எதுவுமே தேவையில்லை
அது அத்தனை சுலபமானது
கல்லுடைத்துக் கை நசுங்கி குருதி கொட்ட வேண்டாம்
சுள்ளிகள் சேர்த்து சுமையாக்கி
வெப்பமிக்க ஒற்றையடிப் பாதைகளில்
வெற்றுக்கால்கள் கொப்பளிக்க
நடக்கவொன்றும் தேவையில்லை
தலைமீது கல்சுமந்து கழுத்து நரம்புகள்
புடைக்க வேண்டாம்
சுடும் வெயிலில்
நடைபாதைகளில் தலைகாயக் குந்தி
காலணிகளைப் பளபளப்பாக்கி
காசுக்கு கையேந்த வேண்டியதில்லை
மேனிகருக்க நிறுத்தங்களில் கூடைபழங்களை
கூவிவிற்க குரல் வற்ற அவசியமில்லை
வியர்வை உடல்நனைக்க கட்டாந்தரையை
பண்படுத்த வாழ்வை பலி கொடுக்க வேண்டியிராது
மகள் படிக்க காசில்லாமல் மாற்றுத் துணியில்லாமல்
ஆண்டையிடம் அவமானப்படத் தேவையில்லை
ஆம் அது அத்தனை சுலபமானது
காவிகட்டிக் கொண்டு
கண்ணைமூடி சாமியாராகிவிடுவது
கதவைத் திறந்தால் காற்று மட்டுமல்ல
சகலமும் வரும்
அறிவாய் நீ மனமே.