எஸ்சி, எஸ்டி சட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பு தொடர்பாக மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும் என வலியுறுத்தி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் கட்சி எம்.பி.க்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
எஸ்சி, எஸ்டி சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்ய வகை செய்யும் கடுமையான சில விதிகளைத் தளர்த்தும் வகையில் கடந்த செவ்வாய்க்கிழமை உச்ச நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்தது. அதன்படி அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்திட உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு செய்யக் கோரி நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காந்திசிலை முன்பாக காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை வகித்தார். தலித் உரிமைகளுக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போராடுகிறார் என்று அவர்கள் கோஷம் எழுப்பினர். தலித் உரிமைகளுக்காக காங்கிரஸ் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தும் என்றும் எம்.பி.க்கள் கோஷம் எழுப்பினர்.
சரியாக வாதிடவில்லை
இந்த வழக்கில் மத்திய அரசு சரியான முறையில் வாதிடவில்லை என்றும், எனவே சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர். மேலும் அந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோஷமிட்டனர்.
முன்னதாக நாடாளுமன்ற வளாகத்திலுள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் ராகுல் தலைமையில் எம்.பி.க்கள் கூடி, இந்தப் பிரச்சினையை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் இந்த பிரச்சினையை எழுப்புவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 5-ம் தேதி தொடங்கியது. ஆனால் கடந்த 3 வாரங்களாகவே நாடாளுமன்ற அலுவல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் எம்.பி.க்களும், காவிரி மேலாண்மை வாரியம் கோரி அதிமுக எம்.பி.க்களும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர்ந்து கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளிலும் அலுவல்கள் நடை பெறாமல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. – பிடிஐ
