“உலகம் முழுக்க எத்தனையோ உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றன. அவை அனைத்தும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து பிரிந்துபோவதற்கான போராட்டங்களே. பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரைக்கும் எல்லாமே அப்படித்தான். ஆனால், இந்த நாட்டின் 20 சதவிகித தலித் மக்கள், பெரும்பான்மை மக்களோடு சேர்ந்து வாழ்வதற்காக மூவாயிரம் ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வித்தியாசத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். யாரும் ‘தலித் நாடு’ அமைக்கப் போராட வில்லை. ‘எங்களைச் சேரிக்குள் ஒதுக்கித் தனிமைப்படுத்த வேண்டாம். சேர்ந்து வாழ்வோம், அன்பாக இருப்போம்’ என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்!”
உணவு, உடை, பேச்சு, இலக்கியம், அரசியல், சினிமா, திருமணம், சாவு, கலாசாரம் எனச் சகல இடங்களிலும் நிறைந்திருக்கும் அசூசையான சாதிக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கிறது எழுத் தாளர் அழகிய பெரியவனின் குரல். ‘குறடு’ என்ற இவரது சிறுகதை பொன்.சுதாவின் இயக்கத்தில் ‘நடந்த கதை’ என்ற பெயரில் குறும்படமாக வெளியானது. அது இப்போது உலகக் குறும்பட விழாவில் சிறந்த இந்தியக் குறும்படமாகத் தேர்வாகி இருக்கிறது.
“வட ஆற்காடு மாவட்டத்தில் தலித் மக்கள் செருப்பு அணிந்து நடக்கக் கூடாது என்று சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலைபற்றியது இந்தக் கதை. ஆனால், இப்போதும் இது உண்மையாகவே இருப்பது கொடுமை. மிகச் சமீபத்தில்கூட தேனி மாவட்டத்தில் செருப்பு அணிந்து பள்ளிக்குச் சென்ற தலித் சிறுவர்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டு இருக்கிறார்கள். தர்மபுரி மாவட்ட கிராமத்தின் பள்ளி சத்துணவுக் கூடம் ஒன்றில், தலித் பெண் செய்த சமையலைத் தங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று சாதி இந்துக்கள் பெரும் பிரச்னை கிளப்ப, அரசு அந்த தலித் ஆயாவைப் பணிமாறுதல் செய்து ‘சுமுகமான தீர்வை’ அளித்தது. விருதுநகர் மாவட்டக் கிராமம் ஒன்றில், ‘தலித்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது’ என்ற கட்டுப் பாடு நவீன யுகத்திலும் தொடர்கிறது. தலித்கள் ஆண் நாய் வளர்த் தால் அது உயர் சாதியினரின் பெண் நாய்களுடன் உறவுகொண்டு விடுகிறதாம். தலித்களின் பெண் நாயை இவர்கள் வீட்டு ஆண் நாய் உறவுகொண்டால், அதில் ஒன்றும் தீட்டு இல்லையாம். ஆனால், நாம் ‘இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?’ என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.
50 வயதான உங்கள் அப்பாவை ‘ஏய், இங்க வாடா’ என்று 15 வயதுச் சிறுவன் அழைத்தால் உங்களுக்குக் கோபம் வருமா, வராதா? ஆனால், வயதான தலித் மக்களை உயர் சாதியினரின் சிறுவர்கள்கூட ‘வாடா, போடா’ என அழைத்து அடிமைகளாக நடத்தும் வன்முறை யாருக்கும் தவறாகத் தோன்றவில்லையே, ஏன்? ஏனென்றால், இங்கு சிந்தனை, செயல் அனைத்திலும் சாதி மட்டுமே இருக் கிறது. தமிழ்ப் பண்பாடு என்பதே சாதிப் பண்பாடுதான். இதைப் பேசினால் ‘அதெல்லாம் கிராமத்துலதான் சார்’ என்பார்கள். அவர்களுக்கான எளிய உதாரணம் ‘மணமகன் தேவை, மணமகள் தேவை’ விளம்பரங்கள். ‘சாதி தடை இல்லை – எஸ்சி, எஸ்.டி. தவிர’ என்று எல்லாம் விளம்பரங்கள் வருகின்றன. இதோ இருக்கும் திருச்சி – திண்ணியத்தில் ஊரே கூடி தலித்கள் வாயில் மனித மலத்தைத் திணித்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு என்னவென்று யாருக்காவது தெரியுமா? ‘அது திட்டமிட்டு நடந்த சம்பவமாகத் தெரியவில்லை’ எனச் சொல்லி, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒரு வன்கொடுமை தீர்ப்பைச் சொன்னது நீதிமன்றம். ‘பீ” என்று சொல்லவே பலருக்கு நா கூசுகிறது. ஆனால், அதை ஒரு மனிதனின் வாயில் திணிப்பது எத்தனை உச்சக்கட்ட வக்கிரம்? இதைப்பற்றி இந்த தமிழ்ச் சமூகம் என்ன எதிர்வினை செய்தது?ஏன் யாரும் ரத்தம் கொதித்து வீதிக்கு வரவில்லை? மலேசியாவிலும், ஈழத்திலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டால் கோபப்பட்டு வீதிக்கு வருபவர்கள், திண்ணியம் தீர்ப்புக்கு எதிராக என்ன செய்தார்கள்? தலித்கள் தமிழர் கள் இல்லையா?
இந்திய சிவில் சமூகத்தின் சாதி அமைப்பு என்பது ஒரு பிரமிடு வடிவத்தில் இருக்கிறது. மேலே மேல் சாதியினரும், இடையில் இடை நிலைச் சாதியினரும், அடியில் தாழ்த்தப்பட்டவர் களும் இருக்கிறார்கள். மேலே உள்ள அத்தனை பேரின் சுமைகளும் அடியில் உள்ள மக்களை அழுத்துகிறது. இந்த பிரமிடு வடிவத்தை தலை கீழாகப் புரட்டிப் போட வேண்டும் எனச் சொல்லவில்லை. கிடைமட்டமாகச் சமப்படுத்தி சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப் பட்டுக்கிடந்தும்கூட எங்களிடம் ஆதிக்கக் குணம் இல்லை. அன்பையும், சகோதரத் துவத்தையுமே நாங்கள் விரும்புகிறோம்!”
Thanks : Ananda Vikatan
07 Apr 2010