ்தானும் விடுதலையாகிவிட்டது, ஆனால் தலித்துகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்று சொன்னாராம். அப்படியான சிந்தனை கொண்டதானாலேயே அம்பேத்கர் தனக்கு முன்னும் பின்னும் போட்டியில்லாமல் சேரிகளெங்கும் சிலையாகியிருக்கிறார்.
எஸ்.காமராஜ்